Monday, February 24, 2020
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க போதையா - புரட்சிகர உணர்வா?

போதையா – புரட்சிகர உணர்வா?

-

​ NTC தேர்தல் : போதையா – புரட்சிகர உணர்வா? வெற்றி பெறப் போவது எது?

மிழ் நாட்டில் தேசிய பஞ்சாலை கழகத்திற்கு சொந்தமான ஏழு மில்களிலும் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான தேர்தல் வரும் 30.05.2014 தேதியன்று நடைபெற உள்ளது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உட்பட பதினோரு சங்கங்கள் போட்டியிடுகின்றன.

1972 -ம் ஆண்டு என்.டி.சி துவங்கப்பட்டது. 2010 -ம் ஆண்டில்தான் பு.ஜ.தொ.மு சங்கத்தின் முயற்சியால் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. தேர்தல் முறை வந்து விடக்கூடாது என நமது சங்கங்கள் தவிர பத்து சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை தொடுத்து போராடிப் பார்த்தார்கள். அத்தனையும் முறியடித்து தேர்தலை கொண்டு வந்தோம்.

2010 – ஆம் ஆண்டு நடந்த அங்கீகாரத் தேர்தலில் நான்கு சங்கங்கள் அங்கீகாரம் பெற்றன. ஏழு மில்களிலும் பத்து சதவிகிதம் வாக்குகள் பெற்ற சங்கங்கள் வெற்றி பெற்றன. அதன்படி தி.மு.க இரண்டு பிரதிநிதிகளும் , புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (என்.டி.எல்.எப்) ஒரு பிரதிநிதியும், சி.ஐ.டி.யு ஒரு பிரதிநிதியும் , ஐ.என்.டி.யு.சி ஒரு பிரதிநிதியும் பெற்றனர். நம்மை தவிர மீதி மூன்று சங்கங்களும் பல இலட்சம் ரூபாய் செலவு செய்து தொழிலாளர்களுக்கு பிரியாணி, பிராந்தி, வேட்டி- சேலை, குடம், குத்து விளக்கு வழங்கி வெற்றி பெற்றன.

மூன்று ஆண்டு முடிந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கீகாரத் தேர்தல் வரும் 30.05.2014 -ம் தேதி நடைபெற உள்ளது.

முதலில் 20.03.2014 -ம் தேதியில் தேர்தல் நடை பெறும் என நிர்வாகம் அறிவித்தது. அனைவரும் தேர்தல் பிரச்சாரம் செய்து முடிந்த நிலையில் MLF சங்கம் நீதி மன்றத்தில் தடையாணை பெற்றது. பனியன் கம்பெனி முதலாளி திருப்பூர் சு. துரைசாமி தனது பாணியில் சதி செய்து தடையாணை வாங்கினார். மீண்டும் நமது சங்கம் ரிட் அப்பீல் செய்து தேர்தலை கொண்டு வந்தோம். தேர்தலை தடை செய்யும் MLF சங்கத்தின் முயற்சிக்கு CITU சங்கம் துணை நிற்கிறது. HMS சங்கம் , AITUC சங்கம் , BMS சங்கம் ஆகியோரும் துணை போகிறார்கள். தேர்தலே வேண்டாம் என்று தங்களது உண்மையான நிலையைச் சொன்னால் தொழிலாளர் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவாகும் என்பதால் வேறுவகையில் சூழ்ச்சி செய்கிறார்கள். அதாவது கிளையளவில் பத்து சதவிகிதம் வாக்குகளைப் பெறும் சங்கங்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிறார்கள்.

C.S.W மில்லில் மொத்த தொழிலாளர் 120 பேர். இதில் 12 ஓட்டுகள் பெறும் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வைக்கிறார்கள். அதன்படி ஏழு மில்களிலும் எழுபது சங்கங்கள் வெற்றிபெறும். ஒரு சங்கத்திற்கு 2 பேர் வீதம் 140 பேர் பேச்சு வார்த்தைக்கு வருவார்கள். இதன்மூலம் தேர்தல் முறையின் அடிப்படையே தகர்ந்து போகும். 140 பேரை வைத்து என்.டி.சி- யில் எந்த முடிவும் எடுக்க முடியாது. இதனை விளக்கி நீதிமன்றத்தில் நமது சங்கத்தின் சார்பில் வாதாடினோம்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி அக்னி ஹோத்ரி , சுந்தரேசன் அடங்கிய அமர்வு அளித்த வழிகாட்டுதல் என்னவென்றால், “30.05.2014 -ல் தேர்தல் நடத்துங்கள், வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்கக் கூடாது.  இதன் மீதான இறுதி விசாரணை வரும் 18.06.2014 அன்று நடைபெறும். அதில் கிளை அளவில் பத்து சதவிகிதமா? ஒட்டு மொத்த அளவில் பத்து சதவிகிதமா? என்பதை நாங்கள் சொல்கிறோம். அதன்படி முடிவுகளை அறிவியுங்கள்” என்பதாகும்.

மேற்கண்ட அடிப்படையில் தற்சமயம் தேர்தல் பரப்புரைகள் நடைபெற்று வருகின்றன. N.D.L.F சங்கம் துண்டு பிரசுரங்களை வெளியிட்டும் , மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு உதவியுடன் ஆலைவாயில் கூட்டங்களை நடத்தியும் பிரச்சாரம் செய்து வருகிறது.

அண்ணா தொழிற் சங்கம் (ATP) சங்கம் தனது வழக்கமான பாணியில் ஒவ்வொரும் தொழிலாளர் வீட்டுக்கும் சென்று ரூ. 1000/- , 2000/- கொடுக்கிறார்கள். தொழிலாளர்கள் வாங்க மறுத்தால் வீட்டில் வலுக்கட்டாயமாக வைத்துவிட்டு வருகிறார்கள். பணம் வேண்டாம் என்றால் அரை மூட்டை அரிசி கொடுகிறார்கள். ஆனால் மூட்டையின் மீது கை வைத்து சத்தியம் வாங்குகிறார்கள்.

அண்ணா தொழிற் சங்கத்தை பொறுத்த வரையில் முப்பது இலட்சம் ரூபாய் செலவு செய்ய திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். திமுக சங்கமான (LPF) தனது பங்கிற்கு ராம்ராஜ் காட்டனில் வேட்டி- சட்டை கொடுக்கிறார்கள். பெண்களுக்கு சேலை கொடுத்து தங்கள் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டுள்ளார்கள். HMS சங்கம் தமது பங்கிற்கு ஒவ்வொரு வாக்காளருக்கும் பால் குக்கர் கொடுத்துள்ளார்கள்.

இது போக எல்லா சங்கங்களும் தனது முன்னணியாளர்களுக்கு பிரியாணி , பிராந்தி எனக் கொடுத்து பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் , கமுதகுடியில் உள்ள பயோனியர் மில்லில் நாம் ஆலைவாயில் கூட்டம் நடத்திய போது ATP சங்கத்தவர்கள் ரகளை செய்தார்கள். 24.05.2014 -ல் நடந்த வாயில் கூட்டத்தில் வெளிப்படையாகவே மிரட்டி இதோ அன்வர் ராஜா எம்பிக்கு போன் செய்து உங்களை உள்ளே தள்ளுவோம் என்றார்கள். தாராளமாக செய்யுங்கள் என்றோம்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்டித்து நமது சங்கம் மட்டும் வெளிப்படையாகவே கடந்த ஒருவார காலமாக பிரச்சாரம் செய்து வருகிறோம். ஏழு மில்களிலும் பதட்டமான சூழல் நிலவி வருகின்றது. CITU சங்கம் வழக்கம் போல் கள்ள மவுனம் சாதித்து வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை ஊக்குவித்து வருகிறார்கள்.

கோவையை பொறுத்தவரை நமது கூட்டத்தில் கலவரம் செய்தால் சிக்கலாகி விடும் என ATP -யினர் பயப்படுகின்றனர். ஏனெனில் சின்னியம் பாளையம் தியாகிகள் , ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் வாரிசுகளான நாம் களத்தில் நிற்கிறோம். நமது ஆலை வாயில் கூட்டங்களில் புஜதொமு சங்கம் உள்ள ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்டிரிஸ் தொழிலாளர்களும் , CRI பம்ப் தொழிலாளர்களும் திரளாக கலந்து கொண்டு தங்கள் சகோதர ஆதரவை வழங்கி வருகிறார்கள். இவர்களை அடித்தால் திருப்பி அடித்து விடுவார்கள் என்னும் பயம் ஓட்டு கட்சி தொழிற்சங்கங்களுக்கு உள்ளது. போலிசை வைத்து மிரட்டி கைது செய்தால் உடனடியாக சந்தோசமாக சிறைக்கு போய்விடுகிறார்கள். இது தேர்தலில் மிகப்பெரிய பிரச்சாரமாக மாறி தாங்கள் தோற்று விடுவோம் என பம்மிக் கொண்டு இருக்கிறார்கள். இந்து மதவெறியர்களுக்கு (BMS) தொழிலாளர் மத்தியில் பெரிதாக அமைப்பு பலம் இல்லாத காரணத்தால் அமைதியாக தேர்தலில் போட்டியிட்டு அடக்கம் காட்டுகிறார்கள்.

தில்லை கோவிலை தீட்சிதர்களுக்கு தாரை வார்த்து கொடுத்த உச்ச நீதி மன்ற தீர்ப்பை கண்டித்த 50 தொழிலாளர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும் துவண்டுவிடவில்லை.  பின்னர் மீண்டும் வெளியே வந்து தொழிற்சங்கப் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தோழர்கள் சாதாரண தொழிலாளியாக சிறைக்கு போனவர்கள் வெளியே வரும்போது போராளியாக வந்தார்கள். வந்த பின்பும் மீண்டும் இரட்டிப்பு உற்சாகத்துடன் தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை கண்ணுற்ற ஓட்டுக் கட்சி தொழிற்சங்கத் தலைவர்கள் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என உணர்ந்து அமைதி காக்கிறார்கள்.

நமது மைய கலைக்குழு, தொழிலாளர்கள் சந்திக்கின்ற மின் வெட்டால் லே-ஆப் , கேண்டின் விலை ஏற்றம் , இலவசம் கொடுப்பது போன்ற பல பிரச்சனைகளை படைப்பாற்றல்லோடு பாடலாக மாற்றி பாடுகின்றார்கள். இது ஆலை வாயில் கூட்டங்களை அற்புதமான இலக்கியமாக்குகிறது. ஓட்டு கட்சி முன்னணியாளர்களுக்கு பிரியாணியும், பிராந்தியும் வாங்கிக் கொடுத்தால்தான் தேர்தல் வேலை செய்வார்கள். நமது தோழர்களோ தங்களது துன்பங்களை பாடல் மூலம் கேட்கும் போது கூடுதல் உற்சாகம் பெற்று தேர்தல் பணிகளை செய்கிறார்கள்.

மைய நிர்வாகக் குழு சார்பில் மாநிலத் தலைவர் தோழர். அ. முகுந்தன், பொதுச் செயலாளர் தோழர் சு ப தங்கராசு , மாநில இணைச் செயலாளர் தோழர். வெற்றி வேல் செழியன் களத்தில் நேர் நின்று வழிகாட்டி வருகின்றனர்.,

வெற்றி பெறப்போவது போதையா? புரட்சிகர உணர்வா? என்பது வாக்கு எண்ணிக்கையின் பொழுது தெரியும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கோவை.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. படித்த கயவர்களைவிட படிக்காத முட்டாள்களே மேல்! பெரியார் சொன்னது நினைவு வரவில்லை?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க