Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் அசீமானந்தாவை காப்பாற்றத் துடிக்கும் பாஜக - காங்கிரஸ்

அசீமானந்தாவை காப்பாற்றத் துடிக்கும் பாஜக – காங்கிரஸ்

-

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் – 5

முந்தைய பகுதிகள்

  1. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் – அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்
  2. அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு
  3. மோடியின் குஜராத்தில் அசீமானந்தாவின் கிறித்தவ வேட்டை
  4. ஆர்.எஸ்.எஸ்-ன் பாம் கா பத்லா பாம் – குண்டுக்கு பதில் குண்டு

அம்பாலா மத்திய சிறையில் வாழ்ந்து வந்த அசீமானந்தாவிடம் ஜனவரி 10, 2012, ஜூன் 22, 2013, ஜனவரி 9, 2014, ஜனவரி 17, 2014 என அடுத்த 2 ஆண்டுகளில் நான்கு முறை பேட்டி எடுத்திருக்கிறார். இந்த உரையாடல்களின் பதிவு செய்யப்பட்ட கால அளவு 9 மணி, 26 நிமிடங்கள்.

அசீமானந்தா நேரில் கூறிய விபரங்களுடன் அசீமானந்தாவின் சொந்த ஊரான கமர்புக்கூர், அசீமானந்தா தனது குற்றச் செயல்களை நடத்தி வந்த குஜராத்தின் டாங் மாவட்டம், பிரக்யாசிங் சிகிச்சை பெற்று வரும் போபால், தேசிய புலனாய்வு ஆணையத்தின் டெல்லி அலுவலகம், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் அலுவலகம் என்று இந்த வழக்குடன் தொடர்புள்ள நபர்களை சந்தித்து தகவல்கள் திரட்டியிருக்கிறார், கட்டுரையாளர். மேலும் சம்ஜவுதா குண்டு வெடிப்பு வழக்கு, அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கு, மாலேகான் குண்டு வெடிப்பு வழக்குகள், மற்றும் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கு இவை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகைகள், பத்திரிகை செய்திகள் இவற்றையும் இணைத்து, ஒரு விரிவான குற்றப் புலனாய்வு செய்திருக்கிறார் கட்டுரையாளர் லீனா கீதா ரெகுநாத்.

ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளான பா.ஜ.க, வனவாசி கல்யாண் ஆசிரமம் போன்வற்றின் வன்முறை வெறிச்செயல்களை ஆதாரத்துடன் நிரூபிக்கும் இந்தக் கட்டுரை இந்திய ஊடகவியல் வரலாற்றில் முக்கியமான ஒரு சாதனை.

கேரவன் மேகசின்
கேரவன் மேகசின்

கட்டுரையின் இறுதிப் பகுதியின் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்

புது டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு ஆணையத்தின் கண்ணைப் பறிக்கும் தலைமை அலுவலகத்தில் ஒரு அடக்கமான தடுப்பறைதான் போலீஸ் கண்காணிப்பாளர் விஷால் கர்கின் அலுவலகம். அலுவலகத்தின் கண்ணாடி சுவரை ஒட்டியிருக்கும் கோப்பு அலமாரியில் “அஜ்மீர் குண்டுவெடிப்பு”, “சம்ஜவுதா குண்டு வெடிப்பு”, “சுனில் ஜோஷி கொலை” “எழுதுபொருட்கள்” என்று பெயரிடப்பட்ட நான்கு இழுப்பறைகள் தெரிகின்றன. கர்கின் மேசைக்கு பின்னால் உள்ள வெள்ளைப் பலகையில் அவர் புலன்விசாரணை அதிகாரியாக உள்ள சம்ஜவுதா மற்றும் அஜ்மீர் வழக்குகளின் அடுத்த நீதிமன்ற விசாரணை தேதிகள் குறிக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு சுவரில், சம்ஜவுதா வழக்கில் இன்னும் தலைமறைவாக இருக்கும் சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா, மற்றும் அசோக் என்பவரின் படங்கள் அச்சிடப்பட்ட “தேடப்படுபவர்கள்” போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. டாங்கே, மற்றும் கல்சங்கராவின் கைதுக்கு வழி வகுக்கும் துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ 10 லட்சம் வெகுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய புலனாய்வு ஆணையம்
தேசிய புலனாய்வு ஆணையம்

விமான ஓட்டி குளிர் கண்ணாடி அணிந்த கர்க் ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு பயங்கரவாத தடுப்பு ஐ.பி.எஸ் அதிகாரியாகவே காட்சியளிக்கிறார். நான் அவரை சென்ற ஆண்டு சந்தித்த போது, “இங்கு நாங்கள் ஆருஷி வழக்கைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம். அந்த வழக்கில் குற்றம் நடந்து 3 நாட்களுக்குப் பிறகு விசாரணை சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகுதான் அவர்கள் குற்றம் நடந்த இடத்துக்கு போனார்கள். அதற்குள் முக்கியமான தடயங்கள் எல்லாம் தொலைந்து போனதால் புலன் விசாரணையில் பல சிக்கல்கள் ஏற்பட்டன என்பது பரவலாக பேசப்பட்டது. ஆனால், சம்ஜவுதா வழக்கை விசாரிக்கும் பொறுப்பு எங்களிடம் வந்த போது மூன்று ஆண்டுகள் ஓடியிருந்தன. இந்த வழக்கு விசாரணை எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.”

“இந்த குண்டு வெடிப்புகளுக்காக கொடுக்கப்பட்ட பணத் தடத்தை இன்னமும் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. நடைபெற்ற பண பரிமாற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்ட வங்கி பரிமாற்றங்கள் இல்லையே! இந்த விசாரணையின் வரம்பாக இதை எடுத்துக் கொண்டு மற்ற ஆதாரங்களை திரட்டுகிறோம். அசீமானந்தா சுனில் ஜோஷிக்கு பணம் கொடுத்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தார் என்று எந்த தகவலும் இல்லை.” குண்டுவெடிப்புகளில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் எங்கிருந்து வந்தன என்பதும் இன்னமும் விசாரணையில்தான் உள்ளது. “தேடப்படுபவர்கள்” போஸ்டரை சுட்டிக் காட்டிய கர்க், “ரூ 10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட இவர்கள்தான் இந்த குற்றத்தின் முக்கிய மூளைகளும், முக்கிய செயல்வீரர்களும். இவர்களை பிடித்தால்தான் இன்னும் தெளிவான பிம்பத்தை பெற முடியும்.” என்றார்.

இந்திய நீதிமன்றங்கள்
வழக்கை விசாரிப்பதில் தேசிய புலனாய்வு ஆணையம் பல முட்டுக்கட்டைகளை சந்தித்து வருகிறது.

இந்த வழக்கை விசாரிப்பதில் தேசிய புலனாய்வு ஆணையம் பல முட்டுக்கட்டைகளை சந்தித்து வருகிறது. ‘தேசிய புலனாய்வு ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்னதாகவே வழக்கின் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது’ என்ற சட்ட நுணுக்கத்தை காரணமாகக் காட்டி சுனில் ஜோஷி கொலை வழக்கு தொடர்பாக பிரக்யா சிங்கை அவர்கள் விசாரிப்பதை, 2012 ஜூலை மாதம் நீதிமன்றங்கள் தடை செய்தன.

லெப் கர்னல் சிறீகாந்த் புரோகித்தையும் இன்னொரு குற்றம் சாட்டப்பட்டவரையும் விசாரிப்பதையும் நீதிமன்றம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. தேசிய புலனாய்வு ஆணையத்தின் வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான அகமது கான், இந்த வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே நீதிமன்றத்தில் நடத்துமாறு பரிந்துரைத்திருக்கிறார். ஆனால் இந்த திசையில் மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இன்னும் பிற சதிகாரர்களின் பெயர்களை சேர்த்து கூடுதல் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று தேசிய புலனாய்வு ஆணையம் கூறுகிறது. தான் கடினமாக உழைப்பதாக கர்க் சொல்கிறார். “சென்ற வாரம் லிஃப்டில் என்னை பார்த்த என் அலுவலக சகாக்களில் ஒருவர், ‘சாப் நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்க’ என்றார். ‘தூக்கத்தை துறந்து விட்டால் நீங்களும் ஸ்மார்ட்டாகி விடலாம்’ என்று நான் பதில் சொன்னேன். “நீ தூங்கும் போது, உன்னால் தேடிப்பிடிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் எவ்வளவு ஜாலியாக இருக்கிறார்கள் என்பது கனவில் வர வேண்டும்” என்று தன்னுடைய மேலதிகாரி கூறியதாக கர்க் நினைவு கூர்கிறார்.

தேசிய புலனாய்வு ஆணையம் இந்திரேஷ் குமாரை ஏன் இதுவரை விசாரிக்கவில்லை என்று கேட்ட போது, அது துறையின் உள்விவகாரம் என்றும் அதைக் குறித்து தான் பேச விரும்பவில்லை என்றும் அவர் கூறி விட்டார்.

உமா பாரதி
“தமக்கு தேவைப்படும்போது பிரக்யா சிங்கை பயன்படுத்திக் கொண்டு இப்போது கை கழுவி விடுகிறார்கள்” – மூத்த பா.ஜ.க தலைவர் உமா பாரதி.

2008-ல் பிரக்யா சிங் கைது செய்யப்பட்ட பிறகு ப.சிதம்பரம், திக்விஜய சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் “காவி பயங்கரவாதம்” என்று அழைத்ததை வன்மையாக கண்டனம் செய்தார்கள் இந்துத்துவா அமைப்பினர். தமது அமைப்புகள் மீது குற்றக் கறை படிந்து விடாமல்  பாதுகாக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்சும், பா.ஜ.கவும் பதறினர். ஆரம்பத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டனம் செய்த அந்த அமைப்பினர், பின்னர் ஒரு கட்டத்தில் குற்றம் சாட்டப்படவர்களுக்கு ஆதரவாக வாதாடி தம்மை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

பிரக்யா சிங் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து “பா.ஜ.க மற்றும் அவர் சார்ந்திருந்த பிற சங்க அமைப்புகள் அவரை கை விட்டது கேவலமான செயல். அதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். தமக்கு தேவைப்படும்போது அவரை பயன்படுத்திக் கொண்டு இப்போது கை கழுவி விடுகிறார்கள்” என்று மூத்த பா.ஜ.க தலைவர் உமா பாரதி குற்றம் சாட்டினார். “பிரக்யா சிங்கின் செயல்களை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. அவர் 1995-96லேயே ஏ.பி.வி.பியை விட்டு விலகி விட்டார்.” என்றார் பா.ஜ.க பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத். ஆனால், சமீபத்தில் பா.ஜக. தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருடன் பிரக்யா சிங் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி கட்சியை சங்கடத்துக்குள்ளாக்கின. குஜராத் கலவரங்களுக்குப் பிறகான தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடியுடன் பிரக்யா சிங் மேடையில் தோன்றிய இன்னொரு புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.

பிரக்யா சிங் சித்திரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியானதும் பா.ஜ.க தன் தாளத்தை மாற்றிக் கொண்டது. அவர், “காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதை” எல்.கே. அத்வானி கண்டனம் செய்தார். விசாரணை அமைப்பு “அரசியல் நோக்கங்களுடன் நேர்மையற்று நடப்பது தெளிவாகிறது” என்று அவர் குற்றம் சாட்டினார். (“சென்ற தேர்தலுக்கு முன்பு பிரக்யா சிங்குக்கு ஆதரவாக அவர் நடத்திய மொக்கையான, உணர்ச்சிபூர்வமான, ஆதாரமற்ற வாதங்களைப் போல வேறு எதுவும் அத்வானியை சிறுமைப்படுத்தவில்லை” என்கிறார் அரசியல் ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா.)

ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம்
பெங்களூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம்

ஆனால், ஆர்.எஸ்.எஸ் அசீமானந்தா கைதாவதற்கு ஒன்றரை வாரங்களுக்கு முன்பு அதன் வரலாற்றில் அதுவரை இல்லாத மிகவும் தீவிரமான, பெரிய கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் இந்திரேஷ் குமார் விசாரிக்கப்படலாம் என்ற செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியிருந்தன. சங்கத்தின் தலைவர்கள் இந்திரேஷ் குமாருக்கு ஆதரவாக நாடுதழுவிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நவம்பர் 2010-ல் நடத்தினர். ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை ஆர்கனைசரில் வெளியான தகவலின்படி நாடு முழுவதிலும் நடந்த 700 ஆர்ப்பாடங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான பேர் பங்கேற்றனர். ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பியின் தலைமை பொறுப்பில் இருந்த கிட்டத்தட்ட அனைவரும் இந்த ஆர்ப்பாட்ட மேடைகளில் தோன்றினார்கள். லக்னோவில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தேசியத் தலைவர் மோகன் பாகவத், தானே இந்திரேஷ் குமாருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதன் முக்கியத்துவத்தை விளக்கி பேசினார். “அமைப்பின் வரலாற்றிலேயே முதன் முறையாக சர்சங்சாலக் ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவதோடு மட்டுமில்லாமல், கூட்டத்தில் பேசவும் செய்கிறேன். ஏனென்றால் இப்போது ஆர்.எஸ்.எஸ்சுக்கு பயங்கரவாத முத்திரை குத்தும் சதி நடந்து வருகிறது” என்று அவர் பேசினார். மோகன்தாஸ் காந்தியின் படம் போடப்பட்ட ஒரு போஸ்டரால் மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. “ஹிந்து சமாஜ், காவி நிறம், ராஷ்ட்ரிய சுவயம்சேவக் சங்கம் இந்த பதங்கள் அனைத்தும் பயங்கரம் என்பதற்கு நேர் எதிர் அர்த்தம் கொண்டவை” என்று அவர் தொடர்ந்தார்.

இந்திரேஷ் குமார்
“பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?”

சி.பி.ஐ மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அமைப்புகளின் புலன் விசாரணைகளில் திரட்டப்பட்ட மதிப்பு வாய்ந்த தடயங்களும், சாட்சி வாக்குமூலங்களும் இந்திரேஷ் குமார் குண்டு வெடிப்புகளில் பங்கேற்றதை தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. சதித்திட்டத்தின் முக்கிய நபர்கள் பலருக்கும் (குறிப்பாக சுனில் ஜோஷிக்கு) அவர் வழிகாட்டி என்று  தேசிய புலனாய்வு ஆணையம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையே குறிப்பிடுகிறது. சி.பி.ஐ அவரை விசாரித்திருக்கிறது. 2011 ஜூலை இறுதியில் தேசிய புலனாய்வு ஆணையமும் இந்திரேஷ் குமாரை விசாரிக்க இருப்பதாக பரவலாக செய்திகள் வெளியாகின. ஆனால், “பயங்கரவாத செயல்கள் தொடர்பாக எனக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருந்தும் தேசிய புலனாய்வு ஆணையம் என்னை ஏன் கைது செய்யவில்லை?” என்று அவர் அந்த அமைப்பை ஊடகங்களில் பரிகாசிக்க ஆரம்பித்திருந்தார். தானும், அசீமானந்தாவும், பிரக்யா சிங்கும் இந்த வழக்குகளில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக அவர் கூறினார். தேசிய புலனாய்வு ஆணையம் அவரை இது வரை விசாரிக்கவில்லை.

தற்போது நடந்து வரும் விசாரணைகள் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் பழி வாங்கும் நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ்சும், பா.ஜ.கவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குற்றம் சாட்டுகின்றன. அது உண்மையானால், இந்த வழக்குகள் அரை மனதோடு நடத்தப்படுவதை பார்க்கும் போது, அரசாங்கம் உண்மையிலேயே இந்த அமைப்புகள் மீது எத்தகைய அதிகாரத்தை கொண்டிருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறது.

நான் சென்ற ஆண்டு இந்திரேஷ் குமாரை பேட்டி கண்ட போது, “பத்திரிகையாளர்கள் எப்போதும் ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் குறித்துதான் கேள்வி கேட்கிறார்கள், அமைப்பின் சமூக நடவடிக்கைகள் குறித்து ஆர்வம் காட்டுவதில்லை. பின்னர் அந்த கேள்விகளை மட்டும் வெளியிட்டு எங்கள் பணிகள் பற்றிய தகவல்களை கொன்று புதைத்து விடுகிறார்கள். இத்தகைய பன்முகப்பட்ட அமைப்பான சங்கத்தை புறக்கணித்து வந்தது தவறு என்று ஊடகங்கள் மெதுவாக உணர்ந்து வருகின்றன” என்றார். குண்டு வெடிப்புகளில் அவரது பங்களிப்பு பற்றி பேச்சு திரும்பியதும், “என்னைப் பற்றி எழுதும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று எல்லோரையும் நான் எச்சரிப்பது வழக்கம்” என்றார் அவர். அவர் பேசியது மிரட்டும் தொனியில் இருந்தது. பின்னர், அவருக்கு தொலைபேசி, அவரும் பாகவத்தும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு தமது ஆசீர்வாதத்தை வழங்கிய சந்திப்பை பற்றி கேட்டதும் அவர் வாயடைத்துப் போனார். இது தொடர்பாக மோகன் பாகவத்தின் கருத்தை அறிய முயற்சித்த போது கேள்வியை மின்னஞ்சலில் அனுப்புமாறு அவருடைய அலுவலகத்தினர் கூறினார்கள். ஆனால், இந்த கட்டுரை அச்சுக்குப் போகும் வரை அவர்கள் பதில் அனுப்பவில்லை.

அசீமானந்தா
அரச விருந்தாளி அசீமானந்தா

ஜனவரி 24-ம் தேதி வெள்ளிக்கிழமை, ஹரியானாவில் பஞ்ச்குலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றம், சம்ஜவுதா குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை பதிவு செய்தது. அம்பாலா சிறையில் மூன்று ஆண்டுகள் இருந்த பிறகு, 31 மாதங்கள் சட்ட வாதங்களுக்குப் பிறகு வழக்கு விசாரணை மேலே நகர ஆரம்பித்திருக்கிறது. ஆஜ்மீரில் உள்ள தேசிய புலனாய்வு ஆணைய நீதிமன்றத்தில் அவர் செப்டம்பர் 2013 முதல் வழக்கை எதிர்கொண்டு வருகிறார். மெக்கா மசூதி வழக்கு விசாரணை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற நவம்பரில் அவர் வழக்கை விசாரிக்கும் ஹைதராபாத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான பிரக்யா சிங், தேசிய புலனாய்வு ஆணையம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருப்பதாக சொல்லி, இப்போது போபாலில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிணையில் வெளிவருவதற்காக அவர் தாக்கல் செய்துள்ள பல விண்ணப்பங்களை தேசிய புலனாய்வு ஆணையம் எதிர்த்து வருகிறது.

வழக்குகள் இன்னும் பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும் என்று தெரிகிறது. நீதிமன்ற நடைமுறைகளை தாமதப்படுத்துவதாக இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு நான் போய் வந்த ஒன்றரை ஆண்டுகளாக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது வரை குறிப்பிடத்தக்க புதிய நிகழ்வுகள் எதுவும் நடந்து விடவில்லை.

அம்பாலாவில் அசீமானந்தா இப்போது ஒரு சிறப்பு பி வகுப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ராம்குமார் சவுத்ரி என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அவருடன் அறையை பகிர்ந்து கொள்கிறார். ராம்குமார் சவுத்ரி 2012 நவம்பரில் 24 வயது பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் பொதுவாக தரப்பட்டுள்ள சமையல் செய்யும் நபர் அவர்கள் விருப்பத்துக்கேற்ப சமைத்துப் போடுகிறார். இரவில் மட்டுமே அவர்கள் அறையில் பூட்டப்படுகின்றனர்.

ஜனவரி 2014-ல் நடந்த எங்கள் கடைசி சந்திப்பில், தேநீர் வேண்டுமா என்று அசீமானந்தா என்னிடம் விசாரித்தார். நான் பதில் சொல்வதற்கு முன்பே, சிறு குற்றங்களுக்காக சிறையில் உள்ள ஒரு ஒல்லியான பதின்ம வயது சிறுவன் இனிப்பான தேநீர் நிரம்பிய ஒரு பிளாஸ்டிக் கப்பை என் கையில் திணித்தான். அசீமானந்தா அவனை தனக்கு அருகில் இழுத்து, “இவன் என் ஆள். விரைவில் இவன் வெளியில் போய் விடுவான்” என்றார். அந்த சிறுவனின் முகத்தை பார்த்து சிரித்த அவர், “இந்த டீக்கடைக்காரனும் வளர்ந்து ஒரு நரேந்திர மோடியாகலாம்” என்றார்.

எங்கள் உரையாடல்களின் போது அந்த வழியாகச் சென்ற சிறை அதிகாரிகள் நின்று அசீமானந்தா எப்படி இருக்கிறார் என்று விசாரித்தனர். “என்ன நடந்ததோ நன்றாகவே நடந்தது என்று அவர்கள் அனைவரும் சொல்கிறார்கள். நான் அவற்றை செய்தேனா இல்லையா என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால் யார் செய்திருந்தாலும், சரியானதை செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள்” என்றார் அசீமானந்தா.

நான் மேற்கு வங்கத்தில் உள்ள அசீமானந்தாவின் கிராமமான கமர்புக்கூருக்குப் போயிருந்த போது, அவரது குடும்பத்தினர் என்னுடன் பேசுவதற்கு பெரிதும் தயங்கினார்கள். நான் புறப்படும் போது அவரது தம்பி சுஷாந்த், “சில மாதங்கள் பொறுத்திருங்கள். மோடிஜி அதிகாரத்துக்கு வந்த பிறகு, கிராமத்தின் நடுவில் ஒரு மேடை போட்டு அசீமானந்தா செய்தவற்றை எல்லாம் ஒரு லவுட் ஸ்பீக்கரில் அலற விடுவேன்” என்றார்.

எங்களது ஒரு சந்திப்பில் அசீமானந்தா, நாதுராம் கோட்சேவின் இறுதி வார்த்தைகளை கொஞ்சம் மாற்றி சொன்னார் : “சிந்து நதி இந்தியாவில் பாய்வது வரை என்னுடைய எலும்புகளை கடலில் கலக்காதீர்கள்.” வழக்கு விசாரணை முடிவதற்கு நீண்ட காலம் பிடித்தாலும் தான் நிச்சயமாக விடுதலை செய்யப்படப் போவதாக அவர் பூல்சந்த் பாப்லூவிடம் உறுதியாக கூறியிருக்கிறார். தனது மற்றும் பிரக்யாசிங், சுனில் ஜோஷி போன்றவர்களுடைய பணி தொடர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார். “அது நடக்கும். சரியான நேரத்தில் நடந்தே தீரும்”.

–    முற்றும்

நன்றி : லீனா கீதா ரகுநாத், கேரவான்   (விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்துக்கு செய்த தீவிர பணிகள் – லீனா கீதா ரகுநாத்)
தமிழாக்கம் – பண்பரசு

மேலும் படிக்க

  1. இதற்கு பேர்தான் அரசு பயங்கரவாதம்.நம் இந்திய அரசு பயங்கரவாதத்தை ஆதரிப்பது வினாவுக்கு தெரியாதா?.ஆனால் இந்திய அரசு பயங்கரவாததுக்கு எதிரானது என்று மட்டும் கூப்பாடு போடுவார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க