privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்முதலீட்டு ஒப்பந்தங்கள்: இந்தியாவின் மீது பூட்டப்பட்ட பொன்விலங்கு!

முதலீட்டு ஒப்பந்தங்கள்: இந்தியாவின் மீது பூட்டப்பட்ட பொன்விலங்கு!

-

ந்நிய முதலீடுகளைக் கவர்ந்திழுப்பதொன்றுதான் நாட்டை முன்னேற்றுவதற்கு ஒரே வழி என்று ஆளும் வர்க்கமும் ஓட்டுக்கட்சிகளும் ஒரே குரலில் நெடுநாட்களாக கூவி வருகின்றனர். இருந்த போதிலும், அந்நிய முதலீட்டாளர்களுடன் அரசு போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் மட்டும் இராணுவ இரகசியத்தை விடப் பெரிய இரகசியமாக எல்லா அரசாங்கங்களாலும் பேணப்படுகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (–MOU) உள்ள ஷரத்துக்கள் என்ன என்பது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கே இரகசியமாக்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய இரகசியங்களைத் தோண்டித்துருவி, புலனாய்வு செய்துதான், டாடா, அதானி போன்ற நிறுவனங்களுக்குத் மோடி வழங்கியுள்ள சலுகைகள், நோக்கியாவுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள சலுகைகள், போஸ்கோவுக்கு ஒரிசா அரசு வழங்கியுள்ள சலுகைகள் போன்றவை குறித்த விவரங்களைப் பத்திரிகையாளர்களோ, ஆர்வலர்களோ வெளிக்கொண்டு வருகின்றனர். இவையெல்லாம் குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அரசு போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் குறித்த நிலைமை.

இவையன்றி முதலீடு செய்யும் நிறுவனங்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவையோ அந்த நாடுகளின் அரசுகளுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களையும் (bilateral investment treaties) இந்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. 2012-ம் ஆண்டு ஜூலை நிலவரப்படி, இந்தியா இதுவரை 73 நாடுகளுடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. மேலும் சுமார் 20 நாடுகளுடனான ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தை நிலையில் உள்ளன. நாடுகள் என்று அழைக்கப்படும் இவற்றில் பெரும்பாலானவை மொரிசியஸ், கேமேன் தீவுகள் போன்ற பன்னாட்டு முதலாளிகளின் பொம்மை அரசாங்கங்கள்.

இப்படி பிற நாடுகளுடன் போடப்படும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் எதுவும் நாடாளுமன்றத்தின் பார்வைக்குக்கூட வருவது கிடையாது. இவை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் மிகவும் இரகசியமாகவே போடப்படுகின்றன. முரண்பாடுகள் தோன்றி பிரச்சனை சந்திக்கு வரும்போதுதான், இந்த ஒப்பந்தங்களின் அபாயகரமான உண்மை உருவம் தெரியத் தொடங்குகிறது. மறுகாலனியாக்கம் என்பது காலனியாதிக்கத்துக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்பதை நிரூபிக்கும் எடுத்துக்காட்டுகள் இவை.

***

09-12ஜி அலைக்கற்றை ஊழல் என்று அறியப்படும் கார்ப்பரேட் கொள்ளை நாடறிந்தவொரு பிரச்சனை. சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும்” 2ஜி உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி 22 தொலைத் தொடர்பு நிறுவனங்களின் 122 உரிமங்களை ரத்து செவதாக பிப்.2012 -ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, உரிமங்களை இழந்த நிறுவனங்களில் ‘லூப் டெலிகாம்’ என்ற நிறுவனமும் ஒன்று. 21 உரிமங்களை வைத்திருந்த இந்நிறுவனம், இத்தீர்ப்புக்குப் பின் பல்வேறு மாநிலங்களில் தான் வழங்கி வந்த செல்பேசி சேவைகளை நிறுத்த வேண்டியதாயிற்று. மேற்கூறிய ‘லூப் டெலிகாம்’ நிறுவனத்தின் 26 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும் மொரிசியஸ் நாட்டைச் சேர்ந்த, ‘கேத்தான் ஹோல்டிங்ஸ் மொரிசியஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம், இப்போது இந்திய அரசுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாகத் தனக்கு நட்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனைச் சரிசெய்ய, தனக்கு இந்திய அரசு 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் (8700 கோடி ரூபாய்) நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கேத்தான் ஹோல்டிங்ஸ் கோரியிருக்கிறது.

முதலீட்டு அபிவிருத்தி, மற்றும் பாதுகாப்புக்கான இந்தியா -மொரிசியஸ் இருதரப்பு ஒப்பந்தத்தின்” கீழ் இந்திய அரசிடம் இந்த இழப்பீட்டைக் கேட்கிறது இந்நிறுவனம்.

இதேபோன்று, 2ஜி அலைக்கற்றை தீர்ப்பினால் தங்களது உரிமத்தை இழந்த ரசிய நிறுவனமான ‘சிஸ்டமா’வும் வழக்கு தொடுத்துள்ளது. உரிமத்தை இழந்த இன்னொரு நிறுவனம் நார்வே நாட்டின் ‘டெலிநார்’. டெலிநார் ஆசியா என்ற பெயரில் சிங்கப்பூரில் பதிவு செய்துள்ள தனது கிளை நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் முதலீடு செய்திருப்பதால், “இந்திய – சிங்கப்பூர் இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தந்தின்” கீழ் 70,000 கோடி ரூபாய் இழப்பீடு கோரவிருப்பதாக டெலிநார் அறிவித்தது.

உடனே இந்திய அரசு டெலிநார் மற்றும் சிஸ்டமா தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அலைக்கற்றை மறுஏலத்தில் அவர்களுக்குப் போதுமான உரிமங்கள் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டதுடன் சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது.

அலைக்கற்றை விவகாரத்தில் முறைகேடாக உரிமத்தைக் கொடுத்த குற்றத்துக்காக” ஆ.ராசா உள்ளே வைக்கப்பட்டார். ஆனால், முறைகேடாக உரிமத்தை வாங்கிய நிறுவனங்களிடம் மண்டியிட்டு சரணடைந்திருக்கிறது இந்திய அரசு. அதாவது, ஊழல் உள்ளிட்ட எத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டாலும், அந்நிய முதலீட்டாளருக்கு எதிராக இந்திய அரசோ, நீதிமன்றமோ நடவடிக்கை எடுக்க முடியாது என்பது மட்டுமல்ல; ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, பன்னாட்டு நிறுவனத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில் இதற்கான இழப்பீட்டையும் இந்திய அரசு `செலுத்த வேண்டியிருக்கும் என்பதே இந்த இருதரப்பு ஒப்பந்தம் கூறும் உண்மை. சிங்கப்பூருடனான இந்த இருதரப்பு ஒப்பந்ததை 2003 மே மாதத்தில் வடிவமைத்தது வாஜ்பாயி அரசு; அதனை 2005-இல் இறுதியாக்கியது மன்மோகன் அரசு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

***

வேறொரு வழக்கில், ஆஸ்திரேலியாவுடன் இந்தியா போட்டிருக்கும் இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, நவம்பர் 2011-ல் சர்வதேசத் தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு, நீதிமன்றத் தாமதத்திற்காக இந்திய அரசுக்கு அபராதம் விதித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒயிட் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை அரசுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் ஜார்கண்டில் பிபாவார் எனுமிடத்தில் நிலக்கரிச் சுரங்கம் தோண்டும் பணிகளில் ஈடுபடுத்தியிருந்தது. ஒயிட் இன்டஸ்ட்ரீஸ் தரமற்ற கருவிகளைத் தலையில் கட்டியதால், தனக்கு நட்டம் ஏற்பட்டதாகக் கூறி, ஒயிட் இன்டஸ்ட்ரீஸ் அளித்திருந்த வங்கி உத்திரவாதத் தொகை 27 இலட்சம் டாலரை எடுத்துக் கொள்வதாக கோல் இந்தியா 1999-ம் ஆண்டு அறிவித்தது.

இதனை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகள் 2011-ம் ஆண்டு வரை முடியாத காரணத்தினால், அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் சர்வதேச தீர்ப்பாயத்துக்குச் சென்றது. இந்திய உச்ச நீதிமன்றம் ஐந்து ஆண்டு காலத்திற்கு மேல் இவ்வழக்கில் நீதி வழங்காமல் இழுத்தடித்ததால், இந்திய அரசுதான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டுமென்றும், ஒயிட் இன்டஸ்ட்ரீஸுக்கு ஒரு கோடி டாலர் நட்ட ஈடு அளிக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்திருக்கிறது சர்வதேசத் தீர்ப்பாயம்.

மன்மோகன் - ஒபாமா
இந்தியா – அமெரிக்கா இடையே இருதரப்பு ஒப்பந்தத்தை இறுதியாக்குவது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா (கோப்புப் படம்).

உச்ச நீதிமன்றத்தை விமரிசித்து, அதற்கு அபராதமும் விதிக்க வகை செய்கின்ற விதத்தில் இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறதென்றால், இதனை இறையாண்மை கொண்ட நாடு என்று கூறிக்கொள்வது வெட்கக் கேடில்லையா?

***

ரு தரப்பு ஒப்பந்தம் என்ற பெயரிலான அடிமைச்சாசனம், நீதிமன்றத் தீர்ப்பை மட்டுமல்ல; இந்திய நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரத்தையும் நேரடியாகவே கேள்விக்குள்ளாக்க முடியும் என்பதை வோடோபோன் நிறுவனம் நிரூபித்திருக்கிறது.

பன்னாட்டுத் தொலைதொடர்பு நிறுவனமான வோடாபோன், 2007-ம் ஆண்டு ’ஹட்ச்’ நிறுவனத்தை வாங்கியதில் 11 ஆயிரம் கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு மோசடி செய்தது. வருமான வரித்துறைக்கு எதிராக வோடபோன் நிறுவனம் தொடுத்த வழக்கில், “வரியைக் கட்டத் தேவையில்லை” என்று வோடோஃபோனுக்கு ஆதரவாக பிப்ரவரி 2012 – இல் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

இந்த நீதிமன்றத் தீர்ப்பு மிகப்பெரும் அளவிலான வரி வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்பதால், அதனைச் சமாளிக்கும் பொருட்டு, வரி தவிர்ப்பு நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான பொது விதிகளை (GAAR) அறிமுகம் செய்யவிருப்பதாக ” அன்றைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். இந்தச் சட்டத் திருத்தத்தைத் தடுக்க பன்னாட்டு முதலாளிகளும் தரகு முதலாளிகளும் அரசுக்குக் கொடுத்த அழுத்தம் ஒருபுறமிருக்க, வோடாஃபோன் நிறுவனமோ, இரு தரப்பு ஒப்பந்தத்தின் பெயரால் இந்திய அரசை நேரடியாகவே எச்சரித்தது.

“பின்தேதியிட்டு அறிமுகப்படுத்தப்படும் இந்த சட்டத்திருத்தம், இந்தியா – நெதர்லாந்து இருதரப்பு ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு எதிரானதாகையால், நாடாளுமன்றத்தில் இப்படியொரு சட்டத்திருத்தம் கொண்டுவரும் முடிவை இந்திய அரசு கைவிட வேண்டும். இல்லையென்றால் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேசத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுப்போம்” என்று வோடாஃேபான் நிறுவனம் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டது. பிரணாப் முகர்ஜி கொண்டுவருவதாகக் கூறிய சட்டத்திருத்தம், நிரந்தரமாக சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விட்டது.

இந்தியாவில் தொழில் நடத்தி இலாபமீட்டும் ஒரு பன்னாட்டு நிறுவனம், இருதரப்பு ஒப்பந்தத்தின் பெயரால் இந்திய நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையே ரத்து செய்ய முடியும் என்பதற்கு இது சான்று.

***

09-2து மட்டுமல்ல, இரு தரப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய அரசின் உள்நாட்டு கொள்கை முடிவுகளையும் கேள்விக்குள்ளாக்க முடியும் என டி.சி.ஐ. என்ற பிரிட்டனைச் சேர்ந்த ஹெட்ஜ் ஃபண்டு நிறுவனம் நிரூபித்து வருகிறது.

நம் நாட்டின் பெரும்பாலான நிலக்கரிச் சுரங்கங்களைத் தன் வசம் வைத்திருக்கும் கோல் இந்தியா என்ற பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனம், பொதுத்துறை அனல் மின் நிலையங்களுக்கு உலகச் சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலைக்கு நிலக்கரியை விற்று வருகிறது. மின்சாரத்தின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விலைக்குறைப்பு முடிவை எதிர்க்கின்ற டி.சி.ஐ. நிறுவனம், உலகச் சந்தை விலைக்குத்தான் நிலக்கரியை விற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

மின் உற்பத்திக்காக சந்தை விலையைவிடக் குறைவான விலைக்கு நிலக்கரியை விற்பதால், கோல் இந்தியா நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 2,000 கோடி டாலர் வருவா இழப்பு ஏற்படுவதாகவும், ஒரு பங்குதாரர் என்ற முறையில் இந்த இழப்பு தன்னுடைய இலாபத்தை பாதிப்பதாகவும் டி.சி.ஐ. கூறுகிறது. இந்தியா-பிரிட்டன் மற்றும் இந்தியா-சைப்ரஸ் இருதரப்பு ஒப்பந்தங்களின் கீழ் முதலீட்டாளரான தனது நலனை இந்திய அரசின் முடிவுகள் பாதிப்பதால், இந்திய அரசுக்கு எதிராகச் சர்வதேசத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்திருக்கிறது.

அதாவது, நம் நாட்டில் கிடைக்கும் நிலக்கரியை, நம் நாட்டு அனல் மின் நிலையங்களுக்கு என்ன விலைக்கு விற்க வேண்டும் என்று ஒரு அயல்நாட்டு நிறுவனம் அரசுக்கு ஆணையிடுகிறது. “காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்” என்ற கதைதான்! ஆனால், அன்று வெள்ளையனின் முழு அடிமையாக இந்தியா இருந்ததனால், அப்படி உத்தரவிடுவதற்கான அதிகாரத்தை பிரிட்டன் பெற்றிருந்தது.

இன்று கோல் இந்தியா நிறுவனத்தின் 90% பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. டி.சி.ஐ. என்ற பன்னாட்டு முதலீட்டு நிறுவனத்திடம் 1.1% பங்குகள் மட்டுமே உள்ளன. அதுவும் எவ்வித அவசியமுமின்றி, தனியார்மயக் கொள்கைகளின் கீழ் கட்டாயமாக விற்கப்பட்ட பங்குகளே இவை. இந்த ஒரு சதவீத பங்குகள் சாதாரண உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் இருக்கும்பட்சத்தில் ஒரு சதவீதத்தால் 90 சதவீதத்தை மிரட்டியிருக்க முடியாது. ஆனால், இந்த ஒரு சதவீத பங்குதாரர் ஒரு அந்நிய முதலீட்டாளர் என்பதால்தான், அரசை மிரட்ட முடிகிறது.

***

ரு தரப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள் என்று பெயரிடப்பட்டிருந்தாலும், உண்மையில் இவையனைத்தும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் என்ற ஒரு தரப்பைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தங்களே. 1994-க்குப் பின்னர்தான் இந்திய அரசு இத்தகைய ஒப்பந்தங்களைப் போடத் தொடங்கியது. காட் ஒப்பந்தம் என்பது எல்லா நாடுகளுக்குமான பொது விதி என்ற பெயரில் போடப்பட்டிருக்கும் ஒரு பல தரப்பு ஒப்பந்தம்.

சுதந்திர வர்த்தகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த பல தரப்பு ஒப்பந்தமே பின்தங்கிய நாடுகளைச் சுரண்டும் விதத்தில்தான் ஏகாதிபத்திய நாடுகளால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது பல்வேறு பிரச்சினைகளிலும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், அந்த பலதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பொதுவான நியாயத்தை எழுப்புவதற்கான வாப்பையும் அடைத்து, பின்தங்கிய நாடுகளுக்குக் கிடுக்கிப்பிடி போடும் விதத்தில்தான் இந்த இருதரப்பு ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தற்போது தொடர்ச்சியாக சர்வதேசத் தீர்ப்பாயத்தில் அடுக்கடுக்காக பல வழக்குகள் தொடுக்கப்படுவதால் இந்திய அரசு புதிய இருதரப்பு ஒப்பந்தங்களை ஒத்தி வைத்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படியே சுமார் 3 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய அரசிடம் இழப்பீடு கோரும் பல வழக்குகள் சர்வதேசத் தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேசத் தீர்ப்பாயம் என்பது சர்வதேச வணிகச் சட்டங்களுக்கான ஐ.நா. கமிசனுடைய விதிகளின்படி அமைக்கப்படும் மூவர் குழுவாகும். இக்குழுவின் உறுப்பினர்கள் பெரும்பாலும் பன்னாட்டு முதலாளிகளின் சட்ட ஆலோசகர்கள்தான்.

இவை அனைத்திலும் பன்னாட்டு முதலாளிகளுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. “நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படுதல், முதலீட்டாளரின் நியாயமான எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடத்தப்படுதல், பாரபட்சமின்மை ” என்பன போன்ற பொதுவான சோற்றொடர்கள் எல்லா இருதரப்பு ஒப்பந்தங்களிலும் நிறைந்திருக்கின்றன. இந்த சோற்றொடர்களைத் தங்கள் நலனுக்கு ஏற்ப வளைத்து விளக்கம் கூறும் வாப்பை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நோக்கத்தில் அரசு அதிகாரிகளும், பன்னாட்டு சட்ட வல்லுநர்களும் திட்டமிட்டேதான் ஒப்பந்தங்களை இப்படித் தயாரித்திருக்கிறார்கள்.

போட்ட மூலதனத்துக்கு பாதுகாப்பு வேண்டும்” என்ற நியாயமான நோக்கத்துக்காகத்தான் இந்த ஒப்பந்தங்கள் போடப்படுவதாக பன்னாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அரசின் இறையாண்மை, உள்நாட்டுத் தொழில்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகிய அனைத்துக்கும் பாதுகாப்பின்மையை உருவாக்குவதன் மூலம்தான் பன்னாட்டு மூலதனத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது.

சர்வதேச வர்த்தகச் சட்டங்களின் படி, இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் முதல் நகராட்சி, ஊராட்சி மன்றங்கள் வரையான அனைத்து அரசு உறுப்புகளின் நடவடிக்கைகளுக்கும் இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அரசு உறுப்புகள் மட்டுமல்ல, ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மக்கள் போராட்டம் நடத்தினால், அதற்கும் இந்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அதாவது, ஒரு பன்னாட்டு நிறுவனம் சுற்றுச்சூழலை அழிப்பதையோ, இயற்கை வளத்தைச் சூறையாடுவதையோ, தொழிலாளர் உரிமையைப் பறிப்பதையோ எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தி, அதனை அரசு தடுக்கத் தவறியதன் விளைவாக பன்னாட்டு நிறுவனத்தின் இலாபத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அதற்காகவும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அரசைச் சர்வதேச விசாரணைக்கு இழுத்து, இழப்பீடு கோர முடியும்.

இது என்றோ வரவிருக்கும் அபாயம் குறித்த முன்னறிவிப்பு அல்ல, இன்று நாம் எதிர்கொண்டுள்ள பிரச்சினை. மக்களுக்குத் தெரியாத வண்ணம் அரசாலும் ஆளும் வர்க்கத்தாலும் ஓட்டுப் பொறுக்கிகளாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ள பிரச்சினை.

– அழகு.
________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2014
________________________________________