Tuesday, December 10, 2024
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் ?

பத்ரிபால் தீர்ப்பு: கொலைகாரர்களே நீதிபதிகளானால் ?

-

காஷ்மீரில் கடந்த 2000-ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் நடந்த இழிபுகழ் பெற்ற பத்ரிபால் போலி மோதல் கொலைவழக்கை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ‘விசாரித்து’ வந்த இந்திய இராணுவ நீதிமன்றம், “அவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அளிக்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானதாக இல்லை” எனக் குறிப்பிட்டு, இவ்வழக்கை ஊத்தி மூடிவிட்டது. காஷ்மீர் பிரச்சினையை இந்து மதவெறி, இந்து தேசியவெறி என்ற குருட்டுத்தனமான கண்ணோட்டத்தில் அணுகுவதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்தான், இந்தத் தீர்ப்பின் மோசடியைப் புரிந்துகொள்ள முடியும்.

பத்ரிபால்
இந்திய இராணுவத்தால் பத்ரிபாலில் போலிமோதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனை நடத்துவதற்காகத் தோண்டியெடுக்கப்படுகின்றன. (கோப்புப் படம்)

பத்ரிபால் போலிமோதல் கொலையின் பின்னணியைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், சட்டிசிங்புரா படுகொலைகளைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். இவ்விரண்டு படுகொலைகளும் அடுத்தடுத்து, ஓரிரு நாட்கள் இடைவெளியில் இந்திய அரசாலும் இராணுவத்தாலும் நடத்தப்பட்டவை. இவையிரண்டும் கிரிமினல் கொலை வழக்குகள் என்பதையும் தாண்டி, இந்திய அரசும் அதன் இராணுவமும் “தீவிரவாதிகளை ஒடுக்கி, தேசிய ஒருமைப்பாட்டைக் காப்பது” என்ற பெயரில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டு நடத்திவரும் அத்துணை அட்டூழியங்களையும் குறுக்குவெட்டாக எடுத்துக்காட்டும் ஒரு சித்திரமாகும்.

மார்ச் 20, 2000 அன்று சட்டிசிங்புரா கிராமத்திற்குள் திடீரெனப் புகுந்த இந்திய இராணுவ உடையணிந்திருந்த கைக்கூலிகள் அக்கிராமத்தைச் சேர்ந்த 35 சீக்கியர்களைத் துப்பாக்கி முனையில் குருத்வாராவிற்கு இழுத்து வந்து படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றனர். அப்பொழுது ஆட்சியிலிருந்த பா.ஜ.க. கூட்டணி அரசு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள்தான் இப்படுகொலையை நடத்தியதாகக் குற்றஞ்சுமத்தியதோடு, இப்படுகொலையின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் பழி போட்டது. மேலும், அடுத்த ஓரிரு நாட்களிலேயே இப்படுகொலையை நடத்திய ஐந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை உளவறிந்து, அவர்களை பத்ரிபால் என்ற கிராமத்தில் சுற்றி வளைத்து, அப்பொழுது நடந்த மோதலில் கொன்றுவிட்டதாக அறிவித்தது, இந்திய இராணுவம்.

பத்ரிபால் படுகொலை நடப்பதற்குச் சற்று முன்பாகத்தான் பத்ரிபால் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊர்களைச் சேர்ந்த ஐந்து பேரைச் சுமை தூக்கும் வேலைக்கு வருமாறு கூறி இராணுவம் அழைத்துச் சென்றிருந்தது. இதனால் கொல்லப்பட்ட ஐந்து பேரும் அந்த அப்பாவிகளாக இருக்கக்கூடும் எனச் சந்தேகித்த அப்பகுதி மக்கள், இராணுவம் கொன்று புதைத்த ஐந்து பேரின் சடலங்களையும் தோண்டியெடுத்து விசாரணை நடத்தக் கோரி போர்க்குணமிக்க போராட்டங்களில் இறங்கினர். ஆனந்த்நாக் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதையடுத்து, போராட்டம் முன்னைக் காட்டிலும் தீவிரமடைந்தது.

கொடிய அடக்குமுறைகளுக்கு அடிபணியாமல் காஷ்மீர் மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக, இராணுவத்தால் கொன்று புதைக்கப்பட்ட ஐந்து பேரின் சடலங்களையும் தோண்டியெடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பியது, அம்மாநில அரசு. இராணுவத்தால் கொல்லப்பட்ட ஐந்து பேரும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் கிடையாது; இராணுவம் அழைத்துச் சென்ற உள்ளூரைச் சேர்ந்த அப்பாவிகள் என்பதும், இதுவொரு போலிமோதல் கொலை என்பதும் சவக்குழியிலிருந்து பிணங்கள் வெளியே எடுக்கப்பட்டவுடனேயே நிரூபணமானது. ஆனால், இராணுவ அதிகாரிகளோ குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததோடு, கொல்லப்பட்டவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ. மூலக்கூறு மாதிரிகளை மாற்றித் தடயங்களை அழித்துவிட முயற்சித்தனர். இராணுவத்தின் இந்த மோசடி அம்பலமானதையடுத்து, மீண்டும் காஷ்மீரில் இராணுவத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. இதன்பின், இப்போலிமோதல் படுகொலை குறித்த விசாரணையை காஷ்மீர் மாநில அரசு 2002-இல் மையப் புலனாவுத் துறையிடம் ஒப்படைத்தது.

சி.பி.ஐ. விசாரணைக்கு இராணுவம் பல்வேறு விதங்களில் முட்டுக்கட்டை போட்டு வந்ததால், படுகொலை நடந்து ஆறு ஆண்டுகள் கழித்துதான் கீழமை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகைத் தாக்கல் செயப்பட்டது. இதுவொரு போலிமோதல் படுகொலை என்பதையும் கொல்லப்பட்டவர்கள் உள்ளூரைச் சேர்ந்த அப்பாவிகள் என்பதையும் உறுதி செய்த சி.பி.ஐ., 5 இராணுவ அதிகாரிகள் மற்றும் தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த ஏழு சிப்பாய்கள் மீது ஆள் கடத்தல், படுகொலை, சாட்சியங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இராணுவம் தனது கொலைகார அதிகாரிகளைப் பாதுகாக்கவும், வழக்கை குழிதோண்டிப் புதைக்கவும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற கவசத்துக்குள் புகுந்து கொண்டது. இச்சட்டப்படி, இராணுவ அதிகாரிகளை விசாரிக்க மைய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும்; அப்படி அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரணை நடத்தியிருப்பதால், இப்புலனாய்வே சட்டத்திற்குப் புறம்பானது என வாதாடியது, இராணுவம். “இப்படுகொலை இராணுவத்தினர் தமது கடமையைச் செய்யும் போக்கில் தவறுதலாகவோ தவிர்க்கவியலாமலோ நேர்ந்துவிட்ட மரணம் அல்ல; சதி செய்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்பதால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு விசாரணை வராது” என ஆதாரங்களை முன்வைத்து இராணுவத்தின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தியது, சி.பி.ஐ. ஆனால், வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் மன்றம், “இவ்வழக்கைக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிப்பதா, இராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பதா” என முடிவெடுக்கும் அதிகாரத்தைக் குற்றமிழைத்த இராணுவத்திடமே ஒப்படைத்துத் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அந்நீதிமன்றம் இந்த வழக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் வராது என 2007-இல் தீர்ப்பளித்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து இராணுவம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவ்வழக்கு விசாரணையை வேண்டுமென்றே ஐந்தாண்டுகள் இழுத்தடித்த உச்ச நீதிமன்றம் 2012-இல், “இவ்வழக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் வருமென்று” இராணுவத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்ததோடு, இராணுவத்தின் விருப்பப்படி வழக்கை விசாரிக்கும் பொறுப்பையும் இராணுவ நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவது கட்டப்பஞ்சாயத்தைவிடக் கேவலமானது. பத்ரிபால் வழக்கில் சாட்சிகளாக நிறுத்தப்பட்டிருந்த கொல்லப்பட்டவர்களின் உறவினர்களை அலைக்கழிக்க வேண்டும் என்பதற்காகவே, விசாரணையை 300 மைல் தொலைவு தள்ளி, ஜம்மு பகுதியில் நக்ரோடா எனும் ஊரில் அமைந்துள்ள பாசறையில் நடத்த முயற்சித்தது, இராணுவம். இதற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்த பிறகு விசாரணை அவந்திபோரா பாசறைக்கு மாற்றப்பட்டது. 50 சாட்சிகளை விசாரணைக்கு அழைத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது, இராணுவம். இப்படுகொலை நடப்பதற்கு முன்பு இறந்து போனவர்கள்கூடச் சாட்சியமாகச் சேர்க்கப்பட்டிருந்தனர் என்பதிலிருந்தே இராணுவத்தின் விசாரணை எந்தளவிற்கு மோசடித்தனமாக நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எந்த அடிப்படையில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளியிடப்படாமல், அவை இரகசியம் என்ற போர்வையில் பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பத்ரிபால் படுகொலையை நேரடியாக நடத்திய இராணுவம், 35 சீக்கியர்களைக் கொன்ற சட்டிசிங்புரா படுகொலையைத் தீவிரவாத அமைப்புகளிலிருந்து விலகி வந்து, பணத்திற்காக இராணுவத்தின் கையாட்களாகச் செயல்பட்டு வரும் கூலிப்படைக் கும்பலைத் தூண்டிவிட்டு நடத்தியது. காஷ்மீரில் பாக். தலையீடு இருப்பதை இந்தியாவுக்கு வரவிருந்த கிளிண்டனுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் தக்க ஆதாரத்துடன் நிரூபிப்பதற்காக, பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்து நடத்தியதுதான் சட்டிசிங்புரா படுகொலை; அதனைத் தொடர்ந்து நடந்த பத்ரிபால் படுகொலை பா.ஜ.க. அரசின் குட்டு உடைந்து போகாமல் காப்பதற்காக அரங்கேற்றப்பட்ட போலிமோதலாகும்.

கண்டன ஆர்ப்பாட்டம்
பத்ரிபால்போலிமோதல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளை விடுவித்த தீர்ப்பைக் கண்டித்து ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

பத்ரிபால் வழக்கில் பல்வேறு சாட்சியங்களோடு நிறுத்தப்பட்டிருந்த அதிகார வர்க்கக் குற்றவாளிகள் – ஒரு பிரிகேடியர், ஒரு லெப்டினென்ட் கர்னல், இரண்டு தளபதிகள், ஒரு சுபேதார் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர் என்றால், சட்டிசிங்புரா படுகொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் காப்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த முகம்மது சுஹைல் மாலிக், வாசிம் அகமது என்ற இருவரை லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் எனக் குற்றஞ்சாட்டி சிறைக்குள் தள்ளியது இராணுவம். ஆனாலும், இவ்வழக்கை விசாரித்த டெல்லி குற்றவியல் நீதிமன்றம், அவர்களுக்கும் இப்படுகொலைகளுக்கும் தொடர்பில்லை எனக் கூறி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்தது.

பத்ரிபாலும், சட்டிசிங்புராவும் காஷ்மீரில் விதிவிலக்காக நடந்துவிட்ட சம்பவங்கள் அல்ல. பணப்பொதி பரிசுகளைப் பெறுவதற்காகவும், பதவி உயர்வுக்காகவும் அங்கு இராணுவம் நடத்தியிருக்கும் படுகொலைகள் ஏராளம். காஷ்மீர் இராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்ட பின், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 8,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அரசுப் படைகளால் கொல்லப்பட்டு, இரகசியமாகப் புதைக்கப்பட்ட 2,730 சடலங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. இவை அனைத்துமே போலிமோதல் படுகொலைகள்தான். இந்தப் பிணங்களின் எண்ணிக்கைக்கு அப்பால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செயப்பட்டுக் கொல்லப்பட்டோர், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்கள், அரசியல் ஆர்ப்பாட்டங்களின் போது கொல்லப்பட்ட பொதுமக்கள் என அரசுப் படைகளின் பயங்கரவாதத்துக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு இலட்சத்தைத் தொட்டுவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

இத்துணை பச்சைப் படுகொலைகளை, பஞ்சமா பாதகங்களை காஷ்மீரில் ஏன் கட்டவிழ்த்துவிட வேண்டும் எனக் கேள்வி கேட்டால், “தேசிய ஒருமைப்பாடு’ எனப் பதில் அளிக்கிறார்கள், பார்ப்பன பாசிஸ்டுகள். அதாவது “தேசிய’ ஒருமைப்பாடு என்பது படுகொலைகளை நடத்தவும், காஷ்மீர் பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கவும், அவர்களது சொத்துக்களைச் சூறையாடவும் அரசுப் படையினருக்குக் கொடுக்கப்பட்ட லைசென்சாகிவிட்டது. இத்தகைய அட்டூழியங்களில் ஈடுபடும் அரசுப் படையினரைப் பாதுகாக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம் உள்ளிட்ட பல கருப்புச் சட்டங்கள் காஷ்மீரில் அமலில் உள்ளன. இச்சட்டங்களை நீக்கக் கோரினால், “அது தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிட்டு வரும் இராணுவத்தினரின் உத்வேகத்தைக் குலைத்துவிடும்; தேசிய ஒருமைப்பாட் டுக்கு ஆபத்தாக முடிந்துவிடும்” எனப் பார்ப்பன-பாசிச கும்பல் ஊளையிடுகிறது. அது மட்டுமின்றி, அதற்காகக் குரல் கொடுப்பவர்களைத் தேச விரோதிகளாக, தீவிரவாதிகளின் ஆதரவாளர்களாக முத்திரை குத்துகிறது.

பீற்றிக் கொள்ளப்படும் இத்தேசிய ஒருமைப்பாடு காஷ்மீரில் துப்பாக்கி முனையில்தான் திணிக்கப்பட்டிருக்கிறது என்பதை அம்மாநில மக்கள் சுயநிர்ணய உரிமை கோரி நடத்திவரும் போராட்டங்கள் நிரூபித்து வருகின்றன. 2007-இல் வெளிவந்த ஒரு புள்ளிவிவரம் காஷ்மீரில் 3,37,000 இராணுவத் துருப்புகளும், 60,000-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் போலீசு படையினரும் உள்ளதாகக் குறிப்பிடுகிறது. இவை தவிர, தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவு, எல்லைப் பாதுகாப்புப் படை என ஏராளமான அரசு துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. கையளவேயான தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு இத்துணை இலட்சம் துருப்புகளைக் குவிக்க வேண்டிய அவசியமென்ன? இந்திய அரசும், இராணுவமும், பார்ப்பன பாசிச கும்பலும் தீவிரவாதிகளைவிட, சுயநிர்ணய உரிமை கோரும் அம்மக்களைக் கண்டுதான் அஞ்சுகிறது; அரசு பயங்கரவாதக் குற்றவாளிகளைத் தண்டிக்கக் கோரும் அவர்களின் நியாயமான, போர்க்குணமிக்க போராட்ட உணர்ச்சியைக் கண்டுதான் பயப்படுகிறது. அதனால்தான் இந்திய இராணுவத்தை விலக்கிக் கொள்ளவும் மறுக்கிறது; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் ரத்து செய்ய முடியாது எனத் திமிரோடு அறிவிக்கிறது.

– குப்பன்
___________________________________
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2014
___________________________________

  1. நாட்டை காப்பதர்க்காக இல்லை ராணுவம் நாட்டை காக்கும் போர்வையில் உரிமைக்காக போராடும் அப்பாவி மக்களை கொலை செய்வது, அப்பாவி பெண்களை பாலியல் வல்லுறவுக்கு பலியக்குவது,இந்திய அரசு மக்களுக்கு செய்துவரும் அநிதிக்கு எதிராக மக்களை அணிதிரட்டி போராடிவரும் மக்கள் சக்திகளை நசுக்குவதற்க்கும் மட்டும்தான் ராணுவம் என்பதை மக்களுக்கு நாம் புரியவைக்க வேண்டும்,

  2. கடந்த ஞாயிறு (18-09-2016) அன்று காஷ்மீர் உரியில் நடந்த “தீவிரவாத” தாக்குதல்களும் சட்டிசிங்புராவைப் போலவே நடந்திருக்க வாய்ப்புள்ளது.

    கடந்த 72 நாட்களுக்கும் மேலாக நடந்துவந்த காஷ்மீர் மீதான பெல்லட் குண்டு தாக்குதல், ஊரடங்கு உத்தரவு முதலான இந்திய அரசின் ஒடுக்குமுறை, அதற்கஞ்சாமல் போராடிய காஷ்மீர் மக்களின் வீரம்செறிந்த போராட்டங்கள் அனைத்தும் இந்தியாவின் ஜனநாயக முகத்திரையின் மீது காறி உமிழ்ந்து வந்தன.

    இப்போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யவும், காஷ்மீர் மீதான தனது அடக்குமுறையை இந்திய அளவிலும்(தேச பக்தியை தூண்டி), உலக அளவிலும் நியாயம் கற்பிக்கவும் இந்த தாக்குதலை இந்திய பாதுகாப்புப் படைகளும், உளவுத்துறையும் சேர்ந்து சதி செய்து நடத்தியிருக்க வாய்ப்புள்ளது.

    சொல்லி வைத்தது போல இத்தாக்குதல் பற்றியும் அதில் பாகிஸ்தான் சதி போன்ற விவாதங்கள் சில நாட்கள் ஊடகங்களின் பிரைம் டைம்மை ஆக்கிரமித்திருக்கின்றன. மேலும், தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்பு படயினரின் குடும்பத்தினர் பற்றிய செய்திகளும் வெளியாகின. மலிவான செண்டிமெண்ட் உத்தியையும் ஊடகங்கள் தவறவிடவில்லை.

    ஏண்டா, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ என்ன போக்கிரி பட வடிவேலுவா? எப்ப பாத்தாலும், எந்த வேசம் போட்டாலும் கொண்டைய மறைக்காமலே வர்றதுக்கு? சதி பண்ணி அனுப்புறவன் துப்பாக்கியில ‘இது பாகிஸ்தான் தயாரிப்பு’ன்னு என்கிரேவ் (engrave) பண்ணி அனுப்புவானா?

    அதென்ன எங்க எந்த தாக்குதல் நடந்தாலும் அடுத்த செகண்டு பாகிஸ்தான் சதின்னு “கரெக்டா” கண்டு பிடித்துவிடுகிறார்கள்? இல்லைன்னா, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ இவங்ககிட்ட சொல்லிட்டு தான் சதி பண்றானா? திறமையா ’உளவு’ பாத்து, ‘விசாரணை’ நடத்தி கண்ண்டு பிடிக்கிறோம் என்று சொன்னால், ஏன் அதை நடக்குறதுக்கு முன்னரே கண்டுபிடிப்பதில்லை?

    காஷ்மீர் கிராமங்களில் இருக்கும் அப்பாவிகளை பிடித்துக் கொண்டு போய் ‘தீவிர்வாதிகள் பதுங்கியிருந்தனர்’ ‘தாக்குதல் முறியடிக்கப்பட்டது’ என்று சொல்லி படுகொலை செய்வதால், தாக்குதல் நடக்குறதுக்கு முன்னாடி “கண்டுபிடித்தாலும்” இவர்கள் கொண்டை தான் வெளியே தெரிகிறது.

    காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்- இந்திய இராணுவத்தின், உளவுப்படையின் சதியாக இருக்கக் கூடும்!காஷ்மீரில் எந்த படுகொலை நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல், காஷ்மீர் இந்தியாவின் பகுதியென்று கூவும் தேஷ்பக்த கூட்டத்தினருக்கு மேலும் தேஷ்வெறியேற்ற நடந்த தாக்குதல் தான் உரி தாக்குதல்.

    இதன் மூலம் காஷ்மீரின் நியாய உரிமை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.
    தேச பக்தர்களும், இந்திய இராணுவமும் நாசமாய்ப் போக!

  3. காஷ்மீர் –
    //பத்ரிபால் படுகொலையை நேரடியாக நடத்திய இராணுவம், 35 சீக்கியர்களைக் கொன்ற சட்டிசிங்புரா படுகொலையைத் தீவிரவாத அமைப்புகளிலிருந்து விலகி வந்து, பணத்திற்காக இராணுவத்தின் கையாட்களாகச் செயல்பட்டு வரும் கூலிப்படைக் கும்பலைத் தூண்டிவிட்டு நடத்தியது. காஷ்மீரில் பாக். தலையீடு இருப்பதை இந்தியாவுக்கு வரவிருந்த கிளிண்டனுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் தக்க ஆதாரத்துடன் நிரூபிப்பதற்காக, பா.ஜ.க. அரசு ஏற்பாடு செய்து நடத்தியதுதான் சட்டிசிங்புரா படுகொலை; அதனைத் தொடர்ந்து நடந்த பத்ரிபால் படுகொலை பா.ஜ.க. அரசின் குட்டு உடைந்து போகாமல் காப்பதற்காக அரங்கேற்றப்பட்ட போலி மோதலாகும்.//

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க