privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்

திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்

-

ஆணாதிக்கம் இருட்டடிப்பு செய்த வாழ்க்கையை மீட்டெடுக்கவும், ஆண்களையும் சேர்ந்து வதைக்கும் மறுகாலனியாக்கத்தை வீழ்த்தவும் உலக மகளிர் தினம் அழைக்கிறது.

திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக 08.03.2014 அன்று மாலை காந்திமார்கெட் தாராநல்லூர் கீரைக்கடை பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது.

பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர்

10,000 பிரசுரம், 400 சுவரொட்டி தயாரித்து கடைவீதி, பேருந்து நிலையம், குடியிருப்பு, இன்ஸ்பெக்டர், ஏசி, டிசி, ஆணையர், பத்திரிக்கைகள் என அனைவருக்கும் செய்தி கொண்டு செல்லும் வரை உறக்கத்தில் இருந்த காந்தி மார்க்கெட் காவல்துறை இறுதி நேரத்தில் பேரணிக்கு அனுமதி மறுப்பதாகவும் பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக்கொள்ளவும் நிபந்தனைக்கு உட்பட்டு (நிபந்தனை என்பது உண்மையை தவிர மற்றவை பேசலாம் என்பதே ஆகும்) நடத்த அனுமதிப்பதாக கடிதம் கொடுத்தது. பேரணிக்கு அனுமதி மறுப்பின் காரணம் : போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, தேர்தல் விதிமுறை அமுலுக்கு வந்துள்ளது என வரிசையாக அடுக்கியது. தோழர்கள் மீண்டும் ஒரு சுற்று போராடிவிட்டு பொதுக்கூட்டம் நடத்தும் முயற்சியில் இறங்கினர்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பேரணி – பொதுக்கூட்டம் சுவரொட்டி நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது. தடையை மீறி பேரணி நடக்கும் என பீதியடைந்த காவல்துறை பெண் தோழர்களிடம் நல்லவர்கள் போல பேசி சமாதானம் செய்தது.

“உங்களைபற்றி தெரியும், நீங்க நல்லது தான் செய்றிங்க. நம்ம ஆய்வாளர் தங்கமான மனுசன். உங்களுக்கு உதவ முடியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டார். கோச்சுக்காதீங்கம்மா, இந்த ஒரு தடவை மட்டும் விட்டுக் கொடுங்க. அடுத்த முறை நிச்சயம் ஆய்வாளர் உதவி செய்வார்” என இவர்கள் பம்மியது கொஞ்சம் ஓவராகவே இருந்தது.

“என்ன சார் மேடை போட தடை , மைக்செட் போட தடை என ரொம்ப உங்க ஆளுங்க தொல்லை பண்றாங்க. இதே ஆளும் கட்சினா இப்படி பண்ணுவீங்களா?” என நமது தோழர்கள் கொஞ்சம் எகிறினர்.

“அய்யோ விவரம் தெரியாம கான்ஸ்டபில்கள் பேசி இருப்பானுக. நீங்க பாட்டு போடுங்க, யாராவது கேட்டா என்னிடம் பேச சொல்லுங்க” என்றார்.

நாம் தடையை மீறி பேரணி நடத்த மாட்டோம் என தெளிவாக புரியவைத்ததும் தான் தமது பழைய போலீஸ் மிடுக்குக்கு மாறினர்.

பொதுக்கூட்ட நிகழ்வுகள்

மாலை 6.45 மணியளவில் தொடங்கிய பொதுக்கூட்டம் இரவு 9.55 மணிக்கு முடிந்தது. இப்பொதுக்கூட்டத்தை பெ.வி.மு பொருளாளர் தோழர்.பவானி தலைமை ஏற்று நடத்தினார்.

துவாக்குடி கிளை தோழர். லெட்சுமி கந்துவட்டி கொள்ளையர்கள் பற்றியும், குடிபோதைக்கு சீரழிந்த ஆண்களால் பெண்கள், குழந்தைகள் படும் துயரத்தையும், அதிலிருந்து மீண்டெழ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி பேசினார்.

தமிழக தாலிபான்களை எதிர்த்து போராடிய தோழர். அனிஸ் பாத்திமா தமது அனுபவங்களை பேசி மக்களிடம் நம்பிக்கை ஊட்டினார்.

மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.ராஜூ சிறப்புரையாற்றினார். தோழர். மலர்கொடி நன்றியுரை நிகழ்த்தினார். ம.க.இ.க மைய கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி இறுதியாக நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பெருவாரியான தோழர்கள், பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

கூட்ட செலவினங்களுக்காக பொதுக்கூட்டத்தில் வசூல் செய்யப்பட்டது. ஜெயாவின் பாசிச ஒடுக்குமுறையும், டாஸ்மாக் கொள்ளை பற்றியும் பேசியதை கேட்ட அ.தி.மு.க பிரமுகர் நன்கொடை அளித்தது கூட்டத்தின் முத்தாய்ப்பாக இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி:
பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.
தொடர்புக்கு அழைக்க : 9750374810.