Thursday, May 30, 2024
முகப்புசெய்திபோராட்டக் களத்தில் புரட்சிகர அமைப்புகள் - 21/01/2014

போராட்டக் களத்தில் புரட்சிகர அமைப்புகள் – 21/01/2014

-

1. பாகலூர்

பாகலூர் சர்க்கிள் பேரிகை தேசிய நெடுஞ்சாலையில் பழுது! மண், தூசியால் மக்கள் மூச்சுத் திணறல்!

கண்டன தெருமுனைக்கூட்டம்.

ங்கநாற்கர சாலைகள் போடப்பட்டதால் நாடு முன்னேறி விட்டதாக சுயதம்பட்டம் அடித்து வரும் இந்த வேளையில்தான் சாலைகளை பராமரிக்காமல் போக்குவரத்தை முறைப்படுத்தாமல் தினம் தோறும் விபத்தால் ஏற்படும் சாவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் விபத்துகளில் முதல் மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கே, ஓசூர் தாலுக்காவை சேர்ந்த பாகலூரில் கேட்பாரற்று கிடக்கும் பழுதான சாலையில்தான் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, காவல் நிலையம், தனியார் மருத்துவமனைகள், ஜூஸ் பேக்டரி உள்ளிட்ட சிறு வியாபார கடைகளும் உள்ளன. மேலும், பள்ளி மாணவர்களின் சாப்பாட்டில் மண், தூசிகள் படிவதும் வாகன போக்குவரத்தின் போது தூசிகள் கண்களில் பட்டு எரிச்சலையும், சுவாசிக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பல்வேறு நோய்களுக்கு தள்ளப்படுகின்றார்கள்.

இங்கிருக்கும் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களின் அவல நிலையை சொல்லி மாளாது. மருத்துவர்கள் சரிவர இருப்பதில்லை. நோய்களுக்கான மருந்துகள் கிடைப்பதில்லை. தனியார் மருத்துவமனையில் செலவழிக்க பணம் இல்லாமல் இங்கு வந்தால் சாலை தூசிகளால் பல்வேறு தொற்றுநோயுடன் வெளியேற வேண்டிய அவலம் உள்ளது.

இந்நிலையில் இங்கு செயல்படும் புரட்சிகர அமைப்புகளான புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி மற்றும் விவசாயகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பாக துண்டறிக்கை அச்சிட்டும், போஸ்டர்கள் அடித்து பரவலாக ஒட்டியும் தெருமுனைப் பிரச்சாரம் செய்தும் மக்களை தட்டியெழுப்பிவருகின்றனர். அந்த வகையில் அதன் தொடர்சியாக கடந்த 02.01.2014 அன்று மாலை பாகலூர் சர்க்கிளில் கண்டன தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இத்தெருமுனைக்கூட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர் ஜெயராமன் தலைமைத் தாங்கினார். பாகலூர் பகுதி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் நாகராஜ், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நன்றியுரையாற்றினார். திரளான மக்கள் கலந்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்துச் சென்றனர்.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

2. பட்டுக்கோட்டை

ட்டுக்கோட்டை தாலுக்கா கடைமடை பாசன விவசாய பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் 09.01.2014 அன்று வியாழன் காலை 11 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை வறட்சி நிவாரணம்

தகவல் :
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பட்டுக்கோட்டை

3. பல்லாவரம், சென்னை

இடியாய் இறங்குகிறது,பெட்ரோல், கேஸ், பால்விலை உயர்வு! இனியும் பொறுப்பது நமக்கு இழிவு! என்ற முழக்கத்தோடு பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 11.1.2014 அன்று சென்னை பல்லாவரம் பகுதியில் நடத்தப்பட்டது.

பெண்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் தோழர் சித்ரா தனது தலைமை உரையில், “கடுமையான விலைவாசி உயர்வினால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சத்தான பாலை போதுமான அளவுக்கு கொடுக்க முடியாமல் தவிர்கின்றனர். குடும்ப செலவுகளை பராமரிக்கும் பெண்கள் தங்கள் தேவைகளை சுருக்கிக் கொள்கின்றனர்” என பேசினார்.

சென்னை பெ.வி.மு செயலர் தோழர் உஷா தனது உரையில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கச் சென்ற பெ.வி.மு தோழரை காவல்துறை மதிக்காமல் நடந்து கொண்டதை கண்டித்தார்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வினால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் எகிறுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிப்படைகிறார்கள்.

கணவன்மார்கள் சம்பாதித்த பணத்தை எல்லாம் டாஸ்மார்க்கில் இழக்க குடும்ப பாரம் அனைத்தும் பெண்கள் தலையில் தான் விழுகிறது என பேசினார்.

கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன், “சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் டீசல் விலையை பெட்ரோலிய அமைச்சரகம் தான் முடிவு எடுக்கும். அரசு தன்னுடைய தன்னுடைய பொறுப்பிலிருந்து கழன்று கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் விலையை தீர்மானிக்க விட்டு விட்டன. அவை மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன.

கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஆதார் அட்டை தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மத்திய அரசும் அதை ஏற்கிறது. ஆனால் என LPG நிறுவனங்கள் ஆதார் எண் அவசியம் என்கின்றன. இது மக்களை முட்டாளாக்கும் வேலை

மங்கல்யான் அனுப்பி செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என சோதனை செய்கிறார்கள். இங்கு காசு கொடுத்து தண்ணீர் வாங்கி அவதிப்படுகிறோம். ஆனால் நிதியமைச்சர் சிதம்பரமோ மக்கள் 15 ரூபாய்க்கு தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர் என பேசுவது வக்கிரமானது!

விலைவாசி உயர்வுக்கு தனியார்மயமே காரணம்”

என மக்களுக்கு புரியும் படி எளிமையாக பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் உற்சாகமாக கலந்து கொண்டனர். வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் பெண்கள், மாணவ, மாணவிகள், வியாபாரிகள் என பரவலாக ஆர்ப்பாட்டத்தை கவனித்தனர்.

முழக்கங்கள் :

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பெட்ரோல்- டீசல் விலை உயர்வு!
மக்கள் கழுத்தில் சுருக்குக்கயிறு!

சமையல் எரிவாயு விலை உயர்வு!
கேட்டாலே பற்றி எரியுது மக்கள் வயிறு!

பால் விலை பலமடங்கு உயர்வு!
பச்சிளம் குழந்தைகள் பட்டினியாகுது!

விசம்போல் உயரும் விலைவாசி உயர்வுக்கு
தனியாமயமே காரணம் பாரு!

அம்பானி கும்பலின் கல்லா நிரப்ப
கிருஷ்ணா – கோதாவரி எண்ணெய்ப்படுக்கை!

சர்வதேச சந்தை விலையைக் காட்டி
எரிபொருட்களின் விலையைக் கூட்டி
அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும்
மத்திய – மாநில அரசுகளின்
மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!

பால்விலையை உயர்த்தி பச்சிளங் குழந்தைகளை
பட்டினியில் தள்ளுது பாசிச ஜெயா!
ரிலையன்ஸ் அம்பானியின் கொள்ளைக்கு
கிருஷ்ணா  – கோதாவரி எண்ணெய்ப்படுகை!

இயற்கை எரிவாயுவை தானம் செய்த
காங்கிரசு – பி.ஜே.பி கும்பலை
மக்கள் மத்தியில் தோலுரிப்போம்!

உழைக்கும் மக்களை கண்காணிக்கும்
கைரேகை, கண்விழி பதிவு செய்யும்
ஆதார் அடையாள அட்டையைப் புறக்கணிப்போம்!

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு பிறகும்
ஆதார் அடையாள அட்டையை
வலியுறுத்தும் எண்ணெய் நிறுவனங்களின்
மக்கள் விரோத செயல்களை எதிர்ப்போம்!

பெட்ரோல், கேஸ், பால்விலை உயர்வு
மக்கள் மீதான தாக்குதலே!

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கின்ற
மறுகாலனியாக்கக் கொள்கையை முறியடிப்போம்!

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

  1. மக்கள் உள்ளங்களில் மறுமலர்ச்சி உண்டாக்கும் போதுதான் உண்மையான மகத்தான பணி செய்பவர்க்கு கிடைக்கின்ற பெரும்பரிசு வறுமைதான்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க