privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமக்கள் போராட்டங்களில் தமிழகம் முதலிடம் !

மக்கள் போராட்டங்களில் தமிழகம் முதலிடம் !

-

டந்த 2012-ம் ஆண்டில் இந்தியாவில் அதிகமான போராட்டங்கள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதிலும் 2012-ம் ஆண்டில் மட்டும் 78,444 போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடந்ததாகவும், இது முந்தைய 2011ம் ஆண்டில் நடந்ததை விட 7% அதிகமென்றும் காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயலகம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம்
கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் (படம் : நன்றி The Hindu).

தமிழகத்தில் ஒரு நாளுக்கு சராசரியாக 50-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடக்கின்றது. இப்படி சென்ற ஆண்டு முழுவதும் 21,232 போராட்டங்களுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அத்தரவுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டு 2011-ல் நடந்த 15,746 போராட்டங்களை விட 35% அதிகமாகும். தமிழகத்தை அடுத்து சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் கடந்த காலங்களை விட கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தை அடுத்து மத்தியப்பிரதேசம் 9,397 போராட்டங்களுடன் இரண்டாமிடத்திலும், உத்தர்காண்ட் 6,038 போராட்டங்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன. இந்த மாநிலங்களின் போராட்ட எண்ணிக்கை தமிழகத்தை விட பாதிக்கும் குறைவான எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மத்தியப் பிரதேசம், உத்தர்காண்ட் இரண்டும் பாஜக மற்றும் காங்கிரசு கட்சிகள் செல்வாக்கோடு இருக்கும் மாநிலங்களாகும். பொதுவில் இந்தி பேசும் மாநிலங்களில் நிலவுடைமை ஆதிக்கம் அதிகம் இருப்பதால் மக்களுக்கான ஜனநாயக உரிமை, ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.

இதை மீறியும் இங்கே போராட்டம் நடக்கிறது என்பது நல்ல விசயம். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் இப்படி நடக்கும் போராட்டங்கள் இறுதியில் பார்ப்பனிய இந்து மதவெறியை புரிந்து கொள்வதற்கும் வழி வகுக்கும். அதே நேரம் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் நாட்டிலேயே அதிக பட்சமாக 65 முறை துப்பாக்கி சூடு போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது. இதுவே இங்கு அடக்குமுறை அதிகம் என்பதையும், மக்கள் மீதான போலீசு அடக்குமுறையின் கொடூரத்தையும், பாஜகவின் பாசிச ஆட்சியையும் புரியவைக்கிறது.

நாடு முழுவதும் மொத்தம் 98 முறை துப்பாக்கி சூடும், 298 இடங்களில் கண்ணீர் புகை, தடியடி நடத்தப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டு, 354 பேர் காயமுற்றுள்ளனர். மறுகாலனியத்தை எதிர்த்து நாட்டில் பல்வேறு மக்கள் பிரிவினரின் போராட்டம் அதிகரித்து வரும் நிலையில், அரசு மேன்மேலும் இத்தகைய அடக்குமுறையை கட்டவிழ்த்து விடும் என்பதற்கு இந்த தரவுகள் ஒரு சான்று.

முன்னர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடிய மக்களை சுட மறுத்ததற்காக கார்வாலி படைவீரர்களை துரோகிகளாக காந்தி வருணித்தார். இன்றைய காந்தியவாதி அண்ணா ஹசாரேவின் ஆதரவு பெற்ற தீதியின் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில் மட்டும் காவல்துறை 16 முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் அரசியல் விழிப்புணர்வும், போராட்டங்களும் அதிகம் என்றாலும் அங்கே சிபிஎம் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் இருவரும் உள்ளூர் வன்முறை கும்பல்கள் மூலமே ஆட்சி நடத்துகின்றனர். அந்த வகையில் ஆளும் கட்சி கட்டவிழ்த்து விடும் அடக்குமுறைகள் அன்றாடம் நடக்கிறது.

தமிழகத்தில் 10,086 அரசியல் போராட்டங்களும், 2,720 அரசு ஊழியர் போராட்டங்களும், 1392 தொழிலாளர் போராட்டங்களும், 1,281 சாதி, மத பிரச்சனைகளுக்காகவும், 574 மாணவர் போராட்டங்களும், 5,179 இதர போராட்டங்களும் நடந்துள்ளன. இவ்வகையில் புரட்சித் தலைவியின் ஆட்சி தமிழகத்தின் போராட்ட கால ஆட்சியாக இருக்கிறது. அதிமுக எனும் கட்சியின் ஆட்சியில் இத்தகைய போராட்டங்கள் அதிகம் நடப்பதிலிருந்தே இங்கு நடப்பது பொற்காலமா இல்லை இருண்ட காலமா என்று புரிந்து கொள்ளலாம். திமுக ஆட்சி இருந்திருந்தாலும் இந்த போராட்டங்கள் குறைந்திருக்காது. இதில் சாதி மத பிரச்சினைகளுக்கான போராட்டம் என்பதில் பிற்போக்கு மற்றும் முற்போக்கு இரண்டும் இருக்கும்.

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு, பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், கிரானைட் கொள்ளை, மணல் கொள்ளை, கடுமையான மின்வெட்டு, கூடங்குளம், முல்லைப் பெரியாறு என உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்ட பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு எதிராகவும், ஈழப்பிரச்சினை தொடர்பாகவும், தில்லைக் கோவில் உட்பட பார்ப்பன இந்துமதவெறிக்கு எதிராகவும் பல நூறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் இத்தகைய போராட்டங்கள் அதிகம் நடப்பது பொதுவில் போலீசு அதிகாரத்தை தட்டிக் கேட்கும் போராட்ட குணத்தை வளர்க்கும் என்பதோடு, அரசு குறித்த மாயைகளையும் தகர்ப்பது உறுதி.

நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 37.13 % ஆக அரசியல் போராட்டங்கள் முன்னிலை வகிக்கின்றன. 15.63% அரசு ஊழியர்கள் போராட்டங்களும், 9.41% மாணவர் போராட்டங்களும் நடந்துள்ளன. மாணவர் பிரிவில் 939 போராட்டங்களுடன் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும், 862 போராட்டங்களுடன் உத்திரகாண்ட் இரண்டாமிடத்திலும் உள்ளன. தொழிலாளர் போராட்டங்களில் தமிழகம் முதலிடத்திலும், 879 போராட்டங்களுடன் பஞ்சாப் இரண்டாமிடத்திலும் உள்ளன. இந்தியாவில் புரட்சி செய்வதற்கு தலைமை தாங்க இருக்கின்ற தொழிலாளி வர்க்கம் இங்கே முன்னணியில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது. இத்தகைய போராட்டங்கள் பொருளாதார பிரச்சினைகளுக்காகவே அதிகம் நடந்தாலும் எதிர்காலத்தில் அரசியல் போராட்டங்களாக பரிணமித்தே தீரும்.

‘வளர்ச்சி’யின் நாயகன் மோடியின் குஜராத்தில் 2011-ல் நடத்தப்பட்ட 3,411 போராட்டங்கள் 2012-ல் 2,477 ஆக குறைந்துள்ளது. மேலும், குஜராத்தில் 2011-ல் 164 தொழிலாளர் போராட்டங்கள் நடந்துள்ளன. அவை 2012-ல் 90 ஆக குறைந்துள்ளது. போராட்டம் இல்லை எனில் அங்கே அமைதி நிலவுவதாக பொருள் இல்லை. 2002 கலவரத்திற்கு பிறகு அங்கே போலீசின் சர்வாதிகார ஆட்சி நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. மோடியின் அரசுதான் போலி என்கவுண்டர் கொலைகளில் முதலிடம் வகிக்கிறது. ஆகையால் அங்கே தொழிலாளிகளோ, சிறுபான்மை மக்களோடு தைரியத்துடன் போராடும் நிலை இல்லை.

இத்தகைய கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எதிர்ப்பில்லாத இந்த குஜராத் மாடலை இந்தியாவெங்கும் கொண்டுவருவதற்காக தான் கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களின் ஊடகங்களும் மோடியை வெறி கொண்டு ஆதரிக்கின்றனர்.

மொத்தத்தில் 2005-ம் ஆண்டு 33,214 என்ற அளவில் இருந்த போராட்டங்கள் 2012-ல் இரு மடங்கிற்கும் மேல் 78,444 ஆக அதிகரித்துள்ளது.

இப்போராட்டங்களால் 6 காவலர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 863 காவலர்கள் காயமுற்றுள்ளதாகவும் போலீசின் தகவல் தெரிவிக்கிறது. போராட்டங்கள் அதிகரிக்க அதிகரிக்க இறுதியில் போலீசும் வர்க்க ரீதியில் பிளவு படும். அத்தகைய சூழ்நிலை வரும் வரை போலீசின் அடக்குமுறை அதிகமாகவே இருக்கும். முற்றிலும் ஜனநாயகம் மறுக்கப்பட்ட காலத்தில் வேறு வழியின்றி மக்கள் தாக்குவதாலேயே போலிசின் உயிர் இழப்பு ஏற்படுகிறது.

மறுகாலனியாக்க கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்துவதற்கு ஆரம்பித்த நாள் முதல், அதிகரித்து வரும் போராட்டங்கள், இந்த போலி ஜனநாயக அமைப்பு முறையின் தோல்வியையும், அதன் மீதான நம்பிக்கையை அனைத்து மக்கள் பிரிவினரும் இழந்து வருவதையும் வெளிப்படுத்துகின்றன.

இதே காலகட்டத்தில் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகத்தில் நூற்றுக்கணக்கிலான போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. இது குறித்து விரிவாக பின்னர் எழுதுகிறோம்.

தமிழகம் என்றாலே சினிமா மாயையில் அதிகம் சிக்கியிருக்கும் மாநிலம் என்ற அவப்பெயரை இந்த செய்தி துடைத்திருக்கிறது. அப்படி போராடும் மாநிலமாக மாற்றிய தமிழக மக்களுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவிப்போம் – தொடர்ந்து போராடுவதற்கு!

மேலும் படிக்க