Saturday, October 31, 2020
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் சுண்டூர் வழக்கில் ரெட்டி சாதி கொலை வெறியர்கள் விடுதலை !

சுண்டூர் வழக்கில் ரெட்டி சாதி கொலை வெறியர்கள் விடுதலை !

-

மீபத்தில் நடந்து முடிந்த, உலகிலேயே மிகப்பெரிய ‘ஜனநாயக’த் திருவிழாவான 16-வது நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம்/வாக்களிப்புக்கு மத்தியில் ஏப்ரல் 21-ம் தேதி நீதிபதி நரசிம்ம ரெட்டி, நீதிபதி எம்.எஸ்.கே ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கி ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற அமர்வு சுண்டூர் படுகொலை வழக்கு மேல்முறையீட்டில் தனது தீர்ப்பை வழங்கியது.

ஆந்திர உயர்நீதிமன்றம்
ஆந்திர உயர்நீதிமன்றம்

ஆந்திர மாநிலம் சுண்டூர் கிராமத்தில் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த 8 பேர், 400-க்கும் மேற்பட்ட ரெட்டி ஆதிக்க சாதி கும்பலால் துரத்தப்பட்டு, வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். அக்காலத்தில் இந்தியாவையே அதிர்ச்சியுறச் செய்தது இப்படுகொலை சம்பவம்.

14 ஆண்டு கால நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, 2005-ல் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், 2007-ம் ஆண்டு 56 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்து தண்டனை வழங்கியது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில், ‘கொலை நடந்த சரியான நேரம், நடந்த இடம், தாக்கியவர்களின் அடையாளம் இவற்றை முன்வைத்து குற்றத்தை சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறி விட்டது’ என்று கூறி உயர்நீதிமன்றம் அவர்களை இப்போது விடுதலை செய்திருக்கிறது.

ரெட்டிகளின் ஆதிக்க சாதிவெறிக்கு ஆதாரமில்லை என்று ஒரு ரெட்டி நீதிபதி தீர்ப்பளித்திருப்பது முரண்பாடான ஒன்றல்ல. ஒருக்கால் ரெட்டிக்கு பதில் வேறு ஆதிக்க சாதி நீதிபதிகள் இருந்தாலும் இல்லையென்றாலும் நீதிமன்றங்கள் என்னவோ, பார்ப்பன ஆதிக்க சாதி வன்கொடுமையை பற்றி நின்றே தீர்ப்பளிக்கும்.

ஆந்திராவின் கடலோர மாவட்டமான குண்டூரில் உள்ள சுண்டூர் கிராமத்தின் மக்கள் தொகை சுமார் 5,800. அவர்களில் பாதிபேர் ரெட்டி சாதியினர்; மொத்த விவசாய நிலத்தில் பாதியை சொந்தமாக வைத்திருந்தனர். தெலகா அல்லது கப்பு சாதியினரிடம் 250 ஏக்கர் நிலமும், பார்ப்பனர்களுக்கு சொந்தமாக 100 ஏக்கரும், வைசிய சாதியினருக்கு சொந்தமாக 65 ஏக்கரும் இருந்தன.

சுண்டூர் ரயில் நிலையம்
சுண்டூர் ரயில் நிலையம்

தாழ்த்தப்பட்ட மாலா சாதியைச் சேர்ந்த நிலமற்ற விவசாய கூலிகள் மொத்த மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்காக இருந்தனர். 1990-க்கு முந்தைய சில பத்து ஆண்டுகளில் கல்வி, வேலை வாய்ப்புகளில் மாலா சாதி இளைஞர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் கண்டனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தொகையில் 200 பேர் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள், 15 பேர் முதுகலை பட்டம் பெற்றிருந்தனர்.

மேலும், தெனாலி-சென்னை ரயில்தடத்தில் அமைந்துள்ள சுண்டூரில் பலருக்கு ரயில்வே, தொலை தொடர்புத்துறை மற்றும் வங்கித் துறைகளில் வேலை வாய்ப்பு கிடைத்ததோடு, ரயில் மூலம் வெளியிடங்களுக்கு காலையில் போய் வேலை செய்து விட்டு மாலை திரும்பும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால், ரெட்டி ஆதிக்க சாதியினரை பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பது குறைந்ததோடு, கல்வி, அரசு வேலைகளில் முன்னேறவும் செய்தனர்.

தாழ்த்தப்பட்ட மக்களின் இந்த பொருளாதார சுதந்திரம் ரெட்டி சாதியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்நிலையில் 1991-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி அன்று அப்போது நாக்பூரில் பட்ட மேல்படிப்பு படித்து வந்த ரவி என்ற இளைஞர், சுண்டூரின் திரைப்பட அரங்கில் முன் இருக்கையில் காலை நீட்டியிருக்கிறார். அந்த இருக்கையில் அமர்ந்திருந்த குர்ரி சீனிவாச ரெட்டி என்பவர் ரவியை சாதி பெயர் சொல்லி திட்டியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ரெட்டிக்கள், ரவியையும் அவரது அப்பாவையும் மிரட்டி இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுக்க விடாமல் செய்திருக்கின்றனர். ஆனால், காவல்துறையில் புகார் கொடுக்க மறுத்த ரவி குடும்பத்துக்கு மாலா சாதி சார்பாக ரூ 25 அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரெட்டி மற்றும் பிற ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட மாலா சாதியினரை சமூக புறக்கணிப்பு செய்ய ஒரு கமிட்டி ஏற்படுத்திக் கொண்டனர். ஆதிக்க சாதியினரின் நிலங்களில் வேலை செய்ய அனுமதி மறுப்பு, ஊரின் ஆதிக்க சாதி பகுதிகளுக்கு வர தடை, நிலக்குத்தகை ரத்து என்று பொருளாதார ரீதியாக அழுத்தம் கொடுத்து அம்மக்களை பணிய வைக்க முயற்சித்திருக்கின்றனர். தமது வயல்களில் வேலை செய்ய வெளி ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருக்கின்றனர்.

மாலா மக்களோ இதற்கு அடிபணியாமல் வெளியூர்களுக்கு வேலை செய்யப் போக ஆரம்பித்திருக்கின்றனர். சாதி மோதலை தடுக்க கிராமத்தில் 50 காவலர்களை கொண்ட  போலீஸ் காவல்சாவடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடம்
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடம்

ஜூலை 29-ம் தேதி தடை உத்தரவு நீக்கப்பட்டது. ஆகஸ்ட் 4,5 தேதிகளில் ரெட்டி சாதிக் கும்பல் ஒன்று வேலைக்கு போய்க் கொண்டிருந்த மாலா சாதியினரை தாக்கியதில் இரண்டு பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 6-ம் தேதி பக்கத்து கிராமங்களையும் சேர்ந்த ரெட்டிகளையும் திரட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்கின்றர்.

கொலைவெறித் தாக்குதல் நடப்பதற்கு சிறிது நேரம் முன்பு சர்க்கிள் இன்ஸ்பெக்டரும், வேமூரு சப் இன்ஸ்பெக்டரும் 100 காவலர்களுடன் வந்து தலித்துகளை ஓடி விடும்படி எச்சரித்திருக்கின்றனர். இதைத் தவிர தாக்குதலை எதிர்கொள்ள அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தருமபுரியில் வன்னியர் சாதி வெறியைத் தூண்டி, தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் வீடுகளை எரித்தது சிதைத்தது போலவே போலீசின் கண்பார்வையிலேயே கொலை வெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. போலீசும் ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்குத்தான் பாதுகாப்பாக இருக்கும் என்பது சுண்டூர் முதல் பரமக்குடி வரை அப்பட்டமான உண்மை.

டிராக்டர்களிலும், ஸ்கூட்டரிலும் வந்த கொலை வெறி ரெட்டி சாதிக் கும்பல் ஓடிக் கொண்டிருந்தவர்களை துரத்தி வெட்டிக்கொன்றது; அத்துடன் ஆத்திரம் அடங்காமல் கொல்லப்பட்டவர்களின் உடல்களை, கண்டம் துண்டமாக வெட்டி சாக்கு பைகளில் திணித்து கால்வாயில் விட்டெறிந்தது. காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள்  பட்டப்பகலில் இந்த கொலைவெறியாட்டம் நடந்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.

படுகொலைகள் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 9-ம் தேதி இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. நாடாளுமன்ற விசாரணைக்குழு நியமிக்க வேண்டும், நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று சில உறுப்பினர்கள் குரல் எழுப்பியதோடு தனது ஜனநாயக கடமையை முடித்துக் கொண்ட பாராளுமன்றம் அடுத்த அக்கப்போர் பணிகளுக்கு நகர்ந்து விட்டது. அப்போது இந்த படுகொலைகளை கண்டித்து பேசிய பீகாரின் தலித்திய (இப்போது லோக் ஜனசக்தி கட்சி) அரசியல்வாதி  ராம்விலாஸ் பாஸ்வான், குற்றவாளிகளை விடுவிக்கும் உயர்நீதி மன்ற தீர்ப்பு வெளியான நேரத்தில் பீகாரில் தலித் மக்களை கொன்று குவித்த ரண்வீர்சேனாவின் கட்சியான பா.ஜ.கவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் ஓட்டு பொறுக்கிக் கொண்டிருந்தார். இப்போதும் மோடியுடன் பல்லிளித்தவாறு போஸ் கொடுக்கிறார். தலித்தியத்தின் சாதனை இப்படித்தான் அம்பலமேறியிருக்கிறது.

இந்தப் படுகொலைகள் நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு நாடெங்கிலும் 45-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தியாவின் 20 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான பார்ப்பனிய ஆதிக்க சாதி அடிமைத்தளை இன்று வரை உடைக்கப்படாமலேயே உள்ளது.

அனில்குமார் நினைவகம்
சுண்டூர் கொலையாளிகளை கைது செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்த போது போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட அனில்குமாரின் நினைவிடம்.

சுண்டூர் படுகொலைகள் நடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு 1996 ஜூலையில் பீகாரில் பதோனி டோலாவில் 21 தாழ்த்தப்பட்டவர்கள் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்டனர்.

1997-ம் ஆண்டு இட ஒதுக்கீடு, உயர் பதவிகளில் சில தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இடம், என்று தலித்துகளுக்கு சமூகநீதி வழங்கி விட்டதாக மோசடி பிரச்சாரம் செய்யும் இந்திய ஆளும் வர்க்கம், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கே ஆர் நாராயணனை குடியரசுத் தலைவர் ஆக்கியிருந்தது. தலித் அறிவுஜீவிகளும் இதை மாபெரும் சாதனையாக கொண்டாடியிருந்தார்கள்.

ஆனால், ‘குடியரசுத் தலைவராக ஒரு தலித் நியமிக்கப்பட்டுள்ளார், இனி நாம் ஒடுக்குமுறையை செலுத்தாமல் வாழவேண்டும்’ என்று ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ‘தெரிந்திரு’க்கவில்லை. 1997 டிசம்பர் 1 அன்று இரவு 11 மணிக்கு லட்சுமண்பூர் பதே கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களான பூமிகார் சாதியினரின் குண்டர்  படையான ரண்வீர் சேனா நடத்திய கொலைவெறித் தாக்குதலில் 58 தாழ்த்தப்பட்டவர்கள் பலியானார்கள்.

உத்தமர் வாஜ்பாயி பிரதமராக ஆன பிறகு நவம்பர் 1998-ல் போஜபூர் மாவட்டம் நகரி கிராமத்தில்  தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த 10 மா.லெ ஆதரவாளர்களை, ரண்வீர் சேனா என்ற ஆதிக்க சாதி கூலிப்படையினர் கொன்று குவித்தனர்.

ஜூன் 2000-ல் அவுரங்கபாத் மாவட்டம் மியான்பூர் கிராமத்தில் 34 தாழ்த்தப்பட்டவர்களை ரண்வீர் சேனா குண்டர்கள் படுகொலை செய்தனர்.

லஷ்மண்பூர்-பதே படுகொலையை கே.ஆர். நாராயணன், தேசிய அவமானம் என்று சாடி கண்டனம் தெரிவித்தார். இதைத்தாண்டி ஒரு தலித் குடியரசுத் தலைவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்போது பீகாரில் ஆட்சியில் இருந்த லல்லு பிரசாத் யாதவின் மனைவியான ராப்ரி தேவியின் ராஷ்ட்ரிய ஜனதா தள அரசாங்கம் ரன்வீர் சேனாவுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி விசாரணை நடத்த நீதிபதி ஆமிர்தாஸ் தலைமையிலான ஒரு ஆணையத்தை நியமித்தது.

பின்னர் 2006-இல் ஆட்சிக்கு வந்த நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள – பா.ஜ.க. கூட்டணி அரசாங்கம் அந்த ஆணையத்தைக் கலைத்து, அதன் விசாரணை அறிக்கையை முடக்கி வைத்தது. அந்த  நிதீஷ் குமார்தான் இப்போது தேர்தலில் தலித் ஓட்டுகளை பொறுக்குவதற்காக மகாதலித் ஜிதன் ராம் மஞ்சியை முதலமைச்சர் ஆக்குவதாக சமூகநீதி நாடகம் ஆடுகிறார்.

பதனி தோலா வழக்கில் 2012-ம் ஆண்டு ஏப்ரலில் குற்றவாளிகள் 23 பேரை பாட்னா உயர்நீதி மன்றம் விடுவித்துள்ளது.

நகரி கொலையாளிகள் 11 பேரை 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் பீகார் உயர்நீதி மன்றம் விடுதலை செய்தது.

லஷ்மண்பூர்பதே படுகொலை வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை, 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போலீசு தரப்பு குற்றத்தை நிரூபிக்க தவறி விட்டது எனக் கூறி உயர்நீதி மன்றம் விடுவித்தது.

மியான்பூர் வழக்கிலும் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்து குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்திரவிட்டது பாட்னா உயர்நீதி மன்றம்.

சுண்டூர் வழக்கின் 23 ஆண்டு இழுத்தடிப்பு
சுண்டூர் வழக்கின் 23 ஆண்டு இழுத்தடிப்பு (படம் : நன்றி The Hindu)

இந்த சமூக, அரசியல் சூழலில்தான் சுண்டூரில் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி பெறும் போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

கொன்று சிதைக்கப்பட்ட உடல்களை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர் ரவிகுமார், அந்த கொடூரம் விளைவித்த மன அழுத்தத்தை சகிக்க முடியாமல் சில நாட்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். ஒரு மருத்துவருக்கு இருக்கும் குற்ற உணர்வு இங்கே காவலர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இல்லை என்பதோடு அது கொலை உணர்வாகவும் உரு மாறியிருக்கிறது.

கொலையாளிகளை உடனடியாக கைது செய்யும்படி கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய 22 வயதான அனில் குமார் என்ற நேரடி சாட்சியத்தை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது. தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு 14 ஆண்டுகளுக்குப் பிறகு  2005-ம் ஆண்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை துவங்கியது.

ஆனால், கொலையாளிகளான ரெட்டி சாதியினர் நீதித்துறையிலும், அதிகார வர்க்கத்திலும், காவல்துறையிலும் தமக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி வழக்கை இழுத்தடிக்கவும், நீர்த்துப் போகச் செய்யவும் அனைத்து முயற்சிகளையும் செய்தனர். இந்த படுகொலைகள் நடக்கும் போது ஆந்திராவில் முதலமைச்சராக இருந்தவர் காங்கிரசு கட்சியின் ஜனார்த்தன் ரெட்டி, உள்துறை அமைச்சராக இருந்தவர் மைசூரா ரெட்டி. படுகொலைகளுக்கு ஒன்றரை மாதம் முன்புதான் ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரசுக் கட்சியின் பி.வி.நரசிம்ம ராவ் என்ற பார்ப்பனர் நாட்டின் பிரதமராகியிருந்தார். அவரது தலைமையில் மன்மோகன் சிங் தொடங்கி வைத்த மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அமெரிக்க பெப்சியும், கோக்கும், டி-20 கிரிக்கெட்டும் தலை விரித்து ஆட ஆரம்பித்து நாட்டை 21-ம் நூற்றாண்டுக்குள் கொண்டு வந்து விட்ட பிறகும் சுண்டூர் படுகொலைகளுக்கும் சரி, தருமபுரி முதல் பாட்னா வரை நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடந்து வரும் பல தாக்குதல்களுக்கும் நீதி வழங்கப்படவில்லை.

வன்கொடுமை சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதை எதிர்த்து மனு, அரசு வழக்கறிஞர் நக்சலைட் ஆதரவாளர் எனக் கூறி அவரை மாற்ற வேண்டும் என்று மனு, பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி பெற்ற உரிமையான வழக்கை சுண்டூர் கிராமத்தில் நடத்துவதை அனுமதிக்கக் கூடாது என்று மனு, நீதிபதி பிரபாகர் ராவ் தலித் என்பதால் அவரை மாற்ற வேண்டும் என மனு என அடுத்தடுத்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் மூலம் வழக்கிற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர், ரெட்டி ஆதிக்க சாதிவெறியர்கள். இதன் விளைவாக நீதிபதி பிரபாகர் ராவ் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு அனீஸ் என்ற நீதிபதி நியமிக்கப்பட்டார்.

தலித் மக்கள்
நீதிக்கான போராட்டத்தில் உறுதியாக நின்ற தலித் மக்கள்.

தலித் மக்களை விலைக்கு வாங்குவதற்கு பல வழிகளில் முயற்சிக்கப்பட்டது. ஆந்திர அரசும் ரெட்டிகளின் முயற்சிக்கு துணை நின்றது. சிலருக்கு வேலை வழங்குவது, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்ற முயற்சிகளின் மூலம் நீதி வேண்டும் என்ற கோரிக்கையை அவர்களை மறந்து விடச் செய்ய முயற்சித்தது அரசு. குஜராத்தில் 2002-ல் கொல்லப்பட்ட முஸ்லீம்களுக்கு நீதிக்கு பதிலாக, தனது பாணி ‘வளர்ச்சி’யை தருவதாக மோடி சொன்னது அவரது சொந்தக் கண்டுபிடிப்பு இல்லை, பார்ப்பனிய மனுதர்மத்தின் அடிப்படையே இதுதான் என்று புரிந்து கொள்ளலாம். ஆனால், தலித் மக்கள் தமது நீதிக்கான போராட்டத்தில் உறுதியாக நின்றனர்.

தருமபுரியில் 400 வீடுகளை தீவைத்து கொளுத்தியும், ஒரு தலித் இளைஞனை துரத்தித் துரத்தி மரணத்துக்கு தள்ளியும்  வன்னிய சாதி வெறியை காட்டிய ராமதாசு பிற ஆதிக்க சாதியினரையும் இணைத்து ஒரு சாதி வெறி கூட்டணியை உருவாக்க முயற்சி செய்தது போல ரெட்டிகளும், தெலகாக்களும் இணைந்து, தலித் மக்களை ஒடுக்குவதற்காக ‘அனைத்து மக்களையும் முன்னேற்றுவதற்கான போராட்ட கமிட்டி’ ஒன்றை ஏற்படுத்தினர்.

சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் இறுதியில் 2007-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 21 பேருக்கு ஆயுள் தண்டனை, 35 பேருக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ 2,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 43 பேர் தொடர்பான சாட்சியங்களை நிராகரித்தும், 62 பேரை சந்தேகத்தின் பேரிலும், 20 பேர் தொடர்பாக போதுமான சாட்சியங்கள் இல்லை எனவும் மொத்தம் 123 பேர் விடுதலை செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ரெட்டி சாதியினரில் செல்வாக்கு மிகுந்த பலரை விடுவிக்கும்படி பலவீனமான குற்றப் பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்திருந்தது. நீதிமன்றம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தண்டனை குற்றவியல் சட்டத்தின் கீழ்தான் வழங்கப்பட்டிருந்தது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி அனீஸ் இப்போது உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். ஒரு வகையில் இந்த தீர்ப்பே அவர்களை மேல் முறையீட்டில் விடுவிப்பதற்கான இடைக்கால ஏற்பாடு என்றும் சொல்லலாம்.

உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒரு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட 35 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கக் கோரியும், விடுவிக்கப்பட்ட 123 பேரை மீண்டும் வழக்கில் சேர்க்கக் கோரியும, வன்கொடுமை தடுப்புச்  சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும்படியும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் தாம் குற்றமற்றவர்கள் என்றும் தம்மை விடுவிக்கும்படியும் மேல்முறையீடு செய்தனர்.

உயர்நீதிமன்றமோ, குற்றவாளிகளின் மேல்முறையீட்டை மட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. ரெட்டி சாதியினர் சிறையில் வாடுவதால் அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது என்று நியாயப்படுத்தினார் நீதிபதி நரசிம்மா ரெட்டி. அதை எதிர்த்து நீதிமன்ற அமர்வு மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய தலித் தரப்பை ஏளனம் செய்து, “வழக்கை விசாரிக்கும் போது எதிர் தரப்பின் விருப்பத்தின்படி ஆடினால், நீதித்துறை எப்படி செயல்பட முடியும்” என்று திமிராக பதிலளித்தார் நரசிம்மா ரெட்டி. ரெட்டி ரெட்டியுடன்தான் இனம் சேரும்.

இதே நீதித்துறை, சிறப்பு நீதிமன்ற நீதிபதியை மாற்ற வைத்த போதும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா நீதிபதியை மாற்றக் கோரியபோதும் கைகட்டி, வாய் புதைத்து அந்த கட்டளைகளை நிறைவேற்றி சாதிக்கேற்ற சட்டம் என்ற மனுநீதியை தவறாமல் கடைப்பிடித்து வருகிறது.

ஏப்ரல் 21-ம் தேதி தீர்ப்பின்படி குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாரும் தலித்துகள் மீதான தாக்குதலை நடத்தவில்லை என்றால் கொல்லப்பட்ட 8 தலித்துகளும் தம்மைத் தாமே வெட்டிக்கொண்டு, தமது உடலை தாமே சாக்குப் பையில் அடைத்துக் கொண்டு கால்வாயில் எறிந்து கொண்டார்கள் என்று நீதித்துறை கருதுகிறதா? என்று தலித் அமைப்புகள் குமுறுகின்றன.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தாக்குதலில் தொடர்பு உடையவர் என்பதற்கு நேரடியான எந்த ஆதாரங்களும் இல்லா விட்டாலும் நாட்டின் கூட்டு மனசாட்சியை திருப்திப் படுத்துவதற்கு அப்சல் குருவை தூக்கு மேடைக்கு அனுப்பிய இந்திய நீதித்துறை, பட்டப்பகலில் கொலைவெறித் தாக்குதல் நடத்தி படுகொலைகள் செய்த ரெட்டி ஆதிக்க சாதிவெறிக் கும்பலை சுதந்திர மனிதர்களாக உலாவ விட்டிருக்கிறது. தேசத்தின் கூட்டு மனசாட்சியோ மோடியின் குஜராத் பாணியிலான ஆட்சி, குஜராத் பாணியிலான கார்ப்பரேட் வளர்ச்சி என குஜராத் பாணியிலான ‘சமூகநீதி’க்கான கனவில் ஆழ்ந்திருக்கிறது. அந்த வகையில் மோடியின் ஆட்சி கூட ரெட்டிகளுக்குத்தான் வரப்பிரசாதம் என்பது உண்மை. சீமாந்திராவில் தெலுங்கு தேசம் எனும் ஆதிக்க சாதி கட்சியுடன்தானே பாரதீய ஜனதா கூட்டணி வைத்திருக்கிறது!

ஜெகன்மோகன் ரெட்டி கட்சியில் தலித் தலைவர்கள்
ஜெகன்மோகன் ரெட்டி கட்சி சார்பாக தலித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமது தீர்ப்பில், “தனிநபர்களும் அமைப்புகளும் பரஸ்பர மரியாதையையும், மனித பண்புகளையும் வளர்க்க முயற்சிக்க வேண்டும். நடந்ததை மறந்து சமாதானமாக வாழுங்கள்” என ‘2002-ல் கலவரம் நடந்தது, ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள், அதனால் என்ன, கொலையாளிகள் உங்களுக்கு தரும் ‘வளர்ச்சி’யை வாயைப் பொத்திக் கொண்டு வாழுங்கள்’ என்று மோடி சொல்வது போல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அறிவுரை கூறியிருக்கின்றனர்.

தீர்ப்பைத் தொடர்ந்து ஏப்ரல் 25-ம் தேதி ஜலடி மோசஸ் என்பவர் தேர்தலை புறக்கணிக்கும் படி கேட்பதற்கு நடத்திய கூட்டத்தில் 1,600 குடும்பங்கள் கலந்து கொண்டனர். ஆனால், தேர்தல் புறக்கணிப்பு செய்தால், இன்னொரு தாக்குதலை எதிர்கொள்ள நேரிடலாம் என்று பயத்தில் பலர் புறக்கணிப்பு கோரிக்கையை எதிர்க்கவே அது கைவிடப்பட்டது. தமது மக்கள் கொல்லப்பட்டதற்கு தேர்தல் புறக்கணிப்பு எனும் ஜனநாயக உரிமை கூட இங்கே இல்லை. இதுதான் இந்தியாவின் ஜனநாயகம்!

உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி மடுகுலா மல்லிகார்ஜூனா ரெட்டி, வேமூரு தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மெருகா நாகார்ஜூனாவுக்கு பிரச்சாரம் செய்திருக்கிறார். “சுண்டூருக்கு நீதி” என்ற இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளராக இருந்த மெருகா நாகார்ஜூனா, சுண்டூர் மக்களின் ரத்தத்தில் பெற்ற பிரபலத்தை ஓட்டுக் கட்சி அரசியலில் விற்றுக் கொண்டிருக்கிறார். கூடவே சுண்டூர் கொலைகாரர்களின் உதவியோடு தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார்.

மடிகா சாதியினருக்கு (நமது அருந்ததியினர் போன்ற சாதியினர்) உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தை முன்வைத்து ஆந்திராவின் தாழ்த்தப்பட்ட சாதிகளான மாலா, மடிகா சாதியினரிடையே பிளவு ஏற்பட்டுள்ளது இதில் ஒரு கிளைக் கதை. மடிகா சாதியினர் இடஒதுக்கீடு போராட்ட கமிட்டி ஒன்றை ஏற்படுத்த மாலா சாதியினர் தலித் மாலா மாநாடு அமைப்பை உருவாக்கியினர். இந்த பிளவில் மடிகா சாதி மக்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜனநாயக உரிமையை எடுத்துக் கூறி தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய தலித் இயக்கங்கள் மாறாக பிளவு வேலையை செய்திருக்கின்றன. இன்னொரு புறம் ஓட்டுக் கட்சி கூட்டணிகள் மூலம் தமது தரப்பையும் விற்றிருக்கின்றன.

தலித்துகள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தின் கீழ், ஆதிக்க சாதி  அதிகார அமைப்புகளின் முதுகெலும்பை உடைக்கும் நக்சல்பாரி புரட்சிதான் கொடூரமான பார்ப்பனிய சாதி கட்டமைப்பை ஒழித்துக் கட்டி உழைக்கும் மக்களை அனைத்து விதமான சுரண்டல்களிலிருந்து விடுவிப்பதற்கான ஒரே வழி.  அது வரை சுண்டூர் கொலையாளிகளும் அவர்களை பாதுகாத்து வரும் இந்த சமூக அமைப்பும் சற்றே இளைப்பாறலாம். அந்த இளைப்பாறுதல் நிரந்தரமல்ல என்பதை இங்கே நினைவுபடுத்துகிறோம்.

சுண்டூர் படுகொலைகளும், நீதி தவறிய நீதிமன்றங்களும் நமது மனசாட்சியை கேள்வி கேட்கட்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்போம். பார்ப்பனி ஆதிக்க சாதிவெறியின் எலும்பை உடைப்போம்!

–    பண்பரசு

மேலும் படிக்க

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. கொலையாளிகளும் அவர்களை பாதுகாத்து வரும் இந்த சமூக உறுப்பினர்களும் இளைப்பாறிக் கொண்டுடிருக்கவில்லை. அவர்களின் எண்ணங்களின் மற்றும் செயல்களின் வறுமையில் மற்றும் பிணியில் உழன்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

  2. Indian legal system is not delivering justice.
    It relies on time as time is the cure for many things.

    We need jury like effective system.Since we cannot have jury system, we should be having panel of judges in every court.

    And courts should be computerized.

    A long way to go for India

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க