privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமா – வேண்டாமா ?

ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுமா – வேண்டாமா ?

-

‘ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் இணைக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும், மக்களின் செல்வம் அதிகரிக்கும், கடன்களுக்கு வட்டி குறையும், விலைவாசி குறையும் என்ற பிரச்சாரங்களுடன் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியமும், யூரோ ஒற்றை நாணய நாடுகளும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன.  ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் பெருமளவு அதிகரித்திருக்கின்றன. யூரோ ஒற்றை நாணயத்தை ஏற்றுக் கொண்ட நாடுகள் மீது அது ஒரு சுமையாக மாறியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம்யூரோ பொது நாணயத்தை ஏற்றுக் கொள்ளாமலேயே உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியில் சிக்கியிருக்கும் யு.கே (இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர்லாந்து), டென்மார்க், ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் சரி, யூரோவை ஏற்றுக் கொண்டு அல்லல்படும் பிரான்ஸ், இத்தாலி, கிரேக்கம் போன்ற நாடுகளிலும் சரி, யூரோவுக்குள் நுழைவதன் மூலம் பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளிவரலாம் என்ற கனவு எதிர்மறையாகவே நடந்து வருகிறது. இவர்களோடு ஒப்பீட்டளவில் ஏழை நாடுகளாக இருக்கும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் முன்னாள் சோசலிச குடியரசுகளிலும் சரி, சமீபத்தில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தின் 751 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கழட்டிக் கொண்டு தனியாக வேண்டும்” என்ற  கொள்கைகளை உடைய கட்சிகள் தமது செல்வாக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டுள்ளன.

இங்கிலாந்தில் – ஐரோப்பாவிலிருந்து தனித்து செயல்படுவதை ஆதரிக்கும் “யு.கே சுதந்திரக் கட்சி”யும், ஃபிரான்சில் – யூரோ நாணய மண்டலத்தை நிராகரித்து, பிற நாட்டினர் பிரான்சுக்கு குடிபெயர்வதை எதிர்க்கும் “தேசிய முன்னணி” கட்சியும் முதலிடம் பிடித்துள்ளன. பெரிய கட்சிகளான ஆளும், எதிர்க் கட்சிகள் 2-ம், 3-ம் இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் இசுலாமிய எதிர்ப்பு,  யூரோ எதிர்ப்பு கட்சி இரண்டாவது இடத்தை பிடித்திருக்க, டென்மார்க்கிலும், ஹங்கேரியிலும், ஸ்வீடனிலும், ஃபின்லாந்திலும் வலது சாரி, புலம்பெயர் பிறநாட்டவரை எதிர்க்கும் கட்சிகள் தம்து செல்வாக்கை வளர்த்துக் கொண்டு அதிக இடங்களை பிடித்திருக்கின்றன.

யு.கே சுதந்திரக் கட்சி என்பது 1993-ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தும் மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்தை எதிர்க்கும் பல்வேறு கட்சி உறுப்பினர்களின் குழுவினரால் ஏற்படுத்தப்பட்டது. யு.கேவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்கிக் கொள்வதுதான் அந்த கட்சியின் அடிப்படை நிலைப்பாடு. ஐரோப்பாவுடன் நெருக்கமாகும் கொள்கையை எதிர்க்கும் கன்சர்வேடிவ் கட்சியினரில் பலர் இந்தக் கட்சியை ஆதரிக்கின்றனர். ‘ஐரோப்பாவிலிருந்து வெளியேறுவது என்ற ஒற்றை நிலைப்பாட்டை கொண்ட கட்சி’ என்ற பிம்பத்தை மாற்றுவதற்கு தற்போதைய தலைவர் நீகல் ஃபாரஜ் பொருளாதாரம், வரி விதிப்பு,  மருத்துவத் துறை, குடியேற்றம் போன்ற துறைகளில் முதலாளித்துவ ஆதரவு கொள்கைகளை முன் வைக்கிறார்.

பிரான்ஸ்
பிரான்சின் தேசிய முன்னணி 25% வாக்குகளுடன் முதலிடம் பிடித்தது.

பிரான்ஸ் நாட்டில் தேசிய முன்னணி கட்சி பிரெஞ்சு இனவாதத்தை முன் வைத்து 1970-களில் தொடங்கப்பட்டது. அதன் முக்கிய கொள்கைகள், பொருளாதாரத் துறையில் தேசிய பாதுகாப்பு வாதம், போராட்டங்களை ஒடுக்க கடுமையான சட்டங்கள் மற்றும் வெளிநாட்டவர் குடிபெயர்வதை எதிர்ப்பது ஆகியவை.. 1990-கள் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கும் கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக ஐரோப்பியர் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை எதிர்க்கும் இக்கட்சி சட்ட விரோதமாக குடியேறிய மற்றும் வேலை இல்லாத வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இனவெறி பேசுகிறது.

இத்தாலியில் முதல் இடம் பிடித்த ஆளும் இடது சாரி கட்சி, ஜெர்மானிய முதலாளிகள் ஐரோப்பிய ஒன்றியம் மூலமாக சுமத்தும் சிக்கன நடவடிக்கைகளை நிராகரிக்கப் போவதாகவும், பொதுத்துறை முதலீடுகளை அதிகரித்து வளர்ச்சி, வேலை வாய்ப்புக்கு வழி வகுக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறது. கிரேக்கத்திலும் இத்தகைய கொள்கைகளை வலியுறுத்தும் இடதுசாரி சிரிசா கட்சி முதலிடம் பெற்றுள்ளது. இத்தகைய இடதுசாரி கட்சிகள் நம்மூர் போலிக்கம்யூனிஸ்டுகளின் பல்வேறு வகைமாதிரிகளாகவே இருக்கின்றனர்.

வலது தீவிரவாத அமைப்புகளின் செல்வாக்கு வளர்ந்து வருவதைத் தொடர்ந்து பிற நாடுகளின் வலது, இடது சாரி வெகுஜனக் கட்சிகளும் குடியேற்ற சட்டங்களை கடுமையாக்குவது, வெளிநாட்டவர் நாட்டுக்குள் வருவதை கட்டுப்படுத்துவது போன்ற கொள்கைகளை முன் வைக்கின்றனர். மக்கள் நலத் திட்டங்கள் வெட்டு, வெளிநாட்டவர் எதிர்ப்பு, தொழிலாளர் உரிமைகளை பறித்தல் போன்ற கொள்கைகளை வெளிப்படையாக பேசும் இங்கிலாந்தின் டோரி கட்சி (கன்சர்வேடிவ்) போன்றவை வலது சாரி கட்சிகளாகவும், அவற்றை எதிர்த்தாலும் ஆளும் முதலாளித்துவ வர்க்கங்களின் நலனுக்கு ஏற்றபடி மேலோட்டமான சீர்திருத்தவாதத்தை முன் வைக்கும் இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சி போன்றவை இடது சாரி கட்சிகளாகவும் ஐரோப்பாவில் சித்தரிக்கப்படுகின்றன.

இந்த போலி சோசலிச இடது சாரி கட்சிகள், ஐரோப்பிய நாடுகளை இணைத்து பொதுச் சந்தையை உருவாக்குவது முதலாளித்துவ லாப வேட்டைக்குத்தான் பயன்படுகிறது என்பதை மறைத்து ஐரோப்பிய நாடுகளை இணைப்பதன் மூலம் தொழிலாளர் உரிமைகள், ஆண்/பெண் சமத்துவம் போன்ற வெற்று வாக்குறுதிகளை வென்று விட முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிப்பதாக நாடகமாடுகின்றனர்.

யூரோ ஒற்றை நாணயம், ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய நாடுகளை சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளால் பெருமளவு ஆதாயம் அடையும் ஜெர்மனியில் ஆளும் கட்சி முதலிடத்தை தக்க வைத்திருந்தாலும், மாற்று அரசியலை முன்வைக்கும் அல்டர்நேட்டிவ் ஃப்யுர் டாய்ச்லாந்து கட்சி (யூரோ ஒற்றை நாணயத்தை எதிர்த்து, ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கும் கட்சி) செல்வாக்கை அதிகரித்துக்  கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 751 இடங்களில், ஒன்றியத்தை கலைக்க வேண்டும் என்று கோரும் கட்சிகள் மொத்தம் 142 இடங்களை வென்றிருந்தாலும், வலது சாரி (214 இடங்கள்), இடது சாரி (189 இடங்கள்), தாராளவாத (66 இடங்கள்) மற்றும் கிரீன் பீஸ் (52 இடங்கள்) கட்சிகள் இணைந்து முதலாளிகளுக்கு தேவையான ஐரோப்பிய ஒன்றியத்தை தொடர்ந்து நடத்தும்படியான பெரும்பான்மை பலத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள்

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஒற்றை நாணயமாக யூரோ பயனுக்கு வந்த கடந்த 15 ஆண்டுகளில் ஐரோப்பிய முதலாளிகள் குறிப்பாக ஜெர்மனிய முதலாளிகள் கிழக்கு ஐரோப்பிய மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடுகளுடன் தமது வர்த்தகத்தை பெருமளவு அதிகரித்துக் கொண்டுள்ளனர். பொது நாணயமான யூரோ ஜெர்மானிய தொழில்துறை ஏற்றுமதிகளை ஒப்பீட்டளவில் மலிவானவையாக பராமரிக்கிறது. அவற்றை எதிர்கொண்டு தமது தேசியத் தொழில்களை பாதுகாப்பதற்கான சுயேச்சையான கொள்கைகளை வகுத்துக் கொள்ளும் சுதந்திரம் பிற நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி மறுக்கப்படுகிறது. ஜெர்மன், பிரெஞ்சு முதலாளிகள் தமது உற்பத்தியை, புதிதாக சேர்க்கப்பட்ட நாடுகளுக்கு இடம் மாற்றுவதன் மூலம் தத்தமது நாடுகளில் சம்பளங்களை குறைத்து ஆட்குறைப்பும் நிகழ்த்துகின்றனர்.

1999-ம் ஆண்டு முதல் ஜெர்மனி தொடர்ந்து ஏற்றுமதிகள் மூலம் உபரியை ஈட்டி வந்திருக்கிறது. இதற்கு நிகராக கிரேக்கம், ஸ்பெயின், போர்ச்சுக்கல் முதலான தெற்கு ஐரோப்பிய நாடுகளின் கடன் சுமை அதிகரித்துள்ளது. அமெரிக்க வீட்டுக்கடன் நெருக்கடிக்கு பிறகும் ஜெர்மனியும் உலகளாவிய முதலாளித்துவ கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் அது பிற ஏழை ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடியோடு தன்மையில் வேறுபட்டது.

தெற்கு ஐரோப்பிய நாடுகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் கடன் நெருக்கடியிலிருந்து வெளிவர உதவுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடன் பத்திரங்களை வெளியிடலாம் என்ற திட்டத்தை ஜெர்மானிய நிதித்துறையினரும், முதலாளிகளும் எதிர்க்கின்றனர். கிரேக்கம் போன்ற நாடுகள் தமது செலவுகளைக் குறைக்கும் படியும், மக்கள் நலத் திட்டங்களை வெட்டும்படியும், வரிவிதிப்பை அதிகரிக்கும்படியும் ஆலோசனை கூறுகின்றனர். இதன் மூலம் நிதி சூதாட்டத்தின் பலன்களை அறுவடை செய்து கொண்ட முதலாளிகள் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துகின்றனர்.

புதைகுழியில் ஐரோப்பாகிரேக்கம், ஸ்பெயின், போர்ச்சுக்கல் போன்ற தெற்கு ஐரோப்பிய நாட்டு முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் ஜெர்மனியின் கட்டளைக்கு அடிபணிந்து தமக்குத் தேவையான நிதிக் கடன்களை பெறுவதற்கு கைமாறாக மக்கள் நலத் திட்டங்களை வெட்டியும், பொது நிறுவனங்களில் ஆட்குறைப்பு செயும் உழைக்கும் மக்கள் மீது கடும் சுமைகள் மேலும் மேலும் ஏற்றி வருகின்றனர். இந்நாடுகளில் தொழிலாளர் வேலை நிறுத்தங்கள், அரசு ஊழியர் போராட்டங்கள், மக்கள் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கிரேக்க நாட்டில் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டதால் பொருளாதாரம் சென்ற ஆண்டை விட 7.5 சதவீதம் சுருங்கியிருக்கிறது.

இருப்பினும், கிரேக்கம் போன்ற நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது எண்ணெய் சட்டியிலிருந்து தப்பி எரியும் நெருப்புக்குள் விழுவதாகவே முடியும். சுயசார்பு தொழில்துறை பொருளாதாரம் அழிக்கப்பட்டு உலகளாவிய ஏகாதிபத்திய பொருளாதாரத்தில் பிணைக்கப்பட்டுள்ள அந்நாடுகளின் பொருளாதாரங்கள் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வரும் சிக்கல்களில் மேலும் சீர்குலைவை எதிர்கொள்ள நேரிடும்.

பொருளாதார நெருக்கடியை எதிர் கொண்டு வரும் மக்களை அமைப்பாக்கி போராடும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக இல்லாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர்கள்தான் நெருக்கடிகளுக்கு காரணம் என்று இனவெறியையும்,  நிறவெறியையும், மதவெறியையும் தூண்டி விடும் வலதுசாரி கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. தொழில் ‘அமைதி’ வேண்டும் முதலாளிகளின் ஒரு பிரிவினர் இந்த புதிய பாசிசக் கட்சிகளை நிதி கொடுத்து ஆதரிக்கின்றனர். தொழிலாளி வர்க்கம் ஒன்று சேருவதை இனவெறி தடுக்கும் என்பதால் இந்த உதவி.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் சோசலிச முகாமுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மேற்கு ஐரோப்பாவை மாற்றுவது முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துக்கு தேவையாக இருந்தது. இராணுவ ரீதியாக நேட்டோ அமைப்பை ஏற்படுத்தி இராணுவ ஆதிக்கத்தை ஐரோப்பாவில் நிலை நாட்டிக்கொண்டாலும், பொருளாதார ரீதியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே போட்டியை தவிர்த்து ஒன்றுபடுத்தும் தேவை ஏற்பட்டது. பின்னர் பிரெஞ்சு மற்றும் ஜெர்மனி ஏகாதிபத்தியங்களின் நலனுக்கானதாகவும் இந்த கோரிக்கை மாறிப்போனது.

இந்தச் சூழலில் ‘ஐரோப்பாவில் அமைதியையும் சாந்தியையும் ஏற்படுத்தவும் தங்களுக்குள் போரை தவிர்க்கவும்’ நிலக்கரி, மற்றும் உருக்கு துறைகளில் போட்டிச் சந்தையை ஒழிப்பதற்காக பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. இந்த அமைப்பு ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பாக வளர்ச்சி பெற்று அடுத்த 30 ஆண்டுகளில் டென்மார்க், அயர்லாந்து, யுகே, கிரேக்கம், போர்ச்சுக்கல், ஸ்பெயின் போன்ற நாடுகள் அதில் இணைந்தன. அதாவது, அமைதியும், வளர்ச்சியும் வேண்டுமென்றால் சந்தையில் நடக்கும் கழுத்துப்பிடி சண்டையை தவிர்க்க வேண்டும் என்று முதலாளிகளே ஒத்துக் கொள்கின்றனர். ஆனாலும், முதலாளித்துவத்தின் இயல்பான முரண்பாடுகள் தவிர்க்க முடியாமல் போட்டியையும், போரையும் தோற்றுவித்து விடுகின்றன.

1989-ல் பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட பிறகு கிழக்கு ஜெர்மனியை மேற்கு ஜெர்மனியுடன் இணைத்து ஒன்றுபட்ட ஜெர்மனியை உருவாக்குவதற்கு நிபந்தனையாக ஐரோப்பிய பொது நாணயத்தை உருவாக்க வேண்டும் என்று பிரான்ஸ் நிபந்தனை விதித்து. கிழக்கு ஜெர்மனி மற்றும் பின்னர் முதலாளித்துவ கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படவிருக்கும் பிற கிழக்கு ஐரோப்பிய மற்றும் முன்னாள் சோசலிச குடியரசுகளின் பொருளாதாரத்தையும், உழைப்பையும் சுரண்டுவதற்கு பிரெஞ்சு முதலாளிகளுக்கும் சம வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்.

மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1993-ல் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது. யூரோ நாணயம் 1999-ம் ஆண்டு முதல் வர்த்தக பரிமாற்றங்களிலும், 2002 முதல் பொது மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கும் அமலுக்கு வந்தது. வளர்ந்து வந்த உலகமயமாக்கலின் அழுத்தத்தின் கீழ் 1990-களில் ஆஸ்திரியா, பின்லாந்து, ஸ்வீடன் நாடுகள் இணைக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றிய கனவை முன் வைத்து, 2000 ஆண்டுகளில் சைப்ரஸ், செக், ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேகியா, ரொமேனியா, பல்கேரியா ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் எஸ்டோனியா, லட்வியா, லித்துவேனியா ஆகிய முன்னாள் சோவியத் பால்டிக் குடியரசுகளும் மால்டா,  ஸ்லோவேனியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், முதலாளித்துவ பொருள் உற்பத்தியும் வர்த்தகமும் உலகளாவிய அளவில் நடைபெற்றாலும் முதலாளித்துவ பெருநிறுவனங்கள் தத்தமது நாட்டு அரசுகளை பயன்படுத்தி தமக்கு சாதகமான அரசியல், பொருளாதார, இராணுவ நடவடிக்கைகளை எடுக்கின்றன. இந்நிலையில் முதலாளிகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகள் வெடித்து வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன.

தரமான கல்வியும் மருத்துவமும் கைக்கெட்டாத உயரத்தில், அன்றாட பொருட்கள் விலைவாசி கண்ணுக்கெட்டாத தொலைவில், சாதாரண மக்கள் கல்விக் கடனுக்காகவும், வீட்டுக் கடனுக்காகவும் துரத்தியடிக்கப்படும் போது கார்ப்பரேட்டுகளும், வங்கிகளும் பல ஆயிரம் கோடி வங்கிக் கடன்களுக்கு பட்டை நாமம் போடுவது, தொழிலாளர் உரிமைகள் பறிப்பு, சிறு வணிகர்களுக்கு நெருக்கடி, படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்று பொருளாதார நெருக்கடிகளால் பீடிக்கப்படும் ஐரோப்பிய மக்கள் கலவரத்தைத் தூண்டும், இன வாத, மதவாத அமைப்புகள் பக்கம் சாய்கின்றனர். “அதோ பக்கத்து நாட்டிலேர்ந்து வந்து இங்கு அரை வயித்து கஞ்சிக்கு உழைக்கும் கூட்டம்தான் பிரச்சனைகளுக்கு காரணம், இவனுங்களை துரத்தி விட்டுட்டா நமக்கு வேலைவாய்ப்பு பெருகும், பிரச்சனைகள் தீர்ந்து விடும்” என்று வன்முறையை தூண்டும் கும்பலுக்கு இலக்காகி வருகின்றனர்.

மாறாக, இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமான நிதித்துறை நிறுவனங்களையும், வங்கிகளையும், கார்ப்பரேட்டுகளையும் எதிர்த்து உழைக்கும் மக்கள் சார்பாக நடத்தப்படும் போராட்டங்கள் மூலம்தான் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களை உறுதி செய்யும் அமைப்பை உருவாக்க முடியும். அதை கம்யூனிஸ்ட்டு கட்சிகள் இன்றி செய்ய முடியாது.

ஒருவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி என்பது அமெரிக்க நெருக்கடியோடும் இணைந்திருக்கிறது. அமெரிக்க இன்ஜினே உலக முதலாளித்துவ பொருளாதர ரயிலை இழுத்து வருகிறது என்பதால் அங்கே நெறி கட்டினால் இங்கே தும்ம வேண்டியிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் அமெரிக்காவிற்கு ஏகபோக ஆதிக்கத்தை தட்டிக் கேட்கும் வலிமையை ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பாக ஜெர்மனி அடையும் போது இந்த முரண்பாடு உலக அளவில் பிரதிபலிக்கும்.

எப்படி பார்த்தாலும் முதலாளித்துவத்தை வீழ்த்தும் சோசலிசப் புரட்சி இன்றி ஐரோப்பா எழ முடியாது. அது ஒருவேளை நடைபெறாவிட்டால் போர்களும், அழிவும் கேட்காமலேயே வருவதற்கு காத்து நிற்கின்றன. ஐரோப்பிய மக்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

– அப்துல்

மேலும் படிக்க