privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !

சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !

-

 காலம் தாழ்த்தி வழங்கப்படும் நீதி அநீதிக்குச் சமமானது என்றாலும், நம் நாட்டில் காலம் தாழ்த்திக் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை. ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா வட்டத்திலுள்ள சுண்டூர் கிராமத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்டோர் 8 பேரை கண்டதுண்டமாக வெட்டிக் கொன்ற வழக்கில் ரெட்டி சாதிவெறியர்களை அண்மையில் ஆந்திர உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சாட்சியங்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை என்றும், அரசு தரப்பு வழக்குரைஞர் உரிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறி கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் நரசிம்ம ரெட்டி, ஜெஸ்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடறிந்த இந்த வழக்கில் மனுநீதியையே தனது தீர்ப்பாக அறிவித்துள்ளது.

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை 31991-ஆம் ஆண்டில், சுண்டூர் கிராமத்தைச் சுற்றிவளைத்துக் கொண்டு தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்ட ரெட்டி சாதிவெறியர்கள், எட்டு தாழ்த்தப்பட்ட இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கியதோடு, அவர்களைக் கோடரியால் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்று, அவர்களது உடல்களை சாக்குப் பையில் கட்டி துங்கபத்ரா கிளை ஆற்றில் வீசியெறிந்தனர். ஆந்திர மாநில சிவில் உரிமைக் கழகத்தின் துணையுடன் தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதியுடன் போராடியதன் விளைவாக, 14 ஆண்டுகளுக்குப் பின்னர்  2005-ஆம் ஆண்டில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படியான சிறப்பு நீதிமன்றம், சுண்டூரிலேயே விசாரணைக்காக அமைக்கப்பட்டது.

ரெட்டிகளின் கொலைமிரட்டல்களுக்கு  அஞ்சாமல் இந்நீதிமன்றத்தில் குற்றவாளிகளைத் தாழ்த்தப்பட்டோர் அடையாளம் காட்டினர். அதன் தொடர்ச்சியாக இச்சிறப்பு நீதிமன்றம், 2007-ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 21 பேருக்கு ஆயுள் தண்டனையும், 35 பேருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது. எஞ்சிய 123 பேர் மீது குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை என்று விடுதலை செய்தது. தண்டிக்கப்பட்ட ரெட்டி ஆதிக்கசாதி வெறியர்கள் இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஏழாண்டுகளுக்கு பிறகு இந்த மேல்முறையீட்டை விசாரணை செய்த ஆந்திர உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் நரசிம்ம ரெட்டி, ஜெஸ்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட அனைத்து சாதிவெறியர்களையும் விடுதலை செய்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியன்று  தீர்ப்பளித்துள்ளது.

நாடளவில் முக்கியத்துவம் பெற்ற இந்த வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பின்னரும் நீதி கிடைக்காததைக் கண்டு வேதனைப்படும் சுண்டூர் கிராம மக்கள், ”எங்களது புதல்வர்களை ரெட்டி சாதிவெறியர்கள் வெட்டிக் கொல்லவில்லை என்றால், யார்தான் அவர்களைக் கொன்றார்கள்? தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொண்டு, தங்களது உடல்களை சாக்குப்பையில் திணித்துக் கொண்டு துங்கபத்ரா கிளைக் கால்வாயில் வீசியெறிந்து கொண்டார்களா?” என்று ஆத்திரத்துடன் குமுறுகின்றனர்.

ஒரு பெண்ணின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு எவ்வாறு ஆணாதிக்கத் திமிருடன் அணுகப்படுகிறதோ, அவ்வாறே தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை வழக்குகளையும் சாதியாதிக்கக் கண்ணோட்டத்துடன்தான் நீதித்துறையும் போலீசும் அதிகாரவர்க்கமும் அணுகுகின்றன. சுண்டூர் படுகொலை வழக்கு மட்டுமல்ல, இதற்கு முன்னர் 1985-ஆம் ஆண்டில் ஆந்திர மாநிலம் கரம்சேடுவில் தாழ்த்தப்பட்ட மக்கள் நாயுடு சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் போதுமான ஆதாரங்கள் இல்லையென்று ஆதிக்க சாதிவெறியர்களை ஆந்திர உயர் நீதிமன்றம்  விடுதலை செய்தது.

1996-ஆம் ஆண்டில் பீகாரின் பதானிதோலாவில் 21 தாழ்த்தப்பட்டோர் பட்டப்பகலில் ஆதிக்க சாதிவெறியர்களால் படுகொலை செயப்பட்டனர். 1997-இல் அரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணன் பதவியில் இருந்த போது, லட்சுமண்பூர் பதே கிராமத்தில் ஆதிக்க சாதிவெறியர்களின் பூமிகார் சேனா நடத்திய கொலைவெறியாட்டத்தில் 58 தாழ்த்தப்பட்டோர் கொல்லப்பட்டனர். இப்படுகொலைகளை தேசிய அவமானம் என்று சாடி கண்டனம் தெரிவித்ததற்கு மேல் அவரால் வேறொன்றும் செய்ய முடியவில்லை.

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை 4கடந்த 2012-ஆம் ஆண்டில் பதனி தோலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 ஆதிக்க சாதிவெறியர்களை  பாட்னா உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. 2013-இல் லட்சுமண்பூர் பதே வழக்கில் சாட்சியங்கள் நம்பகத்தன்மையுடன் இல்லை என்று கூறி அமர்வு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட சாதிவெறியர்கள் அனைவரையும் பாட்னா உயர் நீதிமன்றம் விடுதலை செதது. பீகாரின் நக்ரிபஜார், மியான்பூர், நாராயண்பூர், காக்டி பாகா ஆகிய இடங்களில் நடந்த தாழ்த்தப்பட்டோர் மீதான படுகொலை வழக்குகளிலும் பாட்னா உயர்நீதி மன்றம் சாதிவெறி பயங்கரவாதிகளை விடுதலை செய்துள்ளது.

நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கயர்லாஞ்சி வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை 2010-இல் அளித்த தீர்ப்பில், இது சாதிய வன்கொடுமை அல்ல என்றும் நிலப்பிரச்சினையால் உருவான பழிவாங்கும் நடவடிக்கை என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பாயாது என்றும் தீர்ப்பளித்தது. தமிழகத்தில், மேலவளவு படுகொலை நடந்து 9 ஆண்டுகள் முடிந்து விட்டதைக் காட்டி இவ்வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரிப்பதிலிருந்து சென்னை உயர் நீதிமன்றம் நழுவிக் கொண்டது. திண்ணியம் வழக்கிலும் இதே போல ஆதிக்க சாதிவெறியர்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படாமல் தப்புவிக்கப்பட்டனர்.

இவையனைத்தும் இன்றைய இந்திய அரசுக் கட்டமைவானது, அதன் அங்கங்களான போலீசு, இராணுவம், அதிகார வர்க்கம், நீதித்துறை அனைத்தும் மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப சாதிய சமுதாய அமைப்பைக் கட்டிக் காப்பதற்கானதுதான் என்பதையும், இன்றைய அரசியலமைப்பு முறையானது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானதாக இருப்பதையும், பெயரளவிலான ஜனநாயகத்தையும் சட்டப்படியான மனித உரிமைகளையும் கூட செயல்படுத்த வக்கற்றுக் கிடப்பதையும் மெப்பித்துக் காட்டுகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான இட ஒதுக்கீடுகளும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களும் இம்மக்கள் வாழ்விலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையும் சாதிக்கவில்லை என்பதையும், இத்தகைய முயற்சிகள் மூலம் சாதியாதிக்கத்தை ஒருக்காலும் தகர்த்தெறிய முடியாது என்பதையுமே நாளும் பெருகிவரும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைத் தாக்குதல்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

போலீசும், உளவுத் துறையும், நீதித் துறையும் தமது கடமையைச் சரியாகச் செதிருந்தால் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைகளைத் தடுத்திருக்க முடியும் என்ற வகையில் கூறப்படும் வாதங்கள், அறிந்தோ அறியாமலோ இந்த அரசு பற்றிய பிரமைகளைத்தான் வளர்க்கின்றன. ஆனால் இன்றைய அரசியலமைப்பு முறையானது, சாதி – தீண்டாமை முதலான கேடுகெட்ட பிற்போக்கு விழுமியங்களை ஒழிக்கும் நோக்கில், சமுதாயத்தை ஜனநாயகப்படுத்தும் நோக்கில் சட்டங்களை உருவாக்கவில்லை.

இருப்பினும், சாதிய வன்கொடுமைகள் நிகழும்போதெல்லாம், தற்போதைய சட்டத்தில் திருத்தங்களைச் செய்து சாதிவெறியர்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளிக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஜனநாயகப் புரட்சி, சமுதாய மாற்றம் – என்ற திட்டம் மிகத் தொலைவில் இருப்பதாகவும், உடனடித் தீர்வாக சட்டத் திருத்தம்தான் தற்போதைக்குக் காரிய சாத்தியமானது என்றும் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் வாதிடுகின்றன.

அம்பேத்கர் தற்போதைய அரசமைப்பில் பங்கேற்று தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தருமாறுதான் கூறியிருக்கிறார்; ஆயுதப் போராட்டம் நடத்தச் சொல்லவில்லை; பல்வேறு கட்சிகளில் சிதறியுள்ள தாழ்த்தப்பட்டோர் தனியொரு வாக்குவங்கியாக உருவெடுத்து தேர்தல் அரசியல் மூலம் பெறும் அதிகாரத்தின் மூலமும், இட ஒதுக்கீடு முதலான வழிகளில் பொருளாதார முன்னேற்றம் அடைவதன் மூலமும்தான் அவர்கள் விடுதலை பெற முடியும் என்று தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும் கட்சிகளும் தீர்வை முன்வைக்கின்றன. தலித்துகளின் உணர்வுகளை தலித் அல்லாதவர்களால் ஒருக்காலும் உணர முடியாது என்று அடையாள அரசியலைச் செயல்படுத்துகின்றன.

ஆனால் அடையாள அரசியல் என்பதே மற்ற சாதியின் இருப்பை அங்கீகரித்து, எல்லா சாதிகளும் தத்தமது அடையாளத்தைப் பேணிக்கொள்வதை ஆதரிக்கிறது. இதனால் ஆதிக்க சாதிகளும் தாழ்த்தப்பட்டோரும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளப்பட்டு ஆதிக்க சாதிகள் தமது சாதியப் பிடியை மேலும் உறுதிப்படுத்திக் கெட்டிப்படுத்துவதுதான் நடந்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளைப் போலவே வன்னியர்களிடம் இதே வாதங்களைச் சொல்லித்தான், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகக் கூச்சல் போட்டு வன்னிய சாதிவெறியர்களை ராமதாசு கும்பல் அணிதிரட்டிக் கொண்டது.

தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை 5ஏற்கெனவே சமூக ரீதியில் ஒரு ஆதிக்க சாதி என்ற முறையில் பெற்றிருக்கும் அதிகாரத்துடன் அரசியல் கட்சி, அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை போன்றவற்றிலும் இந்த ஆதிக்க சாதிகளின் மேட்டுக்குடி வர்க்கங்கள் அதிகாரத்தைப் பெற்றுள்ளன. மேலும், தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்துக்குப் பின்னர் இத்தகைய சாதிகளில் தோன்றியுள்ள புதியவகை தரகு வர்க்கங்கள் இன்று சாதிக் கட்சிகளின் புரவலனாக இருந்து சாதியப் பிழைப்புவாத வாக்கு வங்கி அரசியலுக்கு வழியமைத்துக் கொடுப்பதோடு, தீண்டாமையைத் தங்களது பிறப்புரிமையாக அறிவிக்கும் அளவுக்கு கொட்டமடிக்கின்றன.

டெல்லியில், ஓடும் பேருந்தில் ஒரு இளம்பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிக்  கொல்லப்பட்டபோது கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டங்களை நடத்திய நாடும் அதன் மனசாட்சியாக உள்ள ஊடகங்களும், பாலியல் வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் நாள்தோறும் இலக்காகி வரும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைக்கு எதிராகவோ, சாதிவெறியர்களை விடுவிக்கும் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராகவோ இப்படி தார்மீக ஆவேசத்தைக் காட்டவில்லை. எந்த தாழ்த்தப்பட்ட இயக்கமோ, தலைவர்களோ சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு பற்றிக் கருத்து தெரிவித்ததாக செய்திகளும் வரவில்லை. தாழ்த்தப்பட்டோர் அமைப்புகள் சுண்டூர் தீர்ப்பை ஓர் அரசியல் பிரச்சினையாக வைத்துப் போராடவும் முன்வரவில்லை.

மேலிருந்து கீழ்வரை தாழ்த்தப்பட்ட போலீசு அதிகாரிகள் இருந்தபோதிலும், அவர்களே கயர்லாஞ்சியின் நடந்த கொடூரத்தை எப்படியெல்லாம் முடக்கினார்கள் என்று அம்பலப்படுத்துகிறார் முனைவர் ஆனந்த் தெல்தும்டே. சுண்டூரில் ரெட்டி சாதிவெறியர்களுக்கு எதிரான போராட்டம் இன்று மாலா, மடிகா  என தாழ்த்தப்பட்டோரிடையே உட்பிரிவுகள் அடிப்படையில் அடையாள அரசியலால் பிளவுபட்டுப் போய், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பல பிழைப்புவாதிகள் ஆதிக்க சாதிக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆதாயமடைவதில் முடிந்துள்ளது. ராம்தாஸ் அதாவலே, ராம்விலாஸ் பஸ்வான், ராம்ராஜ் என்கிற உதித்ராஜ் ஆகிய தாழ்த்தப்பட்டோரது அடையாள அரசியல் தலைவர்கள், இந்துவெறி பா.ஜ.க.வின் விசுவாசப் பிழைப்புவாதிகளாகச் சீரழிந்துள்ள கதையை ‘’மூன்று ராமன்களின் அனுமன் சேவை” என்ற கட்டுரையில் முனைவர் ஆனந்த் தெல்தும்டே திரைகிழித்துக் காட்டுகிறார்.

அடையாள அரசியலானது, மற்ற சாதிகளில் பிறந்த ஜனநாயக சக்திகளை எதிர்நிலைக்குத் தள்ளுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியானாலும், ஆதிக்க சாதியானாலும் சாதியின் பெயரால் நடத்தப்படும் அரசியலானது, ஒருக்காலும் சாதியை ஒழிக்காது. பீகாரில் சாதிவெறியாட்டங்கள் கட்டுக்குள் இருந்ததற்குக் காரணமே அன்றைய நக்சல்பாரி புரட்சிர அரசியலும் போராட்டங்களும்தானே அன்றி, சட்டத்தாலோ, அடையாள அரசியலாலோ சாதிய ஒடுக்குமுறையைத் தடுக்க முடியவில்லை. வர்க்கப் புரட்சிக்கு மக்களை அணிதிரட்டும்போதுதான் சாதி என்பது தமது வர்க்க நலனுக்கே எதிரானது என்பதை ஆதிக்க சாதி மக்கள் உணர முடியும். தம்மிடமுள்ள ஆதிக்க சாதி கருத்தோட்டங்களைக் களைந்து கொள்ளவும் முடியும்.

இந்நிலையில் கூடுதலான சீர்திருத்தங்களாலோ, மேலும் கடுமையான சட்டங்களாலோ, அடையாள அரசியலாலோ சாதிவெறிக் கொடுமைகளுக்கு ஒருக்காலும் தீர்வு காண முடியாது. மாறாக, கெட்டி தட்டிப் போயுள்ள சாதியாதிக்கச் சமுதாயத்தைத் தகர்த்தெறியக்கூடிய உழைக்கும் மக்கள் தலைமையிலான சமூக-அரசியல் புரட்சிதான் இன்றைய தேவையாக உள்ளது.

குமார்.
__________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் 2014

__________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க