Monday, August 15, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் SRF மணலி தொழிற்சங்கத் தேர்தலில் பிழைப்புவாதிகளை வீழ்த்திய புஜதொமு

SRF மணலி தொழிற்சங்கத் தேர்தலில் பிழைப்புவாதிகளை வீழ்த்திய புஜதொமு

-

டந்த 30.01.2014 அன்று நடந்து முடிந்த SRF மணலி தொழிற்சங்க தேர்தலில் பிழைப்புவாத வக்கீல் பிரகாஷை வீழ்த்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அபார வெற்றியடைந்துள்ளது. புஜதொமு சார்பாக போட்டியிட்ட அனைத்து நிர்வாகிகளும் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 500 பேர் வேலை செய்யும் இந்நிறுவனத்தில், தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பு.ஜ.தொ.மு தலைமை தாங்கி வருகிறது.

புஜதொமுஏற்கனவே பல வருடமாக இயங்கி வரும் குசேலர் தலைமையிலான ”நலமன்றம்” அணியும், வக்கீல் பிரகாஷ் தலைமையிலான ”ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டணி” (ULF) என்று அவர்கள் சொல்லிக்கொள்ளும் அணியும் (ULF என்று தான் துவங்கிய அமைப்பை பிரகாஷ் பயன்படுத்தி வருவது தவறு என T.V.பரமசிவம் வழக்கு தொடுத்துள்ளார்) புஜதொமுவுக்கு எதிராக ”ஜனநாயகத் தொழிலாளர் கூட்டணி” என்ற பெயரில் கூட்டணி அமைத்துக் கொண்டு இயங்கிய போதும் அதை எதிர்கொண்டு இந்த வெற்றியை ஈட்டியுள்ளோம்.

குசேலர் ஒரு துரோகி என்று பிரகாஷ் அணியினரும், பிரகாஷ் ஒரு துரோகி என்று நலமன்றமும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பேசியும் எழுதியும் வந்துள்ளனர். ஆனால் கடந்த 2012 தொழிற்சங்கத் தேர்தலில் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு பதவி சுகத்துக்காக நலமன்றம் அணியினர் சென்று வக்கீல் பிரகாஷிடம் தஞ்சம் புகுந்தனர். ”கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பது போல் கடந்த தேர்தலில் செல்லாத ஓட்டு போட்டு மதில் மேல் பூனை நிலையில் இருந்தனர்.

தொழிலாளிகள் வாழ்நிலைமைகள் குறித்தோ, தொழிலாளி வர்க்கத்தின் கடமைகள் குறித்தோ எந்த அக்கறையுமில்லாமல் “நீ ஒரு வருடம் பொதுச்செயலாளர் பதவியை அனுபவித்துக் கொள், நான் ஒரு வருடம் அனுபவித்துக் கொள்கிறேன்” என ஒப்பந்தம் போட்டுக்கொண்டு பதவி சுகத்துக்காக எத்தகைய கீழ்த்தரமான செயலையும் செய்யத் துணியும் இந்த பிழைப்புவாதிகளை தொழிலாளிகள் மத்தியில் தனிமைப்படுத்தி வெற்றி கண்டுள்ளது புஜதொமு..

  • ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடந்து வரும் நிலையில், பேச்சுவார்த்தையில் நாம் இனிமேல் நிரந்தரம் செய்யப்படும் தொழிலாளிகளுக்காகவும், இப்போதுள்ள தொழிலாளிகளுக்காகவும், ஒப்பந்த காலத்தில் பணி ஓய்வு பெற்று சென்ற தொழிலாளிகளுக்காகவும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டு பேசியது,
  • என்ன பேசினோமோ அதை எழுத்துபூர்வமாக தொழிலாளிகளுக்கு தெரிவித்தது,
  • இதுவரை SRF தொழிற்சங்க வாலாற்றிலேயே இல்லாத வகையில் பொதுக்குழுவைக் கூட்டி அதில் ஒப்பந்த பேச்சுவார்த்தையின் சாராம்சத்தை விளக்கியது,
  • அதில் எழும் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தது

போன்ற ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான செயல்பாடுகளினால் தொழிலாளிகள் புஜதொமுவின் மீது நம்பிக்கை கொண்டு நம்மை ஆதரித்தனர். குறிப்பாக தங்களுடைய 30 வருட கால அனுபவத்தில் இது போன்றதொரு வெளிப்படையான நேர்மையான தலைமையை தாங்கள் பார்த்ததேயில்லை என்று மூத்த தொழிலாளிகள் நம்மை வாழ்த்தியுள்ளனர்.

நம்முடைய இந்த செயல்பாடானது எதிரணியினரை கலக்கமுறச் செய்துள்ளது. என்ன செய்வதென தெரியாமல், நம்மை எப்படி கையாள்வது என்று புரியாமல் இருந்த போது தான் அவர்களின் பிழைப்புவாத புத்தி வேலை செய்ததுள்ளது.

மூத்த தொழிலாளிகளை நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டால் தோல்வி உறுதி என்று புரிந்து கொண்டனர். ஏற்கனவே நவ-7 நத்தம் காலனி ஆதிக்க சாதி வெறி தாக்குதலை கண்டித்து புதிய ஜனநாயகம் பத்திரிகையில் எழுதியதால் நம் மீது அதிருப்தியில் இருந்த தொழிலாளிகளின் மத்தியில் உள்ள சாதிய கண்ணோட்டத்தை வளர்க்க ஆதிக்க சாதியை சேர்ந்த இளந்தொழிலாளியை முன்னிருத்தி சாதி அடிப்படையில் தொழிலாளர்களை பிளவுபடுத்தி ஓட்டு பெற்றுள்ளனர்.

தன்னுடைய கொள்கையைச் சொல்லி ஓட்டுக் கேட்க துப்பில்லாமல் “நாம் ஒரே பகுதியிலிருந்து வருகிறோம், நாம் ஒரே வழித்தடத்தில் ஆலைக்கு வருகிறோம், நாம் ஒரே துறையில் பணிபுரிகிறோம் என்று தொழிலாளிகளை பிளவுபடுத்தும் வேலையை செய்து ஓட்டு கேட்டுள்ளனர்.

மறுபுறம் மதுவிற்கு அடிமையாகி உள்ள தொழிலாளிகளை இனங்கண்டு அவர்களை கவனிப்பதற்காகவே தனிக் குழுவை உருவாக்கி அவர்களுக்கு தன் சொந்த செலவில் மது வாங்கி கொடுத்து ஓட்டு கேட்டுள்ளனர். தன் லாப வேட்டைக்காக தொழிலாளிகளின் உயிரையும் கொல்லத் துணியும் முதலாளிகளைப் போல தங்களின் பதவி சுகத்துக்காக தொழிலாளிகளின் பலவீனத்தை பயன்படுத்தி தொழிலாளி வர்க்கத்தையே சீரழிக்கும் இப்பிழைப்புவாதிகளை தொழிலாளிகளிடமிருந்து தனிமைப்படுத்தும் வேலையை புஜதொமு தொடர்ந்து செய்து வருகிறது.

”தொழிற்சங்கமென்பது தொழிலாளிகளின் பயிற்சிப் பள்ளி” என்று ஆசான் லெனின் கூறியதற்கேற்ப சங்க செயல்பாடுகள் அனைத்தையும் தொழிலாளிகளுக்கு விளக்கி அவர்களுக்கு கற்றுக் கொடுத்து தொழிலாளிகளின் அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்தும் வேலையை செய்து வரும் புஜதொமு இக்கிளையில் மட்டுமின்றி மணலி பகுதியிலுள்ள அனைத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

பிழைப்புவாதிகளும், திரிபுவாதிகளும் எத்தனை கவர்ச்சியான கதை சொல்லி தொழிலாளிகளை ஏய்த்து வந்தாலும், ஒரு புரட்சிகரத் தொழிற்சங்கத்தின் ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான செயல்பாடானது அனைத்தையும் தூக்கி எறிந்து தொழிலாளிகளை போராட்ட பாதைக்கு அணிதிரட்டுமென்பது SRF மணலி தொழிற்சங்கத் தேர்தல் இன்னுமொரு சான்று.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க