Friday, January 17, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கமந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க !

மந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க !

-

தேனி மாவட்டம் போடி மெட்டுச்சாலையை ஆமை வேகத்தில் நகர்த்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக போடியில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாள் : 15/12/2013
இடம் : வ.உ.சி சிலை அருகில், போடி

  • போடி மெட்டுச் சாலையை போர்க்கால அடிப்படையில் செய்து முடி !
  • ஒப்பந்த விதிமுறைகளை மீற அனுமதிக்காதே !
  • சாலைப்பணி என்ற முகமூடி அணிந்து பல தலைமுறை கண்ட மரங்களை வெட்டி கடத்தி வரும் வனத்துறை அதிகாரிகள் உட்பட அனைத்து மரத்திருடர்களையும் கைது செய் !
  • மக்களே ! போடி மெட்டுச் சாலை விரிவாக்கப் பணியை போர்கால அடிப்படையில் செய்து முடிக்க ஒன்று சேர்ந்து போராடுவோம்.

என்ற முழக்கங்களை வலியுறுத்தி விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் போடியில் வி.வி.மு நகர பொறுப்பாளர் தோழர் A . T . கணேசன் தலைமையில் 15/12/2013 அன்று போடி வ.உ.சி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்காக கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாவட்ட்த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தோழர்கள் போடி மற்றும் அதை சுற்றி இருக்கும் கிராமங்களில் வீடு வீடாக சென்று போடி மெட்டு சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நடக்கும் மோசடிகளை அம்பலபடுத்தி பிரச்சாரம் செய்தனர். இதற்காக 6,000 துண்டு பிரசுரங்களும், 200 போஸ்டர்களும், போடி நகரத்தின் பல்வேறு பகுதியில் மக்கள் விழிப்புணர்வுக்காக மிகப்பெரிய பேனர்களும் வைக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமை பாதுகாப்பு மையம் (மதுரை மாவட்ட செயலாளர்) தோழர் லயனல் அந்தோனிராஜ் அவர்களும், தேனி மாவட்ட வி.வி.மு செயலாளர் தோழர் மோகன் அவர்களும் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்காக போடி நகர முக்கிய பகுதிகளில் போடி மெட்டு சாலை விரிவாக்கப் பணி என்ற பெயரில் நடக்கும் மோசடியை புகைபடத்தோடு பேனர் வைத்து மக்கள் மத்தியில் அம்பலபடுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடக்கும் தேதியன்று மந்திரி ஓ. பி .எஸ் போடியில் ஒரு திருமணத்துக்கு வருவதாகவும், அதனால் நீங்கள் வைத்திருக்கும் பேனர்களை உடனடியாக அப்புறபடுத்த வேண்டும் என்று அ.தி.மு.க-வினர் காவல்துறையினர் மூலமாக வி.விமு தோழர்களுக்கு மிரட்டல் விடுத்தனர்.

ஆனால் நமது தோழர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதம் புரிந்து பேனர்களை எடுக்க மறுத்து விட்டனர். எதுவும் செய்வதறியாமல் திகைத்த காவல்துறை அதிகாரிகள் கடைசியாக ” மந்திரி ஓ.பி.எஸ் பற்றி மட்டும் அதிகமா பேசீராதீங்க “ என்று கெஞ்சாத குறையாக கேட்டு விட்டுச் சென்றனர். கூட்டத்தில் போலிசின் இந்த கையாலாகா தனத்தையும், ஓ.பி.எஸ் மற்றும் அவரது உறவினர்கள் இந்த பகுதியில் செய்யும் முறைகேடுகள, சொத்துக் குவிப்பு, மற்றும் அவரது அ.தி.மு.க கட்சிக்காரர்கள் செய்யும் அராஜகம் மற்றும் ரவுடித்தனத்தையும் கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசும் போது சிறப்பு பேச்சாளர்கள் அம்பலப்படுத்தினர்.

இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் கம்பம் பகுதி செயலாளர் தோழர் பிரபு நன்றியுரையாற்றிய பின் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் மூலமாக இந்த பகுதி மக்களிடையே இப்படி ஒரு மிகப்பெரிய கொள்ளை நடைபெற்றுள்ளது என்பதையும் இதற்கு காரணம் இந்த ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் தான் என்பதும் பதிவாகியுள்ளது.

நகரில் வைக்கப்பட்ட தட்டிகள்

நோட்டிஸ், போஸ்டர்

ஆர்ப்பாட்ட புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

நோட்டிஸ்

மாவட்ட நிர்வாகமே ! போடி மெட்டுச்சாலை சீர்செய்யும் பணியை ஆமை வேகத்தில் நகர்த்தும் மர்மம் என்ன ?

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

கடந்த சுமார் எட்டு மாதங்களாக போடி மெட்டுச் சாலை விரிவுபடுத்தும் பணி நடப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது நெடுஞ்சாலைத்துறை. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தச் சாலை அடைக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் அறவே நிறுத்தப்பட்டு கிடக்கிறது. ஆனால் பணி முடிந்த பாடு இல்லை. முன்னேற்றம் இல்லை. இது போன்ற தருணங்களில் போர்க்கால அடிப்படையில் பணி முடிப்பது தானே நியதி. இங்கோ தண்ணீரில் ஊறிப்போன விறகை வைச்சு அடுப்பெரிக்க முயலும் கிழவி படும் பாடாய் வேலை நடக்கிறது.

போடி மெட்டுச் சாலையை அயிரக்கணக்கில் விவசாயிகள் அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தச் சாலை அடைக்கப்பட்ட பிறகு அவர்களின் அன்றாட வாழ்வே நசிந்து நாசமாகி வருகிறது, விளை நிலத்திற்கு செல்ல முடியாமல் உரிய நேரத்திற்கு மகசூல் எடுக்க இயலாமல் சாவின் விளிம்பிற்கு பலரும் தள்ளப்பட்டுள்ளார்கள். இருப்பினும் தொலை நோக்குப் பார்வையோடு இந்த தொல்லையை சகித்து வருகிறார்கள். இவர்களின் சகிப்பு தன்மையை பயன்படுத்தி நடக்கும் இந்த மோசடியை இனியும் சகித்துகொள்ளக் கூடாது.

காலாவதியாகிப் போன இயந்திரங்கள், டீசல் தீர்ந்து போன வாகனங்கள், எண்ணிக்கை குறைவான பணியாளர்கள். குறைந்த கூலி, அதனையும் இழுத்தடித்து தாமதமாக கொடுத்து குதறப்படும் கூலித் தொழிலாளிகள். இவைகளை வைத்துக்கொண்டுதான் செத்தவன் கையில் வெற்றிலையாகச் செயலற்று கிடக்கிறது, இவர்கள் திரு(ட்டு)ப்பணி. இவைகளை யெல்லாம் மறைத்து பணி நடப்பதாக காட்டிக் கொள்ள ஒவ்வொரு நாளும் மாலை 4 மணிக்கு சாலை திறந்து விடும் நேரத்தில் ஆங்காங்கே வெடி வைத்து தகர்த்து சாலையில் போட்டு வழி மறித்து விடுகிறார்கள். நம்முடைய உழைப்பில் விளைந்த பல கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு இந்தச் சாலையில் கொட்டப்பட்டுள்ளது. பிறகு ஏன் இந்த தாமத நாடகம் என்று பொறுப்பான அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும்.

ஆபத்தான பணி நடக்கும் போது அதிகாரிகள் களத்திலிருக்க வேண்டும் என்ற அடிப்படை நியதிக் கூட ஏ.சி விடுதியில் அடைபட்டு கிடக்கிறது. அதன் விளைவுதான் தொழிலாளர்கள் இரண்டொருவர் அகால மரணமடைந்த்தற்குக் காரணம். கேட்பாரற்று கிடக்கும் எத்தனை – எத்தனை நம் தொழிலாளார்களை இனியும் இவர்கள் காவு கொடுக்கக் காத்திருக்கிறார்களோ ? தெரியவில்லை.

இந்தச் சாலைக்கே சம்பந்தமில்லாத விவசாய நிலத்திற்கும் பல தலைமுறை கண்ட மரங்களையும் சாலை ஓரங்களில் உள்ள பெரு மரங்களையும் வெடி வைத்து தகர்த்தும், வெட்டி வீழ்த்தியும், கட்த்தும் இந்த திருட்டுப் பணி மட்டுமே அதிவேகமாக நடத்துகிறது. அப்பாவி மக்களிடம் சட்டம் பேசும் வனத்துறை அதிகாரிகளின் முன்னிலையில் தான் இந்த சட்டவிரோதச் செயல்கள் நடந்து வருகின்றன.

நம்முடைய மந்திரி ஜீரோ பன்னீர் செல்வத்தின் தொகுதி இந்த தொகுதி என்று பெருமை பேசி கொண்டோமே? இதோ அவருடைய கண்காணிப்பில் தான் இந்த பகற்கொள்ளை நடக்கிறது, மறுக்க முடியுமா? அதிகாரிகள் அரசியல்வாதிகள், காண்ட்டிராக்டர்கள் கூட்டுச் சேர்ந்து அடிக்கும் இந்த பகற் கொள்ளையை தட்டி கேட்கவோ – தடுத்து நிறுத்தவோ – சட்டமோ நீதிமன்றமோ – போலிஸ் துறையோ தயாரில்லை. இவர்களின் சட்டமெல்லாம் ஏழைகளை தண்டிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விதிமுறைகளை மீறி இவர்கள் வெடி வைத்ததன் விளைவாய் போடி மெட்டு கிராமத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. அவர்கள் புகார் சொல்லக் கூட இயலாமல் ரவுடிகளால் தடுக்கப்பட்டு வாழ்கிறார்கள்.

எவ்வளவோ சிரமப்பட்டு நம் வாழ்வை இழந்து, வரிபணத்தை கொட்டி உருவாக்கும் இந்தச் சாலையால் யாருக்கு நன்மை பயக்கப் போகிறது, மூணாறு போன்ற சுற்றுலா தளங்களுக்கு சொகுசாய் அதிவேகமாக செல்ல தின்று கொழுத்து திரியும் சில முதலாளிகளுக்கு பயன்பட போகிறது. அவர்கள் தொழிலை, அபிவிருத்தி செய்ய அதிவேக பயணத்துக்கு இந்தச் சாலை பயன்படப் போகிறது. ஆமாம் இந்த அரசு, முதலாளிகளின் நலனுக்கான அரசு, என்பதை போடி மெட்டு சாலைப் பணி நமக்கு மெய்ப்பிக்கிறது.

இந்த பகற்கொள்ளையை ஆளும் கட்சி தான் ஆதரிக்கிறது என்றால் எதிர்க்கட்சிகள் ஏன் எதிர்க்க மறுக்கிறது? அவர்கள் மேல் வாயையும், கீழ்வாயையும் பொத்திக் கொள்கிறார்களே ஏன்? ஏன் எனில் அவர்கள் கட்சிக் கொடியில் தான் வேறுபடுகிறார்களே தவிர, முதலாளிகளின் காலை நக்கும் பணியில் ஒன்று பட்டவர்கள் என்பதே – போடி சாலைப்பணி மீண்டும் நிரூபிக்கிறது.

எனவே இனியும் பேடிகளை, முதுகெலும்பில்லா கோழைகளை – ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளை நம்பி நாம் வீண் போகக் கூடாது, ஆயிரமாயிரம் மக்களின் வாழ்வை உயிரை துச்சமாய் நினைக்கும் அற்பர்களை இனியும் நாம் அனுமதிக்க கூடாது.

அதிகாரிகள், அரசியல்வாதிகள், காண்டிராக்டர்கள் கூட்டுச் சேர்ந்து “ மாவிலும் கொள்ளை, பணியாரத்திலும் கொள்ளை “ என்ற கணக்கில் வரைமுறை இல்லாமல் கொள்ளையடித்து வருகிறார்கள். இதனால் நம் வாழ்வே நலிந்து – நாசமாகி வருகிறது. இவர்களால் நொந்து போன நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளங்களில் புதைத்து வைத்திருக்கும் குமுறல்க்ளை ஆத்திரங்களை ஒன்று சேர்த்து வெடிக்க வைப்போம், எதிரிகள் நடுங்கட்டும் – அநீதிகள் அழியட்டும்

எமதருமை தோழனே ! தாமதிக்காதே ! தயங்காதே ! இந்தக் கனமே முடிவு எடு ! இரண்டில் ஒன்றை தேர்ந்து எடு !

நீ………மக்கள் வாழ்வை பறிக்கும் கொள்ளை கூட்டத்தின் பக்கமா ? மக்கள் நலனுக்காக போராட துணிந்த போராளிகள் பக்கமா ? நியாயத்திற்காக வாழ நினைத்தால் வி.வி.மு. – வில் இணைந்திடு, போராட்டம் இல்லையேல், ? புது வாழ்வு இல்லை.

மாவட்ட நிர்வாகமே !

  • போடி மெட்டுச்சாலைப் பணியை போர்க்கால அடிப்படையில் செய்து முடி !
  • ஒப்பந்த விதிமுறைகளை மீற அனுமதிக்காதே !
  • சாலைப்பணி என்ற முகமூடி அணிந்து பலதலைமுறை கண்ட மரங்களை வெட்டி கட்த்தி வரும் வனத்துறை அதிகாரிகள் உட்பட அனைத்து மரத்திருடர்களையும் கைது செய் !

மக்களே !

  • போடி மெட்டுச் சாலை விரிவாக்கப் பணியை போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க ஒன்று சேர்ந்து போராடுவோம்.

வி.வி.மு. தேனி மாவட்டம்
தொடர்புக்கு : 7502451019

தகவல் :

விவசாயிகள் விடுதலை முன்னணி,
போடிநாயக்கனூர் (தேனி மாவட்டம்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க