Tuesday, June 28, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் ஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் துட்டுக்கு வேட்டு ! புஜதொமு அதிரடி !

ஓட்டுக்குத் துட்டு கொடுத்தால் துட்டுக்கு வேட்டு ! புஜதொமு அதிரடி !

-

ஓட்டுக்குத் துட்டு! ஆனால், துட்டுக்குவேட்டு!
கதிகலங்கிப்போயிருக்கும் ஓட்டுக்கட்சி சங்கங்கள்! கலங்கடித்துக்கொண்டிருக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

டப்பாறையை முழுங்கிய களவாணிகளைப் போல முழிக்கிறார்கள். யார்? ஒருபுறம் ஒட்டுக்கட்சித் தொழிற்சங்க புரோக்கர்கள்; மறுபுறம் ஆலையின் பொதுமேலாளர் (ஜி.எம்). தேசிய பஞ்சாலைக் கழகத்தின் சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல்தேதி அறிவிக்கப்பட்ட போதே சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலிலுள்ள காளீஸ்வரர் ஆலையைப் பொறுத்தவரையில் கோவை மண்டலப் பஞ்சாலைச் சங்கத் (கோ.ம.ப.ச)திற்கு சென்ற முறையை விட, ஓரளவு அதிகம் வாக்குகள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. அதற்குக் காரணம், தொடர்ச்சியாகப் பல செய்திகளை ஆலைத் தொழிலாளிகளுக்கு கோ.ம.ப.ச கொடுத்துக் கொண்டிருந்தது. இருப்பினும் ஓட்டுக்கட்சிப் புரோக்கர் சங்கங்கள் கோ.ம.ப.ச வெற்றிபெற்று விடக்கூடாது என்பதில் மறைமுகக் கூட்டணி வைத்திருந்ததால், நாம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருந்தது.

இந்நிலையில்தான் வராது வந்த மாமணி போல வந்தார், ஆலையின் பொதுமேலாளர் (ஜி.எம்) திருவாளர் வி. சிவசாம்ராஜ். நாமிருக்கப் பயமேன் என்றார். அப்படி நமக்கு அருள்பாலித்து அவர் செய்த முதல்வேலை கோ.ம.ப.சவின் உறுப்பினர் தோழர் மருதுபாண்டியனை வேலைக்கு வரவிடாமல் செய்தது. சில தவிர்க்கமுடியாத சொந்தக் காரணங்களினால் சிலநாட்கள் வேலைக்குவர முடியாமலிருந்த தோழர் மருதுபாண்டியன் பொதுவேலைநிறுத்தம் முடிந்த பிறகு வேலைக்கு வருகிறார். அவரை வேலைக்கு வரவிடாமல் தடுக்கிறார் ஜி.எம்.

வேலைக்கு வரமுடியாத சூழ்நிலைகளில் ஒரு தொழிலாளி விடுப்புக் கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால், விடுப்புக் கடிதம் கொடுத்தால் அதை வாங்கிக்கொண்டு வருகைப் பதிவேட்டில் விடுமுறை எனப்பதிய வேண்டும் என்பதற்காக அக்கறையோடு கடிதத்தையே வாங்க நிர்வாகம் மறுத்துவிடும். விடுப்பு எடுக்கவேண்டிய அவசரத்தில் இருக்கும் தொழிலாளியும் ஆப்சென்ட் போட்டால் போடட்டும் எனப் போய்விடுவார். பெரும்பாலான ஆலைகளின் நிலவரம் இதுதான்.

பலமுறை நாளைக்குவா! நாளைக்குவா! என தோழர் மருதுபாண்டியனை இழுத்தடித்து கடைசியில் உனக்கு வேலை இல்லை என்கிறார் ஜி.எம்.

தொழிலாளிகளை நேரடியாகச் சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டிய வேலை நமக்கிருந்த நிலையில் ஜி.எம் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் எனப் பார்த்தபோதுதான். அவருக்குப் பின்னால், ஓட்டுக்கட்சிப் புரோக்கர்கள் இருப்பதை அறியமுடிந்தது. ஜி.எம்மை இனிமேலும் நாம் விட்டுவைக்க முடியாது என்பதால் அவரைப் பற்றிய விவரங்களை தொழிலாளிகளிடம் சேகரித்தோம். பி.ஆர்.பி வெட்டித்தள்ளிய கிரானைட் கற்களைப் போல மலைமலையாய்க் குவிந்தன செய்திகள். அவ்வளவும் புளுத்துநாறிப்போன செய்திகள். ஒருபுறம் அவரது லீலைகள்; மறுபுறம் அவரது ஊழல்கள். அனைத்தும் ஒரு துண்டறிக்கையாக வெளியிடப்பட்டது. அது முதலில் காளையார்கோவிலிலும் பின்னர் ஆலைத்தொழிலாளிகளிடமும் வினியோகம் செய்யப்பட்டது.

இன்னல் வந்தால் சங்கை முழங்குகின்ற தொழிலாளரை, ஓட்டுக்கட்சிச் சங்கப் புரோக்கர்கள் தங்களது அதிகார பலத்தால் கோழையாக, மெளனியாக, பரிதாபத்திற்குரியவராக மாற்றி வைத்துள்ளனர். இவர்கள் பழகிக்கொடுத்திருந்த பயமானது துண்டறிக்கையைக் கண்டதும் பறந்தோடியது. துண்டறிக்கை தங்களது சொந்தக்குரலில் ஒலிப்பதைத் தொழிலாளர் கேட்டனர். துண்டறிக்கையைக் கையில் வைத்துக் கொண்டு தாங்கள் சார்ந்த சங்கத்திடம் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். பெண் தொழிலாளிகள் காரித்துப்பினர். அவர்களால் பதில் சொல்லமுடியவில்லை. எங்களது வாக்குகள் அனைத்தும் 11-க்குத்தான் என தொழிலாளிகள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தனர். புரோக்கர்களை பயமும் பீதியும் ஆட்டி படைத்தது. ஜி.எம்மிற்கும் பேதியானது.

இந்நிலையில் மறுதேதி பின்னர் குறிப்பிடப்படும் என்று தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திட்டமிட்டபடி,  28/03/2014 அன்று ஆலைவாயில் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டம் நேரடியாக ஜி.எம் சிவசாம்ராஜ்ஜை தோலுரிக்கும் கூட்டமாக நடந்தது.

கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார், புஜதொமு தோழர் சரவணன். ஆலையில் ஜி.எம் நடத்தும் அட்டகாசங்களை அவர் அம்பலப்படுத்தினார். அதைத்தொடர்ந்து பேசிய தோழர் நாகராசன், ஆலையில் பெண்கள் படும் பாட்டினைச் சுட்டிகாட்டி, ஜி.எம்மின் டவுசர் விரைவில் கழட்டப்படும் என்றார். அடுத்ததாகப் பேசிய தோழர் குருசாமிமயில்வாகனன், என்.டி.சி யின் ஊழல் வரலாற்றையும், மற்றும் தற்போது ஊகவணிகத்தில் பஞ்சு இணைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பேராபத்துக்களையும் அதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படப்போவது பற்றியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் ஓட்டுக்கட்சிகளின் துரோகங்களைப் பற்றியும், பயப்படுவது தொழிலாளி வர்க்கத்தின் குணமல்ல அது முதலாளி வர்க்கத்தின் குணம் என்றுகூறி ஜி.எம் மீதான உங்களது எதிர்ப்பை 11-க்கு வாக்களித்து நிரூபியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

ஷிப்ட் முடிந்து வந்த தொழிலாளர்கள் தோழர்களின் உரையினைக் கவனமாகக் கேட்டார்கள். ஒரு அ.தி.மு.க சங்கத் தொழிலாளி “மற்ற சங்கங்களில் நிர்வாகிகளாக இருப்பவர்களின் ஓட்டுக்களைத் தவிர மற்ற தொழிலாளர்கள் ஓட்டு அனைத்தும் உங்களுக்குத்தான் இதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம்”, என்று சொன்னார்.

காசு, சேலை, பால்பாக்கெட், சத்தியம் போன்றவைகளைப் பயன்படுத்திப் பார்த்த ஓட்டுக்கட்சிச் சங்கப் புரோக்கர்கள் அவைகள் செல்லுபடியாகாமல் போய்விட்டன என்கிற காரணத்தால், தேர்தலை நடத்தாமல் தப்பித்துவிடலாம் என தன் பணக்கரத்தை சென்னை உயர்நீதிமன்றம் வரை நீட்டியிருக்கிறது. ஓட்டுக்கட்சிச் சங்கப் புரோக்கர்களின் நிர்வாகிகளில் பலர் ஆலை முதலாளிகளாக இருப்பதால், கோவை மாவட்டத்திலிருக்கும் ஏனைய தனியார்ஆலை முதலாளிகளோடு சேர்ந்து கொண்டு இந்த வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால், தொழிலாளர் இப்போது தெளிவடைந்து விட்டனர். தேர்தல் எப்போது நடந்தாலும் இதே தெளிவுடனேயே அவர்கள் இருப்பர். காரணம், இந்தத் தெளிவு புஜதொமு உண்டாக்கியிருக்கும் தெளிவு. இது ஜி.எம்மையும் தெளியவைக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:
புதிய ஜனநாயகம் செய்தியாளர், சிவகங்கை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க