privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்காங்கிரசு பாஜக கூட்டணியில் 1984 சீக்கிய படுகொலை

காங்கிரசு பாஜக கூட்டணியில் 1984 சீக்கிய படுகொலை

-

டைபெற்றுக் கொண்டிருக்கும் பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் ஊடே, பாஜக தனது இந்துமதவெறி பயங்கரவாதத்தை மறைக்க, பொய்களையும், புனையப்பட்ட புள்ளிவிவரங்களையும் அள்ளி வீசுகின்றது. ஊடகங்களில் பாஜக கோயாபல்ஸ்சுகள் மட்டையடியாக இந்த பொய்களை எட்டுக் கட்டையில் கத்துகிறார்கள்.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்
சீக்கியர்களுக்கு எதிரான ‘இந்துக்களின்’ தாக்குதல் கலவரம் (புது தில்லி – 1984)

மோடியின் இரத்தவெறி முகம் 2002 குஜராத் கலவரங்களில் அம்பலப்பட்டு நாறியதைக் குறித்து பேசும் எவரையும், “1984 சீக்கியப் படுகொலைகளை நடத்திய காங்கிரசு குண்டர்கள் பற்றி ஏன் பேச மறுக்கிறாய்” என்று எதிர் கேள்வி மூலம் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் சாமர்த்தியமாக திசைதிருப்புகிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உ.பியில் பிரச்சாரம் செய்த மோடி 84 சீக்கியப் படுகொலைகளில் காங்கிரசு கட்சிக்கு இருக்கும் பங்கை பற்றி ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். பிடிக்க வருபவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்கும் திருடன், அவனும் திருடனை பிடிக்க ஓடுவதாக போக்கு காட்டுவான். இதுவும் அப்படித்தான்.

மோடியைத் தொடர்ந்து பாரதிய ஜனதாவின் இணைய மற்றும் ஊடக பீரங்கிகள் குஜராத் படுகொலையைப் பற்றிய கேள்விகளுக்கு எதிர்வினையாக இதையே பயன்படுத்தி வருகின்றனர். பாரதிய ஜனதாவின் இந்த உத்தியை ‘அவள் மட்டும் என்ன பத்தினியா?’ என்று ஆணாதிக்க பொறுக்கிகள் பேசும் திமிர் பிடித்த வழக்காகவும் நாம் புரிந்து கொள்ளலாம்.

அது ஒரு பக்கம் இருக்க, காங்கிரசு நியாயப்படுத்த இயலாத காலிகளின் கும்பல் என்பதென்னவோ உண்மைதான்; ஆனால், கலவரங்களையே உண்டு செரித்து வளர்ந்து நிற்கும் இரத்த உண்ணியான ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடிக்கும் மேற்படி சவடாலின் யோக்கியதை என்ன? சீக்கியர்களை படுகொலை செய்த 84 கலவரங்களில் இவர்கள் என்ன அமைதி யாகமா நடத்தினார்கள்?

1970-களில் பஞ்சாபில் பணக்கார சீக்கிய விவசாயிகளுக்கும், இந்து முதலாளிகளுக்கும் இடையேயான பொருளாதார முரண்பாடு அரசியலிலும் பிரதிபலிக்கிறது. இரு மதத்தாரும் பஞ்சாபிகள்தான் என்றாலும் அகாலிதள் சீக்கியர்களிடையே செல்வாக்குடன் வளர்கிறது. அகாலிதளத்தை ஒடுக்க நினைத்த இந்திரா காந்தி பிந்தரன்வாலே தலைமையிலான தீவிரவாத குழுக்களை வளர்த்து விட்டார். பின்னர் பிந்தரன்வாலே இந்திரா காந்தியையே எதிர்க்கிறார். அதன் மூலம் சீக்கியர்களிடையே தான் ஒரு போராளியாக உருப்பெறலாம் என்று முனைகிறார். சீக்கியர்களின் மத அரசியலை பலர் பஞ்சாபி தேசிய இன போராட்டமாக தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் இது மதவாதமே அன்றி தேசிய இன போராட்டம் அல்ல.

சீக்கியர்களின் புனிதஸ்தலமான பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்த பிந்தரன்வாலே தலைமையிலான தீவிரவாதிகளை ஒடுக்க அரசு முனையாது என்று சீக்கியர்கள் நினைத்தார்கள். ஆனல் இறுதியில் இந்திராகாந்தி இராணுவத்தை அனுப்பி தாக்கினார். அதுதான் ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் என்று அழைக்கப்பட்டது. பொற்கோவிலுக்குள் இந்திய இராணுவம் நுழைந்த நிகழ்வை அன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொண்டாடினர். பொற்கோவிலுக்குள் இராணுவம் நுழைந்ததைத் தொடர்ந்து வாஜ்பாயி, இந்திரா காந்தியை ’தேசம் காக்க அவதரித்தவர்’ என்று அறிவித்தார். இப்படி இதை சீக்கியர் மீதான வெற்றியாக இந்துமதவெறியர்கள் பார்த்தார்கள், கொண்டாடினார்கள்.

பா.ஜ.க தொடர்பு - பத்திரிகை செய்தி
பா.ஜ.க தொடர்பு – பத்திரிகை செய்தி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்)

சிறுபான்மை மதத்தவர்களை தனிமைப்படுத்தி இந்து தேசிய பொதுபுத்தியை கட்டமைக்கும் வேலையை சீக்கியர் விவகாரத்திலும், ஆர்.எஸ்.எஸ் கும்பல் தீவிரமாக முன்னெடுத்து வந்ததது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பார்ப்பன அறிவுத்துறையினர் இன்றைக்கு காஷ்மீரின் மீதும் அதை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மீதும் எந்தளவுக்கு வெறுப்பைக் கக்கி வருகிறார்களோ அதற்கு சற்றும் குறையாத அளவுக்கு அன்று சீக்கியர்களின் மேல் வெறுப்பைக் கக்கி வந்தனர். அதில் முன்னணியில் நின்றது தற்போது பாரதிய ஜனதாவின் ‘மிதவாத’ முகமாக முதலாளித்துவ பத்திரிகைகளால் முன்னிறுத்தப்படும் எல்.கே அத்வானி.

சீக்கியர்களை தனிமைப்படுத்தும் பிரச்சாரத்தை அன்றைக்கு முதலாளித்துவ ஊடகங்களில் முன்னெடுத்துச் சென்றது யார் தெரியுமா? இன்று மோடியை தலையில் தூக்கி சுமந்து கொண்டு, நடுநிலை என்கிற போர்வையில் இந்துத்துவத்தை நைச்சியமாக வாசகர்களிடம் புகுத்தும் வேலையை செய்து கொண்டு, தேசிய ஒருமைப்பாடு குறித்தும், தேசிய மனநிலை குறித்தும் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் இதே டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தான். 82-ம் ஆண்டு அப்பத்திரிகையின் ஆசிரியர் கிரிலால் ஜெயின் எழுதிய ’சீக்கியர்களின் தலைப்பாகையை அகற்றுதல்’ (De-Turbaning of Sikhs) என்ற எடிட்டோரியல் சீக்கிய சமூகத்தின் மேல் வன்மத்தையும், வெறுப்பையும் கக்கியது.

1988-ல் தனது பதவிக் காலம் முடியும் வரை சீக்கியர்களின் மேல் வன்மத்தைக் கொட்டினார் கிரிலால் ஜெயின். இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான தீவிரவாதிகள் என்றும் நசுக்கப்பட வேண்டியவர்கள் என்றும் சீக்கியர்களை சித்தரித்து அவர்களை ‘இந்தியர்களுக்கு’ எதிரானவர்களாகவும் அபாயகரமானவர்களாகவும் ஊதிப் பெருக்கிக் காட்டினார். இதே டைம்ஸ் குழுமத்தைச் சேர்ந்தவரான அர்னாப் கோஸ்வாமியின் மோடி ஆதரவு கரகாட்டத்தையும் தேசிய ஒருமைப்பாட்டு சிறுபான்மையின வெறுப்பையும் நாம் இன்றும் கண்டு வருகிறோம். எலி தேவையில்லாமல் அம்மணமாக ஓடி வராது என்பதை நாம் பொருத்திப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைக்கு சீக்கியர்கள் பாகிஸ்தானுக்கு விலை போய் விட்டார்கள் என்று இந்துத்துவ குண்டர்கள் செய்து வந்த நச்சுப் பிரச்சாரம் ஒருபுறம்; இன்னொரு பக்கம் ஊடகங்களின் மூலம் சீக்கியர்களை தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் சித்தரித்தரிப்பு என்கிற பின்புலத்தில் இந்திரா காந்தி பார்ப்பன இந்து தேசியத்தின் மாண்பை காக்க 1984-ம் ஆண்டு ஜூன் மாதம் ’தீவிரவாதிகளின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது’ என்கிற முகாந்திரத்தோடு பொற்கோவிலுக்குள் இந்திய இராணுவத்தை அனுப்பினார். அதற்கு பதிலடியாக அதே ஆண்டு அக்டோபர் 31-ம் நாள் தனது சீக்கிய பாதுகாவலர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்கனவே தான் உண்டாக்கி வைத்திருந்த சீக்கிய எதிர்ப்பு இந்து பொதுபுத்தியை மேலும் வளர்த்தெடுக்க ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் களமிறங்கினர். சராசரி கீழ்மட்ட காங்கிரசு தொண்டர்களுக்கு தங்கள் தலைவியைக் கொன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணமே போதுமானதாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் குண்டர்களோ இந்து ராஷ்டிரம் என்கிற தங்களது எதிர்கால கனவின் அங்கமாக தெளிவான திட்டத்தோடு களத்தில் இறங்கினர்.

தில்லியின் வீதிகளெங்கும் காங்கிரசு காலிகளும் இந்துத்துவ குண்டர்களும் கைகோர்த்துக் கொண்டு சீக்கியர்களைத் தாக்கிக் கொன்றனர். இந்தியாவெங்கும் சுமார் 8,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். தில்லியில் மட்டும் சுமார் 3,000 சீக்கியர்கள் அழித்தொழிக்கப்பட்டனர். தில்லியின் திரிலோக்புரி பகுதியில் மட்டும் பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட சுமார் 350 சீக்கியர்கள் கலவரக்காரர்களால் கொன்றொழிக்கப்பட்டனர். காங்கிரசு மேலிருந்து கலவரத்தை முறைப்படுத்த, இந்துத்துவ கிரிமினல்கள் கலவரங்களுக்கு ஒரு சமூக அடிப்படையை இந்து தேசிய பொதுபுத்தியில் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருந்தனர்.

கொலைகளுக்கான நோக்கத்தில் அமைப்பு ரீதியாகவே காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஒன்றுபட்டிருந்ததால் கீழ்மட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களும் காங்கிரசு காலிகளும் கைகோர்த்துக் கொண்டு வெறியாட்டம் போடுவதில் எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. கலவரம் குறித்து பின்னர் அமைக்கப்பட்ட ஜெயின் – அகர்வால் கமிட்டியின் பரிந்துரைகளின் படி, பாரதிய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளைச் சேர்ந்த 49 நபர்கள் மேல் வழக்குகள் பதியப்பட்டன.

வழக்குகள் பதியப்பட்டவர்களுள் ஒருவரான ராம்குமார் ஜெயின் 1980-ம் ஆண்டு தில்லியில் அடல் பிகாரி வாஜ்பாயி போட்டியிட்ட போது அவரது தேர்தல் பிரதிநிதியாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலவரங்களில் நேரடியாக ஈடுபட்டது மட்டுமின்றி அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் சீக்கியப் படுகொலைகளை நியாயப்படுத்தும் விதமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து 1990-களில் டெல்லியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, நாசவேலை, கலவரம், கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த பா.ஜ.க தொண்டர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

சிறுபான்மையினர் உரிமை, வெகு மக்களின் நலன் என்கிற கேள்வி வரும் போது காங்கிரசும் பாரதிய ஜனதாவும்  சிந்திக்கும் திசை ஒன்று தான். வெள்ளைக்காரன் வந்து வெகுகாலம் கழித்து செயற்கையாகவும் போலித்தனமாகவும் கட்டப்பட்ட பார்ப்பன இந்திய தேசிய நலன் தான் இவ்விரு கட்சிகளின் அரசியல் ஆன்மாவாகும். பார்ப்பன இந்திய தேசியம் என்கிற அச்சாணி தான் இக்கட்சிகளின் தரகுத்தனத்தையும்,  அந்நியக் கைக்கூலித்தனத்தையும் சுழல வைக்கிறது.

இதில் காங்கிரசு சர்கஸ் கோமாளி முகமூடி அணிந்த கொலைகாரன் என்றால், பாரதிய ஜனதா முகமூடி தேவைப்படாத கொலைகாரன் என்பது தான் இவர்களுக்குள் உள்ள வேறுபாடு.

என்றாலும் தேர்தல் சமயங்களில் மோடியின் கொலைகார முகத்தை நியாயப்படுத்த அவ்வப்போது காங்கிரசின் 84-ம் வருடத்திய யோக்கியதையை பாரதிய ஜனதா சந்திக்கு இழுப்பது வழக்கம். அன்றைக்கு காங்கிரசு காய்ச்சிய தேசிய ஒருமைப்பாட்டு பட்டை சரக்கை வாங்கிக் குடித்து குத்தாட்டம் போட்டவர்களில் முதன்மையாக நின்றவர்கள் தாங்களே என்பதை வசதியாக மறைத்துக் கொள்கிறார்கள் பாஜக இந்துமதவெறியர்கள்.

வரலாறு என்பதே இந்துக்களின் வெற்றி வரலாறாகத்தான் எழுதப்படவேண்டும் என்பதில் பார்ப்பனிய இந்துமதவெறி பாசிஸ்டுகளுக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இல்லாவிட்டால் மராட்டியத்தில், மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டியதை எதிர்த்து கலவரம் செய்த வரலாற்றை முதுகுக்குப் பின் வைத்துக் கொண்டே அம்பேத்கருக்கு பாரத் ரத்னா வழங்கியது நாங்கள் தான் என்று வெட்கங்கெட்ட முறையில் சொல்ல முடியுமா? யோசித்து, திட்டமிட்டு பொய் சொல்வது வழக்கமான இந்துத்துவ பாணி என்றால், யோசிக்காமல் வாய்க்குள் வந்ததையெல்லாம் அடித்து விடுவதற்குப் பெயர் தான் மோடித்துவம்.

இறுதியாக சீக்கிய மதம் என்பது இந்துமதத்தின் ஒரு உட்பிரிவுதான்  என்று சில வருடங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் கூறியதும், சீக்கிய மக்களும், இயக்கங்களும் அதை எதிர்த்து கோபத்துடன் போராடினர். இறுதியில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது கருத்தை திரும்ப பெற்றுக் கொண்டது. இன்றைக்கு அகாலிதள் கட்சி பாஜகவோடு கூட்டணியில் இருப்பதாலேயே இந்துமதவெறியர்கள் சீக்கியர்களை மதிக்க கூடியவர்கள் என்பதல்ல.

ஆம். 1984 சீக்கிய மக்களை புதுதில்லியில் கொன்று குவித்த வெறியாட்டத்தை காங்கிரசோடு, இந்துமதவெறியர்களும் சேர்ந்துதான் நடத்தினார்கள். அந்த கொலைகாரர்கள்தான் இன்று குஜராத் இனப்படுகொலையை மறைக்க 84 கலவரத்திற்கு காங்கிரசு காரணம் என்று திசை திருப்புகிறார்கள். ஆனால் அந்த கலவரத்தில் காங்கிரசு குண்டர்கள் நடத்திய கொலைகளோடு, சித்தாந்த கோபத்தோடு கொலை செய்த இந்துமதவெறியர்களின் வன்முறை எந்த வித்திலும் குறைந்ததில்லை.

–    தமிழரசன்