privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்கரிசல் நிலத்தில் கனிந்த கள்ளிப்பழமா? – விஜயபாஸ்கர்

கரிசல் நிலத்தில் கனிந்த கள்ளிப்பழமா? – விஜயபாஸ்கர்

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 3

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் எனும் சொற்றொடரின் பொருள், பல ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து, உளியாகச் செயல்பட்டு, என்னைப் போன்ற கணக்கிலடங்கா கற்களைச் செதுக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதாகும். கரடு முரடான கற்களைச் செதுக்கித் செதுக்கித் தேய்ந்து போகும் உளியைப் போன்ற ஆசிரியர்களின் வாழ்நாள் வேள்வியை நினைவு கூறவே இந்தக் கட்டுரை. பதினைந்து வருடங்களுக்கும் மேலாக நீண்டு கொண்டிருக்கும் என் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில், சமவெளி நிலத்தில் சீராக வளர்ந்து பூத்துக்குலுங்கும் மலர்களைக்கொண்ட தோட்டத்தைப் போன்று சீரான சமூக அமைப்பில் இருந்து வந்த ஆசிரியர்களைக் கண்டதில்லை, மாறாக கரடுமுரடான வளமற்ற கரிசல் நிலத்தில் ஆங்காங்கே விளைந்த சிறுகுடல் வரை இனிப்பை வரவழைக்கக் கூடிய கள்ளிப் பழத்தைப் போன்ற ஒருசில ஆசிரியர்களைப் பற்றிய நினைவுகளைக் கூறவே இந்த பதிவு.

ஆசிரியர்நான் கண்ட ஆசிரியர்கள் அனைவரும்,  கொள்கை ரீதியாக, சித்தாந்தங்களை என்னுள் ஏற்றி, செதுக்கினார்கள் என அறுதியிட்டுக் கூறவியலாவிட்டலும், ஏட்டுக்கல்வியை சீரிய முறையில் கற்றுக் கொடுத்ததோடு மட்டுமில்லாது  மகத்தான மனிதப் பண்புகளையும், வாழ்க்கைக் கல்வியையும் எனக்கு கற்றுக்கொடுத்த பெரும்பணியை  செய்த ஆசிரியப் பெருமக்களை இந்தத் தருணத்தில்  நினைவு கொள்வது மனநிறைவான செயலென்பதில் மறுகூற்றில்லை.. மறுகாலனியாக்கக் காலகட்டத்தில், தனியார் நிறுவனங்கள் கல்வி எனும் பெயரில் தெருவுக்குத் தெரு கடை விரித்து கூவிக் கூவி சிட்டுக்குருவி லேகியம் விற்கும் இன்றைய கல்வியுடன், அரசு மற்றும் அரசு  நிதி  உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் கற்றுக்கொடுக்கப்பட்ட அன்றைய கல்வியை ஒப்பிடுவது  மலைக்கும் மடுவுக்கும் போன்ற வேறுபாட்டைப் போன்றது.

எனக்கு கல்வி கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள்  நாங்கள் கல்விக்கட்டணம் கட்டாமல் இருந்தபோது, வகுப்பறையை விட்டு வெளியே நிற்கச் சொன்னதில்லை., ஹால் டிக்கெட்டை தரமாட்டேன் என அடாவடி பண்ணியதில்லை. டியுசன் படிக்காவிட்டால், மதிப்பெண் போட மாட்டேன் என எவரும் மிரட்டியதில்லை. பெண் மாணவர்களிடம் பேசுபவர்களை கேமரா வைத்து பிடித்து அபராதம் கட்டச் சொன்னதில்லை. கல்லூரிப் பேருந்தில்தான் வரவேண்டும் என சைக்கிள் டையரின் காற்றைப் பிடுங்கியதில்லை. ஐந்து நிமிடம், பத்து நிமிடம் தாமதாக வந்தால், ஆயிரம்,நூறு என ஏழைப் பெற்றோரின் உழைப்பை சுரண்டியதில்லை. நாய் லைசென்ஸ் போடவில்லை என கல்லூரி வாசலில் நிறுத்தியதில்லை.

அசைன்மென்ட் எழுதியதவில்லை, ரிக்கார்ட் நோட் முடிக்கவில்லை என நோட்டு, புத்தகங்களை முகத்தில் தூக்கி எறிந்தது இல்லை. காட்டில், கழனியில் இரத்தத்தையும் வேர்வையும் சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தையும், வயலையும் வரப்பையும் ரியல் எஸ்டேட் கொள்ளைக்காரர்களிடம் அடிமாட்டு விலைக்கு விற்றுக் கிடைத்த பணத்தையும் டொனேஷன் என்ற பெயரில் புடுங்கி, கல்வித் தந்தைகளை உருவாக்கும் கொள்ளை அடிக்கும் பணிக்கு உதவியதில்லை. கட்டணமாக கட்டிய கொசுறுப் பணத்திற்கு இரசிது கொடுக்காமல் இருந்ததில்லை. கல்லூரியில் போராட்டம் நடத்தினால், நன்னடத்தை சான்றிதழ் தரமாட்டேன் என வில்லத்தனம் பண்ணியதில்லை.

கள்ளிப் பழம்அரியர் வைத்து இருந்தாலோ, சில பாடங்களில் பெயிலாகி இருந்தாலோ, நூறு சதவித் தேர்ச்சி அடைய முடியாது என்ற காரணத்திற்காக டீ.சி கொடுத்து அனுப்பியதில்லை. அந்த சட்டை போடாதே, இந்தச் சட்டை போடாதே என ஆடை அலங்கார கலாச்சார வகுப்புகள் எடுத்ததில்லை. எவ்வாறு செதுக்கினார்கள் என கட்டுரையின் தலைப்பை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யவில்லை என அடுக்கிக் கொண்டிருக்கிறானே என அயர்வு அடைய வேண்டாம்.

சமூகப் புரட்சி புரிந்த பகுதத்தறிவுப் பகலவன் சமுகப்போராளி தந்தைப் பெரியார்,  ஓட்டரசியளில் இருந்தாலும்  அரசியலே பண்ணாத அரசியல்வாதி, கல்விப் புரட்சி புரிந்த காமராஜர், உலகிலுள்ள அனைத்துப் புத்தகங்களையும் ஒன்றுவிடாமல் தெளிவுறக் கற்று , அறிவுப் புரட்சி செய்த அண்ணல் அம்பேத்கார் போன்ற மாபெரும் தியாகச் செம்மல்களுடன்,  இன்றைய லோக்பால் வீரன் ஊழல் ஒழிப்பு “சமுகப்போராளி” அக்மார்க் அண்ணா ஹசாரே, பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமைகளை உருவாக்கித் தர தனியாருக்கு கல்விக்கூடங்களின் வாசல்களைத் திறந்துவிட்ட “அரசியல் தெரியாத” அரசியல்வாதி மன்மோகன்சிங்,  ஏழை மக்களின் வேர்வைப் பணத்தில் உருவாக்கப்பட்ட ஐஐடிகளில் படித்து, தாய்நாட்டு மக்களின்  கோமணத்தைக் கூட உருவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சேவை செய்யும் அறிவாளிகள் எனும் “கல்விக் கோமான்கள்” போன்ற கழிசடைப் பின்னவர்களை, காலம்போற்றும் முன்னவர்களுடன் ஒப்பிடும்போதுதான் உண்மை நிலவரம் தெரியும் என்பதால் எதிர்மறையான அறிமுகம் செய்ய நேரிட்டது.

அகர முதல எழுத்தே தாய்த்தமிழுக்கு தொடக்கம், சிலேட்டும், குச்சியும் பிடித்து,  ஆனா, ஆவன்னா என ஒன்னாப்பு, ரெண்டாப்பு  ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களே விஜயபாஸ்கர் எனும் தமிழனுக்கு வாழ்க்கைத் தொடக்கம். சாக்கடைகளிலும், கண்மாய்களிலும், புழுதியிலும் உருண்டு பிறண்டு நாற்றத்துடன் பள்ளிக்கு வரும் எங்களைக் கண்டு முகம் சுளிக்காது, நாற்றம் தாங்க முடியாத சில வேளைகளில் மட்டுமே தன் அழகிய  நீண்ட கூந்தலால் மூக்கை மூடும் செல்வி எனும் ஆரம்பபள்ளி ஆசிரியரின் புன்னகை முகமே எனக்கு அழகான முகம்.

செதுக்கப்படும் சிற்பம்எனக்குத் தனிப்பட்ட முறையில் விலை மதிக்கமுடியாத உதவியையும் , அளவில்லா அன்பையும், மறக்கமுடியாத பாசத்தையும் பகிர்ந்தளித்த ஆசிரியப் பெருமக்கள் இராஜாராம் சார், அன்பின் மறுவடிவமான அன்னைத் தமிழம்மா, பேராசிரியர்கள் பாலு, முனைவர் தியாகராஜன் போன்றோரின் உதவியும்,அவர்களுடன் நான் கழித்த நாட்களும் என் நினைவில் இருந்து நீங்காத வரலாற்றுச் சுவடுகள்.

பள்ளிச் சீருடை என்ற பெயரில் பச்சைக் குழந்தைகளிடம் கூட ஆயிரக்கணக்கில் வசூல் செய்யும் கல்வி நிறுவனங்களின் ஆட்சி கோலோச்சும் நாட்டில், கிழிந்த சட்டை போட்டுவந்த எனக்கு நல்ல சட்டையும்,டவுசரும் கொடுத்துதவிய தமிழம்மா எவ்வாறு பணிபுரிந்தார் என்பது பதிலில்லா கேள்வி. ஆடை என்ற பெயரில் கூட ஏழைக்குழந்தைகளை ஒதுக்கி நவீனத் தீண்டாமையை அரங்கேற்றும்  பெருமை மிகுந்த தாய்த் தமிழ்நாட்டில், தமிழம்மா மட்டும் வாழ்ந்தது விதிவிலக்கா?.

1929 முதல்  கல்கத்தாவில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்த தெரசா, 1946இல் ஓய்வுக்காக டார்ஜிலிங் சென்றபோதுதான் அவரில் அந்த ‘அற்புதம்’ (அதாவது இயேசு கிறிஸ்து, தெரசாவின் கண்முன் தோன்றி ஆசிரியப் பணியை விடுத்து, பரிசுத்த ஆவியின் புகழைப் பாடும் ஆன்மிகப் பணியை ஏற்கக் கூறுதல்)   நிகழ்ந்ததால், மீதி வாழ்நாள் முழுவதும் நிர்வாகம், நன்கொடை, நோபல்கள், பாரத ரத்னாக்கள், கடவுச்சீட்டு  இல்லாத விமானப்பயணங்கள், உலகளாவிய  விருதுகள், பாராட்டிப் புகழ்ந்திடும் பளிச் பளிச் தொலைக்காட்சிக் காமெராக்கள், பிரமுகர்களுடனான சந்திப்புகள் என விரிந்ததைப் பாதுக்காக்க, இயல்பாக கலந்த பொய்மை, இரட்டை வேடம், நேர்மையின்மை, அநீதியை அரவணைத்தல் என எல்லாத் தீமைகளும் ஒருங்கே சேர வாழ்ந்த அன்னை தெரசா மேலானவரா அல்லது அதே பரிசுத்த ஆவியை வழிபட்டாலும், புகழும் விருதுகளும் கிடைக்காத உண்மையான ஆசிரியப் பணியை வாழ்நாள் முழுவதும் செய்த தமிழம்மா மேன்மையானவரா என கண்டுபிடிக்கும் அளவிற்கு எனக்கு தத்துவ ஞானமும் இல்லை.

பரிசுத்த ஆவியும் இந்த முட்டாள் விஜயபாஸ்கரின் மீது இறங்கவில்லை அல்லது மோகன் சி.லாசரஸோ, திருட்டு பால் தினகரனோ  என்னுள் ஏசுவை இறங்க வைக்கும் அற்புதத்தை செய்யவுமில்லை.. மூன்று வருடங்கள் அவரிடம் படித்தும், அவர் பெயர் எனக்குத் (அனைத்து மாணவர்களுக்கும்) தெரியாது. பின்னர் அந்த நல்லாசிரியருக்கு பார்ப்பன மேன்மை பேசுவதையே தொழிலாக கொண்ட ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது கொடுக்கப்பட்டதின்  மூலம் அவ்விருது தன்மீதான களங்கத்தைப் போக்கிக் கொண்டதா அல்லது அனைவரிடமும் அன்பு மட்டுமே செலுத்தி, ஒருங்கே அணைத்துக்கொண்ட, முகத்தில் எந்நேரமும் புன்னகை மட்டுமே ததும்பும்  தமிழம்மாவின் களங்கமில்லா கன்னக்குழி சிரிப்பிற்கு  களங்கத்தை ஏற்படுத்தியதா?. உண்மையைக் கண்டவர்கள் எனக்கு பதில் கடிதம் எழுதுங்கள்.

சக மாணவர்களின் வீடுகளில் நிகழ்ந்த துக்க நிகழ்விற்காக வகுப்பு மாணவர்கள் சென்றதற்காக அனைவருக்கும் வருகைப் பதிவேடு மறுக்கப்பட்டதாக வினவில் வந்த ஒரு கட்டுரையில் எப்போதோ படித்ததை மனதில் வரும்போது, சக விடுதி மாணவன் காலச் சிக்கலினால் மாண்டபோது, அக்குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கெடுக்கச் சென்ற எங்களனைவருக்கும் வருகையை பதிவு செய்த பேராசிரியப் பெருமக்களின் நினைவு மனதில் எழும்பாமல் இல்லை. எங்களுடன் ஒரு ஆசிரியர் கூட வந்தார் என்று எதோ ஒரு நினைவு சொல்கிறது. சாஷ்டாங்கமாக காலில் விழுவதை மட்டுமே வேள்வியாக செய்யும் ஆட்சிப்  பணியை செய்யும் நாட்டை ஆளும் அமைச்சர் (பெயரைக் கூட சொல்லவியலாத) பெருமக்கள் வாழும்,  அன்பு உள்ளம் படைத்த அம்மாவின் தமிழ்நாட்டில் தான்,  தங்களது வீட்டு நல்ல நிகழ்வுகளுக்கு மாணவர்கள் அனைவரையும் பேரன்புடன் அழைத்து, அனைவரிடமும் “என் மாணாக்கர்கள்” என பெருமையுடன் அனைவரிடமும் அறிமுகப்படுத்திய பேராசிரியர்கள் முனைவர் தியாகராஜன் மற்றும்  முனைவர் மாதவன் ஆசிரியர்களாக பணி புரிந்தனர்.

இண்டஸ்ரியல் டூர்,கல்வி சுற்றுலா என ஏமாற்று மோசடி வித்தை காட்டி, பண வேட்டை நடத்தும் இந்நாட்டில்தான், (ஒவ்வொரு முறையும்) கல்விச் சுற்றுலாவின் போது தனக்கு ஏற்படும் செலவுகளுக்கு தன் சொந்தக்காசை செலவளித்தது மட்டுமில்லாமல், உணவு, உறைவிடம் என கைக்காசை கரியாக்கி அனைத்து மாணவர்களுக்காக இறைத்த விரிவுரையாளர் பாலு இளிச்சவாயனாகத்தான் தற்போது தெரிவார். கல்லூரிப் பேருந்தில் வராவிட்டால், வாகனத்தின் காற்றை புடுங்கும் கல்லூரிகள் புற்றிசல்கள் போல் நிரம்பியிருக்கும் இம்மாநிலத்தில் தான், அவரது சொந்த சைக்கிளை எனக்குத் தந்த இலகும் உள்ளம் கொண்ட மனிதர் பாலு. ஒருமுறை கட்டுரைப் போட்டிக்காக என்னுடன் இருவர் இணைந்து மூவர் கூட்டம் மும்பை செல்ல நேரிட்டபோது, நாங்கள் கேட்காமலே பயணச் சீட்டுக்கான பணம், மற்றும் வழிச் செலவுக்கும் பணம் தந்து உதவிய வாழும் மனித தெய்வதமான அவரை இந்த வேளையில் நினையாது போனால், தவறிழைத்தவனாகிவிடுவேன்.

சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் டவுசர் உருவும் வேலையைச் செய்யும் கல்வி வள்ளல்கள் வாழும் நாட்டில், தோலை உரிக்குமளவிற்கு அக்கினி வெயில் அடிக்கும் கோடை விடுமுறையில் கூட  வீட்டோடு இருந்து ஓய்வெடுக்காமல்,  மேல்நிலைப் பள்ளி இறுதி ஆண்டில்  எங்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்திய மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சவுந்திர பாண்டியன் (கணித ஆசிரியர்), அய்யாத்துரை(இயற்பியல் ஆசிரியர்), ஜெகஜோதி(வேதியியல் ஆசிரியை) போன்றோரை ஒப்பிடாமல் இருக்கமுடிவதில்லை. இவர்களின் சிறப்பு வகுப்புகளுக்கு தட்சிணை என்பது அடையாளக் கட்டணமாக வாங்கப்பட்ட 175 ரூபாய் தான்.

தினமும் குறைந்தது நான்கு மணி நேரம் பயணம் செய்து சிறப்பு வகுப்பு எடுத்த கணித ஆசிரியர் சவுந்திர பாண்டியனின்  பேருந்துக் கட்டணத்திற்கு கூட அந்த 175 ரூபாய் காணாது. அதைக்கூட கூட கட்ட இயலாத என்னிடம் அப்பணத்தை இம்மூவரும் பெறவில்லை. அதற்காக எனக்கு செய்முறைத் தேர்வில் மதிப்பெண்களைக் குறைக்கவும் இல்லை.

சுய சாதி அபிமானத்தை வெறுத்து, ஆதிக்க சாதிகளின் அட்டகாசத்தை எதிர்த்த காரணத்திற்காக மட்டுமே பள்ளித் தலைமை ஆசிரியராகவும், கல்லூரி முதல்வராகவும் வர இயலாத அந்த தியாக உள்ளங்களின் பெயர்களை அவசியம் கருதி இங்கே வெளியிடாமல் தவிர்க்கிறேன். “புதுசா எவனும் அரிவாள் செய்யக்கூடாதாம் ஆனால் ஏற்கனவே அரிவாள் செய்து வைத்து கொண்டு இருப்பவனிடம் காசு கொடுத்து வாங்கணும்”, இதுதான் CTBT ஒப்பந்தம் பற்றிய ஏகாதிபத்தியங்களின் வல்லாதிக்கத்தை எங்களுக்கு புரியும்படி சொல்லிக்கொடுத்ததோடு மட்டுமில்லாமல், சாதிய ஏகாதிபத்தியம் நிறைந்த பள்ளிக்கூடத்தில் சுயசாதி அபிமானத்தை எதிர்த்து, சாதிவெறியர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்தும் காட்டினார்  வரலாற்றாசிரியர்.

தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட,சிறுபான்மை  மக்களின் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்து இரண்டு MLA, ஒரு MP க்காக, கடைசியில் அம்மாவின் காலடியிலும் ஐயாவின் புகழோதும் மேடைகளிலும் வீழ்ந்து, பிழைப்பு நடத்தும் அரசியல் வியாபாரிகள் வாழும் இந்நாட்டில்தான், கல்லூரியில் ஏற்பட்ட சாதிய மோதலால் சண்டை வந்த போது,  ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதிக்கசாதி வல்லூறுகளிடமிருந்து  ஆபத்து நேர்ந்தபோது சிக்கலைத் தவிர பயனேதும் எதிர்பாராது அரவணைத்து ஆதரவளித்த ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த வீரத்தமிழ் பேராசிரியர்களும் இருக்கிறார்கள்.

பாவ யோனியில் பிறந்த  சூத்திரன் என்ற காரணத்திற்காக, கண்காணாத தூரத்தில் இருந்து வில்வித்தை கற்றான் என்பதால் ஏகலைவர்களின் கட்டை விரலை குருதட்சிணையாக வாங்கிய, நெத்தியில் பிறந்த புண்ணியப்பார்ப்பனத் துரோணர், சொந்தச் சாதியா, எந்தசாதியா என்று வேறுபடுத்தாமல், ஊர்க்கம்மாயில் பிடித்த “அயிரை மீன் வச்சு குழம்பு வச்சு இருக்கோம், வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போப்பா” என என்னை அன்போடு அழைத்து மாணவனுக்கு சிஷ்யதட்சிணை கொடுத்த ராஜாராம் ஆசிரியர், அவருக்கு நான் என்ன உற்றாரா,,உறவினரா,மச்சானா,மாப்பிள்ளையா?.

துரோணர், இராஜாராம் சார், இவர்களில் யார் உண்மையான குரு?. அவரிடம் பள்ளிப்படிப்பை முடித்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், அவருடைய வகுப்பிற்கு என் ஊரைச் சார்ந்த மாணவர்கள் இன்று போய் சேர்ந்தாலும் மறவாது “விஜயபாஸ்கர் நல்லா இருக்கானாப்பா?” என தந்தையைப் போல் விசாரிக்கும் அவரே தலைசிறந்த குரு என நான் உறுதியாக அறுதியிட்டுச் சொல்லுகிறேன். சுய சாதி கெளரவத்திற்காக சொந்த மகளையே கொலை செய்யும் சாதி வெறியர்கள் வாழும் இந்த மண்ணில், ஆசிரியர்-மாணவர் என்ற உறவை வீடு வரை எடுத்துச் சென்ற ஆசிரியர்களை நினைக்கும் போது வியப்பாகத்தான் இருக்கிறது.

பை நிறைய சம்பளம் வாங்கி தொந்தி நிறைத்து, மிச்ச சொச்சம் கொண்டு வாங்கிய டாடா சுமோவில் பள்ளி வேலைநாட்களில் கூட  ஊரைச் சுற்றும் ஆசிரியர்கள் நிறைந்த இந்த சூழலில், சைக்கிளில் எளிமையாக வந்து அருமையான முறையில் பாடம் நடத்தியதோடு மட்டுமில்லாமல், கொஞ்சம கிடைக்கும் ஓய்வு நாட்களைக் கூட எனக்காக செலவழித்து வகுப்புகள் எடுத்து செவிக்கும் மூளைக்கும் உணவிட்டு, வயிற்றுக்கும் உணவிட்ட அருமைப் பேராசிரியர் தியாகராஜன் இருந்தார் என்பது நகைமுரண்.

வாழும் விடிவெள்ளி, இராணுவத்தை அனுப்பி ஒரே நாளில் ஈழத்தை வாங்கிக் கொடுத்த இதய தெய்வத்தின் காலில் விழும்போது 180 டிகிரிக்கு ஒரு டிகிரி கூட குறைந்துவிட்டாலே, தங்களுடைய பதவி இருக்கிறதா இல்லையா என்பதை அடுத்த நாள் செய்தித்தாளில் தெரிந்துகொள்ளும் நாட்டை ஆள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமை அமைச்சர் பெருமக்கள் வாழும் சுதந்திரத் திருநாட்டில் தான், வடிவேலு என கோமாளிப்பட்டம் கொடுத்தாலும், அரட்டாத மிரட்டாத வரலாற்று ஆசிரியர் இராமச்சந்திரன், ,கீச்சுக்குரல் கொண்ட ஒரே காரணத்திற்காக நகைச்சுவை எனும் பெயரில் அனுதினமும் பேமாளியாக்க முயற்சி செய்யும் மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வில் மதிப்பெண்ணை வெட்டிவிடுவேன் என ரௌடியிசம் பேசாத கள்ளங்கபடமற்ற பெராசிரியனாகத் திகழ்ந்த முனைவர் செல்வராஜ், போன்றோர்களும்  இருந்தார்கள் என்பது நாளைய வரலாற்றில் எழுதப்படாமல் இருக்கக்கூடாது.

சீதையின் அல்குல் முதற்கொண்டு வர்ணித்த ஆபாசக் “கம்பனும்”, பொய்,புரட்டு,அறிவுக்கு புறம்பான கதைகளையும் கற்பனைகளையும் மட்டுமே கொண்ட பெரியபுராண சேக்கிழாரும் இணைந்து சைவத் தமிழ் வளர்த்த தமிழ்நாட்டில், தமிழில் பேசினால் அபராதம் விதிக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில், இடுப்பு உயரம் கூட இல்லாத மாணவன் உட்பட பாரபட்சம் இல்லாமல் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளான தமிழ்வழிப் பள்ளியில் ஆங்கிலப் பாடம் எடுத்த (கெஞ்சிக் கூத்தாடி) ஆசிரியர் சத்திய மூர்த்தி,  பாரபட்சமின்றி தன்னை எள்ளி நகையாடும் மாணவர்களையும்  தேர்வு பெறச் செய்வதற்கு செய்யாத ஒரே காரியம் திருப்பதிக்கு மொட்டையும், பழனிக்கு காவடியும், சபரிமலைக்கு இருமுடியும்தான்.

தன்னைப் பற்றிய கேலிச்சித்திரத்தை இணையத்தில் பகிர்ந்து கொண்ட காரணத்துக்காக ஜாதாப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரை கைது செய்த மேற்குவங்க திதி மம்தா வாழும் நாட்டின் தென்கோடி முனையில் உள்ள ஒரு பள்ளியில், மூக்கு பெரிதாக இருந்த காரணத்திற்காக மூக்கன் என கொடூர நகைச்சுவை சேவை புரிந்த மாணவர்களைக் கூட ஆங்கிலம்,தமிழ் என இருமொழிப் புலமையால் இலாவகமாகச் சமாளிக்கும் பாலசுப்பிரமணியம் என்றொருவர் பணிபுரிந்தார் என்பது எதிர்முரண்.

டொனேசன் என்ற போர்வையில், ஜேப்படிக் கொள்ளை அடிக்கும் ‘சேவை’ புரிந்து அதற்குரிய சன்மானம், சொத்துக்களைப் பெற்று சாராய ரவுடி எனும் பட்டத்தோடு கல்வி வள்ளல் எனும் விருதினைப் பெற்றிருக்கும் ஜேப்பியார், கடவுள் பிசினசை விட கல்வி பிசினஸ் பல மடங்கு காணிக்கைகளை கொடுப்பதால் தமது ஆன்மீக செல்வாக்கை வைத்து நடுத்தர வர்க்கத்திடம் பக்தி சுரண்டலோடு சேர்த்து கல்வி சுரண்டலையும் 1970கள் முதல் மேல்மருவத்தூரில் நடத்தும் பங்காரு அடிகளார், சாதாரண பள்ளி ஆசிரியராக இருந்து, தனது குடும்ப உறுப்பினர்களை அறங்காவலர்களாக கொண்ட அறக்கட்டளை மூலம் எஸ்ஆர்எம் குழுமத்துக்குச் சொந்தமாக 5 வளாகங்களில் செயல்படும் 21 கல்லூரிகளையும், புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி பத்திரிகைகளையும், புதிய தலைமுறை தொலைக்காட்சியையும், வேந்தர் மூவீஸ் திரைப்பட நிறுவனத்தையும் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும் கல்வித தந்தை  பச்சமுத்து போன்றோர் பணவேட்டை நடத்தும் இந்த புண்ணிய பூமியில்தான், தான் விரும்பாவிட்டாலும், சிற்சில தவறுகளுக்காக, 50 காசு, ஒரு ரூபாய் என, குருவி சேர்த்த கூட்டைப் போன்று சிறு தொகையாய் அபராதம் வாங்கிய காசை ஐந்து பைசாகூட குறையாமல் கணக்கு  வைத்திருந்து,  ஆண்டு இறுதியில் கைக்காசையும் போட்டு வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வாங்கிக் கொடுத்த வணிகவியல் ஆசிரியர் ஒருவர் வாழ்ந்தார் என்பது வியப்பை மட்டுமே தரக்கூடும்.

ஒரு ரூபாய் மட்டுமே ஊதியம் வாங்கினாலும், ஆயிரக்கணக்கான கோடி வரிப்பணத்தை வாரி இறைத்து வளர்ப்பு மகனின் திருமணத்தை நடத்தும் அம்மாக்களும்,  ஊர்ப்பணத்தை கொள்ளையடித்து வாங்கிய எண்ணிடலங்கா செருப்புகளையும், எடையிலடங்கா தங்க ஆபரணங்களையும் அணிவித்து மன்னார் குடி கும்பலின் உடன்பிறவா சகோதரியை அழகு பார்க்கும் அக்காக்களும் இருக்கும் நாட்டில், ஆஸ்துமா நோயில் தான் கடுமையாகப் பாதிக்கபட்டாலும், அதன் சுவடு கூட மாணவர்களுக்குத் தெரிய விடாமல்,  எளிமையான முறையில் இயற்பியல்  பாடத்தை நடத்திய அய்யாத் துரை போன்ற ஆசிரியர்கள் இருந்தார்கள் என்பதை என் குழந்தை கூட நம்பாது.

நூறு சதவித தேர்ச்சி எனும் கவர்ச்சிக்காக, 500 க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களை மட்டுமே சேர்த்து பிராய்லர் கறிக்கோழிகளாக மாற்றும் இருள் சூழ்ந்த பள்ளிகளை நடத்தும் பள்ளித்தாளாளர்கள்,ஆசிரியர்கள் மத்தியில், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்பு குறைவாக உள்ள  மாணவர்களை பள்ளி முடிந்தபின்னர், பள்ளிக்கே வரவழைத்து படிக்கச் செய்த ஆசிரியர்களை நான் கண்ணுற்றுள்ளேன். அனைவரும் வரவேண்டும் எனக் கட்டாயம் ஏதும் இல்லை. சுயவிருப்பம் இருந்தால் மட்டுமே வந்து படித்துப் பயன் பெறுங்கள் என அழைத்து, பள்ளி அறைகளை திறந்து விட்டு படிக்கச் சொல்லும் வேளையில், சந்தேகங்கள் வந்தால் தெளிவுபடுத்த மாணவர்களோடு இருந்த ஆசிரியர்களைப் பார்க்கும் வீடு பேரு நிலையை நான் அடைந்துள்ளேன்.

வீட்டில் இருந்து படிக்க நல்ல சூழல் இல்லாத மாணவர்கள் பலர் இதில் பயன் பெற்றதை நான் அறிவேன். சாப்பிட விருப்பமில்லாது இருக்கும் குழந்தைகூட ஆர்வத்தில் அள்ளிச் சாப்பிடும்  கூட்டாஞ்சோறு போல், பள்ளிப்பாடங்கள் வேப்பங்காயாக கசந்தாலும்,  பலர் ஒன்று கூடுவதால் மட்டுமே கூட்டாம்படிப்பு என்ற ஒரே காரணத்திற்காக புத்தகத்தை திறந்ததால் மட்டுமே தேர்ச்சி பெற்ற என் சக நண்பர்களை நான் அறிவேன்.

மேற்கண்ட ஆசிரியர்கள் எல்லாம் சீர்கெட்ட சமுகத்திலிருந்து வந்திருந்தாலும், அரசு மற்றும் அரசு நிதி பெறும் பள்ளி, கல்லூரிச் சூழல்தான்  அவர்கள் சீர்கெடாமல் வாழ வழிவகுத்தது என்றால் மிகையாகாது.  கல்விக்கொள்ளை அடிக்கும் புற்றிசல் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்திருப்பார்களேயானால், கந்துவட்டி வசூலிப்பவர்களாகவும், பிராய்லர் கோழிகளை வளர்க்கும் கோழிப்பண்ணை ஊழியர்களாகவும, குறுநிலமன்னர்களான  கல்வித்தந்தைகளின் கைக்கூலிகளாகவும் தான் இருந்திருப்பார்கள்,  அங்கொன்றும், இங்கொன்றுமாக நான் கண்ட ஆசிரியர்களை, எங்கும் நீக்கமற நிறைக்கச் செய்ய ஒரே வழி கல்வியை அரசு மயமாக்குதலேயாகும்.

–  விஜயபாஸ்கர்