privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேவயானிக்காக மருகும் அமெரிக்க தேவனின் இந்திய பக்தர்கள் !

தேவயானிக்காக மருகும் அமெரிக்க தேவனின் இந்திய பக்தர்கள் !

-

அடிபணிதல் கலாச்சாரங்களும், தேவயானி-சங்கீதா பிரச்சனையும் : நிசிம் மன்னத்துக்காரன்

பெரிய பண்ணையார் கடந்து போகும் போது புத்திசாலி விவசாயி குனிந்து வணங்கி, குசுவை அடக்கி விடுவான்  (எத்தியோப்பிய பழமொழி)

அமெரிக்க தூதரக விசா வரிசை
அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகம்.

ர்ணாப் கோஸ்வாமியுடன் முற்போக்கு அரசியல் ஒத்துப் போகிறது என்றால் அது அபாய மணிகள் ஒலிக்க வேண்டிய நேரம் என்று புரிந்து கொள்ள வேண்டும். சென்ற வாரம் அரங்கேற்றப்பட்ட காட்சிகளை அட்டகாசமானவை என்றுதான் வர்ணிக்க வேண்டும். தேவயானி கோப்ரகடே பிரச்சனையில், தவறிழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ஒரு மூன்றாம் உலக நாடு, ஏகாதிபத்திய சைத்தானை ஒரு வழியாக எதிர்த்து நின்றது. வரலாற்றுப் புத்தகங்களில் இடம் பிடிக்கப்பட வேண்டிய நிகழ்வுதான். அதன் பின்னே புதைந்திருக்கும் தீவிரமான காரணிகள் மட்டும் இல்லாதிருந்தால் அது சிரித்து ரசிக்க வேண்டிய நாடகமாக இருந்திருக்கும்.

அமெரிக்க உலகப் பார்வையுடன் முழுதும் ஒத்துப் போகும் (அமெரிக்காவை நேசிக்கும் தேசங்களின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது), அமெரிக்காதான் ஜனநாயகத்தின் சிறந்த முன்மாதிரி என்று கருதும் (ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் வேறு எந்த நாட்டையும் விட அதிக இந்தியர்கள் அமெரிக்கா ஒற்றைத் துருவ அரசு இல்லை, பன்முகத் தன்மை கொண்ட அரசு என்று கருதுவதாக தெரிய வந்தது) மேட்டுக் குடியினரையும் நடுத்தர வர்க்கத்தினரையும் கொண்ட தேசம் இது. அமெரிக்கக் கனவில் வாழும் மாணவர்களும், இளைஞர்களும் (அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட அதிகம்) நிறைந்த நாடு இது. அமெரிக்க ஆளும் அமைப்புடன் நிரந்தர நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும் கனவில் புளகாங்கிதம் அடையும் ஆட்சியாளர்கள் (இந்திய-அமெரிக்க நீண்டகால ஒப்பந்தம், 21-வது நூற்றாண்டின் திருப்புமுனை உறவு என்று அழைக்கப்படுகிறது) வாய்த்த நாடு இது.

போபால் விஷவாயுக் கசிவு
போபால் விஷ வாயுக் கசிவில் உயிரிழந்த 5,295 பேருக்காக ஒரு துளி கண்ணீர் கூட விடாத தேசம் இது.

‘நாம் அமெரிக்காவை ஆராதிக்கும் அளவுக்கு அமெரிக்கர்கள் நம்மை நேசிக்கவில்லை’ என்ற நிதர்சனத்தை சென்ற வாரம் இவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அதனால்தான் ஒரு பெண்ணால் நிராகரிக்கப்பட்டு விரக்தியடைந்த காதலனைப் போல எதிர்வினைகள் பொங்கி வழிந்தன.

அவ்வாறு பெருகி ஓடிய கோபங்கள் நமது கலாச்சாரத்தைப் பற்றிய ஆழமான, மோசமான ஒன்றை வெளிப்படுத்துகின்றன. நமது சுயமரியாதை மற்றும் அவமானத்தின் அளவுகோல்களை அது அம்பலப்படுத்தியது.

உலகிலேயே மிக மோசமான தொழில் துறை விபத்தான போபால் விஷ வாயுக் கசிவில் உயிரிழந்த 5,295 பேருக்காக ஒரு துளி கண்ணீர் கூட விடாத தேசம் இது. அந்த கோர விபத்துக்குப் பொறுப்பான அமெரிக்க நிறுவனத்தையும் அதன் தலைமை அதிகாரிகளையும் இந்தியாவில் வழக்கை எதிர் கொள்ள வைக்க, அமெரிக்க தூதரகத்தின் முன்பு பாதுகாப்பு தடைகளை மட்டுமல்ல, தம் சுண்டு விரலைக் கூட நகர்த்தாத ஆட்சியாளர்களைக் கொண்ட தேசம் இது. இவர்கள்தான் ஒரு பெண் தூதரக அதிகாரி சோதனையிடப்பட்ட அவமானத்தையும், தனது குழந்தைகளின் முன்பு கைது செய்யப்படக் கூடாது என்ற அவரது உரிமை மீறப்பட்டதையும் கண்டு பொங்கி எழுந்தார்கள்.

(ஒரு வேளை, லல்லு பிரசாத் யாதவ், சஞ்சய் தத் போன்ற கைதிகளையும், கேரளாவில் சிறையிலிருந்தே பேஸ்புக் நிலைத் தகவல் போடும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஒருவரின் கொலையாளியையும் நாம் நடத்துவது போல அமெரிக்க நீதித் துறை தனது விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை மரியாதையுடன் நடத்துவது இல்லை என்று இவர்களுக்கு கோபம் ஏற்பட்டிருக்கலாம்!)

சாவனூர் போராட்டம்
சாவனூரில் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை தமது உடலில் பூசி போராட்டம்.

நமது குடிமக்களில் பெரும்பான்மையினர் இதை விட படு மோசமான இழிவுகளை தினமும் சந்திக்கின்றனர் என்பது அவர்களுக்கு ஒரு பொருட்டில்லை. சோனி சோரியின் துவாரங்களில் போலீஸ் கற்களை திணித்து வலுவந்தம் செய்த போது இந்த மேட்டுக் குடியினரின் கோபம் எங்கே போயிருந்தது? 2010-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி கர்நாடகா மாநிலத்தின் சாவனூரில் கையால் மலம் அள்ளும் துப்புரவுத் தொழிலாளிகள் மனித மலத்தை தமது உடலில் பூசி போராடிய போது இவர்களது புண்படக் கூடிய இதயங்களும், அவமானப்படும் சுயமரியாதைகளும் எங்கு போயிருந்தன? அவர்களைப் பொறுத்த வரை, தம் சக இந்தியர்களின் மலத்தை சுமக்கும் அந்த பாங்கி சாதி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை ஒன்று இருந்தால்தானே, இழப்பதற்கு!

ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த கோடிக் கணக்கான இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் கொத்தடிமை சூழல்களில் உழைத்துக் கொண்டிருப்பது பற்றி நமது தூதுவர்களும், தூதரகங்களும் என்ன செய்கிறார்கள்? அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகளை ரத்து செய்வதில் மும்முரமாக இருந்த இந்த அரசு முசாஃபர் நகர் நிவாரண முகாம்களின் மனிதர் வாழ தகுதியற்ற சூழல்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் 50,000 பேருக்கு, போர்த்திக் கொள்ள கம்பளிகள் இல்லாமல் இறந்து கொண்டிருக்கும் அவர்களது குழந்தைகளுக்கு என்ன செய்கிறது என்று இந்த தேசம் ஏன் கேள்வி எழுப்பவில்லை? இவர்களது சுயமரியாதையின் வரையறைதான் என்ன?

அமெரிக்க வியர்வைக் கூடங்கள்
அமெரிக்க வியர்வைக் கூடங்கள்

இந்தத் தருணத்தில் இந்தக் கேள்விகளை எழுப்பும் போது, “உள்நாட்டில் ஜனநாயகம், வெளிநாடுகளில் ஏகாதிபத்தியம்” என்ற கொள்கையை மிக நேர்த்தியாக, மிகத் திறமையாக கடைப்பிடிக்கும், “தனக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு வேறு சட்டம்” என்று வைத்திருக்கும் உலகின் மகத்தான ஜனநாயகத்தின் இரட்டை முகங்களை நாம் புறக்கணிக்க முடியாது. இந்த வழக்கை தீர்த்துக் கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை அணுக முடியாது என்பது இந்திய அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கிடையேயான இந்த சச்சரவு தொடர்பான ஒரு முக்கிய விபரம். ஏனென்றால் அமெரிக்கா அந்த நீதிமன்றத்தின் இறையாண்மையை ஏற்றுக் கொள்வதில்லை. நாம் இதைப் பற்றி பேசுவதால், அமெரிக்காவில் குறைந்த பட்ச கூலியை விட குறைவான ஊதியத்துக்கு, எந்த வித சட்ட பாதுகாப்பும் இல்லாமல் உழைக்கும் ஆயிரக் கணக்கான சட்ட விரோத குடியேறிகள் இல்லை என்று ஆகி விடாது. தெற்கு கலிஃபோர்னியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட 1,500 சோதனைகளில் 93 சதவீதம் சட்ட மீறல் இருப்பதாக தெரிய வந்த வியர்வை உழைப்புக் கூடங்கள் இல்லை என்று ஆகி விடாது.

அவர்களது உள்நாட்டு நிலைமை இந்த அளவு மோசமாக இருந்த போதிலும், அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித்துவ சமூகங்கள் பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அடிமைத் தனம் இதை விட கொடூரமானது. தமது குப்பைகளை வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்து விடுவது போல, உழைப்பாளர்கள் மீதான அவமானங்களையும், மனிதச் சுரண்டலையும் வேறு இடங்களுக்கு அனுப்பி விடுவதன் மூலம் ‘முன்னேறிய’ நாடுகள் தமது தெருக்களையும், மனசாட்சியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடிகிறது, தமது குடிமக்களுக்கு குறைந்த பட்ச சம்பள சட்டத்தை செயல்படுத்த முடிகிறது.

வங்க தேச படுகொலை
இவர்களுடைய குறைந்தபட்ச ஊதியம் கிறிஸ்துமசுக்கும், பாக்சிங் டேக்கும் அமெரிக்கர்களுக்கு மலிவான விலைகளில் ஆடைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது

இவ்வாறாக மற்றவர்களின் வலியை பார்க்காமல் தவிர்த்துக் கொள்கிறது அமெரிக்கா. வால்மார்ட் உட்பட மேற்குலகின் முக்கியமான ஆடை நிறுவனங்களுக்கு ஆயத்த ஆடைகளை செய்து அனுப்பும் வங்கதேசத்தின் ராணா பிளாசா கட்டிடம் இடிந்து விழுந்த இடிபாடுகளில் பிரிக்க முடியாத இறுதி அணைப்பில் புதைந்து கிடந்த தம்பதியினரின் அச்சுறுத்தும் முகங்களை எதிர் கொள்வதை அது தவிர்த்துக் கொள்கிறது.

அந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் அவர்களுடன் புதைக்கப்பட்ட 1,129 தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட்ட மாத ஊதியம் $38.5. அதுதான் அவர்களுடைய குறைந்தபட்ச ஊதியம். கிறிஸ்துமசுக்கும், பாக்சிங் டேக்கும் அமெரிக்கர்களுக்கு மலிவான விலைகளில் ஆடைகள் கிடைப்பதை இந்த ஊதியம்தான் உறுதிப்படுத்துகிறது. சராசரி கார்ப்பரேட் தலைமை அலுவலரின் சம்பளம் சராசரி தொழிலாளியின் சம்பளத்தை விட 273 மடங்காக இருக்கும் (சில பத்தாண்டுகளுக்கு முன்பு 10-20 மடங்காக இருந்ததிலிருந்து அதிர்ச்சியளிக்கும் அதிகரிப்பு) அமெரிக்கா இந்த குறைந்த பட்ச சம்பளத்தின் பொருள் என்ன என்று புரிந்து கொள்ள முடியுமா, என்ன?

அமெரிக்காவும் மற்ற வளர்ந்த சமூகங்களும் தமது பெட்டிகளுக்குள் பல பிணங்களை மறைத்து வைத்திருந்தாலும், நமது அடிமை கலாச்சார அவமானத்தை மறைத்துக் கொள்ளும் மரவுரியாக அவற்றை பயன்படுத்த விடக் கூடாது. இந்த தூதரக அதிகாரியின் பிரச்சனை அப்படித்தான் மாற்றப்பட்டிருக்கிறது.

அர்ணாப் கோஸ்வாமி
அர்ணாப் கோஸ்வாமியின் கட்டப் பஞ்சாயத்தில் அமெரிக்கர்களுக்கு எதிராக, தேவயானிக்கு ஆதரவாக யார் சாட்சி சொன்னார்கள் என்று தெரியுமா?

இந்த வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பு நீதிமன்றங்களில் தீர்மானிக்கப்பட வேண்டும். ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் தீர்ப்பு சொல்வதோ, தூதரக அதிகாரியை வில்லனாக சித்தரிப்பதோ தேவையில்லாத ஒன்று. பார்க்கப் போனால், தேவயானி குறைந்த பட்ச ஊதியம் வழங்கவில்லை என்ற சட்ட மீறல் அவரால் மட்டும் செய்யப்படுவது இல்லை. இது சில காலமாகவே இருந்து வரும் கட்டமைக்கப்பட்ட பிரச்சனையின் ஒரு பகுதி. இந்திய, அமெரிக்க அரசுகள் இதை கண்டும் காணாமல் விட்டிருந்தன.

ஆனால், இந்த நிகழ்வுக்கான எதிர்வினைகள் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்தன என்பதை சொல்வதில் எந்தத் தயக்கமும் தேவையில்லை. தேவயானியின் ‘புனிதத் தன்மை’யையும், ‘எவ்வளவு கருணையான எஜமானி அவர்’ என்பது பற்றியும் ஊடகங்களில் பல விபரங்கள் வெளியாகின. அர்ணாப் கோஸ்வாமியின் கட்டப் பஞ்சாயத்தில் அமெரிக்கர்களுக்கு எதிராக, தேவயானிக்கு ஆதரவாக  யார் சாட்சி சொன்னார்கள் என்று தெரியுமா? (நிகழ்ச்சியில் தோன்றி வாயைத் திறக்க விடாமல் உட்கார்ந்திருப்பதற்கு சம்மதித்த அந்த அமெரிக்கர்கள் யார் என்று ஆச்சரியமாக இருக்கிறது). அந்த சாட்சி தேவயானியின் தந்தைதான். அவரது சாட்சியத்தின் அடிப்படையில் தேவயானி மீதான குற்றச்சாட்டுகளில் எந்த நியாயமும் இல்லை என்று கோஸ்வாமி தீர்ப்பு சொன்னார். சங்கீதா ரிச்சர்டின் சார்பாக பேசுவதற்கு அவர் யாரையும் அழைக்கவில்லை என்பதை சொல்லவும் தேவையில்லை.

சங்கீதாவைப் பற்றி நாம் பல விபரங்களை கேள்விப் படுகிறோம்; அவர் வளர்ச்சிப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தவர்; அவருக்கு சொந்தமாக ஐ-பேட் இருந்தது (ஒரு ‘வேலைக்காரி’க்கு ஐ-பேட் சொந்தமாக இருக்க முடியுமா, சரிதானே?); அவருக்கு  செல்வாக்கு மிகுந்த தொடர்புகள் இருந்தன (அவரது உறவினர்கள் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்கிறார்கள்); அவர் ‘நன்கு உடையணியும்’, ‘நன்கு படித்த’ நபர்.

பிரபு தயாள்
வீட்டு வேலை செய்யும் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட நியூயார்க்கில் இந்தியாவின் முன்னாள் தலைமைத் தூதர் பிரபு தயாள்.

தேவயானியை போலவே வீட்டு வேலை செய்யும் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட நியூயார்க்கில் இந்தியாவின் முன்னாள் தலைமைத் தூதர் பிரபு தயாள், ” ‘அமெரிக்கக் கனவுகளை துரத்தும் வீட்டு வேலை செய்யும் பெண்கள்’ வழக்கு தொடர்ந்து விடுவார்களோ என்ற அச்சத்துடனேயே அமெரிக்காவில் பணி புரியும் இந்திய தூதரக அதிகாரிகள் வாழ்கிறார்கள்” என்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரைப் பொறுத்த வரை இந்திய அதிகார வர்க்கத்தின் மிக உயர்ந்த மேட்டுக் குடியினரான வெளியுறவு அதிகாரிகள், வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் வீட்டு வேலை செய்யும் பெண்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். “கடந்த பல ஆண்டுகளில் இந்திய தூதரக அதிகாரிகளுடன் அமெரிக்காவுக்கு சென்ற பல வீட்டு வேலை செய்யும் பணியாளர்களும், பாதுகாவலர்களும் தலைமறைவாகி விட்டார்கள்” என்று அவர் விளக்குகிறார். இந்தியாவில் பாலும், தேனும் ஓடிக் கொண்டிருந்தால், தயாள் சொல்வது போல இந்தியர்கள், “அமெரிக்காவுக்குப் போய் பல்வேறு தகிடுதத்தங்கள் செய்தாவது அங்கு தங்கி விட முயற்சிப்பது” ஏன்? (இந்திய அதிகாரிகளில் சிலர் தம் தாய் நாட்டுக்குத் திரும்பி வராமல் தலைமறைவான நிகழ்வுகளைப் பற்றிச் சொல்ல அவர் மறந்து விடுகிறார்).

இந்த வழக்கின் எதிர்தரப்பான, வேலை செய்யும் பெண்ணின் நியாயங்கள் முழுக்க முழுக்க இருட்டடிக்கப்படுவது நாம் எப்படிப்பட்ட சமூகம் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.  உணர்வு ரீதியாகவோ, உணர்வு ரீதியாக அல்லாமலோ பொருளாதார வழிகளிலும் கலாச்சார கட்டுத் திட்டங்களாலும் உழைக்கும் வர்க்கத்தை அடிபணிய வைத்து இழிவு படுத்துவதில் திளைக்கும் நமது கூட்டு மனசாட்சியை அது அம்பலப்படுத்துகிறது. இந்த உழைக்கும் மக்களில் பெரும் எண்ணிக்கையிலான ஆயாக்களும், வீட்டு வேலை செய்பவர்களும் அடங்குவார்கள். இந்தியாவின் இரண்டு மாநிலங்களில் (கேரளா, தமிழ்நாடு) மட்டுமே வீட்டுப் பணியாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் உள்ளன.

தேவயானி, சங்கீதா
வெளியுறவுத் துறை அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அவரது தந்தைக்கும் எதிராக ஒரு பணிப்பெண் இந்திய நீதி அமைப்பில் என்ன செய்து விட முடியும்?

வீட்டுப் பணியாளர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தலித் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியினரை சேர்ந்தவர்கள். தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பொறுத்த வரையில் பொருளாதாரச் சுரண்டலுடன் சாதி அடிப்படையிலான அவமானங்களால் சேர்ந்து சுரண்டலை கடுமையாக்குகின்றன.

இத்தகைய கட்டமைப்பில், சுரண்டல் கலாச்சாரத்தில், வெளியுறவுத் துறை அதிகாரிக்கும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அவரது தந்தைக்கும் எதிராக ஒரு பணிப்பெண் இந்திய நீதி அமைப்பில் என்ன செய்து விட முடியும்? (இந்திய நீதிமன்றங்களில் அவருக்கு எதிராக  எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் சங்கீதாவின் குற்றத்தையும், பிழையையும் பலர் முன் முடிவு செய்கின்றனர். ஆனால் கோப்ரகடேக்கள் இந்திய நீதிமனங்களின் மூலம் நடவடிக்கை எடுக்க முடிந்த வேகமே அவர்களுக்கும் சங்கீதாவுக்கும் இடையேயான அதிகார ஏற்றத் தாழ்வை காட்டவில்லையா?). அமெரிக்க நீதி அமைப்பில் அதற்கேயுரிய சமத்துவமின்மைகளுடனும் குறைபாடுகளுடனும் சங்கீதாவுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இதற்குக் காரணம் அமெரிக்கா புனிதர்களின் நாடு என்பதில்லை. மாறாக, கடந்த கால வரலாற்றில் உழைக்கும் வர்க்கங்கள் போராடிப் பெற்ற வெற்றிகளின் மூலம் அமெரிக்காவின்உழைக்கும் மக்களும், ஒடுக்கப்பட்டவர்களும் (குடிமக்களுக்கும், சட்டபூர்வமான குடியேறிகளுக்கும் மட்டுமாவது) பல மடங்கு மேம்பட்ட பாதுகாப்பை பெற்றிருக்கிறார்கள்.

டொமினிக் ஸ்ட்ராஸ் கான்
நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் பணிப் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்தியதற்காக கைது செய்யப்பட்ட டொமினிக் ஸ்ட்ராஸ் கான்.

ஐ.எம்.எஃப் அமைப்பின் தலைவராக இருந்த பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த, உலகிலேயே மிக சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவரான டொமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் பணிப் பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நிகழ்த்தியதற்காக கைது செய்யப்பட்டார். குற்றவியல் வழக்கு தொடரப்படா விட்டாலும், நீதிமன்றத்துக்கு வெளியே $6 மில்லியன் நிவாரணம் கொடுத்து சமரசம் செய்து கொள்ள வேண்டி வந்தது. 1985-ம் ஆண்டு போபால் விஷ வாயு விபத்தினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரக் கணக்கான மக்களுக்கு மத்திய பிரதேச மாநில அரசு ஒதுக்கிய மொத்த இடைக்கால நிவாரணத் தொகையில் பாதி இது.

இந்தியாவும் அமெரிக்காவும் ஒரே குட்டையில் ஊறிய  மட்டைகள்தான், ஏழைகள் மீதும், ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீதும் ஒரே மாதிரியான பார்வையையும், உலகிலேயே மிக மோசமான பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் கொண்டவைதான். இருப்பினும் வரலாற்று மற்றும் சமகால பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி காரணங்களினால் இரு நாடுகளின் கலாச்சாரமும், அடிமைத்தனமும் வேறுபட்டிருக்கின்றன. அமெரிக்கா அடிமைக் கலாச்சாரத்தை வெளி இடங்களுக்கு அனுப்பி விட்டு உள்நாட்டில் அறிவுபூர்வமான சட்ட ஒழுங்கையும், ஜனநாயகம் போன்ற தோற்றத்தையும் பராமரிக்க முடிகிறது. மாறாக, இந்தியாவின் அடிமைக் கலாச்சாரம் அதன் எல்லைகளுக்குள்ளாகவே குடி கொண்டிருக்கிறது.

இந்த வழக்கை தேவயானி-சங்கீதா என்ற இரண்டு தனி நபர்களுக்கிடையேயான பிரச்சனையாக குறுக்கி விடாமல் (அவர்களில் யார் தவறு செய்தார்கள் என்பது இன்னமும் நிரூபிக்கப்படவில்லை) அல்லது இரண்டு தேசங்களுக்கு இடையேயான பிரச்சனையில் ஒரு தேசத்தின் பெருமை காயப்படுத்தப்பட்டதாக குறுக்கி விடாமல், நமது அடிமைக் கலாச்சாரத்தின் சுரண்டல் மற்றும் வன்முறை கட்டமைப்பு குறித்த பொது விவாதத்தை தொடங்க வேண்டும். நமது பரந்து பட்ட சமூகத்தில் காணப்படும் இந்த கலாச்சாரம்தான் நமது அதிகார அமைப்பிலும், அதிகாரிகள் மத்தியிலும் பிரதிபலிக்கிறது.

கதவு திறந்து விடுபவர்
இந்த கலாச்சாரம்தான், தொழிலாளர்களும், பணியாளர்களும் நமக்காக கதவைத் திறந்து விடக் கோருகிறது.

இந்தக் கலாச்சாரம்தான், தொழிலாளர்களும், பணியாளர்களும் நமக்காக கதவைத் திறந்து விடக் கோருகிறது. நாம் போகச் சொல்வது வரை அவர்களை நமக்கு சேவை செய்ய காத்திருக்க வைக்கிறது. இந்த கலாச்சாரம்தான், இப்போது சூடு பிடித்துக் கொண்டிருக்கும் விவாதத்தில் பார்ப்பது போல, யாரையும் நியாயமான சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தும் சுதந்திரத்தை தொழிலாளர்களையும், பணியாளர்களையும் கொடுமையாக சுரண்டுவதற்கான நமது உரிமையாக மாற்றுகிறது.

அதனால்தான் பிரபு தயாளும் மற்ற தூதரக அதிகாரிகளும் முன் வைக்கும் தீர்வுகளில் எல்லா தூதரக அதிகாரிகளுக்கும் தூதரக சட்ட விலக்கு அளிப்பது மட்டும் பேசப்படுகிறது. தூதரக அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது இந்தியாவிலிருந்து இந்தியப் பணியாளர்களை அழைத்துச் செல்வதைப் பற்றியும், தொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்கள் இந்தியாவில் இல்லாத நிலையில் தமது எஜமானர்களுடன் வசிக்கும் அவர்கள் எதிர் கொள்ளும் அடக்குமுறை சாத்தியங்கள் பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை.

600 முதல் 700 அதிகாரிகளை மட்டுமே கொண்ட நமது வெளியுறவுத் துறை அமைப்பின் அதிகாரிகள் (நியூசிலாந்து, மலேசியா போன்ற சிறு நாடுகளின் வெளியுறவுத் துறைகளில் கூட இத்தனை அதிகாரிகள் உள்ளனர்), மற்ற துறையினரை அனுமதித்து இந்த மேட்டுக் குடி கிளப்பை விரிவாக்குவதை கடுமையாக எதிர்க்கின்றனர். வளர்ந்து வரும் இந்தியாவுக்கு தூதரக அதிகாரிகளின் பற்றாக்குறை இருந்த போதும் இந்த நிலைமை (சீனாவில் இதைப் போன்ற ஏழு மடங்கு அதிகாரிகள் உள்ளனர்) பராமரிக்கப்படுகிறது. இத்தகைய தூதரக அதிகாரிகளும், ஆட்சிப் பணி அதிகாரிகளும் தமது மேட்டுக்குடி சலுகைகளை விட்டுக் கொடுக்க எப்படி சம்மதிப்பார்கள்?  அவர்களுக்கு வழங்கப்படும் மேட்டுக்குடி சலுகைகள் பற்றிய விவாதம் எப்படி நடக்கும்?

போபால் பேரழிவு
அமெரிக்காவில் பாலியல் துன்புறுத்தல் குற்றத்துக்கு டொமினிக் ஸ்டராஸ் கான் கொடுத்த நிவாரணம் போபால் விஷ வாயு விபத்தினால் பாதிக்கப்பட்ட பத்தாயிரக் கணக்கான மக்களுக்குக் கிடைத்த நிவாரணத் தொகையில் பாதி.

கேரளா குறித்த எனது ஆய்வு தொடர்பாக அரசு அதிகாரிகளாக இருக்கும் நண்பர்களுடன் பேசிய போது, ‘அதிகாரிகளுக்கு மரியாதை காட்டாத’ கேரள அதிகார அமைப்பின் ‘அடிபணிய விரும்பாத’, ‘ஆணவம் மிக்க’ ஊழியர்கள் சில வெளி மாநில அதிகாரிகளுக்கு ‘கொடுங் கனவா’க இருக்கிறார்கள் என்பது தொடர்பான சில நிகழ்வுகளை தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு ஐ,.ஏ.எஸ் அதிகாரிக்கு உட்கார இடம் கொடுக்காத ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர், சரியாக மாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்ட ஓட்டுனரால் தானே காரை ஓட்டிக் கொண்டு வீடு போக நேர்ந்த பெண் அதிகாரி, ‘மலையாளிகள் தமது எஜமானர்களை மதிக்காமல் நடந்து கொள்வது போலத்தாம் தன்  தாய், தந்தையிடமும் நடந்து கொள்வார்களா’ என அதிர்ச்சியடைந்த ஒரு மூத்த அதிகாரி போன்றவை இதில் அடங்கும்.

பரந்து பட்ட அடிமைக் கலாச்சாரத்தின் சிறு துணுக்குகள்தான் இவை. கேரளா போன்ற மாநிலங்களின் தொழிலாளர்களும், பணியாளர்களும் இந்த அடிமைக் கலாச்சாரத்தை வளைத்து சில உரிமைகளை பெறவும், சிறிதளவு சுயமரியாதையை பேணவும் முடிந்திருக்கிறது. இருப்பினும், இங்கும் சேவை செய்ய கட்டாயப்படுத்தப்படுபவர்களில் பெரும் பகுதியினர் ஒடுக்கப்பட்ட சாதிகளையும், சமூகங்களையும் சேர்ந்தவர்கள்தான். இந்த பகுதிகளிலும் அடிமைக் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்படாமல் அமெரிக்காவில் இருப்பதைப் போன்று புதிய, மறைக்கப்பட்ட ஒடுக்குமுறைகளாகத் தொடர்கின்றன.

இப்போதைய விவாதங்களின் இன்னொரு கவனிக்க வேண்டிய அம்சமாக, ஒரு முன்னேறிய தலித் பெண்ணாக ‘வெளி உலகுக்கு நமது பெருமையை பிரதிநிதித்துவப்படுத்தும்’ தேவயானியின் பெயரால் சங்கீதாவின் பெயரை இழிவுபடுத்துவதாகவும், பணிப்பெண்களின் குரலையும் உரிமைகளையும் முடக்குவதாகவும் நடக்கும் பொதுவிவாதத்தில் முற்போக்கு தலித் இயக்கத்தின் ஒரு பகுதியினர் பங்கேற்பது அதிர்ச்சியூட்டுகிறது. சங்கீதா என்ன சாதி என்று நமக்கு இன்னும் தெரியாது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு ‘முன்னேறிய பெண்ணாகவோ, நமது பெருமையை வெளி உலகுக்கு பிரதிநிதித்துவப்படுத்துபவராகவோ’ இல்லை. அதனால்தான், அவரது போராட்டம் (சங்கீதா, தான் சுரண்டப்படுவதாக சொல்வது இந்த வழக்கில் பொய்யாக போனாலும், வீட்டுப் பணியாளர்கள் அனைவரின் போராட்டம்) சாதி உட்பட அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் பகுதியாக இருக்க வேண்டும்.

மாயாவதி - தலித் அரசியல் மகாராணி
தேவயானி மீது தனிப்பட்ட முறையில் எந்த விதமான விமர்சனங்களும் வைக்கப்படக் கூடாது என்பதுதான் தலித் முற்போக்கு அரசியலா? (மாயாவதி – தலித் அரசியல்)

தேவயானி தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டாலும் (அமெரிக்க அமைப்பின்படி குறை கூலி கொடுத்தது தொடர்பான குறுகிய வரையறையில் மட்டுமின்றி, அவரும் சங்கீதாவும் ஏற்றுக் கொண்ட ஷரத்துகளின் அடிப்படையிலும், இந்தியாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும்) அவர் ஆதிக்க சாதியினரால் இயக்கப்படும் இந்த சுரண்டல் அமைப்பின் ஒரு பகுதியாகவும் பங்கு பெறுபவராகவும் மட்டுமே இருப்பதால் அவர் மீது தனிப்பட்ட முறையில் எந்த விதமான விமர்சனங்களும் வைக்கப்படக் கூடாது என்பதுதான் தலித் முற்போக்கு அரசியலா? இதே சுரண்டல் அமைப்பின் ஒரு பகுதியாக இந்தப் போக்குகளை எதிர்த்து துணிச்சலுடன் போராடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தலித் அதிகாரிகளுக்கு அது என்ன மதிப்பைத் தரும்.

அடிமைக் கலாச்சாரத்தை தேசிய அடையாளம் அல்லது சாதி அடையாளத்தின் மூலம் மட்டும் எளிமைப்படுத்தி புரிந்து கொள்ள முடியாது. இந்த எல்லைகளைத் தாண்டிய ஒடுக்குமுறைகளும் நிலவுகின்றன. தேவயானி மேட்டுக்குடி அதிகார வர்க்க அமைப்பில் இருந்தாலும், அவர் இன்னொரு மட்டத்தில் ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் அடக்குமுறைகளை சந்திக்கலாம். அமெரிக்காவில் அவர் இன அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படலாம்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் ஒட்டு மொத்ததேசமும் தேவயானிக்காக நிற்கிறது, சங்கீதாவுக்காக யாரும் நிற்கவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் சங்கீதாவுக்காக வாதிடுவதற்கு அமெரிக்கர்களைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லை.

ஒரு பெண்ணுக்கு எதிராக இன்னொரு பெண்ணை நிறுத்துவது இங்கு பிரச்சனை இல்லை. (இறுதியில் இருவரில் ஒருவரது குற்றச்சாட்டுதான் உண்மையாக இருக்க முடியும்), ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எஜமானர்களையும், சேவகர்களையும் உருவாக்கும் சுரண்டலின் அமைப்பையும் வடிவத்தையும் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இதைப் பயன்படுத்தி அனைத்து விதமான தொழிலாளர்களையும் பணியாளர்களையும் பாதுகாப்பது குறித்த விவாதத்தைத் தொடங்க வேண்டும். அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்குவது பற்றியும், சிறுபான்மை எண்ணிக்கையிலான தூதரக அதிகாரிகளும் மேட்டுக் குடியினரும் அனுபவிக்கும் அளவுக்கதிகமான மேட்டுக் குடி ஆடம்பரங்களைப் பற்றியும் விவாதிக்க வேண்டும். அறிந்தும் அறியாமலும் இந்த சுரண்டல் அடுக்குகளிலும் சங்கிலியிலும் நாம் பங்கெடுப்பது பற்றி விவாதிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமது அளவில் அனுபவிக்கும் மேட்டுக் குடி உரிமைகளை புரிந்து கொள்வது குறித்தும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு நாம் அடிமையாக இருப்பது பற்றியும் விவாதிக்க வேண்டும்.

நிசிம் மன்னத்துக்காரன் கனடாவின் டல்ஹௌசி பல்கலைக் கழகத்தில் பணி புரிகிறார்.

நன்றி: kafila
தமிழாக்கம்: அப்துல்