privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைஜாக்கிரதை! பெரியவா வர்ரா...

ஜாக்கிரதை! பெரியவா வர்ரா…

-

குருவி ரவி
தில் பாண்டியன்
மாட்டு பாஸ்கர்
காஞ்சி ஜெயேந்திரன்
மூஞ்சி விஜயேந்திரன்…
மொத்தமாய் விடுதலை.

சங்கர்ராமன் கொலை - ஜெயேந்திரன்வாணவேடிக்கை, பட்டாசு
கற்பூர ஆரத்தி, சிறப்பு பூசை…
சுவீட் எடு கொண்டாடு… என
கொண்டாட்டங்களின்
அருவருப்பு தாளாமல்
ஒருக்கழிக்கிறான் வரதராசப் பெருமாள்
கண்ணை மூடிக் கொள்கிறாள்
காஞ்சி காமாட்சி!

நீதியையே உடைத்த பிறகு
எதற்கு தனியாய்
நீதி தேவதைக்கு தேங்காய் உடைத்து?

குற்றங்களை கொண்டாடுவதுதான்
பார்ப்பனப் பண்டிகை!
இதையும் பண்டிகையாக்கி
தைரியமாய் கொண்டாடுங்கள் அம்பிகளே!
மயிர் நீத்தால் உயிர் நீப்பது
கவரி மான்கள்தான்.
பன்றிகளல்ல…
தைரியமாய் நீங்கள் கொண்டாடுங்கள்!

வேண்டாதவனுக்கு
வில்லாய் வளையும் இந்து தர்மம்
பெரியவாளுக்கு
காலில் புல்லாய் வளைந்தது,

சங்கர்ராமனுக்கு தர்ப்பணம்
சங்கராச்சாரிக்கு அர்ப்பணம்
என்னே! இந்து மதத்தின் அற்புதம்!

வெற்றிக் களிப்புக்கு முகம்காட்ட
ராமகோபாலன்,
ஏதோ இழந்தது போல மகிழ்ச்சியை மறைத்து
”இன்னும் எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்
என்று முன்னேறி அடிக்க
முகம் காட்டும் ஆடிட்டர் குருமூர்த்தி,
என்னே! இந்துத்வாவின் பன்முகம்!

அடடா!
இந்து மதத்துக்குத்தான்
என்ன ஒரு சகிப்புத் தன்மை!

கூலிக்கு கொலையன்றி
வேறேதும் அறியாத தில்லும், குருவியும்
ஜாலிக்காக சகலமும் மேயும்
சங்கராச்சாரியோடு தம்மையும் சமமாக்கியதை
சகித்துத்தான் கொள்கிறார்கள்.

இருந்தாலும்
மாட்டு பாஸ்கருக்கு
மனதில் ஒரு நடுக்கம்,
குறைந்தபட்சம் ‘குவார்ட்டர்’ இல்லாமல்
குற்றக் குறி மறைக்கத் தெரியாது
தம்மால்,
எல்லாமும் செய்துவிட்டு
எதுவுமே நடக்காத மாதிரி
முகத்தை காட்டுகிறார்களே அவாள்?!

என்ன இருந்தாலும், சாமி ‘ஃபுல்லுக்கே’ ஒரு சவால்!
பார்த்து நடுங்குது பாவி மனம்.
கேட்டுத் தொலைக்கலாம் எனில்
சாமியோ மவுனவிரதம்!

வாயைத் திறந்து
உளறிக் கொட்டினால்
பிரம்ம ராட்சசியிடமிருந்து
பிடிவாரண்ட் வரும்,
என்ற தேவ ரகசியத்திற்காக
தேவரீர் சமூகம்
‘ஹோம் ஒர்க’ செய்த பூஜா பலன்
கூலிப்படை அறியுமா?
இல்லை,
காவிப்படைக்கு முன்தான்
கூலிப்படை மிஞ்சுமா?

பிறழ்சாட்சிகள்…
நீதியை விலைக்கு வாங்கும்
குரல் சாட்சிகள்…
வழக்கிடையே கொலைக் காட்சிகள்…
அத்தனை யாகத்திலும்
தூள்கிளப்பி… ஆள் கிளப்பி
விடுதலைக்கு நாள் கிளப்பிய
ஜகத்குருவின் ஜகஜால பிரதாபம் பார்த்து
சகல கேடிகளுக்கும்
உடல் வியர்க்குது!
அடப் பாவிகளா?
அவன் வெளியே… நான் உள்ளே
என்ன நீதியடா
என அசாராம் பாபுவுக்கே
ஆவி புழுங்குது!

பிரம்ம ரகசியத்தை
அறியப்போன நசிகேதனின்
தலை சுக்கு நூறானதோ இல்லையோ,
காஞ்சி பிர்லா மாளிகையின்
ரகசியத்தை அறிந்த
சங்கர்ராமனின் தலை
சுக்கு நூறானது!

அவாளின் அகராதிப்படி
செத்தவர்
‘சாட்சாத் பிராமணன்’
இருந்தாலென்ன?
கொன்றவன்
பர பிரம்மமாயிற்றே!

அனுராதா ரமணன் சொன்னாலென்ன
யார் சொன்னாலென்ன
பிரம்மத்திற்கு எதிராக
கேள்வி கேட்டால்
சங்கர்ராமனுக்கு நேர்ந்த கதி
சகலருக்கும் நேரும்…

ஜாக்கிரதை…
அதோ
பெரியவாள் வருகிறார்!
ஜெய! ஜெய! சங்கர!
ஜெயாவுக்கும்… சங்கர!

– துரை.சண்முகம்