Tuesday, September 22, 2020
முகப்பு செய்தி பெண் விடுதலையே நமது வேலை ! - உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்

பெண் விடுதலையே நமது வேலை ! – உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்

-

பிள்ளை பெறுவதும், சமைப்பதும் மட்டும் நமது வேலையல்ல !
பெண் விடுதலையையும் நமது வேலையாக்குவோம் !

அன்பார்ந்த உழைக்கும் பெண்களே !

கிளாரா ஜெட்கின் மார்ச் -8 உலக மகளிர் நாள். இது கொண்டாட்ட நாளல்ல, போராட்ட நாள். அதாவது, உழைக்கும் பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலுக்கு எதிரான போராட்ட நாள்.

நிரந்தர வேலை, ஆணுக்கு நிகரான – சமமான கல்வி, வாக்குரிமை, 8 மணி நேர வேலை போன்ற கோரிக்கைகளுக்காகவும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், ஆடை தயாரிப்பு பெண் தொழிலாளிகள் ஆயிரக்கணக்கில் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வீதிகளில் இறங்கி போராடிய நாள். பல ஆயிரம் உயிர்களை பலி கொடுத்து, சில ஆயிரம் பேர் சிறையில் வதைபட்டு உரிமைகளை மீட்டெடுத்த நாள்.

இப்படி போராடிப் பெற்ற உரிமைகள் ஒவ்வொன்றையும் பறித்து, 12 மணி நேர வேலை, குறைந்த கூலி, ஒப்பந்தக் கூலி, தினக்கூலி போன்றவைகளை திணித்து வருகிறது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை. இது பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தி வருவதோடு, சிறுநீர் கழிப்பதற்குக் கூட வரம்பிட்டு வதைக்கிறது. இது எவ்வளவு பெரிய கொடுமை?

இந்தக் கொடுமையோடு, வரதட்சணை  கொடுமை, பாலியல் வன்கொடுமை, விளம்பரங்களில் – சீரியல்களில் இழிவுபடுத்தும் கொடுமை, கட்டப் பஞ்சாயத்து கும்பலின் பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகள் சொல்லி மாளாத அளவிற்கு அன்றாடம் அரங்கேறி வருகின்றன.

இதுபோன்ற கொடுமைகளுக்கு எதிராக அணிதிரள வேண்டிய இந்நாளில் கோலப்போட்டி, அழகிப் போட்டி, சமையல் போட்டி, நடனப் போட்டி என நடத்தி இந்த நாளை சிறுமைப்படுத்துகின்றன ஆளும்வர்க்க – பிழைப்புவாத – சமரச – தன்னார்வ அமைப்புகள். இதன் மூலம் விடுதலைக்கான சிந்தனையையும் முளைக்க விடாமல் புதைத்து விடுகின்றன.

இதனால்தான் உலக மகளிர் நாள் நூறு ஆண்டுகள் கடந்தும் பெண்கள் மீது திணிக்கப்பட்ட பெண்ணடிமைத்தனத்தைத் துடைத்தெறிய முடியவில்லை. ஆணாதிக்கத்தையும் அறுத்தெறிய இயலவில்லை. தொடர்ந்து நாமும் பெண்ணடிமைத்தனத்திற்கும், ஆணாதிக்கத்திற்கும் அடங்கிப் போய் வாழ்வை வழி நடத்திச் செல்கிறோம். இதுதான், பிறந்தவுடன் அப்பனுக்கு அடிமை, பின்பு கணவனுக்கு அடிமை, முதிந்த வயதில் மகனுக்கு அடிமை என்ற பட்டத்தை சுமந்தே பிள்ளை பெறும் எந்திரமாக, சமையல்காரியாக வலம் வருவதில் இருந்து நம்மை மீளமுடியாமல் முடக்கி விடுகிறது.

இது போதாதென்று ஏறிவரும் விலைவாசி, வேலைகளில் நெருக்கடி, குடும்பத்தின் போதாமை போன்றவைகளும் ஆக்டோபஸைப் போல நம்மைச் சுற்றி வளைத்து தாக்குகின்றன. இதையும் மீறி சொரணையுள்ளவர்களாக மாறி இக்கொடுமைகளுக்கு எதிராக போராடும் பட்சத்தில் காவல் நாய்களை ஏவி கடித்துக் குதறுகின்றன மத்திய – மாநில அரசுகள். மேலும், மறுகாலனியாக்க சீரழிவுப் பண்பாட்டையும், நுகர்வு வெறியையும் திணித்து நம்முடைய சிந்தனையைச் சிதைத்து ஊனமாக்கி முடக்கியும் விடுகின்றன. அதற்காக முடங்கி விட முடியுமா? கூடாது.

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்பது போல, இச்சீரழிவுகளுக்கு – கொடுமைகளுக்கு – அடக்குமுறைகளுக்கு எதிராக மீண்டும், மீண்டும் போராடுவோம். முதலாளித்துவ லாபவெறிக்காக பெண்கள் மீது திணிக்கப்படும் உழைப்புச் சுரண்டலையும், பெண்களின் சிந்தனையைச் சீரழிக்கும் நுகர்வுவெறியையும், பெண்களைப் போகப் பொருளாகக் காட்டி காசு பறிக்கும் விளம்பர நிறுவனங்களையும் முறியடிப்போம். ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும், மறுகாலனியாக்கம் திணித்து வரும் அனைத்துவகை சீரழிவுப் பண்பாட்டையும், நுகர்வு வெறியையும் தகர்த்தெறிவோம்.

இதற்கு பெண்களுக்கெதிரான உரிமைகளை மீட்டெடுக்கப் போராடிய கம்யூனிசப் போராளி கிளாரா ஜெட்கின் வாரிசுகளாகக் களமிறங்குவோம். சமைப்பதும், பிள்ளை பெறுவதும் மட்டும் நமது வேலையல்ல. இந்நாட்டை மீண்டும் அடிமையாக்கி வரும் மறுகாலனியாக்கக் கொள்கைக்கு எதிராக – அது அரங்கேற்றி வரும் அனைத்து வகை கொடுமைகளுக்கும் எதிராகப் போராடுவதையும் நமது வேலையாக்குவோம்.

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிவகுப்போம் !
சமூக விடுதலையை முன்னெடுப்போம் ! பெண் விடுதலையைச் சாதிப்போம்.

அரங்கக் கூட்டம்

மார்ச் – 8, மாலை 3.00 மணி
S.D. திருமண மண்டபம், GST ரோடு, குரோம்பேட்டை

நிகழ்ச்சி நிரல்

தலைமை :
தோழர் அமிர்தா
மாவட்ட செயற்குழு உறுப்பினர், பெ.வி.மு.

போராளி கிளாரா ஜெட்கின் வாரிசுகளாக…
தோழர் உஷா
மாவட்டச் செயலாளர், பெ.வி.மு -சென்னை

ஆணாதிக்கமும் பெண்ணடிமையும், பெண்கள் விடுதலைக்கு தடை
எழுத்தாளர் பிரியா தம்பி

சிறப்புரை
தோழர் துரை சண்முகம்,
ம.க.இ.க. – தமிழ்நாடு

நன்றியுரை
தோழர் சாந்தி
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
பெ.வி.மு

கலை நிகழ்ச்சி

மார்ச் - 8, அரங்கக்கூட்டம்

தகவல் :

பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை
தொடர்பு எண் 9841658457

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க