privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்சிவகாமியின் தலித்திய சபதம் – குற்றம் நடந்தது என்ன ?

சிவகாமியின் தலித்திய சபதம் – குற்றம் நடந்தது என்ன ?

-

மிழக அரசியல் அரங்கில் அநாதையாக தனித்துவிடப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, நடந்து முடிந்த தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் செய்தார் சமூக சமத்துவப் படை கட்சியின் சிவகாமி, எனும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. தேர்தலில் போட்டியிட ஆள் கிடைக்காமல் அவதிப்பட்ட காங்கிரஸ் கட்சி  சீட் கொடுக்க மறுத்து விட்டாலும், அதை பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரம் செய்தார் இந்த அம்மையார். இப்படி காங்கிரசின் கடைசிக் காலத்தில் அதனுடன் சேர்ந்தால், ஊர் உலகம் கேலி செய்யும் என்பது தெரிந்தாலும் சிவகாமி விரும்பி காங்கிரசுடன் சேர்ந்தது ஏன்? அதற்கான  விடை தலித்தியத்தின் சரணாகதிக்கு ஒரு எடுப்பான சான்றாக இருக்கிறது.

சிவகாமி பி
சிவகாமி பி

ஐஏஎஸ் அதிகாரியான இவர் எண்பதுகளின் மத்தியில் இலக்கிய உலகில் தலித் மற்றும் பெண்ணிய எழுத்தாளராக அறிமுகமானார். பின்னர் 90-களில் தலித் நிலவுரிமை இயக்கம், பெண்கள் ஐக்கிய பேரவை என்று நேரடியாக அடையாள அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். புதிய கோடங்கி என்ற பத்திரிகையையும் நடத்தினார். அன்றைய காலகட்டத்திலேயே அந்த பத்திரிகைக்கான விளம்பர கட்டணம் ரூ 50,000 என்று நிர்ணயிக்கப்பட்டு அரசின் கோ-ஆப்டெக்ஸ் விளம்பரங்களும் பெறப்பட்டன. பின்னர் விருப்ப ஓய்வு பெற்று 2008-ல் முழு நேர அரசியலுக்கு வந்தார் சிவகாமி. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின்  மாநில செயலாளராகி 2009 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். அந்தக் கட்சியில் போணியாகாததால் தனியாக கடைவிரித்து தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இது தான் இவரது முன் கதை சுருக்கம்.

காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னர் தினமலருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் முதலில் தேமுதிக உடன் கூட்டணிக்கு முயன்றதாகவும் ஆனால் அவர்கள் பதில் ஏதும் சொல்லாததால்  தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். முதலில் விழுப்புரம் தொகுதியை தருவதாக கூறிய காங்கிரஸ் பின்னர் ஏனோ அந்த தொகுதிக்கு வேறு நபரை நியமித்துவிட்டாலும், எந்த வருத்தமுமின்றி காங்கிரசின் வெற்றிக்கு உழைக்கப் போவதாகவும் கூறியிருந்தார்.

“நிலமற்றவர்களுக்கு நிலம் அளிக்கும் வரைவு திட்டத்தை, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து உள்ளது. நிலமற்றவர்களுக்கு நிலம், வீடு அல்லாதவர்களுக்கு வீடு என்பது, ‘சமூக சமத்துவ படை’யின் முக்கிய கோரிக்கைகள். மேலும், தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி, பிற கட்சிகள் பேசாத நிலையில், காங்கிரஸ் அவர்கள் பற்றிய சிந்தனையை முன்னெடுத்து உள்ளது. காங்கிரசின் துணை தலைவர் ராகுல் இதில் முன் மாதிரியாகவும் உள்ளார். எனவே, எங்களது கொள்கையுடன் ஒத்துப்போகும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து உள்ளோம்.” என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

“கம்யூனிஸ்டுகளுக்கு சாதி பற்றிய புரிதல் இல்லை”, “கம்யூனிஸ்டுகள் தலித்களுக்கு எதுவும் செய்யவில்லை”  என்று  அவதூறு கூறும் எல்லா தலித்தியவாதிகளுக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் வர்க்க கட்சிகள் சாதியை புரிந்துகொண்ட கட்சிகளாக தெரிவது தான் இதில் உள்ள முக்கிய அம்சம். சிவகாமி போன்றே, திருமாவளவனும்  தேர்தல் அரசியலில் பங்கேற்ற முதல் தேர்தலில் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசுடன் தான் கூட்டணி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தேர்தல் பாதைக்கு அழைத்து வந்த மூப்பனார் குறித்து பல இடங்களில் சிலாகித்தும் கூறியிருக்கிறார்.

கார்த்திக் சிவகாமி
தேவர் சாதிவெறி கார்த்திக் உடன் கூட்டணி சேர்ந்த சிவகாமி

தஞ்சை நிலஉடைமையாளரான மூப்பானாரும் காங்கிரசும் சாதியை புரிந்து கொண்டிருக்கும் அளவில் செங்கொடி இயக்கமும், கம்யூனிஸ்டுகளும் புரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்ற தலித்தியவாதிகளின் நிலைப்பாட்டிற்கு சிவகாமி மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன? அதனால் திருமாவும், ரவிக்குமாரும் மூப்பனார், ராமதாஸ், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற சாதி ஒழிப்பு போராளிகள் பின்னால் அணி திரண்டார்கள் என்றால் சிவகாமி முதலில் கேப்டன் பின்னாலும், கேப்டன் கேட்டை சாத்தியதால் பிறகு ராகுல் பின்னாலும் சாதி ஒழிப்புக்கான பாதையில் நடைபோடுகிறார்.

பாஜக-வை ஏன் ஆதரிக்கவில்லை என்ற கேள்விக்கு பாஜக கூட்டணியில் ராமதாஸ் இருப்பதாகவும் அதனால் தன்னால் ஆதரிக்க முடியாது என்று தேவர் சாதிவெறி கார்த்திக் உடன்  கூட்டணி சேர்ந்து கொண்டு கூறுகிறார் சிவகாமி. அவரது கூற்றுப்படி பாஜக உடன் கூட்டணி சேராததற்கு ராமதாஸ் அந்த கூட்டணியில் இருப்பதுதான் காரணமே தவிர மற்றபடி மோடி செய்த இனப்படுகொலையோ, அவர்களின் இந்துத்துவ சித்தாந்தமோ இவருக்கு பிரச்சனையில்லை என்பது தெரிகிறது. அவரின் பின்வரும் கூற்று மூலம் இதை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். “தேர்தல் கூட்டணி என்பது, கொள்கைகள் அடிப்படையில் அமைவதில்லை. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அமைகின்றன” ‘கொள்கை எல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா’ என்ற பச்சையான பிழைப்புவாதம்தான் இது.

ராமதாசுடன் கூட்டணி அமைக்க முடியாத இவர் கார்த்திக்குடன் கூட்டணி வைக்கிறாரே எப்படி? அதில் தான் தலித் உட்பிரிவு அரசியல் இருக்கிறது. அதாவது இவர் கட்சி தலித்களின் உட்பிரிவான பறையர் சாதியை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் கணிசமாக இருக்கும் அந்த சாதிமக்கள் ராமதாசின் சாதி வெறியால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் ராமதாசுடன் கூட்டணி வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது. ஆனால் தென்மாவட்டங்களில் பள்ளர் சாதியினரை ஒடுக்கும் தேவர் சாதி வெறி கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது இவருக்கு பிரச்சனையை ஏற்படுத்தாது. இதுதான் இவர்கள் கார்த்திக்கை சகித்துக் கொண்ட இரகசியம். இது தான் இவரது ராமதாஸ் எதிர்ப்பு என்பதற்கு அடிப்படை, மற்றபடி தலித்துகள் மீதான் பாசம் கிடையாது.

சிவகாமி உள்ளிட்ட சாதிய பிழைப்புவாதிகளின் நோக்கம், சாதியாக மக்களை அணிதிரட்டி அதைக் காட்டி பெரிய கட்சிகளிடம் பேரம் பேசி பல்வேறு ஆதாயங்களை, இல்லை கவுன்சிலர், எம்.எல்.ஏ, எம்.பி, காண்டிராக்ட், கட்ட பஞ்சாயத்து, காவல் நிலையம், அரசு அலுவலகங்களில் காரியம் சாதிப்பது என்று ஏனைய ஓட்டுப் பொறுக்கிகளோடு போட்டி போட்டு வளருவதுதான். அதனால் தான் தாழ்த்தப்ப்பட்ட மக்கள் புரட்சிகர கட்சிகளிலோ இல்லை பிற ஜனநாயக அமைப்புகளிலோ அணிதிரள்வதை இவர்கள் தங்கள் பிழைப்பில் மண்ணைப்போடும் செயலாக பார்க்கிறார்கள். அதற்காக கோபப்படுகிறார்கள்; ஆத்திரமடைகிறார்கள். இதையெல்லாம் கேட்டால் இதுநாள் வரை மற்ற ஆதிக்க சாதிக் கட்சிகள் பிழைத்து வந்தது போல தலித் கட்சிகள் இன்று புதிதாக இப்படி பிழைப்பதில் என்ன தவறு என்று கோட்பாட்டு விளக்கம் கூறுகிறார்கள்.

இளவரசன் மரணம் தொடர்பாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு “தலித் அல்லாத எந்த இயக்கமும், கட்சியும் இந்த பிரச்சனையை கையில் எடுப்பத்ற்கு தகுதி இல்லை” என்று தன்னை பேச அழைத்த “சேவ் தமிழ்ஸ்” ‘அப்பாவி’களை இதே சிவகாமி குதறி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகாமியின் இந்த அறச்சீற்றம் ராகுல் காந்தியிடமோ இல்லை கேட்டை திறந்து கூட்டணியில் சேர்த்திருந்தால் கேப்டனிடமும் காட்டமுடியுமா? இல்லை திருமா, ரவிக்குமார் போன்றோர்தான் தான் கருணாநிதியிடம் காட்ட முடியுமா?

இது ஏதோ பிற இயக்கங்கள் மீதான ஒரு பிழைப்புவாதியின் தனிப்பட்ட கோபம் மட்டுமல்ல. தலித்தியம் என்ற சித்தாந்தமே இத்தகையதுதான். சமீபத்தில் “சாதியை ஒழிப்பது எப்படி” என்ற புத்தகத்திற்கு அருந்ததிராய் எழுதிய முன்னுரைக்கு சில தலித்தியவாதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதில் முக்கியமானது ‘தலித் அல்லாதவர் அம்பேத்கரை குறித்து எழுத தகுதியில்லை’ என்பது. இது தலித்திய அரசியல், தலித் தலைமை, சாதியை தலித்துகளால் மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும், தலித்தாக பிறந்தவர் தான் தலித் இலக்கியம் படைக்கமுடியும் என்பதன் நீட்சியே.

குறிப்பிட்ட இந்த சம்பவம் குறித்து ஆனந்த் தெல்டும்டே எழுதிய கட்டுரையில் “தலித்தியவாதிகளுக்கு  கம்யூனிசத்துடன் ஏதோ ஒரு மூலையில் தொடர்புடைய எதுவாகிலும் அது வெறுப்பதற்கும் நிராகரிப்பதற்கும் போதுமானதாக இருக்கிறது. அருந்ததிராய் தொடர்பான பிரச்சனையும் அப்படிப்பட்டதுதான்” என்கிறார்.

ஆனந்த் தெல்டும்டே கூறுவது போல தலித்தியவாதிகளுக்கு கம்யூனிசம் என்றாலே ஏன் கசக்கிறது? தலித்தியவாதிகளின் இன்றைய சீரழிவுக்கு காரணம் என்ன? அதை தெரிந்து கொள்ளவும் பொதுவில் முற்போக்கு சிந்தனை உடையவர்களும், தாழ்த்தப்பட்ட இளைஞர்களும் தலித்தியம் என்பது ஏதோ சாதி ஒழிப்புக்கானது என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்கான்து என்றும்  புரிந்து கொண்டுள்ளது சரிதானா என்பதை பரிசீலித்து பார்க்க தலித்தியத்தின் வேரை தேடி அறிவது அவசியம்.

மதுரை அரசரடி இறையியல் கல்லூரி
மதுரை அரசரடி இறையியல் கல்லூரி

தமிழகத்தை பொறுத்தவரை தலித்தியம் என்பதை முதலில் முன்வைத்தது மதுரை அரசரடி இறையியல் கல்லூரி. இது தென்னிந்திய திருச்சபை, ஆற்காடு லூதரன் சர்ச், தமிழ் எவாஞ்சலிக்கல் லூதரன் சர்ச் போன்றவற்றை ஒருங்கிணைக்கும் அமைப்பாக 1969-ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த காலகட்டம் முக்கியமானது. உழுபவனுக்கே நிலம என்ற முழக்கத்துடன் நக்சல்பாரி உழவர் பேரெழுச்சியை தொடர்ந்து புரட்சிகர சக்திகள் உத்வேகமடைந்து நாடு முழுவதும் நக்சல்பாரி இயக்கம் பரவிக்கொண்டிருந்த காலம். நக்சல்பாரி எழுச்சிக்கு முன்னரே கூட தாழ்த்தப்பட்ட மக்களிடையே செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தமாக கம்யூனிசம் இருந்து வந்தது. கம்யூனிஸ்டுகளின்  ஆயுதந்தாங்கிய தெலுங்கானா உழவர் புரட்சி, நக்சல்பாரி புரட்சி என உழைக்கும் மக்களின் (அதில் கணிசமானோர், தாழ்த்தப்பட்ட மக்கள் ) நில உரிமைக்காக இரத்தம் சிந்தி போராடிவந்த தலைமையாக கம்யூனிஸ்டு கட்சிகள் விளங்கியதால் மக்கள் இயல்பாக கம்யூனிஸ்டுகளின் பின்னால் அணி திரண்டிருந்தார்கள்.

இதில் போலிக் கம்யூனிஸ்டுகள் தலைமை பார்ப்பனிய சமூக அமைப்பை கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொண்டு அதை மாற்றும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை என்றாலும், கீழ் மட்டத்தில் இருந்த வர்க்க அமைப்புகள் சாதி ஏற்றத் தாழ்வை எதிர்த்து போராடின. கீழத்தஞ்சை, கேரளா, ஆந்திரா, பீகார், வங்கம் என்று அது நாடு முழுவதும் நடந்திருக்கிறது. பிறகு போலிக் கம்யூனிஸ்டுகளிடமிருந்து முறித்துக் கொண்டு வந்த நக்சல்பாரி இயக்கம் நிலமற்ற விவசாயிகளுக்கு அல்லது உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம் என்ற முழக்கத்தோடு கிராமப்புறங்களில் வேலை செய்தது. இதில் பிற சாதி உழைக்கும் மக்களுக்கு தீர்வு இருப்பதோடு தலித் மக்களுக்கும் இருக்கிறது என்பதே இங்கே நாம் பார்க்க வேண்டியது.

உழுபவனுக்கே நிலம் என்ற முழக்கத்தை கொண்ட புதிய ஜனநாயக புரட்சியும், அதன் மூலம், தாழ்த்தப்பட்ட மக்களையும் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் நிலம் மற்றும் அரசியல் அதிகாரம் பெறுவதும் ஏகாதிபத்தியத்தின் சமூக அடிப்படைகளில் ஒன்றான நிலப்பிரபுவத்துவத்தையும் குறிப்பாக பார்ப்பனியத்தின் சாதி முறையையும் தகர்க்கும் என்பதால் அதை தடுக்க புரட்சிகர அமைப்பிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை பிரித்து, அவர்களைக் கொண்ட சாதியை கெட்டிப்படுத்தி பார்பனியத்திற்கு சேவை செய்ய  வைப்பது ஏகாதிபத்தியங்களுக்கு தேவையாக இருந்தது.

சர்வதேச ரீதியில், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான சக்திகளை ஒன்று குவித்து தாக்கும் கம்யூனிச சித்தாந்தத்திற்கு மாற்றாக,  போராடும் மக்களை பிளவுபடுத்தும் ஒரு சித்தாந்தம் தேவை என்பதை உணர்ந்து கொண்டு,  80 -90 களில் பின்நவீனத்துவம் என்ற சித்தாந்தம் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைகழகங்களிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

‘வர்க்கப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இனி மக்கள் அவரவர் பிரச்சனைக்கு தனித்தனியே சிறு சிறு அமைப்புகள் கட்டி போராட வேண்டும். அவை அவர்களது சாதி,மத, பால், இன்னபிற அடையாளங்களோடு கூடிய கட்சிகளாக இருக்கலாம். இதை மறுத்து உழைப்பவர், தொழிலாளியைத் திரட்டுவது, வர்க்கம் என்று பேசுவது பெருங்கதையாடல்’ என்று கூறி நிராகரித்து பெண்ணியம், சூழலியம், தலித்தியம், கருப்பின அதிகாரம் என்று இனம், பாலினம் என்று பலவகைகளில் மக்களை பிரிக்கும் வேலையை ஏகாதிபத்தியத்தின் அறிவு ஜீவி அடியாட்கள் செய்து வந்தனர்.

ஃபோர்டு ஃபவுண்டேசன்
“உலகெங்கும் சமூக மாற்றத்துக்கான முன்னணிப் படையினராக விளங்கும் சிந்தனையாளர்களுடன் பணியாற்றும்” ஃபோர்டு ஃபவுண்டேசன்.

இந்த அடியாள் வேலைக்கென்றே 89-ல் தலித் ஆதார மையம் என்ற அமைப்பை பிரத்யேகமாக ஆரம்பித்தது மதுரை இறையியல் கல்லூரி. அவர்களுடைய இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி இவர்கள் தான் தலித்தியம், தலித் அரசியல், தலித் இறையியல, தலித் வழிபாடு, தலித் ஓவியம், தலித்  நாடகம், தலித் கலைவிழா, அம்பேத்கர் ஆய்வு, தலித் பெண்ணியம் என்று தமிழகத்தில் புகுத்தினார்கள். 90-களின் மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழகம் பார்ப்பன பண்பாட்டிற்கு எதிராக “தமிழ் மக்கள் இசை விழா” என்று மக்களை ஒருங்கிணைத்தால் அதற்கு எதிராக அடுத்த ஆண்டே “தலித் கலை விழா” என்று மக்களை பிளவுபடுத்த முயன்றார்கள்.

மதுரை இறையியல் மையம் மற்றும் அதன் சித்தாந்த பின்னணியில் தான் பல்வேறு தலித்திய இயக்கங்கள் தமிழகத்தில் தோன்றின. அல்லது தோன்றிய இயக்கங்கள் தலித்திய அரசியலை கற்றுக் கொண்டன. புரட்சியின் மூலம் சமூக அமைப்பை மாற்றுவதற்கு பதிலாக நிகழும் சமூக அமைப்பை ஏற்றுக்கொண்டு தேர்தலில் பங்கேற்பதன் மூலம் அரசியல் அதிகாரம் பெறலாம் என்றும்,  உழுபனுக்கே நிலம் என்ற கோரிக்கைக்கு  மாற்றாக பஞ்சமி நிலத்தை மீட்போம் என்றும் கூறி புரட்சிகர கட்சிகளின் முழக்கங்களை நிராகரித்து ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்தார்கள் இந்த தலித் அமைப்புகள். அதற்கு பிரதிபலனாகத்தான் இன்று ஆளும் வர்க்கம் இவர்களுக்கு பொறுக்கி தின்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

ஃபோர்டு ஃபவுண்டேசன் போன்ற ஏகாதிபத்திய அமைப்புகள் தலித்தியம் என்ற கோட்பாட்டை முன்னிறுத்துவதன் மூலம் தலித் மக்களை பிளவுபடுத்தியதாக கூறும் அருந்ததி ராய் கூட, வெளிநாடுகளில் படிப்பதற்காக ஃபோர்டு ஃபவுண்டேசனிடமிருந்து நிதி உதவி பெறும் தலித் மாணவர்களை கடுமையாக விமர்சிக்க முடியாது என்று குறிப்பிடுகிறார். ஆனால், அப்படி ஏகாதிபத்திய நிதி உதவி பெற்று படிக்கும் மாணவர்கள்தான் எதிர்காலத்தில் தலித்திய அறிவுஜீவிகளாகவும், தலைவர்களாகவும் உருவெடுக்கிறார்கள் என்பதையும் புறக்கணித்து விட முடியாது.

அடையாள அரசியல் பேசும் கட்சிகளுக்கு முற்போக்கு சித்தாந்த மூலாம் பூசவும், கம்யூனிஸ்டுகளை அவதூறு செய்து அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை புரட்சிகர கட்சிகளிலிருந்து பிரித்து , இந்த பிற்போக்கு தலித் அமைப்புகளில் சேர்த்து ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யவும் பின்நவீனத்துவ அறிவுஜூவிகள் கடுமையாக உழைத்தார்கள்.“கம்யூனிஸ்டு கட்சிகளும், நக்சல்பாரிக் கட்சியும் தலித்துகளை காலாட்படையாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அக்கட்சிகளிலிருந்தெல்லாம் தலித்துகள் வெளியேறித் தமக்கென தனிக்கட்சி தொடங்கவேண்டும். தலித்துகளின் உணர்வுகளைத் தலித் அல்லாதவர்கள் ஒருக்காலும் உணர முடியாது. தீண்டாமைக்கு எதிராகத் தலித்துகளைத் தவிர, வேறு யாரும் போராடுவார்கள் என்று நம்ப முடியாது. தீண்டாமைக்குரிய தீர்வை ஒரு தலித்தைத் தவிர வேறு யாரும் கூறமுடியாது. தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தலித்தைத் தவிர வேறு யாரும் தலைமை தாங்க முடியாது, கூடாது. வர்க்கம் என்ற பேரடையாளத்துக்குள் சாதியை அடக்குவதால் கம்யூனிசம் சாதியை ஒழிக்காது. கம்யூனிஸ்டுகள் அதற்காகப் போராடியதுமில்லை. எனவே, தலித்துகள் சிதறிக் கிடக்காமல் தனியொரு வாக்கு வங்கியாகத் திரள வேண்டும். போலி ஜனநாயகம் என்று கூறி இந்தத் தேர்தலை புறக்கணிப்பது தவறு. தேர்தல் அரசியல் மூலம் கைப்பற்றும் அதிகாரத்தின் மூலமும், கல்வி – இட ஒதுக்கீடு, ஆங்கிலக் கல்வி முதலான வழிகளில் பொருளாதார முன்னேற்றம் அடைவதன் மூலமாகவும்தான் தலித்துகள் விடுதலை பெற முடியும்,’  என்று அ.மார்க்ஸ், இரவிக்குமார் உள்ளிட்ட பின்நவீனத்துவவாதிகளும், தலித்தியவாதிகளும் பிரச்சாரம் செய்தனர்.

அ மார்க்ஸ்
அ மார்க்ஸ்

தலித் அமைப்புகளை மட்டுமல்லாது ஆதிக்க சாதி வெறியையும் அடையாளத்தையும் முன்னிலைப்படுத்திய பா.ம.க வையும் ஆதரித்தனர். இவர்கள் சாதியை மட்டுமின்றி, உட்சாதி அடையாளங்களையும் போற்றிக் கொண்டாடினர். சாதி அடையாளங்களைப் பேணிக் கொண்டே, சாதி சமத்துவத்தைக் கடைப்பிடிப்பதுதான் ஜனநாயகம் என்று தங்கள் நவீன பார்ப்பனியத்திற்கு புது வியாக்கியானம் அளித்தனர்.

சாதிமுறையை கெட்டிப்படுத்தும் இத்தகைய அடையாள அரசியல் மூலம் தலித் ஒற்றுமை என்பதை கூட அவர்களால் நிலைநாட்ட முடியவில்லை, இனியும் முடியாது என்பதே உண்மை. அருந்ததியர்க்ளுக்கான உள் இடஒதுக்கீட்டை சக தலித் அமைப்புகளே தடை செய்ய கோருவதை இப்படி தான் புரிந்துகொள்ள வேண்டும்.

சரி இவர்கள் கூறிய இந்த பாதையினால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏதேனும் நன்மை விளைந்திருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. பெரும்பான்மை மக்கள் இன்னும் விவசாய கூலிகளாகவும், கிராமப்புறங்களிலிருந்து விரட்டப்பட்டு நகர்புறங்களில் கூலிகளாகவும், புலம்பெயர் தொழிலாளர்களாகவும், கொத்தடிமைகளாகவும் தான் வாழ்க்கை நடத்துகிறார்கள். சாதிவெறியாட்டங்களும், கௌரவ கொலைகளும் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. அதற்கு எதிர்வினையாற்றும் திராணி கூட இல்லாமல் தலித் இயக்கங்கள் சீரழிந்துள்ளன. ஆனால் தலித் தலைமையோ மறுகாலனியாக்க கொள்கைகள் திறந்து விட்டிருக்கும் ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, லேபர் காண்டிராக்ட், உரிமங்கள் பெற்றுத் தருதல், தண்ணீர் வியாபாரம், செக்யூரிட்டி ஏஜென்சி, மெட்ரிக் பள்ளி, சுயநிதிக் கல்லூரி, வாடகைக்கார் தொழில், நிலம் சார்ந்த கட்டப் பஞ்சாயத்துகள், பன்னாட்டு நிறுவனங்களுக்கான துணைத் தொழில்கள், கருங்காலி தொழிற்சங்கங்கள் போன்று பொறுக்கித் தின்னவும், கொள்ளையடிக்கவுமான பல வாயப்புகளை பய்ன்படுத்தி ‘முன்னேறியிருக்கிறார்கள்’.

இப்படி பொறுக்கித் தின்பதில் ஆதிக்க சாதியினரும், தலித் தலைமைகளும்  கொண்டுள்ள தொழிற்கூட்டு காரணமாக, தங்கள் வர்க்க நலன் கருதி தலித் மக்களுக்கு துரோகம் இழைக்கவும் இவர்கள் தயங்குவதில்லை. இளவரசன் மரணத்தில் பாமக வின் சாதிவெறியை நேரடியாக விடுதலை சிறுத்தைகள் கண்டிக்கவில்லை என்பது இதற்கு நல்ல உதாரணம்.

ஆக ஏகாதிபத்தியங்களின் சமூக அடிப்படையான நிலப்பிரபுத்துவத்தையும் அதன் பார்ப்பன சாதிமுறையையும் பாதுகாக்க உருவாக்கி வளர்க்கப்பட்ட தலித்தியம் அதை செவ்வனே செய்து வருகிறது. சாதி ஒழிப்பு சமூக மாற்றம் என்பதை உண்மையிலேயே விரும்பும் எவராகிலும் தலித்தியத்தை புறந்தள்ளி புரட்சிகர அமைப்புகளில் அணி திரளவதே இன்றைய தேவையாக இருக்கிறது. அடையாள  அரசியல் சாதியை ஒழிக்காது, உழைக்கும் மக்களுக்கு நிலத்தை சொந்தமாக்கும் புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியும்.

ஆரம்பத்தில் சிவகாமியும இப்படித்தான் மதுரை அரசரடி இறையியல் மையத்தின் மூலம் ஞானம் பெற்று தீவிர தலித்தியம் பேசிவந்தார். பிறகு அ.மார்க்ஸ் கும்பல் பின்நவீனத்துவம் பேசிய போது அம்பேத்கரையும், பின் நவீனத்துவத்தையும் ஒட்டுப் போட்டு இணைத்து பேசினார்.

இந்த பிழைப்புவாதியை அறிவுஜீவியாகவும், தலித்துகளின் நில உரிமைகள் மீட்பு போராளியாகவும் தலித்தியவாதிகள் சித்தரிக்கிறார்கள். தலித்துகளின் உரிமைக்காக அவர் நடத்திய போராட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.

சமீபத்தில் இவரிடம் RoundTableIndia என்ற தலித் இணையதளம் பேட்டி கண்டு வெளியிட்டிருந்தது. அதில் இவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி

“நீங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்கிறீர்கள் அல்லது நிலப்பகிர்வு தொடர்பான கொள்கைகளை மறுஆய்வு செய்யவேண்டும் என்கிறீர்கள் அல்லவா?”

“தலித்களின் நில உரிமைக்கு நாங்கள் ஒரு மாநாட்டை கூட்டினோம். அதில் குறைவான நபர்களே பங்கு கொண்டனர். அனைவரும் வர முடியாதல்லவா?

இதனால் ஒரு நாளை குறிப்பிட்டு அந்த நாளில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மனுகொடுக்க கோரினோம். (அதற்கும் ஆள்வரவில்லை – வினவு) .

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கிராமங்களிலிருந்து அதிக தொலைவில் இருக்கிறது என்பதை உணர்ந்து தாலுகா அலுவலகத்தில் மனுகொடுக்கும் போராட்டம் நடத்தினோம். (அதற்கும் ஆள்வரவில்லை – வினவு).

பின்னர் தந்தி அடிக்கும் போராட்டம் நடத்தினோம்.”

தலைநகரில் ஆரம்பித்த போராட்டம் தபால் நிலையம் வரை பற்றி ‘படர்ந்த’ இந்த போராட்ட வழிமுறையை வெட்கமே இல்லாமல் நக்சலைட்டுகளைவிட முற்போக்கானதாக சித்தரிக்கிறார்கள்.

இவரை அறிவுஜீவி என்று நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்காக சில முத்துக்களை உதிர்த்திருக்கிறார் சிவகாமி.

“விவசாயம் இன்று லாபகரமானதாக இல்லை என்பது ஆதிக்க சாதிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்தி. தலித்துகளை நிலத்தில் இருந்து விரட்டியடிக்க அப்படி பரப்புகிறார்கள்.”

“மிகச் சிலரே நிலம் வைத்திருப்பதால் விவசாயிகளின் லாபி பலவீனமாக இருக்கிறது. அதனால அரசுடன் பேரம் பேச முடியவில்லை.”

விவசாயத்தை பற்றி இந்த அறிஞர் அம்மா எவ்வளவு மோசடியாக புரிந்து வைத்திருக்கிறார் என்பதற்கு இந்த இரண்டே போதும்.

இவ்வாறு ஆளும் வர்க்கங்களுடன் சமரச அரசியல் நடத்திய இந்த தலித் மற்றும் பின் நவீனத்துவ கும்பல் எதிரும் புதிருமான முகாம்களின் தஞ்சமடைந்தது. ரவிக்குமார் எனும் தலித்தியப் போராளி காலச்சுவடு எனும் அக்மார்க் பார்ப்பனியப் பத்திரிகையில் சேர்ந்து பிறகு விடுதலை சிறுத்தை கட்சியில் சேர்ந்து எம்எல்ஏ, கருணாநிதியின் உள் வட்ட நண்பர் என்று ஒரு அதிகார மையமாக மாறிப்போனார்.

அ.மார்க்ஸும் பிறகு காந்தி, நபி, மனித உரிமை என்று பல பேசி தற்போது முன்பு தான் வெறுத்து எழுதிய கம்யூனிசத்திற்கு மாறாக போலிக் கம்யூனிஸ்டுகளின் கூட்டங்களில் பங்கேற்கிறார். இதனால் அவர் கம்யூனிச எதிர்ப்பை மாற்றிக் கொண்டார் என்பதல்ல. சமீபத்தில் நடந்த வால் ஸ்டீரீட் போராட்டத்தின் போது கூட இனி கட்சி, புரட்சியெல்லாம் சாத்தியமில்லை என்று உதிர்த்தவர் இந்த அறிஞர். இருப்பினும், கம்யூனிசத்தை திட்டினாலும், நமது கட்சியை ஆதரிக்கிறாரே என்று போலிக் கம்யூனிஸ்டுகள் இவரை மேடை ஏற்றி ஆதரிக்கின்றனர். இப்படி இருதரப்பிலும் பரஸ்பர சந்தர்ப்பவாதம். சிவகாமியோ தமிழக அரசியலில் சேர்ந்து ஆளாகி பெரும் தலைவராக ஆகலாம் என்று மாயாவதி கட்சி, பிறகு தனிக் கட்சி பிறகு அதுவும் போதாமல் கேப்டன், காங்கிரசு என்று சீரழிந்து நிற்கிறார்.

இதுதான் தலித்தியம் இருபது ஆண்டுகளில் நிகழ்த்தியிருக்கும் சாதனை!

ஆதிக்க சாதிவெறியை ஒழித்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை வேண்டும் என நேர்மையாக போராடும் தலித் இளைஞர்களே, நீங்கள் இருக்க வேண்டியது தலித் அமைப்புகளா இல்லை புரட்சிகர அமைப்புகளா என்பதை இப்போதாவது முடிவு செய்யுங்கள்!

–    ரவி