Tuesday, May 11, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் பெண் தோழர்களை மிரட்டிய திமுக பாஜக போலீசு கூட்டணி

பெண் தோழர்களை மிரட்டிய திமுக பாஜக போலீசு கூட்டணி

-

“பெண்கள்தானே” என்ற திமுக, பாஜக,அதிகாரவர்க்கத்தின் அலட்சிய நினைப்புக்கு…பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் வைத்த ஆப்பு !

சென்னை பெண்கள் விடுதலை முன்னணியைச் சார்ந்த தோழர்கள் 20.4.14 அன்று மாலை 4.30 மணி அளவில் கோயம்பேடு பின்புறம் உள்ள சிவன்கோயில் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தையும் மோடியை அம்பலப்படுத்தும் சிறுவெளியீட்டு விற்பனையும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் செய்து கொண்டு இருந்தோம். பகுதியில் மக்கள் நமது பிரச்சாரத்தை வரவேற்றார்கள். பல கேள்விகளை நம்மிடம் கேட்டு அதை தோழர்கள் விரிவாக விளக்கிய பிறகு நீங்கள் சொல்வது சரிதான் என்று ஏற்றுக் கொண்டார்கள். இப்படி முழு வீச்சாக பிரச்சாரம் நடந்துக் கொண்டு இருந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

திமுகவின் தேர்தல் பிரச்சாரம் மாலை 7 மணிக்கு அந்த பகுதியில் இருந்ததையொட்டி திமுகவை சார்ந்த ஒருவர் அதற்கான பகுதி ஏற்பாடுகளை செய்ய மாலை 6.30 மணிக்கு வந்த போது நமது பிரச்சாரத்தை பார்த்து மிகவும் கோபம் அடைந்தார். உடனே நம்மிடம் வந்து “இங்கு என்ன பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்று மிகவும் அதட்டலாக கேட்டதற்கு நமது தோழர்களும் “ஓட்டு போடாதீர்கள்“ என்று பிரச்சாரம் செய்கிறோம் என்றார்கள். ஓட்டு கேட்க வரும் வேட்பாளரை வரவேற்க மக்களை அழைக்க வந்தவருக்கு, அரசியல் கட்சி எல்லாம் மக்களை ஏமாற்றும் கட்சி என்று மக்களிடம் நாம் பிரச்சாரம் செய்தது அவருக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவதாக இருந்தது.

“இதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள்? “ என்று அடுத்த கேள்வியை நம்மிடம் கேட்டதற்கு, “இது ஜனநாயக நாடுதானே. எங்களுடைய கருத்தை மக்களுக்கு எடுத்து சொல்கிறோம். அவர்களும் ஏற்று கொள்கிறார்கள். அதற்கு யாருடைய அனுமதி தேவை? “ என்ற பதில் கேள்வியால் மேலும் எரிச்சலடைந்து, “நீங்கள் எல்லாரும் இங்கேயே இருங்கள் நான் போலீஸை கூப்பிடுகிறேன்” என்று கூறியபடியே போனில் போலீஸூக்கு தகவல் தந்தார். “நாமும் சரி சொல்லுங்கள்” என்று தைரியமாக அந்த இடத்தை விட்டு போகாமல் நின்று கொண்டிருந்தோம். இதை கவனித்த பகுதி மக்கள் சுமார் 100-க்கு மேற்பட்டவர்கள் நம்மை சுற்றி நின்று கொண்டார்கள்.

ஒரு 10 நிமிடத்திற்குள் 1 கான்ஸ்டபிள் மற்றும் 2 ஐஎஸ் வந்தார்கள். “இங்கு என்ன பிரச்சாரம்?“ என்று அதிகாரத்துடனும் ‘இருப்பது பெண்கள்தானே’ என்ற கேவலமான பார்வையுடனும் கேட்டனர். அதற்கு தோழர்கள் “நாங்கள் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள். எங்கள் அமைப்பு தொடர்ந்து பல வருடங்களாக தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை செய்கிறோம்” என்றார்கள். “நீங்கள் மோடிக்கு ஓட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறீர்களாமே?“ என்றார் ஒரு ஐஎஸ். ” ஆமாம், மோடிக்கு மட்டுமில்லை நாங்கள் எந்த கட்சிக்கும் ஓட்டு போடாதீர்கள் என்றுதான் பிரச்சாரம் செய்கிறோம்” என்றோம். “சரி சரி உங்கள் பெயர்களை சொல்லுங்கள்” என்றார் இன்னொரு ஐஎஸ். “எதற்கு எங்களுடைய பெயர்களை கேட்கிறீர்கள்” என்றதற்கு “யார் யார் பிரச்சாரம் செய்கிறீர்கள் என்பதை நான் மேலிடத்திற்கு தகவல் சொல்வதற்குதான்” என்றார்.

அதற்குள் அந்த பகுதியில் உள்ள பிஜேபிக்காரர்கள் சிலர் வந்துவிட்டார்கள். போலீசிடம் நம்முடைய தோழர்களுடைய பயமற்ற தன்மையை சகித்துக் கொள்ள மனமில்லாத அவர்கள், “இதுங்க எல்லாத்தையும் பார்த்தா சின்னதுங்க மாதிரி இருக்குதுங்க. ஆனா பல வருஷமா தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் செய்யறதா சொல்லுதுங்க?” என்று மரியாதையற்ற தொனியில் பேசினார்கள். அதற்கு தோழர்கள், “எங்கள் அமைப்பு செய்கிறது என்றுதான் சொன்னோம். நீங்க மரியாதை இல்லாமல் பேசினால் நாங்களும் மரியாதை கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது” என்று கடுமையாக பேசியது, பெண்கள் என்றால் அடங்கி போவார்கள் என்ற அவருடைய நினைப்பை உடைப்பதாக இருந்தது.

“நீங்கள் ஏன் ஓட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்றார் மறுபடியும் கான்ஸ்டபிள். “சார் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதாவது தண்ணீர் இல்லை, கல்வி இல்லை. மருத்துவம் இல்லை என்று கேட்டு போராடினால் மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்யும் அவர்களா வருகிறார்கள். நீங்கள் தானே மக்களை விரட்டி அடிக்கிறீர்கள். ஓட்டு வாங்கும் எம்சி, எம்எல்ஏ, எம்பிக்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. அதிகாரிகளாக போலீசு, கிராம அதிகாரிகள், கலெக்டர்கள் இவர்களுக்குதான் அதிகாரம் என்பதை மக்களுக்கு விளக்கமாக எடுத்து கூறி அதனால் ஓட்டு போடாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறோம்” என்றும் “ஜனநாயகமே இல்லாத ஒரு நாடாக இந்தியா விளக்குவதையும் அவரிடம் கூறிய போது அவர் “எங்கம்மா எங்களுக்கே ஜனநாயகம் இல்லை“ என்று ஆதங்கப்பட்டார். பாருங்கள்  ஜனநாயமில்லை என்று இந்த ஜனநாயக அமைப்பை குண்டான்தடியால் நிலைநாட்டும் அடக்குமுறை அமைப்பான போலீசே புலம்புகிறது.

மறுகேள்வியை கேட்காமல், “சரி சரி பிரச்சாரம் முடித்துக் கொண்டு நீங்கள் புறப்படுங்கள்” என்றார். நாமும் மக்களிடம் ஜனநாயக நாட்டில் தேர்தலை புறக்கணிப்பதற்கு தடை இருப்பதை அம்பலப்படுத்தி விட்டு புறப்பட்டோம்.

சிறிது தூரம்தான் சென்று இருப்போம். கான்ஸ்டபிளும் ஒரு ஐஏஸ்-ம் (உளவுத்துறை போலிசு) இருசக்கர வாகனத்தில் நம் முன்னால் வந்து “மேடம் மேடம், இன்ஸ்பெக்டர் வந்துட்டார். அவரிடம் நீங்கள் பேச வேண்டும்” என்றனர்.

அங்கு வந்த இன்ஸ்பெக்டர் (கோவிந்தன் K11 Station), “என்ன பிரச்சாரம் ? நீங்கள் பெண்களாக இருக்கிறீர்கள் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் யார் பாதுகாப்பு?” என்று பயமுறுத்தும் தொனியிலும், “நீங்கள் பெண்களாக வரும் போது எந்த பகுதிக்கு வருகிறீர்களோ அந்த பகுதியில் உள்ள போலீசு நிலையத்தில் தகவல் சொன்னீர்கள் என்றால் போலீசு உங்களுக்கு காவல் வரும், இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருந்து சொந்தங்களை (அண்ணன், தம்பி, அப்பா, கணவர்) துணைக்கு அழைத்து வாருங்கள்” என்றார். அதற்கு தோழர்களும், “எங்களுடைய மக்கள்தான் எங்களுடைய சொந்தங்கள். அவர்கள்தான் எங்களுக்கு பாதுகாப்பு. அவர்களை மட்டுமே நம்பி நாங்கள் இருக்கிறோம்” என்றதும் அதிகாரத்துடன் அட்வைசு பண்ணியே பழக்கப்பட்ட அவருடைய முகம் சுருண்டு போனது.

மேலும், “கமல் என்ன சொல்கிறார் தெரியுமா?” என்று அதட்டலாக தோழர்களிடம் கேட்டார். “தெரியவில்லையே சார் நீங்களே சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், “யார் நல்லவர்கள் என்பதை கணித்து காசு வாங்காமல் ஓட்டு போடுங்கள்” என்கிறார் என்பதை சொன்னார். நாமும் விடாமல், “சார் அது அவராக சொன்னது கிடையாது தேர்தல் ஆணையத்தின் விளம்பரம்தான் அது. சரி நீங்க சொல்லுங்க சார், விவசாயம் நலிந்து போனதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், விலைவாசி உயர்வால் வாடும் மக்கள், கல்வி இல்லாத மாணவர்கள், இது மாதிரி விசயங்களுக்காக உண்மையாக கவலை கொள்ளும் வேட்பாளர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்றோம்.

அதற்கு அவர் பதில் சொல்லாமல், “நீங்கள் எப்படி அனுமதியில்லாமல் பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்றார். நாமும் விடாமல்,”தமிழ்நாடு முழுக்க நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம். மேலும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்களும் நடத்தி வருகிறோம்” என்றோம். அதற்கு, “ஒரு வாரத்திற்கு முன் வேண்டுமானால் அப்படி நடத்தலாம், தேர்தல் நெருங்கும் சமயத்தில் அனுமதி பெற வேண்டும்” என்றார். “தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ள நேரம் வரை நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரம் செய்யலாம்” என்று தோழர்களும் விடாமல் வாதிட்டார்கள்.

அதற்கு மேல் ஒன்றும் பேசாமல்,”சரி சரி திமுகவின் பிரச்சாரம் நடக்க இருக்கு, நீங்க உடனே புறப்பட்டு போங்க” என்றார். நாமும், “சார் நாங்க புறப்பட்டு போயிட்டுதான் இருந்தோம். நீங்கதான் எங்களை நிற்க சொன்னீங்க, முதல்ல இருந்து கேள்விகளை கேட்கிறீர்கள்” என்றதும் அங்கு கூடியிருந்த மக்கள் அவருடைய மூக்கு அறுபட்டதை உணர்ந்தனர்.

பெண்கள் என்றால் பயமூட்டி பணிய வைக்கலாம் என்று அரசியல்வாதிகளுக்கும், போலீசுக்கும் இருக்கும் அதிகார திமிரைப் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் தைரியமுடன் எதிர்கொண்டு முறியடித்தது அங்கு கூடியிருந்த பகுதி மக்களுக்கு அமைப்பாக சேர வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக அமைந்தது. தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை பெண் தோழர்கள் செய்கிறார்கள் என்பது  போலீசுக்கும், திமுகவிற்கும், இந்துமதவெறியர்களுக்கும் பொறுக்க முடியாததாக இருந்திருக்கிறது. எங்களாலும்தான் இந்த போலி ஜனநாயகத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. விரைவில் மக்களும் பொறுத்துக் கொள்ள முடியாத நிலை வரும் போது இப்போது கேள்வி கேட்டவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அது வரை எங்களது பிரச்சாரமும் தொடரும்.

தகவல்
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை கிளை

  1. போலீஸ், அரசியல்வாதி போட்டவெல்லாம் காணோமே… இன்னும் ப்ரின்ட் போடலையா அப்பு……

  2. ஒட்டு கட்சிகள் மற்றும் போலிசின் எதிர்ப்புகளையும் தாண்டி தேர்தல் புரக்கணிப்பு இயக்கத்தில் ஒட்டு கட்சிகளின் அய்யோக்கிய தனத்தையும் போலி ஜனநாயகத்தின் யோக்கியதையையும் அம்பலபடுத்தி வருகின்றனர் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் இது மட்டும் இன்றி இந்த போலி ஜனநாயகத்திற்க்கு மற்றான புதிய ஜனநாயகத்தின் அவசையத்தையும் மக்கள் மத்தியில் விச்சாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
    பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க