privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்புதுச்சேரியைக் குலுக்கிய மே நாள் பேரணி - படங்கள்

புதுச்சேரியைக் குலுக்கிய மே நாள் பேரணி – படங்கள்

-

மே நாள்! எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் சமூக பயன்பாடு, எட்டு மணி நேரம் உறக்கம் என்று மனித குலத்துக்கே வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த அரசியல் போராட்ட நாள்! இந்நாளில் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டும் வகையில், புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தங்களது இணைப்புச் சங்கங்களில் கொடியேற்றி வாயில் கூட்டங்கள் நடத்தியது. மேலும், இன்று நடைபெறும் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை விளக்கியும் பேசப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. ஏதோ இந்தியாவையே புரட்டிப் போட்டுவிடப் போவதற்கான மாற்றுத்திட்டம் வரப்போவதாக போலிகள் உள்ளிட்ட அனைத்து ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளும் ஊளையிடுகின்றன. ஆனால், இந்தப் போலி ஜனநாயகத்தில் ஓட்டுப் போடுவதால் நமது நிலைமைகள் மாறப்போவதில்லை.

மோடியோ, லேடியோ அல்லது வேறெந்த கேடியோ ஜெயித்து வந்தாலும் மக்களின் அவலங்கள் மாறப்போவதில்லை. ஏனெனில், யார் வந்தாலும் ஆட்சியாளர்கள் அமுல்படுத்தப் போவது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற நாட்டை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு கூறுபோடும் மறுகாலனியாக்கக் கொள்கைகளே. அதனால், மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீவிரமடையப் போகின்றன.

ஒருபுறம் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமுல்படுத்தப்படும் அதே வேளையில், மறுபுறம் ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. இந்துமதவெறி பாசிசம் இந்தக் கொள்கைகளுக்கு சேவைசெய்யும் விதமாக மக்களை மழுங்கடித்துக் கொண்டிருக்கிறது.

எனவே,

இந்த போலி ஜனநாயக சட்டமன்ற நாடாளுமன்ற பாதையைப் புறக்கணித்து உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!

பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! என்று மே நாளில் சூளுரைப்போம்

என்ற மைய முழக்கத்தை வலியுறுத்தி புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் அனுமதி கேட்ட போது, போலீசு அதிகாரி,

“ஏற்கனவே, இவர்களுக்கும், அதிமுக-விற்கும் இடையே பிரச்சினை உள்ளது. தற்போது அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” என்று கூறி அனுமதி தர மறுத்தார்.

தோழர்கள், தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜெயலலிதா புதுச்சேரி வந்து பேச, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்தபோது, “எங்களுக்கும் அதிமுக விற்கும் பிரச்சினை இருப்பது உங்களுக்கு மறந்துவிட்டதா?” என்றும், “ஜெயலலிதா பிறந்த நாளின் போது, ஒரு ரோட்டையே மறித்து, ஓம் சக்தி சேகர் கூட்டம் நடத்தியபோது பிரச்சினை மறந்துவிட்டதா? நாங்கள் அனுமதி கேட்டால் மட்டும் பிரச்சினை ஞாபகத்திற்கு வருகிறதா?” என்று கேட்டபோது,

போலீசு அதிகாரி “அதில்லப்பா, பிரச்சினை வந்திடக் கூடாதுன்னு பாக்குறேன்.” என்றார்.

தோழர்கள், “பிரச்சினை வரக்கூடாதுன்னா நீங்க பேரணிக்கு பாதுகாப்பு கொடுங்க.” எனக் கூறினர். எனினும், போலீசு அதிகாரி, அனுமதி தரத் தயங்கினார்.

தோழர்கள், “நீங்கள் அனுமதி கேட்ட எங்களது கடிதத்தில் உங்கள் கருத்தை எழுதிக் கொடுங்கள். நாங்கள் மேலதிகாரியிடம் பேசிக் கொள்கிறோம் எனக் கூறி எழுதி வாங்கிச் சென்று மேலதிகாரியிடம் மேற்சொன்ன விசயங்களைப் பேசிய போது வேறு வழியின்றி அனுமதி அளித்தார்.

ஆயினும், ½ அங்குலம் விட்டம், 2 அடி நீளம் என கொடி பிடிக்கும் குச்சியின் அளவு முதல் கொடியின் அளவு, சுவரொட்டி ஒட்டுவது, இந்திய அரசை விமர்சிக்கும் வகையில் எந்த விசயமும் கேலிச் சித்திரம் உட்பட எந்த வடிவத்திலும் விமர்சிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 14 வகையான கட்டுப்பாட்டுகளை விதித்து கொடுத்த அனுமதியைப் பெற்று பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரணியை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர். பழனிசாமி தலைமை தாங்கினார்.

அவர் தனது தலைமையுரையில், “தொழிலாளி வர்க்கம், ஒரு நாளைக்கு 16 முதல் 20 மணி நேரம் கசக்கிப் பிழியப்பட்டனர். தங்கள் மீதான இந்த உழைப்புச் சுரண்டலை எதிர்த்து உலகம் முழுவதுமுள்ள தொழிலாளர்கள் போராடிப் பெற்றது தான் 8 மணி நேர வேலை நேரம் என்பது. அந்தத் தியாகத் தோழர்களின் ரத்தத்தில் நனைந்தது தான் இந்த செங்கொடி. ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் போராடி உயிர் நீத்த நாளில், ஓட்டுக் கட்சி சங்கங்கள் அதைக் கொண்டாட்ட நாளாக கொடியேற்றி, மிட்டாய் வழங்கி கொண்டாடி வருவதை அம்பலப்படுத்தியும், இன்றைய மறுகாலனியாக்க சூழலில் எல்லா ஓட்டுக் கட்சிகளும், போலிசும் – நீதிமன்றங்களும் தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் எதிராக இருக்கிறது என்பதை விளக்கியும், எனவே மக்களுக்கு அதிகாரம் வழங்கும் மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியமைப்பதும், அதற்கு சேவை செய்யும் பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவதும், அதற்கு உழைக்கும் வர்க்கமாய் அணி திரளவேண்டும்” என்பதை விளக்கிப்பேசி பேரணியைத் துவக்கிவைத்தார்.

பேரணி, நமது தோழர்களைத் தாக்கிய அதிமுக ரவுடி ஓம் சக்தி சேகர் வீடு அமைந்துள்ள அருகாமைப்பகுதியான லெனின் வீதி வழியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் கம்பீரமாகச் சென்றது. அதிமுகவின் அடிப்பொடிகள் வெளியில் வந்து வெறிக்கப் பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சிலர் அந்த வீதியில் அமைந்துள்ள அதிமுக அலுவலக வளாகத்தின் மாடியில் ஏறி நின்று பேரணியை வீடியோவில் பதிவு செய்தனர். ஆயினும், இதைப் பற்றி எல்லாம் சட்டை செய்யாமல், பேரணி தனது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் முன்னேறிக் கொண்டிருந்தது. பேரணி திட்டமிட்டபடி, சுதேசி மில் அருகில் முடிவடைந்தது.

அங்கு, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணை செயலாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், புஜதொமு – வின் அலுவலக செயலாளர் தோழர் லோகநாதன் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் தோழர் கலை அவர்களும் உரையாற்றினர்.

தோழர் லோகநாதன் தனது உரையில், தொழிலாளர் வர்க்கம் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றியும், அதை இன்றைய அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரிகள் என அனைவரும் தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுவதை எடுத்துக்காட்டுடன் விளக்கினார். தங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் வக்கற்றவர்கள் என்பதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்த புதுச்சேரி பகுதியில் உள்ள வீராம்பட்டினம் மக்கள் இந்த போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர். அரசியல் ரீதியாக நாம் விளக்கிப் பிரச்சாரம் செய்வதை தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்துள்ளனர். எனவே, இன்றைய தேவை இந்த மக்கள் விரோத அரசு அல்ல. மாற்று அரசியல் என்பதை விளக்கிப் பேசினார்.

தோழர் கலை தனது உரையில், “இன்றைய அரசு, முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசு என்பதை மீத்தேன் எடுப்புத் திட்டத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். புதுச்சேரியின் பாகூர் தொடங்கி திருவாரூர் வரையில் உள்ள பகுதியில் வசிக்கும் 50 லட்சம் மக்களை வெளியேற்றித் தான் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போகிறது. அதில் எடுக்கப்படும் வாயு நமது மக்களுக்குப் பயன்படப் போவதில்லை. முதலாளிகளின் லாப வெறிக்குத்தான் பயன்படப் போகிறது. இதை நாட்டின் வளர்ச்சி என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்” என்பதையும், “இதே போல் திருவண்ணாமலையில் உள்ள மலைகளைக் கொள்ளையிட ஜிண்டால் நிறுவனம் தயாராகிறது.” இதே போல் அரசின் மக்கள் விரோதத் திட்டங்களை விளக்கிப் பேசினார். “இன்றைய மன்மோகனுக்கு மாற்று மோடி என்பதெல்லாம் ஏமாற்று. பிஜேபி ஆண்ட போது அவர்களும் இதே கொள்கைகளைத்தான் நடைமுறைப் படுத்தினர். அதை அம்பலப்படுத்தியும், இதற்கு மாற்று என்பது தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகள் ஒழித்து, மக்களுக்கு அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயக அரசை நிறுவதே. அதற்கு மக்கள் புரட்சிகர அமைப்புகளில் அணிதிரள வேண்டும்” என அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க