privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்போலீசுடன் SRF நிர்வாகத்தின் காட்டு தர்பார் - புஜதொமு போர் !

போலீசுடன் SRF நிர்வாகத்தின் காட்டு தர்பார் – புஜதொமு போர் !

-

கும்மிடிப்பூண்டி பகுதியில் கடந்த 08.03.2014 அன்று, “தொழிற்சங்க உரிமைக்காக போராடிய 13 தொழிலாளர்களை கிரிமினல்களாக சித்தரிக்கும் SRF மற்றும் போலீசின் கூட்டுச் சதியினை முறியடிப்போம்” என்கிற முழக்கத்தின் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (புஜதொமு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் அவசியத்தை தெரிந்துக்கொள்ள நாம் அந்நிறுவனத்தில் 8 ஆண்டுகளாக நடைபெற்ற வரலாற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

SRF புதிய ஜனநாயகத் தொழிலாளார் சங்கம் புஜதொமு அமைப்பின் இணைப்பு சங்கமாக கடந்த 2005-லிருந்து செயல்பட்டு வருகிறது. சங்கம் துவக்குவதற்கு முக்கிய காரணங்கள் : என்.டி.டி.எஃப் என்கிற கொத்தடிமைக்கூடாரத்தில் மெக்காலே கல்வி அளித்து SRF-ன் லாபத்திற்காக இளம் தொழிலாளர்களை அடிமைகளாக உருவாக்கி, “ஓய்வில்லா வேலை நேரம்” (தொடர்ச்சியாக இரண்டு ஷிப்ட் ஏன், மூன்று ஷிப்ட் கூட பார்க்க வைத்தது), ஈ.எஸ்.ஐ வசதி இல்லை, முதுகு எலும்பு ஒடிய வேலை செய்தாலும் சமமான ஊதிய உயர்வு இல்லை, அவனுடைய தாரக மந்திரமான அப்ரைசல் சிஸ்டத்தின்படி  (APPRAISAL SYSTEM) யார் சிறந்த அடிமையாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு ஊதிய உயர்வு மற்ற அடிமைகளுக்கு குறைவான சம்பள உயர்வு! என்கிற திமிரோடு நிர்வாகம் தொழிலாளர்களை ஒடுக்கிவந்தது.

இந்த அடக்குமுறையை எதிர்த்து செயல்பட சங்கம் அவசியமானது என உணர்ந்து, புஜதொமு-வை நாடினர். மற்ற சங்கங்கள் இருக்கும்போது, ஏன் புஜதொமு சங்கத்தினை நாட வேண்டும் என கேள்வி எழலாம், காரணம் இருக்கிறது. 2004-ல் ரெட் ஹில்ஸ் பகுதியில் நடைப்பெற்ற புஜதொமு தெருமுனைக் கூட்டத்தினை சில SRF தொழிலாளிகள் பார்த்தனர். “அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் தொடங்கி முதலாளிகள் வரை செய்கிற கொடுமைகளை தைரியமாக பேசுகின்றனர்! இவர்கள் கூறுகின்ற தீர்வு சரியானதாக உள்ளதே! இவர்களிடம் சென்றால் நமது பிரச்சினைக்கு வழி கிடைக்கும்!” என உணர்ந்தனர்.

தொழிலாளர்கள் 2005-ல் சங்கம் தொடங்கினர். நிர்வாகம் வெற்றிலைப்பாக்கு வைத்து சங்கத்தை ஆராதிக்கவில்லை. சங்கத்தினை உடைக்க, முன்னணியாளர்களை வெளிமாநிலங்களுக்கு பயிற்சிக்கு அனுப்புவது, தொழிலாளர்கள் மனதை சங்கம் கெடுத்து விட்டது என்று அவர்களை மறுபடியும் NTTF கொத்தடிமை கூடாரத்திற்கு அனுப்புவது, புதிதாக திருமணம் ஆனவர்கள், ஆகப்போகிறவர்கள், மனைவி பிரசவ நிலையில் இருந்த தொழிலாளர்கள் என பாரபட்சமின்றி அனைவரையும் வெளி மாநிலத்திற்கு டிரான்ஸ்பர் செய்வது என்ற பல முயற்சிகளாலும்  சங்கத்தினை உடைத்தெறிய முடியவில்லை.

இறுதியாக தனது பிரம்மாஸ்திரத்தினை பயன்படுத்தியது நிர்வாகம். ஆம்! சங்க நிர்வாக குழு உறுப்பினர்களை ஆலை வாயிலிலேயே வைத்து சஸ்பெண்ட் ஆர்டரை கொடுத்து, ஒழிந்தது சங்கம் என கொக்கரித்தது. நிர்வாகத்தின் செயல்பாட்டினை கண்ட தொழிலாளர்கள் 2008-ல் சங்கமாக ஒன்று திரண்டு உள்ளிருப்பு போராட்டத்தினை நடத்தினர். ‘விசுவாசி’ போலீசு கலவர (தடுப்புப்) படை ஆலையினுள் நுழைந்தது. தொழிலாளர்கள் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தது.

‘தங்களை தொழிலாளர்கள் சிலர் தாக்கினார்கள், கம்பெனியின் ’பொது’ சொத்தை சேதப்படுத்தினார்கள்’ என பொய்ப் புகார் கொடுத்தது நிர்வாகம். இந்த புகாரினை வைத்துக் கொண்டு நிர்வாகம் அடையாளம் காட்டிய தோழர்களை, தொழிலாளிகள் முன்பே அடித்து துன்புறுத்தியது போலிசு. ஏன் இப்படி நடந்துக் கொள்கிறீரகள்! என கேள்விகேட்ட தொழிலாளர்களையும் அடித்து துன்புறுத்தியது. 13 தொழிலாளர்களை இரவு 12 மணியளவில் நீதிபதியின் வீட்டிற்கு சென்று ஆர்டர் வாங்கி, கிரிமினல்களாக சித்தரித்து, இரவு 1 மணிக்கு புழல் சிறையில் அடைத்தது போலிசு. முதலாளிக்கு ஆதரவாக என்னவொரு வேகம் ? (ஆனால் இந்த வேகம் ஏன் மணற்கொள்ளையன் வைகுண்டராஜன், மலைத் திருடன் பி.ஆர்.பி யிடமும் காட்டமுடியவில்லை?)

இவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே போய் ஜாமீன் கொடுப்பதில் நீதிபதி கூறியது தான் ஹைலைட்! “ஏண்டா, கம்பெனியில பத்தாயிரம் சம்பளம் வாங்குறீங்களாமே! என்ன திமிரு இருந்தா அதிகாரிகள போட்டு அடிப்பீங்க!” என தன் வர்க்கப் பாசத்தைக் காட்டி ஜாமீன் தரமறுத்துவிட்டார். இந்த அதிகார வர்க்கத்திடம் 40 நாட்கள் போராடி அந்த தொழிலாளர்களுக்கு ஜாமீன் கிடைத்தது. (இதே சம்பவம், மறுகாலனியாக்க கொள்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இன்றைய சூழலில் நடந்திருக்குமானால், முதலாளிகள் மீதான ஆளும் வர்க்கத்தின் விசுவாசத்தினால் ஜாமீன் மறுக்கப்பட்டு வதைபடும் மாருதி தொழிலாளிகள் நிலைதான் ஏற்பட்டிருக்கும்!)

ஆலையில் தொழிற்சங்கம் ஓரளவு பலமானது. தனது வழக்குகளை சட்டரீதியாக நடத்தி வந்தது. 2011-ல் சம்பள பிரச்சினை (COD) தொடர்பான வழக்கில் வெற்றியடையும் தருவாயில் இருந்தது. ஆனால் நிர்வாகம் “சங்கத்தினை அங்கீகரிக்கிறோம், எல்லா பிரச்சினைகளையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்” என தொழிற்சங்கத்திடம் கூறியது. நிபந்தனையாக நிர்வாகத்திற்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்குகளை சங்கம் வாபஸ் வாங்க வேண்டும் என்றது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டது. சம்பள பிரச்சினை சில சரிசெய்யப்பட்டாலும், பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் விவகாரம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்த்தின் செயல்பாடுகளை நடைமுறையில் வளர விடாமல் தடுத்தது நிர்வாகம். அதேவேளையில், தொழிற்சங்கம் வழக்குகளை எதிர்கொண்டும் வந்தது.

தற்போது நடைபெற்று வரும் கிரிமினல் பொய் வழக்கு கடந்த 2009-லிருந்து நடைப்பெற்று வருகிறது. தற்போது வழக்கு நடத்துவது (போலீசு தரப்பில்) அரசு வழக்குரைஞர். 5 ஆண்டுகளாக வழக்கு ஆமை வேகத்தில் நகர்ந்தது. 13 தொழிலாளிகளும் மாதம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை தவறாமல் வழக்கிற்கு வந்தனர். போலீசு தரப்பு சாட்சி 3 ஆண்டிற்கு பிறகு தற்போது தான் ஆஜர் செய்துள்ளனர். அதில் 24 பொய் சாட்சியங்களை ஜோடனை செய்துள்ளது.

“நிர்வாகத்திற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமில்லை! போலிசு தான் இந்த வழக்கு நடத்துகிறது!” என ஒவ்வொருமுறையும் நிர்வாக அதிகாரிகள் சங்கத்திடம் கூறிவந்தனர். இந்த வழக்கு நடத்துவது அரசு தரப்பு மட்டுமல்ல நிர்வாகமும் தான் என்ற உண்மை தற்போது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது. ஆம்! இந்த வழக்கில் 13 பேர் தண்டனைபெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு தரப்பு வழக்குரைஞருக்கு ஆதரவாக மூன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை நியமித்துள்ளது நிர்வாகம். ஒரு பக்கம் சங்கத்தை அங்கீகரித்து பேசிக்கொண்டு பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறி, மறுபக்கம் 13 பேரையும் எப்படியாவது தண்டிக்க வேண்டும் என்ற நிர்வாகத்தின் புகைச்சல் தற்போது எரியத் தொடங்கியுள்ளது. வடிவேல் பாணியில் சொல்வதென்றால் “நானும் எவ்வளவு நாளுதான் நல்லவன் மாதிரியே நடிக்கிறது!” என்று கூறி தற்போது தனது சுயரூபத்தை காட்டியுள்ளது நிர்வாகம்.

இந்த சுயரூபத்தினை முறியடிக்க புஜதொமு சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு  திருவள்ளூர் மாவட்ட புஜதொமு-வின் தலைவர் தோழர். விகேந்தர் தலைமை தாங்கினார். கண்டன உரையாக புஜதொமு மாநில இணைச்செயலாளர் தோழர். சுதேஷ் குமார், திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் முகிலன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளிகள் கலந்துகொண்டு நிர்வாகத்திற்கும், போலீசுக்கும் தமது கண்டனத்தினை உரைக்குமாறு விண்ணதிர முழக்கமிட்டனர். மக்களிடத்தில் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பரவலாக சென்றடைந்தது.

11.03.2014 அன்று கிரிமினல் வழக்கில் பொய் சாட்சி சொல்ல வந்த நிர்வாகிகள் நீதிமன்றத்திற்கு வந்தவுடன் மிரண்டு போயினர். காரணம், 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் கோர்ட்டிற்கு வந்திருந்தனர். வழக்கு விசாரணை முடிந்த பிறகு நீதிமன்றத்தை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்தனர் நிர்வாக அதிகாரிகள். நீதிமன்றத்தின் வெளியில் வழக்கின் தன்மை பற்றி சங்க முன்னணியாளர்கள் தொழிலாளிகளுக்கு விளக்கிக் கொண்டிருந்தனர். நிர்வாக தரப்பில் சாட்சி சொல்ல வந்தவர்கள் நீதிபதியிடம் சென்று, “நாங்கள் வெளியே சென்றால் தொழிலாளிகள் எங்களை மிரட்டவும், அடிக்கவும் செய்வார்கள்! எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவை!” என சென்டிமென்டாக பேசி நாடகத்தை நிறைவேற்றினர். கூடியிருந்த எங்களை நீதிபதி அழைத்து, “இங்கெல்லாம் கூட்டம் கூடக் கூடாது, எல்லாரும் கலைந்து போங்க” என்றார். அதன் பின்பு நிர்வாகம் வேனில் ஏறி பறந்து சென்றது.

தற்போது நிர்வாகம் சங்க செயல்பாட்டின் மீது அதிருப்தியாக உள்ளது என எச்.ஆர் மேனேஜர் சங்க தலைவரிடம் போனில் ஒப்பாரி வைத்தார். எங்களின் கோரிக்கை என்னவோ, அதற்காக சட்ட பூர்வமாகவும், சங்க ரீதியாகவும் போராடினோம். தீர்வு எட்டப்படவில்லை. காரணம் இந்த அரசமைப்புக்குள் எவ்வளவுதான் போராடினாலும் தற்காலிக தீர்வு மட்டுமே கிடைக்கிறது. நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் தொழிலாளி வர்க்கமாய் ஒன்று திரண்டு வீதியில் இறங்கி போராடியே தீர வேண்டும் என்கிற கட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.

இந்த ஆர்ப்பாட்டம் ஏதோ 13 பேர் மீதான கிரிமினல் வழக்கு பிரச்சனைக்காக நடைபெற்றது என்று சுருக்கி பார்த்து விடமுடியாது. உரிமைக்காக போராடுகின்ற தொழிலாளார்கள் மீது இந்த ஆளும்வர்க்கங்களும், முதலாளிகளும் எப்படி நடந்து கொள்கின்றன என்பதற்கு இன்னுமொரு உதாரணம் மாருதி தொழிலாளர் போராட்டம். இவ்வாறு ஒவ்வொரு ஆலையிலும் இதே நிலைமைதான், இன்றைய மறுகாலனியாக்க சூழ்நிலையில் நடந்தேறிய வண்ணமிருக்கிறது. ஒவ்வொரு ஆலைகளிலும் முதலாளித்துவத்தின் வடிவங்கள் வேண்டுமானால் மாறலாம்! ஆனால் அதன் சா(கோ)ரம் மாறாது!

தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம்! முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்,
புஜதொமு.,
திருவள்ளூர் மாவட்டம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க