Thursday, May 13, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா இந்தியா - ஜப்பான் ஒப்பந்தம் : அமெரிக்க போர்ச்சக்கரத்தில் இந்தியா !

இந்தியா – ஜப்பான் ஒப்பந்தம் : அமெரிக்க போர்ச்சக்கரத்தில் இந்தியா !

-

டந்த ஜனவரி 26 ‘இந்தியக் குடியரசு’ தினத்தன்று தலைமை விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கௌரவிக்கப்பட்டதோடு, ஜப்பானுக்கும் இந்தியாவுக்குமிடையே சுற்றுலா, இராணுவம், தொலைத் தொடர்பு, அடிக்கட்டுமானத்துறை, மின் உற்பத்தி, அணுசக்தி உள்ளிட்ட 8 வகையான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அதற்கு முன்னர், இந்தியாவுக்கு வந்த ஜப்பானிய இராணுவ அமைச்சர் இட்சுநோரி ஓனோடெரா-வுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இரு நாடுகளின் கடற்படைகளும் தொடர்ந்து முறையாகக் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் என்றும், அவசியமானால் அமெரிக்கப் படையுடன் சேர்ந்து இந்தியாவும் ஜப்பானும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜப்பானிய பிரதமர்கள்
இந்தியாவை அமெரிக்காவின் போர்ச்சக்கரத்தில் பிணைக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்றிய பூரிப்பில் இந்திய-ஜப்பானியப் பிரதமர்கள்.

மேலும் நாட்டின் பாதுகாப்பைக் கருதி, ஜப்பானிடமிருந்து 165 கோடி டாலர் மதிப்புள்ள “யூஎஸ்-2ஐ” எனும் உயர்தர போர் விமானங்களை வாங்கவும் ஜப்பானின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் போர் விமானங்களை வடிவமைக்கவும் முடிவாகியுள்ளது. ஜப்பானுடன் கையெழுத்திட்டுள்ள இந்த ஒப்பந்தங்களால் இந்தியா வலிமையும் வளமும் பெறுவதற்கான வாப்புகள் பிரகாசமடைந்துள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரித்துவருகின்றன.

ஆனால், ஜப்பானிய வல்லரசுடன் இந்தியா போட்டுக் கொண்டுள்ள இந்த ஒப்பந்தங்களின் மூலம் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் பசிபிக் கடல் பிராந்தியத்திலும் அமெரிக்காவுக்குச் சேவைசெய்யும் அடியாளாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது. ஆசியாவுக்கான தனது போர்த்தந்திரத் திட்டத்தின்படி, ஏற்கெனவே ஜப்பானையும் ஆஸ்திரேலியாவையும் தனது கூட்டாளிகளாகக் கொண்டுள்ள அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவைத் தனது இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொண்டுள்ளது.

****

ண்மைக்காலமாக தென்சீனக் கடல் பகுதியில் போர் பதற்ற நிலை தீவிரமாகி வருகிறது. தென்சீனக் கடலிலுள்ள ஆளில்லா சென்காகு தீவுக் கூட்டத்தில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்ட பின்னர், சீனா தனது பாரம்பரிய உரிமைகளைக் காட்டி அவற்றுக்குச் சோந்தம் கொண்டாடுகிறது. இதேபோல இத்தீவுக் கூட்டங்களுக்கு சீனாவின் அண்டை நாடுகளான ஜப்பான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளும் உரிமை கோருகின்றன. தென்சீனக் கடலிலுள்ள தீவுகள் யாருக்குச் சோந்தம் என்பதை அந்த வட்டார நாடுகள்தான் தமக்குள் பேசித் தீர்வு காண வேண்டுமே தவிர, இதில் தலையிட்டு நாட்டாமை செய்வதற்கு அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. ஆனால், அவ்வாறு தலையிடுவதற்கான முகாந்திரத்தைத் தேடுவதற்காகவே, தனது நட்பு நாடுகளின் பெயரால் மூக்கை நுழைக்கும் அமெரிக்கா, சீனாவின் செல்வாக்கை இப்பிராந்தியத்தில் தடுத்து தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கிறது.

இதன் காரணமாக, தனது இராணுவ வலிமையைப் பெருக்குவதிலும் போர்ப்பயிற்சிகளை நடத்துவதிலும் சீனா இறங்கியுள்ளது. சென்காகு தீவுக் கூட்டத்தை உள்ளடக்கியுள்ள தென்சீனக் கடலின் வான்பரப்புப் பகுதியைத் தனது “வான் பாதுகாப்புக்கு உட்பட்ட வளையம்” என்று கடந்த ஆண்டு நவம்பர் 24-இல் அறிவித்த சீனா, இப்பகுதியில் பறக்கும் விமானங்கள் சீனாவிடம் முறைப்படி அனுமதி பெறாவிடில், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தது. இதை ஏற்க மறுக்கும் ஜப்பானுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்க வல்லரசு, நவம்பர் 26 அன்று தனது இரு பி-52 ரக போர் விமானங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி அப்பகுதியில் பறக்கவிட்டு சீனாவைச் சீண்டியது.

இந்திய கடற்படை
அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கப் போர்தந்திர திட்டத்தின்படி, சீனாவுக்கு எதிராக ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளும் இந்தியக் கடற்படை.

இதேபோல, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரிய தீபகற்பத்தில் எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற பதற்ற நிலையை அமெரிக்கா தோற்றுவித்தது. அணுவாற்றல் கொண்ட வடகொரியாவின் அச்சுறுத்தலை முறியடிப்பது, அமெரிக்காவின் நட்பு நாடுகளான தென் கொரியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானைப் பாதுகாப்பது என்ற பெயரில், கொரிய தீபகற்பத்தில் பெரும்படைகளைக் குவித்து போர் ஒத்திகைகளை நடத்தி அமெரிக்கா அச்சுறுத்தியது. வடகொரியாவை ஆத்திரமூட்டிப் போருக்குத் தள்ளுவதன் மூலம் வடகொரியாவின் நட்பு நாடான சீனாவை இப்போரில் இழுத்துவிட்டு, அதன் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்கத்துடனேயே அமெரிக்கா இந்நடவடிக்கைகளை மேற்கொண்டது.

முதலாளித்துவ நாடாக வளர்ந்துள்ள சீனா, உலகமயமாக்கலைப் பயன்படுத்திக் கொண்டு உலகின் நுகர்பொருள் சந்தையில் மட்டுமின்றி, உயர் தொழில்நுட்ப உற்பத்தியிலும் போட்டியிடத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஏற்றுமதியில் அமெரிக்காவே முதலிடம் வகிக்கிறது; அதேபோல சீனத்தில் போடப்பட்டுள்ள அந்நிய முதலீடுகளில் அமெரிக்க முதலீடுகளே அதிகமானதாக உள்ளது; தாராளமயக் கொள்கையைத்தான் சீனா பின்பற்றுகிறது என்ற போதிலும், உலகச் சந்தையில் சீனாவின் போட்டியை பெரும் சவாலாகக் காட்டி அமெரிக்காவும் முதலாளித்துவ ஊடகங்களும் பீதியூட்டுகின்றன.

அமெரிக்க வல்லரசை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக ஷாங்காய் கூட்டுறவு, ஆப்பிரிக்காவில் முதலீடுகள், தென்கிழக்காசியாவைத் தன்பக்கம் இழுப்பது போன்ற முயற்சிகளை சீனா மேற்கொண்டுள்ள போதிலும், அமெரிக்காவுக்கு மாற்றான ஒரு மையமாக சீனா தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவில்லை. அமெரிக்காவுடன் நேரடியாக மோதாமல், அதன் ஆத்திரமூட்டும் மேலாதிக்க நடவடிக்கைகளைத் தந்திரமாகக் கையாண்டு வரும் சீனா, அமெரிக்க ஏற்றுமதிச் சார்பிலிருந்து விடுபட்டு, உலகமயமாக்கலைப் பயன்படுத்திக் கொண்டு தனது சந்தையை விரிவாக்கிக் கொள்ளவே முயற்சிக்கிறது.

மூலப்பொருட்களுக்காகவும் சந்தைக்காகவும் எரிபொருளுக்காகவும் ஆப்பிரிக்காவில் கால்பதித்துள்ள சீனா, பொருளாதார ஒத்துழைப்பு, கட்டுமானப் பணிகள் முதலானவற்றின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளில் தனது செல்வாக்கைப் பெருக்கி வருகிறது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலின்படி அனைத்து நாடுகளும் சுதந்திரமாகப் போட்டியிடலாம் என்று கூறும் அமெரிக்கா, இதில் தனது மேலாதிக்கத்துக்குப் போட்டியாக சீனா வரக்கூடாது என்பதற்காகவே சீனாவை “அச்சுறுத்தும் வல்லரசாகப்” பூச்சாண்டி காட்டுகிறது.

இந்திய ஜப்பானிய மாநாடு
டெல்லி அருகே நொய்டா நகரில் கடந்த டிசம்பர் 15-18 தேதிகளில் நடந்த “இந்திய-ஜப்பானிய உலகளாவிய பங்குதாரர் உச்சி மாநாடு 2013” : மறுகாலனியாதிக்க விரிவாக்கத்துக்கும் இந்திய-ஜப்பானிய கார்ப்பரேட் முதலாளிகளின் கூட்டுக் கொள்ளைக்குமான புதிய ஏற்பாடு

சீன முதலாளித்துவத்தின் போட்டியையும் உலகப் பொருளாதாரத்தில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கையும், தனது உலக மேலாதிக்கத்துக்கு எதிரான சவாலாகக் கருதும் அமெரிக்கா, சீனாவின் உய்குர் பிராந்தியத்தில் இசுலாமிய தீவிரவாதத்தைத் தூண்டிவிடுவது, திபெத்தில் தலாய்லாமாவைப் பின்னாலிருந்து இயக்குவது, சீனாவின் அங்கமான தைவானைத் தனிநாடாக அறிவித்து அதனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டிருப்பது, சென்காகு தீவுகள் விவகாரத்தைக் கிளறிவிடுவது, தென்கிழக்காசிய நாடுகளை சீனாவுக்கு எதிராகத் திருப்புவது, சர்வதேச கடல் விதிகளை மீறி சீனக் கடற்பரப்பில் தனது உளவு விமானங்களை வேவு பார்க்க அனுப்புவது – எனப் பலவழிகளிலும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உலகின் கடல்வழி வணிகத்தில்,குறிப்பாக எண்ணெ ய் வர்த்தகத்தில் பாதிக்கும் மேலாக மலாக்கா மற்றும் ஹெர்மஸ் நீரிணை வழியாக நடப்பதால், ‘எதிர்கால வல்லரசான’ சீனாவின் மேலாதிக்கத்தில் இந்தக் கடல்வழி சிக்கிவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா குறியாக இருக்கிறது. அமெரிக்காவின் கூட்டாளியாக உள்ள ஜப்பானும் ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கப் போர்த்தந்திரத் திட்டத்தில் முன்னணிப் பாத்திரமாற்றுகின்றன. சந்தைக்காகவும் மூலதன விரிவாக்கத்திற்காகவும் நடக்கும் இந்த நாய்ச்சண்டையில் இப்போது இந்தியாவையும் அமெரிக்கா இளைய பங்காளியாகச் சேர்த்துக் கொண்டுள்ளது.

இதன்படியே, இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் பகுதிகளில் ஜப்பானுடன் கூட்டுச் சேர்ந்து கடற்படை ஒத்திகை நடவடிக்கைகளையும் கூட்டுப் பயிற்சிகளையும் மேற்கொண்ட இந்தியா, இப்போது போடப்பட்டுள்ள இந்திய – ஜப்பானிய ஒப்பந்தத்தின்படி, சீனா அறிவித்துள்ள வான் பாதுகாப்பு மண்டலத்தினுள் அத்துமீறி தனது போர் விமானங்களைச் செலுத்தவும் தீர்மானித்துள்ளது. இனி இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் அதிகாரிகள், ஜப்பானிய அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கூட்டாளியான ஜப்பான், இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த சட்டரீதியான கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு வெளிப்படையாகவே இராணுவ பலத்தைப் பூதாகரமாக அதிகரிப்பதிலும், ஆயுத விற்பனையிலும், பிற நாடுகளுடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் போடப்பட்ட ஒப்பந்தத்தால், இதுவரை தற்காப்புப் படையாக இருந்த ஜப்பானிய இராணுவம், இனி முழு அளவிலான தாக்குதல் திறன்மிக்கதாக மாற்றியமைக்கப்படும் என்று சீனாவுக்கு எதிராகத் தேசியவெறியூட்டி வருகிறார், ஜப்பானியப் பிரதமர் அபே. இரண்டாம் உலகப் போரில் காலனியாதிக்க அடக்குமுறையிலும் அட்டூழியங்களிலும் ஈடுபட்ட ஜப்பானின் முதல்தர போர்க்குற்றவாளிகளின் கல்லறைகள் அமைந்துள்ள யாசுகுனி வழிபாட்டுத் தலத்துக்குச் சென்று ஜப்பானின் உயர்மட்டத் தலைவர்கள் வழிபடுவதை சீனாவும், வட – தென்கொரிய நாடுகளும், இதர தென்கிழக்காசிய நாடுகளும் கடுமையாக எதிர்க்கின்றன. இருப்பினும், சீனாவை ஆத்திரமூட்டவும் ஜப்பானிய மேலாதிக்கத்தைப் பெருமைப்படுத்தவும் கடந்த டிசம்பர் 26 அன்று பிரதமர் அபே அங்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் ஆசியப் போர்த்தந்திரத் திட்டத்தின்படியே ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமின்றி, சீனாவைச் சுற்றியுள்ள நாடுகளது இராணுவ வலிமையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. உலகில் அதிக அளவில் ஆயுதக் கொள்முதல் நடக்கும் பிராந்தியமாக தென்கிழக்காசியா மாறியுள்ளது. ஏற்கெனவே கடந்த 2007-2011 வரையிலான காலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ள இந்தியா, உலகின் ஆயுதக் கொள்முதலில் முன்னிலையிலுள்ள நாடுகளுள் ஒன்றாக வளர்ந்துள்ளது.

11-india-japan-caption

அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத் திட்டத்துக்கும், உலக மேலாதிக்கத்துக்கும் பயன்படும் வகையில் புவிவியல் ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்தியா இருப்பதாலும், சீனாவின் அண்டை நாடாக இருப்பதாலும், அமெரிக்கப் போர்விமானங்களும் போர்க் கப்பல்களும் விரைந்து சென்று தாக்குவதற்கு ஏற்ற வகையிலான ஏவுதளமாகவும் அடியாளாகவும் இந்தியாவை மாற்றியமைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா முயற்சிக்கிறது.

இதுமட்டுமின்றி, தனது நாட்டில் புகுஷிமா பேரழிவுக்குப் பின்னர் அந்த அணுஉலையை மூடியுள்ள ஜப்பான், இப்போது தனது அணு உலைகளை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, புகுஷிமா போன்ற பேரழிவுகளைக் கருக்கொண்டுள்ள அணு உலைகள் இந்திய நாட்டின் கடலோரப் பகுதிகளில் தொடங்கப்படும் என்பது உறுதியாகிவிட்டது.

மொத்தத்தில் தேச நலன் – பாதுகாப்பு என்ற பெயரில் உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவின் அடிமையாகவும் அடியாளாகவும் இந்தியாவை மாற்றியிருக்கிறது, இந்த ஒப்பந்தம். இந்திய – சீன வர்த்தக உறவானது, இந்தியத் தரகு முதலாளிகளுக்குப் பொருளாதார ரீதியாக ஆதாயமானதாக இருந்த போதிலும், அரசியல் காரணங்களுக்காக அமெரிக்காவின் பக்கமே அவர்கள் நிற்கின்றனர். ஏற்கெனவே சீன எதிர்ப்பு இந்தியாவில் நீண்டகாலமாக நிலவிவருவதாலும், இந்துவெறியர்களும் ‘தேசிய’ ஊடகங்களும் சீன அபாயத்தைக் காட்டி பீதியூட்டி வருவதாலும், ஈழ விவகாரத்தில் ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக சீனா நிற்பதைக் காட்டி சீனாவை எதிரியாக தமிழினவாதிகள் சித்தரிப்பதாலும், அமெரிக்காவின் அடியாளாக இந்தியாவை மாற்றும் இந்த முக்கியமான ஒப்பந்தம் எதிர்ப்பே இல்லாமல் கையெழுத்தாகியுள்ளது.

அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நாடு பிடிப்பதற்காக உலகெங்கும் நடத்திய ஆக்கிரமிப்புப் போர்களில் இந்தியர்கள் காலாட்படையாகச் சென்று கொல்லப்பட்டதைப் போலவே, இன்று அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கான அடியாள் படையாகச் சென்று இந்திய சிப்பாய்கள் கொல்லப்படுவதும், அதிநவீன அமெரிக்க ஆயுதங்கள் மேலும் இறக்குமதி செயப்பட்டு, அடுக்கடுக்காக வரிவிதிப்பும், அடக்குமுறையும் அதிகரிக்கப் போவதுதான் இந்திய மக்களுக்கு இந்த ஒப்பந்தம் தரப்போகும் பரிசுகள்.

நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய இந்த ஒப்பந்தம், நாடாளுமன்றத்தில் விவாதம் கூட நடத்தப்படாமல் அதிகாரிகள் மட்டத்தில் இறுதியாக்கப்பட்டு, கொல்லைப்புறமாகவே திணிக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் மறுகாலனியாதிக்கப் படுகுழியில் இந்தியாவைத் தள்ளிய “காட்” ஒப்பந்தமும், நாட்டை அமெரிக்காவின் அடிமையாக மாற்றிய அணுசக்தி ஒப்பந்தமும் நம் மீது திணிக்கப்பட்டன. நாட்டையும் மக்களையும் பேரழிவுக்குள் தள்ளும் அபாயகரமான இந்தத் தேசத் துரோகிகள் உடனடியாகத் தூக்கியெறியப்பட்டு, இந்திய – ஜப்பானிய ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவதற்கான மக்கள் போராட்டங்கள் பெருக வேண்டும். இல்லையேல், அமெரிக்காவின் போர்ச்சக்கரத்தில் பிணைக்கப்பட்டு நாடே சின்னாபின்னமாக்கப்பட்டுவிடும்.

– பாலன்
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________

 1. அமெரிக்க ஏகாதிபத்திய அட்டுழியங்கள் உலகறிந்ததுதான். அமரிக்கா நீட்டும் நேசக்கரம் ” சுயநலமிக்க நாசக்கரம் ” என்பதும் அனைவருக்கும் தெரியும் ! இரண்டாம் உலகப்போரின் முடிவுக்கு பிறகு, உலகின் வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸ் நாடே அமெரிக்க ரணுவத்தை தன் பகுதிகளிலிருந்து வெளியேற்ற பல அரசியல் தந்திரங்களை கையாள வேண்டியிருந்து வரலாறு !

  இந்தியாவின் அமெரிக்க காதலும் புதிதான ஒன்றல்ல !

  ஆனாலும் ” பொருளாதார முன்னேற்றதை மட்டுமே ” நோக்கமாக கொண்ட வளரும் நாடாக சீனாவை நல்லப்பிள்ளையாக இந்த கட்டுரையில் சித்தரித்திருப்பதும் தவறு ! இராணுவ மற்றும் பொருளாதார சில்மிசங்களில் அமெரிக்காவுக்கு கொஞ்சமும் குறையாத ” திறமை ” வாய்ந்த நாடு சீனா என்பதை அவர்கள் தங்களின் பிராந்திய நாடுகளை அவ்வப்போது சீண்டுவதை ( இந்திய எல்லையில் அவர்களின் வாலாட்டலை ) கட்டுரையாளர் மறந்தது ஏனோ ?

  பொருளாதாரா ரீதியாக தங்களை பலப்படுத்திக்கொண்டபின், பிராந்திய ரீதியாகவும் சீனாவின் நடவடிக்கைகள் இருக்கும். அந்த நாளில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் அதிக வேற்றுமைகளை காண முடியாது !!

 2. ///ஈழ விவகாரத்தில் ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக சீனா நிற்பதைக் காட்டி சீனாவை எதிரியாக தமிழினவாதிகள் சித்தரிப்பதாலும்///

  தமிழினவாதிகளே இப்படிதாங்க பொய்,பொய்யா சித்தரிப்பாங்க.உங்கள மாதிரி யாரும் உண்மையை பேச முடியுமா? 1,30000 பேர கொன்னதுக்கு பழிவாங்க சீனா துடிச்சுகிட்டு இருக்கு அதுதான் உண்மை,ஏன்னா மனித உரிமைவாதிகளான கம்னிஸ்டுகள் சீனாவை ஆள்கிறார்கள் இல்லையா?

  அப்புறம் சீனாவுக்கு எதிரான ஒப்பந்தம் தமிழர்களுக்கு எதிரானது மாதிரி.ஒட்டுமொத்த தமிழர்களும் அதுக்காக போராடனும்.

 3. ஐக்கிய நாடுகளின் சபையில் சீனாவுக்கு நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளித்த இந்தியாவுக்கு நன்றிக்கடனாக இந்தியாவின் அருனாச்சலபிரதசேத்தை அபகரிக்க துடிக்கும் சீனாவை பற்றி வினவு வாய்திறக்காதது வினவின் நேர்மையை !!!!! காட்டுகிறது. இது போன்று நாடுபிடிக்கும் வெறியுடன் மிரட்டும் சீனாவிற்கு எதிராக செக் வைக்கும் இது போன்ற ராஜதந்திர கூட்டணி இந்தியாவிற்கு அவசியமானது.

 4. நிங்கள் சொல்வது உன்மை சீனா ஐ.நா வில் நிரந்திர நாடாக ஆதரவளித்த இந்தியாவிற்க்கு அவர்கள் செய்யும் நன்றி இந்த அத்துமிறல்கள் தான் ஒரு காலத்தில் ஜப்பான் என்ன செய்ததோ அதை செய்ய சீனா தற்போது துடித்து கொன்டு இருக்கிறது…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க