மகளின் படிப்புக்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கல்விக் கடனை கட்டாததற்காக கோழிக்கோட்டைச் சேர்ந்த லீலாம்மாவின் 73 வயதான கணவர் கே.டி.ஜோசப், கடந்த ஒரு வாரமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 20-ம் தேதி மதியம் 3 மணிக்கு அவரது வீட்டுக்கு வந்த இரண்டு ஆசாமிகள், வழக்கு தொடர்பான சில நடைமுறைகளுக்காக ஒரு மணி நேரம் தம்முடன் வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அன்று அவர் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. தொலைபேசியில் லீலாம்மாவை அழைத்த அவரது வழக்கறிஞர் உடனடியாக கடன் தொகையை கட்டினால்தான் ஜோசப்பை விடுவிக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். லீலாம்மா தனது மருமகளின் நகைகளை விற்று ரூ 25,000 திரட்டிக் கொண்டு போனாலும், அந்த தொகை போதாது என்று அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு போய் கண்ணனூர் சிறையில் அடைத்து விட்டனர்.
இருதய நோயாளியும், முடக்கு வாதம் பீடித்தவருமான ஜோசப் என்ற முதியவர் இப்படி கடன் கட்டத் தவறி சிறைக்குப் போயிருப்பது ஏன்?
2004-ம் ஆண்டு (ஆம், இந்தியா ஒளிர்ந்து கொண்டிருந்த அதே ஆண்டுதான்), மகள் செரீனை படிக்க வைத்து ஆளாக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் செவிலியர் பயிற்சிக் கல்லூரிக் கட்டணத்திற்காக திருவாங்கூர் ஸ்டேட் வங்கியின் சீக்கொண்ணு கிளையிலிருந்து 11 சதவீதம் வட்டிக்கு ரூ 1.25 லட்சம் கடன் வாங்கியது ஜோசப்பின் குடும்பம். செரீன் படித்து முடித்து சிறிது காலம் ரூ 1,500 சம்பளத்திற்கு இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பெங்களூருவிலும், அதைத் தொடர்ந்து ரூ 3,000 சம்பளத்திற்கு கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலும் வேலை செய்திருக்கிறார். தொடர்ந்து, திருமணமாகி குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய பொறுப்பை ஏற்று வேலையை விட்டு விட்டு இப்போது கண்ணனூரில் வசித்து வருகிறார்.
அதாவது, செரீன் பெங்களூருவில் முதலில் வாங்கியது கடன் தவணை அடைக்கக் கூட போதாத பற்றாக்குறை சம்பளம். திருவனந்தபுரத்திலும் வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, சாப்பாட்டு செலவு மற்றும் பிற செலவுகள் போக கடன் கட்டுவது சாத்தியமே இல்லாத நிலை இருந்திருக்கிறது. எனவே, கடன் தொகையின் ஒரு தவணை கூட கட்ட முடியாமல், ஆண்டுக்காண்டு ஏறிய வட்டி வீதத்தின் கைங்கரியத்தால் மொத்தக் கடன் தொகை ரூ 3.25 லட்சமாக வளர்ந்து நிற்கிறது. சிறு விவசாயிகளான ஜோசப் குடும்பத்தினருக்கு கடன் கட்டுவதற்கான மாற்று வழிகளும் இல்லாத நிலையில் வட்டியுடன் கூடிய மொத்தக் கடன் சுமையும் 73 வயதான விவசாயி ஜோசப்பின் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது.
அன்று திருவிதாங்கூர் சமஸ்தானம் பார்ப்பனியக் கொடுங்கோன்மையால் உழைக்கும் மக்களை ஒடுக்கியது. இன்று திருவிதாங்கூர் ஸ்டேட் வங்கி அரசின் தாராளமயக் கொடுங்கோன்மையால் உழைக்கும் மக்களை சிறையிலடைக்கிறது.
இப்போது கோழிக்கோட்டில் மட்டும் கல்விக் கடன் வாங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 26,000 ஆகவும், கேரள மாநிலத்தில் 3.65 லட்சம் பேராகவும் இருப்பதாக இந்து நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

1990-களில் பள்ளிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்ற நரித்தனமான போலி அக்கறையை காரணம் காட்டி உயர்கல்வித் துறைக்கு அரசின் நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற உலகவங்கியின் பரிந்துரையை இந்திய அரசு ஏற்றுக் கொண்டது. 1997-ல் உயர்கல்வி “நன்மை தரக் கூடிய சமூகநலப் பட்டியலிலிருந்து’ நீக்கப்பட்டு, “இரண்டாம் பட்ச சமூகநலப் பட்டியலில்’ சேர்க்கப்பட்டது. ஆனால், உயர் கல்வித் துறையில் மட்டுமின்றி தொடக்கக் கல்வித் துறையிலும் தனியார் மயத்தை ஊக்குவித்து மோசடி செய்து வருகிறது அரசு.
இதன்படி அனைத்துத் துறைகளிலும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் அமைத்து லாப வேட்டை ஆடுவதற்கு முதலாளிகளுக்கு அனுமதியும், ஊக்கமும் அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கல்லூரிகள் வசூலிக்கும் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான அரைகுறை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டு, கல்விக் கட்டணங்கள் ஆண்டுக்காண்டு கொள்ளைக் கட்டணங்களாக மாறி வருகின்றன.
பெற்றோர்கள் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கியாவது சில இலட்சங்களை செலவழித்து தமது வாரிசுகளுக்கு தொழில்முறை படிப்புகளில் இடம் வாங்கி விட முயற்சிக்கிறார்கள். கட்டணத்துக்கான பணத்தை திரட்ட முடியாமல் விரக்தியடைந்த பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்ளும் கொடூரங்களும் அதிகரித்து வந்தன. இவ்வளவிற்கும் இந்த படிப்புகளால் வேலையோ இல்லை குறைந்த பட்ச வாழ்க்கையை தொடர்வதற்கான சம்பளமோ கிடைக்கவில்லை.
விற்பதற்கு சொத்து இல்லாத அல்லது கடன் வாங்க முடியாத பெரும்பான்மை மக்களின் வெறுப்பைச் சமாளித்து, தனியார் முதலாளிகளை வாழ வைக்க சொத்து ஜாமீன் கேட்காமல் கடன் கொடுக்க வேண்டும் என்று அரசு வங்கிகளுக்கு உத்திரவு போட்டார் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்.
அதாவது, கல்விக் கடன்கள் என்ற பெயரில் தனியார் கல்லூரிகளை உருவாக்கி கொள்ளை அடித்து வரும் முதலாளிகளுக்கு வங்கிகளால் பணம் தாரை வார்க்கப்பட்டு கடன் சுமை மாணவர்கள் மீதும் பெற்றோர்கள் மீதும் சுமத்தப்படுவதற்கு வழி செய்து கொடுத்தார் சிதம்பரம். மேலும், சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாகக் கருதப்பட்டு, அவற்றின் வருமானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்படும் திருப்பணியையும் மத்திய அரசு செய்து வருகிறது.
2004-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி 3.19 லட்சம் ஆக இருந்த நாடு முழுவதும் உள்ள கல்விக்கடன் கட்டுபவர்களின் எண்ணிக்கை மார்ச் 31, 2011 புள்ளிவிபரப்படி 22.35 லட்சம் ஆக உயர்ந்திருக்கிறது. மொத்த கடன் தொகை ரூ 4,550 கோடியிலிருந்து ரூ 43,074 கோடியாக உயர்ந்திருக்கிறது. அதாவது 7 ஆண்டுகளில் கல்விக்காக கடனாளி ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மடங்காகவும், கல்விக் கடன் மூலம் தனியார் கல்வி கொள்ளையர்களின் பெட்டிக்குள் அனுப்பப்பட்ட தொகை 9 மடங்காகவும் உயர்ந்திருக்கிறது.
இந்த கடன் சுமையை ஏற்றுக் கொண்டு படிப்பை முடிக்கும் இளைஞர்களுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்பை மறுக்கும் வகையில் முதலாளிகளுக்கு ஆதாயம் அளிக்கும் உலகமயமாக்கல் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. ஊதிப் பெருக்கப்படும் துறைகளின் சந்தைத் தேவையின் நிச்சயமற்ற தன்மை, கொள்ளளவு ஆகியவற்றில் மிகையாக கழித்துக் கட்டப்படும் இளைஞர்களுக்கு வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை கட்டுவதற்கு கூட போதுமான சம்பளம் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.
ஒரு புறம் மக்கள் சொத்துக்களை விற்றும், வங்கிக்கடன் வாங்கியும் தனியார் கல்வி முதலாளிகளின் கல்லாவை நிரப்ப வைக்கும் கல்வி தனியார் மயக் கொள்கை; மறுபுறம் படித்து முடித்து வெளிவரும் இளைஞர்களின் மிகை எண்ணிக்கை மூலம் சம்பள வீதங்களை குறைத்து, தொழில்துறை முதலாளிகளுக்கு லாபத்தை குவிக்கும் உலகமயமாக்கல் கொள்கை. இந்த இரண்டுக்கும் மத்தியில் மக்கள் சொத்துக்களை இழந்து ஓட்டாண்டிகளாகாவது நடந்து வருகிறது.
ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக் கல்வி வரை அனைவருக்கும் இலவச, சமச்சீர் கல்வியை அரசே வழங்குவதுதான் இதற்கான ஒரே தீர்வு. இந்தத் தீர்வை ஆளும் காங்கிரஸ் கட்சியோ, ஆள விரும்பும் பா.ஜ.க கட்சியோ, மாற்றாக முன் வைக்கப்படும் ஆம் ஆத்மி கட்சியோ ஏற்றுக் கொள்வதில்லை. கல்வித் துறையில் மேலும் மேலும் தனியார் மயத்தை ஆழப்படுத்துவது, வேலை வாய்ப்பு சந்தையில் மேலும் மேலும் நிச்சயமின்மையை உருவாக்குவது என்று நாட்டையும் நாட்டு மக்களையும் பேரழிவுப் பாதைக்கு செலுத்துவதுதான் அனைத்து ஆளும் வர்க்க கட்சிகளின் கொள்கை.
இந்நிலையில் வங்கிகள் கடனை வசூல் செய்வதற்காக பல்வேறு சட்டபூர்வமான மற்றும் சட்டபூர்வமற்ற வழிமுறைகளில் இறங்குகின்றன. கடன் கட்டாதவர்களின் படங்களை செய்தித் தாள்களில் வெளியிட்டு அவமானப்படுத்துவது, வங்கிக் கிளைகளுக்கு வெளியில் செய்திப் பலகையில் அல்லது பேனரில் போட்டு அழுத்தம் கொடுப்பது மற்றும் மாஃபியாக்கள் போல கடன் வசூலிப்பதற்கு நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வது என்று பெற்றோரின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்க ஆரம்பிக்கின்றன.

அந்த வகையில்தான் ரூ 3.25 லட்சம் கட்ட வேண்டும் என்பதற்காக ஜோசப் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இவரைப் போன்ற அப்பாவிகளிடம் கெடுபிடி காட்டும் வங்கிகள், முதலாளிகள் கட்ட வேண்டிய ரூ 5 லட்சம் கோடி வாராக்கடன்களை ஒரு சில கையெழுத்துக்களில் தள்ளுபடி செய்து விடுகின்றன. 7,000 கோடி வங்கிக் கடன் வைத்திருக்கும் விஜய் மல்லையா சுதந்திர மனிதராக, சொத்துக்களுடனும், ஆடம்பர கேளிக்கை வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.
மேலும், பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை வசூலித்து மோசடி செய்த வழக்கில் சகாரா குழும முதலாளி சுப்ரதா ராய் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட, ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தன்னுடைய 82 வயது தாயாரின் அருகில் அவர் கையைப் பிடித்துக் கொண்டே உட்கார வேண்டியிருப்பதால் சுப்ரதா ராய் நீதிமன்றத்திற்கு வர முடியாது’ என்று மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதாட, ‘இந்த நீதிமன்றத்தின் கரங்கள் நீளமானவை, சுப்ரதா ராயை பிடித்து வரும்படி பிணையில்லா உத்தரவு பிறப்பிக்கிறோம். நாங்கள் நாட்டின் உச்சச நீதிமன்றம்’ என்று நீதிபதிகள் வீராவேசம் காட்ட, ‘சுப்ரதா ராயின் வீட்டில் ரெய்டு நடத்தி அவரை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என்று உ.பி போலீஸ் தமது திறமையை வெளிப்படுத்த மத்திய அரசும், நீதிமன்றமும், மாநில போலீசும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்து நாளிதழில் வெளியான புகைப்படத்தில் லீலாம்மா ஜோசப்பிற்கு அருகில் பள்ளிச் சீருடையில் உள்ள அவரது பேத்தி கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருக்கிறாள். அது போன்று நாடுமுழுவதும் தனியார் கல்விக் கொள்ளை என்ற சிலந்தி வலைக்குள் சிக்க வைக்கப்படும் கோடிக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?
– செழியன்.
மேலும் படிக்க