privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்மொழிக் கல்வி தந்த ஆசான்கள் - சுகதேவ்

மொழிக் கல்வி தந்த ஆசான்கள் – சுகதேவ்

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 6 – சுகதேவ்

ரு ஆசிரியர் தன மாணவனை மறந்து போகும் சாத்தியங்கள் உண்டு. ஒரு மாணவனால் தன் ஆசிரியரை எப்போதும் மறக்க இயலாது. ஆசிரியர் நினைவில் மாணவனும், அந்த மாணவன் ஆசிரியரை கொண்டாடுவதும் கொஞ்சம் கொஞ்சம் அழகானது. எனது கல்லூரி காலத்தை விடவும் பள்ளி பருவ நினைவுகளே நெஞ்சில் இனிக்கிறது. நான் பயின்ற குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுக்காவிற்கு உட்பட்ட சி.எஸ்.ஐ.வா.வி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த தம்பி மனோகரன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கிலம் கற்பித்தார். குமரித் தந்தை என்று மக்களால் நினைவு கூரப்படும் மார்ஷல் நேசமணி பிறந்த பள்ளியாடியை சேர்ந்தவர் தம்பி மனோகரன். காலனியாதிக்கத்தின் உபவிளைவாக கிறித்தவ மதப் பிரச்சாரகர்கள் ஆற்றிய கல்வித் தொண்டில் அதிகமாக அப்போதே பயனடைந்தது பள்ளியாடி என்று சொல்வார் அப்பா.

பட்டதாரி தொப்பிசிறந்த எடுத்துக்காட்டுகளை கையாண்டு ஆங்கில இலக்கணத்தை தெளிய வைத்தார். இன்று இலக்கண அழுத்தம் இரண்டாம் மொழி கற்பதற்கு தேவையில்லை என்று கல்விச் சூழல்களில் வாதிடப்படுகிறது. மொழியின் நோக்கம் உடனடி வேலை பெறுவதாக குறுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் பாடல் தேவை மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. மொழியின் ஆழத்தையும், அழகையும் புரிந்து கொள்வதை விட நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அமைதியிழக்காமல் பேசும் முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் பணிபுரியும் போது ஓரிடத்தில் பெறும் மன உளைச்சல் இன்னோரிடத்தில் கசிந்தொழுகி விடாத மனக் கட்டமைப்பு தேவைப்படுகிறது. இந்த ஆற்றலுக்கான மென் திறன்களை கைக்கொள்ளும் நோக்கத்திற்காக ஆங்கிலம் இன்று கற்பிக்கப்படுகிறது. ஆலன் டேட் எனும் அமெரிக்க எழுத்தாளர் தொடர்பாடல் தேவைக்காக மட்டும் மொழி இருப்பது அதன் தாழ்ந்த நிலையை காட்டுகிறது என்கிறார். மேம்பட்ட துல்லியத்திற்கும், உணர்ச்சிகளின் மலர்ச்சிக்கும், வெளிப்பாட்டிற்கும், மக்கள் வசப்படவும், அழகியலை ஆராதிக்கவும் மொழி பயன்படுவது சமூகம் உயிரோட்டத்துடன் இருக்க உதவும் என்கிறார்.

‘கற்றதனைத்தும் மறந்த பிறகு நினைவில் எஞ்சுவதே கல்வி’ என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஒருமுறை கற்பிப்பதை மாணவர்கள் நினைவில் கொண்டிருக்கிறார்களா என்று கேள்வி பதில்கள் மூலம் பரிசீலிக்கும் வழக்கம் கொண்டிருந்தார் தம்பி மனோகரன். அப்போது அவர் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்கு பதிலளித்ததில் உருவானது நேசம். நான் கல்வியில் சராசரி மாணவனாகவே இருந்தேன். ஆனால் என்னை அபாரமாக எடை போட்டார். இது எனக்கு படிப்பில் சற்று அலட்சியம் தோன்ற காரணமாக இருந்தது. ஒரு சிறுநகர சூழலில் என் போன்ற வெகுசில மாணவர்களின் கற்றல் திறன் கூடுதல் நம்பிக்கையை அவருக்கு அளித்திருக்க வேண்டும். சில தனிப்பட்ட சலுகைகளை நான் மற்றும் சிலர் அனுபவித்தோம். ஒரு ஆசிரியர் என்ற முறையில் பாரபட்சமின்றி அவரால் செயல்பட முடியவில்லை. இந்த குறைபாடு நீங்கப்பெற்ற ஆசிரியர்களை நான் அதன் பின்னரும் பார்த்ததில்லை.

எட்டாவது வகுப்பில் ஆங்கிலம் கற்பித்த விஜயன் சார் என் வாழ்வில் இன்னொரு முக்கியமான ஆசிரியர். நாகர்கோவிலில் இருந்து தினமும் வந்தார். விதவிதமான உடைகளை உடுத்தி வருவார். அப்போது ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வந்தது. ஜெயலலிதா வீட்டின் மேல் பறந்த ஒரு விமானம் குறித்து சர்ச்சை கிளம்பியது. முதல்வரை கொல்ல சதி என்று பரபரப்பூட்டப்பட்டது. அப்போது விமானங்களின் வகைகள் (விமானங்கள் தொடர்பாக ஒரு பாடம் இருந்ததாக நினைவு) தொடர்பாக ஒரு பத்திரிக்கையை காட்டி அதில் இருந்த ஜெட் விமானம் தான் முதல்வர் வீட்டின் மேல் பறந்தது எனவும் அதில் வந்து யாரையும் கொல்ல முடியாது எனவும் விஜயன் சார் விளக்கியது நினைவில் இருக்கிறது.

அறிவியல் பாடங்களை கற்பித்த ஆசிரியைகள் பெரும்பாலும் பாதிரிகளின் மனைவியர். அவர்களுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை என்று அப்போதே எனக்கு தோன்றியது. ‘மனது வைத்தால் நன்றாக படிக்கக் கூடியவன்; ஆனால் விளையாட்டு’ என்று செல்லப் புகார்களை அப்பாவுக்கு அளித்து வந்தார்கள். கல்வி நிலையங்களில் ஆசிரியர்களை விடவும் ஆசிரியைகளே அதிகம் இருக்கிறார்கள். நான் பயின்ற பள்ளியிலும் ஆசிரியைகளே அதிகம். என் அனுபவத்தில் ஆசிரியைகளை விடவும் ஆசிரியர்களே பெரும்பாலும் மாணவர்களுக்கு புதிய திறப்புகளை அளிப்பவர்களாக இருந்து வந்துள்ளார்கள். எனது பள்ளி நாட்களில் அனைத்து மாநிலங்களையும், அவற்றின் தலைநகரங்களையும் மற்றும் முதலமைச்சர்களையும் அறிந்து வைத்திருந்தேன்.

எனது நாட்டம் அரசியல் பத்திரிக்கைகள், வார இதழ்கள் என்று திரும்பியது. தி.க உடைந்து பெரியார் தி.க 1996 வாக்கில் ஆரம்பிக்கப்பட்டது. வீரமணியை விமர்சித்து அவர்கள் வெளியிட்ட குறு நூலின் முகவரி வாரமலரில் கிடைக்கப் பெற்று அதனை தொடர்பு கொண்டதில் பெரியார் முரசு, மற்றும் பெரியார் முழக்கம் இதழ்களை அனுப்பி வைத்துக் கொண்டிருந்தனர். இது போக துக்ளக், இந்தியா டுடே இதழ்களை தீவிரமாக வாசிக்கத் தொடங்கினேன். பெரும்பாலான பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் இத்தகைய ஆர்வங்களை ஆதரிப்பதில்லை. மொழியாற்றலும், சமூக அறிவும் வளர இந்த சுயவாசிப்பு உதவி செய்யும் என்பதை புரிந்து கொள்வதில்லை.

12-வது வகுப்பில் ஆயிரத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவி கல்லூரியில் காட்சி ஊடகவியல் படிக்க விழைந்துள்ளார். துறை தலைவர் அந்த மாணவியிடம் ஏன் அந்த பாடப்பிரிவை விரும்புகிறாய்? என்று ஒரு வரியில் எழுதி தெரியப்படுத்து என்று கேட்ட போது, தன்னால் சொந்தமாக ஒரு வரி எழுத தெரிந்திருக்கவில்லை என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சொன்னார். ‘சோ’ வின் தீவிர வாசகனாக பள்ளி நாட்களில் இருந்தேன். பெரியாரின் துடுப்பும் கையில் இருந்ததால் திசை மாறாமல் பயணிக்க முடிந்தது.

நான் சென்னைக்கு வந்த போது இந்த நகரத்தின் அலங்காரம் முழுக்க அந்நியமாக இருந்தது. மக்கள் பேசிய மொழி, உணவு மற்றும் பழக்கவழக்கங்கள் வேறுபட்டிருந்தது. ஹோட்டலில் இட்லி, பூரி, பொங்கல், வடை என்று நால்வகை உணவை ஒரே நேரத்தில் சாப்பிடும் மக்கள் புதிராக தோன்றினார்கள். அதிகமாக தொந்தரவு செய்து கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரை முறைக்கக் கற்றுத் தந்தான், சக மாணவன் ஒருவன். ஒரு சிறு நிகழ்வையும் அதிகமான சொற்களால் உரைப்பது போல தோன்றியது. இந்த நகரத்தில் நான் தொலைந்து போவது போல உணர்ந்தேன். இந்த நிலையில் என்னை மீட்க உதவி செய்தது பள்ளி வாழ்க்கையில் ஆங்கில மொழியில் நான் பெற்ற அடித்தளம் தான்.

நான் சென்னையில் உயர்கல்வி பயின்று வந்த காலத்திலும், பிறகு வேலை கிடைத்த போதும் என்னுடைய நிலையை பற்றி, தம்பி மனோகரன் அப்பாவிடம் விசாரிப்பதை, நான் ஊருக்கு செல்லும் போது தந்தை சொல்வார். பள்ளியாடியில் இருந்த உறவினர் ஒருவரிடம் நான் அவரை விசாரித்து வந்தேன். அவர் நலமாக இருப்பார் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் அவர் திடீரென இறந்த செய்தி கிடைத்தது. பள்ளி வாழ்க்கையில் என்னுடன் பயின்ற நண்பன் ஒருவன் அவர் படுக்கையில் கிடந்த போது நான் உட்பட மூன்று மாணவர்களின் பெயர்களை அவர் உச்சரித்துக் கொண்டிருந்ததாக கூறினான். அவரை ஒருமுறை கூட பார்க்கவில்லை என்ற வருத்தம் அவருக்கு இருந்ததா என்று தெரியவில்லை. அவர் மூலம் பயனடைந்த மாணவர்களிடம் நிச்சயமாக இருக்கும்.

– சுகதேவ்.