privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்சுயமரியாதை வேண்டுமா பெண்ணே ? ஓட்டு போடாதே !

சுயமரியாதை வேண்டுமா பெண்ணே ? ஓட்டு போடாதே !

-

த்துக் கூலிக்கு பெண்களை அழைத்து வந்து, பொட்டல் வெயிலில் வாட்டி வதக்கி அம்மா தனது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டரில் பறக்கிறார்.

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக பெண்களை கூட்டிக்கொண்டு தெருத்தெருவாய் டூ வீலரில் கிளம்பி விட்டார், கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்.

சுமங்கலித் திட்டம்
இளம் பெண்கள் கொத்தடிமையாக வேலை செய்ய சுமங்கலித் திட்டம்.
  • கோவை மாவட்டத்தின் பஞ்சாலைகளிலும், சிறு தொழில்களிலும் வரம்புமீறி சுரண்டலுக்கு உள்ளாகும் உழைக்கும் பெண்களை என்ன பிரச்சனை? என்று பத்தடி எழுந்து வந்து எட்டிப் பார்க்காத இந்த அம்மணி, பெண்களின் எந்த உரிமைகள் எப்படி போனால் என்ன ஓட்டுரிமைதான் ரொம்ப முக்கியம் என்று பெண்களையே விழிப்புணர்வு விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார். என்ன ஒரு கடமை உணர்வு?!
  • கோவை, திருப்பூர் பகுதிகளில் ஏற்றுமதி ஆயத்த ஆடை நிறுவனங்களில் கொத்தடிமைகளாக வேலைசெய்ய, தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து இளம் பெண்களை முப்பதாயிரம், நாற்பதாயிரத்துக்கு விலைபேசி “சுமங்கலித் திட்டம்” என்ற பெயரில் சிறைபிடித்து அடைத்து வைத்து ரத்தம் குடிக்கும் கொடுமைகளுக்கு எதிராக தனது வண்டியை ஸ்டார்ட் செய்யாத இந்த கலெக்டர் அம்மாதான் தேர்தல் கவுன்ட் டவுனுக்கு போஸ் கொடுக்கிறார்!

வேலைநேரம், வேலைநிரந்தரம், அரசாலேயே நிரணயிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம், இ.எஸ்.ஐ, என உழைக்கும் பெண்களுக்கான எந்த உரிமைக்காகவும் தெருவில் இறங்காத இந்த அதிகாரவர்க்கம், நமது ஓட்டுரிமைக்காக நாயாய் தெருவில் சுற்ற வேண்டிய அவசியம் என்ன?

முக்கியமாக, இந்த தேர்தல் போதை இறங்கி, மக்கள் சுயநினைவுக்கு வந்து சிந்திக்க ஆரம்பித்து விட்டால்? ஓட்டு போட்டு, போட்டு என்னத்தக் கண்டோம் என்று ‘ரூட்டு’ மாறிவிட்டால்? என்ற தொலைநோக்கிலான, சிந்தனை தான்! மக்களின் மீதான தங்களது அதிகாரத்தை மறுபடியும், மறுபடியும் நிறுவிக் கொள்ளத்தான் தாய்குலத்தை தேடி எல்லா அதிகாரவர்க்க பேய்க்குலமும், நமது உச்சி முடியை பிடித்து ஓட்டு போட தெருவில் இறங்கி ஆளைத்தூக்குகிறது.

பாலியல்-வன்முறை

  • பஸ்ஸில் தொடங்கி பணியிடம் வரை பெண்களுக்கு பாலியல் தொந்திரவு!
  • வேலைக்குப் போகும் பெண்கள் அவர்கள் நடவாளோ, ஐ.டி. ஆளோ பத்திரமாக வீடு வந்துசேர உத்திரவாதமில்லை!
  •  நகரத்து கம்பெனிகளில் ஒண்ணுக்குப் போகவும் ஒரு டோக்கன், ரெண்டுக்கு போக இன்னொரு டோக்கன் என்று அடக்குமுறை….

இப்படி, பொதுவான விசயங்களிலேயே பெண்களின் பாதுகாப்புக்கும், அடிப்படையான உயிர்வாழும் உரிமைக்கே உத்திரவாதம் இல்லாத இந்த ‘ஓட்டுரிமை’ யோடு, ஆணவம் பிடித்த அதிகாரவர்க்கத்தையும் பெண்கள் சேர்த்து புறக்கணிப்பதுதான் சரி!

அடித்தட்டு உழைக்கும் பெண்கள் அன்றாடம் தெருவில் இறங்கி போராடி குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூடச்சொல்கிறார்கள், பெண்களின் போராட்ட உணர்வை மதித்து சாராயக்கடைக்கு பூட்டு போடாத இந்த கும்பலுக்கு நாம் ஓட்டு போடவேண்டுமாம்!

பெண்களிடம் ஓட்டு வாங்குவதற்காக நான் வந்தால் மதுவை ஒழிப்பேன்! என்று சவடால் அடிக்கும் எல்லா கட்சிகளுமே தண்ணி பார்டிகள் தான்!

காலிக்குடங்களோடு எங்களை தெருவுக்கு தெரு அலைய விட்டு விட்டு வாக்கு பெட்டியை தூக்கி வந்து ஓட்டாய் கேட்கிறாய் என்று ஆளும் வர்க்க கும்பலைப் பார்த்து காறித்துப்ப வேண்டும்! இத்தனை முறை உனக்கு ஓட்டுப் போட்டு எனக்கு ஒரு குடம் தண்ணீருக்கு வழி உண்டா? குழாயடிச் சண்டையில் நம்மை தள்ளிய கும்பலை தேர்தல் புறக்கணிப்புச் சண்டையில் திட்டி விரட்டவேண்டும்.

போலி ஜனநாயகத்தின் வண்ட வாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற வேண்டும்!

வருசம் 365 நாள் வேலைக்கும் மூடு விழா நடத்தி விட்டு யாருக்கு வேண்டும் உன் நூறு நாள் வேலைத்திட்டம்?

  • விவசாயம், அதை ஒட்டிய கால் நடை வளர்ப்பு, கறவைமாடுகள், சிறு தொழில்கள் என பெண்களின் சிறுவாட்டு காசுக்கும், சுயமரியாதை உணர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்த சுய தொழில்களும் அழிந்து சூன்யமாகி விட்டது. உன் சுயஉதவிக் குழுவின் கடன் தான் பெண்களின் முன்னேற்றமா? முதலில் எங்க சுயதொழில்களை வாழவிடு! என்று வாக்குரிமை பேசும் அதிகார வர்க்கத்திடம் வாழ்வுரிமை கேட்டு, மூஞ்சியில் மொத்த வேண்டும் பெண்கள்!
  • கூலிக்கு பெண்களின் கிட்னிகள், க ரு முட்டை முதலான அங்கங்களை திருடிவிட்டு , தாலிக்குத் தங்கம் திட்டமாம்!
  • குடும்பத்தின் கருவான தொழிலையே கலைத்து விட்டு கர்ப்பிணிக்கு உதவித்தொகையாம்!
  • பெண்களின் நலவாழ்வுக்கான அனைத்தையும் பிடுங்கி தனியார் முதலாளிகளின் கையில் தந்து காசாக்கிவிட்டு, போடுங்கம்மா ஓட்டு! என்பவனை தெருவில் நாலு போட வேண்டியதுதான்!

ஓட்டுப்போடுவது குடும்பக்கடமை என்பது போல பெண்களிடம் நச்சரிக்கும் இந்தத் தேர்தலால் பெண்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன ?

இருபத்திநாலாயிரம் கோடி வரிபாக்கி வைத்திருக்கிறாயே, அதை கட்டுடா என்றவுடன், இவர்கள் அழைத்து வந்த நோக்கியா இருபதாயிரம் தொழிலாளர்களை (நோக்கியா மற்றும் அதன் துணைத் தொழில் நிறுவனங்கள்), பெண்களையும் வேலையிலிருந்து விரட்டி, தெருவில் நிறுத்தி விடுவேன் என்று மிரட்டுகிறான்!

நோக்கியா
நோக்கியா பயங்கரவாதத்தில் சிக்கிய பெண் தொழிலாளர்கள்.

பல நூறு பெண்களுக்கும் நேர்முக, மறைமுக வேலைவாய்ப்பு என்றும், வளர்ச்சித் திட்டம் என்றும் நோக்கியாவை கொண்டு வந்தது நான்தான், நான்தான் என்று போட்டிபோட்டு பெருமைக்கு சொந்தம் கொண்டாடிய கட்சிகளும், அதிகாரிகளும், இப்போது எங்கே? வரிபாக்கியை முதலாளியிடமிருந்து வசூலிக்க வக்குண்டா உன் தேர்தலுக்கு? வஞ்சிக்கப்படும் தொழிலாளிப் பெண்களின் துயர் துடைக்க உதவுமா? ஓட்டு சீட்டு ஜனநாயகம்?

ஓட்டுக்கு காசு வாங்காதீர்கள், ஓட்டு ஜனநாயக் கடமை என்று எங்களிடம் வந்து உபதேசிக்கும் நாய்களா? நோக்கியாவிடம் நீங்கள் வாங்கிய காசு எவ்வளவு? அதே நோக்கியாவின் துணை நிறுவனம் பாக்ஸ்கானில் அம்பிகா என்ற தொழிலாளி, கட்டிங் மிஷினில் மாட்டிக் கொண்டபோது, மிஷினை உடைத்தால் பொருள் நஷ்டம், என்று அந்தப் பெண்ணை தெரிந்தே துடிக்க துடிக்க கழுத்தை வெட்டிய பன்னாட்டு முதலாளிகளுக்கு காவலிருக்கும் ஏவல் நாய்களுக்கு ஏன் பெண்கள் ஓட்டு போட வேண்டும்! நம்மைப் போலவே கனவுகளுடன் வாழ்ந்த அம்பிகாவைக் கொன்ற கொலைகார ஜனநாயகத்துக்கா ஓட்டு? இந்தப்போலி ஜனநாயகத்தை பெண்களின் கைகளாலேயே, அடக்கம் செய்வதுதான் அம்பிகாவுக்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலி!

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது நம் கடமை அல்லவா? என்று பொறுப்பாக வந்து நம்மிடம் ஓட்டு கேட்கும் இந்த அரசு, அரசியல்கட்சிகள், அதிகாரவர்க்க சிலந்திக்கூட்டம், என்றைக்காவது பெண்களை காப்பாற்றும் பொறுப்பை நிறைவேற்றியதுண்டா?

  • சென்னை ஐ.டி. கம்பெனியில் பணிமுடிந்து திரும்பிய பெண் உமாமகேஸ்வரி பாலியல் வல்லுறவு வன்முறையால் படுகொலை செய்யப்பட்டார். பணியிடம் உள்ள இடத்திற்கான பாதுகாப்பை கூட உத்திரவாதம் செய்வது என் வேலையல்ல, என்று திமிராக நடந்துகொண்டான் டாடா கம்பெனி! பெண்கள் இரவு ஷிப்ட்டுகளில் பணிக்கு அமர்த்தப்படக் கூடாது, அமர்த்தினால் உரிய பாதுகாப்புகள் செய்யப்படவேண்டும் என்று சட்டமிருந்தாலும், அது பன்னாட்டு மூலதனத்துக்கும், ஐ.டி. போன்ற நாட்டை முன்னேற்ற வந்த ‘கம்பெனிகளும் பொருந்தாது, எங்களை கட்டுபடுத்த முடியாது என்கிறார்கள் திமிராக’! உள்ளே வந்தால் நான் பெண் ஊழியரின் உழைப்பை சுரண்டுவேன்,  வெளியே போனால் வேறு ஒருவன் பாலியல் ரீதியாக சுரண்டுவான், நான் கண்டு கொள்ளமாட்டேன், பெண்ணின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது? என்ற சமூக விரோத முதலாளிகளை வாழவைக்கும் இந்த குரூர ஜனநாயகத்துக்கு ஓட்டு ஒரு கேடா?
  • அமைப்பு சாரா வேலை என்ற பெயரில் கட்டிட வேலை, வீட்டு பணிப்பெண்கள், உணவு விடுதிகள், பெட்ரோல் பங்குகள், என பார்க்கும் இடமெங்கும் பெண்களின் கைத்தோல் குறைந்த கூலியிலும், அதிக பணி நேரத்திலும் உறிக்கப்படுகிறது, இதில் இந்த தேர்தல் மாற்றத்தைக் கொண்டு வருமா?
  • நூல் பிரித்து, நூல் பிரித்து பிள்ளைகளுக்கு பால் கொடுப்பதையே மறந்துபோன நெசவாளிப் பெண்ணை விலைவாசி உயர்வால் கடும் உழைப்புக்குள்ளாக்கும் கொடூரமான வாழ்க்கையை இந்த நாடாளுமன்றத் தேர்தல் மாற்றிவிடுமா?
  • கடல் சார்ந்த வளத்தை மீனவப் பெண்களின் கைகளிலிருந்து தட்டிப்பறிக்கும் தனியார்மய கார்ப்பரேட், கும்பலை இந்த தேர்தல் வந்து விரட்டிடுமா?
  • ஆபாசக் கலாச்சாரத்தை பரப்பி, இணையம், செல்போன், பத்திரிகைகள், டி.வி.சீரியல்கள், என பெண்களை இழிவுபடுத்தி காசு பார்க்கும் முதலாளிகளை உங்கள் ஓட்டால் தண்டிக்க முடியுமா?
  • சமூகத்தையே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நரகமாக்கி, மதவெறித் தாக்குதலில் பெண்களை முதல் பலியாக்கி பாலியல் வல்லுறவு செய்யும் காலிகளை, இந்த பாராளுமன்றத்தால் தண்டிக்க முடியுமா? பாராளுமன்றத்திலேயே செல்லில் ஆபாச படம் பார்க்கும் எம்.பி.க்களை தேர்ந்தெடுக்க த் தூ ஓட்டு ஒரு கேடா?

    பெண்கள் வாக்களித்தல்
    ஈவு இரக்கமின்றி பெண்களைச் சிதைக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்காக நம்மை துரத்தி வந்து கையை பிடித்து இழுக்கும் இந்த தேர்தலும் ஒரு ஈவ் டீசிங்தான்!
  • ஒவ்வொரு ஆதிக்கசாதி வெறியர்களும், சாதி மறுக்கும் காதலர்களை பிரித்து கொன்று, பெண்களை கூட்டு வன்புணர்ச்சி செய்வது வரை கட்டை பஞ்சாயத்து அராஜகம் செய்கிறார்கள். இந்த சமூக அநீதிகளை தேர்தல் பாதை தடுத்திடுமா?

பட்டவர்த்தனமாக பெண்கள் மீது கொடுமை இழைப்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ள ஆணாதிக்க, சாதி, மதவெறி அரசமைப்பிற்கான இந்த தேர்தலைப் புறக்கணிப்பதே சரி!

உரிமைகளை கேட்டு பெண்கள் சாலைக்கு வந்து போராடினால், போலீசை விட்டு அடித்து விரட்டும் அதிகாரவர்க்கம், ஓட்டுக்கு மட்டும் கொஞ்சம் வந்துட்டு போ? என்பது எவ்வளவு கொழுப்பு?

ஈவு இரக்கமின்றி பெண்களைச் சிதைக்கும் முதலாளிகளின் சுரண்டலுக்காக நம்மை துரத்தி வந்து கையை பிடித்து இழுக்கும் இந்த தேர்தலும் ஒரு ஈவ் டீசிங்தான்!

பெண்ணே போடாதே ஓட்டு! இனி புரட்சிதான் உன் ரூட்டு!

– துரை.சண்முகம்