privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்இயற்கையை சூறையாடும் மாஃபியாக்களை காப்பது எந்த ஜனநாயகம் ?

இயற்கையை சூறையாடும் மாஃபியாக்களை காப்பது எந்த ஜனநாயகம் ?

-

நாட்டை காப்பாற்றுகிறேன் என்று எல்லா கட்சிகளும் ஏப்பம் விடும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலால் ஒரு புல்லைக் கூட காப்பாற்ற முடியாது. இது புல்லுருவிகளின் பிறப்பிடம்! பூமிக்கே பாரம்! இயற்கைக்கே எதிரி!

மக்களின் அடிப்படைத் தேவைகளையும், மக்களுக்கான அடிப்படை சேவைகளையும் காசாக்கி உழைக்கும் மக்களை  அழிக்கின்ற வேலையை மட்டும் போலி ஜனநாயகத்தின் புதல்வர்கள் செய்வதில்லை.

சுற்றுச்சூழல் பேரழிவு
முதலாளித்துவம் நிகழ்த்தி வரும் சுற்றுச்சூழல் பேரழிவு

இதைவிடக் கொடூரமாக மக்களின் வாழ்வாதாரங்களான நிலம், வனம், மலை, கடல், காற்று என அனைத்தையும் அழித்து, தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் இவர்கள் இயற்பகை கிரிமினல்கள்.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நாட்டை முன்னேற்றுகிறேன் என்று பஞ்சபெளதீகங்களையும் சீரழித்து நாசமாக்குவதுதான் அரசின் ‘வளர்ச்சிக்’ கொள்கை.

இயற்கையின் கருவறையையே சுரண்டும் இந்த கயவர்கள் அரசாள ஓட்டு ஒரு கேடா? தேர்தல் ஒரு கேடா?

அய்ந்தைந்து ஆண்டுகளாய் மாறி, மாறி வரும் இந்தப் பாவிகளால் நமது அய்வகை நிலத்தின் அடையாளமே மாறிவிட்டது!

  • மருதம் என்பது நிலமும், நிலம் சார்ந்த மாஃபியாக்களும்,
  • நெய்தல் என்பது கடலும், கடல் சார்ந்த மாஃபியாக்களும்,
  • முல்லை என்பது காடும், காடு சார்ந்த மாஃபியாக்களும்,
  • குறிஞ்சி என்பது மலையும், மலை சார்ந்த மாஃபியாக்களும்
  • பாலை என்பது நகரமும், நகரம் சார்ந்த பன்னாட்டுக்  கம்பெனிகளும்

என மொத்த பூமியும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொடுங்கரத்தால் குதறப்படுகிறது.

இதற்கு காவலிருக்கும் சதிகாரப் படைகளான அரசியல் கட்சிகள், அதிகாரிகள், நீதிமன்றங்கள், பத்திரிகை, ஊடகங்கள், என்ற செட்டப்பை மீண்டும் நம்மீது திணிக்கத்தான் தேர்தல், வெங்காயம் என்ற இந்த கெட்அப்!

நாய்க்கு சோறு வைப்பதனாலேயே நாம் அதற்கு எஜமான் என்று நினைத்துக் கொள்வது போல, நாம் ஓட்டுப் போடுவதாலேயே இவர்களுக்கு எஜமான் என்று நினைத்துக் கொள்வது சரியா?

முதலாளித்துவம்
முதலாளித்துவம்

நாம் போடும் ஒரு ஓட்டு அம்பானிக்கு ஒரு எண்ணெய் வயலாக மாறி நம் சூழலை அழிக்கிறது!
நாம் போடும் ஒரு ஓட்டு டாடாவுக்கு கார் தொழிற்சாலையாகி நம் வயலை அழிக்கிறது!
நாம் போடும் ஒரு ஓட்டு  ஜிண்டாலுக்கு கவுந்தி வேடியப்பன் மலையின் கனிமங்களாகி ஊரையே அழிக்கிறது.
கேக்குறப்ப கொடுக்காம இருக்க முடியுமா? என்று நாம் தருகிற ஒரு ஓட்டு கோக், பெப்சிக்கு தாமிரவருணி ஆறாக தாரைவார்க்கப்படுகிறது!

எனவே நமது வாழ்வாதாரங்களை அழிக்கும் இந்தப் பாதகர்களைத் தேர்ந்தெடுத்து இவர்களை தேர்தலுக்குப் பிறகு தட்டிக் கேட்டு தடுக்கவும் முடியாத இந்த வாக்குரிமை செத்தவன் கையில் வெத்தல பாக்குதான்!

எனவே நமது பூமியையே கருக்கி காசாக்கும் இந்த களவாணிகளுக்கு களம் அமைக்கும் போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதுதான் இயற்கையான நியதி!

எத்தனை ஆண்டு மழைவளத்தை தனது ஈர நெஞ்சில் சேமித்து வைத்திருக்கிறது நிலம். அதை தண்ணீர் வியாபாரத்திற்காக ஒரு நிமிடத்தில் உறிஞ்சி காசாக்கி விடுகிறான் முதலாளி. எந்த வரையறையும் இன்றி தொடர்ந்து ஆழ்துளை கருவிகள் மூலம் மண்ணகத்து பனிக்குடத்தையே உடைத்து நாசமாக்கி அந்தப் பகுதியையே பாலையாக்கிவிட்டு, வேறு இடத்துக்கு நீர்க்கொலை புரி்ய கிளம்பிவிடுகிறான்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற கார்ப்பரேட் கொள்கையின் படியே இந்த கொலையும், கொள்ளையும் நடக்கிறது. நம் தாயின் மார்பைக் குதறும் இந்த தனியார்மய குரூரத்தை தடுக்க வக்கில்லாமல், இதையே வளர்ச்சியாகத் திணிக்கும் இந்த போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்பதுதான் மண்ணின் மைந்தர்களான நம் கடமை!

வனங்கள்
வனங்களின் அடர்த்தியான மரங்களின் இதயங்கள் கருக்கப்படுகின்றன.

மலைகள் மற்றும் காடுகளில் தாதுக்கள், கிரானைட், கனிமங்கள் என பல கோடிகளில் லாபம் பார்க்க மலையரசியின் மார்பகங்கள் அறுக்கப்படுகின்றன.
வனங்களின் அடர்த்தியான மரங்களின் இதயங்கள் கருக்கப்படுகின்றன.

சுள்ளி பொறுக்குபவர்களால் வனத்திற்கு ஆபத்து என மக்களை வாழ்விடங்களை விட்டு விரட்டி விட்டு, அள்ளிக் கொடுக்கிறார்கள், பன்னாட்டு கம்பெனிகளுக்கு.

அவன், பல்லாண்டு காலம் பல்லுயிர் பெருக்கத்திற்கான சூழலைப் பேணிய காடுகள், மலைகளை ஈவு இரக்கமின்றி அழித்து, சுற்றுச்சூழலை அழித்து மழையின்றி பருவநிலை மாறுபாட்டிற்கே காரணமாகும் அளவுக்கு இயற்கையை தனிநபர் லாபத்திற்காக கொல்லுகிறான்.

தரைமட்டமாகிய நிலையிலும் தன் முயற்சியில் ஆறுகள் காத்து வைத்திருக்கும் ஊற்றுக் கண்களையே குருடாக்கும் அளவுக்கு மணலை ஒட்டச் சுரண்டுகிறார்கள் மணல் மாஃபியாக்கள்.

இவர்கள்தான் எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் புரவலர்கள், உள்ளூர் அரசியல் ஆதிக்க சக்திகள்.

நமது ஆற்று வளத்தை கொள்ளையிடும் இந்த மண்ணின் எதிரிகளை மறுகாலனியாக்கத்திற்கான இந்தத் தேர்தல் பாதையால் தடுக்க முடியுமா? இவர்கள் இன்னும் தீவிரமாக இயற்கையை வேட்டையாடத்தான் ஓட்டு வேட்டையே நடக்கிறது.

மழைபெய்து, ஆற்றில் நீர் பெருகி, நிலத்தடி நீர் பெருகி, கரைகள் செழித்தால்தான், வயல் வெளி பச்சை விரியும்,
அது சார்ந்த பூச்சிகள், மகரந்த சேர்க்கைகளுக்கு உதவும், மலர்களின் தாதுக்கள் தேன் சுரக்கும்,
பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், கோழிகள், மாடுகள் என பலவான உயிரியினச் சூழலின் உலகமும் சமமாகப் பேணப்படும்.

சுற்றுச் சூழல்
முதலாளித்துவ லாபவெறி சீரழிக்கும் சுற்றுச் சூழல்.

காடுகள் செழித்தால்தான் காட்டுயிரிகளின் சமத்தன்மை பேணப்பட்டு, இயற்கையின் உயிரியியல் சங்கிலி அறுபடாமல் மனிதன் வரைக்கும் வாழ்வு தரும்.

இயற்கை அழிந்தால் பூச்சி மட்டுமல்ல, மனிதனுக்கும் வாழ்வாதாரம் போய் அழிவுதான்.

இயற்கைக்கு பாதிப்பு தந்தால் அது பதிலுக்கு சுனாமியாக, நில அதிர்ச்சியாக, பெருவெடிப்பு மழையாக தாக்கி பழைய நிலைக்கு தன்னை நிலை நிறுத்த முயலும். மனிதன் நாம்தான் தாங்கமுடியாமல் அழிய நேரிடும், எனவே நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ளும் போராட்டம் என்பதே, இயற்கையை காப்பாற்றும் போராட்டத்துடன் இணைந்த ஒன்று.

இந்த வாழ்வினச் சூழலுக்கு வேட்டு வைக்கும் ஓட்டெதற்கு? இதை எதிர்த்து போராடுவதுதான் சரியான பாதை, இந்த உரிமையை மறுக்கும் போலி ஜனநாயகத்தை தூக்கி எறிவதுதான்சரி!

பூமியில் தன்னால் ஆன அளவு ஈரப்பதத்தை தக்க வைத்து மழைபொழிவை வரவழைக்கும் பசுமையான மரங்கள், மணல் துளைகள், நீரைத் தேக்கி வைத்து நிலத்தடி பரப்பும் மலைக்குன்றுகள் அனைத்தையும் அழித்து நாட்டை சுடுகாடாக்கும்இந்த இழவு வியாபாரிகளை அடித்து விரட்டும் ஜனநாயகம்தான் இன்று நமக்குத் தேவை.

யானைகளும், சிறுத்தைகளும் கூட தங்களது வாழ்வுரிமை பறிக்கப்படும் போது அடுத்த தேர்தலுக்கு அடுத்தவனைத் தேர்ந்தெடுக்கலாம் என்று வாக்காளர் வரிசையில் வந்து ஓட்டுப்போட நினைப்பதில்லை, அடித்து நொறுக்கு என்று உயிராதார போராட்டத்தின் வழி குடியிருப்புகளை புகுந்து தாக்குகிறது. சமநிலையை குலைத்த சமூகத்தின் அவநிலையை குலைக்கிறது. அவைகளுக்கு ஐந்தறிவாம்! நமக்கு ஒன்று கூடவாம், எதுக்கு எது நடந்தாலும் பொறுத்துக்கொண்டு இந்த போலி ஜனநாயகத்தோடே மாரடிக்கவா?

எத்தனைச் செடிகள் நமது தீராத வியாதிக்கு மருந்தாகி இருக்கும்
எத்தனை பூச்சிகள் நமது சுற்றுச்சூழலை காத்திருக்கும்
எத்தனை தேனீக்கள் தேன் சேகரித்திருக்கும்
இருமி, இருமி இளைத்துப்போன காசநோய்க்கு எத்தனை ஆடுகள் ஈரலைத் தந்திருக்கும்
பிறந்த குழந்தைக்கு பால் இல்லாத நிலையில் கறந்த பாலை எத்தனை பசுக்கள் நமக்கு தந்திருக்கும்

இன்று ஒரு வாய் தண்ணீர் கேட்டு மாடு வந்து நம் வாசலில் நிற்கிறது.
ஒண்டிக்கொள்ள ஒரு இலை, தழை இன்றி வண்ணத்துப்பூச்சி தவிக்கிறது.
மண்ணோ நஞ்சாகி மண்புழு நெளிகிறது.
ஒரு ஈரச் சுவர் தேடி எறும்பு அலைகிறது.
இறங்கி இளைப்பாற ஒரு கிளையின்றி பறவை ஊரை வெறுக்கிறது…
புதிய மகவின் நுதலில் வழியும் புன் சிரிப்பை காணாத தூரத்தில் கூலி உழைப்பு நம்மை துரத்துகிறது.

இந்த மொத்த கொடூரத்திற்கும் காரணமான, இயற்கையே மன்னிக்காத இந்த போலி ஜனநாயகம் நமக்கு எதற்கு?

தேர்தலை புறக்கணிப்போம்! பூமியெங்கும் நீரை விநியோகம் செய்யும் புவிஈர்ப்பு விசை போல, பொதுவுடமை அடிப்படையில் இந்த பூமிக்கே, அரசியல் விசை பாய்ச்சும் ஒரு புதிய ஜனநாயக அரசமைக்க இயற்கையாகப் போராடுவோம்!

–  துரை.சண்முகம்