Thursday, June 20, 2024
முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்நீதிபதி கங்குலியின் குற்றத்திற்கு நீதி கிடைக்குமா?

நீதிபதி கங்குலியின் குற்றத்திற்கு நீதி கிடைக்குமா?

-

முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதியும், தற்போதைய மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவருமாக இருப்பவர் ஏ.கே. கங்குலி. அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருக்கையில் அவரிடம் பயிற்சி பெற வந்திருந்த கொல்கத்தா சட்ட பல்கலைக் கழக மாணவி ஒருவர் கடந்த மாதம் பாலியல் அத்துமீறல் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். நவம்பர் 6-ம் தேதி ஜர்னல் ஆப் இந்தியன் லா அண்ட் சொசைட்டிஸ்-ஐ சார்ந்த வலைப்பூவில் ஸ்டெல்லா ஜேம்ஸ் என்ற பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் இதுகுறித்து எழுதியதைத் தொடர்ந்து, இப்பிரச்சினை வெளியுலகுக்கு தெரிய வந்தது. இந்த வலைப்பூவை நடத்துவோர் ”இயற்கை நீதி: சமூகம் மற்றும் இயற்கைக்கான சட்ட தரணிகள்” என்ற தன்னார்வக் குழுவினைச் சேர்ந்தவர்கள்.

ஏ.கே.கங்குலி
நீதிபதி ஏ.கே.கங்குலி

வழக்கறிஞர் எம்.எல். சர்மாவும், அரசு வழக்குரைஞர் வாகன்வாதியும் இந்த குற்றச்சாட்டைப் பற்றி உச்சநீதி மன்றத்தில் முறையிட்டனர். முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மீதான் பாலியல் புகாரை தானே முன்வந்து விசாரிப்பதன் அடிப்படையில் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்சநீதி மன்ற பெஞ்ச் அதற்காக மூன்று நீதிபதிகள் அடங்கிய ஒரு விசாரணைக் குழுவை நவம்பர் 12 அன்று அமைத்தது.

நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல். தத்து, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் அடங்கிய அக்குழுவின் முன் அப்பெண் தன் வாக்குமூலத்தையும், மூன்று பிரமாண பத்திரங்களையும் தாக்கல் செய்தார். 2012-ல் மேற்கு வங்காள தேசிய நீதித்துறை மற்றும் அறிவியல் பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டு படிப்பின் போது நீதிபதி ஒருவரிடம் பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டு தற்போது ஓய்வுபெற்று விட்ட உச்சநீதி மன்ற நீதிபதி ஏ.கே. கங்குலியிடம் தான் பணிக்கு சேர்ந்ததாகவும், பாலியல் ரீதியாக தொல்லைப்படுத்தியது அவரே என்பதையும் விசாரணையில் அவர் பதிவு செய்யவே, விசாரணைக் குழுவினர் கங்குலியையும் அழைத்து அவரது வாக்குமூலத்தையும் பதிவுசெய்தனர்.

தற்போது அம்மாணவி பயின்ற கொல்கத்தா சட்ட பல்கலையில் கங்குலி ஒரு கவுரவ பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விசாரணைக்கு பின் கங்குலி தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை செய்தியாளர்களிடம் முழுதுமாக மறுத்தார். நவம்பர் 28-ம் தேதி விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியிடம் அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 3-ம் தேதி உச்சநீதி மன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற கங்குலி தற்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். “கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இரவு தில்லியின் உயர்தர ஐந்து நட்சத்திர விடுதியொன்றில் பலத்த போலீசு பாதுகாவலுடன் தங்கியிருந்த நீதிபதி கங்குலி அறைக்கு சென்ற தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார்” என்பதுதான் அவர் மீதான ஸ்டெல்லா ஜேம்சின் குற்றச்சாட்டு. அவர் பதவி விலக வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரசு கட்சியின் எம்.பி. கல்யாண் முகோபாத்யாயா, பாரத் பச்சோ சங்கதன் என்ற தன்னார்வக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்பினர்கள் தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்த போதும், பதவி விலகுவது பற்றி தான் இதுவரை முடிவு செய்யவில்லை எனத் திமிராக அறிவித்து விட்டார் நீதிபதி ஏ.கே.கங்குலி.

சோலி சொராப்ஜி
முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி

“கங்குலி ராஜினாமா செய்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும்” என்று வக்கீல் வண்டுமுருகனாக வந்து நிற்கிறார் முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி. குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பதை கங்குலி தெளிவுபடுத்தி விட்டதாகவும், எனவே ராஜினாமா செய்வதற்கு அவசியமோ, தேவையோ இல்லை என்றும், கங்குலி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கங்குலிக்கு ஆதரவாக சொராப்ஜி களமிறங்கியுள்ளார். “முக்கிய பதவியில் இருப்பவர் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் தங்களது பதவியில் இருந்து விலகி நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது கட்டாயம் ஒன்றும் இல்லை” என்றும், சம்பவம் நடந்த நாளுக்கும், புகார் கொடுத்த நாளுக்குமிடையில் நீண்ட இடைவெளி இருப்பதையும் சுட்டிக்காட்டி, அப்பெண்ணுக்கு இருக்கும் உள்நோக்கம் இன்னதுதான் எனத் தெளிவாக தெரியாத காரணத்தால் அதனை தலைமை நீதிபதிதான் விசாரித்து அறிய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்ட இடைவெளி ஏன்? என்ற ஒற்றைக் கேள்வியின் பின்னால் குற்றவாளிகளை ஒளித்து வைக்கும் வேலையை சோலி சொராப்ஜி போன்ற மூத்த வழக்கறிஞர்கள் துவங்குவது தான் அப்பெண்ணின் நீண்ட மௌனம் மற்றும் இடைவெளிக்கு காரணம் அவருக்கும் தெரியாமல் இல்லைதான். இதுபோன்ற அவதூறுகளுக்கும், பாதிக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட ஒழுக்கம் குறித்த ஆணாதிக்க வக்கிரம் நிறைந்த கேள்விகளுக்கும், பதில்களுக்கும் பயந்துதான் பல பெண்களும் பாலியல் வல்லுறவே நடைபெற்றாலும் அதுபற்றி பொதுவெளியில் தங்களது வாயைத் திறப்பதேயில்லை.

உச்ச நீதிமன்ற வளாகத்திற்கு வந்துபோகும் வாய்ப்புள்ள பெண்ணுக்கே அது வாய்ப்பூட்டு போட்டுள்ளதை பார்த்து ஜனநாயகத்தை நம்புவோர் அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

தற்போது வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட இரண்டு வார கால இடைவெளியில் தன்னை தவறான நோக்கம் கொண்ட பெண்ணாக சித்தரிக்க விசாரணையின் போது முயற்சிகள் நடப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார் ஸ்டெல்லா ஜேம்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஒரு சட்ட மாணவிக்கு புகாரை முன்னரே தெரிவிக்க வேண்டும் என்பது கூடவா தெரியாதா? என்ற ரீதியில் நீதிபதிகளின் விசாரணைகள் தன்னிடம் நடந்ததாகவும் கூறியிருந்தார்.

இவரைப் போலவே மூன்று பெண்கள் நீதிபதி கங்குலியால் பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் யாரும் தங்களது எதிர்கால நலனைக் கருதி புகார் தெரிவிக்க முன்வரவில்லை என்றும் வலைப்பூவில் எழுதியிருந்தார். அவர்கள் அனைவரும் உச்சநீதி மன்ற வழக்கறிஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சம்பந்தப்பட்ட இரு பெண் வழக்கறிஞர்களை சந்தித்த போதும் அவர்கள் ஸ்டெல்லா போல தைரியமாக வெளியில் வந்து பேசத் தயங்கியதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தனக்கு தெரிந்த நான்கு பெண்கள் பிற நீதிபதிகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். தானறிந்த உச்சநீதி மன்ற பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு அவரது மூத்த வழக்கறிஞர் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் தனது மூத்த வழக்கறிஞரிடமிருந்து தொடர்ச்சியான கடும் பாலியல் தொல்லையை எதிர்கொண்ட அவரது தோழி அங்கே வேலையிலிருந்து விலகினாராம். அதன்பிறகு அவருக்கு எந்த வேலையும் சரியாக கிடைக்கவில்லை என்றும், வேலைக்கான எல்லா நேர்காணல்களிலும் அச்சம்பவம் பற்றியே எல்லோரும் கேட்பதால் அவரால் எந்த இடத்திலும் வேலைக்கு சேர முடியாத இக்கட்டான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏ.கே. கங்குலி பதவி விலகினால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும் என்கிறார் சோலி சொராப்ஜி. 2012 டிசம்பரில் தேசமே தில்லியில் ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு ஆதரவாக போராடிக் கொண்டிருந்தது. இந்த நிலையிலும் கூட தன்னிடம் பயிற்சிக்கு வந்த சட்ட மாணவி மீதான கங்குலியின் பாலியல் அத்துமீறலில் ‘தனக்கு மேலே யாருமில்லை’ என்ற உச்சநீதி மன்ற நீதிபதி ஒருவரின் அதிகாரத் திமிராகத்தானே வெளிப்படுகிறது.

”நான் அப்பெண்ணை உடல்ரீதியாக துன்புறுத்தவில்லை” என்று சட்ட ஓட்டையை பயன்படுத்தி லாவகமாக தப்பிக்க முயற்சிக்கிறார் கங்குலி. தன்னிடம் வேலை பார்க்கும்போது இத்தகைய குற்றச்சாட்டுக்களை அப்பெண் முன் வைக்கவில்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டை தருண் தேஜ்பால் பாலியல் வல்லுறவு சம்பவம் போன்ற பிற வழக்குகளுடன் ஒப்பிட வேண்டாம் என்றும், கங்குலி செய்தியாளர்களிடம் ‘வேறுபடுத்தி’ கூறியிருக்கிறார்.

தன்னிடம் முதலில் பயிற்சிக்கு வந்த மாணவி பேறுகால விடுப்பில் சென்று விட்ட பிறகு, இந்தப் பெண் தானாக முன்வந்துதான் பயிற்சிக்கு சேர்ந்தார் என்றும், எப்போதுமே தன்னிடமிருந்து விலக அவருக்கு சுதந்திரம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் கங்குலி. தன்னிடம் இதுபோல பயிற்சி பெற முன்னர் வந்துள்ள பல இளம் வழக்கறிஞர்களையும் தனது குழந்தைகளைப் போலவே தாம் நடத்தியுள்ளதாகவும், இந்தக் குற்றச்சாட்டால் தான் முதலில் அதிர்ச்சியடைந்ததாகவும், பின்னர் உள்ளுக்குள் மிகவும் உடைந்து போனதாகவும் கூறியுள்ளார். சூழ்நிலையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இக்குற்றச்சாட்டுகளினால் தான் உண்மையில் வெட்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் பயின்ற மாணவர்கள் பலர் இன்று நல்ல நிலைமையில் இருப்பதாகவும், அவர்களில் யாரும் இதுவரை இப்படியொரு புகாரை தன் மீது சுமத்தவில்லை என்றும் கூறியுள்ளார். தன் மீதான அப்பெண்ணின் பாலியல் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் உறுதியாக கூறிய அவர், தான் இதனை விசாரணைக் கமிட்டி முன் தெளிவுபடுத்தி விட்டதாகவும், இப்படி நீதிபதிகள் மீது புகார் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அதனால் நீதித் துறைக்குதான் கடுமையான பாதிப்பு என்றும் எச்சரித்திருந்தார்.

”என்னுடைய வீட்டுக்கு பலமுறை அப்பெண் வந்துள்ளார். என்னுடன் இரவு உணவு கூட சாப்பிட்டிருக்கிறார். தன்னுடைய இணைய பக்கத்தில் கூட என்னை மிகவும் மதிப்பதாகத்தான் சொல்லி இருக்கிறார். முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். என் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த பிறகு அவரிடம் இரண்டு முறை பேச முயன்றேன். ஆனால் அவர் பேச மறுத்து விட்டார். என் மகளைப் போலதான் அப்போது அவரை நடத்தினேன்.  நீதிபதிகள் மீது இப்படியான புகார்களை எழுப்பினால் நாங்கள் பணி புரிவதே கடினம். இந்நிலைமை நீடித்தால் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை போய் விடும்” என்றும் வருத்தப்பட்டிருக்கிறார் கங்குலி.

இதற்கு அப்பெண் ”விடுமுறை நாளில் கூட வந்து ஆர்வத்துடன் பயிற்சி பெற்ற எனக்கு பாலியல் அத்துமீறல்தான் பரிசாக கிடைத்தது. என் தாத்தா வயதில் இருந்த சமீபத்தில் ஓய்வுபெற்ற  உச்சநீதி மன்ற நீதிபதி ஒருவர் விடுதி அறையில் நடந்து கொண்ட விதம் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. உடனே பலரும் பார்த்திருக்க நான் விடுதியின் அறையிலிருந்து தனியாகவும், அமைதியாகவும் வெளியேறி வந்தேன். யாரிடமும் இதுபற்றி அப்போது சொல்லவில்லை. அந்த கசப்பான நினைவுகளை இப்போதும் என் நினைவுகளிலிருந்து அகற்ற முடியவில்லை” என்கிறார். சட்டத்தின் மூலம் வாழ்வின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையை விதைத்த ஐந்தாண்டு கால சட்டப் படிப்பும், நடைமுறையில் தேவையான சட்டங்கள் இல்லாத போது வீண்தான் என்பதை சொந்த அனுபவத்தில் தான் கண்டு கொண்டதாகவும், பெரிய பதவியில் இருப்பவரை எதிர்ப்பது குறித்து முதலில் தயங்கியதாகவும், இக்குற்றச்சாட்டு வழியாக குற்றவாளிகளின் முழுமையை புரிந்து கொள்ள முயற்சிக்க கூடாது என்பதற்காகவும் இதுவரை, தான் அமைதி காத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனது நெருங்கிய நண்பர்களே நகைச்சுவை என்ற பெயரில் இச்சம்பவம் பற்றி தன் மனது புண்படும்படி பேசியதையும் குறிப்பிட்டிருந்தார். இதுபோன்று ஆண்களின் அத்துமீறல்கள் நடக்கும் சூழலில் பாதிக்கப்படும் தன்னைப் போன்ற பெண்கள் எந்த விதமாக எதிர் வினையாற்ற வேண்டும் என்ற கோபமான தன் கேள்வியோடு முடிக்கப்பட்டுள்ள அக்கட்டுரையின் துவக்கத்தில், எழுதுவதன் நோக்கமாக தன்னைப் போல பிற பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்கவே என்றும் சொல்லியிருந்தார்.

பாஜகவின் சுஷ்மா சுவராஜும் ஏ.கே.கங்குலியை மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியில் இருந்து விலக வலியுறுத்தியுள்ளார். ‘சீசரின் மனைவியைப் போலவே சீசரும் குற்றமற்றவறாக இருக்க வேண்டும்’ என்று கூறி இதனை வலியுறுத்தியுள்ள சுஷ்மா. சீசரை இளம்பெண்ணை வேவுபார்த்த மோடிக்கு பொருத்துவாரா எனத் தெரியவில்லை. அவரது கட்சியின் சு.சாமி கூறுகையில் கங்குலி மீதான குற்றச்சாட்டுக்காக அவர் பதவி விலகத் தேவையில்லை என்றும் கூறுகிறார். அதாவது நேர்மையான நீதிபதிகளை, ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக துணிந்து செயல்படும் நீதிபதிகளை களங்கப்படுத்தவே இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகள் எழுவதாக குற்றம்சாட்டுகிறார் சு.சாமி. இப்படி நியாயப்படுத்தா விட்டால் ஜெயேந்திரனது வக்கிரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்குமல்லவா!

2ஜி வழக்கினை விசாரித்த போது சி.பி.ஐ.யிடமே கண்டிப்பான முறையில் நடந்துகொண்ட ஒரு நேர்மையான நீதிபதி. அவர் இப்படி செய்திருப்பார் என்பது நம்பும்படியாகவே இல்லை என்பது சு.சாமி உள்ளிட்ட பலரது வாதம். காரணம் விசாரணை முடிந்த பிறகும் 2ஜி வழக்கில் சிதம்பரத்தை மேலும் விசாரிக்க கோரி சு.சாமி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை சட்டத்தை மீறியே கங்குலிதான் ஏற்றுக் கொள்ளச் செய்து, லட்சுமண ரேகையை மீறுவதால்தான் ராமாயணம் பிறக்கிறது என்று அதற்கு தத்துவ விளக்கம் வேறு சொன்னார்.

அல்டமாஸ் கபீர்
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளில் ஒருவரான அல்டமாஸ் கபீர் கூறுகையில் ”கங்குலி மீதான குற்றச்சாட்டை நான் ஒரு போதும் நம்பவில்லை” என்று கங்குலிக்கு ஆதரவாகவே கொடி பிடித்துள்ளார். சென்னை உயர்நீதி மன்றத்திலும் தலைமை நீதிபதியாக 2008-ல் மே முதல் டிசம்பர் வரை கங்குலி இருந்துள்ளார்.

தனக்கு மேல் முறையிட ஒரு நீதிமன்றம் இல்லை என்பதால் தாங்கள் இந்திய அளவில் உச்சபட்ச நீதித்துறை அமைப்பாக இருப்பதாக உச்சநீதி மன்றமே தெரிவித்துள்ளது. 1997-ல் பன்வாரி தேவி மீதான பாலியல் வல்லுறவு வழக்கின் மூலம் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்க உச்சநீதி மன்றம் அனைத்து அரசு, தனியார் பணியிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் வழிகாட்டியுள்ளது. ஆனால் உச்சநீதி மன்றத்திலேயே நடைபெறும் பாலியல் அத்துமீறல்களைப் பற்றி விசாரிக்க இந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதிதான் உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது.

உச்சநீதி மன்றத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் நீதிபதிகள் ஊழல் வழக்கில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல. எந்த நீதிபதியையும் நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை கொண்டுதான் பதவி விலக்க முடியும் என்கிறது சட்டம். இதனால் தமிழகத்தின் ராமசாமி உள்ளிட்ட பல நீதிபதிகள் தப்பியிருக்கின்றனர். நியாயமாகவும், நேர்மையாகவும் நீதிபதிகள் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை இதுவரை நீதிமன்றத்தை திரைப்படங்களில் பார்ப்பவர்களுக்கு மட்டும் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, அன்றாடம் வாய்தாக்களுக்கு அலையும் மக்களுக்கு எள்ளளவும் இல்லை.

பார்ப்பனீயமும், ஆணாதிக்கமும், அதிகார வர்க்கமும் சேர்ந்தியங்கும் இந்திய நீதித்துறை அமைப்பில் சாமானியர்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ, தாழ்த்தப்பட்டவர்களுக்கோ நீதி கிடைத்து விடுவதில்லை. அதனால்தான் காஞ்சி சங்கராச்சாரி என்ற கொலைகாரன் விடுவிக்கப்படுவதும், பதானி டோலா மற்றும் லட்சுமண்பூர் பதேவின் ஆதிக்கசாதி கொலையாளிகள் விடுதலையாவதும் நடக்கிறது. மறுபுறம் சிறுபான்மை இசுலாமியர்கள் எவ்வித ஆதாரமுமில்லாமல் கலவர வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு விசாரணையில்லாமல் சட்டவிரோதமான முறையில் நீண்ட காலம் சிறையில் வாடுகிறார்கள்.

இப்பேற்பட்ட உச்சநீதிமன்றத்தில் பாலியல் வக்கிரத்திற்கு ஆளான ஒரு பெண்ணுக்கு மட்டும் நீதி கிடைத்து விடுமா என்ன?

–    வசந்தன்

  1. திருவாளர் மோடி பாதுகாக்கும் பெண்மணியை பற்றி எழுதியவுடன், புற்றீசல் போல பெரிய இடத்து சமாச்சாரங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன! படித்த மேட்டுகுடி பெண்கள் இதுகாறும் இவற்றை எதற்காக சகித்துக்கொண்டு இருந்தார்கள்? அப்போது மானம் பெரிதாக தெரியவில்லையா? அல்லது இவையும் தெகால்கா மாதிரி பிளாக்மெயிலா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க