Wednesday, May 12, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா நிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !

நிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !

-

“இந்த நாளைப் பற்றி நான் நிறைய கனவு கண்டிருக்கிறேன். இன்று ஒரு வழியாக சுதந்திர மனிதனாகி விட்டேன். எங்க அம்மா, குடும்பத்தோட சேர்ந்து சாப்பிடப் போறேன். மிச்சமிருக்கும் வாழ்க்கையையாவது வாழப் போறேன்” என்கிறார் செய்யாத குற்றத்துக்காக 25 வருடம் சிறையில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்த ஜோனாதன் ஃபிளெமிங்.

விடுதலை செய்யப்பட்ட ஃபிளெமிங்
விடுதலை செய்யப்பட்ட ஃபிளெமிங்

25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நிரபராதி என்று தெரிய வந்ததாக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் நகர நீதித்துறை அறிவித்திருக்கிறது. இப்போது 52 வயதான ஃபிளெமிங் 1989-ம் ஆண்டு அவரது நண்பர் டேரில் “பிளாக்” ரஷ் என்பவரை சுட்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார். ஆனால், கொலை நடந்த நேரத்தில் தான் ஊரிலேயே இல்லை என்றும் ஃபுளோரிடாவில் உள்ள டிஸ்னி வேர்ல்ட் சுற்றுலா தலத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர் சொன்னதை போலீசும், நீதித் துறையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஃபிளெமிங் ஃபுளோரிடா சென்றதற்கான விமான பயணச் சீட்டுகள், அங்கு எடுத்த வீடியோக்கள், புகைப்பட அட்டைகள் இவற்றை காட்டியும் அவரது வாதத்தை நிராகரித்தது அரசு தரப்பு. ‘ஃபுளோரிடாவிலிருந்து இன்னொரு விமானத்தில் வந்து நண்பரை சுட்டு கொலை செய்து விட்டு போய் மீண்டும் அடுத்த நாள் திரும்பியிருக்கலாம்’ என்று வாதிட்டனர். ஃபிளெமிங் தனது நண்பர் ரஷ்ஷை சுட்டதை நேரில் பார்த்ததாக ஒரு பெண்ணை சாட்சி சொல்ல வைத்தனர்.

அதன் அடிப்படையில் 1990-ம் ஆண்டு ஃபிளெமிங் சிறைக்கு அனுப்பப்பட்டார். சில நாட்களுக்குள்ளாகவே, ‘போலீஸ் தன்னை வேறொரு வழக்கில் விடுவிப்பதற்காக அவர்கள் சார்பில் தான் பொய் சாட்சி சொன்னதாக’ கூறி அந்தப் பெண் தனது சாட்சியத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். இருப்பினும், அடுத்தடுத்த மேல் முறையீடுகளிலும் ஃபிளெமிங்கின் தண்டனை ரத்து செய்யப்படவில்லை.

மகனை கட்டித் தழுவும் தாய் பேட்ரிசியா
மகனை கட்டித் தழுவும் தாய் பேட்ரிசியா

அந்தப் பெண் தான் கைது செய்யப்பட்டதாக கூறியது தொடர்பான காவல் துறை பதிவுகள் இப்போது நடத்தப்பட்ட விசாரணையின் போது கண்டறியப்பட்டுள்ளன. மேலும் ஃபிளெமிங் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களில், கொலை நடந்த சில மணி நேரம் முன்பு அவர் ஃபுளோரிடா தங்கும் விடுதியிலிருந்து பேசிய தொலைபேசி உரையாடலுக்கான ரசீது இருந்தது தெரிய வந்துள்ளது. ஃபிளெமிங் தங்கியதாக சொன்ன ஹோட்டலில் விசாரணை நடத்திய காவல் துறையினரிடம் விடுதி ஊழியர்கள் பலர் அவரை பார்த்ததாக கூறியதும் அப்போதே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஃபிளெமிங் கொலையை செய்திருக்க முடியாது என்ற நிறுவும் இந்த ஆதாரங்களை வேண்டுமென்றே மறைத்து, பொய் சாட்சியின் அடிப்படையில் அவருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கின்றன போலீசும், நீதித்துறையும்.

இப்போது வெளியான இந்த தகவல்களின் அடிப்படையில் ஃபிளெமிங் குற்றமற்றவர் என்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

வழக்குரைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஃபிளெமிங்
வழக்குரைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஃபிளெமிங்

ஃபிளெமிங்கின் 72 வயதான தாயார் பேட்ரிசியா தன் மகனை கட்டித் தழுவி “இதற்காக நான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்” கண்ணீர் பொங்க கூறினார். 25 வருடங்களுக்கு முந்தைய வழக்கு விசாரணையின் போது ஃபிளெமிங்குடன் தானும் ஃபுளோரிடா சென்றிருந்ததாக பேட்ரிசியா சொன்ன சாட்சியத்தை நிராகரித்திருந்தது அமெரிக்க நீதித் துறை.

புரூக்ளின் நகர நீதித்துறை 1980-களிலும், 1990-களிலும் நடத்திய பல வழக்குகள் இப்போது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. சித்திரவதை செய்து வாங்கப்பட்ட வாக்குமூலங்கள், மிரட்டி பெறப்பட்ட சாட்சியங்கள், அரசுத் தரப்பின் முறைகேடுகள், நம்பத் தகாத காவல்துறை அதிகாரிகள் என்று அடுக்கடுக்காக குவிந்த ஆதாரங்களைத் தொடர்ந்து புரூக்ளின் நகரின் நீதித்துறை நூற்றுக் கணக்கான கொலை வழக்குகளை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட்டிருந்தது.

வன்முறை குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் அழுத்தத்தின் கீழ், “வழக்கமான சந்தேகத்திற்கிடமான நபர்களை வளைத்து, எதையாவது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து வழக்கை மூடி விட வேண்டும்” என்ற காவல் துறையின் போக்கு இந்த தவறான தண்டனைகளுக்கு காரணமாக இருந்திருக்கின்றது. இந்த வகையிலும் சரி, பொதுவில் வெள்ளையர்களின் குற்றங்களை விட கருப்பர்களின் குற்றங்கள், சமயத்தில் அவை குற்றங்களே இல்லையென்றாலும், ஃபிளெமிங் போன்ற கருப்பினத்தவர்கள் அமெரிக்க போலீஸ்-நீதித் துறையினரால் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர்.

ஃபிளெமிங் விடுவிக்கப்பட்ட போது
25 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரம்

இந்தியாவிலும் பாகிஸ்தானிய பயங்கரவாதம், ‘இசுலாமிய’ பயங்கரவாதம் என்று வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் இந்துத்துவ சக்திகளின் தாக்கத்தில் நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

2002-ல் குஜராத் காந்திநகரில் அக்சர்தாம் கோவிலில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக 6 அப்பாவி முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதை மூலம் வாக்குமூலம் பெறப்பட்டு தூக்கு, சிறைத் தண்டனை வழங்கப்பட்டனர். அவர்களை சென்ற மாதம் உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

2001 நாடாளுமன்ற தாக்குதல் வழக்கு தொடர்பாக காஷ்மீரில் இருந்து போலீசால் பிடித்து வரப்பட்ட அப்சல் குரு, ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும், ‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்தி செய்ய’ தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு சென்ற ஆண்டு இந்திய அரசால் கொல்லப்பட்டார். இஷ்ரத் ஜகான் என்ற கல்லூரி பெண் மோடியின் குஜராத் அரசின் ரத்த தாகத்துக்கு பலியாக போலீஸ் உயர்அதிகாரிகளால் போலி மோதலில் படுகொலை செய்யப்பட்டார்.

2002-ம் ஆண்டு மோடியின் சொந்தக் கட்சிக்காரர் ஹரேன் பாண்டியா மர்மமான முறையில் கொல்லப்பட்ட பிறகு கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் 12 பேர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் நூற்றுக் கணக்கான முஸ்லீம் கைதிகள் செய்த/செய்யாத குற்றங்களுக்காக சிறையில் வாடுகின்றனர். முசுலீம்கள் மட்டுமல்ல தலித்துக்களும் பிற ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழைகளும் பெரும் அளவில் செய்யாத குற்றத்திற்காக சிறை வைக்கப்படுவதும், காவல் துறையின் ‘சீரிய’ பணிகளுக்காக கணக்கு காண்பிக்கப்படுவதும் இந்தியாவில் சகஜம். சந்தேகக் கேஸ்களுக்காக கைது செய்யப்பட்டு கொட்டடியில் கொலை செய்யப்பட்டோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது.

அமெரிக்காவில் சில வழக்குகளிலாவது, உள்ளூர் அரசியல் போட்டியின் காரணமாக, நிரபராதிகள் பல ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகு காலம் தாழ்ந்து ஒரிரு உண்மைகள் வெளியாகிறது. இந்தியாவில் ஒடுக்கப்படும் பிரிவினரான தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், ஏழைகள் இவர்களுக்கு நீதித்துறையில் நியாயம் கிடைப்பது குதிரைக் கொம்பாகவே இருந்து வருகிறது.

மேலும் படிக்க

 1. //25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நிரபராதி என்று தெரிய வந்ததாக அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் நகர நீதித்துறை அறிவித்திருக்கிறது.//
  குஜாராத் தலைநகர் காந்திநகரில் அக்ஸர்தம் கோயில் மீது 24-09-2002 அன்றுநடந்த தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உதவியவர்கள் என்று கூறி அப்பாவி முஸ்லிம்கள் 7 பேர் மீது வழக்குத் தொடுத்தது அந்த பொய் வழக்கை விசாரித்த பொ(ட்)டாநீதி மன்றமும் குஜராத் உச்சநீதி மன்றமும் வழக்கை உறுதி செய்து மூவருக்கு மரண தன்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தன்டனையும் வழங்கியது.

  அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் தற்போதுநீதி கிடைத்துள்ளது. அதாவது இவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும் இது சோடிக்கப்பட்டது என்றும்
  கூறி அவர்களை விடுதலை செய்துள்ளது. முதலில் தன்டனை வழங்கிய கொலைகாரநீதிபதிகள் எதனை முக்கிய ஆதாரமாக கொன்டார்களோ அதை முழுவதுமாகநிராகரித்ததோடு அதனைப் பற்றி கேள்வியும் எழுப்பி உள்ளனர்.
  அவர்கள் எழுப்பியுள்ள கேள்வி என்ன தெரியுமா? தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிக துப்பாக்கி தோட்டாக்களால் துளைக்கப்பட்டு (அதவது ஒருவன் உடலில் 46 குண்டுகள் மற்றொருவன் உடலில் 60 குண்டுகள்) கொல்லப்பட்டபோது அவர்கள் பாக்கெட்டில் இருந்து கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட கடிதம் மட்டும் எப்படி கறைபடியாமல் புலனாய்வு அதிகாரிகள் கையில் கிடைத்தது?

  எங்களின் கேள்வி
  குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டது சரி. இவர்கள் மீது பொய் வழக்கு போட்ட பொருக்கிகளுக்கு என்ன தன்டனை ?
  முஸ்லிம்களை கைது செய்யும் பொழுதெல்லாம் பக்கம் பக்கமாய் பொய்கதை எழுதும் மன்சள் பத்திரிக்கைகள் மேற்சொன்ன தீர்ப்பை கண்டுகொள்ளவில்லையே…
  சிறுபான்மையினரின் காவலன் தான்தான் என்று மயிர் கூச்செரிய பேசும் மன்சள்துண்டுநாயகன் வாய் திறக்கவில்லையே..
  மற்ற ப.ஜ.க வின் சொம்புகளான வை.கோ., மரவெட்டி ப.ம.க வாயில் என்ன உள்ளது?

 2. ரொம்ப வருத்தமான செய்திதான்.. ஆனால் அவரு அதுக்காக 162 மில்லியன் கேட்டுகிறார்.. அதை ஏன் இருட்டடிப்பு செய்றிங்க… அவரு முதலாளித்வ சனநாயகத்தில மாட்னாரு அதனால் 25 கழிச்சு வெளியே வந்தாரு.. இதுவே உங்க ஆ…ட்… சரி வேணாம்…

 3. //ரொம்ப வருத்தமான செய்திதான்.. ஆனால் அவரு அதுக்காக 162 மில்லியன் கேட்டுகிறார்.. அதை ஏன் இருட்டடிப்பு செய்றிங்க… அவரு முதலாளித்வ சனநாயகத்தில மாட்னாரு அதனால் 25 கழிச்சு வெளியே வந்தாரு.. இதுவே உங்க ஆ…ட்… சரி வேணாம்…//
  25 ஆண்டுகளுக்கு முன் 162 மில்லியன் டாலர் என்பது வெறும் தூசிதான். அவர்களால் இழந்த இளமையை திருப்பி தர இயலுமா?
  அமெரிக்கவில்நஸ்ட ஈட்டு தொகையாவது கேட்க முடிகிறது. ஆனால் இந்த பாசிச இந்தியாவில் விடுதலை செய்தாலே போதும் என்ற மனநிலைக்கு குற்றம் சுமத்தபட்டவரை கொண்டு சென்று விடுகின்றனர். இதுதான் இந்(தீய) ஜனநயகம்.

 4. என்னப்பா!

  குற்றமற்ற (!) நிரபராதிகள் என்று சூப்பர் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் வைகோ, சீமான், நெடுமாறன் போன்ற பலராலும் தீர்ப்பு வழங்கப் பட்ட தமிழ்ப் போராளிகளுக்காகவும் சந்தனப் போராளிகளுக்காகவும் ஸ்பெஷலாக எழுதப் பட்ட கட்டுரைக்கு யாருமே சரியாகப் பின்னூட்டம் இட மாட்டேங்கிறீங்களே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க