privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாநேபாளப் புரட்சியின் பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்

நேபாளப் புரட்சியின் பின்னடைவு உணர்த்தும் உண்மைகள்

-

நேபாளத்தில் 2008-இல் நடந்த முதலாவது அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில் 229 இடங்கள் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த ஐக்கிய நேபாள பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்) [UCPN (Maoist)], கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டாவது அரசியல் நிர்ணயசபையை அமைப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் பெருத்த தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அக்கட்சி இந்தத் தேர்தலில் நேரடி வாக்குப்பதிவு மற்றும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் ஆகிய இரண்டையும் சேர்த்து வெறும் 80 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. அக்கட்சியின் முக்கியத் தலைவர்களான பிரசண்டாவும், பாபுராம் பட்டாராயும் தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டுமே, அதுவும் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளனர். அக்கட்சியின் வேட்பாளர்கள் பலர் காப்புத் தொகையைக்கூட இழக்கும் அளவிற்குத் தோல்வியடைந்து, அக்கட்சி மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

பிரசண்டா, பாபுராம் பட்டாராய்
ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) – யை நாடாளுமன்ற சரணடைவுப் பாதைக்குத் தள்ளிய துரோகத் தலைமை : பிரசண்டா (இடது) மற்றும் பாபுராம் பட்டாராய்.

இதற்கு மாறாக, 2008-இல் நடந்த தேர்தலில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த நேபாள காங்கிரசு கட்சியும் (NC) போலி கம்யூனிஸ்ட் கட்சியான ஐக்கிய மார்க்சிய-லெனினியக் கட்சியும் [CPN (UML)] இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியுள்ளன. மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட நிலையில் நடந்த முதல் அரசியல் நிர்ணயசபைக்கான தேர்தலும் அதில் ஐக்கிய மாவோயிஸ்ட் கட்சி அடைந்த வெற்றியும் ஒரு புதிய நேபாளம் உருவாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது என்றால், இரண்டாவது அரசியல் நிர்ணயசபை தேர்தல் முடிவுகள் நேபாளத்தை ஓர் இருண்ட எதிர்காலத்திற்குள் தள்ளியிருக்கின்றன. “கம்யூனிசம் தோற்றுப்போவிட்டது” என ஏகாதிபத்தியவாதிகள் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த வேளையில் புரட்சிகர சக்திகளுக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கக்கூடிய வகையில் நடந்த நேபாள புரட்சி, இங்ஙனம் பின்னுக்குப் போயிருப்பது வருத்தமளிக்கக்கூடியதென்றாலும், இந்தத் தலைகீழ் மாற்றத்திற்கான உண்மைக் காரணத்தை ஆராய்ந்து, இப்பின்னடைவை மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளின் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

“தேர்தல் முறைகேடுகளால்தான் தமது கட்சி தோல்வியடைந்துவிட்டதாக” ஐக்கிய நேபாள மாவோயிசக் கட்சி கூறியிருக்கிறது. முதலாளித்துவ நாடாளுமன்றத் தேர்தல்களும் முறைகேடுகளும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற போதும், இந்த விளக்கம், தான் செய்த தவறுகளை அக்கட்சி மிகவும் மலிவான முறையில் மூடிமறைக்க எத்தனிக்கும் நொண்டிச்சாக்கு தவிர வேறில்லை. மாறாக, மன்னராட்சியைத் தூக்கியெறிந்த நேபாளப் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதில் அக்கட்சி செய்த தவறுகள்தான் இத்தோல்விக்கான அடிப்படையாக அமைந்தன.

நாம் இப்படிக் கூறும் அதேசமயம், இந்தத் தோல்விக்கு வேறொரு எளிதான காரணத்தை இந்திய மாவோயிஸ்டுகள் முன்வைக்க வாய்ப்புண்டு. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு மன்னராட்சிக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த எழுச்சியினையடுத்து நேபாள மாவோயிசக் கட்சி மன்னராட்சியைத் தூக்கியெறிந்து அரசியல் நிர்ணய சபையை அமைக்கும் திட்டத்தை முன்வைத்து ஏழு கட்சி கூட்டணியோடு அமைதி ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது. மாவோயிசக் கட்சியினரின் அந்நடவடிக்கையை வலது சந்தர்ப்பவாத சரணடைவு எனக் குற்றஞ்சுமத்திய இந்திய மாவோயிஸ்டுகள், தற்போதைய இத்தோல்விக்கு அதையே காரணமாக கூறக்கூடும். இது மட்டுமின்றி, இப்படியெல்லாம் நடக்கும் என்று அன்றே சொன்னோம் என்று இன்றைய பின்னடைவுக்கு வியாக்கியானம் அளிக்கவும் கூடும்.

கிரண், பசந்தா, கஜூரேல்
ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)-க்குள் ஆதிக்கம் செலுத்திய முதலாளித்துவப் பாதையாளர்களை எதிர்த்து வெளிவந்து, நேபாள கம்யூனிஸட் கட்சி (மாவோயிஸ்ட்) [NCP(Maoist)] என்ற புதிய புரட்சிகரக் கட்சியைத் தொடங்கியுள்ள தோழர்கள் கிரண், பசந்தா மற்றும் கஜூரேல்.
நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு – ஏகாதிபத்திய எதிர்ப்பு புதிய ஜனநாயகப் புரட்சியை சாதிக்கும் நோக்கத்தோடு நேபாள மாவோயிசக் கட்சி 1996 தொடங்கி மக்கள் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த சமயத்தில், அப்புரட்சி 2005-06 ஆம் ஆண்டுகளில் ஒரு புதிய இடைக்கட்டத்திற்குள் நுழைந்தது. இற்றுவிழுந்து கொண்டிருந்த மன்னராட்சியைத் தூக்கியெறிந்து ஒரு ஜனநாயகக் குடியரசை அமைக்க வேண்டிய உடனடி அரசியல் கடமை முன்வந்தது. மன்னராட்சிக்கு எதிரான மக்கள் விடுதலைப் படையின் கிராமப்புற ஆயுதந்தாங்கிய போராட்டம் என்பதிலிருந்து நாடு தழுவிய மக்கள் பேரெழுச்சி என்ற அரசியல் போராட்டம் வெடிப்பதற்கான காலம் கனிந்திருந்தது. அச்சமயத்தில் நேபாள மாவோயிஸ்டுகள் இப்பேரெழுச்சியைக் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டு, தொடர்ந்து கிராமப்புற ஆயுத போராட்டங்களில் மட்டுமே கவனத்தைச் செலுத்தியிருந்தால், அக்கட்சி தனிமைப்பட்டுப் போயிருக்கும் என்பது மட்டுமல்ல; அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட அந்நிய சக்திகளால் மன்னராட்சி காப்பாற்றப்பட்டு, நேபாளப் புரட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கும்.

நேபாள மாவோயிசக் கட்சி இந்த இடைக்கட்டத்திற்கேற்ப, “அரசியல் நிர்ணய சபையை நிறுவு; அதற்கான தேர்தலை உடனே நடத்து” என்ற முழக்கங்களை முன்வைத்து இந்தப் பேரெழுச்சிக்குத் தலைமையேற்றதோடு, மன்னராட்சியை அகற்ற முன்வந்த ஏழுகட்சி கூட்டணியோடும் அமைதி ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டது. இதன் விளைவாக நேபாளத்தில் இந்து மன்னராட்சி அகற்றப்பட்டதோடு, அந்நாடு மதச்சார்பற்ற குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. இது, புதிய ஜனநாயகப் புரட்சி என்ற போர்த்தந்திரத்தை நிறைவேற்றும் வளர்ச்சிப் போக்கில் செயல்தந்திரரீதியாக மாவோயிஸ்டுகள் அடைந்த வெற்றியாகும்.

இதனையொத்த இடைக்கட்ட நிலைமை ரசியாவில் 1905-லும், சீனாவில் 1924-27 மற்றும் 1945-47 காலக் கட்டங்களிலும் எழுந்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சி 1924-27 காலக்கட்டத்தில் கோமிங்டாங் கட்சியோடு கூட்டணி அரசில் பங்கெடுத்திருந்தது; 1946 ஜனவரியில் தேசிய ஜனநாயக சட்டப்பேரவையை அமைக்கும் ஒப்பந்தத்தில் சீன கம்யூனிஸ்டு கட்சியும் கோமிங்டாங் கட்சியும் கையெழுத்திட்டன.

1917 பிப்ரவரியில் ரசியாவில் ஜாராட்சி தூக்கியெறியப்பட்டாலும், அரசுக் கட்டமைவு முழுவதும் வீழ்த்தப்படவில்லை. குறிப்பாக, ஜாராட்சியில் இருந்த இராணுவம் கலைக்கப்படாததோடு, முதல் உலகப் போரிலும் அது ஈடுபட்டு வந்தது. ஜார் தூக்கியெறியப்பட்டதைப் புரட்சி என ஏற்றுக்கொள்ளும்பொழுது, நேபாளத்தில் பழைய இராணுவமும் அரசுக் கட்டமைவும் இன்னும் நீடித்திருப்பதைக் காட்டி, நேபாளத்தில் மன்னராட்சியைத் தூக்கியெறிந்து மாவோயிஸ்டுகள் அடைந்த செயல்தந்திர வெற்றியை அங்கீகரிக்க மறுப்பது ஒருதலைப்பட்சமானது மட்டுமல்ல; புரட்சி நெளிவுசுளிவின்றி நேர்கோட்டுப் பாதையில்தான் பயணிக்கும் என்று கருதும் வறட்டுத்தனமுமாகும்.

caption-005-nepal-1

****

சர்வதேச கம்யூனிச இயக்க வரலாற்றில் மேலிருந்து (அரசிலிருந்து) செயல்புரிவது என்னும் போராட்ட வடிவம் மற்றும் தற்காலிகப் புரட்சிகர அரசாங்கம் என்னும் அமைப்பு வடிவங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னிபந்தனைகளை லெனின், “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்” என்ற நூலில் வகுத்து முன்வைத்துள்ளார்.

“தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சி பங்கேற்றாலோ, இல்லாவிட்டாலோ, எப்படி இருந்தபோதிலும் தற்காலிகப் புரட்சி அரசாங்கத்தின் மீது நாம் கீழிருந்து நிர்ப்பந்தம் கொண்டுவர வேண்டும். கீழிருந்து இந்த நிர்ப்பந்தத்தைச் செயல்படுத்த முடிவதற்குப் பாட்டாளி வர்க்கம் ஆயுதமேந்தியிருக்க வேண்டும். ….. அது ஆயுதமேந்திச் செலுத்தும் நிர்ப்பந்தத்தின் நோக்கம் புரட்சியின் ஆதாயங்களைப் பாதுகாப்பது, கெட்டிப்படுத்துவது, விரிவுபடுத்துவது – அதாவது, பாட்டாளி வர்க்க நலன்களின் நிலையிலிருந்து பார்க்கும்போது அந்த ஆதாயங்கள் நம் குறைந்தபட்ச வேலைத்திட்டம் முழுவதையும் நிறைவேற்றுவதாக அமைந்திருக்க வேண்டும்” என்று லெனின் கூறியிருக்கிறார். நக்சல்பாரி புரட்சிகர கட்சியான இ.பொ.க. (மா-லெ) மாநில அமைப்பு கமிட்டி 1981-இல் நிறைவேற்றிய “இந்தியப் புரட்சிக்கான அரசியல் பாதையும் இராணுவப் பாதையும்” என்ற தனது ஆவணத்தில் இக்கோட்டுபாடுகளை விரிவாக விளக்கி முன்வைத்திருக்கிறது.

ஆர்ப்பாட்ட ஊர்வலம்
இரண்டாவது அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலைப் புறக்கணிக்கக் கோரி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு) [NCP (Maoist)]-யைச் சேர்ந்த தேசிய இளைஞர் மக்கள் தொண்டர் படை காவ்ரே என்ற ஊரில் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம்.
2008-க்கும் 2013-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் நேபாள ஐக்கிய மாவோயிசக் கட்சி தனது தலைமையில் இரு கூட்டணி அரசுகளை அமைத்த போதும் சரி, அக்கட்சி எதிர்க்கட்சியாகச் செயலாற்றியபோதும் சரி இந்த மா-லெ நிபந்தனைகளை பற்றுறுதியோடு கடைப்பிடிக்காமல் உதாசீனப்படுத்தியது. நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா இருந்தபொழுது, நேபாள இராணுவம் குடிமக்களின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட வேண்டும் என அவரது அரசு கோரியதோடு, அதற்குக் கட்டுப்பட மறுத்த நேபாள இராணுவத்தின் தலைமைத் தளபதி ருக்மாங்கத் கடுவாலைப் பதவி நீக்கம் செய்யவும் முடிவெடுத்தது. இம்முடிவை ஆதரிப்பதாகக் கூறிய போலி கம்யூனிஸ்டுகளான ஐக்கிய மார்க்சிய-லெனினிய கம்யூனிசக் கட்சி, பிரசண்டாவின் மந்திரிசபை இந்த முடிவை அறிவித்தவுடன் அதனைத் துரோகத்தனமாக எதிர்த்ததோடு, தனது கட்சியைச் சேர்ந்த அதிபர் ராம் பரண் யாதவ் மூலம் மந்திரிசபை முடிவை ரத்தும் செய்தது. அதிபரின் இந்த முடிவை எதிர்த்து பிரசண்டா மே 2009-இல் பதவி விலகினார். இதன் பின் நேபாள காங்கிரசின் ஆதரவோடு பிரதமர் பதவியில் அமர்ந்த போலி மார்க்சிய-லெனினிய கம்யூனிசக் கட்சியைச் சேர்ந்த மாதவ் குமார் நேபாள் சமாதான ஒப்பந்த விதிகளை மீறி இராணுவம் ஆளெடுப்பதற்கு அனுமதி வழங்கினார்.

நேபாள மாவோயிசக் கட்சி இதனை எதிர்த்துத் தெருப் போராட்டங்களை நடத்தியதையடுத்து, அந்த நிர்பந்தத்தால் மாதவ் குமார் நேபாள் அரசு 2010 ஜூனில் பதவி விலகும்படி நேர்ந்தது. எனினும், நேபாள ஐக்கிய மாவோயிசக் கட்சி கீழிருந்து நடத்திய இப்போராட்டத்தை இறுதிவரை கொண்டு செல்லவில்லை. மாறாக, தனது போராட்டத்தால் பதவி விலகிய போலி மார்க்சிய-லெனினியக் கம்யூனிஸ்டு கட்சியுடனேயே கூட்டணி சேர்ந்தது. நேபாள காங்கிரசையும் போலி மார்க்சிய-லெனினிய கம்யூனிசக் கட்சிக்குள் இருக்கும் வலதுசாரி பிரிவையும் தனிமைப்படுத்தும் தந்திரோபாயம் இதுவெனக் கூறி இக்கூட்டணிக்குப் பட்டுக் குஞ்சம் கட்டியதோடு, அக்கட்சியைச் சேர்ந்த ஜல்நாத் கனாலை பிப். 2011-இல் பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் ஆதரவளித்தது. அடுத்த ஆறே மாதத்தில் கனால் அரசைக் கவிழ்த்துவிட்டு, மாதேசி ஜன் அதிகார் கட்சியோடு கூட்டுச் சேர்ந்த நேபாள மாவோயிசக் கட்சி, பாபுராம் பட்டாராயை பிரதமராக்கியது.

சுர்கேத் முற்றுகை போராட்டம்
மக்கள் விடுதலைப் படை கலைக்கப்பட்டதைக் கண்டித்து, சுர்கேத் என்ற நகரில் அமைந்துள்ள ஐக்கிய நேபாள மாவோயிசக் கட்சியின் மாவட்ட மற்றும் மாநில அலுவலகங்களை அப்படையைச் சேர்ந்த போராளிகள் முற்றுகையிட்டுப் போராடிய பொழுது, நேபாள இராணுவத்தால் கைது செய்யப்படும் செம்படை வீரர். (கோப்புப் படம்).

இந்திய மார்க்சிஸ்டுகள் நாறி அம்பலப்பட்டுப் போன இந்திய நாடாளுமன்றத்தைத் தமது தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதைப் போல, நேபாள மாவோயிசக் கட்சி முதலாவது அரசியல் நிர்ணய சபைக்கு நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் நேபாள ஓட்டுக்கட்சிகளோடு மாறிமாறிக் கூட்டணி அமைத்தும், பேச்சுவார்த்தை நடத்தி விட்டுக்கொடுத்து நாடாளுமன்ற நாற்காலி அரசியலின் வரம்புக்குட்பட்டு தீர்வு காண முயன்றதேயொழிய, அரசியல் நிர்ணய சபையின் கையாலாகத்தனத்தை வெளியிலிருந்து அம்பலப்படுத்தி, புரட்சியின் அடுத்த கட்டத்திற்கு மக்களை அணிதிரட்டத் தவறியது. குறிப்பாக, நேபாள மாவோயிசக் கட்சியின் பிரசண்டா-பட்டாராய் கும்பல், “பல கட்சி போட்டியின் மூலம்தான் எதிர்ப்புரட்சியை வீழ்த்த முடியும்; அரசியல் நிர்ணய சபை, தேர்தல்கள், அரசியல் சாசனம் என்ற மூன்றின் மூலம் புதிய நேபாளத்தை உருவாக்க முடியும்” என்ற சட்டவாதப் பாதையை உயர்த்திப் பிடித்து, தமது சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை நியாயப்படுத்தியது. “அடுத்துவரும் தேர்தல்களில் நாம் பெரும்பான்மை பெற்றுவிட்டால் அரசே நமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடும்” எனக் கூறி, கீழிருந்து போராட்டங்கள் எடுக்க வேண்டிய அவசியத்தை முற்றிலுமாக நிராகரித்தது.

***

ரு புரட்சிகரக் கட்சி எவ்வளவு சிறியதாக இருப்பினும் தனது செயல்தந்திர வழியை அமல்படுத்தும்பொழுது, சமரச சக்திகளைத் தனிமைப்படுத்தி எதிரிக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்துவதற்கு மக்களைச் சார்ந்து நின்று, அவர்களது அரசியல் முன்முயற்சியைக் கட்டவிழ்த்துவிடும் துணிவையும் நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டும். இதனைப் புரிந்துகொள்வதற்கு 1917 பிப்ரவரிக்கும் 1917 அக்டோபருக்கும் இடைபட்ட காலத்தில் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் அனுபவங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன.

ரசியாவில் ஜார் ஆட்சிக்கு எதிரான 1917 பிப்ரவரி புரட்சி வெற்றிகரமாக நிறைவுற்று சோசலிசப் புரட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் கடமை முன்நின்றபோது, மென்ஷ்விக்குகள் ரசியாவின் பின்தங்கிய நிலைமையைக் காரணம் காட்டி, “முதலாளித்துவ உற்பத்தி சக்திகள் இன்னும் வளரவில்லை; சோசலிசப் புரட்சிக்கான காலம் இன்னும் கனிந்து விடவில்லை” எனக் கூறி, கெரன்ஸ்கி தலைமையில் இருந்த முதலாளித்துவ அரசிற்கு வால்பிடிக்கும் வேலையைச் செய்தார்கள். ஆனால், போல்ஷ்விக் கட்சி அத்தகைய பாரதூரமான நிலைமையிலும் புரட்சியை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் செல்லும் திட்டத்தோடு நிலம், உணவு, சமாதானம் என்ற முழக்கங்களை முன்வைத்தது. இம்முழக்கங்கள் பெருவாரியான மக்களை மட்டுமின்றி, ஜாரின் இராணுவத்திலும் ஒரு பிரிவை ஈர்த்தன. போல்ஷ்விக்குகள் சோவியத்துகளில் சிறுபான்மையினராக இருந்த நிலையிலும் அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புகளைத் துணிந்து செய்து வெற்றியும் ஈட்டினர்.

முதலீட்டு ஒப்பந்தம்
நேபாளத்தில் செய்யப்பட்டுள்ள இந்திய முதலீடுகளைப் பாதுகாக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்னாள் நேபாள பிரதமர் பாபுராம் பட்டாராய் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங். (கோப்புப் படம்)

ஆனால், நேபாள மாவோயிசக் கட்சி மன்னராட்சியைத் தூக்கியெறிந்த பிறகு மக்களைச் சார்ந்து நின்று புரட்சியை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்வதற்குரிய பொருத்தமான அரசியல் துணிவைக் காட்டவில்லை. நேபாளத்தில் 1996 தொடங்கி 2006 முடிய நடந்த பத்தாண்டு கால மக்கள் யுத்தத்தின் பொழுது, மாவோயிசக் கட்சியினர் கிராமப்புறங்களில் உள்ளூர் அளவிலான மக்கள் அரசு மற்றும் நிர்வாக அமைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். நிலப்பிரபுக்கள் மற்றும் புரட்சிக்கு எதிரான வர்க்கங்களின் நிலங்களையும், சொத்துக்களையும் பறிமுதல் செய்து மறுவிநியோகம் செய்திருந்தனர். இவ்வாறான புதிய ஜனநாயகப் புரட்சிக்குரிய அரசியல்-பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான திசைவழியில் செல்வதற்குப் பதிலாக, மக்கள் யுத்தத்தில் கிடைத்த பலன்களைத் தக்கவைத்துக் கொண்டு, கெட்டிப்படுத்தி, நகரத்திலும் விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, அவற்றை ஒவ்வொன்றாகக் கைகழுவினர்.

குறிப்பாக, பட்டாராய் பிரதமராகப் பதவியேற்றவுடனேயே மக்கள் யுத்தத்தின்பொழுது கைப்பற்றப்பட்ட நிலங்களும் சோத்துக்களும் மீண்டும் புரட்சியின் எதிரிகளிடமே திருப்பி ஒப்படைக்கும் துரோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். செம்படை ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் பாசறையில் அடைபட்டிருந்த நிலையில், கம்யூனிச இளைஞர் கழகத்தை ஒரு குடிமக்கள் படையாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்கம் மற்றும் அவற்றின் கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து, இளைஞர் கழகத்தை வெறும் சமூக சீர்திருத்த அமைப்பாக மாற்றி அமைத்தார். 1950-க்குப் பின் இந்தியாவுடன் செய்துகொண்ட சமனற்ற ஒப்பந்தங்கள் அனைத்தையும் துணிந்து ரத்து செய்து நாட்டுப்பற்று கொண்ட சக்திகளைத் தம்பக்கம் அணிதிரட்டுவதற்குப் பதிலாக, இந்தியாவின் முதலீடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுத் துரோகமிழைத்தார். இவற்றைவிடக் கேவலமாக, ஆளும் வர்க்கம் மற்றும் கட்சிகளின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செம்படையைக் கலைத்து, கட்சியையும் உழைக்கும் மக்களையும் நிராயுதபாணியாக்கியது, பட்டாராய் அரசு.

“ஒரு கூட்டணி அரசில் பங்கு பெறுவதற்கு முன்னிபந்தனையாக மக்கள் படை இருப்பது அவசியம்; இம்மக்கள் படையை ஒரு புதிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் உருவான பிறகுதான் கையளிக்க முடியும்” எனத் தனது “கூட்டரசாங்கம் பற்றி” நூலில் குறிப்பிடுகிறார், மாவோ. ஆனால், நேபாளப் பிரதமராக இருந்த பாபுராம் பட்டாராய் மாவோவின் இந்தப் போதனைகளை உதாசீனப்படுத்திவிட்டு, புதிய அரசியல் சாசனமும் புதிய அரசும் உருவாவதற்கு முன்பே, அப்படி உருவாகும் அரசு எந்த வர்க்கத்தின் நலனைக் கொண்டிருக்கும் எனத் தெரியும் முன்பே செம்படையின் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்தார். அதுவும் புரட்சிக்கும் மக்களுக்கும் எதிராகப் போரிட்டப் பிற்போக்கு இராணுவத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டுக் கலைத்தார்.

இந்தச் சரணடைவுக்கு எதிராக செம்படை பாசறைகளில் கலகங்கள் நடந்தன. ஆனால், அப்போராட்டங்கள் செம்படையைக் கலைக்கக்கூடாது என்ற புரட்சிகர அரசியல் முழக்கத்தின் அடிப்படையில் அல்லாமல், “சமாதான ஒப்பந்தத்தின்படி அனைத்துப் போராளிகளையும் நேபாள இராணுவத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இந்த இணைப்பு கௌரவமிக்க வழிகளில் நடைபெற வேண்டும்” என்ற வரம்பிற்கு உட்பட்டே நடந்தது. ஆனால், இந்தப் போராட்டத்தைக்கூடப் பொறுத்துக் கொள்ளாத பிரசண்டா-பட்டாராய் கும்பல் நேபாள இராணுவத்தை அனுப்பி, இந்தப் போராட்டத்தை ஒடுக்கியது

முதலாளித்துவ ஓட்டுக்கட்சிகள் மற்றும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளின் நிர்ப்பந்தம், மிரட்டல்களுக்கு அடிபணிந்து, அவர்களிடம் சமரசமாக நடந்துகொள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்பைத் தாம் பெற்றுவிட முடியும் என நம்பியது, பிரசண்டா-பட்டாராய் கும்பல். ஆனால், முதலாளித்துவக் கட்சிகளோ மன்னராட்சியைத் தூக்கியெறிந்த பிறகு, மாவோயிசக் கட்சி நாடாளுமன்ற அரசியல் சூதாட்டத்தில் தம்மிடம் தோற்றுப் போனதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் முதலாவது அரசியல் நிர்ணய சபையைக் கலைப்பதிலும் வெற்றி பெற்றனர். இன்னொருபுறம், செம்படையைக் கலைத்தது, ஏழை உழவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களையும் சொத்துக்களையும் மக்களிடமிருந்து பறித்து மீண்டும் புரட்சியின் எதிரிகளுக்குக் கொடுத்ததன் காரணமாக மாவோயிசக் கட்சி கிராமப்புற மக்களின் ஆதரவை இழந்து நின்றது.

***

பாட்டாளி வர்க்கக் கட்சி பிளவுபடாத தலைமையைப் பெற்றிருப்பதும் அதன் கீழ் மக்கள்திரள் அரசியல் படையைக் கட்டியமைப்பதும் போர்த்தந்திர ரீதியிலும் செயல்தந்திர ரீதியிலும் வெற்றி பெறுவதற்கான முன்தேவையாகும் என மார்க்சியம்-லெனினியம் போதிக்கிறது. ஆனால், புரட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரத்தில் நேபாள மாவோயிசக் கட்சித் தலைமை மூன்று அணிகளாக – பிரசண்டா, பாபுராம் பட்டாராய், கிரண் – எனப் பிளவுபட்டுக் கிடந்தது. இம்மூன்று அணிகளுள் பிரசண்டா மற்றும் பட்டாராய் கோஷ்டிகள் சமரச சரணடைவுவாதத்தை உயர்த்திப் பிடித்ததோடு, கட்சிக்குள் பெரும்பான்மை பலத்தையும் கொண்டிருந்தனர்.

2007-ஆம் ஆண்டு பாலாஜு எனுமிடத்தில் நடந்த கட்சியின் பிளீனத்திலும், 2008-ஆம் ஆண்டு காரிபாட்டி என்னுமிடத்தில் நடந்த கட்சி மாநாட்டிலும், 2010-ஆம் ஆண்டு பலுங்டர் என்னுமிடத்தில் நடந்த கட்சி பிளீனத்திலும், அதே ஆண்டு பாரிஸ்தண்டா என்னுமிடத்தில் நடந்த மத்திய கமிட்டி கூட்டத்திலும் கிரண் குழுவைச் சேர்ந்த தோழர்கள், பிரசண்டா மற்றும் பட்டாராய் கும்பலின் சமரச சரணடைவுக்கு எதிராகப் போராடினாலும், அக்கும்பலைத் தனிமைப்படுத்தும் வகையில் அரசியல் நடத்தை வழி, முழக்கங்கள், போராட்ட மற்றும் அமைப்பு வடிவங்களை முன்வைத்து அப்போராட்டங்களை நடத்தவில்லை. ஒருபுறம் நகர்ப்புற எழுச்சிக்கான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும் என கிரண் குழு கோரிக்கை வைத்துக்கொண்டே, இன்னொருபுறம் இத்துரோகிகளைக் கட்சியிலிருந்து அப்புறப்படுத்துவதற்குத் தேவையான அரசியல்-அமைப்பு பலமின்றியும், கட்சியைப் பிளவுபடுத்தக் கூடாது என்ற நல்லெண்ணத்திற்கு ஆட்பட்டும் சமரசம் செய்து கொண்டது. பாரிஸ்தண்டா மத்தியக் கமிட்டி கூட்டத்திலும், ஏப்ரல் 2011-இல் நடந்த மற்றொரு மத்தியக் கமிட்டிக் கூட்டத்திலும் இச்சமரசம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

கட்சிக்குள் கிரண் அணியோடு சமரசம் செய்து கொள்வதும், அரசு விவகாரங்களில் பட்டாராயுடன் சேர்ந்துகொண்டு கட்சி முடிவுகளுக்கு எதிராக நடந்துகொள்வதுமென இரட்டை வேடமிட்டு பிரசண்டா துரோகமிழைத்தார். இத்தகைய பிளவுகளும், துரோகங்களும், சமரசங்களும் மக்களுக்குக் கட்சியின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. மேலும், மன்னராட்சி தூக்கியெறியப்பட்டதற்குப் பிந்தைய காலங்களில் புரட்சியின் எதிரிகள் மற்றும் கட்சிக்குள்ளிருந்த சமரச, துரோகக் கும்பலுக்கு எதிராக மக்கள் அரசியல்ரீதியில் அணிதிரட்டப்படாமல் வெறும் பார்வையாளர்களாக வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது அரசியல் நிர்ணய சபைத் தேர்தலை எதிர்கொண்ட நேபாள மக்கள், ஒரு கட்சிக்கு மாற்றாக வேறொரு கட்சி என்ற விதத்தில் அம்பலப்பட்டுப் போன துரோகிகளுக்கும் பிற்போக்காளர்களுக்கும் வாக்களித்துள்ளனர்.

ஐக்கிய மாவோயிசக் கட்சியின் செல்வாக்கு வீழ்ந்து, அவர்கள் தேர்தலில் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டதன் பின்னணி இதுதான். ஒரு கட்சி ஆயுதப் படையைக் கொண்டிருந்தாலும், மக்கள் யுத்தத்தை நடத்தித் தளப்பிரதேசங்களை அமைத்திருந்தாலும், புரட்சியின் ஒவ்வொரு இடைக்கட்டத்திலும் கட்சிக்குள் எழக்கூடிய எதிர்ப்புரட்சிகர சக்திகளையும் முதலாளித்துவப் பாதையாளர்களையும் எதிர்த்து முறியடிக்கக்கூடிய மார்க்சிய-லெனினிய பற்றுறுதி, மாற்று வழியை முன்வைக்கக்கூடிய தெளிவு, மக்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை அணிதிரட்டும் அரசியல் துணிவு ஆகியவற்றைக் கொண்டிராவிடில், அக்கட்சி வீழ்வது தவிர்க்க முடியாதது என்ற பாடத்தைத்தான் நேபாள அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

– குப்பன்
__________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

__________________________________