Sunday, June 26, 2022
முகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை

வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை

-

The Last Emperor‘தி லாஸ்ட் எம்ப்பரர்’ எனும் ஹாலிவுட் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது. சீனாவின் கடைசி மன்னனான பூ ஈ கம்யூனிச புரட்சியில் எப்படி தனது அதிகாரம், பெருமிதம், கௌரவம், வசதிகள் அனைத்தையும் இழந்து பரிதாபத்திற்குரிய மனிதனாக மாறினான் என்பதை மிகுந்த அனுதாபத்துடன் அந்தப் படம் சித்தரித்திருந்தது. ஆனால் உண்மை அதுவல்ல.

பூ ஈ தனது சுய சரிதையை “மன்னனிலிருந்து குடிமகனை நோக்கி” என்ற பெயரில் எழுதியிருக்கிறார். அதில் கம்யூனிச அரசு தன்னை எப்படி மறுவார்ப்பு செய்தது, சொந்த வேலைகளுக்கு கூட மற்றவர்களை எதிர்பார்த்திருந்த தன்னை எப்படி போராடி மாற்றினார்கள், மக்களை நேசிப்பதற்காக தான் உதறிய மேட்டிமைப் பண்புகள், இறுதியில் தான் ஒரு குடிமகனாக விடுதலை செய்யப்பட்டது அனைத்தையும் பதிவு செய்திருக்கிறார். அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு அந்த புனரமைப்புப் போராட்டத்தைச் சுருக்கமாகத் தருகிறோம்.

இரண்டாம் உலகப்போரின் போது சீனாவின் வடகிழக்கில் ஐப்பானின் பொம்மை அரசராக இருந்தவர், போரில் ஐப்பான் தோல்வியடைந்த பிறகு ரசியாவிற்கு ஓடுகிறார். சோவியத் யூனியனிலிருந்து 1950-இல் கம்யூனிச சீனாவிற்கு கொண்டு வரப்படும் பூ ஈ 19 ஆண்டு மறுவார்ப்பு பயிற்சிக்குப் பிறகு சீன மக்கள் குடியரசால் விடுதலை செய்யப்படுகிறார்.
_______________________

‘மன்சுகுவோ’ போர்க் குற்றவாளிகளான நாங்கள் சோவியத் ருசியாவில் ஓர் ஓட்டலில் தங்கினோம். எங்களுக்கு நல்ல உணவு, தேநீர் வழங்கப்பட்டது. எங்களைக் கவனித்துக் கொள்ள சேவகர்களும், செவிலிகளும், மருத்துவர்களும் இருந்தனர். பொழுதுபோக்குக்காக புத்தகங்கள், வானொலி, செய்தித்தாள் அனைத்தும் இருந்தன. எனக்கு முதலிலிருந்தே இந்த வாழ்க்கை பிடித்திருந்தது. நான் இங்கேயே தங்கிவிட அனுமதிகோரி சோவியத் அதிகாரிகளுக்கு மூன்று முறை கடிதம் அனுப்பியும் பதிலில்லை. என்னுடன் வந்த மற்றவர்கள் திரும்பிச் செல்லவே விரும்பினர்.

நாங்கள் சிறு சிறு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டோம். அங்கேயே ஒரு காலி மனையில் மிளகு, தக்காளி, பீன்ஸ் அனைத்தும் வளர்த்தோம். அது ஒரு புது அனுபவமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் எனக்கு மிளகு மற்றும் தக்காளி உண்பது மிகவும் பிடிக்கும்.

அங்கிருந்த அதிகாரிகள் நாங்கள் படிப்பதற்கு ‘லெனினிசத்தின் பிரச்சினைகள்’, ‘சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு’ போன்ற புத்தகங்கள் கொடுத்தனர். அவை எனக்குப் பயன்றறதாகத் தோன்றின. அவை எனக்குப் புரியவுமில்லை, அவற்றைப் புரிந்து கொள்ள நான் முயலவுமில்லை. மாறாக, என்னிடம் இருந்த நகைகள் எத்தனை நாட்களுக்குப் போதுமானது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இப்படியான சிந்தனைகளால் என்னிடம் அடிப்படையில் எந்த மாற்றமும் தோன்றவில்லை. எனவே என் குற்றத்தை நான் ஒப்புக் கொள்ளவுமில்லை.

மன்னன் பு ஈ
திருமணக் கோலத்தில் மன்னன் பூ ஈ

ஜூலை 31, 1950 அன்று சீனா திரும்பினேன். திரும்பும் வழிப்பயணத்தில் பீர், இனிப்பு எல்லாம் கொடுத்தார்கள். ஆனால் சீன மண்ணை மிதித்ததும் நான் கொல்லப்படுவேன் என்ற பயம் என்னைச் சூழ்ந்திருந்தது. ‘கம்யூனிஸ்ட்டுகள்’ நாகரிகமானவர்கள் என்று நான் நம்பவில்லை. என்னைப் பொறுத்த வரை அவர்கள் கொடிய மிருகங்கள். அன்றிரவு உறக்கம் வராது உலவிக் கொண்டிருந்தேன். அப்போது என் உறவினர் ஒருவர் ‘சர்வாதிகாரம்’ ‘ஜனநாயகம்’ என்பது பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். நான் கோபம் கொண்டு ‘இன்னும் ஏன் சர்வாதிகாரம் பற்றிப் பேசி கொண்டிருக்கிறாய்’ என்று கத்தி, எவரேனும் ஜனநாயகம் தவறு என்று சொன்னால் அவர்க்ளைக் கொன்று விடுவதாகக் கத்தினேன். சிறிது நேரம் கழித்து என்னை உணரந்து ‘அப்படி ஏன் வெறித்துப் பாக்கிறாய்? என்னைச் சுட்டுத்தான் கொல்வார்கள்’ என்றேன்.

ஃபுன்ஜுனுக்கு வந்திறங்கினோம். சில சிப்பாய்கள் எங்களை ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட இடத்துக்குள் அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் அது சீனச் சிறை என்பதை நான் உணர்ந்தேன். நான் எனது உறவினர்களுடன் தங்க அனுமதிக்கப்பட்டேன். எங்களுக்குக் கம்பளம், மெத்தை மற்றும் துவைக்க உதவும் சாதனங்கள் கொடுக்கப்பட்டன. நாங்கள் ஆபத்தில் இல்லை என்ற உணர்வும் நம்பிக்கையும் வந்தது.

எங்களுக்கு நல்ல உணவு கொடுக்கப்பட்டது. நாங்கள் குற்றவாளிகள் போல நடத்தப்படவில்லை. எங்களுக்கு நல்ல உடையும், சிகரெட்டும் கூட வழங்கப்பட்டன. செய்தித்தாள் படித்தோம், வானோலி கேட்டோம் சீட்டு விளையாடினோம். மேலும் பல புத்தகங்கள் கொடுத்தனர்; படித்தோம். அப்புத்தகங்களில் இருந்த பல சொற்கள் எனக்குப் புதிதாய் இருந்தன. அதைவிடவும் புதிதாய் இருந்தது கைதிகளைப் புத்தகம் படிக்கச் சொன்னதுதான்.

என் குடும்பத்தினரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன். எனது மறுவார்ப்பில் மிக முக்கிய அம்சம் என்று அதைப் புரிந்து கொள்ள எனக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. ஆனாலும் முழுவதும் புதிய மனிதர்களாய் இருந்த வேறு ‘செல்’லில் தங்க முடியாது. கவர்னர் அனுமதியுடன் மீண்டும் பழைய இடத்துக்குப் போனேன். என்னை நானே கவனித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ளுமாறு அவர் கூறினார். ஆனால் அப்படிச் செய்ய எனக்குத் துளியும் விருப்பமில்லை. எனது உறவினர்களை தினமும் உடற்பயிற்சியின் போது சந்திக்க முடிந்தது. எனது உறவினர் எனது துணி மற்றும் காலுறையைத் துவைத்துக் கொடுத்தார்.

இவ்வாறு துவைக்கும் பிரச்சினை முடிய, வேறொன்று தொடங்கியது. கடந்த 40 ஆண்டுகளில் எனது கம்பளமும், படுக்கையும் நான் சுற்றிவைத்ததில்லை. என் கால்கள் கூட நானாகக் கழுவிக் கொண்டதில்லை. ஒரு ஊசி, நூல் கத்தி போன்று எதுவுமே என் கையால் தொட்டதில்லை. என்னை நானே கவனித்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டேன்.

ஒருநாள் உடற்பயிற்சியின் போது கவர்னர் என்னை அழைத்து “அனைவரது உடை போல்தான் உனக்கும் உடை கொடுக்கப்பட்டது! ஏன் உன்னுடையது அவர்களுடையதைப் போல் இல்லை?” என்றார். சற்றே குனிந்து, என் உடையைப் பார்த்தேன். மிகுந்த அழுக்குடன், ஒரு பை பாதி கிழிந்து தொங்கியது, ஒரு பொத்தான் இல்லாதிருந்தது, முட்டியில் மைக்கறை, காற்சட்டை ஒவ்வொன்றும் ஒரு நீளம். மேலும் என் காலணியில் (ஷு) பாதி லேஸ்தான் இருந்தது.

பிறரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும்படி கவர்னர் கூறினார். பிறரிடம் இருக்கும் நல்லதைக் கற்றுக் கொள்ளாமல் நான் முன்னேற முடியாதெனக் கூறினார். அவர் மிகவும் மென்மையாகப் பேசியும் எனக்கு ஆத்திரம் பொங்கியது. என் வாழ்வில் முதன்முறையாக எனது இயலாமை பலர் முன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. என்னுடன் இருப்போர் இரவு படுக்கும் முன் உடைமாற்றி அதைத் தலையணையின் கீழ் வைப்பதைப் பார்த்தேன்; கற்றுக் கொண்டேன். கவர்னர் சொன்னதன் அர்த்தம் அப்போது விளங்கியது.

அக்டோபரில் ஹார்பினுக்குக் கொண்டு செல்லப்பட்டோம். அங்கிருந்த முதன்மைக் காவல் அதிகாரி, இந்த அரசு எங்களைக் கொல்லாது என்றும், அது நாங்கள் எங்களை ஆராயவும், மறுவார்ப்பு செய்யவுமே சொல்கிறதென்றும் கூறினார். மேலும், மக்கள் அரசாங்கத்தில் பல குற்றவாளிகள் தங்களைப் பாதி மனிதர்களாக்கிக் கொள்ள முடியுமென்றார். கம்யூனிசத்தின் குறிக்கோள், உலகை மாற்றி அமைப்பதும் மனிதகுலத்தை மறுவார்ப்பு செய்வதுமே என்றார்.

பூ ஈ
மறுவார்ப்பு முகாமில் பூ ஈ

இப்போது கவர்னர் பேசினார், அவர் பேச்சில் சில வார்த்தைகள் மட்டும் ஆழமாக நினைவில் நின்றன. “நீங்கள் மரணம் பற்றியே சிந்திக்கிறீர்கள். இந்தத் தயாரிப்புகள் எல்லாமே மரணத்தின் ஒரு பகுதி என்று கருதுகிறீர்கள். ஏன் உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக் கொள்ளக் கூடாது? மக்கள் அரசு உங்களைக் கொல்வதனால் ஏன் படிக்கச் செய்கிறது?” கம்யூனிஸ்டுகள் அர்த்தமற்றவற்றை எப்போதும் பேசுவதில்லை என்று புரிந்தது.

நான் என் தண்டனைக்கு முன் எனது சுயசரிதை எழுத முடிவுசெய்தேன். எனது குடும்பம், குழந்தைப் பருவம், ஜப்பானியர்களுடன் அரசியல் தொடர்வு என்று பல எழுதிவிட்டு, இறுதியில் இப்படி முடித்தேன்:

“மக்கள் துன்புறுவதைப் பார்த்து, ஏதும் செய்ய முடியாது போனதால் நான் மிகவும் துயரப்பட்டேன். சீனப்படைகள் போராடி வடகிழக்கிற்குள் முன்னேறி, பல காலங்களாக ஏங்கிய சர்வதேச முன்னேற்றத்தையும், சுதந்திரத்தையும் அடைய வேண்டுமென விரும்பினேன். 1945-ல் அது நிஜமானது.”

படிப்பில் எனது முன்னேற்றம் திருப்திகரமானதாக இல்லை. பிற வேலைகளில் என்னை நிறுவுவதே ஒரே வழியாக இருந்தது. உணவு வாங்குவதும், தரை துடைப்பதுமே முக்கிய வேலைகள். ஒருநாள் என் வாழ்வில் முதன்முறையாக நான் உணவு பரிமாறினேன். அச்சமயத்தில் ஒருவரது தலையில் காய்கறி சூப்பைக் கொட்டிவிட்டேன். அதன் பின்னர் என் முறை வரும்போதெல்லாம், பிறரும் உதவி செய்தனர். இன்னும் என் துணிகளைத் துவைக்க நான் பழகவில்லை. பின்னொரு நாள் நான் பதுக்கி வைத்திருந்த நகையெல்லாம் கவர்னர் மேசை மேல் வைத்து ஒப்படைத்தேன்.

“இதையெல்லாம் திருப்பித்தர மிகவும் மனப் போராட்டம் இருந்ததா?” என்று கேட்டார்.

“திருப்பிக் கொடுத்ததனால் மன்னிக்கப்படுவேன் என்று நினைப்பதாகக்” கூறினேன்.

“நீ அரசனாக இருந்த காரணத்தினால் அப்படி நினைத்தாய்” என்றார்.

நான் “ஆம்” என்றேன்.

பு ஈ
பேரரசன் பூ ஈ  – “எங்கிருந்தாலும் கழிவுகள் கழிவுகள்தான்”

அப்படி நான் நினைத்தது ஆச்சரியமாயில்லை என்றும் தவறை உணர்வோரையும், மறுவார்ப்புக்கு இணங்குவோரையும், கம்யூனிஸ்ட் கட்சி என்றுமே மன்னிக்கும் என்றார். ஏனெனில் மறுவார்ப்பை ஏற்று மாறிய மனிதர்கள் மிகவும் விலை மதிப்பற்றவர்கள். இந்நிகழ்ச்சி முடிந்து நான் என் அறைக்குத் திரும்பியதும் உடன் இருந்தோர் அனைவரும் என்னை மிகவும் பாராட்டினர். கம்யூனிஸ்டுகள் எப்போதும் உண்மையைப் பெரிதும் மதித்தனர்.

1952-ல் பெரிய கட்டிடத்திற்கு மாறினோம். நான் மிகவும் தீவிரமாகப் படிக்கத் துவங்கினேன். ஒரு நாள் நாலுமணி வேலையும் செய்தேன். ஒரு பென்சில் தொழிற்சாலைக்குப் பென்சில் வைக்கும் பெட்டிகள் செய்தோம். இதுவரை என் வாழ்வில் நான் ஒரு பென்சில் சீவியது கூடக் கிடையாது. பிறர் பல பெட்டிகள் செய்து முடித்த நேரத்தில் நான் ஒன்று கூட முடித்திருக்கவில்லை. அப்படி முடித்ததும் அது ஒரு பெட்டி போல் தோன்றவில்லை.

ஒரு அதிகாரி அந்தப் பெட்டியைக் கையில் எடுத்து “இதை ஏன் திறக்க முடியவில்லை, என்ன செய்திருக்கிறாய்”? என்று கேட்டதும் பயமும், ஏமாற்றமும் கலந்து தோன்றின. அந்த அதிகாரி நான் செய்ததைத் தூக்கியெறிந்தார். நான் சென்று அதைத் திரும்ப எடுத்துவந்தேன்.

“எங்கிருந்தாலும் கழிவுகள் கழிவுகள்தான்” என்றார். என்னை இவ்வார்த்தைகள் மிகவும் ஆத்திரமூட்டின.

“நீ என்னிடம் வீரத்தைக் காட்டுகிறாய், எளியோரை மிரட்டுகிறாய், வலியோரைக் கண்டு அஞ்சுகிறாய்” என்றேன்.

அவர் என்னை நோக்கி “நீ உன்னை இன்னும் அரசனாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாய்” என்றார்.

மறுநாள் என்னருகில் உட்கார்ந்து நான் செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவருக்கு முதுகு காட்டித் திரும்பிக் கொண்டேன். அன்று பெட்டி செய்யும் கேலையில் சிறு முன்னேற்றம் தெரிந்தது; கழிவுகள் இல்லை. அன்று மாலை சிறை அதிகாரிகள் எங்களுக்கு இனிப்புகள் கொண்டு வந்தனர். அவை எங்கள் உழைப்பில் வாங்கியவை. வாழ்வில் முதன் முறையாக என் உழைப்பின் பலனை அனுபவித்தேன். என் பங்களிப்பு மிக அதிகமில்லை எனினும் அந்தப் பலகாரங்கள் மிகவும் இனித்தன. இதற்கு முன் எப்போதையும் விட.

1955: புது வருடம் துவங்கியது. அதைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்று கவர்னர் கேட்டார். நான் தண்டனைக்குக் காத்திருப்பதாக மட்டுமே நினைப்பதாகக் கூறியது கேட்டு எனது அவநம்பிக்கையைக் கடிந்து கொண்டார். அவரது வார்த்தைகள் என்னை அமைதிப்படுத்தின, ஆனாலும் என்னில் இருந்த அவநம்பிக்கை இருட்டை அழிக்கவில்லை. அது மேலும் என்னை சுய-பச்சாதாபத்தில் வீழச்செய்தது.

பேரரசர் பு ஈஒருநாள், ஓய்வு நேரத்தில் ஒரு புகைப்படக்காரர் எங்களைப் படம் பிடிக்க வந்தார். சிறைத் தோட்டத்தைப் படம் எடுக்க வந்தார். அதுவரை என்னருகில் நின்று அங்கு நடந்த விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்த சிறை அதிகாரி, “அவருடன் சேர்ந்து என்னைப் படமெடுக்க வேண்டாம்” என்று ஒதுங்கிச் சென்றார். உடனே என்னுடன் நின்றிருந்த எல்லோரும் விலகிச் சென்றனர்.

எங்களைப் பார்வையிட வந்த விடுதலை இராணுவ அதிகாரிகள் ‘என் படிப்பைப்’ பற்றி விசாரித்தனர். அவர்கள் என்னிடம் மிகவும் நட்புடன் நடந்து கொண்டனர். என்னைச் சிறிதும் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று நான் நினைத்த கம்யூனிஸ்டுகள் என்னை மனிதனாக நடத்தினர். ஆனால் என்னுடன் சிறையில் இருந்தோர் என்னருகில் நிற்கவும் விரும்பவில்லை. என்னை அவர்கள் மனிதனினும் குறைவாக மதித்தனர். அன்று ஓய்வு முடிந்து எங்களது இருப்பைப் பதிவு செய்யும் நேரத்தில் நான் தாமதமாககச் சென்றேன். லிட்டில் ஜு என்னப் பார்த்து “நீ எப்போதும் தாமதமாக வருகிறாய்” என்று கத்தினார். “நீ எப்போதும் உனக்காகப் பிறரைக் காக்க வைக்கிறாய். உனக்கு பிறரைப் பற்றிய குறைந்தபட்ச அக்கறை கூடக் கிடையாது. உனது சட்டைப் பொத்தான் கூட உனக்குச் சரியாய்ப் போடத் தெரியவில்லை” என்று கூறினார்.

பின்னொரு நாள், நாங்கள் விளையாட்டு மைதானத்தைக் கூட்டிக் கொண்டிருந்தோம். மே தினத்தை முன்னிட்டு நிறைய செடிகள் பயிரிட முடிவு செய்யப்பட்டது. முதலில் நான் ஒரு பெரிய குழியில் மண்ணிட்டு மூடும் வேலை செய்தேன். என் கண்பார்வை மங்கிவிட்டதால் பாதுகாப்பு கருதி, செடிகள் நடும் வேலை செய்ய மாற்றப்பட்டேன். சிறிது நேரம் அந்த வேலை செய்துகொண்டிருந்தேன்.

அப்போது செங் என்னிடம் வந்து மிகுந்த ஆத்திரத்துடன் என் கையிலிருந்த செடியைப் பிடுங்கி, ‘என்ன செய்திருக்கிறாய்?’ என்றார். என்னைக் களை பறிக்கச் சொன்னதாகக் கூறினேன். “என் கையிலிருப்பது களையா? அவை அனைத்தும் மலர்கள் என்பதைக் கூடப் பார்க்க உன்னால் முடியவில்லையா?” என்றார். அவர்முன் நான் தலைகுனிந்து நின்றேன். அங்கிருந்த அனைத்து மலர்களும், களைகளும் ஒரு நொடியில் காணாமல் போய்விடக் கூடாதா என்று மனம் விரும்பியது. “நீ உண்மையிலேயே உபயோக மற்றவன்” என்று பறிக்கக் கற்றுத் தருமாறு செங்கிடம் கூறினார். உடனே செங் “மலருக்கும் களைக்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்கள் கூட இன்னும் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை” என்று கூறினார்.

ஒருநாள் மீண்டும் என் மூக்குக்கண்ணாடி உடைந்தது. மிகுந்த தயக்கத்துடன், தணிந்த குரலில், பிக்லீயிடம் சரி செய்து தருமாறு கேட்டேன். உனக்கு இன்னும் நான் சேவை செய்து கொண்டிருக்க வேண்டுமா என்று கத்தினான். இதுநாள் வரை உனக்கு எல்லோரும் சேவை செய்தது போதாதா என்று கேட்டவுடன் அவமானத்தால் என் தலையைச் சுவற்றில் முட்டிக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

என் கண்ணாடியைச் சரி செய்யவும், மெத்தை, கம்பளம் தைக்கவும் பிறர் எனக்கு உதவினர். இந்த உதவிகள் இல்லையென்றால் நான் நாள் முழுவதும் இதிலேயே கழித்திருப்பேன். இந்த உதவிகளெல்லாம் என்னில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் பொருட்டே செய்யப்பட்டாலும் இந்த உதவிகளுக்கும் எனது மறுவாய்ப்புக்கும் எந்த ஒரு தொடர்பையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்ல. இவ்வுதவிகள் என் திறமையின்மையையே பறைசாற்றின. என்னப் பற்றிய விமரிசனங்கள் எனது காயங்களைத் திறந்து வலி உண்டாக்குவதாகவே இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியும், மக்கள் அரசும் என்னை உயிர் வாழ அனுமதித்தாலும் இந்தச் சமூகம் என்னைப் பொறுத்துக் கொள்ளாது. நான், அடித்துத் துன்புறுத்தப்படாவிட்டாலும் மக்கள் என் மீது காறி உமிழ்வர்.

பல நாள் மனப் போராட்டம், துன்பம் அனுபவித்த பிறகு – மாற்றம் என்பது என்னைப் பொறுத்தது, மற்றவர்கள் என்னை நடத்தும் முறையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

ஒரு ஞாயிறன்று நான் துவைத்து முடித்து ஓய்வுக்குத் தயாராகிக் கொண்டுருந்தேன். படிக்கப் புத்தகம் எடுத்துக் கொண்டு இருந்தபோது, இருவர் பேசுவது கேட்டது.

“நீ டென்னிஸ் விளையாடுவாயா?”

“எனக்குத் தெரியாது, ஆனால் பூ ஈ விளையாடுவார். நீ அவரைக் கேள்.”

“அவருக்கு அவகாசம் இருக்காது. அவர் எப்போது துணி துவைத்து முடிப்பார் என்று யாருக்கும் தெரியாது.”

“இல்லை. இப்போது துரிதமாவே செய்கிறார்.”

“நான் நம்பவில்லை.”

_இருவரும் மாறிமாறிப் பேசிக் கொண்டிருந்தனர். இது மிகவும் கோபமூட்டியது. என்னால் விளையாட முடியுமெனக் காண்பித்துக் கொள்வதைவிட, நான் துவைத்து முடித்துவிட்டேன் என்று அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விளையாடத் துவங்கினேன். விளையாடி முடித்ததும் கவர்னர் வந்து நான் இன்று நல்ல முன்னேற்றம் அடைந்ததாகவும், துவைக்கப் பழகியதால், ஓய்வு நேரம் பிறரைப் போல் எனக்கும் கிடைக்கு மென்றும் கூறினார்.

அவர் மேலும், “இரண்டாவது உலகப்போர் மன்னனான உன்னைக் கைதியாக மாற்றியது. தற்போது உன் மனதில் ஒரு பெரிய யுத்தம், ஒரு மன்னன் தொழிலாளியாகும் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. மன்னன் என்பவன் யாரென்று நீ புரிந்து கொண்டுவிட்டாய். ஆனாலும் யுத்தம் இன்னும் முடியவில்லை. நீ இன்னும் உன்னை மற்றவர்களுக்குச் சமமாக நினைக்கவில்லை. நீ இன்னும் நன்றாக உன்னைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

துப்புரவுப் பணிகள் முடித்துத் திரும்பிய நாளன்று, அன்றாடப் பணிகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளும் நபர் “நீ கைகழுவிட்டுக் குழாயை மூடவில்லை. நீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இது திரும்ப நடக்காமல் பார்த்துக் கொள்” என்றார். உடனே பிக்லீ “நீ இன்னும் அரசனாகவே நடந்து கொள்கிறாய், கதவு திறக்கும் போது கூட கைப்பிடியை உன் கையால் தொடுவதில்லை, ஒரு தாள் கொண்டு பிடித்துத் திறக்கிறாய். அது அழுக்கு என்று நினைக்கிறாய். இன்னும், ஏன் உன் மன அழுக்கு மாறவில்லை. நீ இன்னும் உன்னை எங்கள் எல்லோரையும் விடப் பெரியவனாகக் கருதுகிறாய்” என்று குற்றம் சாட்டினான். அப்படி எந்த உணர்வும் என்னில் இல்லை, ஆனாலும் என்னைப் பற்றிய சந்தேகங்கள் எனக்கே இருந்ததால் என்னால் மறுத்துப் பேச முடியவில்லை.

நான் என்னை மிகவும் உயர்ந்தவனாக மதிப்பிட்டிருந்தேன். ஒரு நாள் எங்களது மாற்றங்கள், சிந்தனைகள் பற்றிய விவாதம் வந்தபோது இதை உணர்ந்தேன். என் முறை வந்தபோது என்னில் நிகழ்ந்த மாற்றங்கள் பற்றிக் கூறினேன். அப்போது ஒருவர் கேட்டார் “உன்னைப் போன்ற பின்னணியிலிருந்து வரும் ஒருவருக்கு ஜப்பானிய ஏகாதிபத்தியத்துடன் நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும். இன்றளவும் உனது தனிப்பட்ட சிந்தனையிலும், உணர்விலும் அந்த எண்ணங்கள் உனக்கு இருக்கும். ஏன் அதை வெளிப்படுத்தவில்லை” என்று கேட்டார்.

“ஜப்பானியர்களைப் பொறுத்த அளவில் எனக்கு வெறுப்பு மட்டுமே உள்ளது. நீங்கள் சொன்னதை நான் மறுக்கிறேன்” என்றேன்.

கோபம் கொண்ட அவர் “அதை ஏன் கொஞ்சம் பண்பாகச் சொல்லக் கூடாது; நீ இன்னும் மிகப் பெரியவன் என்ற எண்ணம் உனக்கு இருக்கிறது” என்று கூற அந்த விவாதம் வளர்ந்து கொண்டே போனது. “நான் ஜப்பானுடன் தொடர்பு வைத்திருந்த காலத்தில், நான் டோக்கியோவுக்குப் போகுமுன்பு அவர்கள் எனக்கு மூன்று மில்லியன் யென் (Yen) கொடுத்ததாகவும், அதை நான் இன்றுவரை மறைத்து விட்டதாகவும்” சாடினார்.

இப்படியாகப் பல வேளைகளில் என்னையும் என் மாற்றங்களையும் என்னுடன் இருந்தோர் ஏற்க மறுத்தனர். அப்படிப்பட்ட ஒவ்வொரு முறையும் நான் எனது தவறான பழைய வாழ்வை எண்ணி மிகவும் வருந்தினேன். வெளி நாட்டிலிருந்து நாய்கள் வாங்கி, அவற்றுக்குத் தீனி வாங்கி, பராமரிப்புக்கு மருத்துவர்கள் அமர்த்தி, அவர்களுக்கு அளவிலா பொன்னும், பொருளும் தந்திருக்கிறேன். நோய் கொண்ட ஒரு மனிதனுக்காகக்கூட நான் அவ்வளவு கவலை கொண்டதில்லை, எனவே இன்று நான் இவ்வளவு மாற்றம் அடைந்தும் என்னைச் சுற்றியிருப்போர் என்னை ஏற்கவில்லை.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பது, செப் 17-ஆம் நாள் பிறந்து 54 ஆண்டுகளுக்குப் பிறகு என் தாய்நாடு என்னை மனிதனாக்கிய நாள். உழைக்கும் மக்களுக்காக அவர்களே போராடி, அவர்கள்தம் அரசை நிர்மாணித்து, அந்த அரசு என்னைக் குடிமகனாக ஏற்ற நாள். கம்யூனிசம் வெற்றி கண்ட நாள். எனது சிறப்பு மன்னிப்பு அறிக்கை வாசித்து முடிக்கப்படுமுன் என் கண்கள் குளமாயின.

இந்தச் சிலிர்ப்பான நிமிடங்களை அனுபவிக்க நான் கடந்து வந்த பாதையினைச் சற்றே நினைத்துப் பார்க்கிறேன். அந்த வலியெல்லாம் இந்த நொடியில் மறந்து போகிறது. இந்தச் சிறப்பு மன்னிப்பு, பலருக்குத் தங்கள் குடும்பத்தைச் சேரும் ஒரு வாய்ப்பாக அமையவிருந்தது. என் குடும்பத்தினர் யாரும் உயிருடன் இருப்பினும் இம்மக்களைப் போல என்னைப் புரிந்து கொண்டிருக்க முடியாது. இவர்களுக்கு முன்னால் எனக்குப் பரிச்சயமான எவரும் ‘உண்மையான’ மனிதனாவது எப்படி என்று கற்றுக் கொடுத்திருக்க முடியாது. இங்கிருந்து விடுதலையாவது, உண்மையையும் ஒளியையும் பெற்ற உலகைப் புரிந்து கொள்ளும் விடுதலையாகவே நான் கருதுகிறேன்.

– மேகலை
_________________________________
புதிய கலாச்சாரம் – பிப்ரவரி 2004
_________________________________

 1. அவர்களும் ஒரு வகையில் மறு வார்ப்பு செய்யப் பட்டவர்களே !

 2. மொக்கையான ஒரு கட்டுரை…. கம்யூனிச கண்றாவியை மறைமுகமாக பறைசாற்றும் ஒரு மட்டமான மொழி பெயர்ப்பு…. உலகம் முழுவது ஊத்தி மூடப்பட்ட கொள்கைக்கு ஒரு கட்டுரையா மேகலை???

 3. //ஏனெனில் மறுவார்ப்பை ஏற்று மாறிய மனிதர்கள் மிகவும் விலை மதிப்பற்றவர்கள்.//

  மிகவும் உண்மையான தீர்கதரிசனமான வார்த்தைகள்… மறுவார்ப்பு செய்து கொண்டவர்கள் மிகவும் விலை மதிப்பற்றவர்கள். ஒரு மனிதன் தன்னை மறுவார்ப்பு செய்து கொள்வது என்பது அவ்வளவு எளிய காரியம் அல்ல. தன்னுடைய பழைய வாழ்கை முறை, தன்னை வழி நடத்திய பழைய கவைக்கு உதவாத சித்தாந்த நெறிகள்(பெரும்பாலும் மதம் சார்ந்ததாக) ஆகியவற்றை மாற்றி இந்த சமுகத்தின் எளிய மக்களுக்காக தன்னை தகவமைத்து கொள்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. மிக அற்புதமான கட்டுரை

 4. இந்தியன் ஏன் இவ்வளவு பதற்றம் ?? இல்லை….. பயம். நீங்களும் என்றாவது மனிதனாக மாறுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

 5. இண்டியன்…

  //மொக்கையான ஒரு கட்டுரை…. கம்யூனிச கண்றாவியை மறைமுகமாக பறைசாற்றும் ஒரு மட்டமான மொழி பெயர்ப்பு…. உலகம் முழுவது ஊத்தி மூடப்பட்ட கொள்கைக்கு ஒரு கட்டுரையா மேகலை???//

  மொக்கையான கட்டுரை என்று கூறுவதில் தவறில்லை.. ஆனால், இந்த கட்டுரையை மொக்கை என்று கூறும் அளவிற்கு, இந்த கட்டுரையை காட்டிலும் இந்த சமுகத்திற்கு அளிப்பதற்கு உங்களிடம் அப்படி என்ன சிறந்த விஷயங்கள், உள்ளடக்கங்கள் இருக்கிறது. அப்படி ஏதாவது இருந்தால் பகிறலாமே. மொக்கை என்று முடிவு கட்டும் அளவிற்கு இந்த கட்டுரையில் இருந்து எதை தெரிந்து கொண்டீர்கள், என்னத்தை உணர்ந்து கொண்டீர்கள். மேலும், இந்த கட்டுரை கம்யுனிஸ்ட்களுக்கு மட்டும் அல்ல. கட்டுரையின் கருப்பொருளான “மறுவார்ப்பு” என்பதில் நீங்கள் எதையுமே புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவில்லை, என்பதை விட புரிந்து கொள்ள நீங்கள் முயற்சியும் எடுக்க வில்லை.

  //உலகம் முழுவது ஊத்தி மூடப்பட்ட கொள்கைக்கு ஒரு கட்டுரையா மேகலை???//

  இதில் தான் நாம் மாறு பட வேண்டியதே இருக்கிறது? இந்த உலகில் உள்ள எல்லா விசயங்களும் நம்மை கவர்ந்து விடாது. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக போய் விடலாம். அதைவிட்டு ஒருவரின் உழைப்பை உதாசீன படுத்துகின்ற இது போன்ற தரம் இல்லாத விமர்சனங்களை கூறுவது பண்பல்ல. தங்களின் கருத்துகள் வெளியிட படுவதற்கு காரணம் வினவிடம் இருக்கும் கருத்து சுதந்திரம் என்கிற ஜனநாயக பண்புதான். ஆகவே, கருத்து சுதந்திரம் கருதி மட்டுமே தங்கள் மறுமொழிகள் அனுமதிக்கப்படுகின்றன. தரத்தினால் அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக இந்த மக்கள் சமுகத்தின் நன்மைக்காக செய்யப்படும் ஒருவரின் உழைப்பை தரம் தாழ்த்தி பேசுவது மிக பெரிய இழி செயலாகும். எனக்கும் கம்யுனிச கொள்கையில் மாறுபட்ட கருத்து இருக்கிறது. அதற்காக தோழர் ஒருவரின் மிக சிறந்த உழைப்பை மட்டு படுத்தும் அளவிற்கு இன்னும் என் அறிவு தரம் தாழ்ந்து விடவில்லை.. நன்றி.

 6. //தங்களின் கருத்துகள் வெளியிட படுவதற்கு காரணம் வினவிடம் இருக்கும் கருத்து சுதந்திரம் என்கிற ஜனநாயக பண்புதான்//
  கருத்துசுகந்திரம் பற்றி பேச கம்யுனிஸ்டுகளுக்கு எந்த தகுதியும் கிடையாது. சீனாவிலும், வடகொரியாவிலும் என்ன கருத்து சுகந்திரம் இருக்கிறது. கம்யுனிஸ்டுகள்ஆட்சி செய்த ஒரு நாட்டில் கூட கருத்து சுகந்திரம் கிடையாது. அமேரிக்காவிலும், இந்தியாவிலும் மதவாதிகள், நாத்திகர்கள், ஏன் தங்களைப் போன்ற தேர்தல் ஜனநாயக மறுப்பாளர்கள்கூட தங்கள் கருத்தை அமைதியான வழியில் வெளிப்படுத்தலாம். இந்திய ஜனநாயகத்தில் குறைகள் இருக்கிறது. ஆனால் அதற்கு மாற்று நிச்சயமாக கம்யுனிசம் அல்ல. கம்யுனிசத்தின் சாதனைகளாக சிங்கூர் மற்றும் நாத்திகிராம் இருக்கிறது.

 7. …என்றும் தவறை உணர்வோரையும், மறுவார்ப்புக்கு இணங்குவோரையும், கம்யூனிஸ்ட் கட்சி என்றுமே மன்னிக்கும் . ஏனெனில் மறுவார்ப்பை ஏற்று மாறிய மனிதர்கள் மிகவும் விலை மதிப்பற்றவர்கள்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க