Friday, September 22, 2023
முகப்புஉலகம்அமெரிக்காஸ்பின்னிங் போரிஸ்: தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி ?

ஸ்பின்னிங் போரிஸ்: தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி ?

-

லகம் முழுவதும் சென்று தீவிரவாதிகளை ஒழிப்பது யார்? காட்டுமிராண்டி மக்களுக்கு கலாச்சாரத்தை கற்றுத் தர போராடுவது யார்? சர்வாதிகாரிகளிடமிருந்து நாட்டைக் கைப்பற்றி ஜனநாயகம் தழைக்க உதவுவது யார்? சந்தேகமின்றி அவர்கள்தான் ஹாலிவுட் ஹீரோக்கள். மேலும் பூமியையும் தாண்டி அண்ட சராசரங்களில் உள்ள வேற்று கிரகவாசிகள், விண்கற்கள் முதல் சாத்தான் வரை பல ஆபத்துகளில் இருந்து அமெரிக்க மக்களை மட்டுமின்றி உலக மக்களையும் காப்பாற்றுவது என்ற அரும்பணிகளை, உலக அழகிகளின் சேவையுடனும், 3டி மற்றும் கிராபிக்ஸ் இன்னபிற நவீன தொழில் நுட்ப புரட்சியின் திறமையுடன் செய்து கொண்டிருக்கிறார்கள், இந்த ஹீரோக்கள்.

ஸ்பின்னிங் போரிஸ்
தமது சக ரசிய கூட்டாளிகளுக்கு ‘ஜனநாயகத்தை’ சரியாக நிர்வாகம் செய்ய சொல்லித் தருவதற்கு, அமெரிக்காவில் ‘ஜனநாயக’த்தை கலையாக சொல்லித் தரும், ‘ஸ்பின்னிங் டாக்டர்’ –களை பரிந்துரைக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள்.

அமெரிக்காவின் ஜனநாயக ஏற்றுமதி போலவே, ஹாலிவுட் ஹீரோக்களின் உலக நாயகன் பிம்பமும் மோசடியானது. இரண்டின் நோக்கமும் “அமெரிக்கா இன்றி அமையாது இவ்வுலகு” என்பதை உலக மக்களின் மூளையில் அறுவை சிகிச்சை செய்தாவது நிறுவுவதே. அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்பு போலவே ஹாலிவுட்டின் கலாச்சார ஆக்கிரமிப்பும் அபாயகரமானது. எனினும் இரண்டையும் தொலைக்காட்சிகளின் ஹை டெபனிஷன் சேனலில் பார்த்து மயங்கும் பலரும் புரிந்து கொள்வதில்லை.

இந்த வரிசையில் வந்த ஹாலிவுட் படம் தான் ஸ்பாட்சிவுட் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்பின்னிங் போரிஸ்’ (Spinning Boris) எனும் திரைப்படம். ரசியாவில் 1996-ம் ஆண்டு முதன் முதலாக நடந்த அமெரிக்க பாணி ‘ஜனநாயக’ தேர்தலில் அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சினை வெற்றி பெறச் செய்யும் பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க  நிபுணர்களது அனுபவங்களின் அடிப்படையிலான கதை தான் இந்தப் படம்.

1991-ம் ஆண்டு ரசியாவில் போலி-கம்யூனிச வீழ்ச்சிக்குப் பின்னர் சமூக ஏகாதிபத்தியமாக இருந்த சோவியத் யூனியன் தகர்ந்து போகிறது. அதிபர் போரிஸ் எல்ட்சின் ஆட்சியின் கீழ் ஜனநாயகத்தை இழுத்துக் கொண்டு வருவதற்காக முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. முதலாளித்துவ பாதை அமலுக்கு வந்த ஐந்து வருடங்களிலேயே அதன் சாதனைகள் வேதனையாக பல்லிளிக்க ஆரம்பித்திருந்தன. மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் தகர்க்கப்பட்டு பெரும்பான்மை மக்கள் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டார்கள்.

போலி கம்யூனிச ஆட்சியில் இருந்த குறைந்த பட்ச தேவைகளைக் கொண்ட வாழ்க்கையும், பாதுகாப்பும் கூட இங்கே காணாமல் போயிருந்தது. அந்த ஆட்சியில் அதிகார வர்க்க முதலாளிகளாக இருந்த பலரும் முதலாளித்துவம் வந்த பின்னர் ஒரே ராத்திரியில் பெரும் முதலாளிகளாக மாறிப் போனார்கள். இத்தகைய திடீர் பணக்காரர்களும், முதலாளிகளும், மாஃபியா ரவுடிகளும் நாட்டின் பொருளாதாரத்தை கைப்பற்றியிருந்தார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணவீக்கம் என்று முழு ரசியாவும் முதாளித்துவத்தின் விஷத்தாக்குதலில் அடி வாங்கியிருந்தது. எனவே இயல்பாக போரிஸ் எல்ட்சின் மேல், ரசிய மக்கள் கடும் அதிருப்தி அடைந்திருந்தார்கள்.

கென்னடி ஜுகானோவ்
ஜுகானோவும், ஆட்சியிழந்த போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிதான்

இந்நிலையில் 1996-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் அதாவது ரசியாவின் முதல் ‘ஜனநாயக’ தேர்தலில் அதிபர் போரிஸ் எல்ட்சின் போட்டி இடுகிறார். இந்த தேர்தலில் எல்ட்சின் தோல்வி அடைந்து எதிர்த்து போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜுகானோவ் வெற்றி பெற்றால் தமது வணிக/குற்ற சாம்ராஜ்யத்தை இழக்க வேண்டி வரும்; எதிர்காலம் கேள்விக்குள்ளாகும்; வெளிநாட்டுக் கடன், மற்றும் முதலீடுகள் வராமல் போகும் என்று எல்ட்சின் பதவி இழப்பதை தடுக்க என்ன வழி என்று யோசிக்கிறார்கள், ரசிய முதலாளிகள்.

எனினும் இந்த ஜுகானோவும், ஆட்சியிழந்த போலிக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிதான். இந்தக் கட்சியின் ஆட்சியில்தான் இப்போது இருக்கும் முதலாளிகள் தந்திரமாக மறைந்திருந்தார்கள். இவர் ஆட்சிக்கு மீண்டு வந்தாலும் அது கம்யூனிசக் கட்சி ஆளும் முதலாளித்துவ ரசியா எனும் யதார்த்தத்தை மாற்றி விடாது. ஆகவே எல்சினை எதிர்ப்போரும், ஆதரிப்போரும் இரு பிரிவு முதலாளிகள்தான். இதில் எல்சின் ஆதரவு முதலாளிகள் வேகமாக முதலாளித்துவ சுரண்டல்களை அடைய நினைத்தார்கள் என்பது மட்டுமே இங்கே உள்ள வேறுபாடு.

இந்த திரைப்படம் இந்த உண்மையினைக் கூறாமல் ஜுகானோவை ஏதோ ஒரிஜினல் கம்யூனிஸ்டு போல கருதிக் கொண்டு எல்சினை காட்டுகிறது. அதன்படி இந்த தேர்தலை கம்யூனிசத்திற்கும் ‘ஜனநாயகத்திற்கும்’ நடக்கும் போட்டியாகவும் சித்தரிக்கிறது. ஜனநாயகம் என்றாலே அது முதலாளிகளுக்கான ஜனநாயகம் என்பது பலருக்கும் புரிபடாத விசயம் என்பதால் இந்த தவறான பார்வை எடுபடத்தான் செய்கிறது.

ஸ்பின் டாக்டர்கள்
‘ஜனநாயகம்’ அல்லது ஸ்பின் டாகடர் என்பது ரசியாவிற்கு புதிது. ஆனால் அமெரிக்காவில் அது அனைவரும் அறிந்த ஒன்று.

இப்பேற்பட்ட ஜனநாயகத்தின் பலனை ரசியா இதுவரை அறிந்திருக்கவில்லை என்பதால் ரசிய முதலாளிகள் எல்சினின் தேர்தல் வெற்றிக்காக தமது பங்காளிகளான அமெரிக்க முதலாளிகளை நாடுகிறார்கள். தமது சக ரசிய கூட்டாளிகளுக்கு ‘ஜனநாயகத்தை’ சரியாக நிர்வாகம் செய்ய சொல்லித் தருவதற்கு, அமெரிக்காவில் ‘ஜனநாயக’த்தை கலையாக சொல்லித் தரும், ‘ஸ்பின்னிங் டாக்டர்’ –களை பரிந்துரைக்கிறார்கள் அமெரிக்க முதலாளிகள்.

‘ஜனநாயகம்’ அல்லது ஸ்பின் டாகடர் என்பது ரசியாவிற்கு புதிது. ஆனால் அமெரிக்காவில் அது அனைவரும் அறிந்த ஒன்று. அவர்களின் பணி என்ன வென்றால்…

அதிபர் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஒருவரை வாடிக்கையாளராக வென்றெடுத்து தமக்கு தர வேண்டிய கட்டணத்தை பேரம் பேசி முடிவு செய்து ஒப்புதல் வாங்கியதிலிருந்து அவர்களது வேலை தொடங்குகிறது. தமது வாடிக்கையாளரான அதிபர் வேட்பாளர் என்ன உடை உடுத்த வேண்டும், எப்படி சிரிக்க வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், மக்கள் மத்தியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிரச்சாரத்தின் போது குழந்தைகளை வாங்கி எப்படி கொஞ்ச வேண்டும் என்பது முதல் அந்த அதிபர் வேட்பாளருக்கான சொற்பொழிவுகள், கூட்டங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் ஏற்பாடு செய்வது வரை,  தங்களின் வாடிக்கையாளர் பற்றி நல்ல செய்திகள், நல்ல கட்டுரைகள் வர ஊடகங்களுக்கு கையூட்டு வழங்குவது, செயற்கையாக ‘வாழ்க’ போடும் கூட்டத்தை போகும் இடமெல்லாம் அனுப்புவது என்றும் திட்டமிட்டு அந்த வேட்பாளரை ரட்சகனாக காட்டி மக்கள் மத்தியில் வெற்றிகரமாக சந்தைப்படுத்த வேண்டும். இது தான் ஸ்பின்னிங் டாக்டர்களின் பணி. சுருக்கமாக அனைத்து நவீன மேலாண்மை தகிடுதத்தங்களையும் செய்து வேட்பாளரை வாக்காளர்களிடம் விற்க வேண்டும்.

ஜார்ஜ் புஷ்
ஜூனியர் புஷ் எனும் கோழி மாக்கான், எல்கேஜி குழந்தைகளுக்கு இருக்கும் பொது அறிவு கூட இல்லாத முட்டாளெல்லாம் அமெரிக்க அதிபராக உலா வந்ததன் காரணம் என்ன?

முதலாளித்துவ நாடுகளில் ஒரு சோப்பை எப்படி சந்தைப்படுத்துகிறார்களோ அதற்கும் அதிபர்களை வெற்றி பெறவைப்பதற்கும் பாரிய வேறுபாடு கிடையாது. சோப்பின் மணம் – அதிபரின் சிரிப்பு, சோப்பு உறையின் வண்ணம் – அதிபர் உடையின் நேர்த்தி, சோப்பின் விளம்பர வடிவமைப்பு – அதிபரின் புகைப்பட, செய்தி வடிவமைப்பு, சோப்பு குறித்த நுகர்வோரின் சாட்சியங்கள் – அதிபரின் வாழ்நாள் சாதனைகளை ஒப்பிக்கும் நபர்கள் என்று அப்படியே இது ஒரு சோப்புக் கம்பெனி விளம்பரம்தான்.

இதிலிருந்தே ஜனநாயகம் என்பது மக்களது உரிமைகள் குறித்து பேசப்படும் ஒன்றல்ல, மக்களை மயக்கும் முதலாளிகளின் மகுடி வித்தை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஜூனியர் புஷ் எனும் கோழி மாக்கான், எல்கேஜி குழந்தைகளுக்கு இருக்கும் பொது அறிவு கூட இல்லாத முட்டாளெல்லாம் அமெரிக்க அதிபர்களாக உலா வந்தது இப்படித்தான்.

அமெரிக்காவில் தமது போட்டி நிறுவனத்திடம் முக்கிய வாடிக்கையாளர் ஒருவரை இழந்து சோர்ந்து போயிருக்கும் ஜார்ஜ் கார்ட்டன், டிக் டிரெஸ்னர், ஜோ ஷூமே என்ற மூன்று ‘ஜனநாயக’ நிபுணர்களுக்கு “எல்ட்சினை வெற்றி பெற வைக்க வேண்டும், அதற்கு எவ்வளவு பணத்தையும் செலவு செய்ய முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள்” என்று அழைப்பு வருகிறது. 2.5லட்சம் டாலர் பணம் வாங்கிக் கொண்டு ஹீரோக்கள் ரசியாவில் வந்து இறங்குகிறார்கள்.

ஸ்பின் டாக்டர்கள்
எல்சினுக்காக ஒரு மாஃபியா தலைவர் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களை வேலை வாங்குகிறார்.

பொதுவில் அமெரிக்க திரைப்படங்களில் ரசியாவைக் காண்பித்தால் ஒரு பழைய பஞ்சாங்கமாகவும், போலிசு, இராணுவத்தின் நிழலில் வாழும் நாடு போலவும்தான் சித்தரிப்பார்கள். ரசியாவிற்கு ஜனநாயகம் தெரியாது என்பதை விளக்க புறப்பட்டிருக்கும் இப்படத்தில் இத்தகைய நுட்பமான காட்சிகளும், வசனங்களும் நிறைய இருக்கின்றன. ரசிக்க தெரிந்தவர்கள் படத்தை பார்த்து கண்டுபிடிக்க முயலலாம்.

ரசியாவில் முதலாளித்துவத்தின் சந்தேகத்துக்கிடமில்லாத ஆட்சியை ஆயுதம் ஏந்திய காவலர்களுடன் சுற்றும் மாஃபியா தலைவர், ஸ்பின் டாக்டர்களுக்கு விளக்குகிறார். அமெரிக்காவின் அதிபர் ஆட்சியை, கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்தாலும், இராணுவம் சிஐஏ எல்லாம் நிலை பெற்றுவிட்டதால் மாஃபியா குழுக்களுக்கு முதலாளிகளை பாதுகாக்கும் வேலையோ தேவையோ இல்லை. ரசியாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பலர் முதலாளிகளாக  மாறியிருப்பதால் இத்தகைய மாஃபியா குழுக்களும் அவற்றின் தலைவர்களும் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். இப்படித்தான் இங்கே எல்சினுக்காக ஒரு மாஃபியா தலைவர் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களை வேலை வாங்குகிறார்.

அதிபர் எல்சின் இத்தகைய குறுக்கு வழிகளை விரும்பாத ‘ஜென்டில்மேன்’ என்பதால், ஸ்பின்னிங் டாகடர்களுக்கும் எல்ட்சினுக்கும் இடையே தொடர்பாளராகவும், அவர்களின் திட்டத்தை செயல்வடிவம் கொடுக்க உதவியாகவும் செயல்பட எல்ட்சினின் மகள் ஒத்துக் கொள்கிறார்.

டாட்டியானா
திரைப்படத்தில் எல்ட்சின் மகள் டாட்டியானா

இவர்கள் பணியை தொடங்கும் போது போரிஸ் எல்ட்சினின் வெற்றி வாய்ப்பு 6 சதவீதமாகவும், எதிர்க்கட்சியான போலி-கம்யுனிஸ்ட் வேட்பாளர் ஜுகானோவின் வெற்றி வாய்ப்பு 30 சதவீதமாகவும் இருக்கிறது. இந்த நிலைமையை மாற்றி எல்ட்சினை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் பணியை அந்த அமெரிக்கர்கள் சோப்புக் கம்பெனி தொழில்முறை பாணியுடன் மேற்கொள்கிறார்கள். ஆனால், ‘பாவப்பட்ட ரசிய மக்களுக்கு ஜனநாயகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுதான் தமது புனிதப் பணி’ என்று திரும்பத் திரும்பச் சொல்லுகிறார்கள். ஆனால் அந்தப் புனிதப்பணிக்கு ஊடகங்களையும், போட்டோக்களையும் மட்டும் சார்ந்திருக்கிறார்கள். என்னதான் புனிதமென்றாலும் அதை கடை விரிப்பது முக்கியமில்லையா?

இதற்காக பல்வேறு உத்திகளை செய்ய விரும்புகிறார்கள். ஆரம்பத்தில் முதல் சினிமாவில் நடிப்பதற்கு கூச்சப்படும் நாயகி போல அவற்றை செய்ய மறுக்கும், போரிஸ் எல்ட்சினை அவரது மகள் மூலம் படிப்படியாக தம் வழிக்கு திருப்பி, உண்மையான ‘ஜனநாயக’ தலைவராக வடித்தெடுக்கிறார்கள்.

போரில் எல்ட்சின்
போரில் எல்ட்சின்: குடித்து விட்டு ஆடுவதில் எல்ட்சின் பல நூறு விஜயகாந்துகளுக்கு சமம்.

குடித்து விட்டு ஆடுவதில் எல்ட்சின் பல நூறு விஜயகாந்துகளுக்கு சமம். இதனால் வரும் இமேஜை துடைக்க அவர் குடிப்பதற்கு முன் காலை வேளைகளில் பொது மக்களை சந்திக்கச் சொல்கிறார்கள். நள்ளிரவு வரை குடித்து விட்டு அடுத்த நாள் பகலில் தாமதமாக எழுந்திருக்கும் எல்சின் ஆரம்பத்தில் இந்த அதிகாலை நாடகத்திற்கு மறுக்கிறார். பின்னர் ரசியாவில் ஜனநாயகத்தை கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று இந்த தியாகத்திற்கு உடன்படுகிறார்.

இதே போல கடுகடு எல்ட்சினை சிரிக்கச் சொல்கிறார்கள். குழந்தைகளை வாங்கிக் கொஞ்சச் சொல்கிறார்கள், நடனமாட வைக்கிறார்கள். எல்ட்சினை பாரட்டி மக்கள் கூறுவதாக செயற்கை விளம்பரங்களை தொலைக்காட்சிகள் முதல் அனைத்து ஊடகங்களிலும் வெளி வரச் செய்கிறார்கள். எல்ட்சின் அடுத்த அதிபராக வந்தால் தான் ரசியா வளர்ச்சி அடையும் என மக்கள் கருதுவதாக செய்திகளை வெளியிட வைக்கிறார்கள். முதலில் இத்தகைய செட்டப் வேலைகளை எல்சின் எதிர்ப்பர் என்று மகள் கூறுகிறார். காரணம் அப்பாவிற்கு இத்தகைய நேர்மையற்ற, குறுக்கு வழிகள் பிடிக்காது என்கிறார். ஆனால் போரிஸ் எல்சின் என்பவர் ஜூனியர் புஷ்ஷுக்கு சமமான அறிவுடைய மகான் என்பதை இதே மேற்கத்திய உடகங்கள் புஷ்ஷை தவிர்த்து விட்டு எழுதியிருக்கின்றன. இங்கே படத்தில் கம்யூனிச அபாயத்திற்காக போரிசை ஒழுக்கவானாக காட்டுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது.

ஆனாலும் இந்த முயற்சிகள் எல்லாம் ரசிய மக்கள் மத்தியில் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தாததை கவனிக்கிறார்கள். எதிர்க்கட்சி வேட்பாளரை தாக்கி, எதிர்மறை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள். ‘கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றால்….’ என்ற பயமுறுத்தும் தொலைக்காட்சி விளம்பரங்கள் தயாரிக்கப்பட வேண்டும். ‘பாபா (அப்பா எல்ட்சின்), அறத்தை கடைப்பிடிப்பவர்’ என்று சொல்லும் எல்ட்சினின் மகள் அதை நிராகரித்து விடுகிறாள்.

எல்ட்சின்-கோர்பசேவ்
கோர்பச்சேவ் காலத்தில் எல்ட்சினும் போலிக் கம்யூனிசக் கட்சியின் ஒரு முக்கிய பிரமுகராகவே இருந்தார்.

யார் இந்த எல்ட்சின்  என்ற கேள்வி இந்த அறப்பிரச்சினைக்கு விடையளிக்கும். கோர்பச்சேவ் காலத்தில் எல்ட்சினும் போலிக் கம்யூனிசக் கட்சியின் ஒரு முக்கிய பிரமுகராகவே இருந்தார். போலிக் கம்யூனிசக் கட்சி என்பதால் ரசியாவே ஆனாலும் அங்கே நமது காங்கிரசுக் கட்சிகளை விட கோஷ்டிகள் அதிகம். இங்கே இருக்கும் ஓட்டுக் கட்சிகளின் நாய்ச் சண்டைகள் உள்ளிட்ட இன்னபிற கலாச்சாரங்கள் அங்கேயும் உண்டு. என்ன அங்கே ஆளும் கட்சி, அதிகார வர்க்க கட்சி என்பதால் இங்கே இருப்பது போல அதிகம் வெளியே தெரியாது.

இப்படித்தான் கம்யூனிசக் கட்சியில் ஒரு கோஷ்டி தலைவராக இருந்த எல்ட்சின், போலி கம்யூனிசக் கட்சியின் அனைத்து தீமைகளையும் ஒருங்கே பெற்ற ஆளுமையான எல்ட்சின் ஒரு விபத்தின் மூலம் அதிபராகவும் பின்னர் அதிபர் தேர்தலிலும் போட்டியிடுகிறார். ரசியாவின் புதுத் திருட்டு முதலளிகள் இவரை தேர்ந்தெடுத்திலிருந்தே இவரது அறம் என்ன என்பதறியலாம். இப்போது எல்ட்சின் மகள் தனது அப்பாவின் அறம் பற்றி சீறுவது உங்களுக்கு எரிச்சலைத் தந்திருக்க வேண்டும்.

ரசிய தேர்தலில் எல்ட்சினின் செல்வாக்கு சரிவடைந்திருக்கிறது என்ற செய்தி அமெரிக்காவிலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பங்குச் சந்தையில் ரசியாவின் தனியார் எண்ணெய் நிறுவனமான லூகோவின் பங்குகளின் விலை வீழ்ச்சி அடைகிறது. தங்கள் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எல்ட்சின் வெற்றி பெற்றால் லூகோ நிறுவன பங்கின் விலை மும்மடங்காகும் என கணிக்கிறார்கள் ஸ்பின்னிங் டாக்டர்கள். உடனடியாக, அதில் தங்கள் சேமிப்பை கணிசமான அளவு முதலீடு செய்கிறார்கள். அதாவது ரசியாவில் எல்ட்சின் வெற்றி பெற்று அமெரிக்க சந்தையில் லூகோவின் பங்குகள் அதிக விலை விற்றால் அதை வைத்திருக்கும் இந்த அமெரிக்க ஸ்பின்னிங் டாக்டர்கள் மில்லியனராகி விடுவார்கள். இப்போது எல்ட்சினின் வெற்றி ஸ்பின்னிங் டாக்டர்கள் லாட்டரி சீட்டில் வெற்றி பெறுவதற்கான காரணத்தை பெற்று விடுகிறது. இறுதியில் அமெரிக்க ஜனநாயகம் பங்கு சந்தை வளர்ச்சியில் மண்டியிடுகிறது என ஒரு கவித்துவ குறியீடாக இதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

எல்ட்சின் - கிளின்டன்
அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் போரிஸ் எல்ட்சினுக்கு ஆதரவு தெரிவித்தால் இன்னும் சாதகமாக இருக்கும் – படத்துக்கு வெளியே சிஐஏ எழுதிய உண்மைக் கதை

ரசியாவின் ஜனநாயக வெற்றியில் தமது முன்னேற்றமும் அடங்கியிருக்கிறது என்பதால் ஸ்பின் டாக்டர்கள் தீயாய் வேலை செய்கிறார்கள். மூளையை கசக்கி பிழிந்து பொருளாதார சலுகைகளை பிரச்சாரமாக முன் வைக்கிறார்கள். ”உங்களின் குழந்தைகளின் எதிர் காலத்திற்காக எல்ட்சினுக்கு ஓட்டு போடுங்கள்” என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.

அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் போரிஸ் எல்ட்சினுக்கு ஆதரவு தெரிவித்தால் இன்னும் சாதகமாக இருக்கும் என வெள்ளை மாளிகையில் இவர்களுக்கு இருக்கும் தொடர்புகள் மூலம், கிளிண்டனை இவர்கள் எழுதிக் கொடுக்கும் உரையை வார்த்தை மாறாமல் படிக்க வைக்கிறார்கள். கிளிண்டன் எல்ட்சினின் புகழ் பாடுகிறார். ரசியாவின் வளர்ச்சி எல்ட்சினிடமும், மக்களிடமும் தான் இருக்கிறது என புகழுரைக்கிறார். கருத்துக் கணிப்பில் ஆதரவு வீதத்தில் எல்ட்சின் எதிர்க்கட்சி வேட்பாளரை எட்டிப் பிடிக்கிறார். இதெல்லாம் மூன்று ஸ்பின் டாக்டர்களின் தனிப்பட்ட திறமை என்று அவர்களும் படத்தை பார்ப்பவர்களும் நம்பினாலும் கூட சிஐஏ இதன் திரைக்கதையை எழுதி படம் எடுத்து விலைக்கும் விற்று விட்டதே வரலாறு. எனவே தற்போது எல்ட்சினின் வெற்றியில் அமெரிக்கா அரசின் நலனும் இருக்கிறது என்பதை படம் மறைமுகமாக சொல்கிறது.

போலிக் கம்யூனிசத்தை வீழ்த்துவதற்கே அமெரிக்கா இப்படி மெனக்கெட்டிருக்குமானால் உண்மையான கம்யூனிசத்தை வீழ்த்த என்னவெல்லாம் செய்திருக்கும்  என்பதை அமெரிக்க சொர்க்கத்திற்கு ஏங்கும் அடிமைகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

மாஃபியா
ரசிய தேர்தல் வெற்றி அமரிக்க பங்கு சந்தையில் பணம் சம்பாதிக்க உதவுகிறது.

அமெரிக்க ‘ஜனநாயக’ நிபுணர்களின் உத்திகள் மக்கள் மத்தியில் எல்ட்சின் புகழை பரப்பினாலும், ஒரு வேளை வெற்றி பெறா விட்டால் என்ன நடக்கும் என்று ரசிய ஆளும் வர்க்கம் யோசிக்கிறது. அதன்படி தேர்தலை நிறுத்தி விடலாம் என மாஃபியா தலைவர்கள் மற்றும் முதலாளிகள் திட்டமிடுகிறார்கள். தேர்தல் நடந்தால் வெற்றி பெற முடியாது என்று எல்ட்சினுக்கு புரிய வைத்து அதை நிறுத்துவதுதான் ஸ்பின்னிங் டாக்டர்களின் பணி என்பதை தெளிவுபடுத்துகிறார்கள்.

இதில் ஸ்பின்னிங் டாக்டர்களுக்கு விருப்பம் இல்லை. அவர்களது சேமிப்பு பணம் அமெரிக்க பங்கு சந்தையில் முதலீடாக போடப்பட்டிருக்கிறது. தேர்தல் நடக்காவிட்டால் அது வீணாகும். ரசிய முதலாளிகளுக்கோ எல்ட்சின் வெற்றி பெறவில்லை என்றால் இருக்கும் தொழில் சாம்ராஜ்ஜியத்திற்கு குந்தகம் வரும். இப்படி அமெரிக்க முதலாளிகளும், ரசிய முதலாளிகளும் தத்தமது தரப்பில் யோசிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகத்தின் திண்டாட்டம்.

இந்நிலையில் எல்ட்சினுக்கு மாரடைப்பு ஏற்பட்டு நிலையற்ற சூழல் ரசியாவை சூழ்கிறது. இறுதியில் தங்கள் பங்குச் சந்தை முதலீட்டுக்கும், ரசியாவின் ‘ஜனநாயகத்துக்கும்’ வந்த பேராபத்துகளை உறுதியாக நின்று முறியடிக்கிறார்கள் அமெரிக்க ஹீரோக்கள்.

டைம் மேகசின்
தேர்தலில் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களின் வேலையைப் பற்றிய டைம் மேகசின் கட்டுரை.

எல்ட்சின் மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை, அது ஜிகொனோவிற்கு ஓட்டாக மாறலாம். ‘கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தைப் பிடித்தால், அவர்கள் பணக்காரர்களை தாக்கி சொத்துக்களை பிடுங்கி மக்களுக்கு வினியோகிப்பார்கள். பணக்காரர்கள் அதை எதிர்த்து ஆயுதம் தூக்குவார்கள்’ என்று விவசாயிகள் நினைப்பதாக ஸ்பின் டாக்டர்கள் ஏற்பாடு செய்யும் கிராமப் புற மக்கள் குழு விவாதத்தில் தெரிய வருகிறது. ஆனாலும் இந்த உண்மையை பொய்களால் மாற்ற நினைக்கிறது அமெரிக்க நிபுணர் படை.

எல்ட்சின் மீதான வெறுப்பை விட எதிர்க் கட்சி வேட்பாளர் மீதான பயம் அதிகமானால் மக்களை எல்ட்சினுக்கு ஆதரவாக திருப்பலாம் என்று வெற்றிகரமாக கணிக்கிறார்கள். இதிலும் அமெரிக்கர்கள் கொட்டை போட்டவர்கள். அப்போது கம்யூனிஸ்டுகள், இப்போது முசுலீம்கள் என பயத்தை வைத்தே அமெரிக்காவின் முதலாளித்துவ ஜனநாயகம் தனது படையெடுப்புகளையும் ஹாலிவுட் தயாரிப்புகளையும் நியாயப்படுத்துகிறது. மைக்கேல் மூரின் பவுலிங் ஃபார் கொலம்பன் எனும் ஆவணப்படம் இதை விரிவாகவும், ஆழமாகவும் சித்தரிக்கிறது, பாருங்கள்.

ஒரு வழியாக ‘கம்யூனிஸ்டுகள் கொலைகாரர்கள், ரத்த வெறி பிடித்தவர்கள், போர் வெறியர்கள் அவர்கள் மீண்டும் வந்தால் போர் வெடிக்கும்’ என அவதூறு பிரச்சாரத்தை விளம்பரங்களாக ஒளிபரப்ப எல்ட்சினின் ஒப்புதல் கிடைக்கிறது. இதே கட்சியில்தான் எல்ட்சினும் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார் என்ற செய்தியையெல்லாம் இந்த விளம்பரம் மாற்றிவிடுமென்றால் விளம்பரங்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள் அளிக்கும் செய்திகளை மட்டும் தெரிந்து வாழும் அமெரிக்க மக்களின் கதியை யோசித்து பாருங்கள்.

தேர்தல் நாளில் எல்ட்சின் வெற்றி பெறுகிறார். ஸ்பின் டாக்டர்கள் ரசியாவில் ஜனநாயகத்தை மலர வைத்த திருப்தியுடனும் கணிசமான சொந்த ஆதாயத்துடனும் விடை பெறுகிறார்கள்.

இந்தப்படம் நமக்கு சில விடயங்களை உறுதியாக காட்டுகிறது. முதலாளித்துவ ஜனநாயகத்தில் மக்களின் ஆதரவை தீர்மானிப்பது லாபியிஸ்டுகளின் திறமையும், முதலாளிகள் அளிக்கும் நிதியும்தான். உலகின் மூத்த ஜனநாயகமான அமெரிக்காவிலிருந்து இந்த ஸ்பின் டாக்டர்கள் ரசியா போன்ற நாடுகளில் மட்டுமின்றி, உலக மயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவிலும் தமது சேவையை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ஊதி பெருக்கப்படும் பலூன் நரேந்திர மோடியின் ஹை-டெசிபல் பிரச்சாரங்களுக்கு பின்னால் அமெரிக்க சந்தைப்படுத்தும் நிறுவனமான ஆப்கோ வேர்ல்ட் வைட் உள்ளது என்ற வகையில் இந்தப் படம் நமக்கு இன்னும் நெருக்கமாகிறது.

டாட்டியானா - எல்ட்சின்
எல்ட்சின் மகள் டாட்டியானாவுடன்

அமெரிக்கர்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தை கருத்து சுதந்திரம் மிக்கது, முன்னேறியது என பிரச்சாரம் செய்கிறார்கள். படத்தின் நடுவே, ‘ரசியாவில் தேர்தல் ரத்து கூட செய்யப்படலாம்’ என்பதை கேலி செய்கிறார்கள். ‘இது ஜனநாயகம் இல்லை, ரசிய மக்கள் அமெரிக்காவைப் போல உண்மையான ஜனநாயகத்தை ருசிக்க வேண்டும்’ என்கிறார்கள். ஆனால் அந்த உண்மையான ஜனநாயகத்தின் யோக்கியதையை படமெடுக்க இப்போது கம்யூனிச முகாம் எதுவும் உலகில் இல்லை.

படத்தின் துணை தலைப்பு, “ரசியாவின் அதிபர் தேர்தல், அமெரிக்க வழியில்” என கூறுகிறது. உண்மையாகவே பெரும் பகுதி படம் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களின் தேர்தல் பரப்புரை முறைகளை நகைச்சுவையாகத் தான் சித்திரிக்கிறது. அதே நேரம் அந்த நகைச்சுவை தனிப்பட்ட தலைவர்கள், ஆளுமைகளின் முரண்பாடுகளை காட்டிய அளவுக்கு அமைப்பு என்ற முறையில் முதலாளித்துவத்தை சித்தரிக்கவில்லை. ஒரு அதிபர் வேட்பாளர் என்ன செய்ய வேண்டும் என்ற அவர்கள் தரும் பட்டியல் நம்மை மலைக்க வைக்கிறது. மோடிக்காக பாஜக செய்யும் வேலைகளை அது நினைவு கூரவும் வைக்கிறது.

ஸ்பின்னிங் போரிஸ்
ஸ்பின்னிங் போரிஸ் படம் திரையில் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது மோடியின் தயவில் 24 மணிநேரமும் ஓடிகொண்டிருக்கிறது.

படத்தில், அமெரிக்க அதிபரோ அல்லது ரசியாவின் அதிபர் வேட்பாளரோ கூட்டத்தில் பேசுவதாகக் காட்டப்படும் தொலைக்காட்சி காட்சிகளை காட்டும் போதும், அதை கவனித்து ஆய்வு செய்யும் ஸ்பின் டாக்டர்களுள் ஒருவரான டிக் டிரெஸ்னர் வசனத்தை முன் கூட்டியே சொல்லி, தாங்கள் எழுதி கொடுத்த வசனம் தான் அது என கூட இருப்பவர்களிடம் தனது திறமையைக் காட்டி அசத்துவார். முதலாளித்துவ அரசியலில் பேசப்படும் எல்லாமும் நாடகம்தான் என்பதை இப்படத்தின் மூலம் மட்டுமல்ல, மோடியின் சிரிப்பை வரவழைக்கும் வரலாற்று காமடிகளிலிருந்தும் நாம் அறியலாம்.

நரேந்திர மோடி பேசும் வீர வசனங்கள் முதல், அவரை புகழும் கட்டுரைகள் செய்திகள், போஸ்டர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அனைத்தும் அமெரிக்க ஸ்பின் டாக்டர்களால் திட்டமிட்டு பரப்பப்படுபவையே. காங்கிரஸ் கட்சியோ இதை ராஜீவ் காந்தி காலத்திலேயே ஆரம்பித்து விட்டது.

ஸ்பின்னிங் போரிஸ் படம் திரையில் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது மோடியின் தயவில் 24 மணிநேரமும் ஓடிகொண்டிருக்கிறது. மக்களிடம் அபிமானம் இழந்து போன காங்கிரசின் இடத்தை நிரப்ப ஆளும் வர்க்கங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் ஜூனியர் புஷ்ஷைப் போன்ற நபர்தான் மோடி. இந்த மோடி வெற்றி பெற முதலாளிகள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை அறிய விரும்பும் நண்பர்கள் இப்படத்தை பாருங்கள்! மோடியோ எல்சினோ புஷ்ஷோ பெயர்கள் வேறுபட்டாலும் முதலாளித்துவ பரம்பொருள் எனும் ஒளியில் ஒரே பொருள்தானே!

–    ஆதவன்

  1. அது சரிங்க இப்போ வடகொரியால நடப்பது உண்மை கம்யூனிசமா இல்ல போலியா? எதுக்கு கேக்குறேனா, அங்க கூட கம்யூனிச ஆட்சியின் நன்மைகள்னு படம் போட்டு காட்டுறாங்களாம். ஆனா உண்மையில் மக்கள் பசி பட்டினியில் சாகுறாங்களாமே..
    உங்க சோசியலிச ரஷ்யாவிலும் இதே கதைதான் நடந்துதாம்.. ஆனா ரஷ்யா செழிப்பா இருக்குறாமாதிரி படம் காட்டி காட்டியே போண்டியானாங்களே..

  2. கிமு கிபி என்பது போல நிகஆ (நிஜ கம்யூனிஸ்ட்களின் ஆட்சி)போகஆ(போலி கம்யூனிஸ்ட்களின் ஆட்சி) என்று கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஊறியிருக்கும் நீங்களே பிரித்து தேதி வாரியாகத் தெரிவித்து விட்டால் எங்களைப் போன்றவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க