privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்அழகிரி புராணம் இனியாவது ஓயுமா ?

அழகிரி புராணம் இனியாவது ஓயுமா ?

-

ரசியல் என்றாலே ஓட்டுக்கட்சிகளின் சவடால்கள், கூட்டணித் திருப்பங்கள், தலைவர்களின் கிசுகிசு செய்திகள் என்று மாற்றியதில் தமிழக ஊடகங்களின் பங்கே பிராதானமானது. விஜயகாந்த் மலேசியாவில் பிரியாணி சாப்பிட்டதும், ஜெயா கொடநாட்டில் குடமுழுக்கு தீர்த்தம் குடித்ததும், மு.க.ஸ்டாலின் இலண்டனில் பிபி செக் அப்புக்கு போனதெல்லாம் கூட இங்கு தலைப்புச் செய்திகளாக வலம் வருகின்றன.

அழகிரி - ஸ்டாலின்
வாரமிரு பத்திரிகைகளின் நிரந்தர தலைப்பு வரிசைகளில் அழகிரி – ஸ்டாலின் சண்டை இடம் பிடித்திருந்தது.

மக்கள் நலன், கொள்கை, கட்சிகளின் செயல்பாடு சார்ந்து அரசியல் பேசுவதையும், எழுதுவதையும் தமிழக ஊடகங்கள் கொன்று விட்டன. கூடவே எதையும் மலிவான கிசுகிசு ரசனையில் அக்கப் போர்களையே அரசியலாக பார்க்கத் தூண்டும் விதத்தில் அவைகள் மக்களை பழக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த பத்தாண்டுகளாக வாரமிரு பத்திரிகைகளின் நிரந்தர தலைப்பு வரிசைகளில் அழகிரி – ஸ்டாலின் சண்டை இடம் பிடித்திருந்தது.

ஊடக உலகில் செல்வாக்குடன் செயல்படும் பார்ப்பனிய ஊடகங்களின் பண்பாட்டு ரீதியான திராவிட இயக்க வெறுப்பு காரணமாக திமுகவும், கருணாநிதியும் குறிவைக்கப்பட்டிருந்தனர். பார்ப்பனிய, இந்திய ஆளும் வர்க்கங்களின் நலன்களையெல்லாம் அவர் சலிக்காமல் தோளில் தூக்கி சுமந்து பாரத் மாதாகி ஜே என்று யாத்திரை போனாலும் கூட பார்ப்பனிய ஊடகங்களும் அறிவாளிகளும் அவரையோ திமுகவையோ துளியும் ஏற்றுக் கொண்டதில்லை. இதனால் காங்கிரசு அரசு மற்றும் கார்ப்பரேட் உலகின் ஊழலான 2ஜி கூட திமுக, ராசா ஊழலாக சுருக்கப்பட்டு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டன.

இந்த பின்னணியில்தான் அழகிரி ஊடகங்களில் இடம் பிடிக்கிறார். மதுரையில் அதிகார மையம், அடாவடி அரசியல், திருமங்கலம் ஃபார்முலா, ரவுடிகளோடு நட்பு, தாகி கொலை, பொட்டு சுரேஷ் கொலை, தினகரன் ஊழியர்கள் கொலை என்றெல்லாம் அழகிரியை வைத்து திமுகவை தாக்கி வந்த ஊடகங்கள் இன்று அழகிரிக்கு நேர்மறையில் முக்கியத்துவம் கொடுப்பது போல செய்திகளை வெளியிடுகின்றன. காரணம் இப்போது அவர்கள் முன்பு எழுதிய வில்லன் அழகிரி திமுகவின் வில்லனாக மாறிவிட்டதால் திமுகவை வில்லனாக்க அழகிரியின் ஆதங்கத்தை வெளியிடுகிறார்களாம்.

மேலும் தமிழக அரசியல் வாசிப்பு இன்பத்தின் மையமான அழகிரி, ஸ்டாலின் மோதல் இல்லையென்றால் வார, வாரமிரு, புலானாய்வு புண்ணாக்குகள் ஒன்றும் கல்லா கட்ட முடியாது. ஆகையால் அழகிரிக்கு திமுக முடிவுரை எழுதினாலும் ஊடகங்கள் அத்தனை சீக்கிரம் எழுதிவிடாது. அந்த படிக்கு அழகிரி புராணம் இனியும் ஓயாது.

அழகிரி - கருணாநிதி
அழகிரி, ஸ்டாலின் மோதல் இல்லையென்றால் வார, வாரமிரு, புலானாய்வு புண்ணாக்குகள் ஒன்றும் கல்லா கட்ட முடியாது.

வாரிசு அரசியல், குடும்ப அரசியல் அல்லது கருணாநிதிக்கு அடுத்து திமுகவை ஆளப்போவது யார் என்ற கேள்வியை திமுக எனும் கட்சி வெகுநாட்கள் கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. இது ஜனநாயகத்தின் அக்கறையில் இருந்து வரும் பிரச்சினையல்ல. கோபலபுரம், சிஐடி காலனியைத் தாண்டி தமிழகம் முழுவதும் திமுகவின் வட்டார தளபதிகள் அனைவரும் வாரிசு, குடும்ப அரசியலின் சொத்துரிமையாக வந்தவர்கள்தான். மேலும் திமுக எனும் கட்சியை வைத்து உருவான இந்த கூட்டம் பெருக்கியிருக்கும் சொத்துக்களும் அண்ணாவே கற்பனையிலும் நினைத்திராத அளவுக்கு இருக்கிறது.

எனவே திமுக தேர்தலில் வெல்லுகிறதோ இல்லை ஆட்சியை பிடிக்கிறதோ, இழக்கிறதோ இவையெல்லாம் திமுக தலைகளுக்கு முக்கியமில்லை. மாறாக வளர்த்து விட்ட சொத்துக்களை பெருக்குவதற்கும், பாதுகாப்பதற்கும் ஒரு கட்சி என்ற முறையில் இயங்குவது அவசியம். அதில் போனசாக ஆட்சி, அமைச்சர் பதவிகள் வந்தால் மகிழ்ச்சி. இல்லையேல் ஆளும் கட்சிக்கு கப்பம் கொடுத்து விட்டு தொழிலை தொடர்வது அத்தியாவசியம். இது திமுக என்றில்லை, அதிமுக போன்ற மாநில கட்சிகளுக்கும் காங்கிரசு, பாஜக போன்ற தேசிய கட்சிகளுக்கும் பொருந்தும்.

ஜெயா-சசிகலா கும்பலை திமுகவும், கருணாநிதி குடும்பம் மற்றும் வட்டார திமுக பிரமுகர்களை ஜெயாவும் சொத்து சேகரிப்பு வழக்குகள் மூலம் தண்டிக்க முடியவில்லை என்பதை இங்கே இணைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வகையில் இந்த வழக்குகள் ஒரு அரசியல் மிரட்டல் என்பதைத் தாண்டி அடிப்படையையே தகர்த்து விடும் நோக்கம் கொண்டதல்ல. மேலும் இரு ஆட்சிகளிலும் இரு கட்சிப் பிரமுகர்களும் தங்களது தொழிலை செவ்வனே தொடர்வதும் எப்படி என்று நினைத்துப் பார்க்க வேண்டும். இதே ஜெயா ஆட்சி திமுக மீது ஜென்ம பகையும், வெறுப்பும் கொண்டிருந்தாலும் சன் டிவியோ இதர திமுக பிரமுகர்களின் தொழில்களோ எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை. மாறாக திமுக ஆண்ட காலங்களில்தான் சன் டிவி மற்றும் திமுக பிரமுகர்கள் தமது தொழில் சாம்ராஜ்ஜியத்தை பெருக்கினார்கள் என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ஆகவே அழகிரி-ஸ்டாலின் பிரச்சினையில் திமுக உடைபடுவதையோ இல்லை உருக்குலைந்து போவதையோ திமுகவின் பெருந்தலைகள் மற்றும் வட்டார தளபதிகள் விரும்ப மாட்டார்கள். மேலும் இது விருப்பம் விருப்பமில்லை என்பதைத் தாண்டி இப்படி ஒரு நிலையெடுத்தே ஆகவேண்டிய நிர்ப்ந்தமும் கூட.

அழகிரி
வாரிசு பிரச்சினையில் அலட்டிக் கொள்வதால் அழகிரி எதையும் இழக்கப் போவதில்லை.

அந்த வகையில் ஸ்டாலின் அவர்களது ஏகோபித்த தெரிவாகவும், அழகிரியை புறக்கணிக்க வேண்டியதும் இயல்பாக நடக்கிறது. இந்த நிலையை பொதுவில் அழகிரியே கூட புரிந்து கொண்டிருந்தாலும் பண்ணையார்கள் பவுசு இழந்தாலும் கவுரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்பதாக மறுப்பு தெரிவிக்கிறார். தான் தோற்போம் என்று தெரிந்தாலும் முடிந்த வரை விளையாடுவது என்பது அவர் நோக்கம். முக்கியமாக இந்த ஆட்டத்தில் அவர் பொருளாதார ரீதியாக இழக்கப் போவது ஏதுமில்லை.

சில பல ஆயிரம் கோடிகளாவது அவரது சொத்து மதிப்பில் இருக்குமென்பதாலும் அவற்றை பாதுகாக்க வேண்டிய சட்டபூர்வ சடங்குகளை கவனமாக செய்துமிருப்பார் என்பதால் வாரிசு பிரச்சினையில் அலட்டிக் கொள்வதால் அழகிரி எதையும் இழக்கப் போவதில்லை. அழகிரியின் புதிய தலைமுறை பேட்டியை பார்க்கும் போது அவர் கொஞ்சம் முட்டாள் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.

தனது சாதனையாக மதுரையில் 14 கட்டணக் கழிப்பறைகளை கட்டியதையும், உரம், மருந்து விலைகள் உயராமல் பார்த்துக் கொண்டதையும், பிறந்த நாள் விழாவில் போட்ட பிரியாணி முதலான நலத்திட்டங்களையும்  கூறும் அழகிரி அதிமுக ஆட்சி வந்ததும் தனது சாதனைகளை நிறுத்திவிட்டதாக புலம்பிக் கொள்கிறார். முக்கியமாக அவரது கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதை தெரிவிக்கிறார். பா வரிசை படங்களில் பண்ணையார்கள் உப்பரிகையிலிருந்து வீசும் சில்லறைகளின் கருணை காலத்தால் பிந்தியதென்றாலும் அழகிரி அங்கேயே நிற்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் உலகமயக்கால கட்டத்தில் அடாவடி அரசியலோ, ரவுடித்தனமோ இன்றி மாபெரும் ஆதாயங்களை சட்டப்பூர்வமாகவே சுருட்டமுடியும் என்பதால் அழகிரியின் அதிரடி அரசியல் ஃபார்முலாவுக்கு இனி வேலையில்லை என்பதே இந்த சண்டையில் அவரது தோல்விக்குரிய தத்துவ விளக்கம். மு க ஸ்டாலினது அரசியல் செயல்பாடு ஒரு வகையில் கார்ப்பரேட் உலகின் அலைவரிசையில் வருவது தற்செயலான ஒன்றல்ல. மற்றபடி காலி பெருங்காய டப்பா போல கருணாநிதி பேசும் திராவிட இயக்க சிந்தனைகளை பேச இனி திமுகவில் ஆளில்லை, தேவையுமில்லை.

தனது அறிவின்மையை விஞ்சும் விசயமாக அள்ளி வழங்கும் வள்ளல் குணத்தை அரணாக வைத்திருக்கிறார் அழகிரி. அதை வைத்தே ஆதரவாளர் கூட்டத்தை பெருக்கியும், கைத்தட்டவும் வைக்க முடியும் என்று அவர் நம்புகிறார்.

அழகிரி
எலும்புத் துண்டுகளால் ஏற்றிவிடப்பட்ட அழகிரிக்கு தன்னிடம் ஏதோ ஒரு மாஜிக் உள்ளதாகவும் அதனால் திமுகவிற்கு வாழ்வு கிடைப்பதாகவும் நம்புகிறார்.

இதை சரியாக கூறுவதென்றால் திமுக ஆட்சி செல்வாக்கில் அழகிரி வளர்த்த எடுபிடிகள் பல தொழிலதிபர்களாக, மாபெரும் புரோக்கர்களாக, கல்வி முதலாளிகளாக, அதிகார மையங்களாக வளர்ந்திருக்கிறார்கள். இப்படி அவரால் வளர்க்கப்பட்ட எலும்புத்துண்டுகள் அழகிரியை அஞ்சா நெஞ்சன் என்று ஏற்றி விடுகிறார்கள். இது பொறுக்கித் தின்னும் கூட்டம், நாளையே ஸ்டாலின்தான் ஆள் என்றால் நைசாகவோ, நெற்றியடியாகவோ முகாம் மாறிவிடுவார்கள் என்பது அழகிரிக்கு அப்போது தெரிந்திருக்காது, இப்போது தெரிந்தே ஆக வேண்டியிருக்கும்.

இப்படி எலும்புத் துண்டுகளால் ஏற்றிவிடப்பட்ட அழகிரிக்கு தன்னிடம் ஏதோ ஒரு மாஜிக் உள்ளதாகவும் அதனால் திமுகவிற்கு வாழ்வு கிடைப்பதாகவும் நம்புகிறார். இதற்கு தோதாகவே முந்தைய ஆட்சிக்காலத்தில் வந்த இடைத் தேர்தல்களில் திமுக வெற்றி பெறுகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் அழகிரி சொன்ன வாக்கு வித்தியாசத்தின் படியே முடிவுகள் வெளியாகின்றன. திருமங்கலம் ஃபார்முலா என்பதாக அழகிரியின் வெற்றி கொண்டாடப்படுகிறது. எனினும் இந்த ஃபார்முலாவை கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் முதலில் கண்டுபிடித்தவர் ‘புரட்சித் தலைவி’ என்பது வேறு விசயம். இதைப் பார்த்து பூரித்துப் போன கருணாநிதி இந்தா பிடி மகனே என்று தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை அழகிரிக்கு அளிக்கிறார். இதன் பின்னர் அழகிரி தனது எலும்புத்துண்டு வட்டத்தை தென் மாவட்டங்களுக்கு விரிக்கிறார்.

ஜனநாயகத்திற்கு கட்டுப்படாமல் அழகிரி செய்த தேர்தல் வேலைகளை கொண்டாடிய கருணாதி இன்று அதே அழகிரி உட்கட்சி ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இதுதான் தக்காளி, ரத்தம் வகைப்பட்ட ஜனநாயகம் போலும். சென்ற சட்ட மன்றத் தேர்தலில் அழகிரி முழு வீச்சுடன் செயல்பட்டாலும் திமுக மாநிலம் முழுக்க தோற்றுவிட்டது. அந்த தேர்தலோடு அதிமுக எனும் கட்சி காலி என்று முழங்கிய அழகிரியின் நெஞ்சம் எப்படி அஞ்சி சாகும் என்பது பிறகு அம்மா போட்ட வழக்குகளில் தெரிய வந்தது.

பிறகு திமுக எனும் கட்சி அமைப்புகளில் அழகிரியின் பிடியும் தளர்ந்து வந்தது. தனது சொத்துபத்துக்கள், குடும்பத்தினரை அம்மா போலிசிடமிருந்து பாதுகாப்பதிலேயே ஒடுங்கிப் போன அழகிரியை விட்டு அவரது எடுபிடிகள் எஸ்கேப் ஆனதில் வியப்பில்லை. மேலும் என்னதான் அழகிரி இப்போது தோற்றுப் போனாலும் அவர் கருணாதியின் மூத்த புத்திரன் என்பதால் என்றும் அவர் திமுகவில் ஒரு அதிகார மையமாக இருப்பார் என்ற வகையில் சில பல அடிப்பொடிகள் இன்றும் அவருடன் உறவைப் பராமரிக்கலாம். மற்ற திமுக பெருந்தலைகளும் அந்த வகையில் அழகிரியை ஒரேயடியாக உதறிவிட முடியாது. எனினும் ஸ்டாலின் முன்பு போல பீதியில் இருக்க வேண்டியதில்லை. இனி எந்த எதிர்ப்புக்கிடமின்றி அவர்தான் அடுத்த தலைவர். அதை கருணாதியே மறுத்தாலும் நடக்காது.

இப்போது அழகிரி வெளியேற்றத்தை வைத்தாவது தேமுதிக கூட்டணிக்கு வந்து வரும் தேர்தலில் குறிப்பிட்டதக்க வெற்றி பெற வேண்டும், மத்திய் ஆட்சியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதெல்லாம் கூட திமுக ஆவலுடன் எதிர்பார்க்கும் கனவுகள். அப்படியும் கேப்டன் கவிழ்த்து விட்டார் என்றால் அழகிரி வீட்டில் பிரியாணி சாப்பிடுவதற்கு கூட்டம் அலை மோதும். எனவே அழகிரி நீக்கத்திற்கு நீண்ட கால நோக்கம் இருப்பது போலவே உடனடி ஆதாயமும் கூட இருக்கிறது. என்றாலும் இந்த புத்திர சோக புராணத்தை பொருத்தமாக புனைய வேண்டாமா?

அழுகுணி ஜனநாயக ஆட்டத்தை ஆடுபவர்கள் யாரும் நேர்மையான முறையில் தத்தமது விளக்கத்தை முன்வைத்து வாதிட முடியாது. இங்கு நேர்மை என்பதை விட அதே அழுகுணி ஜனநாயகத்தை நம்பும் காரியவாதிகளுக்கு பொருத்தமான கதையும், காட்சி அமைப்புகளும் கூட தேவைதான். அழகிரி அப்பாவை அடித்தார், ஸ்டாலின் செத்துப் போவார் என்றார்,  கருணாநிதி உருகினார், அழகிரி உருவ பொம்மைகள் எரிப்பு என்பதெல்லாம் அந்த காட்சிகளின் அணிவகுப்புகள்.

நீங்கள் காட்சிகளில் மயங்குவீர்களா, கதையை கண்டுபிடிப்பீர்களா?

  1. நல்ல பதிவு. உண்மையானதும்கூட.. ஐந்தாறு அல்லக்கைகளையும், அதன் கூடவே சில அடிப்பொடிகளையும் வைத்துக்கொண்டு இதுதான் ஒரு இயக்கம் என்றும், இனி நாம்தான் அதன் தலைமை என்றும் அழகிரி கண்டுவந்த கனவுகளுக்கு கலைஞரால் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது வரவேற்க வேண்டியதே. ஒரு உறையில் ஒரு வாள் என்பதே சரி.

    • ஒரு உறையில் ஒரு வாள்…அனால், தி.மு.கா.வில் ஏகப்பட்ட “வால்கள்” உள்ளதே

  2. என்ன இருந்தாலும் அழகிரி தன்னோட அப்பாவை அடிச்சிருக்க கூடாது 🙂

    • ரீமேக் படங்களாக வந்து ஓய்ந்துபோன சூழ்நிலையில் இன்னுமொரு ரீமேக் படம்தான்..’கொல்லப் போறாருங்க’…இந்தப்படம் 1993 இல் கோபாலபுரம் புரோடக்சனில் வந்து ஜெயித்த படம்.. அந்த வருசப் படத்தின் கதையேதான் இந்த ஆண்டுப் படத்திலும் இருக்குது..கதைத் தலைப்பையும் மாத்தி இருக்காங்க ‘செத்துப் போயிடுவாருங்க’…முந்தைய படத்தில் வில்லன் கோபால்சாமி..மு.க. எழுதிய திரைக்கதை யில் புலிகளோடு சேர்ந்து கொல்லப்பார்த்த வில்லன் கோபால்சாமி, ‘ஓராண்டாக ஓடி ஓய்ந்த கரகாட்டக்காரனை விட நன்றாகவே செய்திருந்தார். ஒவ்வொரு சுடுகாட்டிலும் அவரின் அடுத்த படத்தை ஓட்டினார் ‘குற்றம் என்ன செய்தேன்’..ஆனால் அழுவாச்சிப் படமான அதை விட்டு விட்டு அடுத்த 2 வருசத்திலேயே ‘ஊழல் ராணியும் ஊதுகுழல் கோபாலும்’ படத்தை ரிலீசு செஞ்சு காமெசி டிராக்கிலேயே அசத்திட்டு இருக்கார்.. மறுபடியும் 1993 கதையை எடுத்த வசனகர்த்தா தாத்தா ‘அழகிரி’ய வில்லனா இறக்கி விட்டிருக்காரு…ஆனால் இவர் அடுத்து எடுக்கப்போகும் படத்தை ஓட்ட சுடுகாடுகள் இருக்குமான்னு தெரியாது..ஆனால் நடிகர் கோபால்சாமியின் சிவாஜி பாணியிலான நடிப்பு இவருக்கு வருமான்னு தெரியல..பார்ப்போம்..

  3. அழகிரி பிரச்சினையை கொண்டாடுவதில் பார்ப்பனர்கள் ஒரு கோடியில் நிற்கிறார்கள் என்றால், இன்னொரு கோடியில் தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள். அழகிரி சரத்குமார், கார்த்திக் அல்லது கொங்குநாட்டு கவுண்டர்கள் மாதிரி தன்னிடம் எஞ்சும் அல்லக்கைகளை வைத்து கட்சி ஒன்றை ஆரம்பித்து அதிமுக அல்லது அடுத்து மத்தியில் ஆட்சியை பிடிக்கப் போகும் ஒரு கட்சியின் நிழலில் ஒதுங்கலாம்.

    கருணாநிதி ஏற்றுக் கொண்ட பெரியாரின் கொள்கைகள் இந்த போலி ஜனநாயக அரசியலில் நிலைத்து நிற்க உகந்தது அல்ல. ஈழப் பிரச்சினை மேலெழுந்த போதும் கூட முதலில் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து சில நடவடிக்கைகளுக்கு கருணாநிதி திட்டமிட்டிருந்ததை அந்த பிரச்சினையை விருப்பு வெறுப்பற்ற முறையில் அணுக முன்வருபவர்கள் உணரலாம். நெடுமாறன், வைகோ போன்றோரின் கணக்குகள் வேறாக இருந்ததை அவர் உணர நேர்ந்ததால் தான் அவரும் நாடகமாடத் தொடங்கினார்.

    பார்ப்பனியத்திற்கு எதிரான தனது அவ்வப்போதைய வாய்ப்பேச்சால் கடைசி வரை பார்ப்பனர்களால் வெறுக்கப்படும் கருணாநிதி நிச்சயம் தான் ‘கெட்டுப்’ போனதை போன்று தனது மகன் ஸ்டாலினும் கெட்டுப் போக விரும்பமாட்டார். முன்பெல்லாம் எதிர்க்கட்சியாக திமுக இருந்தால் கருணாநிதி எவ்வித அச்சமும் இன்றி பகுத்தறிவுக் கருத்துக்களை பேசுவார். இந்த முறை அவர் எதுவும் பேசி சர்ச்சை ஆகவில்லை.

    அழகிரி பிரச்சினையை கொண்டாட பார்ப்பனர்கள் ஒரு முனையிலும், தமிழ்த்தேசியர்கள் இன்னொரு கோடியிலும் நின்று கொண்டிருக்க நமது கவலை வேறாக இருக்கிறது.

  4. பேஸ்புக்கை பார்த்தா அஜித்தா, விஜயா? செய்த்தித்தாளை திறந்தா அழகிரியா? ஸ்டாலினா? இவனுகாதான் பிறந்தானுகளா தமிழ்நாட்டுல நாம் எல்லாம் தேவையில்லாம பிறந்திட்டமா ?

  5. எப்படியோ திமுக பற்றிய செய்திகளை தலைப்பு செய்திகளாக்கி கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சியும் , பொது மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தும் ஆதாயம் தேடிக் கொண்டது கருணாநிதி நிறுவனம் .. அதிமுக பக்கமும் இது போன்ற தலைப்பு செய்தி முயற்சிகளை எதிர்பார்க்கலாம் ..

  6. 1,50,000 தமிழர்களின் மரணத்தின்போது,வாயையும் சூ…..யும் பொத்திகொண்டு இருந்த
    தி.மு.க…தனது மகனின் மரணத்தை இன்னொரு மகன் நாள் குறிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது ஏன்?

    • தி.மு.க எதுவும் செய்யவில்லையா? உலக புகழ் பெற்ற 3 மணி நேர உண்ணாவிரதத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அந்த மாபெரும் தியாகத்தை மறைக்க முயல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

  7. நான் நேரடியாகவே கேக்கிறேன் அரச வழக்கம் என்ன? மூத்த மகனுக்குதானே வாரிசு உரிமையில் முன்னுரிமை.அழகிரி கேப்பதில் என்ன தவறு?

    என்னது மு.க.முத்துதான் மூத்தமகனா? அவரொன்றும் பட்டத்து ராணியின் வாரிசு இல்லை அறிவிலிகளே

    என்னது தி.மு.க ஜனநாயக கட்சியா? இந்த வீணர்களை பார்த்து விலா நோக சிரிப்பதை தவிற வேறு வழி இல்லை.

  8. தி.மு.க என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம். மற்ற திராவிட விளக்கம் எல்லாம் அப்புறம் தான். முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு கிடந்த போது தன் குடும்பத்தினருக்கு மந்திரி பதவி கேட்டு தில்லியில் பேரம் பேசிக்கொண்டிருந்த தலைவரையும் சிறிதும் மான ரோசமில்லாத தொ(கு)ண்டர்களையும் கொண்ட அமைப்பு இது. இந்த கட்சியின் அரை நூற்றாண்டு கால அரசியலால் தமிழகமும் தமிழர்களும் அறிவார்ந்த ரீதியில் தேங்கிப்போன சமூகமாகிப்போனார்கள். இந்த கட்சியை சேர்ந்தவர்கள் செய்த அசட்டுத்தனமான காரியங்களால் தமிழ் சினிமாவும் தற்கால தமிழ் இலக்கியமும் நிறைய புதியவர்கள் வந்த பின்னரும் கூட உருப்படாமல் தான் உள்ளன. இந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் பார்ப்பணர்களை திட்டியதால் அகில இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் அதிகார மட்டங்களில் வளைய வரும் பார்ப்பணர்களுக்கு தமிழர்கள் மீது அத்தனை வன்மம் உள்ளது. இந்த கட்சியால் தமிழக மக்கள் பலன் அடைந்ததை விட பறி கொடுத்தது தான் அதிகம்.

  9. இப்படி அடித்துக்கொண்டால் குடிகாரன் கட்சியோடு எப்படி கூட்டணி உருவாகும்? தேர்தல் முடிகிற வரைக்குமாவது அடக்கிக்கிட்டு இருங்கப்பா!

  10. பெரியசாமி சார் ரொம்பச் சரியாகச் சொன்னீங்க. அப்பாவை மகன் அடிச்சானாம்! அண்ணன் தம்பியைக் கொல்லப் பாக்கிறானாம் அதுக்கு அரசுப் பாதுகாப்பு கொடுக்கணுமாம். அசத்தலான குடும்பம்தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க