Saturday, August 20, 2022
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி !

நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி !

-

வழக்குரைஞர் ராஜேந்திர பதக்
வழக்குரைஞர் ராஜேந்திர பதக்

டந்த 2012, ஜூலை 18 அன்று குர்கானிலுள்ள மாருதி கார் நிறுவனத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடிய 546 தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வீதியில் வீசியெறியப்பட்டனர். நிர்வாகமே சதிசெய்து மனிதவள அதிகாரியைக் கொன்றுவிட்டு, தொழிலாளர் மீது கொலைவழக்கைச் சோடித்து 148 தொழிலாளர்களைச் சிறையிலடைத்தது. ஒன்றரை ஆண்டுகளான பின்னரும் இத்தொழிலாளர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு வருகிறது. மாருதியின் அடியாளாக அரசும் போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன. இம்முதலாளித்துவப் பயங்கரவாதத்தை எதிர்த்துத் தொடர்ந்து போராடி வரும் மாருதி தொழிலாளர்கள், தமது சோந்த அனுபவத்தின் மூலமாக இன்றைய அரசியலமைப்பு முறையானது தொழிலாளர்களுக்கு எதிரானது என்ற உண்மையைப் பிரகடனப்படுத்துகின்றனர்.

மாருதி தொழிலாளர்கள் மீதான கொலைக் குற்றத்துக்கு எதிராகப் போராடிவரும் வழக்குரைஞர் ராஜேந்திர பதக் தனது பேட்டியில், “நாம் முதலாளித்துவ உலகில் வாழ்கிறோம். முதலாளிகள் ஓரணியில் இருக்கிறார்கள். அவர்கள் போராடும் தொழிலாளர்களைச் சிறையிலிட்டு வதைக்கிறார்கள். அவர்கள் நீதிபதிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது உள்ளிட்டு எல்லா வகையான பஞ்சமாபாதங்களையும் செய்யத் தயங்காதவர்கள். இதனால்தான், சிறையிலுள்ள தொழிலாளர்களின் உடல்நலக் குறைவைக் காரணம் காட்டிப் பிணை கேட்டபோதிலும்கூட, அது நீதித்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகள், அந்நிய முதலீட்டாளர்களின் தரகர்களாகவே உள்ளனர். இன்றைய அரசியலமைப்பு முறை முதலாளிகளுக்கானதாக உள்ளது. இந்தியாவில் தொழிலாளர் பிரச்சினை வராது என்று உத்திரவாதம் அளித்து அந்நிய முதலீட்டாளர்களை ஆட்சியாளர்கள் அழைக்கிறார்கள். அவர்கள் முதலாளிகளது நிகழ்ச்சி நிரலின்படியே செயல்படுகிறார்கள். மாருதி தொழிலாளர் குடும்பங்கள் பட்டியினியில் பரிதவிக்கின்றன. அவர்களது குழந்தைகள் பள்ளிக்குக்கூடச் செல்ல முடியாத அவலம் தொடர்கிறது.

மாருதி நடைப்பயணம்
கடந்த ஜனவரி 15 முதல் 31 வரை கைத்தால் நகரிலிருந்து டெல்லி வரை முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராகக் குடும்பத்தோடு நடைப்பயணப் பிரச்சாரத்தை மேற்கொண்ட மாருதி தொழிலாளர்கள்.

சி.பி.எம். கட்சியில் உறுப்பினராக இருந்த நான், அதன் செயல்பாடுகளைக் கண்டு வெறுப்படைந்து அக்கட்சியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன். சி.பி.எம். என்பது காங்கிரசு ஆதரவு கட்சியாகிவிட்டது. 2004 லிருந்து 2009 வரையிலான காலத்தில் நாடாளுமன்றத்தில் 62 எம்.பி.க்களை இடதுசாரி முன்னணி பெற்றிருந்த போதிலும், தொழிலாளர் சட்டங்களில் எந்த சாதகமான மாற்றத்தையும் அக்கட்சி செய்யவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தொழிலாளர்களின் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது.

நமது நாட்டுக்கு ஒரு புரட்சி தேவைப்படுகிறது. அது தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளை அணிதிரட்டி நடத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கு தொழிலாளர்கள் ஓரணியில் திரள வேண்டும்” என்று கூறியுள்ள அவர், இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலையும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தின் கோரத்தையும் இப்பேட்டியின் வழியாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

ஜந்தர் மந்தர் ஆர்ப்பாட்டம்
நடைப்பயணப் பிரச்சாரத்தின் நிறைவாக டெல்லி ஜந்தர் மந்தரில் ஜனவரி 31 அன்று மாருதி தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

இன்றைய அரசியலமைப்பு முறை முதலாளிகளின் நலனுக்கானது என்பதைத் தமது சொந்த அனுபவத்தினூடாகப் புரிந்து கொண்டுள்ள மாருதி தொழிலாளர்கள், கடந்த ஜனவரி 15 முதலாக கைத்தால் நகரிலிருந்து டெல்லி வரை (ஏறத்தாழ 300 கி.மீ.) நீதிகேட்டு நடைப்பயணப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். வேலைநீக்கம் செயப்பட்ட மாருதி தொழிலாளர்கள் தமது குடும்பத்துடன் அணிதிரண்டு வழியெங்கும் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஆலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் பிரச்சாரம், கலைநிகழ்ச்சியுடன் இந்த நெடும் பயணத்தை நடத்தியுள்ளனர். வழிநெடுகிலுமுள்ள உழைக்கும் மக்கள் அவர்களுக்கு உணவும், இரவில் தங்குவதற்கு ஏற்பாடுகளும் செய்துகொடுத்து, நிதியுதவியும் செய்து ஆதரித்துள்ளனர். எழுச்சியுடன் நடந்த இந்தப் பிரச்சார நடைப்பயணம், 16 நாட்களுக்குப் பின்னர் ஜனவரி 31 அன்று டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவடைந்தது. பின்னர் அரசுத் தலைவரிடம் நீதிகேட்டுப் போராடும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

தீவிரமாகிவரும் முதலாளித்துவ பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக அனைத்துத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு, இன்றைய அரசியலமைப்பு முறையை வீழ்த்த வேண்டிய அவசியத்தையே மாருதி தொழிலாளர்களின் இப்புதிய போராட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டுகிறது.

– அன்பு
___________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2014
___________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க