Saturday, January 23, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் இதுதாண்டா தொழிலாளி வர்க்கம் - மே நாளில் சிவந்த ஓசூர்

இதுதாண்டா தொழிலாளி வர்க்கம் – மே நாளில் சிவந்த ஓசூர்

-

மே தினம் என்பது உலகத் தொழிலாளர்கள் அனைவரும் தமது உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் தினம். சூரியன் உதித்து அந்திசாயும் வரையிலும் ஓய்வின்றி உழைத்த கரங்கள் 1886 மே-1 ல் அமெரிக்காவின் சிகாகோ நகர ஹேமார்ட் சதுக்கத்தில் ஒன்று கூடி தங்களுக்கு 8 மணிநேர வேலை நேரத்தைப் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உரிமை குரலெழுப்பி விண்ணதிர முழங்கினார்கள்.

தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கண்டு அரண்டுப்போன முதலாளிகள் தமது ஏவல் நாய்களான போலீசை வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டிலே சுருண்டு விழுந்த எண்ணற்ற தொழிலாளர்களின் இரத்தத்தால் அந்த ஹேமார்ட் சதுக்கமே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்தது. அன்றைய நாளில் உயிர் இழந்த தொழிலாளர்களை நினைவுகூறவே அவர்களது கோரிக்கைகளை பரிசீலிக்கவே, தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையை சாதிக்கவே நாம் செல்ல வேண்டிய பாதையைப்பற்றி நினைவுகூர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச் செல்ல உறுதி பூணுவதே மேதினத்தின் சிறப்பு.

உலகமே உழைக்கும் தொழிலாளர்களால்தான் இயங்குகிறது. ஆனால் அந்த உழைப்பாளர்களுக்காக ஒரே ஒரு நாள்மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும்கூட முதலாளித்துவ ஓநாய்கள் மனமிறங்கி கொடுத்த சலுகையல்ல. தொழிலாளர்கள் தாங்களே போராடி தம் கரத்தாலே பறித்துப் பெற்றுக் கொண்ட நாள் இது. அந்த வர்க்க பெருமிதத்தோடு முன்பெல்லாம் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதிநாடகங்கள், ஆர்ப்பாட்டங்கள் என போர்க்குணமான நிகழ்வுகள் தங்களது வர்க்கத்துக்காக, உரிமைக்காக நடந்தவண்ணம் இருந்தன. ஆனால் இப்போது, குறிப்பாக தமிழகத்தில் எடுத்துக்கொண்டால் .. புரட்சிகர இயக்கங்களைத் தவிர பிற எவையுமே இந்த பாரம்பரியத்தை எடுத்து வரித்துக்கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு வளர்த்துச் செல்லும் கண்ணோட்டம் கொண்டதாக அறவே இல்லை.

எல்லாருமே தங்களின் ஓட்டுப் பொறுக்கி அரசியல் நலனை முன்னுறுத்தியோ அல்லது முதலாளிகளின் நலனை பேணும் பொருட்டோ அல்லது பேரம்பேசி ஆதாயம் பெறும் பொருட்டோ அல்லது தங்களின் கட்சிகளை அதன் தலைமையின் போலிக் கௌவரத்தை வெளிப்படுத்திக் கொள்ளவோதான் ஒரு அடையாளமாக நடத்துகின்றன. இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இதனை பட்டியலிட வேண்டிய அவசியமில்லை. கூர்ந்து அவதானிப்போர் உணரமுடியும்.

இங்கே, ஓசூரிலே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய இவ்விரு புரட்சிகர அமைப்புகள் சார்பாக மேதினத்தை தொழிலாளர்களுக்கான உண்மையான பொருளில் அதன் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து உயர்த்திப் பிடிக்கின்ற வகையிலே மேதினத்தன்று நான்கு தலைப்புகளில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்த திட்டமிட்டுக் கொண்டன. அதன்படி திட்டமிட்டவகையில் எடுத்துச்செல்லும்போது ஏற்படுத்தப்பட்ட தடைகளை எதிர்கொண்டு முறியடித்து போர்க்குணத்தோடு எழுச்சிகரமாக நடத்திமுடித்தன. திரளான மக்கள் இறுதிவரை கலந்துக்கொண்டு ஆதரித்தும் வாழ்த்துத் தெரிவித்து சென்றதும் போலிகம்யூனிஸ்டுகளின் கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு தோழர் இதில் இறுதிவரை கலந்துக்கொண்டு நெகிழ்வோடு தனது ஆதரவைத் தெரிவித்துச் சென்றதுமே இதற்கு கட்டியம் கூறுவதாக இருந்தது.

1) காலை 7.30 மணிமுதல் 10.30 வரை பு.ஜ.தொ.மு-ன் கிளைச் சங்கங்களில் கொடியேற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உறுதிமொழிகள் பற்றிய விளக்க உரைகள்.

2) இருசக்கர வாகனங்களில் கொடிகள் மற்றும் பதாகைகளுடன் ஊர்வலமாக துண்டறிக்கைகளை கொடுத்து வழிநெடுக பிரச்சாரம் செய்தல்

3) கார்போரண்டம் யுனிவர்சல் ஆலையில் காலை 11.00 மணியளவில் அவ்வாலைத் தொழிலாளர்கள் சங்கம் பு.ஜ.தொ.மு வுடன் இணைக்கப்படும் விழாவில் கலந்துக்கொண்டு அவர்களை வாழ்த்தி எழுச்சியுரையாற்றுதல்

4) மாலை 5 மணியளவில் பன்னாட்டுக் கம்பெனிகள்- பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்! என்கின்ற அரசியல் முழக்கத்தின்கீழ் மேநாளில் சூளுரைத்து ஓசூர் நகராட்சி அலுவலகத்தின் முன்பே திரளான மக்கள் பங்கேற்போடு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடத்துதல்

மேற்கண்ட திட்டங்கள் அனைத்தையும் மேதின ஒரே நாளில் கம்பெனி முதலாளிகள் அவர்களின் ஏவலாளிகளின் தடைகளை எதிர்கொண்டு நடத்தியது என்பது ஒசூர் தொழிலாளர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியதாக இருந்தது.

காலை 8.00 மணியளவில் சிப்காட்-1ல் உள்ள கமாஸ் வெக்ட்ரா ஆலைவாயில் முன்பு அவ்வாலை தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு வின் கிளைச்சங்கத் தலைவர் கொடியேற்றி தலைமைத்தாங்கினார். பு.ஜ.தொ.மு வின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் சிறப்புரையாற்றினார். இறுதியாக கிளைச் சங்க பொருளாளர் தோழர் முரளி நன்றியுரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிறகு அங்கிருந்து கொடி, பதாகைகளுடன் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று சிப்காட்-2 ல் உள்ள வெக் இந்தியா ஆலைவாயில் முன்பாக அவ்வாலையில் இயங்கும் பு.ஜ.தொ.மு வின் கிளைச்சங்கத்தின் பொருளாளர் தோழர் ஜெயப்பிரகாஷ் கொடியேற்றி தலைமை தாங்கினார். இதில் அவ்வாலை கிளைச்சங்கத்தின் செயலாளர் தோழர் வேல்முருகன் மற்றும் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். குறிப்பாக ஆலையில் நடைமுறையில் உள்ளதாக சொல்லப்படும் நிலையாணை என்பது என்ன என்றே பெரும்பான்மையான தொழிலாளர்களுக்கு தெரியாது. பு.ஜ.தொ.முவில் இணைந்தபிறகுதான் இதுபற்றியும் இது ஆலை முதலாளியின் நலனுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பதை தெளிவாக புரிந்துக்கொள்ளமுடிந்தது. இருப்பினும் இதன்படிகூட முதலாளி நடந்துக்கொள்ள மறுக்கிறான் என்பதை பார்க்கும்போது நாமும் முதலாளியைப்போலவே நமக்கான அதிகார அமைப்புகளை கட்டப்போராடவேண்டும் என்பதை உணரவேண்டும் என்றவகையில் தொழிலாளர்களுக்கு புரியும்படியாக எளிமையாக உரையாற்றினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பிறகு ஊர்வலமாக இருசக்கரவாகனங்களில் கொடி, பதாகையோடு துண்டறிக்கைகளைக் கொண்டு பிரச்சாரம் செய்துக்கொண்டே காலை 11 மணியளவில் மீண்டும் சிப்காட்-1 ற்கு வந்து கார்போரண்டம் ஆலையில் பு.ஜ.தொ.மு ல் அவ்வாலைத் தொழிலாளர்கள் இணைப்புவிழாவில் கலந்துக்கொண்டனர்.

கார்போரண்டம் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் பு.ஜ.தொ.மு ல் இணைப்பு விழா :

காலை 11 மணியளவில் நடத்தப்படுவதற்காக தோழர்கள் முன்கூட்டியே வந்து கொடிநட்டு, தகவல்பலகை பொறுத்தப்படும் வகையில் முயற்சி செய்தனர். இதனை தடுக்கும் பொருட்டு நிர்வாகம் போலீசை அழைத்தவுடன் உடனே ஓடோடி வந்தார்கள் போலீசுப்பட்டாளம். ஆலை நிர்வாகம் இஞ்சக்சன் ஆர்டர் வாங்கிவைத்துள்ளது. 200 மீட்டர் தூரத்துக்கு அப்பால்தான் எதுவுமே நீங்கள் செய்துக்கொள்ளவேண்டும் என சட்டவாதம் பேசி தடுக்க முயற்சித்தது போலீசு. கலெக்டரிடம் பேசுங்கள் என்று அறிவுறுத்தி காலம் தாழ்த்தியது. இதனைப்பொருட்படுத்தாமல் உலகம் முழுவதும் இந்த நாளில் கம்பெனி வாயில்முன்பாக தொழிலாளர்கள் கூடி தங்களின் தலைவிதியைப்பற்றியும் தங்களின் மூதாதையர்களைப்பற்றியும் நினைவுகூர்ந்து உறுதிமொழியேற்பது என்பது சாதாரண நடைமுறைதான். இது எல்லோருக்கும் பொருந்துவதைப்போலவே எங்களுக்கும் பொருந்தும் என்று சொல்லிக்கொண்டே தங்களின் வேலையை கவனித்தனர். பிறகு போலீசு ஒதுங்கிக்கொண்டது.

பிறகு மிரட்டும் தொனியில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பதிவு செய்யத்தொடங்கியது. நன்றாகவே பதிவுசெய்துக்கொள்ளுங்கள் எங்களின் நடவடிக்கை என்பது வெளிப்படையானது என்று கூறிவிட்டு வேலையை தொடர்ந்தனர் தோழர்கள்.

முதல் நிகழ்ச்சியாக தோழர் பரசுராமன் தலைமையில் கொடியேற்றி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பிறகு ஆலைமுன்பு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் இணைப்புவிழா சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்விற்கு கார்போரண்டம் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் அந்தோனி தலைமையேற்றார். மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். தோழர் சங்கர் மாவட்ட செயலாளர், தோழர் செந்தில்குமார் கமாஸ்வெக்ட்ரா கிளைச்சங்க செயலாளர், தோழர் வேல்முருகன் வெக் இந்தியா கிளைச்சங்க செயலாளர், தோழர் வெங்கடேசன் அசோக்லேலாண்டு தொழிலாளி, தோழர் சிவலிங்கம் கார்போரண்டம் ஐ.சி எம்ளாயிஸ் யூனியன் இணைச்செயலாளர் , தோழர் கோபால் ஹரிதா ரப்பர் நிறுவன தொழிலாளி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தோழர் சுந்தரேசன் கா.யு.தொ.தொழிற்சங்க இணைச்செயலாளர் நன்றியுரையாற்றினார்.

அமைதியாக நடந்தேறவேண்டிய இவ்விணைப்பு விழாவை பரப்பரப்பூட்டி போலீசு பட்டாளம், பத்திரிக்கையாளர்கள், அதிகார வர்க்கங்கள் புடைசூழ வெற்றிகரமாக எழுச்சியாக நடந்தது. முருகப்பா குழுமநிறுவனமான இந்த ஆலை நிர்வாகம் இந்த தொழிற்சங்கத்தை அங்கீகரித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுமூகமாக பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முன்வரவேண்டும். இல்லையேல் ஒசூர் தொழிலாளர்கள், பொதுமக்கள், வியாபாரிகளின் ஆதரவைத் திரட்டி சட்டப்படியும் சட்டத்திற்கு வெளியே தெருப்போராட்டங்களை நடத்தி பணியவைப்போம் என்று எச்சரிக்கும் வகையில் இவ்விழா நடந்தேறியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

நகராட்சி அலுவலகம் முன்பாக நடத்தப்பட்ட எழுச்சிமிகு அரசியல் ஆர்ப்பாட்டம்:

சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு நகராட்சி அலுவலகம் வந்தடையும் வண்ணம் போலீசு அனுமதி கோரப்பட்டிருந்தது.

“அவ்வாறு அனுமதிதரமுடியாது. நாங்கள் சொல்கின்ற ரூட்டில் வேண்டுமானால் பேரணி வைத்துக்கொள்ளுங்கள்” என்றனர்.

“இது தொழிலாளர் தினம், இது எங்களுடைய தினம் நாங்கள் விரும்பும் வழியை எங்களுக்கு ஒதுக்கித்தர உங்களுக்கென்ன பிரச்சினை” என்றால் அதற்கு எவ்வித பதிலும் இல்லை.

மாறாக, “நாங்கள் சொல்கிறபடி பேரணி நடத்துங்கள் இல்லையேல் உங்கள் பேரணிக்கு அனுமதியில்லை” என்றனர்.

ஆதலால் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்தமுடிவு செய்து அதன்படி நடத்தப்பட்டது. மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்திக்கொள்ள அனுமதியளித்திருந்தனர். அதே இடத்தில் வலது-இடது போலிக்கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யூ மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி யினர் குவிந்து முழக்கமிட முயன்றனர்.

அவர்களை கேட்டால் “எங்களுக்கும் இங்கதான் அனுமதியளித்துள்ளனர்” என்றனர். பிறகு போலீசிடம் கேட்டால்..”அவர்கள் அங்க நடத்திக்கொள்ளட்டும், நீங்கள் இங்க நடத்திக்கொள்ளுங்கள். நாங்க என்ன செய்யமுடியும் ? எங்கள் மேல்அதிகாரிகள் இப்படி கொடுத்திருப்பது குறித்து எங்களுக்கே தெரியாது” என கைவிரித்தனர்.

பிறகு நமது தோழமை அமைப்பான ம.க.இ.க பாடல் ஒலிப்பேழையில் வருகின்ற போலீக்கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தும் பாடலை ஒலிப்பெருக்கியில் போட்டவுடன் அவர்கள் துண்டக்காணோம் துணியக்காணோம் என கிளம்பிவிட்டனர். இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகுதான் சாதாரணமாக நடந்தேறவேண்டிய ஆர்ப்பாட்டம் பரபரப்பாகவும், திரளான மக்களின் பங்கேற்போடும்,விவாதங்களோடும் போர்க்குணத்தோடு எழுச்சிகரமாக நடந்தேறியது.

சரியாக 5.00 மணிக்கு பறையோசை அதிர தொடங்கிய இவ்வார்ப்பாட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில்குமார் முன்மொழிதலுடன், மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையேற்று நடத்தினார். பாகலூர் பகுதி பு.ஜ.தொ.மு வின் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தெலுங்கில் கண்டன உரையாற்றினார். மாவட்ட தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினார். இறுதியாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய தோழர் முனியப்பன் நன்றியுரையாற்றினார்.

தோழர் சங்கர் தனது தலைமையுரையில் இரண்டாண்டிற்கு முன்பு இதே நாளில் மேதினத்தில் பேருந்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே கால்தவறி விழுந்து இறந்த தியாகத் தோழர் முன்னால் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செல்வராசை நினைவுகூர்ந்து உரையாற்றினார். அவரது தியாகத்தை நாம் நெஞ்சிலேந்திப் போராட அழைத்துப்பேசியது உருக்கமாக இருந்தது.

தோழர் ரவிச்சந்திரன் தனது கண்டன உரையில் இங்கே பாகலூர் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் தென்பெண்ணையாறாகட்டும், நமது தமிழகத்தின் நெற்களஞ்சமாம் தஞ்சையை வளமான பூமியாக்கிய காவிரியாகட்டும் இவைகள் எல்லாமே கார்பரேட் முதலாளிகளின் நலன்பொருட்டே பொட்டல் காடாக்கப்படுகிறது. தவித்த வாய்க்கு தண்ணீர்கூட இனி கிடைக்காது என்ற நிலைக்கு அழைத்துச் செல்லும் இந்த முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வேரோடு வெட்டி சாய்த்திட புரட்சிகர இயக்கங்களில் அணிதிரண்டுப்போராட வேண்டிய அவசியத்தை வலியிறுத்திப்பேசினார். அவர் பேசும்போது இந்த தண்ணி எந்த முதலாளித்துவ கொமபனும் கண்டுப்பிடித்ததல்ல. இயற்கையாகவே இந்த பூமியில் உள்ளது. இதைகூட விட்டுவைப்பதில்லை என்றால் நாம் சும்மா வேடிக்கைப் பார்க்கமுடியாது என்று கூறியது நல்ல வரவேற்பை பெற்றது.

தோழர் பரசுராமன் தனது சிறப்புரையில் இந்த நாட்டின் சட்டமன்றம், பாராளுமன்றம் , நீதிமன்றம், போலீசு, இராணுவம், பத்திரிக்கைகள் எல்லாமே முதலாளி வர்க்கத்துக்கான நிலையாணைகள். இவை எதுவுமே இந்நாட்டின் கோடான கோடி மக்களுக்கு பயன்தருவதில்லை. மாறாக கார்பரேட் முதலாளிகள், பன்னாட்டு கம்பெனிகளின் நலனுக்கானவை. ஓட்டுக்கட்சிகள் எல்லாமே இதற்கு துணைநிற்பவை. இதனைப்புரிந்துக்கொண்டு நாம் நமக்கான உண்மையான மாற்று அதிகார அமைப்புகளை கட்டியெழுப்ப முன்வரவேண்டும் என்று அறைகூவி அழைக்கும் வகையில் எழுச்சிகரமாக உரையாற்றியது வியாபாரிகள், தொழிலாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மேநாள் ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:

வாழ்க, வாழ்க, வாழ்கவே!
விவசாயிகள் விடுதலை முன்னணி
வாழ்க, வாழ்க, வாழ்கவே!

வாழ்க, வாழ்க, வாழ்கவே!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வாழ்க, வாழ்க, வாழ்கவே!

ஓங்குக, ஓங்குக!
புதிய ஜனநாயகப் புரட்சி
ஓங்குக, ஓங்குக!

வாழ்க வாழ்க வாழ்கவே!
மே நாள் வாழ்கவே!

***

வெட்டி வீழ்த்துவோம்! வெட்டி வீழ்த்துவோம்!
பன்னாட்டுக் கம்பெனிகளின்
பார்ப்பன சர்வாதிகாரத்தை
வெட்டி வீழ்த்துவோம்! வெட்டி வீழ்த்துவோம்!

கட்டி எழுப்புவோம்! கட்டி எழுப்புவோம்!
உண்மையான ஜனநாயகத்திற்கான
மாற்று அதிகார அமைப்புகளைக்
கட்டி எழுப்புவோம்! கட்டி எழுப்புவோம்!

***

பகற்கொள்ளை, பகற்கொள்ளை
தனியார் பள்ளிகள் பகற்கொள்ளை
கட்டணக் கொள்ளையைத் தாங்காமல்
பெற்றோர்களோ தற்கொலை!
மாறிவிடுமா? மாறிவிடுமா?
மோடி ஆட்சி வந்தாலும்
லேடி ஆட்சி வந்தாலும்
மாறிவிடுமா? மாறிவிடுமா?

ஜூன் மாதம் பள்ளி திறக்குது
பெற்றோர்களுக்கோ பீதி பரவுது
கல்விக் கட்டணத்தை நினைத்தாலே
வாழ்க்கையே நொந்து போகுது!
மாறிவிடுமா? மாறிவிடுமா?
மோடி ஆட்சி வந்தாலும்
லேடி ஆட்சி வந்தாலும்
மாறிவிடுமா? மாறிவிடுமா?
யார் ஆட்சி வந்தாலும்
ஒழியாது, ஒழியாது!
கல்வித் தனியார்மயம் ஒழியாது!

அம்மை நோய் பரவுது
வைரஸ் நோய் பரவுது
டாக்டரிடம் காரணம் கேட்டா
குடிநீரில் கோளாறு என்கிறாரு
அம்மா தண்ணீரு பத்துரூபா
அக்வா தண்ணீரு இருபதுரூபா
ஜோரா நடக்குது, ஜோரா நடக்குது!
தண்ணீர் வியாபாரம் ஜோரா நடக்குது!
தண்ணியை விக்கிற அம்மாதான்
தனியார்மயத்தின் காவலாளி!

இஞ்ஜினியரிங் காலேஜெல்லாம்
காத்து வாங்குது, காத்துவாங்குது!
பி.இ. படிச்சவன் பட்டமெல்லாம்
காத்துல பறக்குது, காத்துல பறக்குது!
வேலையின்மையை உருவாக்கிய
தனியார்மயத்தின் தாசர்களான
ஓட்டுக் கட்சிகளின் ஆட்சி மாற்றம்
வேலையில்லாத் திண்டாட்டத்தை
ஒழிக்காது, ஒழிக்காது!

வாஜ்பாயி தொடங்கி வைத்து
மன்மோகன் அழைத்து வந்த
வால்மார்ட்டும், ரிலையன்சும்
சில்லரை வணிகத்தை
நசுக்க வருது! நசுக்க வருது!
நாலு கோடி வியாபாரிகளை
ஒழிக்க வருது! ஒழிக்க வருது!
புதிய ஆட்சி என்பதெல்லாம்
போராடும் வணிகர்களை
-ஒடுக்க வருது! ஒடுக்க வருது!

பால் குடிக்கும் குழந்தையைக் கூட
பாலியல் வன்முறை விட்டுவைக்கல
பள்ளிக் கூட மாணவர்களை
செக்ஸ் வெறி விட்டுவைக்கல
காரணம் என்ன, காரணம் என்ன?
தனியார்மயத்தின் முன்னேற்றமெனும்
செல்ஃபோனும் இன்டர்நெட்டும்

இன்டர்நெட்டில் பிரச்சாரம் செய்து
ஆட்சிபுடிக்கும் ஓட்டுக்கட்சிகள்
பாலியல் வன்முறை ஒழிக்காது!

விவசாயிகளுக்கு சோறுபோட்டது
விவசாயம் என்பதெல்லாம்
அந்தக்காலம்! அந்தக்காலம்!
விவசாயத்தைக் காப்பாற்ற
பெங்களூருக்கும் திருப்பூருக்கும்
ஓடியது கடந்தகாலம்!
விளைநிலத்தை விற்றுவிட்டு
ஊரைவிட்டே ஓடுவது
இந்தக்காலம்! இந்தக்காலம்!
விவசாயம் ஒழிந்ததற்கு
காரணம் யார்? காரணம் யார்?
மூன்று இலட்சம் விவசாயிகள்
தற்கொலைக்குக் காரணம் யார்?
டாடா, பிர்லா, அம்பானிக்காக
விவசாயத்தை ஒழித்துக் கட்டிய
தனியார்மயத்தின் தாசர்களே!
தனியார் முதலாளிகளுக்கு
விளைநிலங்களை தாரைவார்த்த
குஜராத்தின் முதலமைச்சர்
விவசாயிகளின் எதிரியே!

எட்டு மணிநேர வேலையில்லை
பணிப்பாதுகாப்பு ஏதுமில்லை
நிரந்தமான வேலையில்லை
மருத்துவ வசதி ஏதுமில்லை
உரிமைகள் ஏதுமில்லாமல்
உழன்று சாகிறான் தொழிலாளி!
தனியார்மயத்தின் பரிசு இது!
தொழிலாளர்கள் கொத்தடிமைகள்
உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு
சங்கம் வைக்கும் உரிமையில்லை!
ஏட்டளவில் இருக்கின்ற
தொழிலாளர் உரிமைகளை
இல்லாமல் ஒழிப்பதற்கு
கார்ப்பரேட் கம்பெனிகள்
ஓநாய்களாக திரிகின்றன.

கான்ட்ராக்ட் தொழிலாளி என்பதெல்லாம்
கன்ஃபார்ம் தொழிலாளி என்பதெல்லாம்
தொழிலாளர்களை பிரித்துவைத்து
ஒடுக்குவதற்கே ஒடுக்குவதற்கே
புரிந்து கொள் புரிந்து கொள்!

பயிற்சி மாணவர் என்ற பெயரில்
வேலை செய்பவரும் தொழிலாளியே
பயிற்சி என்ற பெயரிலே
நமது உழைப்பை சுரண்டுகிறான்!
தீவிரமடையும் தீவிரமடையும்
புதிய ஆட்சி அமைந்தபின்னர்
தொழிலாளர் மீதான
அடக்குமுறைகள் தீவிரமடையும்!

ஜனநாயக ஆட்சி என்ற பெயரில்
இயற்கை வளங்களை சூறையாடுறான்!
இரும்புத்தாதை கொள்ளையடிக்க
சட்டீஸ்கர் மாநிலத்தில்
பழங்குடி மக்களை விரட்டியடிக்கிறான்!
திரு வண்ணாமலை மாவட்டத்திலேயே
கவுத்தி வேடியப்பன் மலைகளை
ஜிண்டாலுக்கு தாரை வார்க்க
விவசாயிகளை விரட்டியடிக்கிறான்!
தஞ்சை, திருவாரூர் மாவட்ட
விவசாயிகளை விரட்டியடிக்க
மீத்தேன் நிலக்கரி எடுப்புத் திட்டமாம்
தீவிரமடையும் தீவிரமடையும்!
மோடி ஆட்சி என்றாலும்
கேடி ஆட்சி என்றாலும்
இயற்கை வளத்தை சூறையாடும்
தனியார்மயத்தின் கொடுமைகள்
தீவிரமடையும் தீவிரமடையும்!

பொதுசிவில் சட்டமென்றும்
முசுலீமகள் எதிரியென்றும்
ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. பேசுவது
கார்ப்பரேட் கொள்ளையை மறைப்பதற்கே!
உழைக்கும் மக்களை கூறுபோடவே!
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!
உழைக்கும் வர்க்கம் என்ற பெயரில்
ஓரணியாய் அணிதிரள்வோம்!

***

ஓட்டுக் கட்சிகள் அத்தனையும்
தனியார்மயத்தின் தாசர்களே!
மாறிவிடாது, மாறிவிடாது!
புதிய ஆட்சி வந்துவிட்டாலே
நமது அவலங்கள் மாறிவிடாது!
தீவிரமடையும், தீவிரமடையும்
விலைவாசி உயர்வும் நெருக்கடிகளும்
தீவிரமடையும், தீவிரமடையும்!

சலுகைகளும் மானியங்களும்
பன்னாட்டு முதலாளிக்கு
வறுமையும் தற்கொலையும்
நம்நாட்டு மக்களுக்கு
இதுதான் போலி ஜனநாயகம்!

ஓட்டுக் கட்சிகள் அத்தனையும்
தனியார்மயத்தின் அடிமைகளே
ஓட்டுக் கட்சிகள் அத்தனையும்
கார்ப்பரேட் கம்பெனிகளே

***

நாட்டை கூட்டிக் கொடுக்கும் மன்றம்
சட்டமன்றம், பாராளுமன்றம்!
காசுக்கு நீதியை விற்கும் மன்றம்
நீதிமன்றம் நீதிமன்றம்!
கார்ப்பரேட்டுகளின் அடியாள் படை
தாசில்தாரும் கலெக்டரும்!
உழைக்கும் மக்களை ஒடுக்கும் படை
போலீசும் இராணுவமும்!
பத்திரிகை டீவி என்பதெல்லாம்
கார்ப்பரேட்டுகளின் பாக்கெட்டிலே
பத்திரிகை சுதந்திரம் என்பதெல்லாம்
ஆபாச சீரழிவு பிரச்சாரம்தான்!
புரிந்து கொள்வோம்! அடையாளம் காண்போம்!
உழைக்கும் மக்கள் எதிரிகளைப்
புரிந்து கொள்வோம்! அடையாளம் காண்போம்!

ஆணையங்கள் என்ற பெயரில்
கார்ப்பரேட்டுகளின் ஆட்சி நடக்குது!
சட்டமியற்றும் அதிகாரம் கூட
நாடாளுமன்றத்திற்கு இனிமேல் இல்லை
அரசியலமைப்புச் சட்டம் என்பதே
கார்ப்பரேட் கம்பனிகளின் நிலையாணை தான்

கொள்ளையடிப்பதே கொள்கையானபின்
சட்டம் – நீதி தேவையில்லை
என்பதுதான் மோடி மந்திரம்!
பாசிசத்தின் மூடு மந்திரம்!

***
அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
அநீதிகளுக்கு முடிவு கட்டுவோம்!

நிலம், நீர், காற்று எல்லாம்
கல்வி, மருத்துவம், சாலை எல்லாம்
உழைக்கும் மக்களின் உரிமையாக்குவோம்!
பொது உடைமை யாக்குவோம்!
போக்குவரத்து, மின்சாரம்
தொலைபேசி எல்லாமே
உழைக்கும் மக்களின் உரிமையாக்குவோம்!
பொது உடைமை யாக்குவோம்!
தனியார் உடைமையை ஒழித்துக் கட்டுவோம்!
பொது உடைமை யாக்குவோம்!

நில முதலைகள், கல்வி வியாபாரிகளின்
மருத்துவம், தண்ணிர் வியாபாரிகளின்
சொத்துரிமையைப் பறித்தெடுப்போம்!
வாக்குரிமையைப் பறித்தெடுப்போம்!

பன்னாட்டுக் கம்பெனிகள்
டாடா – பிர்லா – அம்பானிகளின்
சொத்துக்களை பறிமுதல் செய்வோம்!
உரிமைகளை பறித்தெடுப்போம்!

இலஞ்ச ஊழலில் கொள்ளையடித்த
அதிகாரிகள், அரசியல்வாதிகளின்
சொத்துக்களைப் பறித்தெடுப்போம்!
வாக்குரிமையைப் பறித்தெடுப்போம்!

ஆலைகள் தோறும் கமிட்டிகள் அமைப்போம்!
ஆலை நிர்வாகத்தைக் கையிலெடுப்போம்!
நகரங்கள் தோறும் கமிட்டிகள் அமைப்போம்!
நகரத்தை நிர்வாகம் செய்வோம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் கமிட்டிகளை
நாடு முழுவதற்குக் கட்டியமைப்போம்!
விளை பொருளுக்கு விலை நிர்ணயம்
சாலை அடிப்படை வசதிகள் வரை
அனைத்து பிரச்சனைகளையும்
மக்கள் கமிட்டிகள் மூலமே
தீர்வு காண்போம்! தீர்வு காண்போம்!

போலீசு, இராணுவம், நீதிமன்றங்களின்
அதிகாரங்களைப் பறித்தெடுப்போம்!
தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டிகளின்
அதிகாரத்தின் கீழ் கட்டுப்படுத்துவோம்!

இரட்டையாட்சியை ஒழித்துக் கட்டுவோம்!
சட்டமியற்றவும் அமுல்படுத்தவும்
அதிகாரம் கொண்ட அமைப்பாக்குவோம்!
மக்கள் பிரதிநிதி தவறிழைத்தால்
திருப்பியழைக்கவும் தண்டிக்கவும்
அதிகாரம் மக்களுக்கே!

போராட்டங்களைக் கட்டியமைப்போம்!
எழுச்சிகளை வளர்த்தெடுப்போம்!
உண்மையான ஜனநாயகத்தை
மாற்று அதிகார அமைப்புகளை
வளர்த்தெடுப்போம்! வளர்த்தெடுப்போம்!

அதிகாரத்தைக் கையிலெடுப்போம்!
அநீதிகளுக்கு முடிவு கட்டுவோம்!
போலி ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டுவோம்!
புதிய ஜனநாயகத்தை கட்டியமைப்போம்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி- விவசாயகள் விடுதலை முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள். தொடர்புக்கு:செல்-9788011784

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க