privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விசிதம்பரத்தில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு - போராட்டத்தால் முறியடிப்பு

சிதம்பரத்தில் தேர்வு எழுத அனுமதி மறுப்பு – போராட்டத்தால் முறியடிப்பு

-

kamaraj-school-protest-2சிதம்பரம் காமராஜ் மெட்ரிக்பள்ளி தாளாளரின் நடவடிக்கை காவல் துறையின் அடக்குமுறையை காட்டிலும் கொடூரமானது என்பதை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்து. தனியார் பள்ளி முதலாளிகள் தங்கள் லாபத்திற்காக எதையும் செய்வார்கள் என்பதற்கு சிறு உதாரணம்தான் காமராஜ் பள்ளி. கல்வி சேவை என்பதெல்லாம் டாஸ்மாக் சரக்குக்கு கொடுக்கும் இலவச ஊறுகாய் போன்றது.

8-4-14 அன்று நடந்த பொதுத் தேர்வில் சுமார் 650 மாணவர்களை தேர்வு எழுதாமல் தடுத்ததுடன் விளையாட்டு அரங்கில் அவர்களை தனியே அமர வைத்துள்ளனர். காரணம் என்ன? இவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டவில்லை என்பதுதான். இதற்காக நாம் கடந்த இரு வருடங்களாக போராடி வருகிறோம். பல்வேறு பெற்றோர்களும் இப்போராட்டத்தை ஆதரிப்பதால் இந்த தனியார் பள்ளி கொலை வெறியில் உள்ளது. தாளாளர் லட்சுமிகாந்தன், முதல்வர் சக்தி மேடம் ஆகியோர் “உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை எனவே அனுமதிக்க முடியாது” என திட்டவட்டமாக பெற்றோர்களிடம் தெரிவித்தனர். தனியே அமர வைக்கப்பட்ட மாணவர்களை சந்திக்கவும் அனுமதிக்கவில்லை.

200-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைமையில் பள்ளி வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். காலை 10-மணிக்கு தொடங்கி போராட்டம் இரவு 9-00 மணிக்கு முடிந்தது. பெற்றோர்கள் இட்ட முழக்கம் பொது மக்களையும் ஏனைய பெற்றோர்களை திரும்பி பார்க்க வைத்தது.

பள்ளிக்கு இரவு வந்த மாவட்ட முதன்மை கல்விதுறை அதிகாரி பெற்றோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பிறகு ”இன்று நடந்த தேர்வை மீண்டும் நடத்த வேண்டும். இன்று மாணவர்கள் பொது தேர்வு எழுத விட மறுத்ததற்கு பள்ளி நிர்வாகம் உரிய விளக்கத்தை 24 மணி நேரத்திற்குள் மெட்ரிக் இயக்கநருக்கு தெரிவிக்க வேணடும்” என அங்கேயே பள்ளி நிர்வாகத்திடம் உத்திரவை வழங்கியதுடன் நமது சங்கத்தினருக்கும் நகல் வழங்கினார். அதன்பிறகுதான் பள்ளியிலிருந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

பள்ளியில் போராட்டம் தொடங்கியவுடன் சிதம்பரம் காவல் ஆய்வாளர் முருகானந்தம் காவலர்களுடன் வந்தார். போராட்டம் நடத்திய பெற்றோர்களை பள்ளி வளாகத்திலிருந்து போக சொன்னார். “8-ம் வகுப்பு வரை அனைவரையும் கட்டாயம் பாஸ் போட்டு விடுவார்கள் கவலை வேண்டாம் குழந்தைகளை அழைத்து வீட்டுக்கு போங்கள்” என அறிவுரை சொன்னார். காவல் துறை அதிகாரி இவ்வளவு கேனத்தனமாக பேசுகிறாரே என்று பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் ஏளனமாக பார்த்தனர்.

டி.எஸ்.பி.ராஜாராம் வந்தார். “பெற்றோர்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள், நான் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமளவிற்கு தாளாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்” என பேசினார். மேலும், “பள்ளி தாளாளர் கூடுதல் கட்டணம் வசூலிக்க நீதியரசர் சிங்காரவேலு கட்டண கமிட்டியிடம் உத்திரவு பெற்றுள்ளார். நீங்கள் பள்ளி வளாகத்திலிருந்து கலைந்து செல்லுங்கள், துணை ஆட்சியர் அவர்களிடம் சென்று முறையிடுங்கள்” என நயவஞ்சகமாக அறிவுரை சொன்னார். பெற்றோர்கள், “எங்கள் வழக்கறிஞர் சொல்லாமல் நாங்கள் கலைய மாட்டோம்,எங்களை வேண்டுமானால் கைது செய்து கொள்ளுங்கள்” என பதிலளித்தனர்.

kamaraj-school-protest-1மனித உரிமை பாதுகாப்பு மைய மா.துணை செயலாளர் வழக்கறிஞர் செந்தில் காவல் துறையினரிடம் பேசினார்.  “நீங்கள் எப்படி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வீர்கள்? உங்கள் அதிகாரம் என்ன என்று உங்களுக்கும் எங்களுக்கும் நன்றாக தெரியும். சட்டம் ஒழுங்கு ஏற்படாமல் தடுப்பதே உங்கள் வேலை.பெற்றோர்கள் கல்வி துறை அதிகாரிகள் வந்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து கலைய மாட்டார்கள். மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுத்தது சரிதான் என கல்வி துறையினர் எழுதி கொடுக்கட்டும். நாங்கள் செல்கிறோம். அதுவரை காவல் துறை பாதுகாப்பு கொடுத்தால் மட்டும் போதுமானது. பெற்றோர்களை தாக்கியதற்கு தாளாளர் மீது நடவடிக்கை எடுக்காத நீங்களா இதற்கு நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள். தாளாளர் லட்சுமி காந்தன் உங்களை எல்லாம் மதிக்க மாட்டார்” என பேசினார். காவல் துறை அதிகாரிகள், “பழைய பிரச்சினை பற்றி பேசவேண்டாம். இன்றைய பிரச்சினை பற்றி மட்டும் பேசுங்கள்” என பதில் கூறிய திருப்தியில் அமைதியாக சென்றனர்.

தாசில்தார் வந்தார். டி.இ.ஓ வந்தார். பள்ளி நிர்வாகத்திடம் பேசினார்கள். துணை ஆட்சியர் அரவிந்தன் போனில் பேசினார். பள்ளி தாளாளர், “எனக்கு சிங்காரவேலு கமிட்டி பணம் கூட வாங்கி கொள்ளலாம் என உத்திரவு கொடுத்துள்ளது. பணம் கட்டாத யாரையும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது” என அனைவருக்கும் ஒரே பதிலை சொன்னார்.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்சங்கம், “தீர்வு ஏற்படும் வரை பள்ளி வளாகத்திலிருந்து வெளியேற முடியாது” என தெரிவித்து உறுதியாக இருந்தனர். வேறு வழியில்லாமல் கடலூர் மாவட்ட ஆட்சியர் சி.இ.ஓ.மற்றம் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அவர்களை மாலையில் அனுப்பி வைத்தார். கல்வி துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம், பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்து உண்மையை உறுதிசெய்து உத்திரவு வழங்கினர்.

இந்த போராட்டத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் முஜுபூர் ரகமான், பொருளாளர் சீனிவாசன் ஆகியோரும்  ரவிசந்திரன், ராம்குமார்,  பேராசிரியர்.இளங்கோ, வேல்முருகன், நடராசன், ஜோதி, சோழன், அன்வர்தீன், ரகீம் பாய், உட்பட நூற்றுக்கணக்கான  பெற்றோர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். லலிதா,ரூபா,மசூதா   மற்றும்  இஸ்லாமிய பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காமராஜ் பள்ளியின் கட்டண முறையின் பின்னணியை புரிந்து கொள்வதற்கு சில குறிப்புகளை தருகிறோம். ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட பெற்றோர்களிடம் பல மடங்கு வசூலித்த காமராஜ் பள்ளி நிர்வாகம் 2013-2014 ஆண்டுக்கான கல்வி கட்டணம் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டதுடன் பெற்றோர்கள் டி.டியாக அல்லது காசோலையாக அல்லது பணமாக எப்படி கொடுத்தாலும் வாங்கி கொள்கிறோம் என அறிவித்தது. இந்த நிலைக்கு காமராஜ் பள்ளி தாளாளர் வருவதற்கு மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் உறுதியான போராட்டம்தான் காரணம்.

ஆனால் பள்ளி தாளாளர் கூடுதல் கட்டணத்தையே அரசு கட்டணமாக வாங்கி கொண்டு வந்து விட்டார். இந்த கல்வி ஆண்டின் இறுதியில் ஜனவரி மாதம் பள்ளி தாளாளர் லட்சுமி காந்தன் பெற்றோர்களுக்கு அறிவிப்பு அனுப்பினார். “நீதியரசர் சிங்காரவேலு அவர்களிடம் கல்வி கட்டணம் போதவில்லை என்று முறையீடு செய்து அதில் 100 சதவீதம் உயர்த்தி கொடுத்துள்ளார். எனவே பெற்றோர்கள் உடனே பாக்கி தொகையை கட்டவேண்டும் இல்லை என்றால் மாணவர்கள் பெயரை வருகை பதிவேட்டிலிருந்து நீக்கிவிடுவேன்” என எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பினார். உயர்த்தப்பட்ட கட்டண உத்திரவை அறிவிப்பு பலகையில் போடவில்லை. பெற்றோர்களுக்கும் காட்டவில்லை. “உயர்நீதிமன்ற உத்திரவின்படி 15 சதவீதம் உயர்த்தி வாங்கிய பிறகு மீண்டும் இவ்வளவு உயர்வாக கல்வி கட்டணத்தை செலுத்த முடியாது. கட்டண நிர்ணயத்தில் முறைகேடு நடந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பள்ளி பெற்றோர்களின் கருத்தை அறிந்து நியாயமான அளவில் நிர்ணயிக்க படவேண்டும். 100 சதவீத கல்வி கட்டண உயர்வை ஏற்கமுடியாது” என பெற்றோர்கள் மறுத்தனர்.

“நேர்மையான திறமையான கல்வி துறை அதிகாரிகளை வைத்து விசாரணை நடத்திய பிறகே நாங்கள் உயர்த்தபட்ட கட்டணத்தை ஏற்பதா? என்பதை முடிவு செய்ய முடியும்” என பெற்றோர்கள் அனைத்து கல்வித் துறை அதிகாரிகளுக்கும் புகார்மனு அனுப்பியுள்ளனர். வழக்கம் போல் கல்வித் துறை எருமைமாட்டு மேல் தண்ணி தெளிச்சது போல் அமைதியாக இருக்கும், இருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம். புகார் மனு, வழக்கு, அதிகாரிகள் நடவடிக்கை வேண்டுமென்றால் பெற்றோர்கள் சமரசமின்றி கல்வி தனியார்மயத்திற்கு எதிராக போராடினால் மட்டுமே வெற்றிபெற முடியும். கல்விக் கட்டணம் குறைப்பு என சலுகை கேட்டு போராடினால் பெற்றோர்கள் அவமானபட வேண்டும் என்பதுதான் அனுபவம், வரலாறு.

தலைமை கல்வி அலுவலர் உத்தரவு
முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஏப்ரல் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தது. கமிட்டி உத்தரவு இல்லாமல் கட்டண நிர்ணயத்தை கேள்விகேட்க முடியாது என்றும் வழக்கை தள்ளுப்படி செய்யப் போவதாகவும் கூறியபோது,

  • கமிட்டி பெற்றோர் மாணவா் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் கட்டணம் நிர்ணயித்ததால் அதன் உத்தரவு நகல் எங்களுக்கு கிடைக்க வில்லை என்றும்,
  • 650 மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள், இடைக்காலமாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்றும்,
  • இந்திய அரசியலமைப்புச் சட்டம் 21-ன் கீழ் 14 வயது வரை கல்வி அளிப்பது அரசின் கடமை என்றும்
  • மேலும் கல்வி உரிமைச் சட்டம் பிரிவு 16 எக்காரணம் கொண்டும் 14 வயது வரை பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளதை எடுத்துக்கூறியும்,
  • அரசியலமைப்புச் சட்டத்தையும், கல்விக்கான சிறப்புச் சட்டத்தையும் நீதிமன்றமே அமுல்படுத்த தயாராக இல்லாத நீதிமன்றம் எதற்காக இருக்கிறது

என்று கேள்வி எழுப்பிய பிறகு வாய்மொழியாக முதன்மை கல்வி அலுவலா் உத்தரவை உடனடியாக நடைமுறை படுத்த உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம்
சிதம்பரம்.

வளர்ச்சியை கொண்டு வருவோம், அனைவருக்கும் கல்வியை கொடுப்போம் என அனைத்து ஓட்டுக் கட்சிகளும் வாய் கிழிய இந்த தேர்தல் பரப்புரையில் கத்தி வருகின்றன. ஆனால் இந்த வளர்ச்சி முதலாளிகளுக்கானது, கல்வி காசு உள்ளவனுக்கு மட்டுமே என்பதை இந்த பள்ளி நிரூபித்துள்ளது. ஆனால் மக்கள் போராட்டமே தீர்வு,தேர்தல் அரசியல் அல்ல என்பதை இந்த போராட்டம் நிரூபித்துள்ளது. கல்வி உரிமை வேண்டுவோர் போராட வேண்டிய பாதை இதுதான்.

– வினவு