privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விஅங்க இரும்புதான் இருக்கு திரையைக் காணோம் !

அங்க இரும்புதான் இருக்கு திரையைக் காணோம் !

-

நூல் அறிமுகம் : “கலைவாணர் கண்ட ரஷ்யா”

டறிந்த வரலாறு நெடுகத் தேடினாலும் கம்யூனிச – சோசலிச அரசியல், சித்தாந்தத்தைப் போல அவதூறுக்கு இலக்கான வேறெதையும் காண முடியாது. அதைப் போலவே தோழர் ஸ்டாலினைப் போல அவதூறுகளுக்கு இலக்கான வேறெந்த தனிநபரையும், தலைவரையும் காண முடியாது.

கலைவாணர் கண்ட ரஷ்யா1990-களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியம் மற்றும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த அதிரடி ஆட்சிக் கவிழ்ப்புகளுக்குப் பிறகு அமெரிக்க அரசியல் சமூகவியலாளர் ஃபிரான்சிஸ் ஃபுக்குயாமா, “வரலாற்றின் முடிவைப்” பிரகடனப்படுத்தினான். பின்நவீனத்துவ ஞானோதயம் பெற்றவர்கள், தாம் முன்னறிவித்த தத்துவத்தின் முடிவும், புதிய சகாப்தத்தின் பிறப்பும் உறுதியாகி விட்டதாக குதூகலித்தனர். ஆனால் பத்தாண்டுகளுக்குள்ளாகவே, ஃபிரான்சிஸ் ஃபுக்குயுமா தனது முடிவு பொய்த்துப் போய்விட்டதாக அறிவித்து விட்டான்.

எரிந்து சாம்பலாகிப் போய்விட்டதாக எதிரிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டதற்கு மாறாக “ஃபீனிக்ஸ் பறவை”யைப் போல கம்யூனிச – சோசலிசமும், ஸ்டாலினும் உயிர்த்தெழுந்து விட்டார்கள்.

“புரட்சிக்குப் பிந்திய சமுதாய ஆய்வு” என்கிற பெயரில் கம்யூனிச – சோசலிச சமுதாயங்களின் தோல்வியில் இருந்த படிப்பினைகளைத் தொகுப்பதாக புறப்பட்ட முன்னாள் மார்க்சியர்கள் அனைவரும் ஃபிரான்சிஸ் ஃபுகுயுமாவின் சகபாடிகளுடைய அவதூறுகளை விழுங்கி வாந்தியெடுத்தார்கள். இவர்களால் கற்பிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை முறியடிக்கும் அனுபவ உண்மைகளோ ஏராளமாக உள்ளன.

அவற்றில் ஒன்றாக, ஸ்டாலின் தலைமையிலான சோவியத் சோசலிச சமுதாயத்தை நேரில் கண்டு வந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், 1951-ம் ஆண்டு சென்னை கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரை இப்போது மீண்டும் மறுபதிப்பாகி வெளிவந்துள்ளது. சோவியத் சோசலிச சமுதாயம், கட்சி மற்றும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராகப் பரப்பப்பட்டு வரும் அவதூறுகள் பலவற்றுக்கு நேரடியான மறுப்பாகவே கலைவாணரது உரை அமைந்துள்ளது.

புரட்சிக்குப் பிந்திய சமுதாயம் பற்றி ஆய்வு செய்த “அறிஞர்கள்” எல்லாம், சோவியத் சோசலிசத்தில் பெரியார், கலைவாணர் போன்றவர்கள் கண்டு சொன்ன அனுபவ உண்மைகளை அடியோடு நிராகரித்து விட்டார்கள். இந்த வகையில் இந்த “அறிஞர்கள்” அன்றைய காங்கிரசுக்காரர்களின் வழிகாட்டுதலையே பின்பற்றுகிறார்கள் என்பதைக் கலைவாணரது உரையிலிருந்தே காண முடிகிறது.

“சமீபத்திலே நான் ரஷ்யா சென்றிருந்தபோது திருச்சியிலே ஒரு மாபெரும் கூட்டத்திலே காங்கிரஸ் தலைவர்கள் ரஷ்யாவைப் பற்றி அவதூறாகப் பேசியிருக்கிறார்கள். ‘ரஷ்யாவிலே ஒன்றும் கிடையாது. மக்கள் எல்லாம் கஷ்டப்படுவதுதான் வழக்கம். ஆனால் அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் அதைப் பற்றி புகழ்ந்து புகழ்ந்து பேசுகிறார்கள். இப்பொழுது இங்கிருந்து ஒரு கோமாளி போயிருக்கிறான். அவன் வந்து என்னென்னவோ உளறப் போகிறான். அதை நீங்கள் எல்லாம் நம்ப வேண்டாம்’ என்று எச்சரித்திருக்கிறார்கள்.”

சோவியத் சோசலிச சமுதாயத்தைப் பற்றிய அணுகுமுறையிலேயே வர்க்கப் பார்வை இருப்பதை முதலில் கலைவாணர் விளக்குகிறார்.

கலைவாணர் கண்ட ரஷ்யா“ரஷ்யா பற்றி எல்லா நாடுகளிலுமே அதிலும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே ரஷ்யா என்றால் ஒரு பூதம் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அமெரிக்காவிலே பெரிய பெரிய பணக்காரர்களும் பிச்சைக்காரர்களும் வாழுகின்றனர். அங்கே ரஷ்யா என்று சொன்னவுடனேயே அப்படிப் பயம் ஏற்படுவது இயற்கை. இந்தியாவிலே ரஷ்யாவை அவ்வளவு சண்டாளர்களாக எண்ணுவதில்லை. பணக்காரர்களுக்கு அவர்களைப் பற்றிப் பயம். ஆனால் ஏழை மக்களுக்கு ஒரு நண்பன் ரஷ்யா நாடு. ஆகையினாலே பாதிப்பேர் ரஷ்யாவை விரும்புவதும், பாதிப்பேர் அந்த நாட்டில் ஒன்றுமே கிடையாது, வெறும் கட்டுப்பாடு, கலையை அனுபவிக்கத் தெரியாதவர்கள் உள்ள நாடு என்று நினைக்கிறார்கள்.”

“நான்கூட இதைப்பற்றி தெரிவதற்கு முன்னால் இப்படித்தான் எண்ணியிருந்தேன். எல்லோருக்கும் ஒரே உடை, எல்லோருக்கும் ஒரேவித சாப்பாடு, எல்லோருக்கும் ஒரேவித வீடு. அந்த நாடு எப்படித் தானிருக்கும்? அது கட்டுப்பாடுகள் நிறைந்த நாடாகத்தானிருக்கும், எல்லோரும் பயந்துதான் இருப்பார்கள். ரஷ்யாவைப் பற்றி பத்திரிகைகளும், பணக்கார்களும் பலவிதமாகக் கூறி வந்தனர். ஆனால் அங்குச் சென்று பார்த்து வந்ததும் இந்த நிலை அடியோடு மாறிவிட்டது.”

சோவியத் ஒன்றியம் ஒரு இரும்புத் திரை நாடாக இருந்தது என்றும், வெளி உலகு பற்றிச் சோவியத் மக்களுக்கு எதுவும் தெரியாதவாறும், அங்கே என்ன நடக்கிறதென்று வெளியுலக மக்கள் அறியமுடியாதவாறும் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும், சோசலிசத்தின் எதிரிகள் பிரச்சாரம் செய்வதுண்டு. இவற்றுக்கெல்லாம் மறுப்புரைக்கிறார், கலைவாணர்.

“இங்கே இதைச் சொல்வது ஏனென்றால், ரஷ்யாவில் சில க்ஷேமமான இடம் இருக்கும்; காரிலே ஏற்றி வைத்து, மூடிவைத்து, அந்த சுபிக்ஷமான இடத்திற்குக் கொண்டுபோய் கதவைத் திறந்து காட்டிவிட்டு, பிற இடங்களும் இம்மாதிரியே இருக்குமென்று கூறி பழையபடி கொண்டு வந்து விடுவார்கள் என்று நினைத்தோம். இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. அப்படிக் கட்டுப்பாடு அங்கே கிடையவே கிடையாது.”

“எங்கு போய் பார்க்க வேண்டுமென்றாலும் போய்ப் பாக்கலாமென்று சொன்னார்கள். முதலிலே கொஞ்ச தூரமுள்ள இடங்களுக்குக் காரிலே சென்றோம். அப்புறம் பக்கத்திலே போக வேண்டிய இடங்களுக்கு நடந்து போனோம். தெருக்கள் வழியாகவும், கடைகள் வழியாகவும் நடந்து நடந்து ஒவ்வொரு இடத்திற்கும் போய்ப் பார்த்தோம். இரும்புத்திரை போட்டிருக்கிறார்கள் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இரும்புத் திரை இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு இரும்பு இருக்கிறது. திரையைக் காணோம்.”

சோசலிசக் கட்டுமானத்தில் மக்கள் பங்களிப்பும் உணர்வும் எவ்வளவு சிறப்பாக இருந்தது, சமுதாயம் எவ்வாறு இயங்கியது என்பதைக் கலைவாணர் வியந்து போய்ச் சொல்லுகிறார்.

“எல்லோரும் ரயிலிலே வந்து பின்பு பேசாமல் இறங்கிப் போய் விடுகிறார்கள். டிக்கட் கேட்பதில்லை; செக்கிங் கிடையாது. நாங்கள் வந்த ஏழாவது ஸ்டேஷனிலே இதைக் கண்டோம். அங்கு எங்களோடு ஒரு சினிமா டைரக்டர் வந்தார். என்ன இது, ஒருவரும் டிக்கட் கேட்கவில்லையே என்று கேட்டேன், நாங்கள் என்ன எங்கள் தேசத்தை ஏமாற்றுவோம் என்றா நினைக்கிறீர்கள்? கொஞ்சம் கூட நினைக்க வேண்டாம். இது எங்கள் அரசாங்கம். எங்கள் அரசாங்கத்தால் போடப்பட்ட ரயில்வே. அவர்கள் கொடுக்கும் சம்பளம், இதை வைத்துக் கொண்டு அவர்களை ஏமாற்றுவோமோ? அப்படியானால் உங்கள் ஊரிலே அவ்வாறு நடக்குமா (கை தட்டல்) என்று கேட்டார். நடக்குமா எனக் கேட்டால் நான் என்ன சொல்ல? முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டேன். (கை தட்டல்) வேறு வழியில்லை.”

தோழர் ஸ்டாலினை பாசிச சர்வாதிகாரி இட்லருக்கு இணை வைத்து சோசலிசத்தின் எதிரிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். அன்றைய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே சோசலிசத்தின் பிந்தைய தோல்விக்குக் காரணம் என்று அவதூறு செய்கிறார்கள். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது கட்சி சர்வாதிகாரமாகவும், கட்சி சர்வாதிகாரம் மத்தியக் குழு சர்வாதிகாரமாகவும், இதுவே தனிநபர் தலைமையின் சர்வாதிகாரமாகவும் குறுக்கப்பட்டதாக சி.பி.ஐ., சி.பி.எம்., மணியரசன் குழு உட்பட பலரும் புளுகுகின்றனர். ஆனால் தோழர் ஸ்டாலினின் கீழிருந்து தெரிவு செய்யப்பட்ட அரசியல் அமைப்பில் அனைவருக்கும் ஆயுதமேந்தும் உரிமை உட்பட எப்படிப்பட்ட ஜனநாயகம் நிலவியது என்று கலைவாணர் விளக்குகிறார்.

“எல்லா நாடுகளிலும் பட்டாளத்திற்கு ஆள் சேர்த்துத்தான் ஆக வேண்டும். ஆனால் அங்கே பட்டாளத்திற்கு ஆட்கள் சேர்க்க வேண்டியதில்லை. பொது மக்கள் என்றாலும் பட்டாளம் என்றாலும் ஒன்றேதான். ஓட்டலிலே வேலை செய்து கொண்டிருப்பவன் சண்டை என்று கேட்டவுடனே அந்தப் பாத்திரங்களைக் கீழே போட்டு, துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு செல்வான். குப்பை பெருக்குபவன் தன் கையிலுள்ளதைக் கீழே போட்டுவிட்டு துப்பாக்கியை ஏந்திச் செல்வான் தேசமே பட்டாளம்; எல்லோரும் வீரர்கள். ஒரு படைகூட அங்கில்லை.”

“பல பெரிய மியூஸியங்கள் போன்ற இடத்தைக் காப்பதற்கு மட்டும் அங்கு சில வீரர்கள் இருக்கிறார்கள். மற்ற ஆட்கள் எல்லோரும் வேலை செய்தாக வேண்டும். அந்த நாடு சுபிட்சமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விடப் பெண்கள்தான் எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள். எந்தத் தொழிற்சாலையைப் போய்ப் பார்த்தாலும் அவர்கள் நூற்றுக்கு எழுபது பேர்களாக வேலை செய்கிறார்கள். அந்த அரசியல் அமைப்பைப் பற்றி நினைக்க ஆச்சரியமாகவே இருக்கும்.”

சோவியத் ஒன்றியத்தில் பல கட்சி ஜனநாயகம் இருக்கவில்லை. பலகட்சி ஜனநாயகத்தைப் புரட்சியின் மூலம் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருந்தது. கம்யூனிச இலட்சியத்தை அடையும் பாதையில் இது ஒரு இடைக்கட்டம் தான். எதிர்க் கட்சியோ, பல கட்சியோ இல்லாததை இயல்பாக எடுத்துக் கொள்ளும் கலைவாணர் கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் இலக்குபற்றி சோவியத் மக்கள் அறிந்திருப்பதாகச் சொல்லுகிறார்.

குருச்சேவ் – பிரஷ்னேவ் கும்பல் அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அதிகாரவர்க்க முதலாளித்துவ ஆட்சியை நிறுவுவதற்கு முன்பு வரை, சோவியத் ஒன்றியத்தில் நிலவி வந்த சோசலிச சமுதாயம் எத்தகைய உன்னத அமைப்பாக இருந்தது. இதைக் கலைவாணரின் எளிமையான, சுவையான உரை மூலம் நமது மக்கள் அறிந்திட இன்னொரு வாய்ப்புக் கிட்டியுள்ளது.

–  சாத்தன்
_____________________________
புதிய கலாச்சாரம், ஜனவரி 2000
_____________________________

நூல் :
கலைவாணர் கண்ட ரஷ்யா
தொகுத்தோர் : பொ.க.சாமிநாதன், க. பரமசிவன்
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கிடைக்குமிடம் :
கீழைக்காற்று,
10, ஔலியா சாகிபு தெரு,
எல்லீசு சாலை,
சென்னை-2.
044 – 28412367