Saturday, July 11, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் டி.வி.எஸ் ஸ்தாபகர் தின விழா தொழிலாளர் வர்க்கத்துக்கே அவமானம்

டி.வி.எஸ் ஸ்தாபகர் தின விழா தொழிலாளர் வர்க்கத்துக்கே அவமானம்

-

ஓசூர் டி.வி.எஸ் ஆலையில் ஸ்தாபகர் தின விழா என்பது தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலை மறைக்கும் சதி!
ஓசூர்-டி.வி.எஸ் ஆலையில் ஸ்தாபகர் விழாவில் கலந்து கொள்வது தொழிலாளர் வர்க்கத்துக்கே அவமானம்!புறக்கணிப்போம்!

நாடளவில் உழைக்கும் மக்கள் மீது வகைவகையான அடக்குமுறைகள் செலுத்தப்படுகின்றன. தொழிற்துறையை பொருத்த வரை பல இடங்களில் பயிற்சி தொழிலாளி, ஒப்பந்தத் தொழிலாளி, தற்காலிகத் தொழிலாளி என்ற பல பெயர்களில் நிரந்தரத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு விட்டது. தொழிலாளர்கள் பலரும் நிரந்தர வேலையை எதிர்ப்பார்ப்பதைவிட குறைந்த பட்சம் உயிர் வாழ்வதற்காகவாவது வேலை வேண்டும் என்ற உணர்வே மேலோங்கியுள்ளது. டிப்ளமோ, இஞ்ஜினியரிங், ஐடிஐ போன்ற படிப்புகளை முடித்துவிட்டு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி ஒசூர் நகர வீதிகளில் அலைவதைப் பார்த்தாலே இந்த விசயங்களைப் புரிந்து கொள்ள முடியும்.

டி.வி.எஸ் ஆலை
படம் : நன்றி http://www.thehindubusinessline.com

இதனைத் தாண்டி ஆலைக்குள் உற்பத்தி நிலைமை, சுகாதாரம், பாதுகாப்பு, உற்பத்தி இலக்கு போன்ற எவற்றையும் தொழிலாளர்கள் தங்களின் உரிமை என்று அறிந்து கொள்ளவில்லை. இதனால், முதலாளிகள், எச்.ஆர். அதிகாரிகள், சூப்பர்வைசர்கள் வைப்பதுதான் சட்டம் என்ற முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்து கோர தாண்டவமாடுகிறது. ‘இம் என்றால் வனவாசம் ஏன் என்றால் சிறைவாசம்’ என்ற அளவில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை அடிமை நிலைக்குத் தாழ்ந்து விட்டது.

இந்நிலையில்தான் மேற்கண்ட முழக்கங்களைக் கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சுவரொட்டிகளை கண்ட தொழிலாளர்கள் தங்களின் செல்போன்களில் எல்லாம் படம் எடுத்துக்கொண்டு நண்பர்களிடம் பகிர்ந்தும் தங்களுக்குள்ளும் விவாதித்துக்கொள்கின்றனர்.

குறிப்பாக, பெரிய பெரிய கார்ப்பரேட் (லேலாண்டு)ஆலைகளில் கெம்பா என்ற பெயரில் கருங்காலிகளை உருவாக்கி அவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு மட்டும் தனிச் சலுகைகள் வழங்குவது, டூரிஸ்ட் என்று வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்வது, தொழிலாளர்களின் ஒற்றுமை உணர்வை குலைத்து போராட்ட உணர்வை சீர்குலைப்பது என்ற யுத்தியை கையாள்கிறது என்றால்…., டி.வி.எஸ் ஆலையில் தொடரும் தொழிலாளர்கள் மீதான உழைப்பு சுரண்டலை மறைக்கவும்,கட்டற்ற அடக்குமுறைகளை அரங்கேற்றவும் நடத்துவதுதான் ஸ்தாபகர் தினவிழா. இந்த விழாவில் தொழிலாளியின் மனைவி மக்களுடன் செல்வதற்கு அனுமதி கொடுக்கின்றனர். ஆலையில் கோயில் திருவிழா போல அத்தனை பொருட்களும் அங்கு இருக்கும். ஆலை முழுவதும் ஜிகு ஜிகு வென லைட் செட்டிங்கை பார்க்கும் போது குடும்ப பெண்களுக்கு ஒரே பிரமிப்பூட்டும் வகையில் உணவு வகைகள் என்று ஆலைக்குள் சென்று வெளியே வந்தால் சொர்க்கத்தை பார்த்து வந்தது போல இதைப் பற்றியே ஆண்டு முழுவதும் பேசுவார்கள்.

ஆலையின் அடக்குமுறைக்கு எதிராக கேள்வி கேட்டால் நிர்வாகத்தை விட தொழிலாளியின் மனைவிமார்களே மன்னிப்பு கேட்டு வேலைக்கு போக சொல்வார்கள். தொழிற்சாலையில் உள்ள தொழிற்சங்கமோ தொழிலாளர்களின் உரிமையை விட நிர்வாகத்தின் குரலைத்தான் பேசுவார்கள்.

இவ்வாலையில் பத்து ஆண்டுகள் வேலை செய்தாலும் காண்ட்ராக்ட்டு தான். ஆனால் 480 நாட்கள் வேலை செய்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பது சட்டம். இதனை மயிரளவிற்கு கூட மதிப்பதில்லை டி.வி.எஸ் நிர்வாகம். சட்ட விரோதமாக செயல்படும் போக்கை கண்டித்தாலோ பணிநீக்கம், அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற கேவலமான வேலைகளை செய்வதில் முதலிடம் தான் டி.வி.எஸ் ஆலை.

டி.வி.எஸ் ஆலையின் குழும நிறுவனமான ஹரிதா ரப்பர் ஆலையை சென்ற ஆண்டு மும்பையை சேர்ந்த மெகா ரப்பர் என்ற ஆலைக்கு தொழிலாளர்களின் விருப்பத்தை கேட்காமல் விற்றுவிட்டது. இதனை எதிர்த்து பணி தொடர்ச்சியுடன் வேலை கேட்ட 12 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது. அவர்கள் பல கட்சிகளை பார்த்தும் தொழிலாளர்களின் நியாயத்தை உணராமல் டி.வி.எஸ்ஸை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டனர். பிறகு புரட்சிகர சங்கமான பு.ஜ.தொ.மு-வில் தங்களை இணைத்து கொண்டு அச்சங்கத்தின் வழி காட்டலின் படி நீதிமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் போராடி வருகின்றனர்.

ஸ்தாபனர் நாளை எதிர்த்து பு.ஜ.தொ.மு போஸ்டர்
ஸ்தாபனர் நாளை எதிர்த்து பு.ஜ.தொ.மு போஸ்டர்

அந்த வகையில் மேற்கண்ட முழக்கங்களை வடித்து நகரம் முழுவதும் போஸ்டர் போட்டு ஒட்டப்பட்டது. போஸ்டரை பார்த்த, படித்த இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களின் போராட்டத்தை ஒட்டு மொத்த தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டமாக வளர்த்தெடுப்போம். தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தர்மபுரி-கிருஷ்ணகிரி-சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு 9788011784, ஓசூர்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. ஓசூர் டி.வி.எஸ் கம்பெனியில் எனது நண்பரின் அண்ணண் நிரந்திரத் தொழிலாளியாக வேலைப்பார்த்துவருகிறார். அவரின் தம்பி என்னிடம் கூறியது,”எனது அண்ணன்காரன் எனது தந்தை இறந்த அன்றைக்குகூட விடுப்பு எடுத்துக்கொள்ளாமல் இரவுப்பணி(நள்ளிரவு)மாற்றிக்கொண்டு வேலைக்கு சென்றுவிட்டான். அந்த அளவிற்கு டி.வி.எஸ்-ற்காக விசுவாசமாக இருக்கிறான். இவனையெல்லாம் திருத்தமுடியாது என்று சொன்னான்.” அப்பேர்பட்ட அண்ணன் போன்றோர்களைத்தான் ஸ்தாபகர் விழாவில் கௌரவித்து பாராட்டி ஒரு லெட்டர்பேடில் சான்றிதழ் கொடுத்தும் அற்ப பொருளை கிப்ட்டாக கொடுத்தும் உரிமைப் பறிப்பை மறக்கச் செய்தும் விடுகின்றனர். ஒருவருடம் முழுவதிலும் யார் விடுப்பே எடுக்காமல் வேலைக்கு வந்துள்ளனரோ அவர்களை சிறப்பு செய்கின்றனர். இதனையே முன்மாதிரியாக பிறதொழிலாளர்கள் கொள்ளவேண்டும் எனவும் உசுப்பேத்துகின்றனர் கம்பெனி நிர்வாகிகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க