Friday, May 14, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் கழிப்பறைத் தொழிலாளியை கழுவிலேற்றும் சமூகம் !

கழிப்பறைத் தொழிலாளியை கழுவிலேற்றும் சமூகம் !

-

சென்னையின் சுறுசுறுப்பான பேருந்து பணிமனைகளில் ஒன்று. பெரிய பள்ளம் பறிக்கப்பட்டிருந்த நுழைவாயிலில் விழுந்து எழுந்து உள்ளே நுழையும் பேருந்து ஒன்று உயரமான ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுக்கு கீழ் பயணிகளை உதிர்க்கிறது. சோகையான வெயில் கொஞ்சம் காட்டமாகவே அடிக்கிறது. ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நேரப் பதிவு செய்து விட்டு கிடைக்கும் ஒரு சில நிமிட இடைவேளையில் டீ குடிக்கவோ, புகை பிடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ இடம் தேடி ஓடுகிறார்கள். பக்கத்து பேருந்து முதலில் புறப்பட்டு விடுமோ என்ற குழப்பத்துடன் கூடிய பதற்றத்துடன் பேருந்துகளின் உள்ளே பயணிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து சிறிது தள்ளி இருக்கும் பணிமனையிலிருந்து மெதுவாக நடந்து வரும் காக்கி உடை உடுத்த ஒருவர் தயங்கி தயங்கி அணுகினார்.

“செக்யூரிட்டிட்ட வந்து பேசிட்டு போனது நீங்கதானே …”. போக்குவரத்து பணிமனை தொழிலாளர்களின் வாழ்க்கை போராட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் வந்திருந்த எங்களிடம் விரக்தியுடன் அறிமுகம் செய்து கொண்டார்.  அவர் சொன்ன விவரங்கள் அந்த விரக்தியின் நியாயத்தை அங்கீகரித்தன.

“ஆமா, சொல்லுங்க, நீங்களும் இங்கதான் வேலை பார்க்கிறீங்களா? மெக்கானிக்கா இருக்கீங்களா”

“இல்லைங்க கிளீனிங் வேலை செய்றேன்”

“அப்படியா, பஸ் எல்லாம் கிளீன் செய்வீங்களா?”. ஒவ்வொரு நாள் இரவும் டெப்போவில் கொண்டு விடப்படும் பேருந்துகளின் உள், வெளிப்புறங்களை பெருக்கி, தூசி தட்டி கழுவி விடும் வேலை செய்கிறாரோ என்று கேட்டோம்.

“முன்ன அதைத்தான் செஞ்சிட்டு இருந்தேன். 15 வருஷமா அந்த வேலை செஞ்சு, தூசி எல்லாம் உள்ள போயி பிரச்சனை ஆயிருச்சி. இங்க பாருங்க” என்று சட்டையைத் தூக்கி வயிற்றைக் காட்டுகிறார். சுமார் 10 இஞ்ச் நீளத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை தழும்பு நெஞ்சிலிருந்து வயிற்றை நோக்கியபடி அழுத்தமாக இருந்தது. 15 ஆண்டுகள் மாநகர பேருந்து கழகத்துக்கு உழைத்து தனது நுரையீரலை கரைத்து விட்டிருக்கிறார்.

“மூச்சுப் பிரச்சனைன்னு சொல்லி ஜி.எச்லதான் ஆப்பரேசன் செஞ்சாங்க. இனிமேலும் தூசி, கெமிக்கல்ஸ்ல வேல செஞ்சா உயிருக்கே ஆபத்துன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அப்புறமா இந்த காண்டிராக்டர போய் பார்த்து அவரு டாய்லெட் கழுவுற வேலை செய்யச் சொன்னாரு”. அவரை அப்படி நட்டாற்றில் விட்டு விடாமல் வேலை வாய்ப்பு கொடுத்த காண்டிராக்டரின் ‘கருணை’யை பற்றி கேட்க நினைத்து, மேல் விவரங்களை விசாரித்தோம்.

“அப்பிடியா, எத்தன டாய்லெட் கிளீன் பண்ணணும்”

“அஞ்சு, பதினைஞ்சு,…” கணக்கு போடுகிறார். “ஆபீசருங்களுக்குன்னு இங்க இருக்குற 20 டாய்லெட்டுங்களை கழுவணும்.”. 20 கழிவறைகளை பராமரிக்க ஒரே தொழிலாளியை வைத்திருக்கிறார் அந்த தொழில் முனைவு மிக்க காண்டிராக்டர்.

இந்தியா - நிலப்பிரபுத்துவம்
மாதிரிப் படம் : இணையத்திலிருந்து

“எவ்வளவு சம்பளம் கெடைக்குது”

“மாசம் 4,000 ரூபா சம்பளம். ஏதாவது ஒரு நாள் லீவு போட்டா கூட சம்பளத்துல  பிடிச்சிருவாங்க. அதனால லீவே எடுக்காம தினமும் வந்துருவேன்.”

“எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?”

“காலையில 6 மணிக்கு வரணும். லேட்டா வந்தா செக்யூரிட்டி சம்பளத்த கட் பண்ண சொல்லிருவான்.”

“6 மணிக்கு வரணும்னா எத்தனை மணிக்கு புறப்படுவீங்க. வீடு எங்க இருக்கு”

“வீடு ஆவடில இருக்கு. காலையில 4 மணிக்கு எந்திரிச்சி, குளிச்சி, பழையது சாப்பிட்டுட்டு வந்துருவேன். டிரெயின் பாஸ் எடுத்து வெச்சிருக்கேன். இறங்கி, ஷேர் ஆட்டோ பிடிச்சு வருவேன். தெனமும் ஷேர் ஆட்டோ செலவு 10-15 ரூபா ஆகும்.”

“ஏங்க நீங்க வேலை செய்றது எம்.டி.சி டெப்போல, பஸ்ல வரலாமில்லையா?”

“எங்கங்க, பஸ் டிக்கெட்டு காசு அதிகம், கட்டுப்பிடியாகாது.”

“டெப்போல வேலை பார்க்கிற நீங்க டிக்கெட் எடுக்கணுமா என்ன?”

“எங்க? ஒரு 50 பைசா கொறைஞ்சாலே கண்டக்டருங்க எறக்கி விட்டுருவாங்க, டிக்கெட் இல்லாமலா வர முடியும்? ஐடி கார்டு இருந்தாத்தான் டிக்கெட் எடுக்காம வர விடுவாங்க”

“உங்ககிட்ட ஐ.டி. கார்டு இல்லையா?”

“கார்டு தரச் சொல்லிக் கேட்டா, ‘நீதான சம்பளம் வாங்கற, பஸ்சுக்கு காசு கொடுத்துதான் வரணும். நீ என்ன, எம்.டி.சி-யில வேலை பார்க்கிறியா என்ன? கூலிதான’-ன்னு கத்துவாங்க”. டெப்போவில் வேலை செய்யும் தொழிலாளியை காண்டிராக்டர் பொறுப்பில் விட்டு போக்குவரத்துக்குக் கூட வசதி தராமல் சுரண்டுகிறது மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகார வர்க்கம்.

“ஏங்க இவ்வளவு தூரம் அலையிறீங்க. உங்க வீட்டு பக்கத்திலே ஆவடிலேயே பஸ் டெப்போ இருக்கே, அங்க வேலை தரச் சொல்லி காண்டிராக்டர் கிட்ட கேக்க வேண்டியதுதானே?”

“அவர்கிட்ட போயி அப்படி எல்லாம் கேக்க முடியாதுங்க… ‘உனக்கு பெரிய ஆளுன்னு நினைப்பா, இஷடம் இருந்த வேலை செய்யி, இல்லன்னா விட்டுட்டு போயிடு, இந்த வேலைக்கு நூறு பேரு காத்துகிட்டு இருக்கானுங்க’ன்னு திட்டி தொரத்திருவாரு.”

“கேட்டா கூட அவ்வளவு திட்டுவாரா என்ன?”

“ஆமாங்க, ஒரு தடவ பி.எம். (டெப்போ கிளை மேலாளர்) கேட்டப்போ பினாயில் தீர்ந்திருச்சின்னு சொல்லிட்டேன். அடுத்த மாசம் சம்பளம் வாங்கப் போனா, ‘நீ பி.எம். கிட்ட பினாயில் இல்லன்னு சொன்னேல்ல, அவர்கிட்டயே போய் சம்பளம் வாங்கிக்கோ. உனக்கு என்ன கெவர்ன்மென்ட் ஸ்டாஃபுன்னு திமிரா’ன்னு சம்பளம் தராம வெரட்டிட்டாரு. வழக்கமாவே 10-ம் தேதிக்குள்ள சம்பளம் தர மாட்டாங்க, 15 தேதி வரை ஆகிடும். அந்த மாசம் பல தடவ இழுத்தடிச்சி 23-ம் தேதிதான் சம்பளப் பணம் கொடுத்தாரு”. வேலை கொடுத்து சுரண்டுவதையே பெரிய கருணை என்று நினைக்கும் இந்த பண முதலைகள், கடைநிலை தொழிலாளிகள் தம்மிடம் பேசுவதை கூட தமது அதிகாரத்துக்கு இழுக்காக கருதுகின்றனர்.

“வேலை நிறைய இருக்குமா?”

“காலையில 6 மணிக்கு வந்ததும் 20 டாய்லெட்டையும் ஆசிட் ஊத்தி கழுவி, பினாயில் தெளிச்சி சுத்தமா வைச்சிருக்கணும். ஆஃபிசருங்கல்லாம் வர்றதுக்குள்ள முடிக்க, 11 மணி ஆகிடும். மதியம் 2 மணிக்கு இன்னொரு தடவை தண்ணீ அடிச்சி விடணும். சாயங்காலம் போறதுக்கு முன்னால ஒரு தடவ. 5 மணிக்கு கையெழுத்து போட்டுட்டு புறப்படுவேன். வீட்டுக்குப் போய்ச் சேரும் போது ஆறரை, ஏழு ஆகிடும்.”

“மதியம் டெப்போல இருக்குற கேன்டீன்ல சாப்பிடுவீங்களா?”. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்காக மானிய விலையில் மதிய உணவு வழங்கும் உணவகம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள். ரூ 1 விலையில் கூப்பன் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

“கேன்டீன்ல நாமெல்லாம் சாப்பிட முடியாது. ஸ்டாஃபுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க.”

“நீங்களும் இங்கதானே வேலை செய்றீங்க. யூனியன் இருக்கே. அவங்ககிட்ட போய் உங்களுக்கும் கேன்டீன்ல சாப்பிடறதுக்கு வசதி வாங்கித் தரச்சொல்லி கேட்க வேண்டியதுதானே.”

“ஒரு தடவ கேட்டிருக்கேன். ‘இன்னைக்கு நான் சொல்லிர்றேன், போய் சாப்பிட்டுக்கோ’-னு சொன்னாங்க. அதே போல தெனமும் போய் கேக்க முடியுமா? நமக்கு கூப்பன் தர மாட்டாங்க. ‘அதெல்லாம் ஸ்டாஃபுக்குத்தான் நீ இப்படி கேக்குறது தப்பு’ன்னுட்டாங்க. பகல்ல கடையில ஒரு டீ குடிச்சிட்டு சமாளிச்சிடுவேன். சாயங்காலம் வீட்டில போயி சாப்பிடுவேன்”.

சங்க உறுப்பினர்களாக இருக்கும் ஓட்டுனர், நடத்துனர்களிடமே ஒவ்வொரு விஷயத்துக்கு லஞ்சம் வாங்கி கொழுக்கும் ஆளும் கட்சி யூனியன் ஒட்டுண்ணிகளுக்கு இவரைப் போன்ற ஒப்பந்தத் தொழிலாளி பட்டினியாக இருந்தால் என்ன, பரதேசம் போனால் என்ன?

“வீட்டிலிருந்து கொண்டு வரலாம். இல்லைன்னா, வெளியில சாப்பிடலாம் இல்லையா?”

எம்.டி.சி பேருந்து
எம்.டி.சியில் பணி புரியும் தொழிலாளி போக முடியாத மாநகரப் பேருந்து.

“அதுக்கெல்லாம் கட்டுப்படியாகாதுங்க. வீட்டு வாடகையே மூவாயிரத்தைந்நூறு ரூவா ஆயிடுது. அது போக கரண்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ஆறு ரூபா வச்சு வாங்கறாங்க. மக எட்டாங் கிளாசு முடிச்ச உடனேயே டெய்லர் வேலைக்கு போகச் சொல்லிட்டேன். மக சம்பளத்த வாங்கி வாடகை கொடுத்துட்டு என் சம்பளத்தில மத்த செலவுகளை பார்த்துப்போம். நானும், வீட்டுக்காரம்மாவும், ரெண்டு மகள்களும்தான் இங்க இருக்கோம். பையனுங்க ரெண்டு பேரையும் ஊர்ல இருக்கற தாத்தா, பாட்டி கூட அனுப்பியிருக்கேன்”. நவீன உழைப்புச் சுரண்டல், குடும்பத்தை அரைப்பட்டினியாக உழைக்க வைத்து, ஒரு பகுதியை சிதறடித்து, படிப்பை நிறுத்தி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

“நீங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போயிட்டு வருவீங்களா”

“எங்க ஊருக்கு போக கடப்பாலேர்ந்து (ஆந்திரா) 60 ரூபா டிக்கெட் எடுக்கணும். ஊருக்குப் போறதுக்கு லீவு போட்டா நமக்கு பணம் செலவாகுதுல்ல. அதனால, நான் ஊருக்கே போறதில்ல, பையனுங்க மட்டும் இங்க வந்துட்டு போறதுக்கு காசு கொடுப்பேன்.”

“நீங்க ஊர்லேர்ந்து எப்போ சென்னைக்கு வந்தீங்க”

“அது ஆச்சுங்க 20 வருஷத்துக்கு மேல. ஊர்ல ரெட்டிங்கதான் பெரிய ஆளுங்க. நான் எட்டாங் கிளாஸ் படிக்கும் போது, ‘ஏண்டா, நமக்கு சாப்பாட்டுக்கே வழியில்ல, படிப்பை நிறுத்திட்டு ரெட்டி வீட்டுல வேலைக்குப் போ’ன்னு சொல்லிட்டாரு.

ரெட்டி வீட்டில தினமும் போய் வேலை செய்யணும். மாடு மேய்க்கறது, தொழுவத்தை சுத்தம் பண்றது, வயல் வேலைன்னு அவங்க சொல்றத செய்யணும். நாள் முழுக்க வேலை செஞ்சா, சாயங்காலம் சோறு போடுவாங்க. மத்தபடி, ஏதாவது உடம்பு சரியில்ல, கஷ்டம்னு போய் சொன்னா நாலைஞ்சு கிலோ கேழ்வரகு கொடுப்பாங்க.”

“ஏங்க, அப்படில்லாம் கூலி இல்லாம வேலை பார்த்தீங்க. போக மாட்டேன்னு சொல்லலையா?”

“அது எப்படிங்க, முடியாதுன்னு சொல்ல முடியும். நம்ம அப்பா எல்லாம் அப்படித்தான் வேலை பார்த்தாரு. நாம வேலை செய்ய மாட்டோம்னு சொல்ல முடியுமா. அப்புறம்தான் மெட்ராசுக்கு கிளம்பி வந்தேன்”. நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை ஊறிப் போன மண்ணிலிருந்து வந்திருக்கும் அவர் பின்னணி, காண்டிராக்டரையும், டெப்போ நிர்வாகத்தையும் எதிர்த்து ஒரு சொல் கூட கேட்காத காரணத்தை உணர்த்தியது.

“உங்க ஊர்ல வேலை கெடைக்காதா.”

“இது மாதிரி கெடைக்காது சார். அதுவும் ரெட்டி எங்களையெல்லாம் கோயிலுக்குள்ள விட மாட்டான் சார். நான் கல்யாணம் ஆன பொறகு கிறிஸ்டியனா மாறிட்டேன்.

“அப்படியா, ஞாயித்துக்கிழமை தோறும் சர்ச் போவீங்களா”

“ஞாயித்துக் கெளம லீவு எடுத்தா சம்பளம் கட்டாயிரும். தெனமும் வேலை செஞ்சாத்தான 4,000 ரூபா வரும். அதனால எப்பவாவதுதான் போவேன்”. கிராமத்து கொடுமையிலிருந்து விடுபட நகரத்துக்கு வந்தவருக்கு அரை வயிற்றில் வாரத்துக்கு 7 நாள் வேலை செய்யும் ‘விடுதலை’யை வழங்கியிருக்கிறது, நவீன இந்தியாவின் வளர்ச்சி.

“சர்ச்சில உங்களுக்கு எதாவது உதவி பண்ணுவாங்களா”

“சர்ச்சில பார்த்த ஒருத்தரு மாசம் 1,000 ரூபா பென்ஷன் வர்ற மாதிரி ஏற்பாடு செய்றேன், ஒரு 10,000 ரூபா செலவாகும்னாரு. ஊர்லே அப்பா அம்மாகிட்ட 5,000 கடன் வாங்கி அனுப்பச் சொல்லி, சம்பளப் பணத்தையும் போட்டு கொடுத்தேன். பணத்தை வாங்கிட்டு போன அந்த ஆளு அப்படியே மாயமாயிட்டான், கண்லயே படல.” ஏழைகளைச் சுரண்டுவதில் கர்த்தருடைய ஆலயமும் விதிவிலகல்ல.

“சம்பளம் இவ்வளவு குறைவா இருக்கே, வீட்டில பால், தண்ணி செலவுக்கே கஷ்டமா இருக்குமே?”

“பால் தினசரி வாங்க முடியுமா சார். என்னா வெலை விக்கிது. அப்புறம் சம்பளம் அதுக்குத்தான் சரியா இருக்கும். ரெண்டு மூணு நாளைக்கு ஒருதடவை 12 ரூபாய்க்கு ஒரு கப் டீ வாங்கி நாலு பேரும் குடிச்சிப்போம்.” காலையில் ஃபில்டர் காஃபி குடிக்கா விட்டால் தலைவலி வந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஒரு டீ குடிக்கக் கூட இவ்வளவு கணக்கு போட வேண்டியிருக்கிறது.

“ஏதாவது அவசரத் தேவைன்னா கடன் எல்லாம் வாங்குவீங்களா”

“நம்ம நம்பி யார்ங்க கடன் கொடுப்பாங்க. அப்படியே கொடுத்தாலும் வாங்க மாட்டேன். கட்ட முடியலைன்னா வீட்டுக்கு முன்ன நின்னு சத்தம் போடுவான். அதனால, காசு இருந்தா சாப்பிடுவோம், இல்லைன்னா பட்டினியா கெடப்போம்னு முடிவு பண்ணிட்டேன்”.

“வேற எப்படித்தான் சமாளிப்பீங்க”

“எங்க வீட்டம்மா நாலைஞ்சு வீடுகள்ல வேலை செய்ய போய்கிட்டு இருந்தாங்க, இப்ப அவங்களுக்கு முடியாம போயிடுச்சி. ரெத்த அழுத்தமாம். அதனால அவங்க வேலைக்கு போறதில்ல.”

“ரேசன் கார்டு எல்லாம் வச்சிருக்கீங்களா?”

“அதெல்லாம் பக்காவா இருக்குங்க, ரேசன்ல  பச்சரிசி 5 கிலோ, புழுங்கலரிசி 5 கிலோ கொடுப்பாங்க. இலவச டிவி, மிக்சி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் கூட கொடுத்திருக்காங்க”

“தேர்தல்ல ஓட்டு போடுவீங்களா?

“ஆமா, கண்டிப்பா போட்டுருவேன். நம்ம தெருவுல ஒரு கவுன்சிலர் இருக்கான். அவன்தான் ஒவ்வொரு தேர்தல்லையும் யாருக்கு ஓட்டு போடணும்னு சொல்லுவான். உள்ளதை சொல்லணும், போன எலக்சனுக்கு 100 ரூபா வீட்டுக்கே வந்து கொடுத்துட்டான்”. நடுத்தர வர்க்கம் மெச்சிக் கொள்ளும் ‘ஜனநாயகம்’ கொடுத்த ஓட்டுரிமை இவருக்கு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, சில நூறு ரூபாய் கொடுத்து அந்த ஒரு நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிட வழி செய்கிறது.

“கறி, மீன் எல்லாம் எப்பவாவது வாங்குவீங்களா?”

“சம்பளம் வாங்குன அண்ணைக்கு மட்டும் கொஞ்சம் மாட்டுக்கறி வாங்கி சமைப்போம். அவ்வளவுதான்”.

“உங்க பொண்ணுக்கு ஊர்ல போய் கல்யாணம் செய்து வைப்பீங்களா? சென்னையிலா?”

“சாப்பாட்டுக்கே வழியில்லாத நெலமைல, பொண்ணுக்கு கல்யாணம் செய்யறத பத்தியெல்லாம் யோசிக்கவே இல்ல சார்”.

ஆளும் கட்சி யூனியன் ஆட்கள் ஜெயா பிறந்த நாளுக்காக பேனர் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவரிடம் அது பற்றி கேட்டோம்.

“அம்மா பொறந்த நாள்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி எல்லாரையும் ரத்தம் கொடுக்க . கூட்டிட்டு போனாங்க. நானும் போனேன். ஆனா, என் ரத்தத்தில சத்து இல்லைன்னு ரத்தம் எடுக்கல.”

தூரத்தில் செக்யூரிட்டி வருவதைப் பார்த்ததும் “என்னடா பேசிக்கிட்டு இருக்கேன்னு மிரட்டுவான் சார்” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்து போய் விட்டார்.
____________
ஆந்திராவில் ரெட்டிகளின் கொடுங்கோன்மை. தப்பி பிழைக்க வந்த சென்னையில் அரசு – அதிகார வர்க்கம் – தனியார் ஒப்பந்ததாரர்களின் ஒடுக்குமுறை. பேருந்து கழுவும் வேலையில் நுரையீரலுக்கு அறுவை சிகிச்சை. பிறகு 20 கழிப்பறைகள். 4000 ரூபாய் சம்பளம். கால் வயிற்றுக் கஞ்சி. தொழுவதற்கு என்றைக்காவது அருள் கொடுக்கும் கர்த்தர். ஊரிலும் வீட்டிலும் பிரிந்து கிடக்கும் குடும்பம். எங்கும் எப்போதும் பேச முடியாத அடிமை வாழ்வு. இன்னும் எத்தனை நாள் இவரை அந்த உடம்பு சுமந்து செல்லும்?

ஊழலிலும், ஒடுக்குமுறையிலும் வயிறு வளர்க்கும் அதிகார வர்க்கம் தனது சிறுநீரை கழித்து விட்டு அதனை கழுவுவதற்கு வைத்திருக்கும் ஒரு அடிமையின் கதை இது. அவருடைய கதை மட்டுமல்ல. நாடெங்கும் நாடோடிகளாய் சுற்றிவரும் உழைக்கும் மக்களின் கதைகளும் ஏறக்குறைய இதுதான். இந்தியாவும் அதனுடைய ஜனநாயகமும் அருளியிருக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

20/20 கிரிக்கெட்டிலும், பேஸ்புக் லைக்கிலும், தேர்தல் அரட்டையிலும் இன்பகரமாக பொழுதை கழிப்பவர்கள் இந்த இத்துப்போன ஒரு கழிப்பறைத் தொழிலாளியின் வாழ்க்கைக்கு என்ன சொல்வார்கள்?

–    வினவு செய்தியாளர்கள்

[பெயரும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளன]

 1. உங்கள் பதிவு மிகவும் மனதைப் பாதித்தது. இவர்களைப்போனறவர்களுக்கு என்று விடிவுகாலம் தோன்றும்?

 2. துப்புரவுத் தொழிலாளர்கள் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியது. குறிப்பிட்ட சில சாதியினரை மட்டும்தான் இந்தத் தொழிலுக்குப் பயன்படுத்துகின்றனர் என்று படித்திருக்கிறேன். கல்வி, சுகாதாரம், உணவு முதலியவை இவர்களுக்கு சரியாக கிடைப்பதில்லை. வேறு தொழிலுக்கும் இவர்களை யாரும் சேர்த்துக்கொள்வதில்லை.

  இவர்களுக்கும் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமைகள் கிடைத்திட, தொழில் ரீதியான சாதி தீண்டாமை ஒழிந்திட, இவர்கள் குடும்பங்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையை அடைந்திட வினவு முன்வைக்கும் மாற்று தீர்வுகள் என்ன?

 3. Felt very bad and sad.

  1.The system allows somebody to hold the salary
  2.Govt keeps them as a contractor with no sick leave for a job any one will get sick easily

  //“ஞாயித்துக் கெளம லீவு எடுத்தா சம்பளம் கட்டாயிரும். தெனமும் வேலை செஞ்சாத்தான 4,000 ரூபா வரும்//
  3.Not sure if our Govt has minimum wage concept. he is working 12*30 and paid Rs4000 and that is Rs 11/hr. And for a contractor, sick/casual leave cost should be included

  4.பகல்ல கடையில ஒரு டீ குடிச்சிட்டு சமாளிச்சிடுவேன். சாயங்காலம் வீட்டில போயி சாப்பிடுவேன்”.
  got tears in my eyes

 4. ,,,,,,,,தலீத் தேசம்,,,,,,, அஸ்லம் கான்…

  இந்தியாவின் பெயரை “தலீத் தேசம்” என மாற்ற வேண்டும். வந்தேரி ஆரியர்கள் வரலாற்றை பொய்யாக புனைந்து இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயலும் போது, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை, அதிகார விடுதலை, தீண்டாமையிலிருந்து விடுதலை, என எதிலுமே விடுதலை கிடைக்கப் பெறாமல், அவமான வலிகளை ஏந்தி தாம் தாழ்ந்தவர்தானோ என எண்ணும் அளவுக்கு அடக்குமுறைக்கு உள்ளான இம் மண்ணின் பூர்வ குடிகளான தலித்துக்களின் பெயரில் இந்தியாவை “தலீத் தேசம்”… அல்லது “தலீத்தியா” என மாற்ற வேண்டும்,

  ::::” பீ அள்ள பிறந்தவன் அல்ல! பார் ஆள பிறந்தவன் என்பதை காட்ட தலீத்துக்கு முடி சூட்டுவோம்!!!! அஸ்லம் கான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க