privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்மாணவி தீக்குளிப்பு – ஊடகங்களின் வக்கிரம்

மாணவி தீக்குளிப்பு – ஊடகங்களின் வக்கிரம்

-

பாலியல் வக்கிரம் 4பாலியல் வக்கிரத்துடன் ஒரு ஆசிரியர் மாணவியிடம் நடந்து கொள்வதை வெறுமனே பாலியல் சில்மிஷம் அல்லது பாலியல் தொல்லை என்று சொல்லி எளிதில் உங்களால் கடந்து செல்ல முடியுமா? தினமலர், தினமணி, தினகரன், நக்கீரன் என எல்லா தமிழ் நாளிதழ்களும், பத்திரிகைகளும் இப்படித்தான் எழுதுகின்றன.

நடந்துள்ளது ஒரு பெண் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை என்பதையும், அதன் ஆணாதிக்க வக்கிரத்தையும் புரிந்துகொள்வதில் இருந்து விலகி வாசகர்களை ஒரு கிளுகிளுப்பான உலகத்தில் இழுத்துச் செல்வதில் சில்மிஷம் என்ற வார்த்தைக்கு முக்கிய பங்கிருக்கிறது. ‘பாலியல் தொல்லை’ என்ற வார்த்தையும் கூட அந்த வக்கிரக் குற்றத்தை தீவிரமான வன்முறையாக பார்க்காமல் மெல்லிய தவறாக சித்திரிப்பதோடு படிப்பவரின் சிந்தனையிலும் அதை பதிய வைக்கிறது.

விருதுநகர் மாவட்டம், ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவதில், முதல் சில இடங்களில் வரக் கூடிய, கல்வியறிவில் முன்னேறிய ஒரு மாவட்டம். கல்வியறிவில் முன்னணியில் இருந்தாலும் சமூக தரத்தில் அந்த மாவட்டமும் மற்ற மாவட்டங்களோடு சேர்ந்து பின்வரிசையில்தான் இருக்கிறது. அங்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, வத்திராயிருப்பு ஒன்றியம் தம்பிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பட்டியில் அக்கிராமத்தில் உள்ள மாவூத்து சாலையில் வசிக்கும் சடையாண்டி என்பவரது மகள் தங்கம்மாள் (வயது 14) எட்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

சந்திரசேகரன்
சந்திரசேகரன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சியின் போது இப்பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்தவர் இதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் சந்திரசேகர் (வயது 24). தற்போது டி.கிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவில் தெருவில் குடியிருந்து வருகிறார்.

அப்போதிருந்தே மாணவி தங்கம்மாளிடம் தான் அவளை காதலிப்பதாக சொல்லி, கையைப் பிடித்து இழுப்பதும், கட்டிப் பிடிப்பதும், கைவைப்பதுமாக பல்வேறு சித்திரவதைகளை செய்து வந்திருக்கிறார், சந்திரசேகர்.  தன்னுடைய பாலியல் வக்கிரங்களை அப்பெண் மறுத்த போதிலும் பிடிவாதமாகவே அரங்கேற்றி இருக்கிறான் அந்தப் பொறுக்கி. பொறுத்துப் பார்த்த அச்சிறுமி அவனது போக்கு குறித்து ஒரு கிராமத்து சிறுமி என்ற அளவில் பொறுத்துப்ப போனவள் பிறகு பொறுக்க முடியாமல் தன்னுடைய பெற்றோரிடம் கூறியிருக்கிறாள். இந்த சிறுமி மட்டுமல்ல, பாலியல் வக்கிரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் இப்படித்தான் தனக்குள்ளேயே போட்டு வைத்துக் கொண்டு இறுதியில்தான் வெளியே பேசுகிறார்கள். அந்த அளவுக்கு நமது சமூகம் பெண்களை அடிமைகளாக நடத்தி வருகிறது.

உடனே அந்த சிறுமியின் பெற்றோர்கள் சந்திரசேகரின் பெற்றோரிடமும் இதனைக் கூறி அவனைக் கண்டித்திருக்கிறார்கள்.

இக்கண்டிப்பினால் ஒரு கிராமத்து சிறுமி மூலம் யாருக்கும் தெரியாமல் தவறு செய்து கொண்டிருந்த தனது சுய கவுரவம் பாதிக்கப்பட்டதாக கருதிய சந்திரசேகர் அச்சிறுமியை பழிதீர்க்க காத்திருந்தான். கடந்த மே 31-ம் தேதி ஊர் பொதுக்கழிப்பறை அருகே நடந்து சென்று கொண்டிருந்த தங்கம்மாளை வழிமறித்த சந்திர சேகர் அவளை கட்டிப் பிடிக்கவும், முத்தமிடவும் ஆரம்பிக்கவே, அப்பெண் கூச்சலிடத் துவங்கினார். உடனே சந்திரசேகர் ”சத்தம் போடாதே. என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் உனக்கும் ஊரில் இருக்கும் இன்னொருவருக்கும் தொடர்பு உள்ளதாக ஊரில் சொல்லி விடுவேன்” என்று கூறி மிரட்டியுள்ளான். வேறு வழியில்லாததால் அமைதியான அச்சிறுமி உடனடியாக அவனிடமிருந்து எப்படியோ தப்பித்து வீட்டுக்கு வந்து விட்டாள்.

இனிமேல் தனது வாழ்க்கையை பிரச்சினைகளின்றி தொடர முடியும் என்று அப்பேதைச் சிறுமி நம்பவில்லை. மீண்டும் மீண்டும் சந்திரசேகரனது பிரச்சினையை பெற்றோரிடம் எடுத்துச் சொன்னாலும் கிராமத்தில் ‘நீ இடம் கொடுக்காமலா அவன் கையைப் பிடித்து இழுத்திருப்பான்’ என பிறர் சொல்லவே அது வழிவகுக்கும்  என்று யோசித்தாருக்கவும் கூடும். இப்படியாக தற்கொலை செய்து தன்னையே மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறாள் அந்த பதினான்கு வயது சிறுமி. பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து அன்றே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவளை மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள்.

பாலியல் வக்கிரம் 1முதலில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 90 சதவீதத்திற்கும் மேல் உடலில் தீக்காயம் பட்டு விட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஜூன் 4-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். அவளது மரண வாக்குமூலத்தின் படி ஜூன் 1-ம் தேதி சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் மீது சிறுமிகளை பலாத்காரம் செய்தல், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு போன்ற சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘ஆசிரியர் சில்மிஷத்தால் மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது’ என எழுதுகிறது நக்கீரன். இந்த செய்தியில் வக்கிர புத்தியுள்ள ஆண்களுக்கு வேண்டுமானால் பரபரப்பும், கிளுகிளுப்பும் இருக்கலாம். ஒரு இளம் மொட்டு கருக்கப்பட்டு, தற்கொலை செய்யும்படி ஒரு பொறுக்கியின்ன் பாலியல் வக்கிரத்தால் தூண்டப்பட்டிருக்கிறது. படிப்பவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களிடையே ஒரு சமூகத்தின் மீதான கோபத்தை ஏற்படுத்துமாறு செய்தி எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நக்கீரனுக்கோ விற்பனைக்கான பரபரப்பு இருக்கிறது. அதனால் படிக்கும் ஆண்களின் குற்ற உணர்ச்சியை கிளப்புவதற்கு பதில் ஏதோ கிளுகிளுப்பான படம் பார்ப்பது போன்ற ரசனையை ஏற்படுத்திகிறது.

தினமலரும் சில்மிஷம் என்றுதான் எழுதுகிறது. தினமலரில் சந்திரசேகர் அடிக்கடி சில்மிஷம் செய்தார் என்பதுடன், ‘காதலிப்பதாக சொல்லி டார்ச்சர் செய்தார்’ என்று சொல்லப்பட்டுள்ளது. ஏதோ ஒரு காதல் கடிதம் கொடுத்தது போலவும், அதையே பல முறை அப்பெண்ணிடம் கொடுத்தார் என்பது போலவும் புரியவைக்க முயற்சிக்கிறது தினமலர். ஆனால் அப்போதுதான் பருவ வயதை எட்டியுள்ள ஒரு சிறுமியை அவளது அனுமதியே இல்லாமல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதும், என்னை கல்யாணம் செய்து கொள்ளாவிடில் உனது நடத்தையை ஊருக்கு மத்தியில் கேவலப்படுத்துவேன் என்று மிரட்டுவதும் தான் தினமலரின் அகராதியில் காதல் டார்ச்சர் போலும்.

தினமலர் நாளிதழில் வேலை பார்க்கும் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொஞ்சமாவது சூடு சொரணை இருந்தால் கட்டாயம் இந்த சில்மிஷம் குறித்து கேட்க வேண்டும். இல்லையேல் நாளையே உங்களுக்கும் இத்தகைய பிரச்சினை ஏதும ஏற்பட்டால் அதுவும் இப்படித்தான் வக்கிரமாக எழுதப்படும்.

பாலியல் தொல்லை காரணமாக தங்கம்மாள் தற்கொலை செய்து கொண்டதாக தினகரனும், தினமணியும் எழுதுகிறது. ஆனால் சந்திரசேகர் செய்த காரியம் ஏதோ பெரிய வன்முறை போலன்றி சிறிய அளவு தவறு அல்லது பாலியல் குறித்த கொஞ்சம் பலவீனமாக நடந்து விட்டார் என்ற தோற்றத்தை தான் இது படிப்பவர்களிடம் ஏற்படுத்துகிறது. மானம், உயிர் வாழ்தல் என எல்லாவற்றுக்கும் எதிராக ஒரு மிரட்டலை விடுத்துள்ள சந்திரசேகர் அச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு முயற்சி செய்து, கொன்று இருக்கிறான் என்பது தான் அப்பட்டமான உண்மை.

ஒரு குக்கிராமத்தில் வாழும் 14 வயது சிறுமிக்கு உலகம் என்ன பெரிதாக தெரிந்திருக்க முடியும். அந்த சின்ன உலகத்தையும், இள வயதின் துள்ளல் மிகுந்த விளையாட்டுக்களையும் சுருக்கிக்கொண்டு, தீயின் நாக்குகளுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கலாம் என முடிவு செய்த போது அந்தப் பிஞ்சின் மனம் எவ்வளவு தூரம் வெம்பிப் போய் இருக்கும். பேய்களையும், அரக்கர்களையும், பூதங்களையும், இருட்டையும் பார்த்தே பயப்பட தோன்றும் அந்த சிறுமிக்கு ஆண்களும் அப்போது வில்லன்களாகத்தானே தோன்றியிருப்பார்கள்.

பாலியல் வக்கிரம் 3இந்தக் கொடூரத்தை இழைத்தவன் ஒரு ஆண் என்பதற்காக வெறுமென பாலியல் தொல்லை என்று சொல்லி மட்டும் எப்படி ஒரு மனிதனால் கடந்து செல்ல முடியும். பத்திரிகை விற்க வேண்டுமென்பதற்காக எல்லா பத்திரிகைகளும் சந்திரசேகர் அச்சிறுமிக்கு இழைத்த அதே கொடுமையை இன்னும் பெரிதாக பரந்த அளவில் செய்கின்றன என்பதுதான் உண்மை.

சந்திரசேகன் போன்றவர்களை எல்லாம் பொது இடத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொல்ல வேண்டும். அப்படியானால் தான் இனி இப்படி செய்ய முயல்கிறவர்கள் பயப்படுவார்கள் என்று சிலர் சொல்லக் கூடும். இன்னும் சிலரோ அவனது ஆண்மையை அறுவைச் சிகிச்சை செய்து அகற்றி விட வேண்டும் எனத் தீவிரமாக வாதிடவும் கூடும். ஆனால் இந்த தீவிரக் கோபம் எய்தவனை விட்டு அம்புகளிடம் மட்டும் காண்பிப்பது ஏன்?

அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அது இத்தகைய பொறுக்கிகளையும் அவர்களது குற்றங்களையும் மறைமுகமாக ஆதரித்தும், ஊக்குவித்தும் எழுதும்,பேசும் ஊடகங்களுக்கும், சினிமாத் துறைக்கும்தான் தேவைப்படுகிறது. இவர்கள்தான் சமூகத்தில் இத்தகைய குற்றங்களை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு தயார் செய்கிறார்கள். இந்த பத்திரிகைகளின் பார்வையில் வளர்ந்திருக்கும் சமூகமும் தனது பொதுச் சிந்தனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

இரவில் தனியாக பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பெண்ணை பாலியல் நோக்குடன் பார்ப்பது யார்? பேருந்தில் கூட்டத்தில் அயர்ந்து போய் விழும் ஒரு பெண்ணின் கைகளை சந்தர்ப்பமாக கருதும் கைகள் இல்லையா? பணி உயர்வும், ஊக்கத் தொகையும் பெறுவது ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவளது அந்தரங்க வாழ்வினை காரணாமாக காட்டி பேசுவது யார்? ஒரு பெண்ணின் கவனக்குறைவால் அவளது ஆடை நெகிழ்ந்திருக்கும் சமயங்களில் சில பார்வைகள் மகிழ்வது ஏன்? தன்னிடம் வேலை செய்யும் இள வயது பெண் கூலித் தொழிலாளியை ஒரு பண்ணையார் பாலியல் வக்கிரத்துடன் பார்ப்பது சகஜம் என்றால் காரணம் என்ன? இயல்பாக ஆண்களிடம் பேசும் ஒரு பெண்ணை ஆண்கள் மட்டுமே கூடியிருக்கும் ஒரு சபை எப்படி மதிப்பிடுகிறது?

இப்படி ஆண்களின் பொதுப்புத்தியை அறுவை சிகிச்சை செய்யாமலும், அந்த சிகிச்சைக்கு எதிரான நோயை பரப்பிக் கொண்டிருக்கும் ஊடகங்களை கண்டிக்காமலும் நாம்  வத்திராயிருப்பு சிறுமிகளை காப்பாற்ற முடியுமா?

இந்திய நிலபிரபுத்துவ சமூக கட்டமைப்பு பெண்களை போகப் பொருளாக, ஆணுக்கு அடங்கி நடப்பவளாகவே கட்டமைத்திருக்கிறது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன், கணவனுக்கு முன் எழுந்து, கணவனுக்கு பிறகு தூங்கச் செல்பவளே உண்மையான பத்தினி என்று ஏகத்துக்கும் பெண்களை அடிமையாகவும், இரண்டாந்தர குடிமகளாகவும் தான் பார்ப்பனிய இந்து மரபு இதுவரை நடத்தி வந்திருக்கிறது. இந்த லட்சணத்தில் செத்துப் போன சங்கராச்சாரிகள் வரையிலும் வேலைக்கு போகும் பெண்கள் யோக்கியமானவர்கள் இல்லை என்ற கருத்தும் விஷமத்தனமாக வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சங்கராச்சாரிகளுக்கும், சந்திரசேகரனுக்கும் பெண்கள் குறித்த இந்த பார்வையில் வேறுபாடு இல்லை.

மறுபுறம் ஐடி, இணையம், டெபிட் கார்டெல்லாம் வந்த பிறகும் பல படித்த, வேலைக்கு போகும் பெண்களே இதனை ஏற்றுக் கொண்டுதான் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கணவனுக்கு அடிமைகளாக குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சந்திரசேகருக்கோ ஒரு உலகமே தெரியாத கிராமத்து இளந்தளிர் கையில் கிடைத்திருக்கிறது. தன்னைத் தவிர யாரையும் அவள் திருமணம் செய்ய முடியாதவாறு சூழ்நிலைகளை கட்டியமைக்க கிராமத்தில் வாய்ப்பிருப்பதால் அதற்கும் முயல்கிறான். இதிலிருந்து தப்பிக்க முடியும், எதிர்த்து போராட முடியும் என்ற தைரியத்தை பெற வாய்ப்பற்ற சமூக சூழலால் அச்சிறுமி உலகத்திலிருந்து விடைபெற்றுக் கொள்கிறாள்.

பரவி வரும் உலகமயமாக்கலின் துணை நிகழ்வான நுகர்வுக் கலாச்சாரமும் பெண்களை போகப் பொருளாகத்தான் பாவிக்கிறது. இணையம், பத்திரிக்கை எல்லாம் பாலியல் வக்கிரம் மிக்க காட்சிப் படிமங்களால், அத்தகைய கதைகளால் நிரம்பி வழிகிறது. எல்லாற்றையும் அனுபவிக்கத்தான் இந்த வாழ்க்கை வழங்கப்பட்டிருப்பதாக உலகமயம் ஒவ்வொரு ஆணுக்கும் தனித்தனியாகவே விளம்பரங்கள், சமூக வாழ்வு மூலம் போதிக்கிறது.

ஏற்கெனவே நம்முடைய பாரம்பரிய அமைப்பின் பெண்ணடிமைத்தனம் ஆண்களை குரங்காக மாற்றியிருக்கிறது. கூடவே வரும் இந்த நுகர்வுக் கலாச்சாரம் அவனை கள் குடித்த குரங்காகவே மாற்றி விட்டது எனலாம். இதில் சந்திரசேகரும் அவன் கதையை படிப்போரும் விதிவிலக்கல்ல. எப்போது ஒரு ஆண், பெண்களை சக சமூக பயணியாக கருத துவங்குகிறானோ அப்போதுதான் சமூக மனிதர்கள் என்ற நாகரிக கட்டத்தை நாம் அடைய முடியும்.

________________________________________

–    கௌதமன்