Saturday, July 4, 2020
முகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 06/06/2014

பேஸ்புக் ஒரு வரிச் செய்திகள் – 06/06/2014

-

Facebook-news-4செய்தி – ஞாநி சங்கரன்: போர்க் குற்றங்களுக்காகவும் மனித உரிமை மீறல்களுக்காகவும் இலங்கை மீது சர்வதேச நடவடிக்கை தேவை என்பதை கடுமையாக வலியுறுத்தும் அதே சமயத்தில் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை இந்தியப் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பதை ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கவில்லை என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு என்று டெல்லியில் சற்று முன் நான் சந்தித்த யோகேந்திர யாதவ் என்னிடம் தெரிவித்தார். நமக்குப் பிரச்சினை உள்ள எந்த நாட்டு தலைவரானாலும் அவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதைக் கைவிடமுடியாது என்று யோ தெரிவித்தார்.

நீதி: கலெக்டர் ஆபீஸ் அலுவலக உதவியாளர்களின் லஞ்சத்திற்கு எதிராக யுத்தம் துவங்கியிருக்கும் சூப்பர் ஹீரோக்களை, இப்படி இனப்படுகொலை, ஈழத்தமிழர் பிரச்சினை, கூடங்குளம் அணுமின்நிலையம் போன்ற ‘குழாயடி சண்டை’களுக்கு கருத்து சொல்ல கேட்பதே பெரிய வன்முறை!

@@@@@@@@@@@@@@@

செய்தி – மாலன் நாராயணன்: நேற்று ஜெயலலிதா மூன்று அமைச்சர்களைப்ப் பதவி நீக்கம் செய்தார். இன்று அகிலேஷ் 36 பேரை பதவி நீக்கம் செய்துள்ளார். மாயாவதி கட்சிப் பொறுப்பில் உள்ள அனைவரையும் டிஸ்மிஸ் செய்திருக்கிறார். ஜெயலலிதாவை சர்வாதிகாரி எனச் சொல்பவர்கள் இந்த ஜனநாயக நடவடிகைகளை என்ன சொல்லப் போகிறார்களோ?

நீதி: ஜெயலலிதா சர்வாதிகாரியென அழைக்கப்படுவது பொறுக்காமல், இப்படி உ.பி போய் பாயசம் கேட்கிறார் மாலன்! அறிஞர்களின் ஜல்லிசை காக்கைகளின் கத்தல் போல இருக்காதாம், ஏற்றுக் கொள்கிறோம்!

@@@@@@@@@@@@@@

செய்தி – Skp Karuna எஸ்கேபி கருணா: குளிரூட்டப்பட்டப் பாலைவனக் காற்றையே எட்டு நாட்களாக சுவாசித்த எனக்கு, எனது தென்னந்தோப்பின் தென்றல் இப்போதைய சொர்க்கம்!

நீதி: குளிரூட்டப்பட்ட பாலைவன நாடுகளுக்கு சுற்றுலா போயும், குளிர் சூழந்த அலுவலகங்களிருந்தவாறு கல்லூரி தொழில் பார்த்தும், அவதிப்படும் ஒரு தியாகியை புரிந்து கொண்டு ஆராதிக்கும் தென்றலே! இன்று முதல் நீ தியாகத் தென்றல் என்று அழைக்கப்படுவாயாக!

@@@@@@@@@@@@@@@@

செய்தி – வால் பையன்: காமமும், நாமமும், நீண்ட ரோமமும் இருந்தால் அவன் தான் சாமியார்.

நீதி: இந்த மூன்று ‘மு’க்களோடு, குற்ற பயமும், சுயமரியாதை மானமும், உண்மைக் கோபமும், சமூக ஒழுக்கமும் எனும் நான்கு ‘மு’க்கள் இல்லாதவனும் அதே சாமியார்தான்.

@@@@@@@@@@@@@@@

செய்தி – யெஸ். பாலபாரதி: எழுத்தில் நம்பிக்கையளிக்கக்கூடியவன்னு ஆளாளுக்கு பட்டியல் போடுற மாதிரி, இனிமேல் எழுதவேண்டாம் நம்பிக்கையற்ற எழுத்தாளர் பட்டியல் ஒண்ணு போலடாமான்னு யோசிச்சிங். முன்னிருக்கையை காலி பண்ணாமலேயே இருக்காங்கப்பா.. நிறைய பேரு..!

நீதி: பந்திக்கு முந்து, படைக்கு பிந்து என்ற பழமொழிப் படி வாழும் எழுத்தாள மகான்களை இப்படி முன்னிருக்கையிலிருந்து தூக்குவது சாத்தியமில்லை. பின்னிருக்கையில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் தொழிலாளிகளும், ஏனைய உழைக்கும் மக்களும் ஏழுத்தாயுதத்தை ஏந்தும் போது முன்னிருக்கைகள் தானே ஓடி ஒளியும்.

@@@@@@@@@@@@@@@@@

செய்தி – Ramasamy Alagarsamy ராமசாமி அழகர்சாமி:

கதை எழுதும் எழுத்தாளர்கள் யோகக்காரர்கள். பட்டியல் மட்டும் போட்டால் போதும். ஆனால் நம்மிடம் பட்டியல் போடச் சொல்பவர்கள் அதற்கான காரணத்தையும் சொல்லச் சொல்கிறார்கள். எழுதும் அளவுக்கேற்ப பட்டியலில் இடத்தை அளிக்க வேண்டும். முதல் இடம் கொடுத்தால் முழுப்பக்கம் எழுத வேண்டும். முக்கால் பக்கம் எழுதினால் இரண்டாம் இடம் கொடுக்கலாம், அரைப்பக்கம் எழுதினால் மூன்றாமிடம். இடமே இல்லையென்றால் எழுத வேண்டிய அவசியமே இல்லை. 25 பேரைப் பட்டியல் போடச் சொல்லிக் காரணம் சொல்லச் சொன்னால் நாக்குத் தள்ளிப் போகும். இந்த ஆட்டைக்கு நான் வரலன்னு சொல்லிட்டு ஓடிப் போறதத் தவிர வேறெ வழியில்லை. அவரவர்க்கு அவரவர் கவலை!

நீதி: பட்டியலும், பரப்பளவும் போட்டுத்தான் ஒரு எழுத்தாளனின் கீர்த்தி ஒளி வீசுகிறது என்றால் இது எழுத்தாளனின் தர வரிசைப் பிரச்சினையில்லை, தரம் பற்றிய பிரச்சினை!

@@@@@@@@@@@@@@@@@

செய்தி – விநாயக முருகன் இன்றைய எகனாமிக்ஸ் டைம்ஸில் சன்னிலியோனின் சின்ன பேட்டி ஒன்று வெளியாகியுள்ளது. அவர் இப்படி சொல்லியுள்ளார்: “There is Nothing More Sexy Than a Smart Business Man.” பெண்கள் எப்போதும் எதார்த்தவாதிகள்தான்.

நீதி: சன்னி லியோன் பெண் என்பதாலேயே அவருடைய கருத்து பெண்களுடைய எதார்த்தத்தை பிரதிபலிக்குமென்றால், விநாயக முருகன் எழுத்தாளர்களின் பிரதிநிதியாகவும், அவர்களின் ‘எதார்த்தத்தை’ பிரதிபலிக்க கூடியவராகவும் நிச்சயமாக இருக்கிறார்.

@@@@@@@@@@@@@@@@@

செய்தி – R Muthu Kumar முத்துகுமார்: சபாநாயகரானார் சுமித்ரா மகாஜன்! வாழ்த்துகள்!

# மங்கையர் மலர், அவள் விகடன், குமுதம் சிநேகிதி, சினேகிதி, குங்குமம் தோழி சமூகத்தின் கவனத்துக்கு….

நீதி: “சமையல் கரண்டியிலிருந்து சபாநாயகர் மணி வரை” சுமித்ரா மஹாஜன் ஒரு மஹாராணியான வரலாறு – என்று புத்தகம் போட உள்ள கிழக்கு பதிப்பகத்தை விட்டுவிட்டீர்களே முத்து!

@@@@@@@@@@@@@@@@@@

செய்தி – தமிழ் ஸ்டுடியோ அருண்: சினிமா எனும் அதி உன்னதக் கலை…

எனக்கு பிடித்த எழுத்தாளர் ஒருவர், கோடம்பாக்கத்து குளுவான்களே தங்களை உயர்த்தி பேசிக்கொள்ளும்போது, இலக்கியவாதிகள் அப்படி தங்களை உயர்த்தி பேசிக்கொள்வதில் எந்தவித தவறும் இல்லை என்று எழுதி இருந்தார். பல ஆண்டுகளாக தமிழ்கூறும் நல்லுலகில் இப்படியான மிக மோசமான பார்வையை பார்த்து வருகிறேன். இலக்கியம் உன்னதமான கலை, சினிமா நீசக் கலை என்கிற மேதாவிகளின் கோட்பாடு எனக்கு புரிவதில்லை. சினிமா, இலக்கியம் இரண்டும், அதனதன் வடிவங்களில் தனித்து உயர்ந்து நிற்கும் கலை. ஆனால் தமிழ்நாட்டில் சினிமா என்றால் ஏதோ தீண்டத்தகாத ஒரு கலையாக பாவிக்கப்படுவதற்கு முக்கிய காரணம், இங்கே வெளிவரும் வணிகக் குப்பைகள்தான். உருப்படியான சினிமா எடுக்கப்பட்டிருந்தால், இப்படியான தர்க்கங்கள் எழுந்திருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு இலக்கியத்தின் மதிப்பு தெரியும். அதன் கலைத் தன்மை அறிந்து அதனை மெச்சுவதில் நான் ஒருபோதும் தவறியதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாகவே சினிமாவை, அதன் தமிழ்நாட்டு அளவீடுகளை மட்டுமே வைத்துக்கொண்டு, நீச்சக் கலையாக பார்ப்பதில் அருவருப்புதான் உண்டாகிறது.

நீதி: சினிமாவையும் சினிமா மாந்தர்களையும் பட பூஜை முதல் ரிலீஸ் வரை ஆராதித்தும், அவர்கள் ஓய்வுபெறும் போது அரசியல் சிம்மாசனத்தில் வைத்தும் அழகு பார்க்கும் தமிழகம், என்னைக் கிள்ளினான் என்று அச்சில் ஐந்து அரை டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டும், டிஜிட்டலில் ஐம்பது கால் டிக்கெட்டுகளை காட்டிக் கொண்டும் சண்டை போடும் இலக்கிய உலகத்தை எங்கே கண்டது, என்னவாகக் கொண்டது?

ஒன்று நிச்சயம், நல்ல சினிமாவுக்காக நாட்பட போராடும் மேதகு அருண் அவர்களுக்கு சினிமாவும் தெரியவில்லை, இலக்கியமும் புரியவில்லை, இரண்டையும் இயக்கும் அரசியலையும் அறியவில்லை. ஆனாலும் துணிந்து இப்படி கருத்து சொல்லும் ‘வீரத்திற்கு’ வாழ்த்துக்கள்!

@@@@@@@@@@@@@@@@@

செய்தி – Suresh Kannan சுரேஷ் கண்ணன்: உயிர்மையில் அதிஷா அதிஷா சிறுகதையை வாசித்தேன். அவர் ஓர் இளம் எழுத்தாளர் என்பதால் அவரை ஊக்குவிக்கும் வகையில் நல்லவிதமாகத்தான் சொல்ல வேண்டும். அவ்வகையில் அவரது சிறுகதை ஒரு நல்ல முயற்சி. சுவாரசியமான நடை. ஆனால் அவர் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் நல்லது. புகழ்ந்து வரும் கடிதங்களுக்கு (அவரே எழுதியது உட்பட) மயங்க வேண்டாம். சிறுகதையில் அவர் கையாளும் மொழியின் மீது மேலதிக கவனம் செலுத்த வேண்டும். வெகுஜன இதழ்களின் தட்டையான மொழியில் இருக்கிறது. அதிஷாவிற்குள் திறமையான ஒரு குழந்தை எழுத்தாளர் ஒளிந்துள்ளார். அது இந்தச் சிறுகதையில் அபாரமாக வெளிப்படுகிறது. மற்றபடி கதையின் பிரச்சாரத் தொனியை இயன்ற அளவிற்கு நுண்ணியமாக கையாள அவர் எடுத்திருக்கும் முயற்சி அவ்வளவாக கைகூடி வரவில்லை. அதிஷா ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளராக மலர வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பும் ஆர்வமும். அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது.

நீதி: ஏன் என்னவென்று தெரியாமல் தவறிழைக்கும் குழந்தைகளை பல நேரங்களில் மிரட்டியும், கொஞ்சம் அடித்தும் கூட திருத்த வேண்டியிருக்கும். அண்ணன் சுரேஷ் கண்ணன் எழுதியிருக்கும் குழந்தை எழுத்தாளர்கள் தொடர்பான இந்த விமரிசனத்தில், வன்முறையின் சுவுடு கூட இல்லாத ட்ரிபிள் காந்திய விமரிசினத்தை பார்க்கும் போது, குழந்தை எழுத்தாளர் மட்டுமல்ல குழந்தை விமரிசகர்களும் இந்த உலகில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

@@@@@@@@@@@@@@@

செய்தி – Kumaresan Asak குமரேசன், தீக்கதிர் ஆசிரியர்: “நீங்கள் சொன்னதை மக்கள் ஏற்கவில்லையே, இனி என்ன செய்யப்போகிறீர்கள்?” “மக்கள் ஏற்கிற வரையில் சொல்வோம், மக்கள் ஏற்கிற வகையில் சொல்வோம்.”

நீதி: போயஸ் தோட்டத்திலிருந்து ஏன் வெளியேற்றப்பட்டோம் என்ற விளக்கத்தை மக்கள் ஏற்கவில்லை. அடுத்த தேர்தலுக்கு மீண்டும் தோட்டம் செல்லும் பட்சத்தில் இந்த விளக்கத்தை எப்படி தொடர்ந்து சொல்ல முடியும்? இரண்டு வரின்னாலும் கொஞ்சம் கவனமா எழுதணும் தோழர்!

@@@@@@@@@@@@@@@@

செய்தி – கடற்கரய் மத்தவிலாச அங்கதம்: …….மார்கெட்டுக்கு காய்கறி வாங்கப் போனால் கடைவியபாரிகள் ‘வாங்க அக்கா..வாங்க அக்கா’ என சண்டைக்கு நிற்பதைப்போல வம்புக்கு நின்கிறார்கள். ஒரு மார்க்கெட் உள்ளே சென்று ஆசுவாசமாக வேண்டிய பொருளை வாங்கும் சந்தர்பத்தை நமக்கு வியபாரிகள் கொடுப்பதேயில்லை. முதலில் நமக்கு தேவையாக காய்கறிகள் அவர்களிடம் உள்ளதா? நாம் விரும்பும் விலையோடு ஒத்து போகிறதா? என்பதை பொறுத்தி பார்க்கவே விடுவேனா என்கிறார்கள்.

ஏன் இத்தனை அவசரம்? ஏன் இவ்வளவு அடிபிடி? ஏன் இவ்வளவு பதற்றம்? ஒன்றுமே புரியவில்லை. அப்படியே அழைத்தவர் கடையைவிட்டு அடுத்த இடம் நகர ஆரம்பித்தார் நம்மை அழைத்த வியபாரி ‘ஒருமையில் போ..போ..அங்க இணாமா கொடுப்பாங்க வாங்கினு போ’ என்று நம்மிடம் எரிச்சலை உண்டாக்கும் விதத்தில் வார்த்தையை அடுக்குகிறார். நாம் விரும்பு பொருளை நாமே தேர்ந்தெடுக்கவும்..அதை வாங்கவும் நமக்கு சுதந்திரம் இல்லையா? வியாபாரிகள் எனும் போர்வையில் தாதாயிசத்தோடு ஒரு நுகர்வோரை அனுகும் முறையை நினைத்தால் வருத்தமாக உள்ளது.

நீதி: இந்த ‘லோ கிளாஸ்’ தாதா வியாபாரிகளிடமிருந்து காப்பாற்றத்தானே ‘ஹை கிளாஸ்’ ரிலையன்ஸ் ஃபிரஷ், வால்மார்ட், நீல்கிரிஸ், ஹெரிட்டேஜ் என்று ஏகப்பட்ட நாகரீக கடைகள் உள்ளது. ஆனாலும் லோ கிளாசிடம் ஐம்பது காசுக்கு பேரம் என்ற பெயரில் நீங்கள் நடத்தும் யுத்தத்தை, காதில் ரத்தம் வழிய அன்றாடம் சந்திக்கும் அம்மக்கள் அதை ஃபேஸ்புக்கில் எழுதி வெளியட முடியாது என்பதால் நீங்கள்தான் யோக்கியவான்கள்!

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. //இந்த ‘லோ கிளாஸ்’ தாதா வியாபாரிகளிடமிருந்து காப்பாற்றத்தானே ‘ஹை கிளாஸ்’ ரிலையன்ஸ் ஃபிரஷ், வால்மார்ட், நீல்கிரிஸ், ஹெரிட்டேஜ் என்று ஏகப்பட்ட நாகரீக கடைகள் உள்ளது. ஆனாலும் லோ கிளாசிடம் ஐம்பது காசுக்கு பேரம் என்ற பெயரில் நீங்கள் நடத்தும் யுத்தத்தை, காதில் ரத்தம் வழிய அன்றாடம் சந்திக்கும் அம்மக்கள் அதை ஃபேஸ்புக்கில் எழுதி வெளியட முடியாது என்பதால் நீங்கள்தான் யோக்கியவான்கள்!//

    சூப்பரோ சுப்பர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க