privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்?

நாய் வாலை நிமிர்த்துவாரா கேஜ்ரிவால்?

-

ழல் முறைகேடுகளும் மறுகாலனியாக்க கொள்ளைகளும், இந்த அரசமைப்பை ஆளும் வர்க்கத்தின் அடியாட்படை என்று பாமரனும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒவ்வொரு நாளும் அம்பலமாக்கி வருகின்றன. இந்த அரசமைப்பின் மீது மீண்டும் மீண்டும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதெப்படி என்ற சவாலை எதிர்கொண்டுவரும் ஆளும் வர்க்கம், நிதிஷ் குமார், சவுகான் போன்ற அரசியல்வாதிகளையும், துர்காசக்தி நாக்பால், கெம்கா போன்ற சில அதிகாரிகளையும், குறிப்பிட்ட சில நீதிமன்றத் தீர்ப்புகளையும் காட்டி மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறது. அன்னா ஹசாரேயின் அரசியல் கோமாளித்தனத்தை “ஸ்பான்சர்” செய்து மாபெரும் மக்கள் இயக்கமாக காட்டுகிறது.

கேஜ்ரிவால் ஆர்ப்பாட்டம்
ஊழல் எதிர்ப்பு நாயகனின் கலகக்காரன் நாடகம் : தனது அரசின் கட்டளைக்கு அடிபணிய மறுத்த இரு டெல்லி போலீசாரை நீக்கக் கோரி, அரவி்ந்த் கேஜ்ரிவால் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய முற்றுகைப் போராட்டம்.

காங்கிரசும் பாரதிய ஜனதாவும் ஒரு கட்சி என்ற முறையில் மதிப்பிழந்து போவிட்டதால், அக்கட்சிகளுக்கு அப்பாற்பட்ட “தேசத்தின் மீட்பர்”களாக மோடியையும் ராகுல் காந்தியையும் காட்டி, அவர்களுக்கிடையிலான “ஒண்டிக்கு ஒண்டி”யில்தான் தேசத்தின் எதிர்காலமே நிர்ணயிக்கப்படவிருப்பது போன்ற தோற்றத்தையும் ஆளும் வர்க்கம் உருவாக்குகிறது. மதிப்பிழந்து போன பழைய அப்போஸ்தலரான மன்மோகன் சிங்கை ஓரங்கட்டி, வரவிருக்கும் தேர்தலில் மோடிக்கு முடிசூட்டி இந்த சுற்று ஆட்டத்தை முடித்துக் கொள்ளலாம் என்று ஆளும் வர்க்கம் அமைதி கொண்டிருந்த நேரத்தில், மூன்றாவது மீட்பராக களத்தில் குதித்திருக்கிறார் அர்விந்த் கேஜ்ரிவால்.

ஆளும் வர்க்கம், தான் எழுதிய லோக்பால் திரைக்கதையில் ஊழல் ஒழிப்பு நாயகன் என்ற பாத்திரத்தை மட்டும்தான் கேஜ்ரிவாலுக்கு ஒதுக்கியிருந்தது. ஆனால், ஊடக வெளிச்சத்தில் நட்சத்திர அந்தஸ்தை எட்டி விட்ட அந்த நாயகன், தனது இமேஜுக்குப் பொருத்தமான திரைக்கதையைத் தானே தெரிவு செய்து கொண்டிருக்கிறார். ஊழல் ஒழிப்பாளர் என்ற வரம்பைத் தாண்டித் தன்னை எளிய மனிதனின் பிரதிநிதியாகவும் காட்டிக் கொள்ள விரும்புவதால், அதிகார எதிர்ப்பு கலகக்காரனின் பாத்திரத்தையும் அவர் ஏற்றிருக்கிறார். அதன் விளைவுதான், சமீபத்தில் மத்திய அரசுக்கு எதிராக அவர் நடத்திய தர்ணா போராட்டம்.

முதலமைச்சருக்குரிய “புனித” மரபுகளை மீறி, கேஜ்ரிவால் முச்சந்தியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடவே, முதல்வரிடமிருந்து மத்திய உள்துறை அமைச்சரையும், குடியரசு தினக் கொண்டாட்டத்தையும் காப்பாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை டில்லி போலீசுக்கு ஏற்பட்டு விட்டது. முதல்வர் போராடலாமா என்பது முதல் கேள்வி. அப்படியே போராடினாலும், டில்லி மாநகரில் போராட்டங்களுக்கென்றே ஒதுக்கிவிடப்பட்டிருக்கும் ஜந்தர் மந்தரில் அமர்வதற்குப் பதிலாக, உள்துறை அமைச்சர் வீட்டுக்கு முன்னால் துண்டை விரித்துப் படுத்து, குடிமக்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியைக் காட்டலாமா என்பது இரண்டாவது கேள்வி.

கேஜ்ரிவால் அத்துமீறிவிட்டதாக ஆளும் வர்க்கம் அவர் மீது கடும் கோபம் கொண்டிருக்கிறது. “அராஜகவாதி, மாவோயிஸ்டு, பொறுப்பில்லாத தெருச்சண்டைக்காரர்” என்று பாரதிய ஜனதாவும் காங்கிரசும் மட்டுமின்றி, எல்லா ஊடகங்களும் அவரைச் சாடுகின்றன. ஆம் ஆத்மி கட்சியில் இணைந்திருந்த ஏர் டெக்கான் விமானக் கம்பெனியின் முதலாளி கேப்டன் கோபிநாத், கேஜ்ரிவாலின் ஆதரவாளர் இன்போசிஸ் நாராயணமூர்த்தி, நீதிபதி ஹெக்டே முதலான பலரும் இந்த அத்துமீறிய நடவடிக்கையால் அதிர்ச்சியுற்றிருக்கின்றனர். “சிறந்த அரசாளுமைக்கு மாற்று, கவர்ச்சி அரசியல் அராஜகம் அல்ல” என்று தனது குடியரசு தின உரையில் கேஜ்ரிவாலைக் குத்திக் காட்டியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி.

சோம்நாத் பாரதி
டெல்லி சட்ட அமைச்சம் சோம்நாத் பாரதி உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டதை டெல்லி போலீசார் ஏற்க மறுத்ததை அடுத்து இரு தரப்புக்குமிடையே நடந்த விவாதம்.

ஆம் ஆத்மி கட்சியின் சமூக அடித்தளமாக இருப்பவர்களும், அன்னா ஹசாரேயின் ஊழல் ஒழிப்பு இயக்கத்தை ஆங்கில சானல்களில் பார்த்து அதன் மூலம் சமூக உணர்வு தூண்டப் பெற்றவர்களுமான உயர் நடுத்தர வர்க்கத்தினரும் கூட, முதல்வர் கேஜ்ரிவால் இத்தகைய புரட்சி”யில் ஈடுபடுவாரென எதிர்பார்க்கவில்லை என்பது ஆங்கில நாளேடுகளுக்கு அவர்கள் எழுதும் வாசகர் கடிதங்களிலிருந்து தெரியவருகிறது.

அன்னா (ஹசாரே)வின் தம்பிகளாக இந்திய அரசியல் அரங்கிற்குள் திடீர்ப் பிரவேசம் செய்திருக்கும் இவ்வர்க்கத்தினரின் நாட்டுப்பற்றும் சமூக உணர்வும் விசித்திரமானவை. விடுதலைப் போராட்டக் காலத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தினர் அல்லது அறுபதுகள், எழுபதுகளில் நக்சல்பாரி இயக்கத்தினால் ஈர்க்கப்பட்ட கல்லூரி மாணவர்கள் போன்றோரிடம் காணப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு இலட்சியவாதமோ மக்கள் பற்றோ இவர்களிடம் கிடையாது. இவர்களில் ஆகப்பெரும்பான்மையோர் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் ஆதாயங்களைப் பெற்றவர்கள்; அதுதான் நாட்டை முன்னேற்றும் வழி என்றும், அக்கொள்கைகளைச் சரியாக அமல்படுத்தி வெற்றி காண விடாமல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் ஊழல்கள்தான் தடையாக இருக்கின்றன என்றும் கருதுபவர்கள்; இவர்களில் பலர் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்கள், பல்வேறு தொழில்முறை தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களின் உயரதிகாரிகள்.

கேஜ்ரிவால் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர்தானெனினும் எளிய மனிதனின் உளவியல் புரிந்தவர். எளிய மனிதர்களையும் இவர்களையும் இணைக்கின்ற ஒரே சரடான ஊழல் ஒழிப்பு என்ற முழக்கம், எளிய மனிதனின் வாக்குகளைப் பெற்றுத் தராது என்பது கேஜ்ரிவாலுக்குத் தெரியும். அதனால்தான் மின் கட்டணக் குறைப்பு, இலவசத் தண்ணீர் போன்ற சாதாரண மக்களின் உடனடிக் கோரிக்கைகளைத் தனது தேர்தல் வாக்குறுதிகளில் அவர் சேர்த்துக் கொண்டார்

டாடா மற்றும் அம்பானியின் நிறுவனங்கள் மின்சாரத்தின் விலையைச் செயற்கையாக உயர்த்தியதன் விளைவுதான் கட்டண உயர்வு என்று கூறி, அந்த நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கை செய மத்திய கணக்கு தணிக்கை அதிகாரிக்கு உத்தரவிட்டார். ஆனால் மின்சாரத்தின் விலையை நிர்ணயம் செயும் அதிகாரம் படைத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையமோ, மின் கட்டணத்துக்கு கூடுதல் சர்சார்ஜ் விதித்து கேஜ்ரிவாலின் முடிவைக் கேலிக்குள்ளாக்கியிருக்கிறது. அடுத்து டெல்லியில் பத்து மணி நேர மின்வெட்டு வரவிருப்பதாக டாடா, அம்பானி நிறுவனங்கள் அச்சுறுத்தியிருக்கின்றன. கார்ப்பரேட் மின் நிறுவனங்களின் யோக்கியதை என்ன என்பதை என்ரானில் தொடங்கி பல முதலாளிகளும் நிரூபித்திருந்த போதிலும், இந்தக் கொள்ளைக்குக் காரணம் மின்சாரம் தனியார்மயம்தான் என்று கேஜ்ரிவால் கூறவில்லை, கூறவும் மாட்டார். ஏனென்றால், தனியார்மயத்தை ஆதரிப்பதாகவோ எதிர்ப்பதாகவோ கூறுவது, தன் மீது வலதுசாரி அல்லது இடதுசாரி என்ற முத்திரை விழுவதற்கு வழிவகுக்குமென்றும், அத்தகைய கொள்கைகளோ சித்தாந்தங்களோ இல்லாமலிருப்பதே சிறந்த கொள்கை என்றும் அவர் கருதுகிறார்.

பா.ஜ.க ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களின் “அராஜக” நடவடிக்கைகளை கண்டித்து பா.ஜ.க கட்சியினர் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

சில்லறை வணிகத்தில் வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் டில்லியில் கடை போடுவதற்கு ஷீலா தீட்சித் அரசு அளித்திருந்த அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தபோது கூட, தான் பன்னாட்டு முதலீடுகளுக்கு எதிரி அல்ல என்றும், சில்லறை வணிகத்தில் அவர்களை அனுமதிப்பது வேலை வாப்பைப் பாதிக்கும் என்பதால் மட்டுமே அதனை எதிர்ப்பதாகவும் அவர் தன்னிலை விளக்கமளித்தார். தனியார் முதலாளித்துவத்தை ஊக்குவிப்பதற்குத் தடையாக உள்ள அனைத்தையும் அகற்ற வேண்டும் என்பதே தனது பொருளாதாரக் கொள்கை என்று சமீபத்தில் ராய்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் சூடம் அடித்துச் சத்தியமும் செய்தார்.

இருப்பினும், “முந்தைய அரசு வால் மார்ட்டுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி சில்லறை வணிகத்தில் அவர்கள் நுழைவதை தடுப்பதென்பது, இந்தியாவின் மீது அந்நிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குலைத்து விடும் என்றும், நாட்டை வாழைப்பழக் குடியரசாக மாற்றிவிடும்” என்றும் சீறினார் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா. கேஜ்ரிவாலின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு நீண்ட நாட்களாக நன்கொடை அளிப்பவரான இன்போசிஸ் நாராயணமூர்த்தியோ, நாற்பதுகளின் கொள்கைகளெல்லாம் இன்றைக்குப் பொருந்தாது என்றும், உலகமயமாக்கல் கொள்கையை அனுசரித்துச் செல்லுமாறும் கேஜ்ரிவாலுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.

கேஜ்ரிவாலைப் பொருத்தவரை தனக்கு கொள்கையோ சித்தாந்தமோ கிடையாதென்றும், தான் இடதுசாரியல்லவென்றும் பலமுறை தெளிவுபடுத்தி யிருக்கிறார். இருந்த போதிலும், நான் ஒரு எளிய மனிதன் என்று தனது குல்லாவிலேயே பிரகடனம் செய்து கொண்டிருக்கும் ஒரு மனிதன், குல்லாவுக்குப் பொருத்தமான முறையில் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா? டில்லி வெற்றியைத் தொடர்ந்து நாடு முழுவதும் குபீரென்று கட்சிக் கிளைகள் வேறு கிளம்புகின்றன. தமிழகத்தில் மேலிடப் பார்வையாளர் வந்து கோஷ்டித்தகராறைத் தீர்க்கும் அளவுக்கு கட்சி வெகுவேகமாக வளர்ந்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில், நாடு முழுவதும் சுமார் 300 தொகுதிகளில் போட்டியிடுவது என்று ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்திருப்பதால், தேசத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டியிருக்கிறது. மின்சாரம் மற்றும் தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு, வால்மார்ட்டை விரட்டுவது முதலானவை தொடர்பான விவாதத்தைக் கிளப்பினால் பிரபலமடையலாம் என்ற போதிலும், அந்த விவாதம் தவிர்க்கவியலாமல் தனியார்மய எதிர்ப்புக்கு இட்டுச் செல்லும் என்பதால், இத்தகைய ஆபத்துகள் ஏதும் இல்லாத அதிகார எதிர்ப்பு நடவடிக்கையொன்றை திட்டமிட்டே தெரிவு செய்திருக்கிறார் கேஜ்ரிவால்.

இப்படித் தெரிவு செயப்பட்டதுதான், டில்லி போலீசுக்கு எதிராக கேஜ்ரிவால் நடத்திய போரட்டம். மைய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டில்லி போலீசை அம்மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசு, பாரதிய ஜனதா போன்ற கட்சிகளே நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றன. இலஞ்ச ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகளால் அடித்தட்டு வர்க்கம் முதல் உயர் நடுத்தர வர்க்கம் வரையிலான அனைத்துப் பிரிவினரின் வெறுப்புக்கும் டில்லி போலீசு இலக்காகியிருப்பதால், தனது அதிகார எதிர்ப்பு நடவடிக்கைக்கான குறியிலக்காக டெல்லி போலீசைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார் கேஜ்ரிவால்.

காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சர்களின் “அராஜக” நடவடிக்கைகளை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப்பயணி, டில்லியின் மையப் பகுதியில் கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டது, வரதட்சிணைக் கொடுமை குறித்த புகார் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காததன் விளைவாக ஒரு பெண் கொல்லப்பட்டது, உகாண்டா நாட்டைச் சேர்ந்த போதை மருந்துக் கடத்தல் மற்றும் விபச்சாரக் கும்பல் மீது குடியிருப்பு பகுதி மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது – ஆகிய பிரச்சினைகள் தொடர்பாக ஆம் ஆத்மி அரசின் அமைச்சர்கள் ராக்கி பிர்லா மற்றும் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி ஆகியோர் நடவடிக்கை எடுக்குமாறு போலீசை வற்புறுத்தியிருக்கின்றனர். ஆதாரமில்லாமல் கைது செவதோ சோதனை போடுவதோ இயலாது என்று போலீசு மறுத்ததாம்; உடனே, அமைச்சர் நேரடியாகக் களத்தில் இறங்கினார். இந்த நடவடிக்கையின் போது சோம்நாத் பாரதியும் தொண்டர்களும் சட்டத்தை தம் கையில் எடுத்துக் கொண்டு கருப்பினப் பெண்களை வேசிகள் என்று ஏசியதாகவும், தாக்கியதாகவும், நிறவெறிக் கண்ணோட்டத்தில் இழிவுபடுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரியது பாரதிய ஜனதா. அமைச்சரின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்த போலீசாரை தற்காலிகப் பணிநீக்கம் செய வேண்டும் என்று கோரியது ஆம் ஆத்மி கட்சி. இதன் தொடர்ச்சிதான் கேஜ்ரிவாலின் போராட்டம்.

ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ நடத்தும் போராட்டங்களில் கல்லெறிவதும், பொதுச்சோத்துகளை எரிப்பதும், சூறையாடுவதும் நாம் அன்றாடம் காணும் நிகழ்வுகள். ஆம் ஆத்மி கட்சியினர் போலீசின் மீது நடவடிக்கை கோரினர் என்பதற்கு மேல், கல்லெறியோ, பேருந்து எரிப்போ, வன்முறையோ எதுவும் நடந்து விடவில்லை. இருந்த போதிலும், இப்போராட்டத்தின் விளைவாக “குடியரசு’ தின விழா ஏற்பாடுகள் பாதிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து நின்று, மக்கள் அவதிக்குள்ளாகினர் என்றும், ஒரு முதலமைச்சரே பொறுப்பில்லாமல் அராஜகத்தைத் தூண்டி விடுவதாகவும் காங்கிரசு, பா.ஜ.க., ஊடகங்கள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் சாடினர். இலஞ்ச-ஊழல், லாக்கப் வல்லுறவு, கொலை, வழிப்பறி உள்ளிட்ட எல்லா கிரிமினல் குற்றங்களுக்கும் புகழ் பெற்ற டெல்லி போலீசை, சட்டத்தை மீறாத புனிதர்கள் போலவும், சட்டத்தை மீறுமாறு அமைச்சர் அவர்களைத் தூண்டியதாகவும் சித்தரித்தன ஊடகங்கள். முதலமைச்சரே முன்நின்று போராடிய போதிலும், இரண்டு போலீசாரை சம்பளத்துடன் விடுப்பில் அனுப்பியதற்கு மேல் வேறு எதையும் கேஜ்ரிவால் சாதிக்கவியலவில்லை.

“எது அராஜகம்? 1984 சீக்கியர் படுகொலையும், ரத யாத்திரையும், 2002 குஜராத் படுகொலையும் அராஜகமா, நாங்கள் நடத்தியது அராஜகமா?” என்று ஆம் ஆத்மி கட்சியினர் பா.ஜ.க. வுக்கும் காங்கிரசுக்கும் எதிர்க்கேள்வி எழுப்பினர். ஊடகங்கள் தங்களுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு செய்வதாகக் குறைபட்டுக் கொண்டனர்.

மின்சாரம் மற்றும் தண்ணீர் தனியார்மயத்தை மையப்படுத்தி பிரச்சாரம் செய்வது கார்ப்பரேட் எதிர்ப்பில் போய் முடியும் என்பதால், அதனைத் தவிர்த்துவிட்டு போலீசு விவகாரத்தை கேஜ்ரிவால் கையிலெடுத்துக் கொண்டதைப் போலவே, மின்கட்டணக் குறைப்பை எதிர்த்தால் மக்களிடமிருந்து தனிமைப்பட நேரிடும் என்பதைப் புரிந்து கொண்ட பா.ஜ.க.வும் காங்கிரசும் ஆளும் வர்க்கங்களும், போலீசு பிரச்சினையின் பின்னால் ஒளிந்து கொண்டு விட்டனர். எல்லா விதமான சட்டவிரோத நடவடிக்கைகளையும் போலீசை வைத்தே செய்து முடித்துக் கொள்ளும் கட்சிகளும் ஆளும் வர்க்கமும், ஆம் ஆத்மியின் அராஜகத்தால் அரசமைப்பே சீர்குலைந்து விட்டது போலவும், ‘குடியரசு’ தின விழாவையே கேஜ்ரிவால் சீர்குலைத்து விட்டதாகவும் சாடினர். “இரண்டு போலீசாரை விடுப்பில் அனுப்பி கேஜ்ரிவாலுடன் சமரசம் செய்து கொண்டதன் மூலம் உள்துறை அமைச்சர் ஷிண்டே குடியரசு தின அணிவகுப்பைக் காப்பாற்றியிருக்கலாம், ஆனால் இந்தியக் குடியரசை பலவீனப்படுத்திவிட்டார்” என்று சாடினார் பா.ஜ.க. வின் அருண் ஜெட்லி.

நேற்றுவரை ஊழலை ஒழிக்க வந்த நம்பிக்கை நட்சத்திரமாகச் சித்தரிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியை ஒரே நாளில் அராஜகவாதியாகவும் தேசவிரோதியாகவும் புரட்டிப் போட்டுவிட்டன ஊடகங்கள். அதற்கு காரணம் மறியல் போராட்டம் மட்டுமல்ல. போலீசை மக்களுக்குப் பொறுப்பாக்க வேண்டும் என்று கூறியது, கார்ப்பரேட் நிறுவனங்களின் கணக்குகளைத் தணிக்கைக்கு உட்படுத்தியது போன்ற நடவடிக்கைகள்தான். எந்த விதத்திலும் மக்களுக்குப் பதில் சோல்லக் கடமைப்பட்டிராத, மக்களை ஏறி மிதிக்கின்ற இந்த அரசையும், அதன் ஊழல்களையும் உள்ளிருந்தே தான் திருத்தியமைக்கப் போவதாக கூறுகிறார் கேஜ்ரிவால். சூது, திருட்டு, ஆக்கிரமிப்பு ஆகியவற்றையே தமது தொழில்முறைகளாக கூர் தீட்டி வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம், தன் இயல்பில் நேர்மையானதென்றும் அதிலிருக்கும் சில கருப்பு ஆடுகளை மட்டும் களையெடுத்துவிட்டால், முதலாளி வர்க்கம் நாட்டிற்கு முன்னேற்றத்தைக் கொண்டு வந்து விடும் என்றும் நம்பச் சோல்கிறார்.

கொள்கை வேண்டாம், சித்தாந்தம் வேண்டாம், அமைப்பு வேண்டாம் – தன்னியல்பாக கோபத்தில் கிளர்ந்தெழும் மக்கள்திரளே போதும் என்று எகிப்து, துனிசிய, வால் ஸ்டிரீட் எழுச்சிகளைக் கொண்டாடிய முதலாளி வர்க்கத்தின் அறிவுத்துறைக் கூலிப்பட்டாளங்கள், தற்போது அந்த எழுச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகளானதேன் என்று விளக்கமளிப்பதில்லை. முதலாளித்துவத்துக்கு எதிரான மார்க்சிய- லெனினிய சித்தாந்தம், ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைந்த கட்சி, அதன் தலைமையில் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட மக்கள்திரள் – இவையில்லாமல் முதலாளித்துவத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் வீழ்த்த இயலாது.

ஊழலற்ற முதலாளித்துவத்தையும் அதிகார வர்க்கத்தையும் நமக்கு காட்டப்போவதாகக் கூறிவருகிறார் கேஜ்ரிவால். அதற்கு முன் அவர் ஒரு கோமாளியாக அடையாளம் காட்டப்பட்டு விடுவார்.

– தொரட்டி
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
( ஆத் ஆத்மி கட்சி, புதுதில்லி ஆட்சியிலிருந்து பதவி விலகியிருப்பதற்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை. )
___________________________________