privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்அசோக் லேலாண்டில் தோழர்.பரசுராமன் பணி இடைநீக்கம் !

அசோக் லேலாண்டில் தோழர்.பரசுராமன் பணி இடைநீக்கம் !

-

தொழிலாளி செத்தால், அதிகாரியின் குடும்பம் பாதிக்குமா?

ஒசூர்- அசோக் லேலாண்டில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலைக் கண்டித்த தோழர்.பரசுராமன் பணி இடைநீக்கம். இது லேலாண்டின் சட்டவிரோத லேஆப்பை திசைத் திருப்பும் சதித்திட்டம்!

சூரில் உள்ள அசோக் லேலாண்டு ஆலை 2 ல் தொடர்ந்து உற்பத்தி முறையில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, சென்ற சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏ.எல்.டி.எஸ். என்ற நிமிட உற்பத்தி முறை புகுத்தப்பட்டது. ஒரு நாளைக்கு 480 நிமிடங்கள், ஒரு நிமிடத்தில் தொழிலாளி எல்லா நொடிகளிலும் இயந்திரத்துடன் நெருக்கமான தொடர்பில் இருக்க வேண்டும் என்ற முறையில் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழியும் நவீன ஒடுக்குமுறையாக இந்த ஏ.எல்.டி.எஸ். உற்பத்தி முறை கொண்டுவரப்பட்டது அதன் பின்னர் தொழிலாளர்கள் சிறுநீர் கழிக்கவும் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த அடக்குமுறைக்கு பின்னர் பல தொழிலாளர்கள் பலவிதமான உடல், மன பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

தொழிலாளர் விவாதம்
இச்சம்பவத்தின் போது கூடிநின்று வாக்குவாதத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள்

லேலாண்டு நிர்வாகம் இவ்வாலையில் பெயின்ட் பிரிவில் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் இயந்திரத்திற்கு அருகில் 6 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளத்தை தோண்டி இருந்தது. இதனை மூட வேண்டும் என அப்பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் கோரி ஆலை நிர்வாகமும் அதனை மூட ஏற்றுக் கொண்டது. ஆனால், அதனை மூடுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் இறங்கவில்லை.

சென்ற 23-12-2013 அன்றுவரை இந்த பள்ளம் மூடப்படாமல் இருந்தது. இப்பிரிவில் பணிபுரியும் தோழர்.பரசுராமன், (மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு.) இப்பள்ளத்தில் விழ இருந்தார். ஆனால், சுதாரித்துக் கொண்டதால் இது தவிர்க்கப்பட்டது. அடுத்து 10.20 மணிக்கு அங்கு வேலை செய்து கொண்டிருந்த பயிற்சி தொழிலாளி தினேஷ் அப்பள்ளத்தில் தலைகுப்பற விழுந்தார். விழுந்தவர் உடனடியாக மயக்கமடைந்தார். உடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி சென்று அந்த தொழிலாளியை பள்ளத்தில் இருந்து தூக்கி மேலே எடுத்து அவருக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த, அப்பிரிவின் மேலாளர் ஜெயகாந்தன் என்பவர், நிலைமையை புரிந்து கொண்டு “இங்கு என்ன கூட்டம். உடனே எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க. நான் பார்த்துக்கறேன்” என்று தொழிலாளர்களை விரட்டத் தொடங்கினார். இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தோழர்.பரசுராமன், ஜெயகாந்தனின் இந்த செயலைக் கண்டித்தார்.

“எல்லாரையும் போ, போனு விரட்டுற நீ வந்து தொழிலாளியை காப்பாத்துவியா? இந்தக் குழிய மூடச் சொல்லி எத்தன நாளாவது. இன்னைக்கு வரைக்கும் மூடுனியா? பிறகு இப்ப வந்து தொழிலாளி கீழ கெடக்குறாரு, நான் பாத்துக்குறனு நீ சொல்றீயே, என்னத்த பாத்துக்கப் போற?” என்று கேட்டார்.

“இதைப்பத்தியெல்லாம் நீ பேசாதே” என்று திமிரடியாக பதிலளித்துள்ளான் ஜெயகாந்தன்.

அத்திரமுற்ற தோழர், “கொஞ்சம் தவறிப் போயி இந்த தொழிலாளி இறந்திருந்தா, இவங்க குடும்பத்துல இருக்குறவங்க கதி என்ன? தொழிலாளி செத்தா அவரும் அவங்க குடும்பமும் தான் பாதிக்குது, அவர் மனைவிதான் தாலியறுத்து அவமானப்படுத்தப்படுறா? அவங்க குழந்தைங்கதான் வீதியில நிற்குது? நீயா பாதிக்கப்பட போற? உங்க குடும்பமா பாதிக்கப்பட போவுது? ” என்று ஆவேசமாக அந்த அதிகாரியிடம் பேசினார்.

பிரச்சனையை திசைதிருப்ப, “என் குடும்பத்தை பத்தி பேசாதே” என்றான் அந்த அதிகாரி.

“உன் குடும்பத்தை பத்தி எவன் பேசுனான். நீ காசு சம்பாதிக்க, புரமோசன் வாங்க, நீ செத்தா பரவாயில்லை. உன் குடும்பம் பாதிச்சா பரவாயில்லை. தொழிலாளி ஏன் சாகணும். தொழிலாளி குடும்பம் ஏன் பாதிக்கப்படனும்” என அந்த அதிகாரிக்கு எதிராக கேள்வி எழுப்ப, சக தொழிலாளர்களும் சேர்ந்து அந்த அதிகாரியை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

மூடப்பட்ட பள்ளம்
இப்பிரச்சனைக்குப் பின்னர் தொழிலாளி விழுந்த குழியையும் அருகில் உள்ள பிற குழிகளையும் கிரில் மற்றும் இரும்பு தகடுகள் கொண்டு மூடியுள்ளனர்.

ஏ.எல்.டி.எஸ். உற்பத்தி முறை திணிக்கப்பட்ட பின்னர்,ஒரு நிமிடம் கூட உற்பத்தி பாதிக்கப்படக்கூடாது என்ற வெறியில் ஆலை நிர்வாகம் செயல்படுகிறது. அதற்கு ஆதரவாக, ஜெயகாந்தன் போன்ற அதிகாரிகள் விசுவாசமாக செயல்படுகின்றனர். தங்களது பதவி உயர்வுக்காகவும் சுயநலனிற்காகவும் தொழிலாளர்களை அடிமைகளைப் போல நடத்துகின்றனர். இதனை அங்கேயே அம்பலப்படுத்தி பேசினார். “தொழிலாளி செத்தாலும் பரவாயில்லை, இங்க உற்பத்தி நடக்கணும், அப்போதுதான் அதிகாரிக்கு புரமோசன் வரும். சுயநலத்திற்காக, காசுக்காக ஏன் பேயா அலையிறீங்க” என்று அந்த அதிகாரியின் நோக்கத்தை அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில், அன்று மாலை 4.20 மணியளவில், ஜெயகாந்தன் மனம் புண்படும் படி அவரது குடும்பத்தை பற்றி தவறாக பரசுராமன் பேசியதாகவும் இதனால் பரசுராமனுக்கு விளக்கம் கோருதல் மற்றும் இடைநீக்கம் செய்வதாகவும் குறிப்பிட்டு அதிகாரிகள் சிலர் ஒரு கடிதத்தை பரசுராமனிடம் கொடுத்தனர். இதில் அதிகாரிக்கு கீழ்படிய மறுத்தது, உற்பத்தி நேரத்தில் இடத்தை விட்டு நகர்ந்தது, சூப்பர்வைசர் அனுமதி பெறாமல் சென்றது, ஆலைக்குள் ஒழுங்கு கெடும் வகையில் கலவர மனப்பான்மையுடன் நடந்து கொண்டது, ஆகிய குற்றங்களுக்காக இடைநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை வாங்கிக்கொள் என்றும் தோழர்.பரசுராமனிடம் கேட்டபோது, இதனை வாங்க மறுத்தார்.

“தாங்கள் உயர் அதிகாரி என்ற முறையில் நேரடியாக இப்பிரிவுக்கு வந்து ஜெயகாந்தன் மேலதிகாரிகளுக்கு தெரிவித்த புகார்கள், குற்றச்சாட்டுகள் உண்மைதானா என பரசுராமனையும் அப்பிரிவில் பணிபுரியும் பிற தொழிலாளர்களையும் ஆய்வு செய்திருக்க வேண்டும். குற்றச்சாட்டு உண்மை என ஆலை நிர்வாகம் கருதும் பட்சத்தில், சங்கத்திடம் தெரிவித்திருக்க வேண்டும். அதன் பின்னர் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இவை எதனையும் பின்பற்றாமல் நேரடியாக இடைநீக்கம் அறிவிப்பது என்பது உள்நோக்கமுடையது” என்ற வகையில் இதனைக் கண்டித்தார். “இவ்வாலையில் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் உள்ளது. உற்பத்தி உயர்வு, போனஸ், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுகிறது. சங்கத்தின் கவனத்திற்கு செல்லாமல் நிர்வாகமே முடிவு செய்வது ஏற்க முடியாது” எனவும் தெரிவித்தார்.

தோழர்.பரசுராமனுக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவு:

இங்கு கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விசயம் என்ன வென்றால் சட்டப்படி தொழிற்சாலைக்குள் எந்த வித சிறு மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் தொழிற்சாலை ஆய்வாளரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும். ஆனால், இது போன்ற எந்த சட்டத்தையும் லேலாண்டு நிர்வாகம் மதிப்பதில்லை. தொழிற்சாலை ஆய்வாளர் லேலாண்டு நிறுவனத்தின் மற்றொரு அதிகாரியாகவே செயல்படுகிறார். அந்த வகையில், தொழிலாளர் ஆய்வாளரின் அனுமதி இல்லாமல் உற்பத்தி செய்யும் இடத்தில் குழியைத் தோண்டியது சட்டப்படி குற்ற நடவடிக்கை. இதற்காக லேலாண்டு நிர்வாகத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் கிரிமினல் சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லேஆப்பை திசைத்திருப்பும் சதித்திட்டம்!

இடைநீக்கத்தை இவ்வளவு விரைவாக செய்வதற்கு அடிப்படையான காரணம், தோழர்.பரசுராமன் மீது ஆலை நிர்வாகம் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அல்ல. முக்கியமாக, சில ஆண்டுகளாக லேலாண்டு நிர்வாகம் தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை செலுத்தி வருகிறது. 4 ஆண்டுக்கு முன் இங்குள்ள லேலாண்டு ஆலை 1-ல் இருந்து 354 தொழிலாளர்களை இடமாற்றம் என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு 599 தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளது. மேலும், அடுத்து ஓரிரு ஆண்டுகளுக்குள் ஆலை 1-ஐ மூடிவிடுவதற்காக சதித்திட்டத்திலும் ஈடுபட்டுள்ளது. இதற்காக 700-க்கும் அதிகமான தொழிலாளர்களை விரட்டியடிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம், ஆலை 2-ல் நவீனக் கொத்தடிமை முறைகளைப் புகுத்தி தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி வருகிறது. சென்ற 10 ஆண்டுகளில் ஊதிய உயர்வு காலங்களில் எல்லாம் ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்து, அற்ப தொகையை ஊதிய உயர்வாக வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் அரியர் தொகையில் ஒரு சிறுபகுதியை மட்டுமே தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.

இதுமட்டுமின்றி இந்த ஆண்டுக்கான போனசை இன்றுவரை வழங்காமல் உள்ளது. மற்றொருபுறம், தொடர்ந்து லேஆப் விடுத்து வருகிறது. ஆனால், ஆலையில் உற்பத்தியோ மின்னல் வேகத்தில் செய்ய தொழிலாளர்களை நிர்பந்தித்து வருகிறது. போனசு வழங்காமல் இழுத்தடிப்பது மட்டுமன்றி அடுத்த ஆண்டில் 180 நாட்கள் லேஆப் விடுவதற்காக தொழிற்சங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது. இந்த ஒப்பந்தத்தை சென்னை – எண்ணூர் ஆலைச் சங்கம் ஏற்றுக் கொண்டு விட்டது. ஒசூர் ஆலை – 1-ல் உள்ள சங்கமும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆலை 2-ல் உள்ள சங்கம் மட்டும் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை ஏற்றுக் கொள்ள வைக்க சங்கத்தை மிரட்ட பகடைக்காயாக தோழர்.பரசுராமனை இடைநீக்கம் செய்துள்ளது ஆலை நிர்வாகம்.

ஆலைநிர்வாகம் தான் விரும்பும் லே-ஆப், உற்பத்தி திணித்தல் உள்ளிட்ட அடக்குமுறைகளை தொழிலாளர்கள் மீது செலுத்துவதற்காக இதற்கு முன்னர் பல முறை இது போன்ற இடைநீக்கங்களை செய்து தொழிலாளர்களைப் பணிய வைத்துள்ளது. சென்ற சில மாதங்களில், இது போல 18-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிலர் நிரந்தர பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

சென்ற ஆண்டு குளோபல் ஃபார்மாடெக் ஆலையில் இதே போல ஆட்டம் போட்டஏகாம்ப்ரம் என்ற எச்.ஆர். அதிகாரி பு..தொ.மு.வை விரட்டியடிப்பேன் என்று சபதமிட்டு செயல்பட்டான். அவனை கமாஸ் வெக்ட்ரா ஆலை நிர்வாகம் தனது ஆலையில் எச்.ஆர். அதிகாரியாக நியமித்தது. இன்று ஏகாம்பரம் ஒசூர் தொழிற்பேட்டையிலேயே இல்லை. மேலும், தனது கிரிமினல் நடவடிக்கைகளுக்காக சிறை சென்ற ஒரே எச்.ஆர். அதிகாரியாக ஏகாம்பரம் மட்டுமே உள்ளான். இவனைப் போன்று பல அதிகாரிகளை சிறைக்கு அனுப்ப தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே சாத்தியம்!

இடைநீக்கத்திற்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டம்!

இப்பிரச்சனையில் ஆலைச் சங்கம் தற்போது ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் வியாழன் (26-12-2013) அன்று மாலை வரை சங்கம் ஆலை நிர்வாகத்திற்கு கெடுவிதித்துள்ளது. அதன் பின்னர், இதில் போராட்டத்தில் இறங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. இதனால், சங்கம் கேட்டுக்கொண்ட வகையில் இச்சம்பவம் குறித்து பு.ஜ.தொ.மு. சார்பாக சுவரொட்டி, பிரசுரங்கள் போட்டு பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படவில்லை.

சங்கத்தின் ஒப்புதலுடன் 24-12-2013 அன்று மாலை இவ்வாலை வாயிலில் பு.ஜ.தொ.மு. சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்ட வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 500-க்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்.அசோக் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தலைமை தாங்கினார். தோழர்.பரசுராமன், மாவட்டத் தலைவர், தோழர்.இ.கோ.வெங்கடேசன், தோழர்.செந்தில் குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர்.ரவிச்சந்திரன் நன்றியுரையாற்றினார்.

பரசுராமனின் இடைநீக்கத்திற்கு வருத்தம் தெரிவித்தோ, அல்லது இந்த ஆலை நிர்வாகத்திடம் இறைஞ்சியோ, கோரிக்கை வைத்தோ இந்த ஆர்ப்பாட்ட வாயில் கூட்டத்தை நடத்தவில்லை. இந்த இடைநீக்கத்தை ஆலை நிர்வாகம் ஒரு பகடைக்காயாக வைத்து, லே ஆப்பை ஏற்க கோரினால் அதற்கு தொழிலாளர்களும் சங்கமும் உடன்பட வேண்டாம். இறுதி வரை உறுதி இந்த அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம் என்று தோழர்கள் அறிவித்தனர். அடுத்தடுத்து பு.ஜ.தொ.மு. மேற்கொள்ள இருக்கும் போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாகவும் தொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர். கார்ப்பரேட் நிறுவனமான லேலாண்டின் தொழிலாளர்களின் போராட்ட முறைகள் என்பது அடையாள உண்ணாவிரதம் என்ற அளவிற்கு சுருங்கிப் போன நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் முழக்கமிட்டது, லேலாண்டு தொழிலாளர்களிடையே உள்ள அடக்குமுறைக்கு எதிரான உரிமைக் குரலின் அடையாளமாக உள்ளது!

முதலாளித்துவ பயங்கரவாதிகள்! (Captalist Terrorists!)

லேலாண்டு நிர்வாகம் தொழிலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை செலுத்துவதற்கு சமூகத்தில் சுற்றித் திரியும் ரவுடிகளையும் கொலைகாரர்களையும் மேலாளர்களாகவும் அதிகாரிகளாகவும் நியமிப்பது வழக்கமாகி வருகிறது. காட்டுமிராண்டிகளைப் போல இருக்கும் இந்த அதிகாரிகள் தான் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்தக் கவலையும் இன்றி தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். குறிப்பாக, ஜெயகாந்தன் என்ற இந்த அதிகாரியின் கொலைவெறி செயல்களில் முக்கியமாக இரண்டை இங்கு விளக்குகிறோம்.

  • சென்ற 4 ஆண்டுக்கு முன், இவ்வாலையில் சேசிஸ் (VTS – முழுமையாக ஓடும் தன்மை கொண்ட வண்டியின் அடிப்படை பகுதி. இதனை லாரியாகவோ, பேருந்தாகவோ வடிவமைத்துக் கொள்ளலாம் – பாடி கட்டப்படாத வண்டி) சோதனைப் பிரிவில் இந்த அதிகாரி பணிபுரிந்து வந்தான். அங்கு சேசிசை கடைசியாக சரி பார்க்கப்படும். ஒரு நாளைக்கு இத்தனை என்ற இலக்குடன் வேகமாக நகர்த்துவது இவனது வேலை. இதில் சோதனையில் ஈடுபடும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாற்றாக ஒப்பந்தத் தொழிலாளர்களை கும்பலாக, ஒரே நேரத்தில் பலரை பல வேலைகள் செய்ய வைப்பது. இது கட்டாயம் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு நன்கு தெரியும். அப்போது புதிதாக அவ்வாலையில் சேர்ந்து ஒரு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த வடமாநில தொழிலாளி ஒருவரை (ஒப்பந்தத் தொழிலாளி) சக்கரத்தின் கீழே உள்ள பகுதிகளை சரி பார்க்க உத்தரவிட்டு விட்டு, வண்டியை ஓட்டி சோதிக்கின்ற தொழிலாளி வண்டியை விரைவாக எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார் (ஒப்பந்தத் தொழிலாளிகளை இப்பிரிவில் பயன்படுத்துவது சட்டவிரோதம்).இதனால், சக்கரத்தின் கீழ் படுத்து சரி செய்து கொண்டிருந்த அந்த வடமாநிலத் தொழிலாளி அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரழந்தார். இது ஒரு பச்சைப் படுகொலை. இது குறித்து உடனடியாக விவரம் சேகரிக்க அரசு மருத்துவமனைக்கு தோழர்கள் செல்வதற்குள், இதனை ஒரு சாலை விபத்து என்று சோடித்து, கொலையை மூடிமறைத்து உடனடியாக அந்தத் தொழிலாளியின் உடலை அவரது ஊருக்கு விமானத்தின் மூலம் அனுப்பி வைத்தது லேலாண்டு நிர்வாகம்.
  • பெயிண்ட் சாப் பிரிவில் இந்த அதிகாரி பணி புரியும் போது, தொழிலாளர்கள் மேனுவல் பிரிவில் செய்யும் வேலைகளையும் ரோபோட் மூலம் செய்யும் வேலைகளையும் ஒரே கன்வேயரில் அவுட்புட் செய்வது என்ற அடக்குமுறையை புகுத்தினான். இதனை தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கட்டாயமாக அமுல்படுத்தினான். இதனால் இரு வண்டிகளுக்கு இடையில் ஒரு சி.எல். தொழிலாளி சிக்கிவிட்டார். அவரது கையின் உள்ள சதை, நரம்புகள் எல்லாம் பிய்த்தெறியப்பட்டது. இரத்தம் 15 அடி தூரத்திற்கு சிதறியது.
  • ஜெயகாந்தன் மட்டுமல்ல. ஆலை 1-ல் சாந்த குமார் என்ற ஒப்பந்த தொழிலாளிக்கு எந்த வித பாதுகாப்பு கவசங்களும் கொடுக்காமல் ஆலை மேற்கூரையை பழுதுபார்க்க அனுப்பினான் மற்றொரு அதிகாரி. கால் தவறி மேலிருந்து கீழே விழுந்த சாந்த குமார் என்ற அந்த ஒப்பந்தத் தொழிலாளி கீழே விழுந்து மூளை சிதறி கோரமாக உயிரிழந்தார்.
  • சி.பி.பி.எஸ். என்று கூறப்படும் லேலாண்டின் ஆலை 3-ல் தினந்தோறும் தொழிலாளர்களுக்கு விபத்து நடக்கிறது. அது ஒரு நவீனக் கொலை கூடாரமாக விளங்குகிறது.

மொத்தத்தில், லேலாண்டு என்பது உற்பத்தி செய்வதற்கான இடமாக இல்லாமல் தொழிலாளர்களின் உயிரைப் பற்றி சிறிதும் கவலையற்ற கொலைக் கூடாமாக உள்ளது. இதற்கேற்ப ஆலையில் உள்ள அதிகாரிகள் சுயநலப் பிராணிகளாகவும், கொலை காரர்களையும் ரவுடிகளையும் கொண்டுவந்து இயக்குகிறது. குறிப்பாக, தோஸ்த் வண்டியின் உற்பத்திக்காக எந்தவித கொடூரத்தை இழைக்கவும் லேலாண்டு தயாராக உள்ளது. தோஸ்த் என்பது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் முகமாகவும் லாபவெறியின் அடையாளமாகவும் உள்ளது. ஒரு பக்கம் சந்தையில் தனது வண்டிகள் விற்கவில்லை என்று ஒப்பாரி வைக்கும் லேலாண்டு நிர்வாகம், மற்றொருபுறம் ஆண்டுக்கு 1,10,000 வண்டிகளை உற்பத்தி செய்து குவிக்கிறது. மேலும், ஆட்குறைப்பு, லேஆப் போன்றவற்றை செய்து கொண்டே விண்ணை முட்டும் அளவிற்கு உற்பத்தியை உயர்த்தியுள்ளதே அதன் அடக்குமுறைகள் எந்த அளவிற்கு கொடூரமானதாக இருக்கும் என்பதற்கான நிரூபணங்கள்!

தோஸ்த் உற்பத்தியின் மூலம் லேலாண்டு நிறுவனம் செலுத்திவரும் அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு. கொண்டுவந்துள்ள சிறு வெளியீடின் முன் அட்டை.

hosur-ndlf-noice

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஒசூர்
செல் – 97880 11784

  1. These Management Executives are not even able to close a “HOLE” in side a factory but they are talking about the low production issues and workers are only responsible for that.

    My best wishes for “capitalism”. It will finished in side the Hole and workers will fill up that capitalism hole very soon.

  2. இது முற்றிலும் மிகைப்படுதப்பாட்ட பதிவு. ஒருதலைப் பட்ச்சமான பதிவு. வேண்டும் என்றே அசோக் லேலன்டு தொழிற்சாலை பெயரை களங்கப் படுத்தும் முயற்சி. அவ்வளவே.

    • கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களில் எது மிகையானது என்று சுட்டிக்காட்ட வேண்டும், அல்லது வேறு ஆதாரங்களையாவகது முன் வைத்து மறுத்துப்பேச வேண்டும்.அதை விடுத்துவிட்டு லேலண்டு அதிகாரி மாதரிப் பேசக்கூடாது திருவாளர் பாலா அவர்களே!

    • //இது முற்றிலும் மிகைப்படுதப்பட்ட பதிவு. ஒருதலைப் பட்ச்சமான பதிவு. வேண்டும் என்றே அசோக் லேலன்டு தொழிற்சாலை பெயரை களங்கப் படுத்தும் முயற்சி. அவ்வளவே.//
      //லேலாண்டு நிர்வாகம் இவ்வாலையில் பெயின்ட் பிரிவில் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் இயந்திரத்திற்கு அருகில் 6 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளத்தை தோண்டி இருந்தது. இதனை மூட வேண்டும் என அப்பிரிவில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆலை நிர்வாகத்திடம் கோரி ஆலை நிர்வாகமும் அதனை மூட ஏற்றுக் கொண்டது. ஆனால், அதனை மூடுவதற்கான முயற்சியில் அதிகாரிகள் இறங்கவில்லை.//
      முதல் குற்றவாளி இதற்குப் பொறுப்பான ஆலை நிர்வாக அதிகாரிகளே! இவர்களை யார் தண்டிப்பது? இவர்களை யார் சஸ்பெண்டு செய்வது? இவர்களுக்கு யார் சார்ஜ்சீட் கொடுப்பது? இதுதான் ஒருபக்க சார்புடையது. திரு பாலா அவர்களே!

  3. ஒரு காலத்தில் ஒசூர் லேலண்ட் தொழிலாளர்கள் (பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்) தனக்கான பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல் பிற ஆலைத் தொழிலாளர் பிரச்சினைகளாகட்டும், அல்லது இதர மக்கள் பிரச்சினைகளாகட்டும் முன்னணியில் நிற்கும் தொழிலாளர்களுக்கேயுரிய தலைமைப் பண்பை பெற்றிருந்தார்கள். குசேலன், மைக்கேல்,சி.ஐ.டி.யூ. என்ற நிர்வாக வளர்ப்புகள் அன்றைக்கும் தொழிற்சங்கத தலைமையில் இருந்தனர் என்றாலும் லேலண்ட் தொழிலாளர்களுக்கென்று ஒரு சமூக அந்தஸ்த்தை சொந்தமாகக் கொண்டிருந்தார்கள். இயற்கையின் தட்ப வெப்ப மாறுதலுக்கேற்ப தம்மை தயார்படுத்திக்கொள்ளாத உயிரினம் எவ்வாறு தனது இருத்தலை இல்லாததாக்குகிறதோ அது போல் மாறிவரும் உலக மூலதன மேலாதிக்கச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி நிர்வாகம் தொடுக்கும் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கையறு பக்தனாக சுருங்கிப்போயிருக்கிறார்கள் லேலண்ட் தொழிலாளர்கள். மேற்கண்ட நிர்வாக வளர்ப்புகளின் பங்களிப்போடு லேலண்ட் நிர்வாகத்தின் இந்த பதினைந்து ஆண்டுகால ‘சாதனை’ என்பது மணற்வீட்டிற்கு ஒப்பானது என்பதுதான் வரலாற்று அனுபவம். இதை சமகால நடைமுறையில் தமிழ் நாட்டின் ஆங்காங்கே மெய்பித்து வருகிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
    அன்று உள்நாட்டு சந்தையை முதன்மையாகக் கொண்டு லேலண்ட் நிறுவனம் உற்பத்தி செய்தது. இன்று உலக சந்தையை முதன்மையாகக் கொண்டு உற்பத்தி செய்கிறது. அன்று லாபம். இன்று லாப வெறி. அன்று சதவீத (பி.ஐ.)அடிப்படையில் உற்பத்தி. இன்று நிமிட அடிப்படையில் (எ.எல்.டி.எஸ்.) உற்பத்தி. அன்று தொழிற் சங்கம், தொழிற்சங்க சட்டம் மதிக்கப்பட்டது. இன்று மிதிக்கப்படுகிறது. அன்று லேஆஃப் என்பது சட்டப் பூர்வமானது. இன்று லேஆஃப் என்பது சட்ட விரோதமானது. அன்று நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை அதிகம். இன்று காண்ட்ராக் தொழிலாளர்கள் அதிகம். அன்று தொழிலாளர்களுக்கு ஒரு கவுரவமான பணிச் சூழல் இருந்தது. இன்று உயிருக்கே உத்திரவாதமில்லை. அன்று…. இன்று…. இனி லேலண்ட் தொழிலாளர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் நாம் யார் தலைமையில் அணி திரள வேண்டும் என்று?

    • //இனி லேலண்ட் தொழிலாளர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் நாம் யார் தலைமையில் அணி திரள வேண்டும் என்று?// தமிழ் நாட்டின் ஓட்டுக்கட்சிகள் அணைத்திலும் நாம் காண்கின்ற “”துரோகத்தனமான தலைமைகள் மட்டுமே தொழிற்சங்கங்களாக உள்ள நிலமையில் எந்த தலைமையை தேர்ந்தெடுப்பது,…..,

      • தொழிலாளர்கள் தனித்தனியாகப் பிரிந்து “நானாகவோ” அல்லது ஏதாவது ஒரு “நானை” (ஏதாவது ஒரு தலைவரை) மட்டும் நம்பியிருக்கும் பலகீனத்தை தூக்கியெறிந்து, “நாம்” என்ற பலத்தை அறியச்செய்வதன் மூலம் மட்டுமே தமக்கான உரிமையை பெறமுடியும் என்ற வழிகாட்டலைக் கொண்ட பு.ஜ.தொ.மு. போன்ற தலைமையில் தொழிலாளர்கள் அணிதிரள்வதுதான் நம்மைப் கவுரவமாகப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி.
        அதாவது தொழிலாளர்கள் தமக்குள் சங்கமாகத் திரண்டு கொள்வதை “தொழிலாளர் சங்கம்” என்று அழைத்துக்கொள்வதில்லை. அதன் பொருத்தமான பெயர் “தொழிற்சங்கம்” என்பதுதான். இதன் பொருள், தொழிற்சாலையின் மிகப் பிரமாண்டமான மூலதனத்தை “தனது சொத்து” என ஒரு முதலாளி உரிமை கொண்டாடும் போது, அந்த மூலதனத்தை உருவாக்கிய மூலவர்களான தொழிலாளர்கள் தமது வேலையைப் பாதுகாத்துக்கொள்ளவும், உத்தரவாதப்படுத்திக் கொள்ளவும் உரிமை உண்டு. இந்த உரிமையை உறுதி செய்வதனால்தான் இதை தொழிற்சங்கம் என்கிறோம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தொழிற்சாலைக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள உறவின் உரிமையை உத்தரவாதப் படுத்துவதனால்தான் இதை “தொழிற்சங்கம்” என்கிறோம்.
        தொழிற்சங்கத்தின் இந்த உள்ளடக்கத்தை கெடாசி விட்டுத்தான் எல்லா ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்களும் பிழைப்பு நடத்துகின்றன.

  4. முள்ளிவாய்க்காலில் இந்திய அரசின் உதவியுடன் சிங்கள ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்ட ஈழத்தமிழர்களைப் போல இங்கு அசோக் லேலண்டில் குசேலன், மைக்கேல், மற்றும் சி.ஐ.டி.யூ. வின் உதவியுடன் லேலண்ட் கார்பரேட்டால் தொழிலாளர்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர் என்றால் அது மிகையல்ல. அங்கு ஈழத் தமிழர்கள் எப்படி விடுதலைக்காக்காக பயிற்றுவிக்கப்படவில்லையோ, அதுபோல் இங்கு தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடப் பயிற்றுவிக்கப்படவில்லை என்பதில்தான் கார்ப்பரேட் வளர்ப்புகளான குசேலன், மைக்கேல், மற்றும் சி.ஐ.டி.யூ.வின் பங்கு உள்ளது.
    என்றாலும் இம்மூவரையும் ஒதுக்கிவிட்டு நிர்வாகத்தை எதிர்கொள்ளும் முனைப்போடு இம்மூன்று அமைப்பை விட்டு தொழிலாளர்கள் வெளியேறி வரும் வேளையில் “இந்த இரண்டு தலைவர்களைத் தாண்டி வேறு தலைமையைக் கொண்டுவருவதை நாங்கள் அணுமதிக்கமாட்டோம்” என்று தமது அல்லக்கைகள் மூலம் தெரிவித்து வருகிறது நிர்வாகம்.

    • //இந்த
      இரண்டு தலைவர்களைத்
      தாண்டி வேறு
      தலைமையைக்
      கொண்டுவருவதை
      நாங்கள்
      அணுமதிக்கமாட்டோம்”
      என்று தமது
      அல்லக்கைகள் மூலம்
      தெரிவித்து வருகிறது
      நிர்வாகம்.// தகுந்த ஆதாரமற்ற அனுமானமான புலம்பல்.உமது மற்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.

      • எந்த ஒரு கார்ப்பரேட் நிர்வாகமும் தனது அண்டர் கிரவுண்டு வேலைகளை நேர்வழியில் அறிவித்துவிட்டு செய்வதில்லை சுப்புராஜ் அவர்களே!

        • //இந்த இரண்டு தலைவர்களைத் தாண்டி வேறு தலைமையைக் கொண்டுவருவதை நாங்கள் அணுமதிக்கமாட்டோம்” என்று தமது அல்லக்கைகள் மூலம் தெரிவித்து வருகிறது நிர்வாகம்.//
          //எந்த ஒரு கார்ப்பரேட் நிர்வாகமும் தனது அண்டர் கிரவுண்டு வேலைகளை நேர்வழியில் அறிவித்துவிட்டு செய்வதில்லை சுப்புராஜ் அவர்களே! //
          லேலாண்டு யூனிட்-1 ல் இதே பு.ஜ.தொ.க வை சேர்ந்த பரசுராமன் மூன்றாவது தலைமையாக தேர்தலில் போட்டியிட்டு பெரும்பாண்மை தொழிலாளர்கள் ஓட்டுப்போடாததால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இன்னொருவர் குமார் என்ற சாதாரண சீனியர் தொழிலாளி மூன்றாவது தலைவராக போட்டியிட்டுவருகிறார். இந்த ஆதாரம் தங்களுக்குப் போதுமானதா? தயவுசெய்து லேலாண்டு அதிகாரியின் கூற்றாக இதனை கருதிடவேண்டாம்.

          • //எந்த ஒரு கார்ப்பரேட் நிர்வாகமும் தனது அண்டர் கிரவுண்டு வேலைகளை நேர்வழியில் அறிவித்துவிட்டு செய்வதில்லை சுப்புராஜ் அவர்களே! // என்று கார்ப்பரேட்டின் வில்லத்தனத்தை சுட்டிக்காட்டினால், நீங்கள் //”லேலாண்டு யூனிட்-1 ல் இதே பு.ஜ.தொ.க வை சேர்ந்த பரசுராமன் மூன்றாவது தலைமையாக தேர்தலில் போட்டியிட்டு பெரும்பாண்மை தொழிலாளர்கள் ஓட்டுப்போடாததால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இன்னொருவர் குமார் என்ற சாதாரண சீனியர் தொழிலாளி மூன்றாவது தலைவராக போட்டியிட்டுவருகிறார். இந்த ஆதாரம் தங்களுக்குப் போதுமானதா?”// என்று பதிலளிக்கிறீர்கள். புரியவில்லையே?
            என்றாலும் நீங்கள் பரசுராமன் என்ற பெயரை தெரிந்து வைத்திருக்கிற அளவுக்கு அவர் சார்ந்த அமைப்பு கொள்கை பற்றி தெரிந்து வைத்திருக்கவில்லை. உங்களது மேற்கண்ட பதிலும், “பு.ஜ.தொ.மு.” என்ற அமைப்புப் பெயரை பு.ஜ.தொ.க. என்று உச்சரிப்பதிலிருந்தும் தெரிகிறது.

            • மணிகண்டன் ; //இந்த இரண்டு தலைவர்களைத் தாண்டி வேறு தலைமையைக் கொண்டுவருவதை நாங்கள் அணுமதிக்கமாட்டோம்” என்று தமது அல்லக்கைகள் மூலம் தெரிவித்து வருகிறது நிர்வாகம்.//
              சுப்புராஜ் ; // தகுந்த ஆதாரமற்ற அனுமானமான புலம்பல்.உமது மற்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறேன்.//
              மணிகண்டன் ; //எந்த ஒரு கார்ப்பரேட் நிர்வாகமும் தனது அண்டர் கிரவுண்டு வேலைகளை நேர்வழியில் அறிவித்துவிட்டு செய்வதில்லை சுப்புராஜ் அவர்களே! //
              சுப்புராஜ் ; //லேலாண்டு யூனிட்-1 ல் இதே பு.ஜ.தொ.க வை சேர்ந்த பரசுராமன் மூன்றாவது தலைமையாக தேர்தலில் போட்டியிட்டு பெரும்பாண்மை தொழிலாளர்கள் ஓட்டுப்போடாததால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இன்னொருவர் குமார் என்ற சாதாரண சீனியர் தொழிலாளி மூன்றாவது தலைவராக போட்டியிட்டுவருகிறார். இந்த ஆதாரம் தங்களுக்குப் போதுமானதா?//
              மணிகண்டன் ; //எந்த ஒரு கார்ப்பரேட் நிர்வாகமும் தனது அண்டர் கிரவுண்டு வேலைகளை நேர்வழியில் அறிவித்துவிட்டு செய்வதில்லை சுப்புராஜ் அவர்களே! // என்று கார்ப்பரேட்டின் வில்லத்தனத்தை சுட்டிக்காட்டினால், நீங்கள் ’’………’’.. என்று பதிலளிக்கிறீர்கள். புரியவில்லையே?
              சுப்புராஜ் ; மூன்றாவது தலைவரை கொண்டுவருவதற்கு நிர்வாகம் ஒன்னும் ஏதும் தடைவிதிக்கவில்லையே என்பதுதான் எனது கருத்து. மாறாக தொழிலாளர்கள் இதற்காக கருத்தின்றி உள்ளனர். நமது தமிழக அரிசியலில் கோலோச்சும் இரண்டு பெரும் திராவிட கட்சிகளின் நிலமையைபோலவே லேலாண்டிலும் நிலமை உள்ளது. இது ஒரு துரதிஸ்டமான கையறு நிலமையே.

              • //சுப்புராஜ் ; மூன்றாவது தலைவரை கொண்டுவருவதற்கு நிர்வாகம் ஒன்னும் ஏதும் தடைவிதிக்கவில்லையே என்பதுதான் எனது கருத்து. மாறாக தொழிலாளர்கள் இதற்காக கருத்தின்றி உள்ளனர். நமது தமிழக அரிசியலில் கோலோச்சும் இரண்டு பெரும் திராவிட கட்சிகளின் நிலமையைபோலவே லேலாண்டிலும் நிலமை உள்ளது. இது ஒரு துரதிஸ்டமான கையறு நிலமையே.//
                மூன்றாவது தலைவரை கொண்டுவருவதற்கு நிர்வாகம் அதிகாரப்பூர்வ தடை விதித்துவிட்டதாக நானும் சொல்லவில்லை. ஆனால் தனது எடுப்புகளான குசேலன், மைக்கேல்- சி.ஐ.டி.யூ. தலைமையை நிர்வாகம் இழக்கத் தாயாராக இல்லை என்பதால் அது மூன்றாவது தலைமையை விரும்பவில்லை. விரும்பாது என்றுதான் சொன்னேன்.

  5. இது பல முக்கிய விடயங்களை உணர்த்தும் கட்டுரையாகும். பெரிய கம்பெனீகளே பாதுகாப்பு (Safety) என்பதை வெறும் பேச்சளவில் மட்டுமே வைத்துள்ளன. கீழே விழ ஏதுவான எந்த ஒரு இடத்தையும் சுற்றிலும் barricade வைத்து தடுக்க வேண்டியது மிக முக்கிய கடமை ஆகும்.

  6. போதுமான இலாபம் இருந்தால் மூலதனம் மிகவும் தைரியம் கொள்கிறது. 20% இலாபம் நிச்சயமான ஆர்வத்தை ஏற்படுத்துபம். 50% இலாபத்தில் அது ஆணவம் கொள்ளும் 100% இலாபம் இருத்தால்…அனைத்துண்ணி சட்னங்களையும் காலில் போட்டுக்கொடுத்தல் மிதிக்கும். அதுவே 300% இலாபமெனில் எந்த மகா பாவத்தையும் செய்யத்தயங்காது – மார்க்ஸின் மூலதனம் தொகுதி-1 லிருந்து.,…

    • //போதுமான இலாபம் இருந்தால் மூலதனம் மிகவும் தைரியம் கொள்கிறது. 20% இலாபம் நிச்சயமான ஆர்வத்தை ஏற்படுத்துபம். 50% இலாபத்தில் அது ஆணவம் கொள்ளும் 100% இலாபம் இருத்தால்…அனைத்துண்ணி சட்னங்களையும் காலில் போட்டுக்கொடுத்தல் மிதிக்கும். அதுவே 300% இலாபமெனில் எந்த மகா பாவத்தையும் செய்யத்தயங்காது – மார்க்ஸின் மூலதனம் தொகுதி-1 லிருந்து.,… //
      மாமேதை காரல்மார்கஸ்தான் உண்மையான ஞானி. தீர்க்கதரிசி! எழுத்துப்பிழை உள்ளது -அனைத்து சட்டங்களையும் காலில் போட்டு மிதிக்கும் என்றவாறு இருக்கவேண்டும்.சரிதானே திரு.சுடலை!பொறுத்தமான மேற்கோள்! இந்த பேருண்மையை தொழிலாளர்கள் உணரவேண்டும்.

      • எழுத்துப்பிழையை உணர்த்தியமைக்கு நன்றி! லேலாண்டு நிர்வாகம் 300% லாபத்தை எட்டும் முயற்சியில் ஒரு பன்னாட்டு கம்பெனியாக வளரித்தடி துடிக்கிறது. பரசுராமன் இன்று வெளியே. அனைத்து நிரந்தரம் தொழிலாளர்களும் நாளை வெளியே துரத்தப்பட உள்ளனர். இதனை நோக்கித்தான் சங்கத்தை பகடையாக பயன்படுத்தி காய்நகர்த்தப்பட்டுவருகிறது.

  7. //ஜெயகாந்தன் மனம் புண்படும் படி அவரது குடும்பத்தை பற்றி தவறாக பரசுராமன் பேசியதாகவும் இதனால் பரசுராமனுக்கு விளக்கம் கோருதல் மற்றும் இடைநீக்கம் செய்வதாகவும் குறிப்பிட்டு அதிகாரிகள் சிலர் ஒரு கடிதத்தை பரசுராமனிடம் கொடுத்தனர். இதில் அதிகாரிக்கு கீழ்படிய மறுத்தது, உற்பத்தி நேரத்தில் இடத்தை விட்டு நகர்ந்தது, சூப்பர்வைசர் அனுமதி பெறாமல் சென்றது, ஆலைக்குள் ஒழுங்கு கெடும் வகையில் கலவர மனப்பான்மையுடன் நடந்து கொண்டது, ஆகிய குற்றங்களுக்காக இடைநீக்கம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது . . //
    இதைவிட கேவலமாக ____________ மகனே என்றெல்லாம்கூட அதிகாரிகளை சிலர் பேசியுள்ளனர். அவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை என்றால் அவர்கள் நிர்வாகத்தின் விசுவாசிகளாக அடியாளாக இன்னும் தொடர்கின்றனர். என்னா சட்டமடா சாமி, போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும்.

  8. // பயிற்சி தொழிலாளி தினேஷ் அப்பள்ளத்தில் தலைகுப்பற விழுந்தார். விழுந்தவர் உடனடியாக மயக்கமடைந்தார். உடன் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓடி சென்று அந்த தொழிலாளியை பள்ளத்தில் இருந்து தூக்கி மேலே எடுத்து அவருக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த, அப்பிரிவின் மேலாளர் ஜெயகாந்தன் என்பவர், நிலைமையை புரிந்து கொண்டு “இங்கு என்ன கூட்டம். உடனே எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க. நான் பார்த்துக்கறேன்” என்று தொழிலாளர்களை விரட்டத் தொடங்கினார்.இதனால் ஆத்திரமுற்ற தொழிலாளர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தோழர்.பரசுராமன், ஜெயகாந்தனின் இந்த செயலைக் கண்டித்தார். //
    பரசுராமனின் இந்த செயலால் அந்த ஆறு அடி சவப்பள்ளம் உடன் மூடப்பட்டுவிட்டது. ஆனால், இதற்கு முன்னர் அந்த பகுதித் தொழிலாளர்கள் பலரும் மற்றும் சங்க நிர்வாகிகளும் கண்டித்திருக்கின்றனர். பல நியாய வாதங்களை அடுக்கி வாதாடியும் வந்துள்ளனர். ஆனால் பள்ளம் மூடப்படவில்லை. இங்கே பரசுராமன் பாதிக்கப்பட்டு வெளியே இருக்கிறார்.தொழிலாளர்கள் உள்ளே பாதுகாப்பாக வேலைசெய்துவருகின்றனர். மாருதி ஆலையிலும் போராடிய தொழிலாளர்கள் இன்று ஆலைக்கு வெளியே சிறையில் உள்ளனர். ஆனால் போராட்டத்தின் பலனாக இனி நிரந்திரத் தொழிலாளியாகத்தான் வேலைக்கு எடுப்பேன். காண்ட்ராக்ட் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில்லை என அறிவித்தது அந்த ஆலை நிர்வாகம்.போராடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கூடும்போது இதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து கணக்குத் தீர்த்து தீர்ப்பை எழுதும் எமது தொழிலாளிவர்க்கம்.

Leave a Reply to suppuraj பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க