Thursday, June 20, 2024
முகப்புஅரசியல்ஊடகம்சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை

சென்னைக் கூட்டத்தில் சாய்நாத்தின் உரை

-

தி இந்து நாளிதழின் ஊரக விவகாரங்களுக்கான ஆசிரியர் பி சாய்நாத், ஏஷியன்  காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் மற்றும் ஐ.ஐ.டி சமூக அறிவியல் துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “சமூக உரிமை மறுப்பு” (social deprivation) குறித்த மூன்றாமாண்டு டி.ஜி.நாராயணன் நினைவு உரையை சென்னை ஐ.ஐ.டியில் டிசம்பர் 13-ம் தேதி வழங்கினார்.

உரையின் சில பகுதிகளை சுருக்கித் தருகிறோம்.

சாய்நாத்
பி சாய்நாத்

1963-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு பஞ்சம் என்ற வார்த்தையை அனைத்து சட்டங்களிலிருந்தும் நீக்குவது என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதற்குப் பிறகு “மகாராஷ்டிராவில் பட்டினிச் சாவுகள் நடக்கலாம், வறட்சி ஏற்படலாம், ஆனால் அதிகாரபூர்வமாக பஞ்சம் ஏற்பட முடியாது. பெரும் வங்காள பஞ்சம் தொடர்பான கசப்பான நினைவுகளை ஒழித்துக் கட்ட வேண்டும். மேலும், இப்போது பொறுப்பான, சுயாட்சி அரசு இருப்பதால் இனிமேல் பஞ்சங்கள், உணவுப் பற்றாக்குறை ஏற்பட முடியாது” என்று காரணம் காட்டி அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இது போன்று சட்டம் போட்டு சமூக நோய்களை ஒழித்துக் கட்டும் சமூகத்தின் பிரதிபலிப்பாக இந்தியாவின் அனைத்து நாளிதழ்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியாகும் திருமண பொருத்தம் பார்க்கும் பகுதி இருக்கிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எஸ்.சி, எஸ்.டி,  உடல் ஊனமுற்றோர், விவகாரத்து செய்தவர்கள்/மறுமணம் என்று தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருப்பது சமூகத்தில் நிலவும் மன நிலையை காட்டுகிறது.

ஊடகங்களில் செய்தி வெளியிடுவதும் இத்தகைய சாதிய, வர்க்க மனோநிலையை வெளிப்படுத்துகிறது. கடந்த டிசம்பர் 6-ம் தேதி மும்பையில் டாக்டர் அம்பேத்கர் நினைவாக 20 லட்சம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. பெரும் திரளான மக்கள் ஒழுங்காக, எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் இல்லாமல் கலந்து கொண்ட நிகழ்வு அது. ஆனால், உள்ளூர் பத்திரிகைகளில் மட்டும் போக்குவரத்து இடையூறு, குப்பை சேர்ந்தது என்ற அளவில்தான் இது குறித்து செய்திகள் வெளியிடப்பட்டன.

மோடியின் 50,000 பேர் கலந்து கொண்ட தேர்தல் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் பெரிய சாதனை போல முதல் பக்கங்களில் வெளியிடப்படும் போது உலகிலேயே பெரிய அளவில் நடந்து வரும் சாதிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியான இந்த பேரணி குறித்து ஊடகங்களின் புறக்கணிப்பு சமூக உரிமை மறுப்பின் ஒரு வெளிப்பாடு.

தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகான அலசலில் ஒரு முக்கியமான தேசிய பத்திரிகையின் ஆசிரியர், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள், “மக்கள் இலவசங்களை நிராகரித்து விட்டார்கள்” என்பதைக் காட்டுவதாக கருத்து தெரிவித்தார். ஆம், அங்கு மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்கப்பட்டதை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். அதே சமயம், கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் பொருளாதார காரணங்களால் மருத்துவ சேவையை தவிர்ப்பவர்களின் வீதம் 1000-க்கு 180 லிருந்து 284 ஆக உயர்ந்திருக்கிறது.

ஆந்திராவில் ஒரு விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். நண்பர்கள் ஒரு கட்டிலை திருப்பிப் போட்டு அவரைத் தூக்கிக் கொண்டு 2 கிலோமீட்டர் ஓடி, நெடுஞ்சாலைக்குப் போய் வண்டி பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றினார்கள். ஆனால் உயிர் பிழைத்த அவர் அவர்களை திட்டுகிறார். “4 ஆண்டுகள் விவசாயம் செய்து ஏற்பட்ட ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். அதிலிருந்து காப்பாற்ற 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்” என்று திட்டுகிறார்.

மருத்துவச் செலவால், குடும்பமே நடுத்தெருவுக்கு வருவது அதிகரித்து வருகிறது. நாட்டில் 18 கோடி மக்களுக்கு எந்த மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.

நீச்சல் குள வீடுகள்
ஒவ்வொரு மாடியிலும், ஒரு வீடு, ஒவ்வொன்றிலும் தனி பயன்பாட்டுக்கு நீச்சல் குளம்.

மும்பை, பூனே பகுதியில் ஒவ்வொரு மாடியிலும், ஒரு வீடு, ஒவ்வொன்றிலும் தனி பயன்பாட்டுக்கு நீச்சல் குளம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த கட்டிடங்களை கட்டும் வேலையில் ஈடுபடுத்தப்படுபவர்கள், தண்ணீர் பற்றாக்குறையால் தமது கிராமங்களை விட்டு விவசாயத்தை விட்டு, நகரத்துக்கு வந்து விட்ட கிராம மக்கள்.

மும்பையில் பாபா அணு சக்தி ஆராய்ச்சி கழகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சாலையோரம் தற்காலிக கூடாரங்களில் படுத்து தூங்குகிறார்கள். மழை பெய்தால் அவர்களுக்கு வெள்ளப் பிரச்சனை. அவர்களும் கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஏழை விவசாயிகள். அவர்களுக்கு BARC உள்ளே போவதற்கான பாதுகாப்பு அனுமதி அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், தங்குவதற்கு முறையான குடியிருப்பு இல்லை.

பாரம்பரியமாக விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் இப்போது திருப்பி விடப்படுகிறது. மகாராஷ்டிராவின் சர்க்கரை ஆலை முதலாளிகளின் நலனுக்காக கரும்பு விளைச்சல் பரவலாக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார் ரோஜா பயிரிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். நெதர்லாந்துக்கு ஏற்றுமதி செய்ய ரோஜா பயிரிடப்படுகிறது. கரும்பு விளைச்சலுக்கு 1 ஏக்கருக்கு 1.8 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ரோஜா பயிரிடுதல் ஏக்கருக்கு 2.1 கோடி லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. அது போல, தமிழ்நாட்டில், ஏற்றுமதிக்காக துலிப் பயிரிடப்படுகிறது.

விவசாயம் நிலத்தடி நீரை உறிஞ்சி நடத்தப்படுகிறது. நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் ஆழ்துளை குழாய் கிணறு தோண்டிக் கொண்டிருந்த பகுதியில் தமிழ்க் குரல் கேட்டதை அடுத்து விசாரித்தால், அவர்கள் திருச்சங்கோடு பகுதியைச் சேர்ந்தவர்களாம். ஆனால் 11 மாநிலங்களிலிருந்து பல்வேறு மொழி பேசும் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ரூ 250 சம்பளத்துக்கு தமிழ் தொழிலாளர்கள் வர மாட்டார்கள் என்று காரணம் சொல்கிறார்கள்.

திருச்செங்கோடு தாலுகாவில் 25,000 ஆழ்குழாய் எந்திரங்கள் உள்ளன. அவை குறித்து அறிந்து கொள்ள திருச்சங்கோடு சென்ற போது ஒரு எந்திரம் மிசோரத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறது. வரி தவிர்ப்புக்காக பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அதிக பட்சமாக ஒரே நபர் 21 ரிக்குகளை சொந்தமாக வைத்திருக்கிறார்.

தொழில் துறை வளர்ச்சிக்காக சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்துவதாகக் கூறி கார்ப்பொரேட்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை விவசாய நிலமாக வாடகைக்கு விடுகிறார்கள். ஆந்திராவில் 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தலில் 3,500 பேர் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். ஆந்திராவில் மொத்தம் 10 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் வெளியேற்றப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையை கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

ரோஜா உற்பத்தி
நீச்சல் குளத்துக்கும், ரோஜா பயிரிடுவதற்கும் திருப்பி விடப்படும் தண்ணீர் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு நீச்சல் குளத்துடன் கூடிய நகர்ப்புற மேட்டுக் குடி குடியிருப்புகள் கட்டும் வேலை கிடைத்து விடுகிறது. நீச்சல் குளத்துக்கும், ரோஜா பயிரிடுவதற்கும் திருப்பி விடப்படும் தண்ணீர் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

நிலங்களை பறிக்கும் போது அவர்களது வாழ்வாதாரங்கள் மறுக்கப்படுகின்றன. மேலும், அதை எதிர்த்து மக்கள் போராடும் போது வழக்குகள் போடப்படுகின்றன. 78 வயது மூதாட்டி மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டுள்ளது.

மில்லியன் ஃபார்மர்ஸ் இனிஷியேட்டிவ் (10 லட்சம் விவசாயிகள் முன் முயற்சி) என்பது மத்திய அரசின் 20 கார்ப்பொரேட்டுகள் பங்கு பெறும், விவசாய வளர்ச்சித் திட்டம். இதற்கு ரூ 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஐடிசி, ரிலையன்ஸ் போன்ற பெரு நிறுவனங்கள் விவசாயத்தை கைப்பற்றுகின்றனர். தென் தமிழ்நாட்டில் கம்பு பயிரிடுவது குறித்து எம்.பி.ஏ படித்த ஐடிசி நிபுணர்கள், 2,000 ஆண்டுகள் மட்டும் அந்த பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குவார்களாம். விதைகள், உரங்கள், விளைபொருட்கள் அனைத்தும் கார்ப்பொரேட் கட்டுப்பாட்டுக்குள் விடப்படுகின்றன.

விவசாயக் கடன் என்ற பெயரிலும் பெரு நிறுவனங்கள் நிதியை ஒதுக்கிக் கொள்கின்றன. அமிதாப் பச்சன் தன்னை விவசாயியாக அங்கீகரிக்கும் படி போராடிக் கொண்டிருக்கிறார். எனக்குத் தெரிந்த மிகப் பெரிய விவசாயி முகேஷ் அம்பானி. விவசாயக் கடன்களில் 53% நகர்ப்புற வங்கிக் கிளைகளில் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் 150 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் வாங்குவதற்கு ரூ 66 கோடி கடனுக்கான வட்டி வீதம் 7%. கடன் வழங்கிய வங்கி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. அதே வங்கிக் கிளையில் டிராக்டர் வாங்க 12 – 14% வட்டி வசூலிக்கப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக இருந்த போது “நீர் பயன்படுத்துவோர் சங்கங்களின் கூட்டமைப்பு” சார்பாக நீர்ப்பாசனை திட்டம் ஒன்றை திறந்து வைக்க உலக வங்கியின் தலைவர் வொல்ஃபென்சனை அழைத்து வந்தார். தமது வாழ்வாதாரத்துக்கான நீரை மடை மாற்றி விடும் அந்தத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய பல பத்தாயிரக் கணக்கான மக்கள் வொல்ஃபென்சனை சாலை வழியாக பயணிக்க விடாமல் துரத்தி விரட்டினார்கள். தன் முயற்சியில் விட்டுக் கொடுக்காத திறமையான நிர்வாகியான சந்திரபாபு நாயுடு வொல்ஃபென்சனை ஒரு ஹெலிகாப்டரில் கொண்டு போய், சிறப்பு ஹெலிபேட் அமைத்து அணையை திறந்து வைக்க வைத்தார்.

இத்தகைய மக்கள் போராட்டங்கள்தான் நம் நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பெரும் நெருக்கடிகளிலிருந்து விடுவிக்க முடியும்.

உரை தொகுப்பு – செழியன்

 1. மக்கள் போராட்டங்கள்தான் நம் நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பெரும் நெருக்கடிகளிலிருந்து விடுவிக்க முடியும்.

 2. ”பார்ப்பன தி இந்து நாளிதழின் ஊரக விவகாரங்களுக்கான பார்ப்பன ஆசிரியர் பி சாய்நாத், ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் மற்றும் பார்ப்பன ஐ.ஐ.டி சமூக அறிவியல் துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “சமூக உரிமை மறுப்பு” (social deprivation) குறித்த மூன்றாமாண்டு பார்ப்பன டி.ஜி.நாராயணன் நினைவு உரையை சென்னை பார்ப்பன ஐ.ஐ.டியில் டிசம்பர் 13-ம் தேதி வழங்கினார்.

  பார்ப்பன உரையின் சில பகுதிகளை சுருக்கித் தருகிறோம்.”

  • ஆனால், அவர் எங்கும் பார்ப்பனீயத்தை ஆதரித்துப் பேசவில்லை. மாறாக, ஊடகங்களின் பார்ப்பனியச் சார்பைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிறார். அம்பி, சாய்நாத்தை பார்ப்பனர் என்று சொல்வதன் மூலமாக தங்களின் உயர் தகுதியைச் சுட்டிக்காட்ட நினைக்கிறார். அம்பி, இதுதான் பார்ப்பனியம்.

 3. அம்பி,
  பார்ப்பனராய் பிறந்தவர்கள் உண்மையை சொல்லும்போது ஏற்பதுதான் சரி..,
  பார்ப்பன எதிர்ப்பு என்பது பார்ப்பனர்களாய் பிறந்தவர்களை எதிர்பது அல்ல,
  இது தெரிந்தும் குழப்பாதீர்கள் அம்பி…

  • அதாவது வினவுக்கு ஆதரவாக இருந்தால் அது உண்மை; எதிராக இருந்தால் அது பார்ப்பனியம்.

 4. எழுத்துகளுக்கு வலிமை உண்டென்றாலும்,செயல்படுத்தும் நல்மனிதர் கூட்டம் ஒன்று சேராமல் அநியாயஙள் மாறப்பொவதில்லை.எதை நோக்கி?,எந்த இறுதியைத்தொட?,எவ்வாறு அடைவது?என்பதற்கு வழி காட்டுங்கள் இல்லை அதை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியுங்கள்.

 5. மும்பை, பூனே பகுதியில் ஒவ்வொரு மாடியிலும், ஒரு வீடு, ஒவ்வொன்றிலும் தனி பயன்பாட்டுக்கு நீச்சல் குளம் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த கட்டிடங்களை கட்டும் வேலையில் ஈடுபடுத்தப்படுபவர்கள், தண்ணீர் பற்றாக்குறையால் தமது கிராமங்களை விட்டு விவசாயத்தை விட்டு, நகரத்துக்கு வந்து விட்ட கிராம மக்கள்.???…

  ஆந்திராவில் ஒரு விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். நண்பர்கள் ஒரு கட்டிலை திருப்பிப் போட்டு அவரைத் தூக்கிக் கொண்டு 2 கிலோமீட்டர் ஓடி, நெடுஞ்சாலைக்குப் போய் வண்டி பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றினார்கள். ஆனால் உயிர் பிழைத்த அவர் அவர்களை திட்டுகிறார். “4 ஆண்டுகள் விவசாயம் செய்து ஏற்பட்ட ரூ 1 லட்சம் கடனை அடைக்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்தேன். அதிலிருந்து காப்பாற்ற 4 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு ரூ 49,000 கட்டணம் ஆகியிருக்கிறது. அதை யார் கட்டுவார்கள்” என்று திட்டுகிறார்.

  மருத்துவச் செலவால், குடும்பமே நடுத்தெருவுக்கு வருவது அதிகரித்து வருகிறது. நாட்டில் 18 கோடி மக்களுக்கு எந்த மருத்துவ வசதியும் கிடைப்பதில்லை.
  அசுரபாலகன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க