privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஆம் ஆத்மி : தவளைக்கும் எலிக்கும் கல்யாணமாம்...!

ஆம் ஆத்மி : தவளைக்கும் எலிக்கும் கல்யாணமாம்…!

-

தில்லி மாநிலத்தின் ஆட்சியில் அமர்ந்து ஒரு மாதம் கூட முடியவில்லை; ஆம் ஆத்மி கட்சி கலகலத்துப் போயுள்ளது. ஜனவரி 26 அன்று அந்தக் கட்சியைச் சேர்ந்த வினோத் பின்னி என்பவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் ஆம் ஆத்மி கட்சி சார்பாக தில்லி சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்டு சட்ட மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர் என்பது குறிபபிடத்தக்கது.

வினோத் பின்னி
வினோத் பின்னியின் அறச்சீற்றம்

கடந்த ஜனவரி 16-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த வினோத் பின்னி, ஆம் ஆத்மி கட்சி மக்களை ஏமாற்றி விட்டதாக பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இலவசமாக 700 லிட்டர்கள் தண்ணீர் வழங்குவது குறித்து கூறும் போது, “700 லிட்டர்களுக்கு மேல் பயன்படுத்துவோர் முழு அளவு தண்ணீருக்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தேர்தல் அறிக்கையில் சொல்லப்படவில்லை” என்றார். இதே விதமான குற்றச்சாட்டை மின்சார குறைப்பு தொடர்பான அரசு நடவடிக்கைகளின் மேலும் வைத்தவர், கேஜ்ரிவால் ஒரு சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும், ஜன்லோக்பால் அமைப்பை உருவாக்குவது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

இவரது இந்த ’அறச்சீற்றம்’ பத்திரிகைகளில் வெளியாவதற்கு சில நாட்கள் முன்பு தான், அமைச்சரவை அமைப்பது குறித்தும் யார் யார் அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்கள் என்பது குறித்தும் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் விவாதக் கூட்டம் ஒன்றிலிருந்து பாதியிலேயே ஆத்திரத்தோடு அவர் வெளியேறிய செய்தியும் வெளியானது. மேலும், தனக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பதால் வினோத் பின்னி கட்சியின் மேல் அதிருப்தியுற்று இருக்கிறார் என்கிற செய்திகளும் வெளியானது.

வினோத் பின்னி தன்னை அமைச்சராக்கும் படி கோரியதாகவும், அது மறுக்கப்படவே லோக் சபைத் தேர்தலில் எம்.பி சீட் கொடுக்கும் படி வலியுறுத்தியதாகவும், அந்தக் கோரிக்கையும் மறுக்கப்படவே கட்சி விரோத நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாகவும் இந்தக் காரணங்களுக்காக அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார் என்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஜனவரி 26-ம் தேதியன்று ஊடகங்களுக்கு சுருக்கமான அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது ஒருபக்கமிருக்க, ஆம் ஆத்மி கட்சியின் சோம்னாத் பாரதி என்கிற அமைச்சர் ஒருவர், கடந்த 17-ம் தேதி தனது ஆதரவாளர்கள் கும்பலுடன் தில்லியின் கீர்க்கி எக்ஸ்டென்ஷன் என்கிற பகுதியில் இரவு ’ரோந்து’ சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் வசித்து வந்த ஆப்ரிக்க பெண்கள் சிலரை சுற்றி வளைக்கும் சோம்நாத் பாரதி தலைமையிலான கும்பல், அவர்கள் தில்லியில் தங்கி விபச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் போதைப் பொருட்களை புழக்கத்தில் விடுவதாகவும் கூச்சலிட்டுள்ளனர்.

அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை வரவழைக்கும் பாரதி, அப்பெண்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். மேலும் அப்பெண்களிடம் போதை மருந்து சோதனைக்காக அவர்களின் சிறுநீர் மாதிரிகள் தேவை என்று சொல்லி பொதுவிடத்திலேயே அதை எடுத்துக் கொடுக்குமாறு மிரட்டியிருக்கிறார். போலீசாரோ இது போல் திடீர்க் கைது நடவடிக்கைகள் சாத்தியமில்லை என்றும் அது விதிகளுக்குப் புறம்பானது என்றும் சொல்லி மறுத்துள்ளனர்.

சோம்நாத் பாரதி
சோம்நாத் பாரதியின் அராஜகம்

ஆப்ரிக்கப் பெண்களை இவ்வாறு கும்பலோடு சென்று மிரட்டிய இந்தச் சம்பவத்திற்கு எதிராக பெண்கள் அமைப்புகள் தெருவில் இறங்கிப் போராடி வருகிறார்கள். பாரதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தி சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பெண்கள் அமைப்புகள் கோரிவருகின்றன. ஆம் ஆத்மியை அதுவரை தாலாட்டி வந்த முதலாளித்துவ ஊடகங்கள் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கண்டிக்கத் துவங்குகின்றன.

தனது அமைச்சரின் அராஜக நடவடிக்கைகள் பொதுமக்களால் காறி உமிழப்படும் அளவுக்கு அம்பலமாகிய பின்னர் கேஜ்ரிவால் மொத்தக் கதையையும் திசை திருப்பும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் ஒன்றை அறிவிக்கிறார். தில்லி மாநில காவல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலிருப்பதாகவும், அதை உடனடியாக மாநில அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து தர்ணாவில் ஈடுபடுகிறார். மேலும், ஜனவரி 17-ம் தேதி சோம்நாத் பாரதியிடம் ஆப்ரிக்க பெண்களை கைது செய்ய மறுத்த காவல் துறை அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் கோருகிறார்.

ஓரிரு நாட்கள் நடந்த தர்ணா ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னும் மத்திய காங்கிரசு அரசு அசைந்து கொடுக்க மறுக்கிறது. இதற்கிடையே முதலாளித்துவ ஊடகங்களோ இந்தப் போராட்டங்களால் சாதாரண மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்று கண்ணீர்க் கதைகளை அவிழ்த்து விட்டு தாமும் முதலைக் கண்ணீர் வடிக்கத் துவங்கின.

கோரிக்கை நிறைவேறும் வழியும் இல்லாமல், தனது ’புகழும்’ ஊடகங்களால் காயப்படுவதை உணர்ந்த கேஜ்ரிவால், முதலில் சொன்ன ‘அதிகாரிகள் நீக்கப்பட வேண்டும்’ என்கிற கோரிக்கையை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டே வருகிறார். ‘தற்காலிக நீக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ஆரம்பித்து, ‘பணி மாறுதல் செய்ய வேண்டும்’ என்று இறங்கி வந்து ‘கட்டாய விடுப்பில் அனுப்பப் படவேண்டும்’ என்று கடைசியாக சுருதி குறைந்தார்.

அரவிந்த் கேஜ்ரிவால்
கேஜ்ரிவால் கோப்பை வாங்கிய நாச்சியப்பன் பாத்திரக்கடை

இறங்கி இறங்கி அதற்கு மேல் பள்ளம் தோண்டித் தான் இறங்க வேண்டும் என்ற நிலைக்கு கேஜ்ரிவாலைத் தள்ளிச் சென்ற மத்திய காங்கிரசு அரசு கடைசியில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை சம்பளத்துடன் கூடிய விடுப்பில் அனுப்பி வைத்தது – கேஜ்ரிவாலும் ‘வெற்றி வெற்றி’ என்று நாச்சியப்பன் பாத்திரக்கடையில் வாங்கிய அலுமினிய கோப்பையில் பொறித்து வைத்துக் கொண்டார்.

வடக்கில் இந்த கோமாளிக் கூத்துகள் நடந்து கொண்டிருக்கும் போதே தெற்கில் இடி இடிக்க ஆரம்பித்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியினர் இரண்டு கோஷ்டிகளாக பிரிந்து நின்று அடித்துக் கொண்டனர். கரூரில் என்.ஜி.ஓ ஒன்றை நடத்தி வரும் கிறிஸ்டினா தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். அக்கட்சியின் மாநில செயலாளராக பாலகிருஷ்ணன் என்பவர் இருந்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தனித்தனியே ஒரு கோஷ்டியை உருவாக்கிக் கொண்டு தாங்கள் தான் உண்மையான தமிழக  ஆம் ஆத்மி கட்சி என்று தங்களுக்குள் மோதிக் கொண்டதோடு ஒருவர் மேல் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி காவல்துறையில் புகார்களும் அளித்து வந்தனர்.

தமிழக ஆம் ஆத்மி கட்சியின் ‘செயல்பாடுகள்’ இப்படி புழுத்து நாறத் துவங்கியதும் கடந்த 19-ம் தேதியன்று சென்னை வந்தார் அக்கட்சியின் மத்திய தலைவர்களில் ஒருவரான பிரஷாந்த் பூஷன். வந்தவர் கட்சியை சீரமைக்கும் முயற்சியாக கிரிஸ்டினாவின் எதிர்கோஷ்டியைச் சேர்ந்தவர்களை அமைப்பு விரோத நடவடிக்கைகளுக்காக கட்சியை விட்டே நீக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர். கிரிஸ்டினா தலைமையிலான கோஷ்டியினரும் எதிர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை கட்டுக்கடங்கடங்காமல் செல்லவே பிரஷாந்த் பூஷன் மேடையின் பின்பக்கமாக வெளியேறித் தப்பித்துள்ளார்.

பிரஷாந்த் பூஷன்
பின்பக்கமாக வெளியேறிய பிரஷாந்த் பூஷன்

மேலே சுருக்கமாக விவரிக்கப்பட்டவைகள் கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த சில சம்பவங்கள் மட்டுமே. இந்திய அரசியலைத் தூய்மைப்படுத்துவதற்காகவே அவதரித்துள்ளதாகவும் மற்ற அரசியல் கட்சிகள் போலன்றி ‘வித்தியாசமான’ கட்சி என்றும் முன்னிறுத்தப்படும் ஆம் ஆத்மி கட்சியில் நடக்கும் இந்தக் கோமாளித்தனங்களை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது?

இவையனைத்திற்குமான காரணம் அக்கட்சியின் மரபணுவிலேயே இருக்கிறது என்பது தான் சரியான விளக்கம். அதைப் புரிந்து கொள்ளும் முன் வாசகர்கள் காலச்சுவடில் வெளியான அக்கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவரான யோகேந்திர யாதவின் இந்த பேட்டியைப் படிக்க வேண்டியது அவசியம்

யோகேந்திர யாதவ் அளித்திருக்கும் பேட்டியிலிருந்து முக்கியமான ஒரு பகுதியை மட்டும் கீழே பார்க்கலாம்,

தண்ணீர், மின்சாரம், எரிவாயு போன்ற விஷயங்களில் நடந்துள்ள தனியார்மயமாக்கல் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் மாறும் என்ற ஒரு எண்ணம் இருக்கிறதே?

கடந்த காலத்திய இருமைகள் பற்றிய பார்வையிலிருந்து எழும் பார்வை இது. சமூக இயக்கங்களும் புரட்சியாளர்களும் அவர்களது திட்டங்களுக்கு ஏற்ப நாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விரும்புவதைப் போலவே இந்தப் பிரிவினையின் எதிர்ப்பக்கத்தில் இருப்பவர்களும் உலகை அதே பிரிவுகளின் அடிப்படையில்தான் பார்க்கிறார்கள். தங்களுக்கு வேண்டிய சிறு குழுவிற்காக இயங்கும் முதலாளித்துவத்தை நீங்கள் கேள்விக்குட்படுத்தினால், ரிலையன்ஸ் மற்றும் பிறர் செய்யும் ஊழல்களைக் கேள்விக்குட்படுத்தினால், அரசாங்கம், அதிகாரிகள், நிறுவனங்கள் ஆகியவர்களின் கூட்டைப் பற்றிப் பேசினால் சிவப்பு வருகிறது, சோசலிஸ்டுகள் வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. துரதிஷ்டவசமாக அவர்களது உலகில் இந்தப் பிரிவுகள் மட்டுமே இருக்கின்றன. இந்த விஷயத்தில் நாங்கள் உறுதியான நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறோம்: ஆதாரங்களைப் பார்க்கும் முன்னர் ஏன் நாம் முடிவெடுக்க வேண்டும், பிரச்சினையின் பிரத்யேகத் தன்மைகளை ஆராயும் முன்னர் ஏன் முடிவெடுக்க வேண்டும், பொதுத்துறைதான் எல்லாவற்றிற்கும் தீர்வு அல்லது தனியார்துறைதான் எல்லாவற்றிற்கும் தீர்வு என்று ஏன் முடிவெடுக்க வேண்டும்? 60களில், 70களில் நடந்த பொருளாதார விவாதங்களில் குறிக்கோள்கள் மற்றும் அவற்றை அடையும் வழிகள் பற்றிப் பெரும் குழப்பம் இருந்தது. இதில் தவறு இடதுசாரிகள் பக்கமே. குறிக்கோள்தான் முக்கியம். ஆனால் கடைக்கோடி மனிதனுக்கு நல்லது நடப்பது விஷயங்களை அரசாங்கம் தன் கையில் எடுத்துக்கொள்வதன் மூலமா அல்லது வேறு யாரையாவது செய்யச் சொல்லிக் கேட்டுக்கொள்வதன் மூலமா என்பதைப் பற்றிய முடிவை அவ்வப்போதைய சூழலுக்கு விட வேண்டும், அனுபவ அடிப்படையில் கிடைக்கும் அறிவிற்கு விட வேண்டும். அவ்வப்போது உருவாகும் இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்கு நான் ஏன் கோட்பாட்டு, சித்தாந்த அடிப்படையிலான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும்? நமது சொந்த வாழ்க்கையிலேயே மருந்துகள் விஷயத்தில் இத்தகைய நிலைப்பாட்டை நாம் எடுப்பதில்லை.

இந்த சிக்கலான தத்துவ விசாரத்தை சென்னை மொழியில் சுருக்கிச் சொல்வதாக இருந்தால் ‘ஊத்திகினும் கடிச்சிக்கலாம், கடிச்சிகினும் ஊத்திக்கலாம்’ என்பதாகவே முடியும் – எப்படியென்று பின்னர் பார்க்கலாம்.

யோகேந்திர யாதவ்
‘ஊத்திகினும் கடிச்சிக்கலாம், கடிச்சிகினும் ஊத்திக்கலாம்’

அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு யோகேந்திர யாதவ் போன்ற அறிவுஜீவி அடையாளங்கள் ஏதுமில்லாததால் எந்தப் பூசிமொழுகலும் இல்லாமல் நேர்மையாக பதிலளித்துள்ளார் –  “நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலாவதாக நாங்கள் எந்த சித்தாந்தத்துக்கும் தாலி கட்டிக் கொள்ளவில்லை. இரண்டாவதாக, தொழில்துறையில் அரசாங்கத்துக்கு வேலை இல்லை. கார்ப்பரேட் துறை நாட்டில் மிகப்பெரும் பாத்திரத்தை ஆற்ற வேண்டும். சில பேரைத் தவிர, பெரும்பாலான தொழிலதிபர்கள் ஊழலுக்குப் பலியானவர்கள்தான். அவர்கள் ஊழலை ஊக்குவிப்பவர்கள் அல்ல” என்று ஓபன் மேகசீன் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, யோகேந்திர யாதவ் அளித்துள்ள பதிலில் அவர் தனியார்மயத்தை எதிர்த்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது ஆச்சர்யத்துக்குரியதல்ல – ஏனெனில், தனியார்மய தாராளமய உலகமய கொள்கைகளை எதிர்ப்பதன் வழியாக ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பை முன்னெடுக்கும் அருகதை இந்தியாவில் நக்சல்பாரிகளைத் தவிர வேறு எவருக்குமே இல்லை என்பது தான் எதார்த்தம். எனவே அதையெல்லாம் ஆம் ஆத்மி கட்சியிடம் எதிர்பார்த்து நாம் ஏமாறத் தேவையில்லை.

எனினும், யோகேந்திர யாதவ் இத்தனை கவனமாக தனது பதிலைப் பூசி மொழுக வேண்டிய தேவை என்ன? அவர் சொல்லவிழையும் கருத்தின் பொருள் என்ன?

இந்த பதில் மட்டுமின்றி யோகேந்திர யாதவ் அளித்துள்ள பேட்டி நெடுக அடிநாதமாக ஒலிக்கும் செய்தி இது தான் – “தத்துவம் கொள்கை கோட்பாடுகள் என்று முன்கூட்டியே திட்டங்களை வைத்துக் கொண்டு எதையும் அணுக கூடாது. அந்தந்த நேரத்தில் எது எப்படி வருகிறதோ அதை அப்படி எதிர்கொள்வது”

ஆம் ஆத்மி நம்மிடம் சொல்வது என்ன? தண்ணீர் வரவில்லையா, மின்சாரம் கிடைக்கவில்லையா, வேலையில்லையா, தொழில் முடக்கமா, பொருளாதார தேக்கமா, குடிப்பழக்கமா – இன்னும் சமூகத்தில் என்னென்ன சீர்கேடுகள் உள்ளனவோ அத்துனைக்குமான காரணம்  – ஊழல்…! இந்த ஊழலை மட்டும் ஒழித்து விட்டால் எல்லா பிரச்சினைகளும் காணாமல் போய் விடும். ஊழல் ஒழிப்பு ஒன்றே அனைத்துக்குமான சர்வரோக நிவாரணி.

இதை எப்படிச் சாதிக்கலாம் என்பதற்கும் ஆம் ஆத்மியிடம் பதில் இருக்கிறது. லோக்பால் அமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் ஊழல் ஒழிந்து விடும். ஊழல் என்பதற்கு ஆம் ஆத்மி வைத்திருக்கும் விளக்கத்தின் படி அவர்கள் சொல்லும் பிரச்சினையின் ஆணி வேர் மட்டுமல்ல, அதன் சல்லி வேரைக் கூட தொடவில்லை. ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் கார்ப்பரேட் லாப வெறியாட்டம் குறித்து இது வரை அக்கட்சி மூச்சு விடவில்லை – மூச்சு விட மாட்டோம் என்று கேஜ்ரிவால் தெளிவாகவே சொல்லி விட்டார்.

ராம் மனோகர் லோகியா
ராம் மனோகர் லோகியா

இது ஆம் ஆத்மியின் சொந்தக் கண்டுபிடிப்பின் முடிவுகள் அல்ல – அது அக்கட்சி பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்கத் தட்டுகளின் அபிலாஷைகள் மற்றும் அரசியல் கண்ணோட்டங்கள். ஐ.ஐ.டி. பட்டதாரிகள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களின் உயர் பதவி வகித்தவர்கள், ஐ.ஏ.எஸ். ஆக முயற்சிப்பவர்கள், பலவிதமான தன்னார்வக் குழுக்களை இயக்குபவர்கள் – இவர்கள் தான் இக்கட்சியின் முன்னணியாளர்கள். இவர்கள் அனைவரும் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தான் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுத் தளம். இந்தக் குட்டையிலிருந்து தோன்றி வளர்ந்தது தான் ஆம் ஆத்மி கட்சி.

இந்த வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தம்மளவிலேயே தனித் தனித் தலைவர்கள். அமைப்புக் கட்டுப்பாடு, மத்தியத்துவம் போன்றவற்றுக்கு கொள்கையளவிலேயே விரோதமானவர்கள். ஆம் ஆத்மியில் இவர்கள் சங்கமித்தது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. ஆம் ஆத்மி கட்சியின் கொள்கையிலேயே இந்த தனியாவர்த்தன கோஷ்டிகளுக்கான அடிப்படைகள் உள்ளன.

ஆம் ஆத்மியின் முக்கியமான கொள்கை வகுப்பாளரான யோகேந்திர யாதவ், ராம்மனோகர் லோகியாவின் சீடரான கிஷன் பட்நாயக்கின் மாணவர். ராம் மனோகர் லோகியா என்கிற ஆலமரத்தின் பிற விழுதுகள் லாலுபிரசாத் யாதவ், பாஸ்வான், கான்ஷிராம், மாயாவதி போன்ற சமூக நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள். கிஷன் பட்னாயக் தனது அரசியல் வாழ்வை ராம் மனோகர் லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சியில் துவங்குகிறார்.

கிஷன் பட்னாயக்கின் 27வது வயதில் சோஷலிஸ்ட் கட்சி சார்பில் பாராளு மன்றத்திற்கு தேர்த்தெடுக்கப்படுகிறார். பின்னர் அவரது 40வது வயதில் சோஷலிஸ்டு கட்சி சிதறி ஜனதா கட்சியில் ஐக்கியமாகிறது – பின்னர் ஜனதா கட்சியும் பல துண்டுகளாக சிதறிப் போகிறது. இதற்கிடையே ஜனதா கட்சியில் சேராமல் தனித்துச் செயல்படும் கிஷன் பட்னாயக் பல்வேறு மக்கள் இயக்கங்களைக் கட்ட 70-களில் இருந்தே முயற்சி செய்து வந்துள்ளார். யோகேந்திர யாதவின் வார்த்தைகளின் படி – “இனி இந்த நாட்டில் அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவதில் அரசியல் கட்சிகளுக்கு எந்தப் பங்குமிருக்காது” என்பதை உறுதியாக, முழுமையாக நம்பினார்.

80-களில் இருந்து இரண்டாயிரங்களின் மத்தியில் இறக்கும் வரை கிஷன் பட்னாயக் பல அமைப்புகளைக் கட்ட முயன்று தோல்வியடைந்துள்ளார். சூழலியல், பெண்ணியம், அணைக்கட்டுகளுக்கு எதிராக என்று பல்வேறு பகுதிப் பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் என்.ஜி.ஓக்களுக்கு இணைப்பாக விளங்கும் அமைப்பு ஒன்றைக் கட்ட முயன்று தோற்றுள்ளார் கிஷன் பட்னாயக். அவரது முயற்சிகளுக்கு உதவியாக மட்டுமின்றி 95-ல் அவர் ஏற்படுத்திய கட்சியின் கொள்கை ஆவணத்தை உருவாக்குவதிலும் யோகேந்திர யாதவ் துணை நின்றுள்ளார்.

கிஷன் பட்னாயக்
யோகேந்திர யாதவின் குரு கிஷன் பட்னாயக்

பின்னர் 2004 மற்றும் 2009-ல் நீதிபதி ராஜேந்தர் சாச்சர், குல்தீப் நய்யார், சுவாமி அக்னிவேஷ், அருணா ராய் மற்றும் மேதா பட்கர் ஆகியோருடன் இணைந்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சிகளில் இணைகிறார். தோல்வியில் முடியும் இந்த முயற்சியிலிருந்து மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றுக் கொண்டதாக யோகேந்திர யாதவ் சொல்கிறார். அதில் நமது கவனத்திற்குரிய பாடம் இதோ யோகேந்திர யாதவின் மொழியிலேயே –

இவர்கள் தம் கைவசம் இருக்கும் முன்வரவுக்கு ஏற்ப வரலாறு ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களிடம் திட்டம் இருக்கிறது. தலைமையேற்க வேண்டியவர்கள் யார், இயக்கத்தின் வடிவமும் அளவும் எப்படி, எவ்வளவு இருக்க வேண்டும், அது எப்போது நடக்க வேண்டும் என எல்லாம் அதில் இருக்கிறது. இது மார்க்சீயத்தின் வழிவந்த கொடை என்று நினைக்கிறேன். அதன்படி செயலுக்கு முன்னரே அது குறித்த வரைபடம் உங்களிடமிருக்க வேண்டும். ஒரு வகையில், அந்த வரைபடத்தின் அடிப்படையில் நீங்கள் யதார்த்த வாழ்க்கையின் நிகழ்வுகளைத் திட்டமிட வேண்டும். அவை அந்த வரைபடத்திற்கு ஒத்து வரவில்லையென்றால் அது புரட்சிகரமானதில்லை. தங்களது முன்வரைவுக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக யதார்த்தத்தில் உருவான பல முற்போக்கான, புரட்சிகரமான இயக்கங்களுக்கு எதிராக அவர்கள் இருந்தார்கள்

ஆக, எதைக் குறித்தும் பருண்மையான ஆய்வுகளோ,  திட்டங்களோ தேவையில்லை என்பதே யோகேந்திர யாதவ் வந்தடைந்த முடிவு. பரந்துபட்ட மக்களைத் திரட்ட உணர்ச்சிகரமான முழக்கங்களும் எளிமையான காரணங்களுமே போதும் என்பது அவர் அடைந்த தீர்வு. இந்த தத்துவம் நடுத்தரவர்க்க அறிவுஜீவித்தனத்தை அத்துணை எளிமையாக கவர்ந்திழுப்பது ஆச்சர்யமளிக்கும் விசயமே அல்ல.

அடைய வேண்டிய லட்சியம் குறித்த தெளிவான அமைப்பு ரீதியிலான வழிகாட்டுதல், அர்ப்பணிப்புணர்வுடன் பற்றுறுதியுடன் எந்தச் சலிப்புமின்றி நீடித்து நிலைத்து நின்று செயலாற்றுவதன் அவசியம், அமைப்புக் கட்டுப்பாடு, மத்தியத்துவத்திற்கும் அதன் வழி அமைப்பின் பிற அங்கத்தினரின் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டிய தேவை – இவையெதுவும் ஆம் ஆத்மி கட்சியினருக்குத் தேவையில்லை.

அந்தந்த சீசனுக்கு பொருத்தமான முழக்கங்களுடன் முளைக்கும் காளான்தனமான எழுச்சிகளே போதுமானது – இதைத் தான் அவர்கள் ’ஒட்டுமொத்த புரட்சி’ என்கிறார்கள். உலகமயமாக்கல் காலகட்டத்தில் தற்போது மேற்கில் துவங்கி இந்த பூமிப்பந்தையே கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பு நெருக்கட்டி மேலும் மேலும் மூன்றாம் உலக நாடுகளின் வளங்கள் சுரண்டப்படுவதைக் கோருகிறது. பொதுத்துறைகள் தனியாருக்குத் தாரைவார்ப்படுவது, இயற்கை வளங்கள் கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்வது என்று செயல்படுத்தப்படும் அசுர வேகத்தில் முறைகேடுகள் இயல்பாகவே அம்பலமாகி வருகிறது. ஆக, இது ஊழல் எதிர்ப்பு சீசன்..!

மேல்மட்டத்தில் மறுகாலனியாக்கத் தனியார்மயத்திற்கான நடவடிக்கைகளைத் தக்கவைத்துக் கொள்ளும் அதே நேரம், அதன் விளைவாக எதிர்பாராமல் மக்களிடம் கசிந்து விடும் ‘ஊழல்’ குற்றச்சாட்டுகளை சமாளிக்க கீழ்மட்டத்தில் ‘ஊழல்’ எதிர்ப்பு அவர்களுக்குத் தேவைப்படுகிறது. ஆம் ஆத்மி அவதரிக்க வேண்டியதன் தேவை இதில் தான் இருக்கிறது. அவர்களும் மக்கள் எதிர்ப்பை நிறுவனமயப்படுத்தி மழுங்கடிப்பதற்குப் பொருத்தமான ‘தத்துவங்களுடன்’ களமிறங்கியிருக்கிறார்கள்.

மேற்படி ‘தத்துவமானது’ அதன் சாராம்சத்திலேயே நடுத்தரவர்க்க கட்டுப்பாடின்மைக்கும் தான் தோன்றித்தனத்திற்கும், மக்களுக்கு மேலாக தங்களைத் தலைவர்களாக கருதிக் கொள்வதற்கும் போதுமான அளவுக்கு இடமளிக்கிறது. அதன் தவிர்க்கவியலாத விளைவுகளே தற்போது இது போன்ற கேலிக்கூத்துகளாக ஊடகங்களின் மூலம் சந்தி சிரிக்கத் துவங்கியுள்ளது.

ஆளும் வர்க்கத்தின் அயோக்கியத்தனங்களை மறைக்க ‘புரட்சி’ வேடம் போடும் ஆம் ஆத்மியை இதற்கு மேலும் விளக்க வேண்டுமா?

–    தமிழரசன்.