முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 21/02/2014

ஒரு வரிச் செய்திகள் – 21/02/2014

-

செய்தி: “ராஜிவ் படுகொலை, இந்த தேசத்தின் ஆன்மா மீதான தாக்குதல். எனவே ராஜிவ் கொலையாளிகளை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவு ஏற்புடையது அல்ல” – மன்மோகன் சிங்

நீதி: போபாலில் 10,000 மக்களைக் கொன்ற யூனியன் கார்பைடு குற்றவாளி அமெரிக்க ஆண்டர்சனை காப்பாற்றியதில், பிரதமராக தலைமையேற்ற ராஜீவ்தான் தேசத்தின் ஆன்மா என்றால் அந்த தேசமே தேவையில்லை.
________

news-11செய்தி: நாட்டிலேயே, அதிக காலம் முதல்வர் பதவியில் இருந்தவர் என்ற சாதனை படைத்திருந்த, அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர், ஜியாங் அபாங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.

நீதி: மக்கள் நெல்லை அதிக காலம் திருடித் தின்ற ஒரு பெருச்சாளி, காங்கிரஸ் வளையிலிருந்து பாஜக வளைக்கு மாறிய செய்தியில் சாதனை என்ன, பெருமை என்ன?
________

செய்தி: இன்போசிஸ்’ நிறுவனத்தின் முன்னாள் மூத்த அதிகாரிகளில் ஒருவரான பாலா “ஆம் ஆத்மி” கட்சியில் இணைந்தார்.

நீதி: நாராயணமூர்த்தியின் ஆம் ஆத்மி ஆதரவையும், அவரது நிறுவன புள்ளிகள் அக்கட்சியில் சேர்வதையும் ஆராதிப்பவர்கள் அம்பானியை எதிர்த்தாரென்று கேஜ்ரிவாலை நம்புவதற்கு வெட்கப்படமாட்டார்களா?
________

செய்தி:  நாட்டின்  29-வது மாநிலமாக தெலுங்கானா உருவாவது உறுதியாகியுள்ளது. இதற்கான மசோதா சில நாட்களுக்கு முன், லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில் நேற்று கடும் அமளிக்கு மத்தியில், ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டு பா.ஜ., ஆதரவுடன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிப்பதை அடுத்து விரைவில் சட்டமாகும்.

நீதி: இதனால் தெலுங்கானா மக்கள் வாழ்வில் தேனும் பாலும் ஓடிவிடாது. சீமாந்திராவின் முதலாளிகளும் – நிலப்பிரபுக்களும் எதையும் இழந்து விட மாட்டார்கள்.
________

செய்தி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு பா.ஜ., பிரதமர் வேட்பாளர் உட்பட நாட்டின் பிரபல அரசியல் தலைவர்களுடன், பேஸ்புக் வாடிக்கையாளர்கள் பேட்டி காண “பேஸ்புக்’ சமூக வலைதளம் வாய்ப்பு வழங்குகிறது.

நீதி: ஊடகங்களில் ஓட்டுக் கட்சி தலைவர்களின் சவடால்களையே அரசியலாக நம்பும் மக்களுக்கு போட்டியாக ‘வாடிக்கையாளர்களை’ களம் இறக்கும் பேஸ்புக்கிற்கு விளம்பரம் மூலம் வருமானம் கிடைக்கும். வாடிக்கையாளர்களுக்கு “என் கேள்விக்கு மோடி பதில் சொல்லிவிட்டார்” என்று அற்பவாத லைக்குகளும் மொக்கை பிரபலமும் நிச்சயம் கிடைக்கும்.
________

செய்தி: ஆந்திரா மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரண்குமார் ரெட்டி, தெலுங்கானா மாநில உதயத்தை எதிர்த்து கொடுத்த ராஜினாமா கடிதத்தை அதிகாரபூர்வமாக ஏற்பது குறித்து மாநிலத்தில் குழப்பம் நீடிக்கிறது.

செய்தி: ஒரு சில ஆண்டுகளாக தெலுங்கானாவும், சீமாந்திராவும் தேவையற்ற இந்த வெட்டிப் போராட்டத்தில் குழம்பிக்கிடப்பதை விடவா, இதில் ஆதாயம் தேடத்துடிக்கும் ரெட்டியின் ராஜினாமா கடிதம் குழப்பத்தை ஏற்படுத்தும்?
________

செய்தி: மத்திய அமைச்சரும் கர்நாடகாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லியின் மகன் ஹர்ஷா, மங்களூரு லோக்சபா தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

நீதி: வாரிசு அரசியலை எதிர்ப்பதாக ராகுல் காந்தி சொன்ன போதே தற்கொலை செய்வதாக அடம் பிடித்த “அரசியல் அறம்” இப்போது நாட்டுமக்களைப் பார்த்து சிரிப்பாய் சிரிக்கிறதாம்.
________

செய்தி: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால், பிரிட்டன் முன்னாள் பிரதமர் தாட்சரின் சுதந்திர தொழில் கொள்கையை பின் பற்றப் போவதாக அறிவித்துள்ளார்.

நீதி: இரும்புப் பெண்மணியாக முதலாளிகளால் ஆராதிக்கப்பட்ட தாட்சர் விரைவிலேயே இத்துப் போன பொருளாதாரத்தை கொண்டு வந்தார் என்று மக்கள் காறித்துப்பியது ஆம் ஆத்மிக்கும் நடக்கும். அவர்களது தமிழக லகுட பாண்டிகளுக்கும் நடக்கும்.
________

செய்தி: “இந்த நாட்டை இயக்கிக் கொண்டிருப்பவர்களில் தெருவோர வியாபாரிகளும் அடங்குவர். அதனால் தான் தெருவோர வியாபாரிகள் நலனுக்காக மத்திய அரசு சட்டம் இயற்றி அவர்களுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது. ”  –  ராகுல் காந்தி.

நீதி:  இயற்கை வளத்தை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உடனுக்குடன் அனுமதி கொடுக்கவில்லை என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜனை தூக்கிய பட்டத்து இளவரசர், பாதையோர ஏழைகளுக்கு கண்ணீர் விடுகிறாராம்.
________

செய்தி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவும் மேற்கு வங்க திரிணமுல் காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜியும் இணைந்து இந்தியாவிற்கான போராட்டம் என்ற புதிய அமைப்பு ரீதியிலான பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

நீதி: மேற்கின் காந்தியக் கோமாளியும், கிழக்கின் அல்லி ராணியும் சேர்ந்து நடத்தும் இந்த காமடியைப் பார்த்து சிரிப்பதற்கு நம்மிடம் தெம்பில்லையே?
________

செய்தி: கடந்த புதன்கிழமை ஆம் ஆத்மி கட்சிதலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், அச்சுதானந்தன் மதிப்புமிக்க ஒரு தலைவர் அவர் எங்கள் கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என அழைப்பு விடுத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அச்சுதானந்தன் நான் எப்போதும் மார்க்சிஸம், லெனினிசத்தின் கொள்கைக்காக அரசியலில் போராட்டம் நடத்துபவன், இதனை கெஜ்ரிவால் சரியாக புரிந்து கொள்ளாமல் கூறியுள்ளார் என்றார்.

நீதி: ஒரு போலிக் கம்னிஸ்டை ஒரு கார்ப்பரேட் என்ஜிவோ கட்சிக்காரன்தான் புரிந்து கொள்ள முடியும் சகாவே!
________

செய்தி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து எழுதியும், பேசியும் வருபவர் சோ தற்போது தமிழக அரசு எடுத்துள்ள முடிவு குறித்து விமர்சிக்க விரும்பவில்லை என மறுத்து விட்டார். ஆனாலும், “இது ஒரு அரசியல் முடிவு என்பது மட்டும் என்னுடைய கருத்து என்றும், இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றும் கூறினார்.

நீதி: அம்முவின் அரசியல் ஆதாயத்தை உயிரென மதிக்கும் இந்த அய்யர்தான் நடுநிலை சென்டர்களின் தலையாய சென்டர் என்று காலையில் டிகாஷன் ஃகாபி குடிக்கும் மயிலாப்பூர் பார்த்தசாரதிகள் இன்றும் சத்தியம் செய்கின்றனர்.
________

செய்தி:  எவ்வளவு பணம் தேர்தலுக்காக செலவு செய்ய முடியும்; அந்த பணம் எப்படி கிடைக்கும்; வருமான விவரங்கள், தற்போது, எவ்வளவு பணத்தை, கட்சிக்காக டெபாசிட் செய்ய முடியும் என்பது போன்ற கேள்விகளை திமுகவின் வேட்பாளர் நேர்காணலில் பொருளாளர் ஸ்டாலின் கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த சிலர் ‘கட்சிக்காக, 5 கோடி ரூபாய் டெபாசிட் கட்ட முடியும்; 10 கோடி ரூபாய் டெபாசிட் கட்ட முடியும்’ என, வாக்குறுதி அளித்துள்ளனர்.

நீதி: பத்து கோடி டெபாசிட் கட்டினால், எம்பியான பிறகு கட்டிங்கில் எவ்வளவு ரிடர்ன்ஸ் கிடைக்கும் என்பதை தளபதியிடம் கேட்டார்களா அந்த மில்லியனர் உடன்பிறப்புகள்?
________

செய்தி: உடல்நிலை சரியில்லாததால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக தே.மு.தி.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று தன் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.

நீதி: பண்ருட்டியைச் சேர்ந்த ஒரு பச்சோந்தி போயஸ் தோட்டத்து செடி கொடிகளில் குடியேறியதெல்லாம் ஒரு செய்தி அதற்கு ஒரு நீதி!
_______

செய்தி: மகாத்மா காந்தி 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி சுடப்பட்ட வரலாற்றை மாற்றி அக்டோபர் மாதம் 30 -ம் தேதி சுடப்பட்டார் என்று குஜராத் மாநில பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது பெற்றோரை அதிர்ச்சி்க்குள்ளாக்கி உள்ளது.

நீதி: காந்தியை சுட்டதற்காக ஆர்.எஸ்.எஸ்-ஐ நிரந்தரத் தடை செய்ய முடியாத நாட்டில் காந்தி செத்துப்போன தேதியை மாற்றுவதெல்லாம் ஒரு பிரச்சினையா?
________

செய்தி: நடப்பாண்டு லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்கள் மூலம், பத்திரிகை துறைக்கு விளம்பரங்கள் மூலம் 15,405 கோடி ரூபாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நீதி: வாங்கிய கைகள் வாழ்த்துமா, விமரிசிக்குமா?
________

செய்தி: “சுப்ரீம் கோர்ட், காப் பஞ்சாயத்து உத்தரவுகளில் தலையிடக் கூடாது,” என வட மாநிலங்களில் பிரபலமான ஜாதித் தலைவர், நரேஷ் திகாயத் கூறினார்.

நீதி: உச்சநீதிமன்றம் ஆதிக்கசாதிகளுக்கும், பார்ப்பனியத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டதே அன்றி அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டதல்ல என்பதை இதை விட யார் எளிதாக விளக்க முடியும்?
________

செய்தி: வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், பா.ம.க., பிரமுகர் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் மகரபூஷணத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

நீதி: தலித் – வன்னியக் காதலை நாடகக் காதல் என்று ஊளையிடும் மருத்துவரய்யா, அவரது கட்சிக்காரன் செய்திருக்கும் இந்த அயோக்கியத்தனத்தை எப்படி நியாயப்படுத்துவார்?
________

செய்தி:  காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் தேரோட்ட உற்சவத்தில், தேரின் முன்சக்கரம் உடைந்த சம்பவம் தொடர்பாக, கோவில் செயல் அலுவலரை பணியிடை நீக்கம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது.

நீதி: உலகளந்த பெருமாளுக்கு உள்ளூரைச் சுற்றும் தேரின் சக்கரத்தை சரி பார்ப்பதற்கு கூட பவர் இல்லாத போது ஒரு செயல் அதிகாரி என்ன செய்வார்?
________

 1. பாமக காரன் நிகழ்த்தி இருக்கும் கற்பழிப்பு ,கொலையை பண்ணையார் ராமதாஸ் இப்படித்தான் நியாயபடுத்துவார்.10 வயது சிறுமி சுடிதார் மேக்கப் போட்டுக்கொண்டு வந்து வேட்டிக்கட்டி கொண்டுநின்ற வீர வன்னியனை கற்பழித்து கொலை செய்ய தூண்டி இருக்கிறாள்.இந்தநாடக கற்பழிப்புக்கொலையை டாம்பிராஸ் உள்ளிட்ட அனைத்து சாதியினறும் கண்டுகொள்ளாத போது தலித்துகள் பிரச்சனை ஏற்படுத்தி கலவரம்நடத்த திட்டமிட்டுள்ளனர்.வன் கொடுமை சட்டத்தை உடனே ரத்து செய்து வன்னியனை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும்.

  • வாழப்பாடி சம்பவத்தில் தொடர்புடைய பாமக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்

   வாழப்பாடி அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாமக பிரமுகர், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
   இதுகுறித்து மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையத்தில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலையான சம்பவம் பற்றி அறிந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
   இந்த சம்பவத்தில் தொடர்புடைய காட்டு வேப்பிலைப்பட்டி வார்டு உறுப்பினர் சுயேச்சையாக வெற்றி பெற்று, பின்னர் பாமகவில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

   இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சண்முகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

   தினகரன் செய்தி (22.02.2014)

 2. நிகழ்வு அரசியல் இதுதான் என்பது கண்கூடாகத் தெரியும் உண்மை.தேசம் எப்படி கொள்ளை அடிக்கப்பட்டாலும் எனக்கென்ன என்றிருக்கும் மக்கள் கூட்டம் ஒருபுறம்,இதையெல்லாம் கண்டு வருத்தமுறும் மனிதர் கூட்டம் மறுபுறம், இக் கயமையை ஒழிக்க எப்படி முடிவெடுக்க என்றெண்ணும் அறிவுள்ளகூட்டம் மற்றொருபுறம் பல முகங்கள் இங்கிருந்தாலும் நன்மைக்கும்,தீமைக்கும் நடைபெறும் போராட்டத்தில் நன்மை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை மட்டும் வெற்றியை தந்துவிடாது அதற்கும் மேல் செயல்படும் வேகம் என்று ஒன்று வேண்டும் அதில் நன்மையை நாடுபவர்கள் சரியான வேகத்தில் செல்கிறோமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

  • ##அதில் நன்மையை நாடுபவர்கள் சரியான வேகத்தில் செல்கிறோமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.## ஏன் இந்த சந்தெகம்.

 3. நம்ம பண்ருட்டிக்கு 1% சதவிகிதம் கூட
  தன்மானம் கிடையாது: ஜெயா அடிக்கடி
  பன்ருட்டியை ,”உதிர்ந்த ரோமம்” என்பார்…
  இப்போது உதிர்ந்த மசிரு ஒட்டிக்கொண்டது…..

 4. கொஞ்ச நாளைக்கு முன்பு படித்த செய்தி:

  “புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியிலிருந்து வெடிகுண்டு கண்டெடுப்பாம்! இனி புதுச்சேரியையே CCTV காமிராவுக்குள் அடக்கப் போகிறார்களாம். அதற்காக ரூ.25 கோடி நிதி தேவையாம். அதுமட்டுமல்ல. ஒரு தனி பாதுகாவல் அதிகாரி, மற்றொரு கூடுதல் பாதுகாவல் அதிகாரி, 20 இராணுவ வீரர்கள் உள்ளபட 22 பேர் கொண்ட பாதுகாப்புப் படையுடன் குண்டு துளைக்காத காரில்தான் இனி அவர் புதுச்சேரி வருவாராம். இதற்குப் பெயர்தான் Z பாதுகாப்பாம்.”

  ”சிங்கம் சிங்கிளாத்தான் வரும். பன்னிங்கதான் கூட்டமா வரும்!” என்று ரஜினி சொல்வாரே! அது இதுதானோ!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க