ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற பார்சிலோனா என்ற கால்பந்து அணி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை நீதிமன்றம் உறுதிபடுத்தியதை அடுத்து அந்த அணி 1.1 கோடி யூரோ (சுமார் ரூ 93 கோடி) பணத்தை வரி அதிகாரிகளிடம் கட்டியுள்ளது. ஆயினும் தன் மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ள பார்சிலோனா தான் முன் தயாரிப்பாக இந்தத் தொகையை கட்டியிருப்பதாக கூறுகிறது.

2013-ம் ஆண்டு பிரேசில் நாட்டின் சான்டோஸ் என்ற அணியிலிருந்து நிய்மார் என்ற வீரரை தனது அணிக்கு வாங்கியதற்கான ஒப்பந்தத் தொகையை 5.7 கோடி யூரோ (ரூ 484 கோடி) என்று அறிவித்திருந்தது பார்சிலோனா. இதில் 1.7 கோடி யூரோ சாண்டோஸ் அணிக்கும், 4 கோடி யூரோ நிய்மாரின் தந்தைக்கு சொந்தமான என்&என் நிறுவனத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணம் செலவழிக்கப்பட்ட விதத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பார்சிலோனாவின் நிர்வாகத்திற்கு எதிராக அதிருப்தியுற்ற கிளப் உறுப்பினர்களில் ஒருவரான ஜோர்டி கேசஸ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையில்தான் வரி ஏய்ப்பு நடந்திருப்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து பலியாடாக பார்சிலோனா நிர்வாகத்தின் தலைவர் ரொசெல் நீக்கப்பட்டுள்ளார். தாங்கள் முன்னர் கூறிய 5.7 கோடி யூரோ என்பது நிய்மாரை அணிமாற்றுவதற்கான தொகை மட்டும்தான் என்றும் அது போக நிய்மாரின் சேருவதற்கான ஊதியம் (signing on fee), அவரின் தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்தது, ஏஜென்ட் கமிஷன் என பல பெயர்களில் மொத்தம் 8.6 கோடி யூரோ கைமாறியுள்ளதாக தற்போது ஒத்துக் கொண்டிருக்கிறது பார்சிலோனா நிர்வாகம். ஆயினும் இதில் எந்த முறைகேடும் இல்லை என சாதிக்கிறது.

ஐரோப்பிய கால்பந்து விளையாட்டில், ஆண்டுக்கு பலகோடி டாலர் வருவாய் ஈட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களை ஒத்த இது போன்ற கால்பந்து கழகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த கிளப்புகளும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். நாடுகளுக்கு இடையிலான போட்டிகளை விட இந்த கிளப்களுக்கு இடையிலான போட்டிகளுக்கு தான் அங்கு முக்கியத்துவம் அதிகம். தரகு முதலாளிகளையும், சினிமா நட்சத்திரங்களையும் உரிமையாளர்களாகக் கொண்டு செயல்படும் நம் நாட்டின் ஐ.பி.எல் கிரிக்கெட் அணிகளுக்கு முன்னோடி இந்த ஐரோப்பிய கால்பந்து கழகங்களின் போட்டிகள்தான்.
இந்த அணிகளின் வருமானம் பிரம்மாண்டமானவை. ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் என்ற அணியின் வருவாய் அதிகபட்சமாக 52.09 கோடி யூரோவாகவும், அடுத்தபடியாக அதே நாட்டை சேர்ந்த பார்சிலோனா வரவு 48.3 கோடி யூரோவாகவும், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யூனைடட் வருமானம் 39.5 கோடி யூரோவாகவும் உள்ளன. இந்த வருமானம் பெரும்பான்மையாக ஸ்பான்சர்ஷிப்கள், (ஆர்சினல் அணி தனது ஸ்டேடியத்திற்குகூட ‘எமிரேட்ஸ்’ என ஸ்பான்சரின் பெயரை வைத்திருக்கிறது), தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, டிக்கெட் விற்பனை இவைகள் மூலம் பெறப்படுகின்றன. ஒரே நாட்டின் கிளப்களுக்கு இடையிலான ஸ்பானிஷ் லாலீகா (Spanish Laliga), இங்கிலீஷ் பிரீமியர் லீக் போன்ற லீக் போட்டிகளுக்கும், ஒட்டுமொத்த ஐரோப்பிய கிளப்களுக்கு இடையிலான UEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகளுக்கும் உலகம் முழுவதும் பல மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இதனால் இந்த கிளப்களுக்கு ஸ்பான்சர் செய்து தனது பிராண்டின் பெயரை இரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்க பெருநிறுவனங்கள் போட்டியிடுகின்றன.

இவ்வாறான விளம்பர வருவாய்க்கும், வெற்றிகளை குவித்து ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் புகழ்பெற்ற, திறமையான வீரர்களை தங்கள் வசம் வைத்து இருப்பது அவசியம் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்குகின்றன இந்த கிளப்கள். மாட்டுச் சந்தையில் பல்லை தட்டிப் பார்த்து, துண்டை மறைத்து பேரம் பேசும் அதே முறை தான், ஆனால் இங்கு பேரம் போவதும், வாங்குவதும் மேட்டுக்குடிகள் என்பதால் வார்த்தைகளை நாகரிகமாக ‘டிரான்ஸ்பர் விண்டோ’ என்று மாற்றி நாகரிகமாக அழைத்துக் கொள்கிறார்கள். இப்படி துண்டை மறைத்து பேரம் பேசிய தொகையை அரசுக்கு குறைத்து கூறி வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக தான் தற்போது மாட்டிக்கொண்டிருக்கிறது பார்சிலோனா என்ற அணி.
இந்த பிரச்சனையில் வரிஏய்ப்பு முறைகேடு என்பதையும் தாண்டி ஒரு கேள்வி நமக்கு எழுகிறது. ஒரு விளையாட்டு வீரருக்கு இவ்வளவு செலவழிக்கப்படுகிறதே அப்படியானால் அந்த நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி ஓடவில்லை. மக்கள் தான் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள்.
நிதிமூலதன சூதாடிகளால் சூறையாடப்பட்டு, உலக முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி திவால் நிலையில் உள்ளது ஸ்பெயின். இந்த நெருக்கடியின் விளைவாக பெருவாரியான மக்களின் வேலை பறிக்கப்பட்டு ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில். இன்றைய தேதியில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 26 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. 2013 ஆண்டில் மட்டும் 2.6 லட்சம் மக்கள் ஸ்பெயினில் இருந்து வெளியேறி இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் நிதி நெருக்கடியிலிருந்து மீட்பது என்ற பெயரில் வங்கிகளுக்கும் தனியார் தொழிற்கழகங்களுக்கும் பல கோடி டாலர்களை கொட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஸ்பெயின் அரசு. நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு வங்கிகளுக்கு கடன் கொடுக்க வேண்டுமானால் மக்களுக்கான நலத்திட்டங்களை நிறுத்த வேண்டும், பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்க வேண்டும் எனற ஐரோப்பிய வங்கியின் ஆணைக்கிணங்க செயல்படும் ஸ்பெயின் அரசை கண்டித்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தொழிலாளர்கள், மருத்துவர்கள், இளைஞர்கள் என அனைத்துப் பிரிவினரும் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றனர். ஸ்பெயின் அரசின் போராட்ட தடை சட்டத்தையும் மீறி, மாட்ரிட் நகரின் மத்திய சதுக்கத்தில் மட்டும் 2012-ல் 396 போராட்டங்களும், 2013-ல் 391 போராட்டங்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய சதுக்கத்தில் போராட தடை விதிக்க வேண்டும் என்று மாட்ரிட் மேயர் புலம்பும் அளவுக்கு மக்கள் வீரியமாக போராடுகிறார்கள்.
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மக்களின் கல்வி, பொது சுகாதாரம், ஓய்வூதியம் முதலியவற்றுக்கான நிதி வெட்டி சுருக்கப்படுகின்றன. பொதுச் சேவைகளை தொடர்ந்து குறைப்பதன் மூலம் 2014-க்குள் 10,200 கோடி யூரோ மிச்சம் பிடிப்பதற்கு திட்டமிட்டுள்ளது அரசு. இதே அரசு தான் ரியல்மாட்ரிட், பார்சிலோனா, அத்தலடிக் பில்போ, ஒசாசுனா ஆகிய அணிகளுக்கு 1990 ஆண்டின் “அனைத்து ஸ்பெயின் கால்பந்து கிளப்களையும் பப்ளிக் லிமிட்டெட் கம்பெனியாக்கும்” சட்டத்திலிருந்து விலக்கு அளித்து கார்ப்பரேட் வரி மற்றும் சொத்து வரியிலிருந்து விலக்களிக்கிறது. லாபநோக்கில்லாத நிறுவனம் என்ற தகுதியையும் தக்க வைத்துக் கொள்ள அனுமதித்துள்ளது. வெலன்சியா அணியின் கடனுக்கு அந்த மாகாண அரசு உத்திரவாதம் அளித்து பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
இப்படி வரலாறு காணாத வேலையின்மையும், பசியும், போராட்டமும் நடக்கும் இந்த நாட்டில் தான் மேற்கூறிய பணக்கார கால்பந்து கழகங்களும், அதன் பல மில்லியன் மதிப்புள்ள வீரர்களும் உள்ளனர். போராடும் மக்களை திசை திருப்பவும், வெறுமனே அணி வெறியை தூண்டி விட்டு அவர்களின் உழைப்பை பணமாக அபகரிப்பதையும் தாண்டி இந்த கிளப் போட்டிகள் எதையும் சாதிக்கவில்லை. கால்பந்துக்கு பதில் கிரிக்கெட், பிரீமியர் லீக், லா லீகா வுக்கு பதில் ஐ.பி.எல் என்று மாற்றி போட்டால் இது இந்தியாவுக்கும் அப்படியே பொருந்தும்.

இந்த வக்கிரத்தின் உச்சகட்டமாக, 54.1கோடி யூரோ கடன் வைத்திருக்கும் ரியல்மாட்ரிட் அணி, 10 கோடி யூரோ விலை கொடுத்து கரேத் பேல் என்னும் டாட்டன்ஹாம் (இங்கிலாந்து) வீரரை ஆறு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த தொகையை பேங்கியா என்ற ஸ்பெயின் தேசிய வங்கியின் துணைநிறுவனமான கஜா மாட்ரிட் வங்கி கடனாக கொடுத்துள்ளது என்றும், பேங்கியா வங்கி ஐரோப்பியன் யூனியனால் 1,800 கோடி யூரோ கொடுத்து பெயில் அவுட் செய்யப்பட்டது என்பதால் ஐரோப்பிய யூனியன் இதை விசாரிக்க்க வேண்டும் என்று ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் எப்னிக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே ஸ்பெயின் வங்கிகள் தான், வேலைபறிக்கப்பட்ட எளிய மக்களின் கடனுக்காக அவர்களின் உடமைகளை மட்டுமல்ல உயிர்களையும் கூட பறித்து வருகின்றன. வெலன்சியா நகரில் மாதத்திற்கு 360 யூரோ சம்பளத்தில் வாழ்ந்து வந்த 47 வயதான் இனோசென்சியா லூகா என்ற பெண்ணை, அவர் வாங்கிய கடனுக்காக வீட்டை பிடுங்கி அவரை நடுத்தெருவில் நிறுத்தியதையடுத்து அந்த வங்கி கிளைக்கே சென்று தன்னை எரித்து தற்கொலை செய்துகொண்டார். சாகும் முன் அவர் கூறிய வார்த்தை “நீங்கள் என்னிடமிருந்து அனைத்தையும் பறித்துக்கொண்டீர்கள்” என்பது. லூகா போன்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்டதும், இந்த கார்பரேட்களுக்கு கொடுக்கப்படுவதும் வேறு வேறு அல்ல. ஒரே நிகழ்ச்சி போக்கின் இரு வடிவங்கள்.
வெளிச்சத்திற்காக அடிமைகளை கம்பங்களில் கட்டி எரித்து நீரோ மன்னன் அளித்த விருந்தில் விருந்தினர்கள் திளைத்திருந்தது போல, உழைக்கும் மக்களின் வாழ்க்கையை தீப்பந்தமாக்கி நவீன நீரோக்கள் அளிக்கும் கால்பந்தாட்ட விருந்தில் ஐரோப்பிய நடுத்தரவர்க்கத்தினர் மட்டுமல்ல இந்திய நடுத்தர வர்க்கத்தினரும் திளைத்திருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளின் நேரத்திற்கிணங்க இரவு விழித்திருந்து இந்த போட்டிகளை இரசித்துவிட்டு மறுநாள் மெஸ்ஸியா? ரொனால்டோவா? யார் சிறந்தவர் என்று பேஸ்புக்கில் ‘சண்டை’யிட்டுக்கொள்ளும் கால்பந்து இரசிகர்களே சொல்லுங்கள் நவீன நீரோ மன்னர்களின் விருந்தில் இனிமேலும் பங்கேற்கப் போகிறீர்களா?
– ரவி.
மேலும் படிக்க
- Neymar: Barcelona pay £11.2m in tax fraud case but deny offence
- The Real Madrid Bale Out
- Spain’s unemployment rise tempers green shoots of recovery
- Unemployment in Europe: get the figures for every country
- Madrid’s mayor seeks curb on protesters in central square
- In Spain they are all indignados nowadays
- Spanish giants Barcelona and Real Madrid face state aid charge
உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்துவதற்கு அதிக அளவு நிதி செலவழிப்பதை எதிர்த்து பிரசிலில் சமீபத்தில் நடைபெற்ற போராட்டம் Street clashes in Brazil as 1000 march against World Cup spending
http://rt.com/in-vision/brazil-protest-fifa/