Monday, August 15, 2022
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் தாது மணல் கொள்ளை, அணு உலை விரட்ட ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!

தாது மணல் கொள்ளை, அணு உலை விரட்ட ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!

-

 • கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் ரத்து செய்!
 • தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்!
 • தாதுமணல் குவாரிகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடு!

ன்பார்ந்த மக்களே!

அணு உலைப் போராட்டம்
அணு உலைக்கு எதிராகவும் தாது மணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

தாது மணல் கொள்ளை, கூடங்குளம் அணு உலை ஆகிய இரு பிரச்சனைகளும் தூத்துக்குடி, நெல்லை கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நேரடியாக எதிர் கொண்டு வரும் மிகப்பெரும் அபாயங்கள். இவ்வபாயங்களை ஒற்றுமையோடு எதிர்கொண்டு, முறியடிக்கா விட்டால் கடற்கரை மக்களும், சந்ததிகளும் காலம், காலமாய் வாழ்ந்து வரும் கடற்கரையை விட்டு அகதிகள் போல் விரைவில் வெளியேற நேரிடும்.

அணு உலைக்கு எதிராகவும் தாது மணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். அப்போராட்டம் நியாயமானது. மக்களுடைய வாழ்வை, வாழ்வாதாரங்களை அழித்து வருகிறது. இவற்றை எல்லாம் நன்றாகத் தெரிந்து இருந்தும் மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலனைப் புறக்கணித்துப் பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்குத் துணை போகின்றன.

அணு உலைக்கு எதிராகப் போராடி வருகிற மக்கள் மீது எண்ணற்ற பொய் வழக்குகளை போட்டுள்ளது அரசு.

 • அந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
 • தாது மணல் கொள்ளையன் வைகுண்டராசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
 • அனைத்து தாது மணல் குவாரிகளையும் நிரந்தரமாக மூட வேண்டும்.

போன்ற கோரிக்கைகளுக்கு ஒரு துளி கூட அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை. மக்களை துச்சமாக நினைத்து செயல்படுகிறது.

இவ்வாறான சூழலில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. வழக்கம் போல் அனைத்துக் கட்சிகளும் ஓட்டுப் பிச்சை கேட்க மக்கள் காவலனாய் அவதாரம் எடுத்து வர இருக்கிறார்கள். அவ்வாறு வருபவர்கள் தேர்தல் களத்தில் தாதுமணல், அணு உலைப் பிரச்சனைகளை முன்னிறுத்திப் பேச, செயல்பட மாட்டார்கள் அல்லது பொய்யான வாக்குறுதிகளை அளித்து நம்மை நம்பச் சொல்வார்கள் என்பது நிச்சயமான நிலையில், கடந்த காலங்களில் ஏமாந்தது போல் இத்திருடர்களிடம் மீண்டும் ஏமாறப் போகிறோமா? அல்லது விழிப்புடன் இருந்து இத்திருடர்களை விரட்டியடித்து, போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கப் போகிறோமா? என்பதே நம்முன் உள்ள கேள்வி.

சீட், பணத்தை மையப்படுத்தும் கேவலமான கூட்டணிகள்

வைகோ
இந்து மதவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பி.ஜே.பி.யுடன் கூட்டணிப்பேச்சு நடத்தி வருகிறார் இடிந்தகரையில் ஆவேச முழக்கமிட்ட கோபால்சாமி.

மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகள் ஆயிரக்கணக்கில் இருக்க, தேர்தல் வருவதற்கு எட்டு மாதங்கள் முன்பாகவே ஓட்டுச் சீட்டுக் கட்சிகள் நடத்தி வரும் பிரச்சாரங்கள், ஊடக விளம்பரங்கள், கூட்டணி பேரங்கள், கருத்துக் கணிப்புகள் அருவெறுக்கத்தக்கதாக உள்ளன. எங்கள் கொள்கைக்கு வாக்களியுங்கள் என்று கோராமல், கொள்கை தொடர்பான விவாதங்கள் நடத்தாமல், மோடி அலை, ராகுல் கோபம், விஜயகாந்தின் மனைவி-மச்சான் சொல்வதென்ன? எத்தனை கோடி, எத்தனை சீட், நடிகர் விஜய், விஷால் ஆம் ஆத்மியில் இணைவார்களா? என்று தேர்தல் கிசுகிசுக்களே கொள்கை தொடர்பான விவாதங்கள் போல் நடந்து மக்களை முட்டாளாக்கும் வகையில் கூத்துகளாக அரங்கேறி வருகின்றன.

காங்கிரசு, பாரதீய ஜனதா, அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தாது மணல் கொள்ளையின் கைக்கூலிகள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அணு உலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற கட்சிகளாவது தேர்தல் கூட்டணிக்கு கடலோர மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்துமா? என்றால் அதுவும் இல்லை, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும், கிருஸ்துவ, இசுலாமிய, தலித் மக்களையும் அகதிகளாக்குவதையே தமது கொள்கையாக வைத்திருக்கும் இந்து மதவெறி பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் பிரிவான பி.ஜே.பி.யுடன் கூட்டணிப்பேச்சு நடத்தி வருகிறார் இடிந்தகரையில் ஆவேச முழக்கமிட்ட கோபால்சாமி. வைகோவைப் பின் தொடர்கிறார் வன்னிய சாதி வெறியர் இராமதாசு.”கொள்கைக் குன்று” விஜயகாந்திடம், கருணாநிதிக்காத் தூது போகிறார் திருமா. இடிந்தகரையில் மறுவீட்டு விருந்து சாப்பிட்ட சீமானோ, மறுநாளே வைகுண்டராஜன் வீட்டுத் திருமணத்தில் கூச்ச நாச்சமின்றி விருந்து உண்கிறார்.

வைகுண்டராஜன்
அணு உலைக்கு எதிராகப் பேசும் இவர்கள் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராக கள்ள மௌனம் சாதிப்பதிலிருந்தே இவர்களின் இரட்டை வேடத்தை அறியலாம்.

நமக்கெல்லாம் அருவெறுப்பாய் தோன்றும் இச்செயல்கள், இவர்களுக்கு இயல்பாய் உள்ளது. மக்கள் விரோதிகளோடு கைகோர்த்துள்ள இவர்கள் மக்களுக்காக எப்படி போராடுவார்கள்? அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் திரண்ட மக்களைப் பயன்படுத்தி தங்களுக்கு சுய விளம்பரம் தேடிக் கொண்ட சாமர்த்தியசாலிகள் என்று இவர்களைச் சொல்லலாம். அணு உலைக்கு எதிராகப் பேசும் இவர்கள் தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனுக்கு எதிராக கள்ள மௌனம் சாதிப்பதிலிருந்தே இவர்களின் இரட்டை வேடத்தை அறியலாம். தேர்தல் கூட்டணியில் அதிக சீட்கள் பெற பல கோடி செலவில் மாநாடு நடத்தும் வைகோ, இராமதாசு, திருமா போன்றோர், ஈழப் பிரச்சனைக்கோ, அணு உலைப் பிரச்சனைக்கோ மாநாடு நடத்தி லட்சக்கணக்கானோரைத் திரட்டிப் போராடியதில்லை.

சீரழிந்த ஓட்டுச் சீட்டு அரசியலை சீர் செய்யும் அவதாரமா ஆம் ஆத்மி?

ஊழல் ஓட்டுக் கட்சிகளுக்கு எதிரான மாற்றாக அரவிந்த் கேஜ்ரிவால் “ஆம் ஆத்மி கட்சி” முன்னிறுத்தப்படுகிறது. உண்மையில் வடிவேலு வார்த்தைகளில் சொன்னால் ஆம் ஆத்மி கட்சியை “டம்மி பீசு” என்று சொல்லலாம்.

நிலக்கரி இரும்புத் தாது, தாதுமணல் உள்ளிட்ட நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் இலாப வெறியோடு அரசியல்வாதிகள், அதிகாரிகள் துணையோடு சூறையாடி பலகோடி மக்களைத் தற்கொலைக்குள் தள்ளிய இரக்கமற்ற கார்ப்பரேட் முதலாளிகளைப் பார்த்து “ஊழலுக்குப் பலியானவர்கள்” என்கிறார் கேஜ்ரிவால். “காஷ்மீர் மக்களின் கருத்தறிந்து இராணுவத்தை அங்கு நிறுத்துவது குறித்துத் தீர்மானிக்க வேண்டும்” என்று பிரசாந்த் பூசண்  சொன்ன சாதாரண கருத்தைக்  கூட மறுத்தவர்தான் “ஜனநாயகப் போராளி” அரவிந்த் கேஜ்ரிவால்.

ஆம் ஆத்மி கட்சி
ஆம் ஆத்மி கட்சியை “டம்மி பீசு” என்று சொல்லலாம்.

பதவியேற்ற 15 நாட்களில் 700 லிட்டர் தண்ணீர், மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு என்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக சொல்லும் ஆம் ஆத்மியின் கட்சிக்குள்ளே குழாயடிச் சண்டை நடக்கிறது. கிறிஸ்டினா சாமி என்ற ஆம் ஆத்மியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வெளிநாட்டிலிருந்து பெற்ற நிதியை முறைகேடு செய்திருக்கிறார் என்பது எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு. உண்மையில் கிறிஸ்டினா சாமி ஓர் ஏகாதிபத்திய கைக்கூலி தொண்டு நிறுவனம் நடத்த வருபவர். இவரைப் போன்று நாடு முழுவதும் தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்களின் பணி உண்மையான, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் ஊடுருவி அப்போராட்டங்களை கட்டுக்குள் வைத்திருப்பதும், திசை திருப்புவதும்தான்.

ஊழல் எதிர்ப்பு சவடால் அடித்து வரும் கேஜ்ரிவால் ஊழல் பெருச்சாளி காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைத்திருப்பதும், ஊழல் காங்கிரஸ் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலிருப்பதுமே கேஜ்ரிவாலின் யோக்கியதைக்குச் சான்று. காங்கிரசின் தொடர் ஊழல்களால், வெறுப்படைந்திருந்த மக்கள் வேறு வழியின்றி பி.ஜே.பி.க்கு வாக்களிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலில், மூன்றாவது வாய்ப்பாக கேஜ்ரிவால் முன்னிறுத்தப்படுகிறார். நாடாளுமன்ற தேர்தல் வரை, இந்நாடகங்கள் ஊதிப் பெருக்கப்படும்.

ஒருவேளை ஆம் ஆத்மியிலிருந்து 20,30 எம்.பி.க்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றாலும், அணு உலையை மூடுவதோ, தாது மணல் உள்ளிட்ட இயற்கை வளக் கொள்ளையைத் தடுப்பதோ இயலாது. இயற்கை வளங்களைக் கொள்ளையிடுவது சட்டவிரோதம் என்று இருந்த நிலையை இன்று சட்டபூர்வமாக்கியதில் அனைத்து ஓட்டுக் கட்சிகளுக்கும் பங்கு உண்டு. உடன்பாடும் உண்டு. இந்தியாவின் இறையாண்மை பன்னாட்டு முதலாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டபின் நாடாளுமன்றம் செல்லாக்காசாகி விட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவருமே அதிகாரமற்ற பொம்மைகள்தான். இந்தச் சூழ்நிலையில் சிலர் மீனவர் தனித் தொகுதி என்ற கருத்தை முன் வைக்கிறார்கள். ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் தனித் தொகுதி படும்பாட்டை நாடே அறியும். சில புதுப்பணக்காரர்கள் உருவாவதைத் தவிர இதில் வேறு பயனில்லை.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

நமது நோக்கம் தாது மணல் கொள்ளையைத் தடுப்பது, அணு உலையை மூடுவது. இதற்கு இத்தேர்தலில் வாக்களிப்பது எவ்வகையிலும் பயன்படப் போவதில்லை. எந்த ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சியையும் நம்பி நம் போராட்டத்தை அடமானம் வைக்க முடியாது. நமது சொந்த பலத்தை நாம் நம்ப வேண்டும். ஒட்டு மொத்த கடற்கரை சமூகமும் எழுந்து நின்று போராடினால் வைகுண்டராஜனால் மணல் அள்ள முடியுமா? வி.வி.யின் லாரி ஊரைத் தாண்டி சென்று விடுமா? ஆனால் தாது மணல் கொள்ளைக்கெதிராக ஒன்றுபட்ட வலுவான போராட்டம் நடைபெறவில்லை என்பதே உண்மை. அதனால்தான் அரசாங்கம் பேடி குழு ஆய்வறிக்கையைக் கூட வெளியிட மறுக்கிறது. இப்படிப்பட்ட அரசாங்கத்தை மண்டியிட வைக்க ஒட்டுமொத்த கடற்கரை சமூகமும் உள்நாட்டு மக்களுடன் இணைந்து இயற்கை வளங்களை கொள்ளையிடுவதற்கு எதிராகக் கைகோர்த்துப் போராட வேண்டும்.

மாறாக கட்சிகள் பின் சென்றால் மக்களுக்குள் பிளவுகள் ஏற்பட்டு, ஏமாறுவது நிச்சயம். ஓட்டுக் கட்சிகளையும், தேர்தலையும் ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணித்தால், அப்போது ஓட்டுக் கேட்கும் கட்சிகளின் உண்மை முகம் தெரிய வரும். மக்கள் நலன் காப்பதற்குத்தான் ஓட்டு கேட்கிறோம் என்று சொல்லுகின்ற அரசியல் கட்சிகள் மக்கள் வாக்கைப் பெற அணு உலையை மூடி, தாது மணல் கொள்ளையை நிறுத்தட்டுமே! அதை செய்வார்களா? இதுவரை அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவே இல்லை. ஆகவே,

 • மக்கள் பலத்தில் நம்பிக்கை வைப்போம்!
 • ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
 • ஊருக்கு ஊர் போராட்டக் குழு அமைப்போம்!
 • லட்சம் மக்களைத் திரட்டி தாதுமணல் கொள்ளையைத் தடுப்போம்!
 • அணு உலையை மூடுவோம்!

தமிழக அரசே,

 • கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும்  ரத்து செய்!
 • தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்!
 • தாதுமணல் குவாரிகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடு!

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு,
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்கள்
9443527613, 9442339260, 9486643116

 1. ஆம் ஆத்மி கட்சியில் சேர உதயக்குமார் 6 நிபந்தனைகளை முன்வைத்துல்லாராம்! இனம் இனத்தோடு சேருகிறது, ஆனால் மக்களுக்கும் சேர்த்து இவர்தான் முடிவேடுப்பாராம்! அரசோடும் அரசியல் கட்சிகளோடும் எப்படியாவது சமரசம் செய்துகொண்டு தனது போராட்ட மழுங்கடிப்புப் பணியை தொண்டு நிருவனங்கலோடு சேர்ந்து செவ்வனே செய்யத் துடிக்கிறார் உதயகுமார், ஆனால் மக்களின் எழுச்சியைக் கண்டுதான் பாவம் தயங்கி நிற்கிறார் (தான் சரணடைய முயற்சித்த போதே இந்தப் போராட்டத்திற்குத் தலைமை தானல்ல மக்கள்தான் என்பதை அவர் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்!)

 2. திடீரென உதயகுமாருக்கு தாதுமணல் குறித்துக் கவலை எழுந்துள்ளது! ஆம் ஆத்மியில் சேர வேண்டுமானால் தாதுமணல் குறித்து அக்கட்சி தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டுமாம்! ஒருவேளை கேஜரிவால் எடுக்கும் நிலைப்பாடு வைகுண்ட ராஜனுக்கு எதிராக இருந்தால் அவரோடு சேரமாட்டார் போலும்!

 3. உதயகுமாரின் சிந்தனை இப்போது ஆம் ஆத்மியில் இணைவாத இல்லை தனி கட்ச்சி ஆரமிப்பத என்பதாக தான் இருக்கும். உதயகுமாரின் சாயம் வெலுக்கும் நேரம் வந்துவிட்டது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க