privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி - படங்கள்

நெய்வேலி தொழிலாளி சுட்டுக் கொலை : செய்தி – படங்கள்

-

17-3-2014 அன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் நெய்வேலி இரண்டாவது சுரங்க நுழைவு வாயிலில் ஒப்பந்த தொழிலாளி ராஜ்குமார் (வயது 34) என்பவரை பாதுகாப்பு படை வீரர் நோமென் என்பவன் தனது எஸ்.எல்.ஆர் ரைபிள் மூலம் காது பக்கம் வைத்து மேல் நோக்கி சுட்டதில் மூன்று குண்டுகள் பாய்ந்து தொழிலாளி ராஜ்குமாரின் மூளை சிதறியது. அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து, இறந்தால். மனித உரிமை பாதுகாப்பு மையம் இதை வன்மையாக கண்டிக்கிறது. கொலைகாரன் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

அவருக்கு அமலா லுசியா ராணி என்ற மனைவியும், பிராங்லின் என்ற 3 வயது மகனும்,ஒலிவியா என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர். தற்போது இந்தக் குடும்பம் அஜுஸ் நகரில் வசித்து வருகின்றனர். கொல்லப்பட்ட ராஜ்குமாரது சகோதரர் பாலக்குமாரும் ஒப்பந்த தொழிலாளியாக நெய்வேலி நிறுவனத்தில் வேலை செய்கின்றார்.

கடந்த ஆண்டு சாலை விபத்தில் இறந்து போன அவரது சகோதரர் சுரேஷ் குமாரும் இங்கேதான் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்திருக்கிறார். அவரது இழப்புக்கான  பணம் எப்போது வரும் என விசாரிக்கவே ராஜ் குமார் இரண்டாவது சுரங்க அலுவலகத்திற்கு சென்றார். பாதுகாப்பு படை வீரர் உளளே விட மறுத்து வாக்குவாதம் செய்தார். ராஜ்குமார் யாருக்கோ போனில் தகவல் பேச முயன்ற போது இந்த படு கொலை நிகழ்த்தபட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் கேட்டில் உள்ள சி.சி கேமராவில் பதிவாகி உள்ளன. இந்தப் படு கொலையை நிகழ்த்திய படை வீரர் நோமென்னை பாதுகாக்க பாதுகாப்பு படைவீரர்கள், நீதி கேட்டு சென்ற தொழிலாளிகளை துப்பாக்கி காட்டி மிரட்டியதோடு தாக்கவும் செய்தனர். 40-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தொ.மு.ச. தலைவர் திருமாவளவன், சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த சேகர் ஆகியோரும் காவல் துறையால் தாக்கப்பட்டனர்.

உரிய தீர்வு கிடைக்காமல் பேச்சு வார்த்தைக்கு பிறகே  உடலை எடுக்க அனுமதிப்போம் என திரண்ட தொழிலாளர்கள், ஆம்புலன்சை மறித்தனர். உடனே, கடலூர் மாவட்ட எஸ்பி ராதிகா, போலீசு தடியடி நடத்தி கண்ணீர் புகை வீசி தொழிலாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. ராஜ்குமார் உடல் அருகே இருந்த உறவினர்களும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு காயமடைந்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் அங்குதான் இருந்தனர். தொழிலாளிகளுடன் உறவினர்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தாமல் காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய தமிழக காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய பாதுகாப்பு படையினர் மற்ற மாநிலங்களில் நடந்து கொள்வது போலவே இங்கும் பொது மக்களிடம் அத்து மீறி நடந்து கொள்வது, அடிப்பது என திமிராக தனி ராஜியத்தை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் சாலை ஓரமாக பேசிக் கொண்டிருந்த ஆனந்த் னும் தொழிலாளியை இந்த கொலைகார மத்திய போலீசு படை கடுமையாக தாக்கி வெளியே வீசி எறிந்தனர், என பாதிக்க பட்டவர்கள் ஆதங்கத்துடன் குறிப்பிடுகின்றனர்.

ராஜ்குமார் ‘எதிர்த்து’ பேசினார் என்பதற்காக தலையில் சுட்டு கொல்லலாம் என்றால் பாதுகாப்பு படையினரின் கேள்விக்கிடமற்ற அதிகாரம், அவர்களுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்புதான் இந்த அத்து மீறலுக்கு காரணம்.

  • ஒப்பந்த தொழிலாளி ராஜ்குமாரை சுட்டு கொன்ற நோமேன் என்ற பாதுகாப்பு படை போலீசை உடனே கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். அதை தடுக்க தவறிய பிற அதிகாரிகளின் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
  • சுட்டு கொல்லப்பட்ட ராஜ்குமார் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன் அவர் மனைவிக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும்.
  • நெய்வேலி நிறுவனத்திலிருந்து மத்திய பாதுகாப்பு படையை நிரந்தரமாக அப்புறபடுத்த வேண்டும்.

இனி ஒரு தொழிலாளி அரச வன்முறைக்கு பலியாகமல் இருக்க தேவையான போராட்டத்தை அனைத்து தொழிலாளர்கள் ஜனநாயக இயக்கங்களும், புரட்சிகர அமைப்புகளும்,மனித உரிமை ஆர்வலர்களும் ஒன்றினைந்து பலமாக முன்னெடுக்க வேண்டும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர்
மனித உரிமை பாதுகாப்பு மையம – தமிழ்நாடு

நாள் 17-3-2014