privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதிருச்சி அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியின் அடாவடி மாணவர் சேர்க்கை !

திருச்சி அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியின் அடாவடி மாணவர் சேர்க்கை !

-

விதிமுறைகளை மீறி முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்திய திருச்சி உறையூர் அரபிந்தோ இன்டர்நேஷனல் சென்சுரி செகன்ட்ரி பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், உறையூர் வெக்காளியம்மன் கோவில் அருகில் இயங்கி வரும் தனியார் பள்ளி அரபிந்தோ இன்டர்நேஷனல் சென்சுரி செகன்ட்ரி பள்ளி. இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்டம் 2009 மற்றும் தமிழக அரசாணை எண்.60 ன் படி கூறப்பட்ட மாணவர் சேர்க்கை விதியின்படி, “மே மாதம் இறுதியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கவும், ஜூன் மாதம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்” என அரசு உத்தரவு போட்டுள்ளது. இதனை துளிகூட மதிக்காமல், “ஜனவரி மாதமே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது” என மேற்கூறிய பள்ளியின் முன்பாக விளம்பர பேனர் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்த பு.மா.இ.மு. தோழர்கள் பேனர் வைக்கப்பட்டிருந்த பள்ளி வளாகத்திற்கு சென்று அந்த பேனரை புகைப்படம் எடுத்து வந்தனர். பின்பு மாணவர் சேர்க்கை நடப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அந்த பள்ளியின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து பேசிய நம் தோழர், தன் பிள்ளையை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று பேசிய போது எதிர் முனையில் பேசிய பெண் சந்தோஷத்துடன் ‘நீங்கள் இப்பொழுதே வாருங்கள் உங்கள் பிள்ளையை சேர்த்துக் கொள்கிறோம், ஆனால் கட்டண விவரத்தை நேரில் மட்டுமே கூறுவோம்” என்றார். இந்த உரையாடல் மூலம் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடப்பதை உறுதி செய்து கொண்டோம்.

இலவச மற்றும் கட்டாய கல்விச்சட்டம் 2009 என்பது நலிவடைந்த மாணவர்களுக்கு அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. ஆனால் பல தனியார் பள்ளிகள் இதனை ஏற்க மறுத்து முன்கூட்டியே காசு கொடுப்பவருக்கு சீட் கொடுத்து விட்டு 25% இட ஒதுக்கீட்டை கேட்டு போகும் நலிவடைந்த பிரிவினருக்கு சீட் இல்லை என்று அடாவடியாக மறுக்கும் நிலை ஊரறிந்த ரகசியம்.

அதன்படி கல்வியை வியாபாரமாக்கி விற்பனை பண்டமாக்கிய பெரும் கல்வி முதலைகள்,  சட்டத்தை மதிக்காமல் வழக்கம் போல் டிசம்பர் ஜனவரி மாதத்திலேயே மாணவர் சேர்க்கையை தொடங்கி விட்டன. இதனை அம்பலப்படுத்தியும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவு செய்தோம்.

அதன்படி 29.01.14 காலை 11.00 மணி அளவில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு திருச்சி மாவட்ட பு.மா.இ.மு. செயலர் தலைமையில் சென்ற தோழர்கள் அரபிந்தோ பள்ளியின் அடாவடித்தனத்திற்கெதிராகவும் பகற்கொள்ளைக்கெதிராகவும் கண்டன முழக்கமிட்டனர். இதனை அப்பகுதியில் வாழும் பெருவாரியான உழைக்கும் மக்கள் பார்த்து ஆதரவளித்தார். ஆர்ப்பாட்டத்தை கேள்விப்பட்டு உடனடியாக காந்தி மார்க்கெட் காவல் துறையினர் வந்தனர்.

“விதிகளை மீறி அனுமதி வாங்காமல் ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள், இது தவறு. உடனே கலைந்து செல்லுங்கள்” என்றும் “கைது செய்வோம்” என்றும் மிரட்டினர்.

அதற்கு நம் தோழர்கள் “அரசு விதிகளை மீறி செயல்படும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே இந்தப் போராட்டம்” எனவும், “இது பொது மக்களுக்கோ காவல் துறையினருக்கோ எவ்வித இடையூறையும் ஏற்படுத்த போவதில்லை” என்றும் கூறினர்.

அதற்கு காவல்துறை “எங்களிடம் ஒரு வார்த்தை தெரிவித்திருந்தால் நாங்களே பந்தோபஸ்து கொடுத்திருப்போம். நீங்கள் கேட்டு எப்போது இல்லை என்றிருக்கிறோம்” என்று பேசி சமரசம் செய்ய முயன்றனர்.

“சரி இப்போது கேட்கிறோம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்திக்க வேண்டும்” என்றவுடன் அதற்குரிய ஏற்பாடுகளை செய்தனர்.

பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் தோழர் செழியன், மாவட்ட இணைச்செயலாளர் சாருவாகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் ஆகியோர் சிஈஓ வை பார்க்க சென்றனர். ஆனால் அவர் வேறொரு பள்ளி ஆய்விற்கு சென்றிருந்ததால் நம்மிடம் போனில் தொடர்பு கொண்டார்.

அப்போது அவரிடம் “அரபிந்தோ இன்டர்நேஷனல் சென்சுரி செகன்ட்ரி பள்ளி ஜீன் மாதம் நடத்த வேண்டிய மாணவர் சேர்க்கையை விதிகளுக்கு புறம்பாக ஜனவரியிலேயே தொடங்கி விட்டனர். அதன்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு அளிக்க வந்துள்ளோம்” என்றனர்.

அதற்கு அவர் ‘சார் ஸ்கூல் இன்ஸ்பெக்சன்ல இருக்கேன், நீங்கள் என்  பிஏவிடம் கொடுத்து விட்டு போங்க” என்றார்.

நாமும் பிஏவிடம் சென்று விஷயத்தை விளக்கி பேசியும் “மெட்ரிக் பள்ளிக் கல்வித்துறையின் அறிக்கையான விதிமுறைகளை மீறி மாணவர் சேர்க்கையை செய்யும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற செய்தி குறிப்பையும் கூறி, அந்தப்பள்ளி வாசலில் உள்ள விளம்பரப் பலகையின் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்க கோரி எழுத்துப்பூர்வமான புகாரும் அளித்தோம்.

வெளியில் வந்ததும் காவல் துறையினரே, “தனியார் பள்ளிகளின் அடாவடித்தனத்தை கட்டுப்படுத்த நீங்கள் செய்யும் செயல் சரியானது தான். இருந்தாலும் செய்தி ஊடகங்களில் வந்தவுடன் அதைப் பார்த்து எங்கள் உயரதிகாரிகள் எங்களிடம் கத்துவார்கள்” என்று தம் கையறு நிலையை கூறி, “அடுத்த கட்டமாக எதுவும் செய்து விட வேண்டாம். நாங்களும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்” என்றனர்.

முற்றுகை ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு நாம் மீண்டும் பேசிய போது, “சி.பி.எஸ்.சி பள்ளியில் ஏப்ரல் மாதம் தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அதற்கு எதிராக இந்தப் பள்ளி செயல்பட்டு வருவதை எங்கள் ஆய்வு குழு மூலம் நாங்களும் உறுதி செய்துள்ளதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை (உரிமம் ரத்து) எடுக்கப்படும்” என்று கூறினார்.

நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவாக எனக்கூறிக் கொண்டு தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவான அரசின் 25% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கூட முடியாமல் பகற்கொள்ளை அடிப்பதிலும் அரசு உத்தரவுகளை மதிக்காமல் காற்றில் பறக்க விடுவதிலும் முன்னணியில் நிற்கும் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராகவும், தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கவும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர் சார்பாக போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
திருச்சி
9943176246.